வெள்ளிக்கிழமை வந்தாலே
ஒரு வித ஆறுதல் வந்து விடும்.அவசர ஓட்டத்தைக் கொஞ்சம் தளர்த்திக் கொள்ளலாம். ஆறுதலாகப்
பின் போட்ட விடயங்களைக் கொஞ்சம் செய்து முடிக்கலாம். இரண்டு நாளைக்கு அடித்துப் பிடித்து
எழும்ப வேண்டியதில்லை.நேரத்தைத் துரத்த வேண்டியதில்லை …என்று பல விடயங்கள் இருக்கின்றன
ஆறுதல் கொள்வதற்கு.
தபால் பெட்டி திறந்து பில்
எதுவும் இல்லை என்றால் அது இன்னுமொரு பெரிய ஆறுதல்.
2 நாள் தரப்போகிற ஆறுதலான
மனநிலையோடு வந்து குளித்து தேனீரோடு தொலக்காட்சிக்கு முன்னால் அமர்ந்து தேனீர் குடித்த
படி சாய்ந்திருந்து தொலைக்காட்சி பார்ப்பது ஒரு சுகம். இரவு வேலைகளைப் பார்ப்பதற்கு
அது தரும் உற்சாகம் அப்போதைக்குப் போதுமானதாக இருக்கும்.
அன்றும் வெள்ளிக்கிழமை.
வேலை முடித்து வந்து தபால்
பெட்டி திறக்கிறேன். கவுன்சில் பில் ஒன்று எதிர்பாரா விதமாய் வந்திருந்தது. மூன்று
மாதத்துக்கு ஒரு தடவை வரும் அதற்கான பணத்தை 2 வாரங்களுக்கு முன்னர் தானே கட்டியிருந்தேன்
என்ற பொதுவான எண்ணம் ஓட கடிதத்தைப் பிரித்தேன்.
பில் தொகை கட்டப்படவில்லை
என்ற குறிப்போடும் உடனடியாகக் கட்டப்பட வேண்டும் என்ற அறிவுறுத்தலோடும் வந்திருந்த
தபால் அது. எனக்கு அது ஆச்சரியமாக இருந்தது. 202 டொலர்களுக்கான பில் இப்போது
202.49 சதம் என்றவாறு வந்திருந்தது.
கதவு திறந்து கைப்பையை
மேசையில் போட்டு விட்டு பில்கட்டிய கடிதங்கள் வைத்திருக்கிற கோவையைத் திறந்து பார்த்தேன். என் எண்ணம் சரி தான்.கடந்தவாரம்
தான் அதனைக் தபாலகம் சென்று கட்டி இருந்தேன். அப்படி எனில் எவ்வாறு இப்படி ஒரு பில்
வரக்கூடும் என எண்ணம் ஓட தொலைபேசியில் அழைப்பெடுத்தேன்.
அழைப்புக்கு வந்த பெண்மணி
ஆமாம். நீ பணம் கட்டியது உண்மை தான். ஆனால் அது 5 நாட்கள் தாமதமாகக் கட்டியிருப்பதால்
49 சத தண்டப் பணத்துக்கான பில் அது என விளக்கமளித்தாள்.
அடப் பாவி!
49 சதம் தண்டப்பணம் என்றால்
49 சதம் என்றல்லவோ பில் அனுப்பவேண்டும்? எதற்காக 202.49 சதம் என பில் அனுப்பினாய் எனக்
கேட்டேன்.எங்களுடய சிஸ்டம் அப்படித்தான் வேலை செய்யும் என்றாள். அந்த 49 சதத்திற்காக
நீ செலவளித்திருக்கிற பணம் எவ்வளவு தெரியுமா எனக் கேட்டேன்.
1.எழுத்துக்களோடு கூடிய ஒரு தாள் (இதுவே 50 சதம்
வரும்)
1 கடித உறை
60 சத முத்திரை (ஆனாலும்
கவுன்சிலுக்கு இலவசம்)
இதனைச் செய்வதற்கான ஒரு
மனித ஊழியம் (கவுன்சிலில் இருந்து இங்கு வந்து சேரும் வரைக்குமான ஊழியப் பாதை; மற்றும்
எத்தனை பேருக்குமான வேலை)
தற்செயலாக நான் அந்த பழைய
பில்லை வைத்திருக்காது போயிருந்தால் அல்லது கவுன்சிலில் இருந்து வரும் பில்கள் சரியானவை
என நம்பியிருந்தால் என் 202 டொலர் பணம் மீளவும் அல்லவோ கட்டப்பட்டிருக்கும்!
மக்களிடம் இருந்து அறவிடப்படும்
பணத்தை ஏன் கவுன்சில் பொறுப்பற்றதனமாய் இப்படி போக்கிரித் தனமாய் செலவளிக்கிறது?
உன்னுடய முகாமையாளரோடு
நான் கதைக்கலாமா எனக் கேட்டேன்.அழைப்பினை ஏற்படுத்தித் தந்தாள் அப்பெண்மணி.முகாமையாளராயும் ஒரு பெண்குரல்.ஸ்னேகமாய்
ஒலித்தது அக் குரல். சில குரல்கள் மென்மையாய் வருடிக் கொடுக்கும் வல்லமை கொண்டன. அவளுடயது
அந்த வகையினது. வெள்ளி மாலையிலும் களைப்புற்றிருந்த மனதை தென்றலாய் வருடிச் சென்றதை
இதயம் உணரவே செய்தது.
அவளின் அந்தத் தொழில் மேன்மையில்/ திறனில்
தொலைந்து விடாமல் நடந்ததையும் பண விரயத்தையும் கவுன்சில் மீது ஏற்படும் நம்பிக்கையீனத்தையும்
சொன்னேன்.
புன்னகைக்கும் குரலோடு
சிம்பிளாகச் சொன்னாள் ‘பில்லை எறிந்து விடு’
இதற்குத் தானா அனுப்பினீர்கள்?
அதுசரி, யாரையும் எதையும் எதற்காகவும் நம்ப முடியாதா?
சக்கரத்தில் சுளலுது வாழ்க்கை
என்பது உண்மை தான் போல.அதனால் தான் குப்பைகளைச் எடுப்பதற்குக் கொடுக்கும் பணம் என்பதால்
குப்பைகளை வீட்டுக்கு அனுப்புகிறார்களோ?
சக்கரத்தில் சுழலுது சிட்னி!!
சக்கரத்தில் சுழலுது சிட்னி!!
ReplyDeleteஅநியாயமாக !!!
ஓம் செந்தாமரைத் தோழி! ஏன் இப்படி எல்லாம் அநியாயம் பண்னணுகிறார்கள்?
ReplyDelete