Saturday, June 23, 2012

ஆக்காண்டி ஆக்காண்டி.....

21.04.2012.

ஒரு சனிக்கிழமை. விடுமுறை நாள். வலையில் ஏதோ தேடி yaarl.com சென்றடைந்த நேரம்.

இப்பாடலும் கவிதையும் கிட்டியது. (நன்றி: yaal.com) இயற்றியவர் சண்முகம் சிவலிங்கம் என்ற ஈழத்துக் கவிஞர்.என் ஏழாம் வகுப்பு அல்லது எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது தமிழ் பாடப்புத்தகத்தில் இப்பாடல் இருந்தது நினைவுக்கு வர என் இலக்கிய நண்பர் மற்றும் நாடக இயக்குனர் திரு. பாஸ்கரனுக்கு இக்கவிதையை அனுப்பி வைத்தேன்.

அவர் அப்போது புதிய நாடகம் ஒன்றுக்கான முஸ்தீபு முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார். ஏதேனும் ஒரு வகையில் இது அவருக்கு உதவக்கூடும் என்பது என் அனுமானமாக இருந்தது.

அதனை நான் அனுப்பி வைத்தது அதே சனிக்கிழமை.

திங்கள் கிழமை வழமை போல தமிழ்முரசு அவுஸ்திரேலியா என்ற வாராந்த மின் சஞ்சிகையைப் பார்த்தேன்.கடந்த வெள்ளியன்று (20.04.2012) சண்முகம். சிவலிங்கம் என்ற ஈழத்துக் கவிஞர் காலமானார் என்ற செய்தி தலைப்புச் செய்தியாகப் பதிவாகி இருந்தது.

முகத்தில் அறைந்து சென்றது அச்செய்தி.

கவிதையைக் கண்டடைந்த நேரம் கவிஞனைத் தவற விட்டிருந்தோம்.

கடந்த 10.06.2012 அன்று நடந்த உயர்திணையில் விமர்சன அரங்கில் கவிதை பற்றிப் பேசிய கோகிலா.மகேந்திரன் அவர்கள் கவிதை காலம் கடந்தும் மனித உணர்வுகளோடு ஒர் உறவு முறையைக் கொண்டாடும் என்றார்.

இப்பாடலைப் பார்க்கும் போதும் கேட்கும் போதும் அது புரிகிறது.


இப்பாடல் புலரும் வேளை என்ற இறுவட்டில் இருக்கிறது.பாடியவர்கள்: ஞான ஆனந்தன்,(சங்கீத்வர்மன்,பிரகீத்வர்மன்,டிலீப்குமார்)

                                                                

சண்முகம். சிவலிங்கம்: (1937 - 2012 சித்திரை 20 -2012 பாண்டிருப்பு.)

ஆக்காண்டி ஆக்காண்டி
எங்கெங்கே முட்டை வைத்தாய்?
கல்லைக் குடைந்து 
கடலோரம் முட்டை வைத்தேன்.

வைத்ததுவோ ஐந்து முட்டை
பொரித்ததுவோ நாலு குஞ்சு
நாலு குஞ்சுக்கிரைதேடி
நாலுமலை சுற்றி வந்தேன்
மூன்று குஞ்சுக்கிரைதேடி
மூவுலகம் சுற்றி வந்தேன்

ஆக்காண்டி ஆக்காண்டி
எங்கெங்கே முட்டை வைத்தாய்?
கல்லைக் குடைந்து 
கடலோரம் முட்டை வைத்தேன்.

குஞ்சு பசியோடு 
கூட்டில் கிடந்ததென்று
இன்னும் இரைதேடி
ஏழுலகம் சுற்றி வந்தேன்

கடலை இறைத்து 
கடல் மடியை முத்தமிட்டேன்
வயலை உழுது
வயல் மடியை முத்தமிட்டேன்

கடலிலே கண்டதெல்லாம் 
கைக்கு வரவில்லை
வயலிலே கண்டதெல்லாம்
மடிக்கு வரவில்லை

கண்ணீர் உகுத்தேன்
கடல் உப்பாய் மாறியதே
விம்மி அழிதேன் 
மலைகள் வெடித்தனவே

ஆக்காண்டி ஆக்காண்டி
எங்கெங்கே முட்டை வைத்தாய்?
கல்லைக் குடைந்து 
கடலோரம் முட்டை வைத்தேன்.

வண்டில்கள் ஓட்டி 
மனிதர்க் குழைத்து வந்தேன்

கையால் பிடித்து
கரைவலையை நான் இழுத்தேன்

கொல்லன் உலையைக் 
கொளுத்தி இரும்படித்தேன்

நெய்யும் தறியிலே
நின்று சமர் புரிந்தேன்

சீலை கழுவி
சிகையும் அலங்கரித்தேன்

வீதி சமைத்தேன்

விண்வெளியில் செல்லுதற்கு
பாதை சமைக்கும்
பணியும் பல புரிந்தேன்

ஆனாலும் குஞ்சுக்கு
அரைவயிறும் போதவில்லை
காதல் உருக
கதறி அழுது நின்றேன்

கதறி அழுகையிலே
கடல் இரத்தம் ஆயினதே
விம்மி அழுகையிலே
வீடெல்லாம் பற்றியதே

கடல் இரத்தம் ஆகுமென்று
கதறியழவில்லை
வீடுகள் பற்றுமென்று
விம்மியழவில்லை

ஆக்காண்டி ஆக்காண்டி
எங்கெங்கே முட்டை வைத்தாய்?
கல்லைக் குடைந்து 
கடலோரம் முட்டை வைத்தேன்.
குஞ்சு வளர்ந்தும்
குடல் சுருங்கி நின்றார்கள்

பசியைத் தணிக்க
பலகதைகள் சொல்லி வந்தேன்

கடலை இறைத்துக்
களைத்த கதை சொல்லி வந்தேன்

வயலை உழுது 
மடிந்த கதை சொல்லி வந்தேன்

கொல்லன் உலையும்
கொடுந் தொழிற்சாலையதும்
எல்லா இடமும்
இளைத்த கதை சொல்லி வந்தேன்

சொல்லி முடிவதற்குள் 
துடித்தே எழுந்து விட்டார்
பொல்லாத கோபங்கள்
பொங்கி வரப் பேசுகிறார்

“கடலும் நமதன்னை
களனியும் நமதன்னை
கொல்லன் உலையும்
கொடுந்தொழிற்சாலையதும்
எல்லாம் நமது” என்றார்
எழுந்து தடி எடுத்தார்

கத்தி எடுத்தார்
கடற்பாரையும் எடுத்தார்
யுத்தம் எனச் சென்றார்
யுகம் மாறும் என்றுரைத்தார்

எங்கும் புயலும்
எரிமலையும் பொங்கி வர
சென்றவரைக் காணேன்
செத்து மடிந்தாரோ?

வைத்ததுவோ அஞ்சு முட்டை
பொரித்ததுவோ நாலு குஞ்சு
நாலு குஞ்சும் போர் புரிய
போய் விட்டார் என்ன செய்வேன்? 

ஆனவரைக்கும் 
அந்த மலைக்கப்பாலே
போனவரைக் காணேன்
போனவரைக் காண்கிலேனே!

ஆக்காண்டி ஆக்காண்டி
எங்கெங்கே முட்டை வைத்தாய்?
கல்லைக் குடைந்து 
கடலோரம் முட்டை வைத்தேன்.


இந்திய நாட்டுப் புறப்பாடல்: (பின்னிணைப்பு 24.06.2012)



Friday, June 15, 2012

உயர்திணையின் விமர்சன அரங்கு

உயர்திணையின் ஜீவநதி சிறப்பிதழின் விமர்சன அரங்கு சரியாக 10.06.2012 அன்று ஞாயிற்றுக்கிழமை மப்பும் மந்தாரமும் மழையுமாய் இருந்த ஒரு மாலைநேரம் சரியாக 1.30 மணிக்கு ஆரம்பமாயிற்று.

அரங்கு வழமையான மேடை, சபை என்ற பாணியில் இல்லாமல் எல்லோரும் ஒரேதளத்தில் வட்டமாக ஒரு கலந்துரையாடல் பாணியில் அமைந்திருந்தது.அது சிட்னிக்குச் சற்றே புதிது.

சிற்றுண்டிக்கான இடைவேளை விடப்படாதெனவும் விரும்பியவர்கள் விரும்பிய நேரம் மற்றவர்களுக்குச் இடையூறு ஏற்படுத்தா வண்ணம் தமக்கு செளகரிகமான நேரங்களில் அவற்றைச் சென்று எடுத்துக் கொள்ளலாம் என்ற அறிவிப்பும் சற்றே புதிது.

எதிர்பாராத புலமையாளர் கூட்டம்.

பாரதக் கவிஞர் வைதீஸ்வரன் ஐயா,ஈழத்தின் சுடரொளி பத்திரிகையின் ஆசிரியர், வில்லுப் பாட்டுக் கலைஞர்,சிறந்த ஓவியர் கனகசிங்கம் அவர்கள், சக்கர நாற்காலியில் தூர இடத்தில் இருந்து வந்திருந்த கவிஞர் அம்பி,அவுஸ்திரேலியப் பல்கலைக்கழகம் ஒன்றில் பேராசிரியராக இருக்கும் எழுத்தாளர் ஆஸி. கந்தராஜா அவர்கள் (அவர் முதல் நாள் தான் வெளி நாடு ஒன்றில் இருந்து வந்திருந்தார்.),யாழ்.பல்கலைக் கழக முன்னாள் தமிழ் துறை விரிவுரையாளர். கலையரசி.சின்னையா அவர்கள்,’கலப்பை’ சஞ்சிகை ஸ்தாபகர் Dr.கேதீஸ்,நியூசவுத்வேல்ஸ் தமிழ் பாடசாலைகள் கூட்டமைப்பின் நடப்பாண்டுத் தலைவர்.திரு.கதிர்காமநாதன்,வென்ற்வேர்த்வில் தமிழ் கல்வி நிலைய நடப்பாண்டு அதிபர் கணநாதன் அவர்கள். கம்பன் கழகப் பேச்சாளர்.திருநந்த குமார் அவர்கள், எனத்தொடங்கிய அந்த வரிசை இரண்டாம் சந்ததியின் சிந்தனைகளைக் கொண்டிருந்த இணையம் பிறப்பித்த தமிழ் பிள்ளைகளான மெல்போர்னில் இருந்து இந் நிகழ்ச்சிக்கென வருகை தந்திருந்த ஜேகே, கேதா, மற்றும் வைத்தியக் கலாநிதி.திருமுருகன் ஆகியோராலும் ’ஈழத்து முற்றம்’ ஸ்தாபகர் கானா.பிரபா, இணைய வழியால் இணைந்து கொண்ட ஆழமான வாசிப்பனுபவங்களைக் கொண்ட யசோதரன், சக்திவேல், போன்றவர்களாலும், இந் நிகழ்ச்சி பற்றி இணையமூடாக அறிந்து katoomba வில் இருந்து தொடரூந்து வழியாக வந்த செல்வி.கெளரி போன்றவர்களாலும் அழகு பெற்றிருந்தது.



மகா பாரதத்தில் ஒரு இடம் வரும்.வில்வித்தையில் சிறப்புற்றிருந்த அர்ச்சுணனுக்கும் கர்னனுக்குமான களம் அது. கர்னன் தன்னால் அர்ச்சுணனுக்குப் போட்டியாக வில்வித்தைப் போட்டிக்கு வரத் தயார் நிலையில் நிற்பான். ராஜகுரு கர்னனைப் பார்த்து ஒரு கேள்வி கேட்பார்.” எந்த சிம்மாசனத்தை நீ அலங்கரிக்கிறாய் கர்னா?” 

இணையத்தைத் தமிழால் அலங்கரிக்கும் ஒரு சந்ததி; பாரம்பரிய மரபுவழி சிந்தனைகளின் வழிவந்த மூத்த சந்ததி இரண்டுக்குமான களமாக இது இருந்தது. சமானமான அறிவுப் புலம் கொண்ட இருவேறு அணியை அங்கு வந்திருந்த பலரும் தெளிவாக அடையாளம் கண்டிருப்பர்.மூத்த அறிவுஜீவிதங்களின் சிந்தனை ஓட்டமும் இளைய சிந்தனையாளர்களின் தீவிர சிந்தனையும் அங்கு ஆரோக்கியமாக அமர்ந்திருக்கக் கண்டேன்.



இவர்களை விட தமிழ் இலக்கிய ஆர்வலர்கள்! 

எல்லோருமாகச் சுமார் 40 பேர்! அது இலக்கத்தினால் அல்லாமல் காத்திரமான அறிவினால் சூழப்பட்ட சபை. அது தான் இதன் தனித்துவமான சிறப்பு.

நம்முடய எதிர்பார்ப்பு கிட்டத்தட்ட 10 - 15 பேராகத் தான் இருந்தது என்பதையும் நான் சொல்லியாகவேண்டும். தீவிர வாசகர்கள், எழுத்தாளுமைகள், புதிய சிந்தனைகளைக் கொண்ட ஒரு சிலர் - இது தான் எங்கள் இலக்காக இருந்தது.

இந்த ஆதரவு நாம் எதிர்பார்த்த ஒன்றல்ல. இதற்கு முக்கியமான காரணம் எழுத்தாளர் முருக பூபதி அவர்கள்.அவர் நல்ல ஒரு மனிதக் களஞ்சியம்.மற்றும் இளஞ் சந்ததித் தமிழர்களும் அவர்களுடய இணையப் பக்கங்களும். சிட்னியில் இருக்கும் நமக்கே தெரியாத தீவிர தமிழ் இலக்கிய வாசகர்களை மெல்போர்னில் இருந்த படியே வரவழைத்த பெருமை ஜேகேக்கும் கேதாவுக்கும் உரியது!

உண்மையில் இந்தக் களம் புதிய தலைமுறையையும் மூத்த தலைமுறையையும் சந்திக்கப் பண்ணிய சிந்தனைகளின் மனம் திறந்த ஒரு மோதலாக இருந்தது என்பதையே நான் உணர்கிறேன்.

முதலில் ஜீவநதியின் சிறுகதையை முன்வைத்து ஆறு.குமாரசெல்வம் தன் விமர்சனத்தை முன்வைத்தார்.மிக மென்மையான போக்கை அது கொண்டிருந்தது.அதற்கு எதிர்வினையாற்றிய ஜேகே சிறுகதை என்பதன் பரிமானங்களை உலக இலக்கியங்களில் இருந்து எடுகோள்காட்டி சில கதைகளை கதைகளே இல்லை என முழுமையாக நிராகரித்து; கோகிலா அவர்களுடய கதையில் இரண்டு கதைகள் இணைக்கப் பட்டிருக்கின்றன என்று கூறி ஒரு சிறுகதை என்பது ‘ஒரு கல்லை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு நகர்த்தி இருக்கவேண்டும்’ என்ற கருத்தைக் கூறி சிறுகதைக்கான பரந்துபட்ட வாசிப்பனுபவத்தின் அடிப்படையில் ஒரு பார்வையை வெளிப்படுத்தி இருந்தார்.


இது இப்படியே இருக்க விவசாயத்துறையில் பேராசிரியராய் இருக்கும் எழுத்தாளரான ஆஸி. கந்தராஜா சிறுகதை என்பதற்கு வரைவிலக்கணம் என்பதில்லை.ஆரம்பத்தில் இருந்த சிறுகதைக்கான வடிவம் அதன் அமைப்பிலும் தோற்றத்திலும் கொள்ளளவிலும் எத்தகைய மாற்றங்களைக் காலப் போக்கில் கொண்டுவந்து தந்திருக்கிறது என்ற வாதத்தை முன் வைத்து தற்போது அது ஒருபக்கக் கதையாகி ஒரு வரிக் கதையாகக் கூட வந்து விட்டது என்ற கருத்தை வைத்தார்.


அதற்குப் பதிலளித்த கோகிலா அவர்கள் எல்லாவற்றுக்கும் வரவிலக்கணங்கள் உண்டெனவும் இல்லாவிட்டால் ஒரு கட்டுரைக்கும் கதைக்கும் என்ன வேறுபாடு இருக்க முடியும் என்றும் எடுத்துக் காட்டி முன்னாள் யாழ்பல்கலைக்கழக தமிழ் விரிவுரையாளரான கலையரசி. சின்னையா அவர்களைக் இதற்குக் கருத்துக் கூறுமாறு கூறி அமர்ந்தார்.சற்றுப் பொறுத்து அதற்குக் கருத்துக் கூறிய கலையரசி அவர்கள் நிச்சயமாகச் சிறுகதைக்கு வரைவிலக்கனம் உண்டு என்பதை தெளிவாக முன் வைத்தார்.

அதன் போது இவற்றை உன்னிப்பாக அவதானித்த படி இவற்றை ஒளிப்படம் எடுத்துக் கொண்டிருந்த கானா.பிரபா மக்கள் - ரசிகர்கள் - வாசகர்கள் தான் வடிவத்தைத் தீர்மானிப்பார்களே தவிர வரைவிலக்கணங்கள் எது கதை என்பதைத் தீர்மானிப்பதில்லை என்ற கருத்தை முன் வைக்க மேலும் இந்த உரையாடல் நகராத படிக்கு நேரம் நகர்ந்து கொண்டிருக்க கதைப்பாகம் முடிந்து கவிதைப் பாகம் ஆரம்பித்தது.


ஜீவநதியின் கவிதைகளை முன் வைத்து கோகிலா அவர்கள் நன்கு செப்பனிடப்பட்ட பேச்சினை கம்பீரமாக ஆரம்பித்து வைத்தார். அது சிறந்த ஒரு ஆய்வுக்கட்டுரையின் வடிவத்தை ஒத்திருந்தது. சற்றுமுன்னர் தான் சிறுகதையின் வரைவிலக்கணம் பற்றிய சர்ச்சை நிகழ்ந்து முடிந்திருந்ததால் கவிதைக்கான வரையறையை அவர் சொல்லுகின்ற போது கவிதைக்கான வரைவிலக்கணத்தை அழுத்திச் சொல்லி கவிதைகளுக்குச் சந்தம் இருந்தால் அது சிறப்பு என்று முன்மொழிந்து அமர்ந்தார். அவரது அந்தப் பேச்சும் அதற்குப் பதிலாய் அமைந்திருந்த கேதாவினது பேச்சும் எழுத்தினால் விபரிக்கத் தக்கதன்று. அது பார்த்துக் கேட்டு உய்த்து உணரவேண்டியது. இந்நிகழ்ச்சியின் பேரழகாய் அது இருந்தது. அதனை வீடியோக் காட்சியாக இங்கு பதியும் எண்ணம் இருப்பதால் அதனை இப்போதைக்கு ஒரு வெற்றிடமாக விட்டுச் செல்கிறேன்.

இங்கும் மரபுக்கும் புதுமைக்குமான மோதலை காணமுடிந்தது.புதுக்கவிதையும் ஹைக்கூ கவிதையும் மரபுக்குள்ளும் எதுகைமோனைக்குள்ளும் சந்தத்துக்குள்ளும் சிறைப்பட்டிருந்தால் தமிழுக்குப் புதிய வரவுகள் சித்தித்திருக்குமா என்ற கேள்வியும் உதாரணங்களும் எதிர் எதிராய் வீசப்பட அழகான புலமை யுத்தம் ஒன்று மிக அழகாக ஆரோக்கியமாக முன்னெடுக்கப்பட்டது.

உண்மையில் சிறுகதைகளுக்கும் கவிதைகளுக்குமான களம் ஆரோக்கியமாக விரிந்து செல்லும் சாத்தியங்கள் நிறையவே இருந்தன. எனினும் நேரம் காரனமாக அதுவும் முடிவுக்கு வர கட்டுரைகள் பற்றிய விமர்சனத்தை இந்துமதி அவர்கள் முன் வைத்தார்.ஆற்றொழுக்கான கம்பீரக்குரலுக்குச் சொந்தக்காரி அவர். பல கட்டுரைகளை இணைத்தும் சில கட்டுரைகளைச் சிலாகித்தும் சில கட்டுரைகளில் இருந்த திருத்தக் கூடிய அம்சங்களை சொல்லியும் அவர் அமர செளந்தரி கட்டுரைகள் பற்றிய கேள்விகள் சிலவற்றை முன் வைத்தார். 

கூடவே முன்னாளில் பல கவிதைகளை எழுதி வந்த  பாமதி கட்டுரைகள் - அதிலும் சமூகம் சார்ந்து எழுதப்படும் கட்டுரைகள் முறையாக ஆய்வு செய்யப்பட்டு எழுதப்படவேண்டும் என்றும் மேம்போக்காக எழுந்தமானமாக தனக்குத் தெரிந்த ஒரு சின்ன வட்டத்தை முழுமையான சமூகத்துக்குமான பார்வையாக வைத்து விட்டுப் போவதில் இருக்கும் சமூகப் பொறுப்பின்மையைக் காரசாரமாகக் கண்டித்தார்.

எனினும் கட்டுரையின் இறுதியில் இடம்பெற்ற அகிம்சை பற்றிய கருத்து பலரினதும் ஆர்வத்துக்குரிய பேசு பொருளாக இருந்தது. ஜீவநதியில் இடம்பெற்றிருந்த செளந்தரியின் அகிம்சைபற்றிய கட்டுரை இக்காலத்துக்கு அகிம்சை பொருந்துமா பொருந்தாதா என்ற கேள்வியை முன்வைத்திருந்ததும் அது உணர்வு ரீதியாக பலரின் கேள்வியாக இருந்ததும் அதற்குக் காரணமாக இருக்கலாம்.

மாகாத்மாகாந்தி வென்றதற்கான காரணம் அவர் தன் கொள்கையில் உறுதியாகவும் விடாப்பிடியாகவும் இருந்தார் என்பதும் அவருக்கு வாய்த்திருந்த எதிரி மனசாட்சி உள்ளவனாக - தர்மத்துக்குப் பயந்தவனாக இருந்தான் எனவும் பிரவீணன் எடுத்துச் சொல்ல (பிரவீணன் இம்முழு நிகழ்வையும் தொகுத்தளிக்கும் பணியையும் திறம்படச் செய்து கொண்டிருந்தார்) அதற்குப் பதில் கொடுத்த கேதா அவுஸ்திரேலியப் பழங்குடிமக்களை அதே ஆங்கிலேயர் எப்படி நடத்தினார்கள் என கேள்வி எழுப்பினார். தர்மம் வென்றே தீரும் எனவும் அதற்கு நமக்கு பொறுமையும் கொள்கையில் உறுதிப்பாடும் தேவை எனவும் பேச்சுக்கள் சுவாரிசமாய் நடந்து கொண்டிருந்த போது நேரம் 4.25 என கடிகாரம் காட்டியது.

திட்டமிட்ட நிகழ்ச்சிப் பிரகாரம் 45 நிமிடங்களைக் குறும்படக்காட்சிக்கும் அது பற்றிய கலந்துரையாடலுக்கும் ஒதுக்கி இருந்தோம் என்பதும் தாமதமாய் உறைக்க இந்த விவாத அரங்கை நெறிப்படுத்திக் கொண்டிருந்த பாஸ்கரன் அவசரமா ஓடி வந்து என்ன செய்வோம் எனக் கேட்டார்.

நிகழ்ச்சியை நிறைவு செய்வோம் என்று நன்றி கூடி முடித்த போது நேரம் சரியாக 4மணி.30 நிமிடம்.

முழுவதுமாக மூன்று மணி நேரம்! போனதே தெரியவில்லை. ஓரிருவர் மாத்திரம் 4 மணியளவில் தமக்கு வேறு நிகழ்ச்சி இருப்பதாகத் தெரிவித்து மன்னிப்புக் கோரி விடைபெற்றதைத் தவிர மற்ற அனைவரும் நிகழ்ச்சியோடு ஒன்றியிருந்தனர்.

இந்த நிகழ்ச்சி எப்படி நடந்தது என்று என்னை யாரும் கேட்டால் என்ன பதிலைச் சொல்லலாம் என எனக்குத் தெரியவில்லை.எல்லோரும் உணர்வு பூர்வமாக இணைந்து கொண்டிருந்தார்கள். தம்முடய கருத்துக்களையும் அபிப்பிராயங்களையும் தயக்கமின்றி முன்வைத்திருந்தார்கள். அது ஒரு சிறந்த ஆரம்பம் என்றே நினைக்கிறேன். 

எனினும், இந்த நிகழ்ச்சியின் பிடியில் இருந்து வெளியே வர எனக்கு 4 நாட்கள் பிடித்தன. மறு நாள் காலை எனக்கு பலவிதமான தொலைபேசி அழைப்புகள் வந்தன.நேரிலும் பலர் கருத்துச் சொன்னார்கள்.அவர்களுடய கருத்துக்களை அப்படியே தருகிறேன்.

1.”அடுத்த முறை இப்படி ஒரு நிகழ்ச்சியைச் செய்வதற்கு என்ன உதவி வேணுமெண்டாலும் கேளுங்கோ. நான் செய்து தாறன். என்ர தொலைபேசி இலக்கம் இருக்குத் தானே!”.- நிகழ்ச்சி முடிவின் போது திரு கந்தசாமி அவர்கள்.

2. ”High Quality” - திரு.நாகேஸ்வரன். 

3.”பிள்ள இது தான் என்ர இடம். என்ர மகளிட்ட சொல்லியிட்டன். இனி என்னை நீ எங்கும் அழைத்துப் போக வேண்டாம்.மாதம் ஒரு தடவை இங்கு அழைத்து வா அது போதும். நல்ல சந்தோசமா இருக்குப் பிள்ளை.” - ஓய்வு பெற்ற ஆசிரியர். திருமதி. நடராஜா.

4. ”நீங்கள் ஜீவநதி விமர்சனம் என்று ஒருவரை முழுமையாகப் புத்தகத்தை ஆய்வு செய்யக் கொடுத்து விட்டு மிகுதி நேரத்துக்கு சிறுகதை, கவிதை என்று அதன் ஆழ அகலங்களைக் கண்டு வந்திருக்கலாம். விடயங்கள் கூடி விட்டன”. -க.செளந்தரி.

5.”அக்கா,ஒரு விசயத்தை மட்டும் எடுங்கோ. அதப்பற்றி முழுமையாய் ஒரு விமர்சன அரங்கு வையுங்கோ. நீங்கள் நினைக்கிற மாதிரி இல்லை இங்கு பிறந்து வளர்ந்த பிள்ளைகளில் HSC தேர்வு விடயங்களில் எனக்கிருக்கிற அனுபவத்தை வைத்துச் சொல்கிறேன்.மின் தமிழ் பற்றி ஒரு அரங்கு வையுங்கோ.எத்தனை இளம் பிள்ளைகள் வருகிறார்கள் என்று பாருங்கோ”. - கானா.பிரபா.

6.”வருசம் ஒருக்கா ஆய்வரங்கை ஒரு நாள் முழுக்கச் செய்யலாம் நீங்கள்”. - எழுத்தாளர் முருக பூபதி.

7. ”புத்தகத்தை முதலில் வாசிக்கக் கொடுத்து விட்டு பிறகு இந்த நிகழ்ச்சியை நடத்தி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். என்றாலும் இந்த செட்டப் நல்லாக இருக்கிறது. நான் இதை எதிர்பார்க்கவில்லை.இதுவும் ஒரு சாதாரண நிகழ்ச்சியாகத் தான் இருக்கும் என்று நினைத்து வந்திருந்தேன்” -  Dr.பால முருகன்

8.”பலரையும் எழுத்துக்களால் மட்டுமே அறிந்திருந்த நமக்கு அவர்களை நேரில் கண்டு அளவளாவும் வாய்ப்புக் கிட்டியது. அது பற்றி நான் பெரிதும் மகிழ்கிறேன். அக்கா ’கேணியடி’ பாருங்கோ. உங்களுக்கு ஒரு ஐடியா வரும்.”. - ஜே.கே.

9. ”உங்களுடய மாதாந்த இலக்கியச் சந்திப்புக்கு இனி நானும் வருகிறேன்”.- யசோதரன்.

10.”எங்கட முதல் நிகழ்ச்சி தானே! பறவாயில்லை. திருப்தி”. - எழுத்தாளர் கோகிலா.மகேந்திரன்.

11.”எனக்கு சந்தோசம். எதிர்பார்த்தத விட நல்லாக நடந்தது. ஆனா இதே தரத்தை நாங்கள் maintain பண்ண வேணும். அது முக்கியம்.நாங்கள் நல்லாக் காலூண்டினாப் பிறகு கவிதைப் போட்டி, சிறுகதைப் போட்டி எண்டும் செய்யலாம்”. - பாஸ்கரன்.

12.” இலக்கியம் அதின்ர அழகியல் - இது பற்றிப் பேசிறதில எனக்குப் பிரியமே இல்லை. இலக்கியம் மக்களின்ர பிரச்சினையைத் தொடவேணும். அதப் பேச வேணும்.அதப்பற்றின பகிர்தல் இருக்க வேணும். குடுமிப்பிடிச் சண்டையள், எது இலக்கியம்,எது இலக்கியத்தரம் வாய்ந்தது என்பதெல்லாம் நேரத்தை வீணாக்குகின்ற சண்டைகள். நீங்கள் திசைமாறிப்போகாமல் சரியான பாதையில் போக உங்களைச் சிறப்பாகச் செப்பனிட்டுக் கொள்ள வேண்டியது அவசியம் அதுவும் இப்பவே” - பாமதி.

13. “ நான் நினைச்சத விட வித்தியாசமா நல்லா இருந்துது” - பா.சாந்தி.

14. ஒரு email Group  ஒண்ட தயார் செய்யுங்கோ. தமிழ் பள்ளிக்கூட ரீச்சர் மாருக்கும் இப்பிடியான விடயங்களைச் சொல்லுங்கோ. எங்கட பள்ளிக்கூடத்திலேயே 47 ரீச்சர் மார் இருக்கினம்.அவைக்கும் வர விருப்பமா இருக்கும். - இந்து.-

15. குறும்படம் ஒரு தனி subject. அத இதோட கலக்காதைங்கோ.ஆனா சரியான நேரத்துக்குத் தொடங்கி சரியான நேரத்துக்கு முடிச்சீங்கள்.

என்னைக் கேட்டால் இவை எல்லாமே பெறுமதியான கருத்துக்கள். மிக மிக அவசியமாகத் தேவைப்படுபவை. அனைத்தும் உண்மையான, நேர்மையான விமர்சனங்கள்.

இது புதுசு.

அது தான் எங்கள் வெற்றி. நேர்மையான விமர்சனத்தை நாம் வென்றெடுத்திருக்கிறோம். உண்மையான சமூகக் கரிசனையோடு அவை முன்வைக்கப் பட்டிருக்கின்றன. ஒரு சமூகத்தினுடய தேவையை அது உணர்த்துகிறது.அது இந்த விமர்சனங்கள் நமக்குத் தரும் நம்பிக்கை.

உயர நீண்ட தூரம் இருக்கிறது. சிறுதுளிகளில் இருக்கிறது பெரு வெள்ளத்துக்கான சாத்தியங்கள். சிறு விதையில் இருக்கிறது பெரு விருட்சத்துக்கான இருப்பு. ஒரு ஒளிக்கீற்றுக்குள் அடங்கி இருக்கிறது பல வண்ணங்களின் சூட்சுமம். ஒரு காலடியில் தொடங்குகிறது நீண்ட தூரத்துக்கான பயணம்.

இது தள்ளாட்டத்தோடு சேர்ந்த தனித்துவமான முதலடி!



”உயர்திணை” - அதன் பின்பக்கம்.

நம்முடய இலக்கியச் சந்திப்பின் நாலாவது காலடி!

திரும்பிப் பார்க்கிறேன்.(வரலாறு படித்ததாலோ என்னவோ ஒரு வித வரலாற்று நோக்கில் இது போகும். சலிப்பூட்டக்கூடியது எனத்தெரிந்தும் ஒரு விதமான ஆவணப்படுத்தலுக்காகவும் இதனைச் செய்ய வேண்டி இருக்கிறது: பொறுத்துக் கொள்வீர்களாக)

சென்ற மாசி மாதம் கடசி வாரத்து ஞாயிற்றுக் கிழமை நம் முதலாவது சந்திப்பு நிகழ்ந்தது. நாங்கள் நாலு பேர்: பாஸ்கரன்,செல்வம்,கார்த்திகா, மற்றும் நான் - கூடினோம். இப்படி ஒன்றை செய்ய ஆவல் இருக்கிறது என கூறிய போது முதல் பச்சைக்கொடியை காட்டிய கோகிலா அவர்களும்; பின்னாளில் அறிந்து அழைப்பு விடுத்த போது வந்திணைந்து கொண்ட இந்துமதியும் பின்னாளில் எமக்குக் கிடைத்த பெரிய பலம்.

இவ்வளவு பேர் தான் நாங்கள்.

பெரிதாக எதையும் சாதிக்கும் எண்ணம் எம்மிடம் இருக்கவில்லை. மாதம் ஒரு தடவை கூடி நாம் உருவாக்கிய இலக்கிய வடிவங்களை ரசித்து மகிழ்ந்த தரிசனங்களை பகிர்ந்து மகிழ்ந்து செல்வது மாத்திரமே எங்கள் எண்ணமாக இருந்தது.

முதல் சந்திப்பில் அந்த வீரியம் கொண்ட விதை ஊன்றப்பட்டது. அதன் அடுத்த மாதத்தில் அது மெல்ல முளை விட்டதைக் கண்டோம். அடுத்த மாத சந்திப்புக்கு முதல் ஈழத்தின் மலையகத்தைச் சேர்ந்த எளிய மக்களின் குரலை உயர்த்திக் காட்டிய தெளிவத்தை யோசெப் அவர்களின் சுகயீனத்துக்கு அவர் சர்வதேச தமிழர்களிடம் உதவி கேட்ட செய்தி நம்மை வந்தடைந்தது. அந்தச் செய்தியைப் பகிர்ந்து கொண்ட போது நாம் எல்லோரும் நம் குடும்ப அங்கத்தவர் ஒருவருக்கு இடையூறு வந்ததைப் போல உணர்ந்தோம்.

ஒரு சொற்ப நேர தொலைபேசிஉரையாடலில் சேர்ந்த பணத்தை TSS நிறுவனத்தினூடாக அனுப்பப் போன போது அதன் நிறுவனர் பார்த்திபன் அதனை இலவசமாக அனுப்பி தன் பங்கினைக் கேட்காமலே செலுத்தினார்.

நம்மிடையே இலக்கியம் சார்ந்து ஒரு குடும்ப நெருக்கத்தை உணர வைத்த நிகழ்வு இது.

இதற்கிடையில் கோடை காலம் போய் குளிர் காலம் ஆரம்பித்து விட்டிருந்தது. பரமற்றா பூங்காவில் கூடிய நம்மை இயற்கை கூடாரம் ஒன்றுக்குப் போகத் தள்ளியது. எங்கு போகலாம் என்று யோசித்த போது yaarl function centre தன் அகலக் கதவுகளை எமக்காக இலவசமாகத் திறந்து விட்டது.

அந்தச் சந்திப்பு நடந்து அடுத்த சந்திப்புக்கான இடைவெளியில் மெல்போர்ன் மாநிலத்தில் இருந்து எழுத்தாளர் முருக பூபதி அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருகின்ற நீண்ட வார விடுமுறையில் ஜீவநதி அவுஸ்திரேலியச் சிறப்பிதழை நமக்கூடாக சிட்னி மக்களுக்கு அறியத் தரும் ஆவலை வெளியிட்டிருந்தார்.

நம்மிடையே அது பற்றிக் கலந்து பேசிய போது விருப்பமும் குழப்பமும் எப்படிச் செய்வதென்ற யோசினையுமாக நாம் இருந்தோம். செய்வதென்று தீர்மானித்த போது நாம் யார் என்பதை - நம் நோக்கம் என்ன என்பதைத் தீமானிக்கும் நிலமைக்கு நாம் தள்ளப் பட்டோம்.

இங்கு பல பல நிறுவனங்களும் சங்கங்களும் அமைப்புக்களும் அதன் குடுமிப்பிடிச் சண்டைகளும் பலரிடம் ஒருவித வெறுப்பை விளைவித்திருந்ததாலும் ஒரே விதமான போக்குகளால் பலரும் சலிப்புற்றிருந்ததாலும் நம்மிடையே அதற்கான தயக்கமும் இருக்கவே செய்தது.

விமர்சனங்களை மாத்திரம் முன் வைக்காமல் இதனை ஒரு குழுவாக ஒரு முன்மாதிரியாக நம்முடய தனித்துவமான பார்வையில் இதனைச் செய்வோம் என்ற ஒரு புரிந்துணர்வின் அடிப்படையில் இதனைச் செய்வோம் எனத் தீர்மானித்தோம்.

நிறைய ஆர்வமும் சக்தியும் வந்து சூழ நிகழ்ச்சி நிரலை வகைப்படுத்தினோம்.ஜேகே என அழைக்கப்படும் ஜெயக்குமரனை அழைக்கும் ஆவல் என்னை உந்தித்தள்ள அழைப்பெடுத்துக் கேட்ட போது கவிதையின் விற்பன்னன் கேதாவையும் உடன் அழைத்து வருகிறேன் என்ற போது நமக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.அவர்களுக்கு அது 8 - 10 மணி நேரக் கார் பயணம்!

நாளாந்த நம் முழு நேர வேலைகளின் நடுவே இதனைச் செய்வதும் நம் ஆத்மாவைத் திருப்திப் படுத்தும் ஒரு நிகழ்வாக இருந்தது.அதற்கு ஒரு இடம் தேவையாக இருந்தது. மாலை நேரச் சிற்றுண்டியைக் கொடுக்க பணம் தேவையாக இருந்தது. மற்றும் நமக்கென ஒரு பெயரை அவசர அவசரமாகத் தீர்மானிக்க வேண்டி இருந்தது. நன் ஒரு சமூக நிறுவனம் ஒன்றிலும் வேலை செய்ததால் (புலம்பெயர்ந்தோர் வள நிலயம்(MRC) அவர்களிடம் இருந்து வசதியான அறை ஒன்றை 5 மணி நேரத்துக்கு பெற முடிந்தது.

அவசரத் தேவைக்காக நான் அடிக்கடி போகும் நம் தெருமுனையில் இருக்கும் இளந்தமிழன் ஒருவரின் கணணிக் கடை ஒன்றில் உரிமையோடு நம்முடய நிகழ்ச்சிக்கு ஆதரவு வழங்குமாறு கேட்ட போது கேட்டதை விட அதிகளவு ஆதரவை பெற்றோம்.

இப்போது நம்முன்னால் நமக்கு என்ன பெயர் சூட்டுவது என்ற கேள்வி எழுந்தது. பலரும் பலவிதமான பெயர்களைப் பரிந்துரைத்தோம்.வெளி, உள்ளொளி, சாகரம்,பிரபஞ்சம்,ழகரம்,சாளரம்,அகரம்,உள்வெளி,திசைகள், கோணங்கள், கண், மெளழவு,தேமதுரம்,தாய்மொழி, ழகரம்இலக்கியப்பூ,எழுது, சங்கு,பசுந்தி,....எனப்பல பெயர்கள் முன் மொழியப்பட்டன. அதில் உள்ளொளி என்ற சொல் பலருக்கும் பிடித்துப் போக அதனை நமக்கு பெயராக வைப்பதெனத் தீர்மானித்தோம்.

மறுநாள் இணையத் தளங்கள் ஏதேனும் அப்படி இருக்கின்றதா என இணையத்தில் ஆராய்ந்த போது அப்பெயர் ஏற்கனவே எடுத்தாளப்பட்டிருப்பதை அறிந்து கொண்டோம்.அதனால் அப்பெயர் கைவிடப்பட மீண்டும் பெயர் வேட்டையில் இறங்கினோம். அவசரம் காரணமாக நமக்குத் தெரிந்த தமிழ் மீது ஆர்வம் கொண்டிருக்கிற சிலரிடம் கூட சில ஆலோசனைகளைக் கேட்டோம்.

அதன் ஒருவகையாக மெல்போனில் இருந்து எழுதிக் கொண்டிருக்கும் இரண்டாம் சந்ததித் தமிழின் தோழன் ஜேகே யிடமும் கேட்டேன். அவர் உங்களுடய நோக்கம் என்ன என்று கேட்டார்.கோகிலா அவர்கள் ஆர்வத்தோடு தந்திருந்த “கலை இலக்கியத்துறையில் உயர்தர ரசனையைப் பேணுதல்” என்ற முதலாவது வசனத்தைக் கேட்டவுடன் ‘ உயர்திணை’ எப்படி என்று கேட்டார். மேலும் உடனடியாக என் மனதில் பட்டது என்று விட்டு வேறேதாவது சொல் தட்டுப்பட்டால் சொல்கிறேன் என்றார்.

அதனை மற்றவர்களோடு பகிர்ந்து கொண்ட போது எல்லோருக்கும் அது பிடித்துப் போய் விட கணனிப் பக்கங்களில் எல்லாம் அப்படி ஒரு பெயர் இருக்கிறதா எனத் தேடிய போது இல்லை என்ற நற்செய்தி கிட்ட நாம் “உயர்திணை” ஆனோம்.

இவற்றை எல்லாம் நான் எதற்குச் சொல்கிறேன் என்றால் ஒரு விதை வளர்ந்து முளைகொள்ளத் தேவையான அனைத்து விடயங்களும் இந்த நான்கு மாதங்களுக்குள் தாமாகவே வந்து சேர்ந்தன என்பதைத் தாழ்மையோடு தெரிவிக்கத் தான்.

அதன் பின்னர் அழைப்பிதழ் தயாரானது.




அதன் நிகழ்ச்சி நிரல் கீழ் கண்டவாறு தயாராயிற்று.


 ”உயர் திணை” நடாத்தும் ஜீவநதி
சிறப்பிதழ் விமர்சன அரங்கு 10.06.2012

Toongabbie Community Centre,” Billard Room” 244,Toongabbie Road, Toongabbie.

                        நிகழ்ச்சி நிரல் 
         நிகழ்ச்சி நெறியாளர்:திரு.ம.பிரவீணன்   
  
1.00– 1.30 -  அமர்வு
1.30 – 1.35 – வணக்கமும் வரவேற்பும்;
1.35 – 1.45 – ”உயர்திணை” அறிமுகம்: திருவாட்டி.ப.யசோதா.
1.45 – 2.00 – “ஜீவநதி” அறிமுகம்: திரு; லெ.முருகபூபதி.

2.00 – 4.00             விமர்சன அரங்கு  
          நெறிப்படுத்துபவர்: திரு.செ.பாஸ்கரன்
15 நிமி. விமர்சனம்: சிறுகதைகளைமுன்வைத்து:திரு:ஆறு.குமாரசெல்வம்
         – சபையின் கருத்து: தொடக்கி வைப்பவர் திரு;ச.ஜெயக்குமாரன்
15 நிமி. விமர்சனம்: கவிதைகளை முன்வைத்து: திருவாட்டி.ம.கோகிலா.
         – சபையின் கருத்து: தொடக்கி வைப்பவர்: திரு;இ.கேதாரசர்மா.
15 நிமி.– விமர்சனம்: கட்டுரைகளை முன்வைத்து; திருவாட்டி;சி.இந்துமதி.
        – சபையின் கருத்து: தொடக்கி வைப்பவர்;திருவாட்டி.க.செளந்தரி


4.00 – 4. 05 –நன்றியுரை – திருவாட்டி.ப.யசோதா.
4.05. – 4.30 - தேநீர் விருந்தும் குறும்படக்காட்சியும் கலந்துரையாடலும்         நெறிப்படுத்துபவர்:திரு.செ.பாஸ்கரன்.


இப்படியாக ஒரு நிகழ்ச்சிக்கான முன் மொழிவுகள் ஆரம்பமாயின.நாட்டியக் கலாநிதியும் ATBC யில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் இருக்கும் திருவாட்டி.கார்த்திகா. கணேசர் அவர்கள் என்னை வற்புறுத்தி வானொலி நிலயத்துக்கு அழைத்து அரைமணி நேர நேர்முகத்தை வழங்கி பலரையும் இச் செய்தி கிட்ட வழிவகை செய்தார். மின் பத்திரிகை நடத்தும் பாஸ்கரன் அழைப்பிதழை தன் பத்திரிகையில் பிரசுரித்து பலரும் அரிய வழிவகை செய்தார். ஜேகே தன் http://www.padalay.com  இல் அவருக்குரிய பாணியில் அதனை அறிமுகம் செய்திருந்தார். இவை எல்லாம் நாம் கேட்காமலே தாமாக முன் வந்து செய்யப் பட்டவை.

அதே நேரம் இந் நிகழ்ச்சி தயாரான போது அந்த மூன்று விடுமுறை நாட்களிலும் ஒரு பெரும் இசைவிழா அருகிருந்த பெரு நகரத்தில் நடைபெற ஏற்பாடாகி இருந்தது. அனுபவம் வாய்ந்த இசைக்கலைஞர்கள் பாரதத்தில் இருந்து வருவிக்கப் பட்டு நடாத்தப் படும் வருடாந்த விழா அது. அதற்கான ஏற்பாடுகள் மிகத்திட்டமிட்டு கச்சிதமாக நடந்து கொண்டிருந்தன. அதே நேரம் சிட்னி மாநகரில் சர்வதேச திரைப்பட விழா ஒன்றும் நடந்து கொண்டிருந்தது.

இத்தகைய ஏற்பாடுகளின் இடையே தான் இந்த நிகழ்வும் ஏற்பாடாக்க வேண்டி இருந்தது.

தொடரும்........

                                         

Tuesday, June 5, 2012

உள்ளொளி



பல வாரங்களின் பின் மீண்டும் சந்திக்கிறேன்.

ஒரு மாதத்தின் முன் வேலைத் தலத்தில் என் அருகிருந்த தோழன் - வெள்ளிக்கிழமை அருகில் இருந்து விடுமுறை நாள் வாழ்த்துக் கூறியவன் - திங்கள் கிழமை உயிரோடு இல்லை என்ற அதிர்ச்சியையும் அது கிளர்த்திச் சென்ற சிந்தனைகளையும் ஜீரணிக்கவும் என்னை ஒரு தடவை சுய விமர்சனம் செய்து கொள்ளவும் இந்த இடைவெளி தேவையாய் இருந்தது.

பல விடயங்களில் என்னை நான் சரி செய்து கொள்ள வேண்டி இருக்கிறது.

நேரத்தை சீரமைத்து திட்டமிட்டுக் கொள்ள வேண்டி இருக்கிறது.

உறவுகளிடையே செய்ய வேண்டி இருக்கின்ற கடைமைகள் நிறைய இருக்கின்றன.

‘போகின்ற’ திகதி தெரியாததால் போகின்ற போது மனநிறைவோடு போக சில பிராயச் சித்தங்களையும் செய்ய வேண்டி இருக்கிறது.

எப்போதும் ‘தயார்’ நிலையில் இருக்க மனம் பணிக்கிறது.

தெரியாமல் செய்த குற்றங்கள் தவறுகளுக்கு என்ன செய்யலாம் என்று சிந்திக்க பல மணி நேரங்களைச் செலவிட வேண்டி இருக்கிறது.

முழுவதுமாக என்னைக் குலைத்துப் போட்டு விட்டு மீளச் சீராகக் கட்டி எழுப்பத் தோன்றுகிறது.

பல விடயங்களைச் சொல்லவும் எழுதவும் விடயங்கள் இருக்கின்ற போதும் அவற்றைத் தொட மனசில்லாமல் இருக்கிறது.

இதற்கிடையில் நம் இலக்கியச் சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது. அது பற்றி நம் ஸ்தாபகருள் ஒருவரான நாட்டியக் கலாநிதி.கார்த்திகா.கணேசர் எழுதித் தந்த ஆக்கம் ஒன்று பதிவுக்காகக் காத்திருக்கிறது.

மேலும் அடுத்த இலக்கியச் சந்திப்பு வருகின்ற வாரம் மேலும் ஒரு தளத்துக்கு எடுத்துச் செல்லப்பட இருக்கிறது.

இந்த ஜோர்ஜ் கிளர்த்திச் சென்ற சிந்தனைகளில் இருந்து விடுபட முடியா சிறையில் நான் இப்போது இருக்கிறேன்.

இந்த இடத்தைக் கடந்தால் தான் அடுத்த பகுதிக்கு நகரலாம் என்றும் தோன்றுகிறது. காலம் நம்மைத் துரத்திக் கொண்டிருக்க விரும்பியோ விரும்பாமலோ அடுத்த கட்டத்துக்குப் போயாக வேண்டும் நாம்.

அண்மையில் பார்த்த ஆனந்த விகடன் கவிதை ஒன்று என் மனநிலையை அப்படியே சொல்லிச் செல்கிறது.





உயில் மொழி

என்னுயிர்
பிரியும் வேளையில்
தலைமாட்டிலும்
கால்மாட்டிலும்
நின்றவர்கள்
நீங்கள் தானா?

இமைகளை மூடி விட்டது
எந்த விரல்கள்?

நாடிக் கட்டுக்காய்
கிளிக்கப்பட்ட துணி
எவருடயது?

அசுத்தங்கள் நீக்கி
என் பிரேதத்தை
குளிப்பாட்டி
கபன்* பொதித்தவர்கள்
யாரெல்லாம்?

வியர்வை சிந்த
எனக்கான
கபர் குழியை*
வெட்டியவர்கள் எவர்?

என் ஜனாஸாவை*
சுமந்து சென்ற
தோள்கள் எவருடயவை?

என் பிரிவிற்காய்
கண்ணீர் வழிந்த
கன்னங்கள் எத்தனை?

என் வாழ் காலத்தில்
உங்களைக் கடக்க நேர்ந்த
பொழுதுகளில்
உங்களுக்காகப்
புன்னகைத்திருக்கிறேனா
நான்?


*கபன் - இறந்தவர்கள் மீது போர்த்தப்படும் துணி.
*கப்ர் குழி - அடக்கம் செய்யப்படும் குழி
*ஜனாஸா - பிரேதம்.

_வி.எஸ்.முஹம்மது அமீன். - 
25.04.2012 ஆனந்த விகடன். பக்; 37.