Tuesday, July 16, 2013

(Lady Boy Show விற்குப் போக முன்) - தாய் தேசத்தில் - 7 -


இன்று நாம் ஒரு நிறைவான மனநிலையில் இருந்தோம்.வித்தியாசமான அனுபவங்களால் நிறைந்திருந்தோம். ஏற்கனவே வெளியே சென்று நாள் முழுவதையும் கழித்து / களித்து வந்ததாலும் மேலும் lady boy show விற்குப் போக இருப்பதாலும் மீண்டும் ஒரு தடவை வெளியே போய் தெப்பலாய் நனைந்து வரச் சங்கடப்பட்டதாலும் நாம் தங்கியிருந்த ஹொட்டேலிலேயே இரவுச் சாப்பாட்டை முடித்து விட்டுத் தயாராவோம் என்று தீர்மானித்தோம்.

புத்தரைச் சேவிக்கும் அந்த நாட்டில் எங்கு போனாலும் அவரை எல்லோரும் சேவிக்கக் காணலாம். இங்கும் அப்படித்தான். கீழ் தளத்தில் அமைந்திருந்த உணவு விடுதியில் விடுமுறைக்கால அமைதி. இரண்டு இளைஞர்கள் மாத்திரம் நெஞ்சருகில் கைகளைக் குவித்து புன்முறுவலோடு குனிந்து புதுவருட வாழ்த்துக்களோடு வணக்கம் தெரிவித்து வரவேற்றார்கள்.





அங்கும் ஒரு பொது மூலையில் புத்தபகவான் வீற்றிருக்கிறார். இந்த இளைஞர்கள் நம்மை அங்கு அழைத்துப் போய் வாசனை நீரை அவருக்கு அபிஷேகித்து வனங்கச் சொல்லித் தந்து அணிந்து கொள்ள ஒவ்வொருவருக்கும் மல்லிகை மொட்டுக்களாலும் ஓக்கிட் பூக்களாலும் ( அட, உயிர் பூ தாம்பா )ஆன மாலையை அணியத் தந்தார்கள்.



இன்று தாய் நிலத்தின் பாரம்பரிய உணவை உண்பதெனத் தீர்மானித்தோம்.முதலில் கீழ் கண்ட பதார்த்தம் வந்தது. என்னவென்று நினைக்கிறீர்கள்? அப்பளம்பா! அப்பளம். பப்படம்,பப்படம்!! அதனை வித்தியாசமான வடிவத்தில் செய்து களிம்பு போன்றதான ஸோசோடு தருகிறார்கள்.

இந்திய மரபின் பாதி உணவிலும்!




சோறு, மற்றும் சூப்பும் தேங்காய் பாலில் அமைந்த உறைப்புக் குறைந்த ஆனால் சுவையில் கொஞ்சமும் குறைவு படாத கறிகளும் பச்சைக் காய்கறிகளும் அருமை. நாம் அங்கு நின்ற சொற்ப நாட்களில் உண்ட உணவு வகையறாக்களில் சேற்று நாற்றம் வராத தரமான real தாய் உணவினை இங்கு ருசி பார்த்தோம். சுடச் சுட தரம் குன்றாது செய்து பரிமாறினார்கள்.

புது வருஷத்திலும் வேலைத் தலத்தில் நின்று நமக்குப் பொங்கிப் போட்ட புன்னகை பூத்த முகங்கள் - அவை ஒரு போதும் மறக்க முடியாதவை. 

சாப்பாட்டுக்கு எல்லாமா ஒரு பதிவு? என்று ஓரமாய் மனதில் ஒரு குரல் ஒலிக்கவே செய்கிறது. உண்மையில் இப்பதிவை lady boy show பற்றி எழுதுவதெனவே ஆரம்பித்தேன்.இந்த உணவைப் பற்றியும் அவர் தம் பணிவன்பான பண்பாட்டைப் பற்றியும் சொல்லாமல் அப்பால் நகர இயலவில்லை. அப்படிச் செய்தால் அது இம்மக்களுக்கு - தாய் தேசத்துக்கு நான் செய்கிற பெருந் துரோகமாக இருக்கும்.



பணத்துக்கு புன்னகைத்து; பணத்துக்கு முகமன் கூறி பழக்கப்பட்ட ஒரு முதல் தர நாட்டில் இருந்து போய் ஓர் உண்மையான புன்னகையை; மரபார்ந்த அக்கறையை; பண்பாட்டின் பணிவன்பை பரிமாறிய இந்த மக்கள் - விருந்தாளிகளுக்கு விருந்தோம்பலின் சிறப்பைக் காட்டிய இந்த இளைஞர்கள் - அவர்களுக்காகவும் அவர்கள் தம் பண்பாட்டின் சிறப்பை கட்டாயமாக நினைவில் இருத்திக் கொள்ளவேண்டும்; அந்தப் பண்பாட்டுக்கெனவும் ஒரு இடம் ஒதுக்கிக் கொள்ளவேண்டும் என்பதற்காகவும் இந்தப் பதிவு. 



மன்னிக்க நண்பர்களே!ஏன் ஈழத்திலோ பாரதத்திலோ இவ்வாறு இல்லையா என்ற கேள்வி உங்களுக்கு எழக்கூடும். பாரத தேசத்துக்குப் போக வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது. விரைவில் போகக் கூடும். ஈழத்தில் எப்படி என்ற கேள்விக்கு என் மனதில் பதிந்து போயிருக்கிற ஒரு சம்பவத்தைச் சொன்னால் பொருத்தமாய் இருக்கும்.


அப்போது எனக்கு 11 அல்லது 12 வயதிருக்கும். கணுக்காலில் ஒரு காயம். வவுனியா பெரியாஸ்பத்திரிக்கு மருந்து கட்ட வரிசையில் நிற்கிறேன். கட்டும் இடத்தை வரிசை நெருங்க நெருங்க மனதில் கிலி. நோகப்போகிறதே என்ற பயம். எனக்கு முன்னால் நின்றவர் கட்டுப் போட்டுக் கொண்டு போகிறார். நேர்ஸிடம் எனக்கு உரஞ்சாமல் மருந்து கட்டிவிடும் படி கேட்டேன். அவருக்கு வேலைச் சலிப்பு.மேலும் என்னோடு செல்லம் கொஞ்ச நேரமில்லை. ‘வா சும்மா கட்டி விடுவது தானே, கட்டி விடுகிறேன்’ என்று விட்டு சுத்தம் செய்யாமல் கட்டத் தயாராகிறார். இதைக் கேட்ட எனக்கு முன்னால் அப்போது தான் காயத்துக்குக் கட்டுப்போட்ட மனிதன் நேர்ஸிடம் சொன்னார், ‘நான் ஆளப் பிடிக்கிறன். நீங்கள் வடிவாக் கட்டி விடுங்கோ’ என்று சொல்லி நான் அழ அழ கால்களை இறுகப் பிடித்து வடிவாகக் கட்டப் பண்ணி விட்டு அந்த மனிதன் நகர்ந்தார்.

ஏனோ இந்த மனிதனின் இயல்பு மனதில் மிக ஆழத்தில் பதிந்து விட்டது. யாரோ ஒரு மனித ஜீவனிடம் அந்த மனிதன் காட்டிய அக்கறை! நான் யாரோ அந்த மனிதன் யாரோ என்றாலும் எனக்கு இப்பிடி இருந்தால் சுகமாகாது என்று தன் பிள்ளைக்கு போல காலைப் பிடித்து விட்டு விட்டுப் போன தன்மை! இன்று வரை மனதில் பதிந்து போன ஒன்றாகவே இருக்கிறது.


ஒரு தரம் சுவிற்சிலாந்து போன போது என் தங்கையோடு (அவள் அங்கு கிராமப் புறத்தில் இருக்கிறாள்) கடைகளுக்குச் சென்று விட்டு திரும்பும் போது வீதியோரத்தில் பூசணிக்காய்களை (தம் தோட்டத்தில் விளைந்தது) வரிசைக்கு அடுக்கி வைத்திருந்தார்கள். அருகில் யாரும் இல்லை. விருப்பமானவர்கள் அதை எடுத்துக் கொண்டு தமக்கு பிடித்த பணத்தை அங்கு அருகில் வைத்து விட்டுப் போகலாமாம். யாரும் கேட்பார் இல்லை. சிலர் எடுத்து விட்டு மறு நாள் காசை வைத்து விட்டும் போவதுண்டாம். நாம் அதில் இறங்கி பூசணிக்காய் ஒன்றை எடுத்து விட்டு அருகில் யாரோ வைத்து விட்டு போன பணத்தோடு நம் பணத்தையும் வைத்து விட்டு வந்தோம். அது ஒரு புதினமான முறையாக அப்போது இருந்தது. சக மனிதர்கள் மீது தான் அந்த மக்களுக்கு எத்தகைய ஒரு நம்பிக்கை இல்லையா?



 விபுலானந்தர் ஒரு வரி பாடி இருப்பார் இப்படி,

"வெள்ளைநிற மல்லிகையோ?
வேறெந்த மாமலரோ?
வள்ளல் அடியிணைக்கு
வாய்த்த மலரெதுவோ?
வெள்ளைநிறப் பூவுமல்ல!
வேறெந்த மலருமல்ல!

உள்ளக் கமலமடி
உத்தமனார் வேண்டுவது!"

மனதுக்கும் வயிறுக்கும் நிறைவளித்த தாய் தேசத்துக்கு என் பணிவன்பான வந்தனம்.வாழ்க தாய் தேசம்!!
















6 comments:

  1. அழகான... சுவையான... மனதை ரசிக்க வைத்த பகிர்வு... நன்றி... தொடர்க...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. மனதுக்கும் வயிறுக்கும் நிறைவளித்த தாய் தேசம் ப்ற்றிய நிறைவான அருமையான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  3. உடனடியாக ஓடோடி வந்து மனதில் தோன்றும் எண்ணங்களைப் பகிர்ந்து செல்லும் தனபாலருக்கும் செந்தாமரைத் தோழிக்கும் என் அன்பும் நன்றியும்.

    ReplyDelete
  4. சுவையோடு கூடிய பகிர்வு...
    அருமை.

    ReplyDelete
  5. எங்கெங்கும் நிறைந்திருக்கவேண்டிய மனிதம் இப்படி எங்காவது சில தருணங்களில் மட்டும் நினைவுறுத்தும் வகையில் அமைந்திருப்பது ஒருவகையில் வருத்தம் என்றாலும் நினைத்துப்பார்க்க சில தருணங்களையாவது அனுபவித்திருக்கிறோமே என்று மனநிம்மதி கொள்ளவும் வேண்டியுள்ளது. புத்தனைக் கும்பிட்டபடி மனிதம் மறந்து வேதனைப்படுத்துகிறது ஒரு தேசம். புத்தனைக் கும்பிட்டபடி புன்னகைத்து மனம் நிறைக்கிறது மற்றொரு தேசம்.

    ReplyDelete
  6. குமார், தாங்ஸ்ப்பா.

    அழகாய் சொன்னீர்கள் கீதா. தமிழ் உங்கள் கைகளில் துள்ளி விளையாடுகிறது மிக வசீகரமாய்! நன்றிம்மா.

    ReplyDelete