Tuesday, June 5, 2012

உள்ளொளி



பல வாரங்களின் பின் மீண்டும் சந்திக்கிறேன்.

ஒரு மாதத்தின் முன் வேலைத் தலத்தில் என் அருகிருந்த தோழன் - வெள்ளிக்கிழமை அருகில் இருந்து விடுமுறை நாள் வாழ்த்துக் கூறியவன் - திங்கள் கிழமை உயிரோடு இல்லை என்ற அதிர்ச்சியையும் அது கிளர்த்திச் சென்ற சிந்தனைகளையும் ஜீரணிக்கவும் என்னை ஒரு தடவை சுய விமர்சனம் செய்து கொள்ளவும் இந்த இடைவெளி தேவையாய் இருந்தது.

பல விடயங்களில் என்னை நான் சரி செய்து கொள்ள வேண்டி இருக்கிறது.

நேரத்தை சீரமைத்து திட்டமிட்டுக் கொள்ள வேண்டி இருக்கிறது.

உறவுகளிடையே செய்ய வேண்டி இருக்கின்ற கடைமைகள் நிறைய இருக்கின்றன.

‘போகின்ற’ திகதி தெரியாததால் போகின்ற போது மனநிறைவோடு போக சில பிராயச் சித்தங்களையும் செய்ய வேண்டி இருக்கிறது.

எப்போதும் ‘தயார்’ நிலையில் இருக்க மனம் பணிக்கிறது.

தெரியாமல் செய்த குற்றங்கள் தவறுகளுக்கு என்ன செய்யலாம் என்று சிந்திக்க பல மணி நேரங்களைச் செலவிட வேண்டி இருக்கிறது.

முழுவதுமாக என்னைக் குலைத்துப் போட்டு விட்டு மீளச் சீராகக் கட்டி எழுப்பத் தோன்றுகிறது.

பல விடயங்களைச் சொல்லவும் எழுதவும் விடயங்கள் இருக்கின்ற போதும் அவற்றைத் தொட மனசில்லாமல் இருக்கிறது.

இதற்கிடையில் நம் இலக்கியச் சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது. அது பற்றி நம் ஸ்தாபகருள் ஒருவரான நாட்டியக் கலாநிதி.கார்த்திகா.கணேசர் எழுதித் தந்த ஆக்கம் ஒன்று பதிவுக்காகக் காத்திருக்கிறது.

மேலும் அடுத்த இலக்கியச் சந்திப்பு வருகின்ற வாரம் மேலும் ஒரு தளத்துக்கு எடுத்துச் செல்லப்பட இருக்கிறது.

இந்த ஜோர்ஜ் கிளர்த்திச் சென்ற சிந்தனைகளில் இருந்து விடுபட முடியா சிறையில் நான் இப்போது இருக்கிறேன்.

இந்த இடத்தைக் கடந்தால் தான் அடுத்த பகுதிக்கு நகரலாம் என்றும் தோன்றுகிறது. காலம் நம்மைத் துரத்திக் கொண்டிருக்க விரும்பியோ விரும்பாமலோ அடுத்த கட்டத்துக்குப் போயாக வேண்டும் நாம்.

அண்மையில் பார்த்த ஆனந்த விகடன் கவிதை ஒன்று என் மனநிலையை அப்படியே சொல்லிச் செல்கிறது.





உயில் மொழி

என்னுயிர்
பிரியும் வேளையில்
தலைமாட்டிலும்
கால்மாட்டிலும்
நின்றவர்கள்
நீங்கள் தானா?

இமைகளை மூடி விட்டது
எந்த விரல்கள்?

நாடிக் கட்டுக்காய்
கிளிக்கப்பட்ட துணி
எவருடயது?

அசுத்தங்கள் நீக்கி
என் பிரேதத்தை
குளிப்பாட்டி
கபன்* பொதித்தவர்கள்
யாரெல்லாம்?

வியர்வை சிந்த
எனக்கான
கபர் குழியை*
வெட்டியவர்கள் எவர்?

என் ஜனாஸாவை*
சுமந்து சென்ற
தோள்கள் எவருடயவை?

என் பிரிவிற்காய்
கண்ணீர் வழிந்த
கன்னங்கள் எத்தனை?

என் வாழ் காலத்தில்
உங்களைக் கடக்க நேர்ந்த
பொழுதுகளில்
உங்களுக்காகப்
புன்னகைத்திருக்கிறேனா
நான்?


*கபன் - இறந்தவர்கள் மீது போர்த்தப்படும் துணி.
*கப்ர் குழி - அடக்கம் செய்யப்படும் குழி
*ஜனாஸா - பிரேதம்.

_வி.எஸ்.முஹம்மது அமீன். - 
25.04.2012 ஆனந்த விகடன். பக்; 37.

3 comments:

  1. போகின்ற’ திகதி தெரியாததால் போகின்ற போது மனநிறைவோடு போக சில பிராயச்சித்தங்களையும் செய்ய வேண்டி இருக்கிறது.

    ReplyDelete
  2. காலம் நம்மைத் துரத்திக் கொண்டிருக்க விரும்பியோ விரும்பாமலோ அடுத்த கட்டத்துக்குப் போயாக வேண்டும் நாம்//

    வெகு நிச்ச‌ய‌மாய்! விக‌ட‌ன் க‌விதை என்னையும் அசைத்துப் போட்ட‌து தோழி!

    ReplyDelete
  3. போகத்தான் வேண்டும். :)

    ReplyDelete