அண்மையில் தமிழ் பாடசாலை மாணவர்களுக்கான ஆமையும் முயலும் கதை தேடிக்கொண்டு போன போது agaramuthala.blogspot.com.au என்ற வலைப்பூவைப் பார்க்கக் கிட்டியது. அதில் டிசம்பர் 24, 2006ம் ஆண்டு எழுதப்பட்டிருக்கிறது ’பாலைஸ், கோணைஸ் கப்பைஸ்’ என்றொரு ஆக்கம்.
முடிந்தால் அங்கு சென்று அந்த சித்திரத்தை வாசித்துப் பாருங்கள்.(அந்த இணைப்பை எப்படிக் கொடுப்பது என்று எனக்குத் தெரியவில்லை. வருபவர்கள் யாரவது சொன்னால் அது எனக்கு உதவியாக இருக்கும்)
இந்த சித்திரத்தை வாசித்து முடித்த போது பல வருடங்களுக்கு முன்னர் நடந்த சம்பவம் ஒன்றுஅடி மனதில் இருந்து நினைவுக்கு வந்து போனது.
இந்த வாழ்க்கைக்குள் நானும் இருந்தேன் சில வருடங்கள்.
வழக்கமாக என் வேலைத்தலத்தில் எப்போதும் சிலர் Customer Service இற்கு நிற்கவேண்டி இருப்பதால் ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே மதிய உணவுக்காக வெளியே போகலாம்.அதனால் பெரும்பாலான நாட்களில் நான் தனியாகவே மதிய உணவுக்கு வெளியே போவது வழக்கம்.
அங்கு வழக்கமாக நான் சண்ட்விட்ச் வாங்கும் கடை ஒன்றிருந்தது. அதனை ஆங்கிலேயன் அல்லாத ஒரு இளைஞன் நடத்தி வந்தான். அவ்விளைஞன் கல்லூரியில் சிறுவியாபாரம் பற்றிய கற்கை நெறியை முடித்துப் புதிதாக இக்கடையை ஆரம்பித்திருப்பதாகக் காலப் போக்கில் அறிந்து கொண்டேன். நாளடைவில் தினம் வரும் வாடிக்கையாளராகவும் நட்போடு நலம் விசாரிக்கும் ஒருத்தியாகவும் நான் ஆகிப்போனேன்.
அங்கு வெளியே இருந்து உண்பதற்கு குடை நிழல்களும் கதிரைகளும் போடப்பட்டிருக்கும்.அங்கமர்ந்து உணவை மென்மையாய் மென்றபடி பிற கடைகளுக்குப் போய் வருவோரை பார்த்துக் கொண்டிருப்பது என் மதிய நேர வழக்கமாகவும் பொழுது போக்காகவும் ஆகிப்போயிற்று.
இவ்வாறிருந்த ஒரு நாளில் மதிய உணவுக்காக போன போது இந்தக் கடையைத் தாண்டி புதிய ஒரு நடமாடும் வாகனம் புதிய ரக உணவுகளை விற்பனை செய்து கொண்டிருக்கக் கண்டேன்.வேலையால் வருபவர்கள் வாங்க வந்த படியும்; வாங்கிய படியும்; அதனை வாங்கி உண்டபடியும்; நகர்ந்து கொண்டிருந்தார்கள்.சுடச்சுட வாசம் காற்றோடு கலந்து வந்தபடி இருந்தது. அதனை வாங்கி உண்ணும் ஆவல் எனக்கும் தொற்றிக் கொண்டது. எத்தனை நாளைக்குத் தான் ஒரே சண்ட்விட்சுகளை சாப்பிடுவது சொல்லுங்கள்?
ஆனால் அந்த இடத்துக்குப் போக வேண்டுமென்றால் நான் இந்தக் கடையைத் தாண்டிப் போக வேண்டும். இந்தக் கடையைத் தாண்டுகின்ற போது மனதுக்குச் சற்றே கஸ்ரமாக இருந்தது. வழக்கமான அந்த இளைஞனின் நலம் விசாரிப்பும் புன்னகையும் என்னை என்னவோ செய்தன.போவதா விடுவதா என்ற மனப்போராட்டம். எனினும் யோசித்துப் பார்த்த போது சட்டப்படி நான் தவறேதும் செய்யவில்லை என மனதைச் சமாதானப் படுத்திக் கொண்டேன்.
கடந்து சென்று உணவினை வாங்கியதும் அந்த உணவை உண்ண முடியாத படிக்கு என்னை அது என்னவோ செய்தது. ஏதோ ஒன்று நான் செய்தது தவறு தவறு என்று உள்ளூர ஓங்கிக் குரல் கொடுத்துக் கொண்டே இருந்தது. அந்த இளைஞனின் புன்னகை பூத்த நலம் விசாரிக்கும் குரலை நான் இனிக் கேட்க முடியாது என்றும்;இனி அந்தத் தவறை சரிசெய்ய முடியாது என்றும் மனம் தீர்ப்பு வழங்கி விட்டது.
மிகவும் துக்கமாக இருந்தது.
நேரடியாக அந்தக் கடைக்குப் போய்,’ நண்பனே நலமாய் இருக்கிறாயா?’ எனக் கேட்டேன். கடை வெறிச்சோடிக் கிடந்தது. அவனுடய முகம் மிகச் சுருங்கிப் போயிருந்தது. என் கையிலிருந்த பாசலும் இந்தக் கொடுமையான கேள்வியும் அதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். ’என்னை நீ மன்னித்துக் கொள் நண்பனே! இன்று நான் ஒரு மாற்றத்திற்காக அந்த நடமாடும் வாகனத்தில் இருந்து உணவை வாங்கிக் கொண்டேன்.என் மனதுக்கு ஏனோ அது கஸ்ரமாக இருக்கிறது. அதனால் உன்னிடம் இந்த உண்மையைச் சொல்லிப் போக வந்தேன்’ என்றேன்.
அவன் முகத்தில் ஒரு பொன்னொளிப் பிரகாசம் பொலிந்தது.அந்த முக மாற்றத்தை நான் மிகத் துல்லியமாகக் கண்டேன். இன்று வரை அந்த முகப்பிரகாசம் மனதில் நிலைத்து நிற்கின்ற அளவுக்கு அந்தப் பிரகாசம் யாராலும் இனம் கானக்கூடிய அளவுக்கு மிக வெளிப்படையாகவும் இருந்தது.
’அதனால் என்ன பெண்ணே! இதோ பார்! நீ என் கடையின் குடை நிழலில் உட்கார்ந்து உன் உணவை உண்பாயாக!’ என்றான். எப்போது வேண்டுமானாலும் நீ இந்த இருக்கைகளைப் பாவித்துக் கொள்ளலாம் என்று மேலும் அவன் சொன்னான்.
எனக்கேனோ அன்று தனியாக எங்கேனும் உட்கார்ந்து அழ வேண்டும் போலிருந்தது.
ஏனென்று தெரியவில்லை.
இந்தச் சம்பவம் நடந்து இன்றைக்கு கிட்டத்தட்ட 7 வருடங்களுக்கு மேலாகி விட்டன. இன்றும் அது நினைவில் நிற்கிறது.
மாற்றங்கள் வந்து கொண்டே தான் இருக்கின்றன. சில விடயங்களுக்கு வெளிப்படையாகப் பார்க்க; தர்க்க ரீதியாகப் பார்க்க ஏதும் பிழைகள் இருப்பதாகத் தோன்றுவதுமில்லை. ஆனால் ஏதோ ஒன்று அது தவறு என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டு இருக்கிறது.
அதனை சிலர் மனச் சாட்சி என்பர். சிலர் தர்மம் என்பர்.அதனை எஸ்போ ”அவரவர் பயம் அவரவர் தர்மம்” என்பார்.
ஏதோ ஒன்று!
இத்தனை வருடங்களுக்குப் பின்னும் ஒரு நிகழ்வை எழுதும் வரிகளில் வெளிப்படும் அநாயாசமான இளக்கமும் தார்மீக மன வருத்தமும் உங்கள் உள்ளக்கிடக்கையை துளியும் மாற்றாமல் பறைசாற்றுகின்றன, மணிமேகலா. அடுத்தவர் நிலையிலிருந்து தம்மை உணர்வதே உண்மையான மனிதம். உங்கள் உள்ளத்தோடு கலந்துவிட்ட அந்த உணர்வைப் போற்றுகிறேன்.
ReplyDeleteபாலைஸ், கோனைஸ், கப்பைஸூக்கான பதிவிலும் அந்த உணர்வைக் காண்கிறேன். மனமார்ந்த பாராட்டுகள் அவருக்கும்.
அதற்கான இணைப்பு இதோ...
http://agaramuthala.blogspot.com.au/2006/04/blog-post_21.html
மிக்க மகிழ்ச்சி கீதா.
ReplyDelete(கொஞ்சம் சுய புராணமாய் ஆயிற்றென்று சற்றே கூச்சமாயிருக்கிறது.).
அக்கறையோடு அங்கு சென்று அப்பதிவைப் பார்த்ததற்கும் நன்றி கீதா.
மாற்றங்கள் வந்து கொண்டே தான் இருக்கின்றன. சில விடயங்களுக்கு வெளிப்படையாகப் பார்க்க; தர்க்க ரீதியாகப் பார்க்க ஏதும் பிழைகள் இருப்பதாகத் தோன்றுவதுமில்லை. ஆனால் ஏதோ ஒன்று அது தவறு என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டு இருக்கிறது.
ReplyDeleteஅதனை சிலர் மனச் சாட்சி என்பர். சிலர் தர்மம் என்பர்.அதனை எஸ்போ ”அவரவர் பயம் அவரவர் தர்மம்” என்பார்.
ஏதோ ஒன்று!
சொல்ல வந்த ஏதோ ஒன்று விடுபட்டுப் போயிற்றோ என் செந்தாமரைத் தோழி?
ReplyDeleteபதிவின் முதல் வாசிப்போடு நானும் 'அகரமுதல' சென்று 2007வரை அலசி தோல்வியுடன் ஆனால் பதிவுகளின் சுவை பற்றிய வியப்புடன் திரும்பினேன் தோழி. கீதமஞ்சரிக்கு நன்றி! 'பாலைஸ் கப்பைஸ் கோனைஸ்' இப்பதிவின் தொடர்பென்ன என புரிய வைத்தமைக்கு! சந்தர்ப்ப சூழல் சில மாற்றங்களை அனுமதித்தாலும் மனசாட்சியின் நெருடல் நம் நேர்மையை பிரதிபலித்தபடி. வலைகடலில் மூழ்கி அமிழ்ந்திருக்கும் முத்து ரத்தினங்களை எங்களுக்கு அன்பொழுக சமர்ப்பிக்கும் தங்களுக்கு மேலான நன்றி தோழி!
ReplyDeleteமகிழ்ச்சி நிலா. :)
ReplyDelete