Saturday, June 23, 2012

ஆக்காண்டி ஆக்காண்டி.....

21.04.2012.

ஒரு சனிக்கிழமை. விடுமுறை நாள். வலையில் ஏதோ தேடி yaarl.com சென்றடைந்த நேரம்.

இப்பாடலும் கவிதையும் கிட்டியது. (நன்றி: yaal.com) இயற்றியவர் சண்முகம் சிவலிங்கம் என்ற ஈழத்துக் கவிஞர்.என் ஏழாம் வகுப்பு அல்லது எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது தமிழ் பாடப்புத்தகத்தில் இப்பாடல் இருந்தது நினைவுக்கு வர என் இலக்கிய நண்பர் மற்றும் நாடக இயக்குனர் திரு. பாஸ்கரனுக்கு இக்கவிதையை அனுப்பி வைத்தேன்.

அவர் அப்போது புதிய நாடகம் ஒன்றுக்கான முஸ்தீபு முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார். ஏதேனும் ஒரு வகையில் இது அவருக்கு உதவக்கூடும் என்பது என் அனுமானமாக இருந்தது.

அதனை நான் அனுப்பி வைத்தது அதே சனிக்கிழமை.

திங்கள் கிழமை வழமை போல தமிழ்முரசு அவுஸ்திரேலியா என்ற வாராந்த மின் சஞ்சிகையைப் பார்த்தேன்.கடந்த வெள்ளியன்று (20.04.2012) சண்முகம். சிவலிங்கம் என்ற ஈழத்துக் கவிஞர் காலமானார் என்ற செய்தி தலைப்புச் செய்தியாகப் பதிவாகி இருந்தது.

முகத்தில் அறைந்து சென்றது அச்செய்தி.

கவிதையைக் கண்டடைந்த நேரம் கவிஞனைத் தவற விட்டிருந்தோம்.

கடந்த 10.06.2012 அன்று நடந்த உயர்திணையில் விமர்சன அரங்கில் கவிதை பற்றிப் பேசிய கோகிலா.மகேந்திரன் அவர்கள் கவிதை காலம் கடந்தும் மனித உணர்வுகளோடு ஒர் உறவு முறையைக் கொண்டாடும் என்றார்.

இப்பாடலைப் பார்க்கும் போதும் கேட்கும் போதும் அது புரிகிறது.


இப்பாடல் புலரும் வேளை என்ற இறுவட்டில் இருக்கிறது.பாடியவர்கள்: ஞான ஆனந்தன்,(சங்கீத்வர்மன்,பிரகீத்வர்மன்,டிலீப்குமார்)

                                                                

சண்முகம். சிவலிங்கம்: (1937 - 2012 சித்திரை 20 -2012 பாண்டிருப்பு.)

ஆக்காண்டி ஆக்காண்டி
எங்கெங்கே முட்டை வைத்தாய்?
கல்லைக் குடைந்து 
கடலோரம் முட்டை வைத்தேன்.

வைத்ததுவோ ஐந்து முட்டை
பொரித்ததுவோ நாலு குஞ்சு
நாலு குஞ்சுக்கிரைதேடி
நாலுமலை சுற்றி வந்தேன்
மூன்று குஞ்சுக்கிரைதேடி
மூவுலகம் சுற்றி வந்தேன்

ஆக்காண்டி ஆக்காண்டி
எங்கெங்கே முட்டை வைத்தாய்?
கல்லைக் குடைந்து 
கடலோரம் முட்டை வைத்தேன்.

குஞ்சு பசியோடு 
கூட்டில் கிடந்ததென்று
இன்னும் இரைதேடி
ஏழுலகம் சுற்றி வந்தேன்

கடலை இறைத்து 
கடல் மடியை முத்தமிட்டேன்
வயலை உழுது
வயல் மடியை முத்தமிட்டேன்

கடலிலே கண்டதெல்லாம் 
கைக்கு வரவில்லை
வயலிலே கண்டதெல்லாம்
மடிக்கு வரவில்லை

கண்ணீர் உகுத்தேன்
கடல் உப்பாய் மாறியதே
விம்மி அழிதேன் 
மலைகள் வெடித்தனவே

ஆக்காண்டி ஆக்காண்டி
எங்கெங்கே முட்டை வைத்தாய்?
கல்லைக் குடைந்து 
கடலோரம் முட்டை வைத்தேன்.

வண்டில்கள் ஓட்டி 
மனிதர்க் குழைத்து வந்தேன்

கையால் பிடித்து
கரைவலையை நான் இழுத்தேன்

கொல்லன் உலையைக் 
கொளுத்தி இரும்படித்தேன்

நெய்யும் தறியிலே
நின்று சமர் புரிந்தேன்

சீலை கழுவி
சிகையும் அலங்கரித்தேன்

வீதி சமைத்தேன்

விண்வெளியில் செல்லுதற்கு
பாதை சமைக்கும்
பணியும் பல புரிந்தேன்

ஆனாலும் குஞ்சுக்கு
அரைவயிறும் போதவில்லை
காதல் உருக
கதறி அழுது நின்றேன்

கதறி அழுகையிலே
கடல் இரத்தம் ஆயினதே
விம்மி அழுகையிலே
வீடெல்லாம் பற்றியதே

கடல் இரத்தம் ஆகுமென்று
கதறியழவில்லை
வீடுகள் பற்றுமென்று
விம்மியழவில்லை

ஆக்காண்டி ஆக்காண்டி
எங்கெங்கே முட்டை வைத்தாய்?
கல்லைக் குடைந்து 
கடலோரம் முட்டை வைத்தேன்.
குஞ்சு வளர்ந்தும்
குடல் சுருங்கி நின்றார்கள்

பசியைத் தணிக்க
பலகதைகள் சொல்லி வந்தேன்

கடலை இறைத்துக்
களைத்த கதை சொல்லி வந்தேன்

வயலை உழுது 
மடிந்த கதை சொல்லி வந்தேன்

கொல்லன் உலையும்
கொடுந் தொழிற்சாலையதும்
எல்லா இடமும்
இளைத்த கதை சொல்லி வந்தேன்

சொல்லி முடிவதற்குள் 
துடித்தே எழுந்து விட்டார்
பொல்லாத கோபங்கள்
பொங்கி வரப் பேசுகிறார்

“கடலும் நமதன்னை
களனியும் நமதன்னை
கொல்லன் உலையும்
கொடுந்தொழிற்சாலையதும்
எல்லாம் நமது” என்றார்
எழுந்து தடி எடுத்தார்

கத்தி எடுத்தார்
கடற்பாரையும் எடுத்தார்
யுத்தம் எனச் சென்றார்
யுகம் மாறும் என்றுரைத்தார்

எங்கும் புயலும்
எரிமலையும் பொங்கி வர
சென்றவரைக் காணேன்
செத்து மடிந்தாரோ?

வைத்ததுவோ அஞ்சு முட்டை
பொரித்ததுவோ நாலு குஞ்சு
நாலு குஞ்சும் போர் புரிய
போய் விட்டார் என்ன செய்வேன்? 

ஆனவரைக்கும் 
அந்த மலைக்கப்பாலே
போனவரைக் காணேன்
போனவரைக் காண்கிலேனே!

ஆக்காண்டி ஆக்காண்டி
எங்கெங்கே முட்டை வைத்தாய்?
கல்லைக் குடைந்து 
கடலோரம் முட்டை வைத்தேன்.


இந்திய நாட்டுப் புறப்பாடல்: (பின்னிணைப்பு 24.06.2012)



16 comments:

  1. என்ன‌வொரு ஓசைந‌ய‌ம் மிக்க‌, க‌ருத்தாழ‌ம் பொதிந்த‌ பாட‌ல்! ப‌டைப்பாள‌ரையும் தாண்டி ப‌டைப்பு உயிர்த்திருக்கும் அதிச‌ய‌ம்! க‌விஞ‌ர் ஆன்ம‌ சாந்திக்கு பிரார்த்திக்கிறோம் தோழி!

    ReplyDelete
  2. நான் இந்தக் கவிதையை நாட்டுப்புறப் பாடல்கள் பாடுபவர்கள் பாட கேட்டிருக்கிறேன்...
    கவிஞருக்கு அஞ்சலி...
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  3. ஆக்கப்பூர்வமான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  4. மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் உங்கள் எல்லோரது பகிர்வுக்கும்.

    குமார், நீங்கள் சொன்ன அந்த நாட்டார் பாடலை நானும் கேட்டிருக்கிறேன். அதனையும் நான் சேகரித்து வைத்திருக்கிறேன். உங்களுக்காக அந்தப் பாடலையும் மேலதிகமாக பதிவோடு இப்போது இணைத்து விடுகிறேன்.

    அது சற்றே வேறுபட்டிருக்கிறது. ஆனாலும் ஒரு தைரியத்தை மனதில் விட்டுச் செல்கிறது.அதற்குரிய அழகோடு!

    மீண்டும் என் நன்றி எல்லோருக்கும்.

    ReplyDelete
  5. காணொளி க‌விஞ‌ரை மேன்மைப்ப‌டுத்தியுள்ள‌து தோழி! எத்த‌கைய‌ கொடுந்துய‌ரிலிருந்தும் மீட்டெடுக்கும் வ‌ல்ல‌மையுட‌ன்...

    ReplyDelete
  6. நிச்சயமாகத் தோழி!

    நானும் அதை உணர்ந்து கொண்டேன். எவ்வளவு அழகாகப் பொருந்திப் போயிருக்கிறது. இல்லையா?

    மகிழ்ச்சி நிலா!

    ReplyDelete
  7. //உங்கள் கவியழகை பார்த்த போது யாழ்ப்பாணத்தில் 1995ல் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது நிலா.

    ஊர்விட்டு உயிர் தப்ப நிரந்தரமாக ஓடிய ஒரு பொழுது. தாய்ப்பசுவும் கன்றும் பால் கறப்பதற்காகப் பிரித்துக் கட்டப்பட்டிருந்தன.

    ஒரு தாய் அழுதாள். ஐயோ! அந்தக் குழந்தைக் கன்றை அவிழ்த்து விட மறந்து போனேனே!

    என்னவாகியிருக்கும் அவை? //

    ப‌டிக்கும்போதே ப‌த‌றித் துடிக்கிற‌து ம‌ன‌சு. அவ‌ர‌வ‌ர்க்கான‌ பிற‌ப்புரிமையைப் ப‌றித்துக் கொண்ட‌ ஒரு கொடுங்கோல் அர‌சால் எத்துணை எத்துணை த‌விப்பும் துடிப்பும் எல்லோருக்கும்...

    ReplyDelete
  8. "கவிதையைக் கண்டடைந்த நேரம் கவிஞனைத் தவற விட்டிருந்தோம்" என்ற‌ வ‌ரிக‌ள் ம‌ன‌தைக்க‌ன‌க்க‌ செய்த‌து, இந்த‌ வ‌ரிக‌ள் எல்லா க‌லைஞனுக்கும் பொருந்தும் போல‌....

    ReplyDelete
  9. தாயாய் இருத்தலின் துயரம் அது நிலா.

    இப்படிப் பல கதைகள் பல உள்ளங்களில் நிரந்தர காயங்களாய் கனத்துக் கிடக்கின்றன. அவற்றைக் கேட்காமலும் அறியாமலும் இருப்பது மிக நல்லது.

    என்றாலும் சொல்லத்துடிக்குது மனசு.

    ஈழத்தின் இறுதிப்போர் நடந்து கொண்டிருந்த பொழுது.BBC செய்தியில் கடசி நேர வைத்தியசாலையில் இருந்து ஒரு தாய் அழுகிறாள்; உணவு தேடச் சென்ற என் கணவனைக் காணோம். என் மகன் இறந்து போனான். என் 12 வயது மகள் காலையும் ஒரு கையையும் இழந்து மருந்தில்லாமல் இதோ என் மடியில் கிடக்கிறாள். சுற்றிவரப் பிணக்குவியல். ஒன்றரை வயதுக் குழந்தை அக்குவியலுக்குள் இருந்து அழுத படி எழுந்து என்னை நோக்கி வருகிறாள். நான் என்ன செய்வேன்? யாருக்காய் நானழுவேன்? அக்குழந்தை பாலுக்காய் அழுதாளோ? பெற்றோர்க்காய் அழுதாளோ? யார் பெற்ற பிள்ளையோ? கையிருந்தும் காப்பாற்ற வகையற்றுப் போனேனே! என்றழுத தயுள்ளத்தின் கதறலை என் உயிர் உள்ளவரை மறக்க முடியாது நிலா.

    இவ்வருடம் அந் நினைவு நாட்களின் போது தப்பி வந்து கனடாவில் வசிக்கும் ஒருவர் சொன்னார். கடசி நாட்களின் துயர் செறிந்த பூமியில் தன் மனைவி குழந்தைகளைத் தேடி தற்காலிக வைத்திய சாலைக்குப் போனாராம். யாருமே அற்றிருந்த அவ்விடத்தில் ஒன்றரை மாதக் குழந்தை - இரண்டு காலையும் அது இழந்து கட்டுப் போட்டு செலைன் போய்க் கொண்டிருந்ததாம். அது தன் கைகளை அசைத்து சேலைன் போய் கொண்டிருந்த வயறைத் தட்டி விளையாடிக் கொண்டிருந்ததாம். தன்னைக் கண்டதும் சிரித்த அந்தக் குழந்தையை - விட்டுப் பிரிந்தேன் என்றார்.

    இந்தக் குழந்தைகள் எல்லாம் யாருக்கு என்ன செய்தார்கள் நிலா?

    தாய்மையோடு இருத்தலின் துயரம் கொடிது!

    ReplyDelete
    Replies
    1. / யாருமே அற்றிருந்த அவ்விடத்தில் ஒன்றரை மாதக் குழந்தை - இரண்டு காலையும் அது இழந்து கட்டுப் போட்டு செலைன் போய்க் கொண்டிருந்ததாம்./

      ஒன்றரை வயதுக் குழந்தை என வந்திருக்க வேண்டும்.

      கவனயீனத்தினால் வயது மாதம் என பதிவாகி விட்டது

      Delete
  10. வணக்கம் யசோதரன். :)

    உங்கள் வரவுக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    ஆனாலும் அவர்கள் தம் கலைப் படைப்புகளில் நிரந்தரமாய் வாழ்ந்து கொண்டிருப்பார்கள் யசோ.

    அவற்றை மனங்கள் மறக்காதிருக்கும் வரை அவர்கள் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். ஏதோ ஒரு வகையில்!

    உங்கள் பகிர்வுக்கு மீண்டும் நன்றி யசோ. அடிக்கடி வாங்கோ.

    ReplyDelete
  11. இப்படிப் பல கதைகள் பல உள்ளங்களில் நிரந்தர காயங்களாய் கனத்துக் கிடக்கின்றன. அவற்றைக் கேட்காமலும் அறியாமலும் இருப்பது மிக நல்லது.
    தாய்மையோடு இருத்தலின் துயரம் கொடிது!//

    அத‌னால்தான் கொடுங்கோல‌ர்க‌ளெல்லாம் ஆண்க‌ளாகிப் போயின‌ரோ...

    நீங்க‌ சொன்ன‌ இரு ச‌ம்ப‌வ‌ங்க‌ளும் க‌ல்லையும் க‌ரைக்கும் வ‌ல்ல‌மை பொருந்திய‌வை தோழி... விதியே விதியே என்செய்ய‌ இருக்கிறாய் என் த‌மிழ்ச்சாதியை?!

    ReplyDelete
  12. இந்தக் குழந்தைகள் எல்லாம் யாருக்கு என்ன செய்தார்கள் ?//

    செஞ்சோலை ச‌ம்ப‌வ‌த்தின் போது நானெழுதிய‌ க‌விதையொன்று நினைவுக்கு வ‌ருகிற‌து தோழி... சில‌ வ‌ரிக‌ள் இங்கே...
    ... ... .... ...
    எல்லா நாட்டின் யுத்த‌ங்க‌ளிலும்
    ப‌ண‌ய‌க்கைதிக‌ளாக‌வும்
    எல்லா வீட்டின் ப‌ங்காளிச் ச‌ண்டைக‌ளிலும்
    ப‌லிக‌டாக்க‌ள் ஆக‌வும்
    எளிதில் அக‌ப்ப‌டுவ‌து
    எம் போன்ற‌ குழ‌ந்தைக‌ள் தானே...
    ... .... ...
    செம்மையேறிய‌து செஞ்சோலை
    மேலும் மேலும் எம் குருதியால்...
    குண்டெறிந்து கொல்ல‌
    எம‌து குற்ற‌ம்தான் என்ன‌?
    போராளிக‌ளுக்குப் பிள்ளைக‌ளாய்ப் பிற‌ந்த‌தா...?
    .... .... .... ...

    ReplyDelete
  13. நான் இந்தப் பாடலை முதன் முதலில் கேட்டது அநேகமாக எண்பதுகளின் தொடக்கத்தில் ஏதோ ஓராண்டில் இருக்கலாம். அண்ணன் முகில் பாடினார். அதன் பிறகு எத்தனையோ ஆயிரம் முறை அந்தப் பாடலைக் கேட்டாயிற்று.

    ஆனாலும் எழுதியது யாரென்று தெரியாதிருந்தது.

    அந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் கண்கள் ஈரமாகும். இப்போதும்.

    ReplyDelete
  14. வணக்கம் எட்வின் அண்ணா! நலமா? நீண்ட நாட்களின் பின் உங்களைக் கண்டதில் மிக்க மகிழ்ச்சி.

    பாதிக்கப் பட்ட சகலவிதமான மக்களுக்கும் அப்படியே பொருந்திப் போகிற அழகு இந்தக் கவிதைக்கு உண்டு இல்லையா அண்ணன்?

    ReplyDelete