Sunday, May 5, 2013

தாய் Land - 4 -


காலை நேரம்! ஜன்னல் திரையை விலக்கி வெளியே பார்த்தேன். பிரதான நகரின் மையத்தில் நாம் இருப்பது புரிந்தது. ஜன்னலினூடாகப் பார்த்த காட்சிகள் இவை.8.30 மணியளவில் கீழே வந்து டக்‌ஷி சொல்லி எடுத்துக் கொண்டு பிளட்டினம் ஷொப்பிங் சென்ரருக்கு வந்தோம்.அது கடைக்கடல். சொல்ல வேண்டுமா? மாலை வரை ஷொப்பிங் தான். மதியம் அங்கேயே சாப்பாடு. மீண்டும் மாலைவரை சொப்பிங். 

அவை இரண்டு வகைகளாக இருக்கின்றன. ஒரு புறம் ரொக்க வியாபாரம். அதாவது  ஒன்று வாங்கினால் விலை கூட. ஆனால் மூன்று வாங்கினால் 20 % குறைவு. இப்படியாக ஒரு பக்கம். 

மற்றப்பக்கம் தொழில் சாலைகளில் இருந்து நேரடியாக வந்திருக்கின்ற தைக்கப்பட்ட ஆடைகள். பொதுவாக பெண்களுக்கானவை தான் 98% மானவை. விலைகள் நம் பணத்தோடு ஒப்பிடுமிடத்து அதிகமில்லை. அத்தோடு உங்கள் வாய் வல்லமைக் கேற்ப விலைகள் நிர்ணயம் செய்யப்படுகின்றன.அதாவது Bargain தான். 

அத்தோடு இவ் ஆடைகள்  தாய்லாந்துப் பெண்களுக்கேற்ற அளவுகளிலேயே அனேக ஆடைகள் இருக்கின்றன. அவை அவர்களையே இலக்காக கொண்டு தயாரிக்கப் பட்டிருக்கிறது. ஆகையினால் நல்ல ஆடைகள் பிடித்த ஆடைகளுக்குக் கூட சரியான அளவுகளில் ஆடைகளைத் தெரிவு செய்வது கடினமாக இருக்கிறது.

சொன்னால் நம்புங்கள் ஒரு நாள் முழுக்கச் சுற்றியும் அக்கடைத் தொகுதியில் பாதியளவு கூட நாங்கள் பார்க்கவில்லை. அவை 6,7 மாடிகள் கொண்ட பிரமாண்டம். மிக அகலமானவையும் கூட. நாம் ஒரு பாதிப் பக்கம் தான் பார்த்தோம்.மழை வேறு இடையில் அடித்தூற்றத் தொடங்கி விட்டது. ஆண்களுக்கான ஆடைகள் எதையும் அந்தத் தொகுதியில் காணவில்லை.ஓரிரு கைப்பைக் கடை, ஓரிரண்டு மாலை தோடு போன்ற ஆபரனங்கள் விற்கும் கடை, ஒரு தளம் முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான ஆடையணிகள், 

ஒரு தளத்தில் உணவுவகைகள் பானவகைகள் விற்கிறார்கள்.இதில் ஒரு சிரமம் என்னவென்றால் நேரடியாகப் பணத்தைக் கொடுத்து இங்கு உணவை வாங்க முடியாது. வங்கி போன்ற அமைப்புள்ள ஒரு காரியாலயத்துக்குப் போய் பணத்தைக் கட்டி ஒரு காட்டைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அந்தக் காட்டை பின்னர் உணவு வாங்குகின்ற இடத்தில் கொடுக்க, அவர் அதனை ஒரு இயந்திரத்தில் பதிந்து விட்டு அவ் அட்டையை உங்களிடம் தருவார். அதில் மிச்சம் ஏதும் இருந்தால் பின்னர் நீங்கள் அதனை மீண்டும் அந்த காரியாலயத்துக்குச் சென்று அட்டையைக் கொடுத்து மிகுதிப் பணத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

எங்கு பார்த்தாலும் ஜே ஜே என்று கூட்டம். பசிக்களையில் இந்த வேலை வேறு பிரத்தியேகமாக நமக்குச் சேர்ந்து விட்டது. இது சற்றே அசெளகரியமானதாகவே பட்டது.

ஆனாலும் வேறு வழி? புதிதான இளநீரை நீங்கள் காணும் இடமெங்கும் பெற்றுக் கொள்ளலாம். .பழங்கள், கரும்பு, இவற்றின் சாறினை உடனடியாகப் பிளிந்து நீளக் குவளைகளில் இட்டுத் தருகிறார்கள். இங்கு விலைகள் மட்டும் இரு மடங்கு.

ஒவ்வொரு தளத்திலும் படிக்கட்டுகளுக்கருகில் நீள நீள வாங்குகளை வைத்திருக்கிறார்கள். மக்கள் ஆற அமர இருந்து இளைப்பாறி மீண்டும் ஷொப்பிங்கை செய்யலாம். :) எங்கைளைப் போன்றவர்களுக்கு! :)

வேலைப்பழுவினாலோ என்னவோ உணவு வழங்கும் இடத்தில் போதிய புன்னகையைக் காணோம். ஒருவரே உணவையும் சமைத்து வருபவரையும் வரவேற்று, உணவினைக் கொண்டு சென்றும் அவரே கொடுத்து இடங்களையும் பாத்திரங்களையும் அவரே துப்பரவு செய்யவேண்டி இருப்பது அதற்கான காரணமாக இருக்கலாம். அதனை பரிவோடு புரிந்து கொள்ளமுடிந்தது.

அம்மக்களுடய வாழ்வு மிகக் கடுமையானது. கஸ்ரப்பட்டே அவர்கள் உழைக்கிறார்கள்.போதிய ஆதரவு அவர்களுக்கு வழங்கப்படுவதில்லையாதலால் customer Service மிகவும் பின் தங்கிய நிலையிலேயே அதிகமான இடங்களில் கானப்படுகிறது.குறிப்பாக உணவு வழங்கும் இடங்களில்.

இந்த நாட்டின் பிரதான வருவாய் உல்லாசப் பயணிகளால் கிடைக்கின்ற போதிலும் அவர்கள் இத்துறையில் ஏன் அதிக கவனம் செலுத்துகிறார்கள் இல்லை என்று தெரியவில்லை. ஐந்து நட்சத்திர ஹொட்டேல்கள் இருக்கின்ற வீதிகளில் கால்களால் நடக்க முடியாத அளவு வெள்ளம். கறுப்பாக நீர் வீதியில் இரண்டு நாட்களுக்குத் தேங்கி நிற்கிறது. உடைந்து போயிருக்கின்ற ஒடுங்கிய வீதிகள், மழைநீர் போக முடியாது அடைப்பெடுத்திருக்கின்ற கால்வாய்கள்! 

கீழே இருக்கின்ற இந்தப் படங்கள் பிளட்டினம் கடைகளுக்குள் எடுத்தவை.கீழ்  உள்ள முதல் படம் மட்டும் வெளிப்புற மேம்பாலத்தில் இருந்து எடுத்தது.

என்னையும் உங்களுக்குக் கொஞ்சம் பார்க்க ஆவலாய் இருக்கும் தானே! தெரிஞ்சும் தெரியாமலும் உங்களுக்காக என்னை நானே ஒரு படம் எடுத்துக் கொண்டேன். அறையில் இருந்து புறப்பட முன்.
கீழே வண்ண ஆடையுடன் அமர்ந்திருப்பவர் ஆண் தோற்றத்தில் இருக்கும் பெண். இங்கு இவர்கள் சர்வ சாதாரணம். ஆண்களுக்கான ஆடைகளிலும் கூட “for complied man" என்ற லேபல்கள் இருக்கக் காணலாம்.பல உல்லாசப்பயணிகள் இங்கு வருவதற்கு இந்த வெளிப்படையான அங்கீகாரம் ஒரு முக்கியமான காரணம். தத்தம் நாடுகளில் தாம் விரும்பியவாறு வாழ வழிவகை இல்லாத போது அதற்கான சுதந்திரத்தை கொடுக்கும் நாடுகளுக்கு அவர்கள் வருவதில் ஒன்றும் ஆச்சரியமில்லை தானே!

குறைந்த பட்சம் சொற்ப நாட்களுக்கேனும் இங்கு அவர்கள் அவர்களாக சுதந்திரமாக வாழமுடிகிறது. நடமாட இயல்கிறது.அதற்கான ஒரு சிறு சந்தர்ப்பமேனும் அவர்களுக்கு இங்கு கிட்டுவதில் எனக்கொரு மனத்திருப்தி. இப்படியான என் தமிழ் நண்பனை ஒரு தரம் நினைத்துக் கொண்டேன். அவனை கட்டாயமாக இந்த நாட்டுக்கு நீ ஒரு தடவை சென்று வா நண்பனே என சொல்ல வேண்டும் என மனதுக்குள் குறித்துக் கொண்டேன். அவனுக்கான துணையை அவன் இங்கேனும் தேடிக்கொள்ளக் கூடும்.

கீழே உள்ள படங்கள் நாம் சாப்பாட்டுக் கூடத்தில் பசியோடு காத்திருந்த பொழுதுகளில் எடுத்தவை. (கடந்த சில நாட்களாக ஒரு விதமான வயிற்று உபாதை ஒன்று சொல்லிக் கொள்ளும் படியாக இருந்த படி இருக்கிறது. சிட்னியில் ஆரம்பித்த அது என்னோடு விடாமல் உறவு கொண்டாடியபடி இருக்கிறது.:) பொழுது சாய்ந்து விட்டது. எல்லோரும் களைத்துப் போனோம். வெளியே வந்தால் தெருவோரம் சின்னச் சின்னக் கடைகளில் உணவுகளும் தின்பண்டங்களும் உடனே உடனே செய்து விற்கிறார்கள். அவற்றில் சில கீழே வருவன.கீழே தயாரித்துக் கொண்டிருப்பது நாங்கள் பள்ளி நாட்களில் நைஸ் என்று சொல்லி சாப்பிட்ட சுவையைச் சார்ந்தது. அந் நாட்களில் அவை முட்டாசு வண்ணம், குருத்துப் பச்சை வண்ணம், இள மஞ்சள் வண்ணங்களில் ஒரு கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருக்கும். மொறு மொறு என்று இனிப்பாக இருக்கும் பேப்பர் போல ஆனால் தொட்டவுடன் உடைந்து விடும். காற்றெனில் பறந்து விடும் வகையில் அது இருக்கும். அந் நாட் சிறுவர்களுக்கு அது அமுதம். நான் உட்பட.

இது அதனைப் போன்ற சுவை கொண்டது தான். ஆனால் தோசை போல மிருதுவானது  இதனைச் செய்பவர் இதனைத் தோசைபோல வார்த்து இருபக்கமும் புரட்டிப் போட்டு விட்டு இதற்குள் தும்பு முட்டாசை வைத்து உருட்டித் தருகிறார்.

சுவையோ சுவை! நான் ஒரு தடவை என் குழந்தைப் பருவத்துக்கே போய் வந்து விட்டேன்.
பனம் பழத்தையும் கண்டேன். ஊரில் 90ம் ஆண்டளவில் கண்ட பின் இங்கு 2013ம் ஆண்டில் தான் கண்டேன். எதற்குப் பயன் படுத்துகிறார்கள் என்று தெரியவில்லை. என் நினைவு மீட்டலுக்காக அதனையும் சிறைப்படுத்திக் கொண்டேன்.இரவு 8.30 மணியளவில் அறைக்குத் திரும்பினோம்.

விடிந்தால் புது வருஷம்!

7 comments:

 1. அழகிய படங்களுடன் விளக்கங்கள் மற்றும் தகவல்கள்... நன்றி...

  ReplyDelete
 2. பயண பகிர்வுகள் அருமை..பாராட்டுக்கள்..

  ReplyDelete
 3. பார்த்ததைப் பகிர்ந்து கொண்டது உங்களுக்கு பிடித்திருப்பதில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி.

  என் அன்பும் நன்றியும் இருவருக்கும்.மீண்டும் வருக!

  ReplyDelete
 4. ஜன்னலினூடாக எடுக்கப்பட்டப் படங்கள் யாவும் உங்கள் அறைக்கே எம்மையும் அழைத்துச் சென்றுவிட்டன. அரைகுறையாகவேனும் உங்களைப் பார்க்க முடிந்ததில் அளவிலா மகிழ்ச்சி மணிமேகலா. பயண அனுபவங்களில் பலருக்கும் உபயோகமான பல தகவல்கள் இருப்பது சிறப்பு. குறிப்பாக உணவு வாங்கும் முறை.

  \\இதனைச் செய்பவர் இதனைத் தோசைபோல வார்த்து இருபக்கமும் புரட்டிப் போட்டு விட்டு இதற்குள் தும்பு முட்டாசை வைத்து உருட்டித் தருகிறார்.\\

  நீங்கள் சொன்ன நைஸ் நானும் பள்ளிப்பருவத்தில் உண்ட அனுபவம் உண்டு. கையிலிருந்து காற்று பறித்ததையும் விடாது பின்தொடர்ந்து சில தூரம் விரட்டிய அனுபவமும் உண்டு. ஆனால் தும்பு முட்டாசு என்றால் என்னவென்று தெரியவில்லை. fairy floss ஆ?

  ReplyDelete
 5. மிக்க மகிழ்ச்சி கீதா.

  /அரைகுறையாகவேனும் உங்களைப் பார்க்க முடிந்ததில் அளவிலா மகிழ்ச்சி மணிமேகலா/ மணிமேகலாவுக்கு ரொம்ப கூச்ச சுபாவம் கீதா.:)ஆனால் என்னை அறிமுகப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று ஆசையாகவும் இருந்தது. நம்மிடம் வருகிறவர்கள் நாம் போகிறவர்கள் பற்றி நம்மிடம் ஒரு வித பிம்பம் வந்துவிடுவது உண்டு தானே! அது தான் தெரிந்தும் தெரியாமலும் இது தான் நான் என்பதைக் காட்டிக் கொண்டேன்.

  நாங்கள் நைஸ் என்று சொன்னதை நீங்கள் எவ்வாறு சொல்லியிருப்பீர்கள் என என்னால் அனுமானிக்க முடியவில்லை தோழி. ஆனால் இருவரும் ஒன்றைத்தான் குறிக்கிறோம் என்று நம்புகிறேன்.

  தும்பு முட்டாஸ் என்று நாம் அழைத்ததும் ஒரு கண்ணாடிப்பெட்டிக்குள் தும்பு தும்பு மாதிரி இருக்கும். நாம் பணத்தைக் கொடுக்க வியாபாரி மேல்புறக்கண்ணாடியைத் திறந்து ஒரு கொடுக்கியால் ஓரளவை எடுத்து இரண்டு பேப்பர்களுக்கிடையில் வைத்து மடித்துத் தருவார்.

  படத்தை கூகுளில் கண்டெடுத்து கிட்டினால் அடுத்த பதிவில் அவற்றின் படங்களை தர முயற்சிக்கிறேன் கீதா.

  ஒரு சிறு சட்டை போட்ட துறு துறு சிறுமி நைஸ் ஐ துரத்திச் சென்று பிடிக்கும் காட்சி மனதில் ஓடுகிறது.அழகிய காட்சி அது.:)

  ReplyDelete
 6. தும்பு முட்டாஸ் என்றால் என்னவென்று இப்போது புரிகிறது மணிமேகலா. நாங்கள் அதை சோன்பப்டி என்று சொல்லுவோம். தெருவில் கண்ணாடி சாடியில் வைத்து மணியடித்துக்கொண்டு வருவார். நான் சின்ன வயதில் வாங்கி சாப்பிட்டிருக்கிறேன். இப்போது கடைகளில் சோன்பப்டி என்று அட்டைப்பெட்டியில் விற்பதில் அந்த ருசி இருப்பதில்லை...

  \\நாங்கள் நைஸ் என்று சொன்னதை நீங்கள் எவ்வாறு சொல்லியிருப்பீர்கள் என என்னால் அனுமானிக்க முடியவில்லை தோழி. ஆனால் இருவரும் ஒன்றைத்தான் குறிக்கிறோம் என்று நம்புகிறேன்.\\

  அப்படித்தான் நானும் நினைக்கிறேன் மணிமேகலா. அதை பப்படம் என்று சொன்ன நினைவு. அப்பளம் போல வடிவத்தில் இன்னும் மெல்லிசாக பல நிறங்களில் இருக்கும்.

  ReplyDelete
 7. அதே தான் அதே தான் கீதா.

  ReplyDelete