Tuesday, April 9, 2013

இலட்சுமணக் கோடுகளும் எல்லை தாண்டாத கலைகளும்


கையெழுத்துப் பிரதிகளும் அச்சுயந்திர சாலைகளும் மையூறும் பேனாக்களும் தலைப்பாகை கட்டிய தமிழுமாக கொலுவீற்றிருந்த இலக்கியம் காட்சிப்பொருளாய் வரலாற்றுப் பக்கங்களின் கடந்து போனதொரு அத்தியாயமாய் ஆகிப் போனது காலத்தின் கட்டாயமாயிற்று. கால ஒளியில் துலங்கும் ஒரு நட்சத்திரமாய் எதிர்காலத்தில் அது நின்று ஜொலிக்கக் கூடும்.

விரும்பியோ விரும்பாமலோ நாம் அவற்றைக் கடந்து வெகுதூரம் வந்தாயிற்று. அது காலம் இட்ட கட்டளை. டிஜிட்டல் என்றொரு மாய உலகம் சிருஷ்டிக்கப் பட்டு புதிய உலகப்பண்பாடு ஒன்று தனித்தனி வீடுகளுக்குள்ளும் குடியிருக்கும் சிறு சிறுஅறைகளுக்குள்ளும் புகுந்து கொண்டு வாழ்வின் ஒவ்வொரு நிமிடங்களையும் புத்துருவாக்கி திருப்பித் தந்திருக்கிறது.

அது வீட்டில் இருந்து தொடங்கி வீதியில் இறங்கி, வாகனங்களில் பயணித்து, அலுவலகத்தில் உட்புதுந்து, மீண்டும் வீதி வாகனம் வழி திரும்பி, வரவேற்பறையில் உட்கார்ந்து ரீவி பார்த்து, சமையல் அறையில் பதார்த்தங்கள் செய்து, உறங்கப் போகும் வரை ஒரு மனிதனை தன் அத்தனை செயல் பாடுகளூடாகவும் அவனைக் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது. இதனை முதலாம் இரண்டாம் மூன்றாம் உலக நாடுகள் என்று பார்த்தால் என்ன, வளர்ந்த நாடுகள் வளர்ந்து வரும் நாடுகள் என்று பார்த்தால் என்ன; செல்வந்த நாடுகள் வறிய நாடுகள் என்று வகை பிரித்துக் கொண்டாலென்ன? - இவை எல்லாவற்றிலும் அது வேறுபாடு எதுவும் காட்டாமல் புகுந்து கொண்டு விட்டது.

உலகத்தில் 4000க்கும் அதிகமான மொழிகள் பேசப்படுகின்றன. அதில் எட்டே எட்டுத் தான் செம்மொழி என கொண்டாடுகிறோம். அதில் தமிழ் ஒன்று என்று பெருமைப் பட்டுக் கொள்ளுகிறோம். யாதும் ஊரே! யாவரும் கேளிர்!! என நாம் இந்தியா இலங்கை என்ற எல்லைகளுக்கப்பால் உலகம் முழுக்கப் பரந்து போனோம். - அதற்குக் காரணம் என்னவாக இருப்பினும் கூட - புலம்பெயர்ந்தோரின் புலம்பல் இலக்கியம் சொல்லும் ஏக்கப் பாடல்களுக்கப்பால் ’எல்லாம் நன்மைக்கே’ என்பதற்கமைய இப்போது தமிழ் இணையத்துக்குள் புகுந்து கொண்டிருக்கிறது. உலகத் தமிழர் என்று ஓர் புதிய அடையாளம் தமிழுக்கு வாய்த்திருக்கிறது. தாம் தாம் வாழும் நாடுகளின் பண்பாடுகள் வாழ்க்கை முறைகள் முன்னெப்போதும் இல்லாத வாறு தமிழுக்குள் சுவறுகின்றன. எல்லைகளற்ற கல்வி வேலைவாய்ப்புகள் புதிய புதிய விதைகளை வாழ்க்கை முழுக்கத் தூவிச் செல்கின்றன. கல்வியிலும் பொருளாதாரத்திலும் வேலைவாய்ப்பிலும்  அவை தம் வனப்பினை எழுதிச் செல்கின்றன.

இப்போது நாங்கள் அவுஸ்திரேலியாவுக்கு வருவோம். சரி சிட்னிக்குள் நுழைவோம். அந்தச் சிறு சட்டத்துக்குள் நம்மை பொருத்திப் உருப்பெருக்கியால் உருப்பெருக்கிப் பார்ப்போம்.இங்கு தமிழர்கள் குடியிருக்கத் தொடங்கி முப்பது ஆண்டுகளுக்கு மேலிருக்கும். கலை இலக்கியம் என்ற வரையரைக்குள் நாம் வரைந்து காட்டிய சித்திரங்களும் வர்ணங்களும் எதைப் பேசுகின்றன? எப்படிப் பேசுகின்றன? ஏன் பேசுகின்றன? எதைப் பிரதி பலிக்கின்றன? கலையும் இலக்கியமும் சமூகத்தின் கண்ணாடி என்றால் புதிய தொழில்நுட்பத்தை பயன் படுத்தி அவுஸ்திரேலிய வாழ்புலத்தின் செல்வாக்கை உள்வாங்கியவாறு வெளிவந்த கலைப்படைப்புகள் எவை எவை?

நாடகக் கலை தவிர்ந்த கலையும் இலக்கியமும் வந்த பாதையை திரும்பிப் பார்த்து அழுது, விம்மிப்,பொருமி, பெருமிதப்பட்டு க் கொண்டு இருக்கிறதே தவிர புதிய சமூக அடையாளங்களை கலை இலக்கிய ஆவணங்களாய் ஆபரணங்களாய் ஆக்கியதாய் தெரியவில்லை.

நம் சந்ததிக்கு நாம் எதை விட்டுச் செல்லப் போகிறோம்? பண்பாட்டுத் தொடரோட்டத்தில் தடி இப்போது நம் கையில். தொன்மையில் அல்ல தொடர்ச்சியில் இருக்கிறது பண்பாட்டுக்கான கையளிப்பு. மாறிச் செல்லும் அதன் இயல்புகளை நாம் பதிந்து செல்லக் கூடாதா?

விடுபட்ட ‘பேசாப்பொருள்கள்” என்னென்னெ? ஏன் அவை விடுபட்டன? - இக்கேள்விகள் கலை இலக்கிய கர்த்தாக்களுக்கு; இலக்கிய சிருஷ்டிகளுக்கானவை.

ஒரு வருடம் ஒன்றில் எத்தனை அரங்கேற்றங்கள் நிகழ்கின்றன?
எத்தனை கவிதைகள் புனையப் படுகின்றன?
எத்தனை எத்தனை இசை வல்லுனர்கள் பட்டம் பெற்று வெளியேறுகிறார்கள்?
வாசிக்கும் வல்லமையுடம் எத்தனை எத்தனை விதமான வாத்தியக்கருவிகளும் கலைஞர்களும் ‘மெளனப்பொக்கிஷங்களாய்’ கடலுக்குள் முத்தாய் புதையுண்டு போயிருக்கிறார்கள்?

- இவர்களிடம் இருந்து ஏன் ஒரு புதிய படையல் “சொந்தப் பார்வையில்” புத்துருவாக்கம் பெறவில்லை? மரபு தாண்டாத கேள்விகளாய் - இவை இன்னும் ஏன் கற்பப் பைக்குள்ளேயே படுத்துறங்குகின்றன? சமாதி நிலை கொள்கின்றன?

ஏதோ ஒரு நூற்றாண்டில் பாடியதையே மீண்டும் மீண்டும் பாடி -
ஏதோ ஒரு நூற்றாண்டில் ஆடிய பரதத்தையே மீண்டும் மீண்டும் ஆடி -
வாசித்துக் காட்டிய விற்பன்னங்களையே மீண்டும் மீண்டும் வாசித்து -
பழம்பெருமையையே மீண்டும் மீண்டும் மேடைகளில் முழங்கி -
இன்னும் இன்னுமாய்......

மரபுகளைப் பிடித்திழுத்து பலவந்தமாய் சேலைகட்டி வைத்திருப்பதில் கழிந்து போயிற்று கடந்த காலங்கள்.

குறும் படம் ஒன்றைக் அதன் அத்தனை தாற்பரியங்களோடும் கைத்தொலைபேசி ஒன்றினாலேயே உருவாக்கி விடலாம்!

சிறந்த கவிதை ஒன்றை உள்ளூர் கலைஞர்களின் கலைக் கருவிகளினால் மெல்லிசைப்பாடலாய் கொஞ்சம் மினைக்கெட்டால் குறுந்தகட்டில்  பொதித்து வைத்து விடலாம்.

வெளிச்சத்துக்கு வராத விடயங்களை இலக்கியமாக்க தேவை மொழியும் மனத்துணிச்சலும் நேர்மையும் கொஞ்சம் மனசும் மட்டும் தான்.

ஒரு பரதநடனத்தில் புதிய நடன உத்திகளைப் புகுத்தி புது நடன வடிவம் ஒன்றை அறிமுகப்படுத்தத் தேவை கற்பனை வளமும் கலாஞானமும் தான்.

டிஜிட்டல் உலகில் நாம் செய்யக்கூடியது என்ன என்ற கேள்வியை உங்கள் சிந்தனைக்கும் ஆற்றலுக்கும் விட்டு விடுகிறேன்.

தேங்கிய குட்டையில் எத்தனை நாளைக்கு மீன் பிடித்த படியும்....
அரைத்த மாவையே மீண்டும் மீண்டும் அரைத்த படியும்....
வீண்பெருமையை மேடைகளில்  பேசிய படிக்கும்......

“ஊர் வாசத்தை தென்றலே நீ கொண்டு வருக”

அது நறுமணமாய் இருப்பினும் துர்நாற்றமாய் வீசினும் அதுவே நாம் எனும் வீச்சுடன் -7 comments:

 1. \\வெளிச்சத்துக்கு வராத விடயங்களை இலக்கியமாக்க தேவை மொழியும் மனத்துணிச்சலும் நேர்மையும் கொஞ்சம் மனசும் மட்டும் தான்.\\

  மறுக்கவியலாத உண்மை. மனத்தில் உறைத்த உண்மையை நேர்மையாய் எழுதும் உங்கள் மனத்துணிவையும் எடுத்தாளும் மொழியின் வீரியத்தையும் கண்டு பிரமிக்கிறேன் தோழி.

  சுயம் காக்கத் தூண்டும் சூடு இறுதி வரிகளில்!

  ReplyDelete
 2. அடிக்கடி வந்து உற்சாகமூட்டும் பேனாத் தோழமைகள் தரும் வார்த்தைகளுக்கும் உற்சாகத்துக்கும் மிக்க நன்றி குமார் மற்றும் கீதா.

  கூடவே இருவருக்கும் என் அன்பும்.

  ReplyDelete
 3. வெளிச்சத்துக்கு வராத விடயங்களை இலக்கியமாக்க தேவை மொழியும் மனத்துணிச்சலும் நேர்மையும் கொஞ்சம் மனசும் மட்டும் தான்.

  சரியான அவதானிப்பு தான்.

  டிஜிட்டல் உலகில் நாம் செய்யக்கூடியது என்ன ?

  ezhuthu kol kuur ambaay maarattum.

  ReplyDelete
 4. வெளிச்சத்துக்கு வராத விடயங்களை இலக்கியமாக்க தேவை மொழியும் மனத்துணிச்சலும் நேர்மையும் கொஞ்சம் மனசும் மட்டும் தான்.


  அருமையான எண்ணப் பகிர்வுகள் ..பாராட்டுக்கள்..

  ReplyDelete
 5. எழுதுகோல் கூர் அம்பாய் மாறட்டும்!

  நன்றி நிலா மற்றும் செந்தாமரைத் தோழி! புத்தாண்டு சிறப்பாய் அமைந்ததா?

  வெளியூர் சென்றமையால் பதில் தர நாளாயிற்று.
  எல்லோருக்கும் என் புத்தாண்டு நல் வாழ்த்துக்களும் உரியதாகுக!

  ReplyDelete
 6. நன்றி தோழி! நலமாய் இருப்பது மகிழ்வு... நீங்களும்.

  ReplyDelete