Sunday, April 29, 2012

எங்கே மனம்?

கடந்த வாரம் கடைத் தொகுதி ஒன்றில் காரைக் கழுவக் கொடுத்திருந்தேன்.

அதனைச் செவ்வனே பராமரித்த காலங்கள் எல்லாம் இப்போது மலையேறி விட்டன.கார் வாங்கிய ஆரம்ப காலங்களில் வாரம் ஒருமுறை கழுவி உள்ளும் புறமும் துடைத்து அதை முன்னும் பின்னும் பார்த்து திருப்தியான பின் தான் நகருவது வழக்கம். பின் அது மாதம் ஒன்றாகி இப்போது அவற்றைக் கழுவுவதற்கே நேரமில்லாமல் கடைகளில் கொடுத்து கழுவுகிற காலத்துக்கு வந்தாயிற்று.

என்னே ஒரு காலத்தின் மாற்றம்!

பல நாட்களாய் ஒரு வித குற்ற உணர்வு அதனைப் பார்க்கும் தோறும் வந்து கொண்டே இருந்தது. அதன் முன் சில்லுகள் எல்லாம் தூசிகள் சேர்ந்து கறுப்பேறி விட்டன. இன்று எப்படியேனும் அதற்கொரு வழி பார்க்க வேண்டும் என்று தீர்மானம்.

கார் கழுவுவதற்கென்று பெரும் கடைத் தொகுதிகளில் தனிப்பட்ட இடங்கள் இருக்கின்றன.அவர்களிடம் காரையும் திறப்பையும் ஒப்படைத்து விட்டு நாம் கடைகளுக்குச் சென்று திரும்பி வரும் போது கார் சுத்தமாகக் கழுவித் துடைக்கப் பட்டு வாசனைத் திரவியங்களும் தெளிக்கப் பட்டு அலங்காரமாய் நிற்கும். ஒரு நேரத்தில் இரண்டு வேலைகளையும் முடித்து விடலாம்.( இப்படி வீட்டுச் செல்லப்பிராணிகளுக்கும் இடங்கள் இருக்கின்றன. தொலைபேசியில் அழைப்பெடுத்துச் சொன்னால் அவர்கள் சீருடையோடும் வாகனத்தோடும் வந்து செல்லப் பிராணியைக் கொண்டு சென்று குளிக்க வார்த்து நகம், பல் எல்லாம் கழுவி சடை வெட்டி, றிபன் எல்லாம் கட்டி அழகாகக் கொண்டு வந்து விடுவார்கள்)

என்னுடய கார் ஒரு கொறிய நாட்டு இளைஞனின் கைக்குச் சென்றது. ஒரு மணி நேரத்தின் பின் வருமாறு கூறி திறப்பைப் பெற்றுக் கொண்டான்.26, 27 வயது மதிக்கத் தக்க இளைஞன்.

கொறிய மக்கள் செய் நேர்த்தியில் சிறந்தவர்கள். தொழில் நுட்பத்தில் மென் பொருட்களைக் கையாள்வதில் அவர்களுக்கு நிகர் அவர்களே.

ஒரு மணி நேரத்தின் பின் வந்த போது அந்த இளைஞன் காரை இன்னும் மினுக்கிக் கொண்டிருந்தான்.கார் பளீச்சென்று புதிது போல மின்னிக் கொண்டிருந்தது. ஒரு நிமிடம் பொறு. இதோ இன்னும் கொஞ்ச நேரம் தான். இன்னும் சற்றுத் தாமதிக்க முடியுமா என்று கேட்ட வண்ணம் அதனை இன்னும் இன்னும் மெருகேற்றிக் கொண்டிருந்தான்.

போதும் நண்பனே! நான் போயாக வேண்டும் என்று சொன்னேன்.பணத்தைப் பெற்றுத் திறப்பைத் தந்த பின்னரும் அந்தக் காரை விட்டு அவன் கண்கள் அகலவில்லை. தான் செய்த வேலையில் எங்கேனும் பிழை தென்படுகின்றனவா எனப் பார்த்த வண்ணம் அவன் கண்கள் இருந்தன.

நீ ஏன் உன் காரைச் சரியாகக் கவனித்துக் கொள்கிறாய் இல்லை? இங்கே பார்! இந்த இடங்களில் ஏற்பட்டிருக்கிற தவறுகளுக்கெல்லாம் உன் கவலையீனமே காரணம். தயவு செய்து அதனைச் சிறப்பாகப் பராமரி.....என்று என்னனென்னவோ எல்லாம் சொல்லிக் கொண்டே இருந்தான்.

நீ சொல்வதெல்லாம் சரி தான் நண்பனே! ஆனால் நான் இப்போது அவசரமாகப் போக வேண்டும் என்று சொல்லி விடை பெற்றேன். சற்றுப் பொறு என்று சொல்லி மெல்லியதான கீறல் பட்டிருந்த இடம் ஒன்றுக்கு பொலிஷ் போட்டு மினுக்கி விட்டான். நின்றால் அவன் விடப் போவதில்லை என்று தோன்றியதால் அவசர அவசரமாக வாகனத்திக் கிளப்பிக் கொண்டு வந்தேன்.

அவன் கழுவ வேண்டி இருந்த அடுத்த காருக்குப் போவது தெரிந்தது.

காருக்கு இப்போது ஒரு புது மெருகு. கண்ணாடிகள் இருப்பதே தெரியாத பளீச் சுத்தம்.அந்தக் கொறிய இளைஞன் என் மனம் எங்கும் வலம் வந்து கொண்டிருந்தான்.

நம்மில் எத்தனை பேர் நாம் செய்கின்ற வேலையில் இப்படியான முழு மன ஒருமைப்பாட்டையும் வைத்திருக்கிறோம்? நாம் ஜீவனத்துக்காகச் செய்கின்ற வேலைகளை உண்மையில் விருப்பத்தோடு தான் செய்கிறோமா என்று நினைத்துப் பார்த்தேன். ஆர்வம் வேறாகவும் செய்யும் தொழில் வேறொன்றாகவும் தான் பெரும்பாலானோருக்கு அமைந்து விடுகிறது. குழந்தைகளை விருப்பமின்றியே காப்பகங்களில் விட்டுச் செல்ல நேர்கிறது. வேலைப்பாதுகாப்பு, நிரந்தரத் தன்மை, சம்பளம், சலுகைகள்,விடுமுறைகள்..... போன்ற பல காரணங்கள் சலிப்பு மிக்க வேலைகளிலும் தொடர்ந்து வைத்திருக்கிறது.

பெரும்பாலானோர்க்கு வாழ்க்கை இவ்வாறாக நகர்கிறது......

அந்த இளைஞன் செய்தது கார் கழுவும் வேலை என்றாலும் அதில் அவன் எத்தனை ஈடுபாட்டோடும் மகிழ்ச்சியோடும் முழு மன ஒற்றுமைப்பாட்டோடும் அதனைச் செய்தான்! செய்கிறான்!!

”நினைத்தது கிடைக்கா விட்டால் கிடைத்ததை விரும்பு” ,”உனதெண்ணப்படி வாழ்க்கை அமையாவிட்டால் வாழ்க்கைக்கேற்ப எண்னத்தை மாற்றிக் கொள்”- என்றெல்லாம் சொல்கிறார்களே! - இப்படி அவன் நினைத்திருக்கக் கூடுமோ?

நினைத்துப் பார்த்தால் எல்லாம் மனம் தான்! - மனதுக்குத் தான் எத்தனை பலம்! அண்மையில் தென்றல் என்ற இணையத் தளத்தில் இந்த ஜென் கதை பார்த்தேன்.




”ஒரு சிறந்த வில் வித்தை அறிந்த குருவிடம் பயிற்சி பெற்ற ஒருவன் தான் சிறப்பாகக் கற்றுக் கொண்டதாகக் கர்வம் கொண்டான்.குரு அவனை அழைத்துக் கொண்டு மலைப் பகுதிக்கு சென்றார்,இரண்டு மலை உச்சிக்கு இடையே ஒரு பலகை மட்டும் வைக்கப் பட்டிருந்தது.கீழே அதலபாதாளம்.குரு அநதப் பலகையில் விறுவிறுவென நடந்து நடுவில் நின்று கொண்டு தன் வில்லை எடுத்து வானத்தில் பறந்து கொண்டிருந்த ஒரு பறவையைக் குறி வைத்து அடித்து வீழ்த்தினார்.பின் சீடனை அவ்வாறே செய்யச்சொன்னார்.முதலில் ஆர்வமுடன் சென்ற அவன் நடுப் பகுதிக்கு சென்றவுடன் பயத்துக்கு உள்ளானான்.கால்கள் நடுங்க ஆரம்பித்தன.அவன் வில்லை எடுத்து ஒரு பறவையைக் குறி வைத்தான்.ஆனால் அவன் எங்கே கீழே விழுந்து விடுவோமா என்ற அச்சத்துடன் இருந்ததால் அவனால் சரியாகக் குறி பார்க்க முடியவில்லை.பதட்டத்துடன் குருவிடம்,''ஐயோ,என்னைக் காப்பாற்றுங்கள்.நான் கீழே விழுந்து இறந்து விடுவேன்.''என்று அலறினான்.குருவும் சாதாரணமாக பலகையில் நடந்துசென்று அவனைக் கையைப் பிடித்து அழைத்து வந்தார்.திரும்ப அவர்கள் இருப்பிடத்திற்கு வந்து கொண்டிருந்தபோது இருவரும் ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை.ஆனால் கர்வம் அழிந்த அந்த சீடன் நினைத்துக் கொண்டான்,''வில் அம்பை முழுமையாக வென்றால் மட்டும் போதாது,நம் மனதையும் வெல்ல வேண்டும்.அதுதான் முக்கியம்.''



அது சரி, உடலில் எந்தப் பாகத்தில் இருக்கிறது அந்த அங்கம்? எங்கே மனம்?


Saturday, April 21, 2012

Ways to Wear a Scarf

இங்கு குளிர் காலம் ஆரம்பிக்கப் போகிறது.

குளிர் காலம் ஆரம்பித்து விட்டால் அதற்கான உடைகளும் Scarf களும் கடைகளுக்கு வர ஆரம்பித்து விடும். எனக்கும் அவை நிரம்பப் பிடிக்கும். அது அழகு என்பதற்கும் அப்பால் அதற்கென்றொரு குணமும் இருக்கிறது.

சேலை உடுக்கும் போது தானாகவே வந்து ஒட்டிக் கொள்ளும் ஒரு வித குணத்தைப் போல!

மாதிரிக்குச் சில...



Monday, April 16, 2012

பாரம்பரிய கலைப் பொருட்கள்: பாக்குவெட்டி

கடந்த வாரம் துணிக்கடை ஒன்றுக்கு சென்றிருந்தேன்.

அங்கு ஒரு கத்தரிக்கோல் - ஒரு சின்னக் கத்தரிக்கோல் - நூல்கள் வெட்டப் பாவிப்பது. காணக்கிடைத்தது. யாரோ ஒருவருடய கற்பனை! கலை நயம்!

அது ஒரு கொக்கு மாதிரி தோற்றம் கொண்டது.! அதன் கூரிய மூக்கு தான் வெட்டும் பகுதி. ஒரு சிறு உபகரணத்தை எத்தனை அழகாய் வடிவமைத்திருக்கிறார்கள் எனத் தோன்றியது.


ஆங்கிலேய அவுஸ்திரேலியர்களிடம் தேனீர் விருந்துக்குப் போனால் அவர்கள் தேனீர் தருகிற கப் அண்ட் சோசர்களிலும் இத்தகைய கலை நயத்தைக் காணலாம். கேத்திலும் சீனி,பால் வைத்திருக்கும் அழகாக வடிவமைக்கப் பட்ட பீங்கான் குவளைகளும், அதில் நம் விருப்பப் படி கலந்து குடிக்கும் பாங்கில் வைக்கப் படுவதும்; வந்தமா குடித்தமா போனமா என்றில்லாமல் உரையாடலுக்கு கூடுதல் கவனம் கொடுப்பதும் அவர்கள் பாங்கு. அதனோடு கூடவே ஒத்துப் போகும் விடயங்கள் பற்றி உரையாடிய படி இத்தகைய கலை நயமிக்க குவளைகளில் தேனீர் பருகுவதில் தேனீருக்குக் கூடுதல் சுவை!




































நம்மவர் வைக்கிற விருந்துபசாரங்களுக்குச் சென்றிருக்கிறேன்.சோறும் எக்கச் சக்கமான கறிகளும் வைக்கப் பட்டிருக்கும்.உறைப்புக் கறியிலேயே மீன் இறைச்சி, கணவாய், நண்டு என்று நீளும் அதன் பட்டியல். அதற்குள் எண்ணையில் பொரித்தெடுத்த வறுவல் பொரியல் என்று இன்னொரு வகை. மரக்கறிகள் இன்னொரு பெரிய பட்டியல். அதை விட இனிப்பு உணவு வகை. சாப்பிடுங்கள், சாப்பிடுங்கள் என்று உபசாரம் வேறு மனதையும் சங்கடத்தில் ஆழ்த்தும்.

அப்போதெல்லாம் நான் நினைத்துக் கொள்வது ஏன் இவ்வளவு நேரத்தை விரயம் செய்து இத்தனை வேலைகளைச் செய்து நம்மை ரசித்து உண்ண முடியாது பண்ணி விடுகிறார்கள் என்பதைத் தான். ஒரு உறைப்புக் கறியும் ஒரிரு மரக்கறியும் ஒரு சலட்டும் ஒரு பழச்சலாதும் எவ்வளவு ருசியாய் இருக்கும். ஒரு பதார்த்தத்தின் செய்நுட்பத்தை- அதன் சுவையை ருசியை அதைச் செய்த அந்தக் கைவண்ணத்தை அறிய ரசிக்க,சுவைக்க அது எவ்வளவு சுகமாக இருக்கும்! வயிறுக்கும் உள்ளத்துக்கும் அது எத்தனை திருப்தியாக இருக்கும்.வேலை, நேரம், களைப்பு என்று அதிகம் இல்லாமல் முக மலர்ச்சி கூட முகங்களில் பரினமிக்கலாமில்லையா?

நான் எதையோ சொல்ல வந்து எங்கேயோ போய் விட்டேன். சொல்ல வந்தது இதைத்தான்.அந்தத் துணிக்கடையில் அந்தக் கத்திரிக் கோலைப் பார்த்தேன் என்று சொன்னேன் இல்லையா? அதைப் பார்த்த போது நம்மிடம் அப்படி ஏதாவது கலை நயம் மிக்க பொருட்கள் இருந்தனவா என எண்ணமோடியது. அப்போது எனக்கு உடனடியாக ஞாபகம் வந்தது பாக்கு வெட்டி தான். ஒரு மான் பாய்ந்தோடுவது போல வடிவமைக்கப் பட்டிருந்த பாக்கு வெட்டி ஒன்றை யாழ்ப்பாணத்தில் ஒருமுறை ஒருவர் வீட்டில் கண்டிருந்தேன்.


வீட்டுக்கு வந்து முதல் வேலையாக கூகுளில் பாக்குவெட்டி தேடினேன். :) ரொம்ப முக்கியம் என்று நீங்கள் நினைப்பது தெரிகிறது. என்ன செய்வது எனக்கு அது முக்கியம்!! :))

எத்தனை அழகழகான கலை வேலைப்பாடுகளுடன் கூடிய பாக்கு வெட்டிகள்! அவை ஈழத்தில் இந்தியாவில் மட்டுமின்றி தென்கிழக்காசிய நாடுகளிலும் புளக்கத்தில் இருந்திருக்கின்றன. அவற்றை இப்போது உங்கள் பார்வைக்காகவும் தருகிறேன்.


படங்கள்: நன்றி கூகுள் இமேஜ்.








Monday, April 9, 2012

Holroyd City Council உம் 49 சதமும்


          


வெள்ளிக்கிழமை வந்தாலே ஒரு வித ஆறுதல் வந்து விடும்.அவசர ஓட்டத்தைக் கொஞ்சம் தளர்த்திக் கொள்ளலாம். ஆறுதலாகப் பின் போட்ட விடயங்களைக் கொஞ்சம் செய்து முடிக்கலாம். இரண்டு நாளைக்கு அடித்துப் பிடித்து எழும்ப வேண்டியதில்லை.நேரத்தைத் துரத்த வேண்டியதில்லை …என்று பல விடயங்கள் இருக்கின்றன ஆறுதல் கொள்வதற்கு.

தபால் பெட்டி திறந்து பில் எதுவும் இல்லை என்றால் அது இன்னுமொரு பெரிய ஆறுதல்.

2 நாள் தரப்போகிற ஆறுதலான மனநிலையோடு வந்து குளித்து தேனீரோடு தொலக்காட்சிக்கு முன்னால் அமர்ந்து தேனீர் குடித்த படி சாய்ந்திருந்து தொலைக்காட்சி பார்ப்பது ஒரு சுகம். இரவு வேலைகளைப் பார்ப்பதற்கு அது தரும் உற்சாகம் அப்போதைக்குப் போதுமானதாக இருக்கும்.

அன்றும் வெள்ளிக்கிழமை.

வேலை முடித்து வந்து தபால் பெட்டி திறக்கிறேன். கவுன்சில் பில் ஒன்று எதிர்பாரா விதமாய் வந்திருந்தது. மூன்று மாதத்துக்கு ஒரு தடவை வரும் அதற்கான பணத்தை 2 வாரங்களுக்கு முன்னர் தானே கட்டியிருந்தேன் என்ற பொதுவான எண்ணம் ஓட கடிதத்தைப் பிரித்தேன்.

பில் தொகை கட்டப்படவில்லை என்ற குறிப்போடும் உடனடியாகக் கட்டப்பட வேண்டும் என்ற அறிவுறுத்தலோடும் வந்திருந்த தபால் அது. எனக்கு அது ஆச்சரியமாக இருந்தது. 202 டொலர்களுக்கான பில் இப்போது 202.49 சதம் என்றவாறு வந்திருந்தது.

கதவு திறந்து கைப்பையை மேசையில் போட்டு விட்டு பில்கட்டிய கடிதங்கள் வைத்திருக்கிற கோவையைத் திறந்து பார்த்தேன். என் எண்ணம் சரி தான்.கடந்தவாரம் தான் அதனைக் தபாலகம் சென்று கட்டி இருந்தேன். அப்படி எனில் எவ்வாறு இப்படி ஒரு பில் வரக்கூடும் என எண்ணம் ஓட தொலைபேசியில் அழைப்பெடுத்தேன்.

அழைப்புக்கு வந்த பெண்மணி ஆமாம். நீ பணம் கட்டியது உண்மை தான். ஆனால் அது 5 நாட்கள் தாமதமாகக் கட்டியிருப்பதால் 49 சத தண்டப் பணத்துக்கான பில் அது என விளக்கமளித்தாள்.

அடப் பாவி!

49 சதம் தண்டப்பணம் என்றால் 49 சதம் என்றல்லவோ பில் அனுப்பவேண்டும்? எதற்காக 202.49 சதம் என பில் அனுப்பினாய் எனக் கேட்டேன்.எங்களுடய சிஸ்டம் அப்படித்தான் வேலை செய்யும் என்றாள். அந்த 49 சதத்திற்காக நீ செலவளித்திருக்கிற பணம் எவ்வளவு தெரியுமா எனக் கேட்டேன்.

1.எழுத்துக்களோடு கூடிய ஒரு தாள் (இதுவே 50 சதம் வரும்)

1 கடித உறை

60 சத முத்திரை (ஆனாலும் கவுன்சிலுக்கு இலவசம்)

இதனைச் செய்வதற்கான ஒரு மனித ஊழியம் (கவுன்சிலில் இருந்து இங்கு வந்து சேரும் வரைக்குமான ஊழியப் பாதை; மற்றும் எத்தனை பேருக்குமான வேலை)

தற்செயலாக நான் அந்த பழைய பில்லை வைத்திருக்காது போயிருந்தால் அல்லது கவுன்சிலில் இருந்து வரும் பில்கள் சரியானவை என நம்பியிருந்தால் என் 202 டொலர் பணம் மீளவும் அல்லவோ கட்டப்பட்டிருக்கும்!

மக்களிடம் இருந்து அறவிடப்படும் பணத்தை ஏன் கவுன்சில் பொறுப்பற்றதனமாய் இப்படி போக்கிரித் தனமாய் செலவளிக்கிறது?

உன்னுடய முகாமையாளரோடு நான் கதைக்கலாமா எனக் கேட்டேன்.அழைப்பினை ஏற்படுத்தித் தந்தாள் அப்பெண்மணி.முகாமையாளராயும் ஒரு பெண்குரல்.ஸ்னேகமாய் ஒலித்தது அக் குரல். சில குரல்கள் மென்மையாய் வருடிக் கொடுக்கும் வல்லமை கொண்டன. அவளுடயது அந்த வகையினது. வெள்ளி மாலையிலும் களைப்புற்றிருந்த மனதை தென்றலாய் வருடிச் சென்றதை இதயம் உணரவே செய்தது.

அவளின் அந்தத் தொழில் மேன்மையில்/ திறனில் தொலைந்து விடாமல் நடந்ததையும் பண விரயத்தையும் கவுன்சில் மீது ஏற்படும் நம்பிக்கையீனத்தையும் சொன்னேன்.

புன்னகைக்கும் குரலோடு சிம்பிளாகச் சொன்னாள் ‘பில்லை எறிந்து விடு’

இதற்குத் தானா அனுப்பினீர்கள்? அதுசரி, யாரையும் எதையும் எதற்காகவும் நம்ப முடியாதா?

சக்கரத்தில் சுளலுது வாழ்க்கை என்பது உண்மை தான் போல.அதனால் தான் குப்பைகளைச் எடுப்பதற்குக் கொடுக்கும் பணம் என்பதால் குப்பைகளை வீட்டுக்கு அனுப்புகிறார்களோ?

சக்கரத்தில் சுழலுது சிட்னி!!


Sunday, April 1, 2012

இலக்கியச் சந்திப்பு - 2 -

25.03.2012 ஞாயிற்றுக்கிழமை.இன்று இரண்டாவது இலக்கிய சந்திப்பு.

காலையில் இருந்தே மப்பும் மந்தாரமுமாக இருந்தது சிட்னி.கூடவே மழைத்தூறலும்!மாலைநேரம் குளிர் ஆரம்பித்து விட்டிருக்கும். மழை வேறு பெய்தால் நம் இலக்கியச் சந்திப்பு என்னாகும் என்று யோசனையாய் இருந்தது.
ஆனால்,நல்லவேளையாக மாலைநேரத்துச் சூரியன் ஈரலிப்பான மேகப்பஞ்சில் முகம் துடைத்து பளீச்சென்றிருந்தான்.thank you suryan!

இன்று புதிதாக இரண்டு பேர் அறிமுகமாகி இருந்தார்கள்.ஒருவர் கோகிலா மகேந்திரன்.மற்றவர் இந்துமதி ஸ்ரீநிவாசன்.முன்னவர் ஈழத்தவர்களால் நன்கறியப்பட்ட எழுத்தாளர் மற்றவர் ATBC வானொலியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்.இவர்களோடு நம் ஆரம்ப நண்பர்கள் செல்வமும் கார்த்திகாவும்.வேலை அலுவலாக புறநகர் பகுதியில் நிற்பதால் இன்று வரமுடியாத சூழல் என பாஸ்கரன் அறிவித்திருந்தார். பவானி என்ற புதியவரும் வரமுடியாத நிலைமையை இன்று குறுந்தகவல் மூலம் சொல்லி இருந்தார்.செளந்தரியும் பாமதியும் இந்த நிகழ்ச்சிச் சுருக்கத்தை அறியும் ஆவலை வெளிப்படுத்தி இருந்தனர்.

எனவே நாங்கள் ஐந்து பேர்.

பரஸ்பர அறிமுகங்களின் பின்னால் றோசா வண்ண சேலையில் றோஜா மலரைப்போல பச்சைப் புல் வெளியில் அமர்ந்திருந்த கோகிலா மகேந்திரன் அவர்களிடம் பஹாய் சென்ரரில் நேற்றய தினம் நடந்த ஹோம்புஷ் தமிழ் பாடசாலையின் 25வது ஆண்டு நிகழ்வு பற்றிச் செல்வம் கேட்ட கேள்வியோடு நம் நிகழ்ச்சி ஆராம்பமாயிற்று.

அன்றய தினம் கோகிலா அவர்களின் நெறியாள்கையில் ஒரு நாடகம் இடம்பெற்றது தான் அதற்குக் காரணம்.”புரிதலின்மை” பற்றியதாக அந்த நாடகம் இருந்தது என்றும் ஒரு நாடகப் பட்டறை ஒன்று சில மாதங்களாக நடத்தப்பட்டு வரும் தகவலையும் விரும்பியவர்கள் சேரலாம் என்ற தகவலையும் அவர் தெரிவித்தார்.நாடகம் என்பதற்கு நெறிமுறைகளும் வரையறைகளும் ஒழுங்கு முறைகளும் உள்ளன என்பதும் ஒரு பரதத்தை,பாரம்பரிய இசையை நாம் சரியாகக் கற்காமல் எப்படி மேடை ஏற்ற முடியாதோ அது போலவே நாடக வடிவத்தையும் சும்மா மேடை ஏற்ற முடியாதென்பதை அவர் சொன்ன போது அத்துறை மீது அவருக்கு இருந்த ஈடுபாட்டையும் அக்கறையையும் நன்றாகக் உணர முடிந்தது. அப்போது அவரிடம் அறிவும் உண்மையின் ஒளியும் சுடர் விடக்கண்டேன்.ஓர் அரிய அடக்கமும் உறுதியும் ஆளுமையும் மிக்க பெண்மணிக்கருகில் நான் அமர்ந்திருப்பதை அப்போது உணர்ந்து கொண்டேன்.

நாடகத்துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருக்கும் பாஸ்கரன் வந்திருந்தால் அது ஒரு நல்ல விவாதத்துக்கான களத்தைத் திறந்து விட்டிருக்கும்!

உரையாடல் பிறகு சுகி.சிவம் அவர்கள் வந்திருந்த போது இடம் பெற்ற ”புலம்பெயர்ந்து நாம் பெற்றது அதிகமா? இழந்தது அதிகமா?” என்ற பட்டிமன்றம் பற்றிய கலந்துரையாடலுக்கு திரும்பியது. இப்படியான பட்டி மன்றங்கள் என்றால் தானும் கலந்து கொள்ள விரும்புவதாக கோகிலா மகேந்திரன் சொன்னது உண்மையில் மகிழ்ச்சியாக இருந்தது.அப்பட்டிமன்றத்தில் செல்வமும் இந்துவும் கலந்து கொண்டிருந்ததும் இன்று அவர்கள் இங்கு பிரசன்னமாகி இருந்ததும் ஒரு பெரும் சிறப்பு.

 அது பிறகு தமிழ்,தமிழ் மொழி இழப்பு,இருப்பு,புதிய சொற்களின் அறிமுகம்,பழைய சொற்களின் வழக்கொழிவு,இந்தியாவில் தமிழின் பயன்பாடு,எழுத்தாளர்கள்,வெளியீடுகளின் பெருக்கம்,இங்குள்ள தமிழ் பாடசாலைகள்,அவற்றின் பயன்பாடுகள்,முதியோர் இல்லங்கள்.....என்று தமிழ் மொழியோடும் தமிழ் வாழ்வோடும் கொஞ்சம் குலவினோம்.’உலகத்தமிழ் ஆட்சி மன்றம்’பிற மொழிகளைப் பேசும் மக்களுக்கு எப்படி தமிழ் கற்பிக்கிறது என்றும் ஒரு பிரெஞ்சு நாட்டவர் எப்படி தமிழை அங்கு ஒரு வருடத்துக்குள் கற்று தன்னோடு தமிழில் பேசினார் என்றும் கார்த்திகா சொன்னார்.நாப்போலி என்று தட்டச்சி ஒரு இத்தாலியர் எப்படி இரண்டு வருடம் இமையமலையில் தங்கி இருந்து தமிழ் இந்துவானார் என்று யூரியூப்பில் பார்க்கலாம் என்று இந்து சொன்னார்.

உண்மையில் இவ்வாறான தகவல் பரிமாற்றங்களும்,நேரடியான நெருக்கமான விமர்சன உரையாடல்களும் கலைஞர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் எவ்வளவு தேவை என்பதை அன்றய உரையாடலின் சுவாரிசமும் ஈடுபாடும் நமக்குக் காட்டியது.ஒரு கலைஞனுக்கான ஊட்டம் அது தானே? ஒரே விதமான ஆர்வம் கொண்டவர்கள் கூடினாலே சொந்தம் சொல்லிக் கொள்ளாமல் உட்கார்ந்து கொள்ளும்அங்கொரு பந்தம் குடி கொண்டு விடும்.இங்கும் அது தான் நடந்தது.ஒரு மடை திறந்த வெள்ளமாய் சுவையான சொற்கள் பெருகி ஓடின!அது தமிழ் வெள்ளம்.தேனாறு!

ஆனால் நேரத்தை என்ன நிறுத்தி வைக்கவா முடியும்? நேரம் சற்றே சறுக்கிக் கொண்டிருந்ததால் கொண்டு சென்றிருந்த பிஸ்கட்டோடு தேனீரையும் பருகியபடி அவரவர் கொண்டு வந்திருந்த பகிர்வுகளைப் பகிர ஆரம்பித்தோம்.கோகிலா அவர்கள் கொண்டு வந்திருந்த பகிர்வை காண,கேட்க நாம் எல்லோரும் ஆர்வமாக இருந்தோம். அவர் கடந்த வாரம் தான் எழுதிய சிறுகதை ஒன்றை தன் கம்பீரக் குரலின் ஏற்ற இறக்கங்களோடு அவர் வாசிக்க ஆரம்பிக்க நாமும் அவரோடு பயணிக்க ஆரம்பித்தோம்!

ஆஹா! என்ன ஒரு பயணம் அது!!யாழ்ப்பாணத்து மினிபஸ்சில் பயணித்து அப்படியே அவுஸ்திரேலியா வந்து அவுஸ்திரேலிய பஸ்சில் பயணம் செய்து நம்மை எதிர் பாரா திருப்பம் ஒன்றில் சட்டென இறக்கி விட்டுச் சென்றது அந்தக் கைவண்ணம்.கேகேஎஸ் வீதியால் புறப்பட்ட மினிபஸ்சில் உண்மையாகவே பயணம் செய்து வந்ததைப் போல ஒரு ஓட்டமும் தத்ரூபமும் அதில் இருந்தது.பெற்ற தாயை விட வேறு யாருக்குத் தெரியும் தன் குழந்தையின் பவித்ரம்! அவரது குரலில் உணர்ந்து அவர் சொல்லும் பாங்கோடும் ஏற்ற இறக்கங்களோடும் அதனைக் கேட்கமுடிந்தவர்கள் உண்மையில் பாக்யசாலிகள் தான்.

 இப்படியான விடயங்கள் அரியவை. மிக மிக அபூர்வமாகக் கிடைப்பவை.சேகரித்து வைக்கப்பட வேண்டியவை. இப்படியான சிறு சிறு சந்திப்புகளில் மட்டுமே இப்படியான அபூர்வ ருசிகள் கிடைக்கும்.புத்தகத்தில் நம் கண்கள் படிக்கின்ற போது நிச்சயமாக இப்படி ஒரு சுவை கிட்டாது. அடுத்த முறை வரும் போது ஒரு கையடக்க ஒலிப்பதிவுக்கருவியைக் கொண்டு போக வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.இந்தக் கதையை நீங்கள் அவுஸ்திரேலிய சிறப்பு வெளியீடாக வெளிவர இருக்கும் ஜீவநதி சஞ்சிகையில் இன்னும் 3 மாதத்தில் காணலாம்.


அதன் பின் இந்துமதி ஸ்ரீநிவாசனின் முறை வந்தது.தான் உண்மையில் தயாராக வரவில்லை என்றும் என்றாலும் நாளொன்றுக்கு ஒருமுறையேனும் அரைமணிநேரமென்றாலும் பாரதி பாடலை தான் எடுத்துப் படிப்பதாகவும் கூறி பாரதியின் ”....கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளம் தான் கள்வெறி கொள்ளுதடி....” என்ற பாடலின் நயத்தை சிறப்பாகச் சுவைத்துச் சொல்லி அது பிறகு எப்படி இப்போது...கொலைவெறி...கொலைவெறிடி...”பாடலில் போய் முடிந்திருக்கிறது என்று முத்தாய்ப்பாய் நிறுத்தினார். அந்த இடத்தில் அவர் ஒரு சிறந்த வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளர் என்று தெரிந்தது.குரல் கம்பீரமாய் ஒலித்தது.

அந்தக் ’கள்வெறியும்’ இந்தக் ’கொலைவெறியும்’ சொல்லும் பொருள் ஒன்று தான்; இரண்டுக்கும் இடையில் காலம் தான் வேறுபட்டிருக்கிறது என்று செல்வம் சொன்னார்.இரண்டுக்கும் இடையில் முரண்பட்டு நிற்பது கோகிலாவின் நாடகத்தில் வந்த அந்தப் ’புரிதல்இன்மை’ தான் என்று மேலும் அவர் விளக்கி எப்படி இளம் சந்ததியினருக்கு இவ்வாறான பாடல்கள் பிடித்துப் போய் விடுகிறது என்பது பற்றியும் நமக்கு அது பிடிக்காமல் போய் விடுவதன் காரணம் பற்றியும் பேசிய போது ஒரு தந்தையின் - மேலும் ஒரு ஆசிரியனின் புரிதலை - செல்வத்தில் காண முடிந்தது.

தற்செயலாகவும் இயல்பாகவும் இடம் பெற்ற இந்த கள்வெறி; கொலைவெறி;புரிதலின்மை ஆகிய 3 கலைமுத்துக்களையும் சிறப்பாக இணைத்து மாலையாக்கி அந்த நிகழ்ச்சியை நம் கைகளில் தந்து சிறப்பாக்கினார் செல்வம்.

இப்போது காலத்தைத் துரத்திக் கொண்டிருந்தோம்.இந்து தன் குழந்தைகளை அண்ணன் வீட்டில் விட்டு விட்டு வந்திருந்தார்.என்றாலும் செல்வத்தின் கவிதை கேட்க ஆவலாக இருந்தார்.இம்முறை செல்வம் தன் நண்பர்களின் (ஊரில் இருந்து மகள்மாரின் குழந்தைப் பேற்றிற்காக வந்து போய் கொண்டிருக்கும்) அம்மாமாரின் அன்பில் தோய்ந்த/ தோய்த்த கவிதைகளை எடுத்து வந்திருந்தார்.அவை பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதிய ரம்யமான கவிதைகள். தாயை இழந்த ஒரு தனயனின் சோகமும் தேடலும் பாசமும் அந்தக் கவிதைகள் எங்கும் ஈரம்படிந்த படி கிடந்தன.”நல்ல சொல் வீச்சுக்கள்” என்று நான் சொன்ன போது “அந்தச் செல்லம்மாள் (அவர் தாயார் பெயர்) தந்தது இந்தச் சொல்லம்மாள்” என்றார்.
அந்தச் செல்லம் தந்தது இந்தச் செல்வம் என்று தோற்றிற்று எனக்கு.

அந்தக் கவிதைகளைச் சொல்லிக் கொண்டு போன போது அந்தத் தாய்மார்களின் மூன்று மகள்மாரின் பெயர்கள் பேச்சின் போதும் கவிதையின் போதும் வந்து போயின. அப்பெயர்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன.

1.சோலை
2.நிலவு
3.நப்பின்னை(வேறொரு சந்தர்ப்பத்தில்)

எத்தனை அழகான பெயர்கள் இல்லையா? தமிழ் நாட்டுத் தாய்மார் வைத்த இன்றய தாய்களின் பெயர்கள்!!

இப்போது சாம்பல் நிறத்துக்கும் கருப்பு நிறத்துக்கும் இடையே பொழுதிருந்தது.மெல்லியதான குளிர் பரவி விட்டிருந்தது.நேரம் 7.15. செல்வம் வேறு ஒருவரை 7 மணி அளவில் சந்திக்க வேண்டி வேறு இருந்தது.கோகிலா அவர்களுக்கும் நாடகப் பட்டறைக்கு நேரமாகிவிட்டிருந்தது.இந்து தன் பிள்ளைகளை அண்ணன் வீட்டில் விட்டு விட்டு வந்த தாய்மையின் பதட்டத்தோடு இருந்தார். நியாயத்தோடு கூடிய ஒரு வித அவசரம் எல்லோரிடமும் தொற்றிவிட்டிருந்தது.

அத்தனை அவசரத்துக்குள்ளும் மாதத்தில் வரும் இறுதி ஞாயிற்றுக் கிழமை என்பதில் வரும் இறுதி என்ற சொல் எனக்குப் பிடிக்கவில்லை அதனை முதல் ஞாயிறென மாற்றினால் என்ன என்று செல்வம் கேட்ட போது ஏனைய எல்லோருக்கும் அது உடன்பாடாய் இருந்தது.எனவே 5வது வாரம் முதல் ஞாயிற்றுக் கிழமை கூடுவோம் எனக் கூறிக் கலைந்தோம்.நானும் கார்த்திகாவும் அவர்களைப் பின் தொடர்ந்தோம்.

காருக்குள் ஏறி உட்கார்ந்த போது செல்வம் கோர்த்து தந்திருந்த மூன்று மணிகள் கோர்த்த இலக்கிய மாலையும் அபூர்வமாகக் கதாசிரியரின் குரலில் கேட்கக் கிட்டிய யாழ்ப்பாணத்து மினி பஸ்பயணமும் மனதில் நிறைந்திருந்தது.

எப்படியேனும் நேரத்தைச் சற்றே ஒழுங்கு படுத்த வேண்டிய தேவை ஒன்று இருக்கிறது. இனிக் குளிர்காலம். வேளைக்கு இருளும்.குளிர் உட்புகாக் கட்டிடம் ஒன்றையும் தயார் படுத்தி இவர்களை அழைக்க வேண்டிய பொறுப்பொன்று எனக்கிருக்கிறது.

HSC பரீட்சையை இந்த வருடம் எடுக்கின்ற பிள்ளைக்குத் தந்தை செல்வம்! இரண்டு சிறு குழந்தைகளின் தாயார் இந்து!! ஐந்து மணிவரை நடனப் பள்ளி நடத்துகின்ற ஆசிரியை கார்த்திகா! தூர இடத்திலிருந்து மகனோடு வந்து சேரும் கோகிலா!!

இலக்கியம் கொண்டுவந்து சேர்த்த என் தோழமைகளே! உங்களை நினைத்துப் பார்க்கிறேன். நெஞ்சு நெகிழ்கிறது.

உங்கள் அன்புக்கும் அர்ப்பணிப்புக்கு என் தலைதாழ்ந்த வணக்கம்.மீண்டும் சந்திப்போம்!!

......................................

26.03.2012.

இன்று டென்மார்க் இலக்கிய நண்பர். திரு.ஜீவகுமாரன் ஈழத்து மலையக எழுத்தாளர் தெளிவத்தை யோசெப் அவர்கள் அவசர இருதய அறுவை சிகிச்சைக்காக கொழும்பு டேடன் வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார் என்ற தகவலையும் அவர் இலக்கிய அன்பர்களிடம் உதவி கேட்டிருக்கிறார் என்ற தகவலையும் அறியத் தந்திருந்தார்.

 மலையகத்து மக்களுக்காக குரல் எழுப்பிய தெளிவத்தை யோசெப் அவர்கள் ஒரு சமூகச் சொத்து. தன் குடும்பத்துக்காக எதையும் சேர்த்து வைக்காது பாடுகளைச் சுமந்திருந்த ஒரு சமூகத்துக்காக ஓங்கிக் குரல் கொடுத்த அவரைக் காக்க வேண்டியது நம் சமூகக் கடன் அல்லவா?

அதனால்,உடனடியாக நம் இலக்கிய அன்பர்களிடம் உதவித் தொகை கேட்டிருந்தேன்.சுமார் அரைமணி நேர தொலைபேசி உரையாடலில் கிட்டிய தொகை $670.00 கள்.(கேட்டு வருத்தப்படுத்தி விடக் கூடாது என்பதால் சில நல்ல உள்ளங்களிடம் குறிப்பறிந்து கேட்பதைத் தவிர்த்துக் கொண்டேன். அவர்கள் என்னை மன்னிப்பார்களாக!) மேலதிகமாக $82.00 களை இணைத்து ஒரு லட்சம் இலங்கை ரூபாய்கள் TSS நிறுவனத்தினூடாக (அவர்கள் அதை இலவசமாக அனுப்பி வைத்தார்கள்) அனுப்பியது மேலும் ஒரு மன நிறைவைத் தந்தது.

 தென்னம்பிள்ளையை நட்டு வைத்ததைப் போல ஒரு மனநிறைவு!!