Friday, July 5, 2013

இலக்கிய சந்திப்பு – 13 – நிகழ்ந்தவை – நிகழ்ச்சிக் குறிப்புகள்



ஞாயிற்றுக் கிழமை. காலையில் இருந்து மழை வேறு. வெள்ளெண இருட்டத்தொடங்கி விடும் குளிர்கால மாலை. Financial year இன் கடசி நாளும் இன்றைக்குத் தான். அலுவலகங்கள் தம் கடசி நேர வேலைப்பழுவை இறக்கி வைக்க விடுமுறைகளிலும் முனைப்போடு செயல் பட கிடைத்திருக்கும்  கடசிச் சந்தர்ப்பம். அதனால் வேலைக்குப் போய் பாதியில் இந்த நிகழ்ச்சிக்காக விடைபெற்று வந்த களை எனக்கும்.

பாடசாலைகளோ விடுமுறை. கார்த்திகாவுக்கு சுகவீனம். அவரின் வானொலி நிகழ்ச்சிகளிலும் ஒரு வாரமாக அவரைக் காணமுடியவில்லை என தொலைபேசிய போது தான் தன் சுரம் பற்றிச் சொல்லியிருந்தார். மழை ஷிரயா விடுமுறைக்குக் கடல் கடப்பதாக முன் கூட்டியே சொல்லி தன் நண்பரான திரு சத்திய நாதன் அவர்களை நமக்கு மின்னஞ்சலின் மூலமாக அறிமுகப்படுத்தி விட்டு நம் புத்தகப் பேரேட்டுக்கு தன் பங்களிப்பாக ………………. புத்தகத்தைத் தருவதாகக் குறிப்பிட்டு விட்டு போயிருந்தார்.

அதனால் என்னிடம் இம்முறை  பங்களிப்பாளர்கள் குறித்து நிறையவோ பெரிதாகவோ எதிர் பார்ப்புகள் எதுவும் இருக்கவில்லை.வழக்கமாகவே வருபவர் தொகை 5 – 10 க்குள் தான்.அது குறித்து எனக்கு எந்தக் குறையும் இல்லை. மாறாக அது எனக்கு மகிழ்ச்சியே.தொகை குறைவாக இருக்கும் போது அவதானிப்பும் காத்திரமும் திசைமாறிப் போகாமல் இருக்கும்.

வருபவர் தொகை குறைவெனினும் அவர்கள் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள்.அது போதுமாயிருந்தது. எனினும் இன்று தவறாமல் வந்து கலந்து கொள்ளும் ஷிரயாவும் கார்த்திகாவும் கலந்து கொள்ளமாட்டார்கள் என்றது ஏமாற்றமாகவே இருந்தது. அண்மையில் தென்றல் தந்து போன ஒரு உற்சாக வசனமான “ எதுவும் நேராதது போல நடந்து கொள்ளுங்கள்: என்ன நேர்ந்திருந்தாலும் சரி” என்ற வசனம் என்னை உந்தித்தள்ள போனேன்.

வேலையில் இருந்த ஓர் சமயம் யாழ் நிறுவனத்தார் அதே நாள் மாலை அவர்களின் இரண்டு அரங்கத்திலும் நிகழ்ச்சிகள் நடைபெற ஏற்பாடாகி இருப்பதால் வேறொரு அறையை நமக்குத் தந்துதவுவதாக வாக்களித்திருந்தார்கள்.அதனை இளம் நிறுவனர் திரு.சுஜன் மேற்கு அவுஸ்திரேலியாவில் இருந்த படி இந்த ஏற்பாட்டை நமக்காக ஏற்பாடு செய்து தந்திருந்தார்.


5.15 மணியளவில் அங்கு நான் சென்ற போது இரு அரங்கங்களும் மிக நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலே நீங்கள் காணுகின்ற இந்த அழகிய பாத்ரங்கள் அந்த அலங்காரத்தின் ஒரு பகுதி தான்.



ஓர் இளந்தமிழன் என்னை வரவேற்று கீழ் அரங்கில்  7.30 மணியளவில் தான் நிகழ்ச்சி நடக்கப் போகிறது. நீங்கள் அதற்குள்ளாக அந்த இடத்தைப் பாவித்துக் கொள்ளலாம் என்றான்.வெண்பட்டு விரித்த அரங்கம்.யாருக்காகவோ தயார் படுத்தப்பட்ட அந்த அழகு கலைந்து விடாமல் உள்ளே சென்று அதன் அழகில் லயித்திருக்க மிகச் சரியாக 5.30 மனிக்கு இரண்டு பேர் உள் நுழைந்தார்கள். புது முகங்கள். ஆண்கள்.இலக்கிய சந்திப்பு இங்கேயா நடக்கிறது என்றார்கள்.


என்ன ஒரு ஆச்சரியமான சந்தோஷம்! ஒருவர் திரு. சத்திய நாதன். ஷிரயா அறிமுகப்படுத்தியவர். மற்றயவர் தம் வலைப்பதிவில் தன்னைப் யாழ் புத்தன் என அடையாளப்படுத்திக் கொள்ளும் இரட்னசீலன்.இருவரும் இன்றய புது முகங்கள்.


சற்று நேரத்தில் எல்லோரும் வந்து சேர குறும்பட இயக்குனர் செல்வன் தன் பேச்சை ஆரம்பித்தார்.

இந்த சந்தர்ப்பத்தில் குறும்பட இயக்குனர் செல்வனைப்பற்றிச் சற்றுச் சொல்வது பொருத்தமாக இருக்கும். அவரை முதன் முதலில் அறிமுகப்படுத்தியது ‘மண்’ புகழ் திரைப்பட இயக்குனர் புதியவன். தன் திரைப்பட அலுவலாக இலண்டனில் இருந்து வந்த புதியவன் நம் கடந்த மாத இலக்கிய சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவரால் அறிமுகப்படுத்தப்பட்டவர் தான் இந்த செல்வன்.( பாருங்கள் இலண்டனில் இருந்து ஒருவர் தேவையாய் இருந்திருக்கிறது நம் அருகில் இருக்கும் ஒருவரை அறிமுகம் செய்ய.) அந்த நாளிலேயே அவரை நாம் அடுத்த சந்திப்பின் அதிதியாக அழைப்பதாகத் தீர்மானித்திருந்தோம். அதற்கு அவரும் ஓம் பட்டிருந்ததன் காரணமாக இன்று அவர் பிரசன்னமாகியிருந்தார்.



இலங்கையின் தொழில்நுட்ப சூழல் மிக மங்கிப்போயிருந்த 2007ல் ’விழி’ என்ற குறும்படத்தை உருவாக்கிய செல்வன் மூதூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். .Dark Moon’ என்ற ஆவணப்படத்தை பின்னர் எடுத்ததோடு இலங்கையின் திரைப்படக்கூட்டுத்தாபனத்திலும் சில ஆண்டுகள் வேலை செய்யும் வாய்ப்பைப் பெற்றிருந்தார்.அந்த சந்தர்ப்பத்தில் புதியவனின் அறிமுகம் தனக்குக் கிடைத்ததாகவும் அதன் காரணமாக 2000ம் ஆம் ஆண்டு புதியவனால் எடுக்கப்பட்ட ‘மாற்று’ என்ற திரைப்படத்தில் பங்குபற்றும் வாய்ப்பு தனக்கு கிட்டியதாகவும் அதனைத் தொடர்ந்து 2002 இல் கனவுகள் நிஜமானால் 2002ல் எடுக்கப்பட்ட போது அதன் கதையம்சத்தில் ஈர்க்கப்பட்டதாகவும் அதனைத் தொடர்ந்து 2005ல் எடுக்கப்பட்ட மண் திரைப்படத்தில் தானும் ஒரு பாத்திரம் ஏற்றுக் கொண்டதாகவும் கூறும் செல்வன் தான் அடிப்படையில் ஒரு நடிகனாகவே வர விரும்பியதாகவும் திரைப்படத்துறைக்கு வந்ததன் பிற்பாடே நடிப்பது என்பது வெறும் தோற்றப்பாடே என்பதுவும் அதில் ஒரு கருத்தைச் சொல்ல முடியாமல் இயக்குனரிடமே அதன் முழு உரிமைகளும் இருப்பதனால் இயக்குதல் என்ற பக்கத்தைத் அதன் பின்னர் தான் தேர்ந்தெடுத்ததாகவும் தெரிவிக்கிறார்.மிகுந்த பொருட்செலவும் ஆட்பலமும் தொழில்நுட்ப ஆற்றல்களும் மிக வேண்டப்படும் இத்துறையில் குறும்படங்களும் ஆவணங்களும் கொடுக்கும் வீரியத்தை; சமூகத்திலும் அரசியலிலும் வரலாற்றிலும் அது பதித்துச் செல்லும் அழுத்தமான காலடிகளையும் தொடர்ந்து அவர் விபரித்தார்.



1 நிமிடத்தில் இருந்து 55 நிமிடங்கள் வரைக்குமான நேர வரையரை குறும்படங்களுக்கு இருப்பதாகத் தெரிவிக்கும் செல்வன் சில இடங்களில் அதற்கு விதி விலக்குகளும் உள்ளன என்று கூறுகிரார்.

அதற்கு இருக்கும் அசாதாரன சமூகத் தாக்கம் குறித்து – அதன் வீரியம் குறித்து பேசுகின்ற போது பிரித்தானியாவில் எடுக்கப்பட்ட செம்மறியாடு பற்றிய ஒரு நிமிட குறும்படம் எவ்வாறு மக்களிடம் விழிப்புணர்வினையும் கிளர்ச்சியையும் ஏற்படுத்தி பாராளுமன்றத்தில் சட்டத்திருத்தத்துக்கு வழிவகுத்து வைத்தது என்பது பற்றிக் கூறினார்.(அதன் கதை செம்மறியாடுகளில் இருந்து உரோமங்களை நம் தேவைகளுக்காகக் களைவதனால் ஒரு ஆடு எவ்வாறு அவஸ்தைப்படுகிறது என்பது தான். அதன் பின் செயற்கைக் கம்பளி தயாரிக்கும் படியான சட்டத்திருத்தம் ஒன்று பிரித்தானியப் பாராளுமன்ரத்தில் நிறைவேற்றப்பட்டதாகக் கூறுகிறார்.)



அது மொழிகடந்து பேசும் தன்மை வாய்ந்தது என்பது குறும்படம் ஆவனப்படங்கள் சார்பாக அவர் முன் வைத்த இன்னொரு விடயமாக இருந்தது. மொழி கடந்து பேசும் அதன் காட்சிப்படுத்தல் உலக மக்கள் யாவருக்கும் பொதுவானது. அப்போது சுமதி ரூபனின் மனுஷி மெளன மொழியினால் பேசப்பட்ட உலகு தழுவிய மக்களைச் சென்றடையத்தக்க அற்புதக் கலை வெளிப்பாடு என நான் சொன்ன போது திரு சத்திய நாதன் சார்ளிசம்பிளினை இன்னொரு உதாரணமாகக் எடுத்துக்காட்டினார்.இந்த இடத்தில் மொழியின் மெளனமும் தொழில் நுட்பத்தின் பேட்டாற்றலும் கலை வெளிப்பாட்டின் விகசிப்பும், அதன் உலகு தழுவிய வியாபகமும் புத்தகங்களின் பயன்பாட்டுத்தன்மையைக் கேள்விக்குறியாக்கியிருந்தன.



மொழி குறித்த சிந்தனைகள் மறு பார்வைக்குரியனவா என்ற கேள்வி எழுந்த போது இல்லை என்பதே பலருடயதும் கருத்தாக இருந்தது.மொழி கொண்ட புத்தகங்களில் வாசகனின் கற்பனைக்கு அவனது சிந்தனைக்கு எப்போதும் இடம் இருக்கும் என்பதும்; ஆவனக் குறும்பட பக்கங்களில் இயக்குனரே அனைத்தையும் தீர்மானித்து விடுவதால் அங்கு வாசகனுக்கு அசைபோட மூழ்கிப்போக அதனுள் வாழ்ந்திருக்க முடியாமல் போய் விடுகிறது என்பது அதற்குரிய மாற்றுக் கருத்தாக இருந்தது.

அதற்கு உதாரணங்கள் பலவற்றை சத்திய நாதன் எடுத்துக் காட்டினார்.புத்தகங்களாக வந்து வெற்றி பெற்ற பல கதைகள் திரைப்படமாக எடுக்கப்பட்ட போது தோல்வியைத் தழுவிக் கொண்டமைக்கு வாசகனுடய கற்பனைக்கும் இயக்குனரின் கற்பனைக்கும் இடையே காணப்பட்ட வேறுபாடே காரணம் என அவர் எடுத்துரைத்தார்.அதற்கு ஒரே ஒரு விதி விலக்கு தில்லானா மோகனாம்பாள் என்ற படம் மாத்திரமே என்றும்; அது வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம் அதில் கையாளப்பட்ட dynamic approach தான் என்றார்.



தொடர்ந்து அதன் சமூகத்தாக்கம் குறித்து பார்வைக்களம் திரும்பியது.அரசியலுக்கு வருவதற்கு திரைப்படம் எவ்வாறு ஒரு படிக்கல்லாக இருந்திருக்கிறது; இருக்கிறது இனியும் இருக்கும் என்பது பற்றிய விவாதக் களத்தை ஆரம்பித்து வைத்தார் இந்துமதி. இந்தியாவில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவும் இலங்கையில் விஜயகுமார ரணதுங்காவும் அமெரிக்காவில் பில் கிளிங்டனும் உதாரணமாக வந்து போனார்கள்.தற்போதய இலங்கையின் ஜனாதிபதி மகிந்தராஜபக்‌ஷ கூட அரசியலுக்கு வருவதற்கு முன்னர் நடிகராகவே இருந்தார் எனவும் அவர் கதாநாயகனாகக் கூட நடித்திருந்தார் என்ற செய்தியும் சுவாரிஷமானதாகவும் புதிதான தகவலாகவும் இருந்தது.

திரைப்படத்துக்குத் திரும்பியிருந்த பார்வையை மீண்டும் ஆவணங்கள் குறும்படங்களுக்கு கொண்டு வர தற்போதய நடைமுறைப் பூகோளச் சூழல் பற்றிய பார்வை வழிவகுத்தது. இன்றய தொழில்நுட்ப அபிவிருத்தியும் புலம்பெயர்ந்த சூழலும் கணணி அறிமுகப்படுத்தி இருக்கிற சாத்தியப்பாடுகளும் எவ்வாறு எல்லோரும் கலைப்படைப்பை தொழில் நுட்பத்தினூடாகச் செலவு அதிகமின்றி செய்ய உலக சமூகத்தை ஒரே நேரம் சென்றடைய அது எவ்வாறு உதவுகின்றது என்பது பற்றியும் அதன் வாய்ப்பு; சாத்தியப்பாடுகள் பற்றியும் பேச்சு திரும்பியது.


அதற்கென்று தனித்துவமாக இருக்கின்ற பார்த்தல், கேட்டல், உணர்தல், என்பவற்றினூடான காட்சிப்படுத்தல் புலன் உணர்வுகளை சம நேரத்தில் சென்றடைவதும்; அதற்கென இருக்கின்ற வசதி, ஒரு வித கவர்ச்சிப் பாங்கும்; புத்தகங்களைச் சுமந்து திரியத் தேவையற்ற அதன் இலகுப் பாங்கும்; இன்றய அவசர உலகுக்கு எவ்வாறு ஏற்புடையதாகவும் சுலபமானதாகவும் ஆகிப்போகிறது என்பது உணரத்தக்க ஒன்றாகவும் அதிகரித்த பயன்பாட்டுத்தன்மையைப் பெற்ற ஒன்றாகவும் இருக்கின்றமை எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 2006ம் ஆண்டு வெளியிடப்பட்ட விழி என்ற செல்வனின் குறும்படம் பிரித்தானியக் குறும்பட விழாவில் நல் வரவேற்பைப் பெற்றதற்கும் முதல் 1500 இடங்களுக்குள் அது தெரிவானதற்கும் அதனிடம் இருந்த இத்தகைய பூகோள மாற்றங்களுடனான பயன்பாட்டுத்தன்மை முக்கிய காரனம் என்றார்.



இப்போது ஆவணப்படங்களின் சமூகப்பங்களிப்பு என்ற முக்கியமான இடத்துக்கு வந்திருந்தோம். முதல் நாள் தான் (29.6.13) Silver water, Bahai  Centre இல் நடந்த Channel 4 தொலைக்காட்சியின் ஆவனப்பட இயக்குனர் ………………. இன் “The killing Field -No fair sone ” ஆவணப்படம் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. ஈழத்துக்கும் இலங்கைக்குமான இறுதிப் போர் பற்றிய ஆவணச் சித்திரிப்பைக் கொண்டிருந்தது அப்படம். அதற்குச் சென்று திரும்பியிருந்தார் திரு.ரட்னசீலன்.அது பற்றி அவர் பேசினார். அதன் வெளியீட்டுத் தாக்கம் அதிலிருந்த உண்மைத்தன்மை அது எப்படி உலகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்தது என்பது பறியும் ஒரு அரசொன்றுக்கெதிராக உலகம் சுட்டுவிரல் உயர்த்த; மூடப்பட்டு போயிருக்கக் கூடிய உண்மை ஒன்று இரத்தமும் சதையுமாக கிடந்ததைச் சொல்லிக் காட்ட கிட்டிய சாட்சியாக அது அமைந்த ஆற்றை; அது எவ்வாறு ஐ.நா. வுக்கு அழுத்தத்தைக் கொடுத்தது என்பது பற்றியும் பேச்சுத் திரும்பியது. விரும்பியோ விரும்பாமலோ நாம் அனைவரும் அதில் உணர்வு பூர்வமாக இணைந்து அதன் வீரியம் குறித்து பேசலானோம். அது நம் உயிரோடும் உணர்வோடும் கலந்ததல்லவா? ஆவணப்படத்தின் சிறப்பியல்பும் முக்கியத்துவமும் அது செல்லும் ஆழமும் அகலமும் தாக்கமும் குறித்து வியக்க; அதனை முழுவதுமாக ஒப்புக் கொண்ட செல்வன் தான் எடுத்துப் பாதியில் நிற்கும் ஆவனம் ஒன்றைப் உடனடியாகத் தன் கணனியில் இருந்து போட்டுக் காட்டினார்.



அது எல்லோரையும் ஆவணப்படம் ஆற்றத்தக்க அற்புத பங்களிப்பை உணர்ந்து கொள்ளப் போதுமானதாக இருந்தது.

ஆவணப்படங்களின் முன்னால் வரலாற்றுப் புத்தக ஏடுகள் மிகப் பலவீனப்பட்டுப் போயிருந்தது. எனினும் இவை இரண்டுக்கும் இடையே பல புறத்தாக்கங்கள் இருப்பதையும் நாம் பார்த்தே தீர வேண்டும்.ஒரு ஆவனப்படம் உயிரைப் பணயம் வைத்து எடுக்கின்ற அதே நேரம் மிகப்பெரிய விலையை – காலம் குறித்தும் செலவு குறித்தும் பாதுகாப்புக் குறித்தும்  - வரலாற்று பெறுமதியை நிலை நாட்டிச் செல்லும் ஒரு வாழ்கைக்கால படைப்பு. இப்போதைக்கு அதனை எதனோடும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. கலைப்பெறுமதியை விட அதற்கு வரலாற்றுப் பெறுமதியே அதிகம்.



கூடவே, தமிழ் இனி என்ற குறும்படம் உலகத் தமிழ் மக்களிடையே பெரு வரவேற்பைப் பெற்றதற்கு சந்தைப்படுத்தும் யுக்திகளும் அதற்கு யூரியூப், முகப் புத்தகங்கள் எவ்வாறு பங்காற்றுகின்றன என்பதும் அந்தப்பக்கங்களைக் கையாளவேண்டிய அனுகுமுறைகளும் முக்கியத்துவங்களும் விதந்து பேசப்பட்டன.ஆனந்த விகடனில் வரவேற்பறைப் பகுதியில் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டு வந்த குறும் படங்கள் பற்றிய விமர்சனமும் பார்வையும் குறும்படம் பற்றிய சிறந்த அறிமுகத்தை மக்கள் மத்தியில் செய்ய மிகுந்த பங்காற்றியது என்று சத்திய நாதன் தெரிவித்தார்.


அது இயல்பாகவே நம்மை இணையப்பக்க உரையாடலுக்குக் கொண்டு சென்று நிறுத்தியது. தமிழ் எழுத்துருவின் அறிமுகமும் இணையத்தளங்களும், வலைப்பூக்களும் எப்படி உலகத்தை இணைத்து வைத்திருக்கிறது என்பது பற்றியதாக நம் உரையாடல் திசை மாறியது.தமிழ் மொழியோடு உறவாடும் மூன்று பேர் அங்கிருந்தும் மூன்று பேரும் வேறு வேறு விதமான தமிழ் எழுத்துருக்களைப் பயன்படுத்தி தமிழில் எழுதுவதை உரையாடலின் போது கண்டு கொண்டோம்.திரு ரட்னசீலன் யாழ்.கொம் மில் இருந்து டைப் செய்து கட் அண்ட் பேஸ்ட் செய்வதாகச் சொன்னார். திரு சத்திய நாதன் கட் அண்ட் பேஸ்ட் செய்கின்ற போதும் அதற்கான எழுத்துரு உயிர் எழுத்துக்களை அடியொற்றியதாக இருப்பதால் அது தனக்கு மிக இலகுவானதாக இருப்பதாகத் தெரிவித்தார். நான் பாவிக்கின்ற எழுத்துரு இந்தியாவில் இருக்கும் யுகமாயினி சித்தனால் எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது என்பது பற்றிக் கூறி; நேரடியாகவே தமிழிலும் ஆங்கிலத்திலும் சகல பக்கங்களிலும் ( மின் தபால், வேர்ட், வலைப்பக்கங்கள், தேடுபொறி என யாவற்றிலும்) எழுத வசதி அமைத்துத் தந்தது பற்றியும்; தேவைப்படும் இடத்து அடுத்த சந்திப்பில் அதனை எடுத்து வருவதாகவும் விரும்பியவர்கள் அதனைப் பெற்றுக் கொள்லலாம் என்பது பற்றியும் தெரிவித்தேன்.

உண்மையில் தமிழ் எழுத்துரு அறிமுகம் புதிய உலகத்தை திறந்து விட்டது என்பதும் அந்த ஒரு அறிமுகமே வாழ்க்கை முறையை மாற்றப் போதியதாக இருந்தது என்பதும் கனணி யுகம் எவ்வளவு சக்தி வாய்ந்த ஊடகம் என்பதற்குச் சான்றே.


இந்த இடத்தில் நம் ஆசுகவியார் குமாரசெல்வம் ஓடோடி வந்து சேர்ந்தார். அவர் தற்போது புதிய உணவகம் ஒன்றை திறந்திருப்பதால் நேரத்தை ஒதுக்கிக் கொள்ள முடிவதில்லை என்றும் இருந்த போதும் கடந்த இரண்டு சந்திப்புக்கும் வர முடியாதிருந்ததால் இன்று எப்படியும் வரவேண்டும் என்று வந்ததாகச் சொல்லி அடுத்த சந்திப்பைத் தன் உணவகத்தில் சாப்பாட்டோடு செய்து கொள்லலாம் என அழைப்பு விடுத்தார்.முடிந்தால் இன்றைக்கே தான் அங்கே அழைத்துச் செல்லலாம் என்ர போதும் யாரும் அதற்கான ஆயத்தங்களோடு வராத படியினால் அடுத்த முறைக்காக அதனை நாம் ஒத்தி வைத்தோம்.

உணவு பற்றிய பேச்சு வந்த போது எனது தாயார் நம் சந்திப்புக்காக செய்து தந்திருந்த கொழுக்கட்டைகள் நினைவுக்கு வர,உணவும் இடமும் நம்சந்திப்புக்காக ஒதுக்கித் தரும் செல்வத்துக்கும் ஏனைய அங்கத்தவர்களுக்கும் அதனைப் பரிமாறினோம்.உடனே செல்வத்துக்கு கொழுக்கட்டை பற்றிய வட்டாரக் கதை ஒன்று நினைவுக்கு வர அக்கதையைப் பகிர்ந்து கொண்டார். அக்கதை இலங்கையிலும் வழங்கி வந்ததை ரட்னசீலனும் சத்திய நாதனும் உறுதிப்படுத்தினார்கள். ரவியும் பானுவும் இதனை ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். எனக்கோ இந்தக் கதை புதிதாகவே இருந்தது. அதன் கதைச் சுருக்கம் இது தான்.

ஒரு குடியானவன் ஒரு ஆற்றைக் கடந்து அக்கரைக்குப் தன் உறவினரைக் காணும் நிமித்தம் போக வேண்டுமாம். மனைவிடம் விடைபெற்று அக்கரைக்கு போனதும்  உறவினர் வீட்டைச் சென்றடைகிறான். அங்கே இவரை வரவேற்று உபசரித்த பெண்மணி கொழுக்கட்டைகள் செய்து கொடுக்கிறாள். அதன் ருசியினால் உந்தப்பட்ட இக் குடியானவர் அதன் பெயரைக் கேட்டு வைத்துக் கொள்ளுகிறார். தன் மனைவியிடம் சொல்லி செய்விப்பதற்காக. அதனை மனனம் பண்ணியபடி வந்த அக்குடியானவன் ஆற்றைக்கடக்கின்ற போது ……………………… என மனனம் செய்து வீடு வந்ததும் …………..இதனை எனக்குச் செய்து தா எனக் கேட்கிறான். இதனைக்கேட்ட மனைவி ஐயையோ ஒரு நாளும் விரும்பிச் சாப்பாடு கேட்காத மனிதன் இன்று கேட்டு விட்டாரே என்று அக்கம் பக்கம் உள்ளவர்கள் எல்லோரிடமும் ஒடி ஓடிப் போய் கேட்கிறாள். யாருக்குமே அந்த புதினமான தின்பண்டம் எப்படிச் செய்வதெனத் தெரியவில்லை. அவள் தனக்கு செய்யத் தெரியாது என சொன்ன போது அதன் ஏமாற்றத்தைத் தாங்க முடியாத குடியானவன் மனைவியின் கன்னத்தில் அடித்து விடுகிறான். கன்னம் வீங்கிப் போய் விட்டது. அவள் கவலையோடு உட்கார்ந்திருக்கிறாள். வழமை போல கைமாற்றுப் பெற்றுக் கொள்ள வரும் அயல் வீட்டுக்காறி அழுது கொண்டிருக்கும் இவளைப் பார்த்து ‘ என்னடி இது கன்னம் கொழுக்கட்டை மாதிரி வீங்கிப் போய் விட்டதே! என்னவாயிற்று என்று கேட்டாளாம். ஆ… அது தான் அந்தக் கொழுக்கட்டைதான் வேணும் என்றானாம் அந்தக் குடியானவன். இது தான் கதை.(இவர் இதனைச் சொன்ன போது ஞானம் சஞ்சிகையில் வந்து கொண்டிருக்கும் கொற்றாவத்தை கூறும் குட்டிக் கதைகள் நினைவுக்கு வந்து போனது. அதனைச் சொல்ல ஆர்வம் உந்திய போதும் நேரக்கட்டுப்பாடு காரணமாகவும் இலக்கு மாறிவிடும் சாத்தியங்கள் இருப்பதாகத் தோன்றியதாலும் என்னை நான் கட்டுப்படுத்திக் கொண்டேன். வேறொரு சந்தர்ப்பத்தில் அதனை பற்றிப் பேசலாம் என சமாதானமாகிக் கொண்டேன்.

இந்த வட்டாரக் கதைகள் பேச்சு வந்த போது திரு சத்திய நாதன் கவிப்பேரரசர் வைரமுத்துவின் ‘தோழிமார் கதையையும் அதில் தொனித்து நிற்கும் வட்டார பாஷை அது கொடுக்கும் அழகியல் பற்றி பேசி மதுரை வட்டார வழக்கில் அமைந்திருந்த தோழிமார்கதை என்ற கவிதையை வாசித்ததும் மனதில் அது பதிந்து போன ஆற்றைக் கூறி; அப்பழுக்கற்ற அவ் அழகிய கவிதையை அதன் சகல தார்ப்பரியங்களோடும் எந்த ஒரு தடங்கலுமற்ற ஆற்றொழுக்கான தமிழாலும் அதனை உடனேயே அனுபவித்து அனுபவித்து ஒவ்வொரு சொல்லுக்குள்ளாலும் வாழ்ந்து அந்தக் கவிதையை அவர் பிறப்பித்த போது நாம் பேச்சற்றவர்களானோம்! அங்கு தமிழ் தங்கச் சுடராய் மிளிர்ந்தது. என்ன ஒரு நினைவாற்றல்! என்ன ஒரு சொற்தேறல்!! அந்தப் பாடலை இங்கு நான் காட்டா விட்டால் என் ஆத்துமம் சாந்தி பெறாது. இது தான் அப்பாடல்.அதில் இருக்கிற பாமரத்தனம், நகைச்சுவை,அதை கதையாக்கும் அவர்களின் அழகு ………….





ஆத்தோரம் பூத்த மரம்
ஆனை கட்டும் புங்க மரம்
புங்க மரத்தடியில் பூ விழுந்த மணல் வெளியில்
பேன் பார்த்த சிறு வயசுப் பெண்ணே நெனப்பிருக்கா?

சிறுக்கி மக பாவாடை சீக்கிரமா அவுறுதுண்ணு
இறுக்கி முடி போட்டு எங்காத்தா கட்டி விட
பட்டுச் சிறு கயிறு பட்ட இடம் புண்ணாக
இடுப்புத் தடத்தில் எண்ணை வச்சே நெனப்பிருக்கா?

கருவாட்டும் பானையில சிறுவாட்டுக் காசெடுத்து
கோணார் கடை தேடி குச்சி ஐசு ஒண்ணு வாங்கி
நாந்திங்க நீ கொடுக்க; நீ திங்க நாங் கொடுக்க
கலங்கிய ஐஸ் குச்சி கலர் கலராய்க் கண்ணீர் விட
பல்லால் கடிச்சுப் பங்கு போட்ட வேளையிலே
வீதி மண்ணில் ரெண்டு துண்டு விழுந்திடுச்சே நெனப்பிருக்கா?

கண்ணாமூஞ்சி ஆடயிலே கால் கொலுச நீ துலைக்க
சூடு வப்பா கிழவீன்னு சொல்லி சொல்லி நீ அழுக
எங்காலுக் கொலுசெடுத்து உனக்கு போட்டனுப்பி
என் வீட்டில் நொக்குப் பெத்தேன் ஏண்டி நெனப்பிருக்கா?

வெள்ளாறு சலசலக்க வெயில் போல நிலவடிக்க
பல்லாங்குழி ஆடயிலே பருவம் திறந்து விட
என்னமோ ஏதோன்னு பதறிப் போய் நானழுக
விறு விறுன்னு கொண்டாந்து வீடு சேர்த்தே நினப்பிருக்கா?

ஆடு கனவு கண்டா அருவா அறியாது
புழுவெல்லாம் கனவு கண்டா கொழுவுக்குப் புரியாது
எப்படியோ பிரிவானோம்; இடி விழுந்த ஓடானோம்

வரட்டூரு தாண்டி வாக்கப் பட்டு நான் போக
தண்ணியில்லாக் காட்டுக்கு தாலி கட்டி நீ போக
எம் புள்ள எம் புருசன் எம் புழப்பு என்னோட
உம் புள்ள உம் புருசன் உம் புழப்பு உன்னோட

நாளும் கடந்திருச்சு நரை கூட விழுந்திருச்சு
வயித்தில வளத்த கொடி வயசுக்கு வந்திருச்சு
ஆத்தோரம் பூத்த மரம் ஆனை கட்டும் புங்க மரம்

போன வருசத்து புயக் காத்தில் சாஞ்சிருச்சு!

பின்னர் நம் உரையாடல் கனனியில் தமிழும் பற்றிய பேச்சுக்குத் திரும்பியது.வாசிப்புப் பழக்கம் அருகி வருவது ஒரு புறம் நிகழ, மறுபுறம் தமிழ் கணணியில் எட்டிய இலக்குகள் பற்ரி பேச்சுத் திரும்பியது. இரண்டும் எதிர்மறையான இரண்டு விடயங்களாக நமக்குப் பட்டது. அவசரயுகம் ஒன்று படைப்பாற்றல் திறத்தோடு திறந்து விடப்பட்ட போது – ஊடகமாற்றம் ஒன்று வீரியமாக வெளிப்பட்ட போது அதன் சிந்தனைகளிலும் வெளிப்பாடுகளும் இன்னொரு தளத்தை சென்றடைந்திருக்கின்றன. அந்த வேகத்துக்கு தமிழ் ஈடு கொடுத்திருக்கிறதா என்ற கேள்வியும் சிந்தனைகளும் அடுத்து நம் கவனத்தைக் கவர்ந்தது.

தமிழ் இன்னொரு தளத்தை அடைந்திருக்கிறது எனதில் சந்தேகம் இல்லை என்று கூறிய திரு சத்திய நாதன் அவர்கள் புத்தக வாசனையை அது இன்னும் இலகு படுத்தி இருக்கிறது என்று கூறினார். எதிர்காலத்தில் புத்தகங்கள் கேள்விக்குறியாகுமா என்ற கேள்விக்கு இல்லை என்ற நம்பிக்கையை இந்த நிகழ்ச்சி தந்திருந்தது.



வட்டார வழக்குகளினூடே புத்தகங்களும் ஆவன மற்றும் குறும்படங்களும் கணனியைக் கொண்டுவந்த பூகோள புதுமையும் புகுந்து கொண்டு உறவாடிய நிகழ்வாக இம்மாத சந்திப்பு அமைந்திருந்தது.சரியாக 7.30 மணிக்கு நிகழ்ச்சி முடிவுற்றது.புதிய இரண்டுபேரின் வரவு நிகழ்ச்சிக்கு மிகுந்த நிறைவினையும் சிறப்பினையும்  ஏற்படுத்தித் தந்திருந்தது. நிகச்சிக்குப் போகும் போது வடிந்திருந்த உற்சாகம் திரும்பி வரும் போது மிகுந்திருந்தது. இந் நிகழ்ச்சியில் பங்களித்திருந்த எல்லோருக்கும் அந்த நிறைவின் பங்கு சாரும்.எனக்கு நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தந்து சென்றீர்கள் நண்பர்களே! எனினும் மனதுக்குள் ஒரு திட சங்கற்பம்! அடுத்த முறை நிகழ்ச்சியை சிறப்பாக வழி நடத்த வேண்டும் என்பது தான் அதற்குக்,

காரணம்1. புத்தகப் பேரேடு பற்றிய அறிமுகத்தை நான் கொடுக்கத் தவறினேன்.

காரணம்2. முறையான அறிமுகத்தை சரியாகச் செய்யத் தவறினேன்.

காரணம் 3. நன்றிகளைக் கூறி முறையாக நிகழ்ச்சியை நிறைவு செய்யவில்லை.

நிகழ்ச்சியில் பங்களித்திருந்த எல்லோருக்கும் என் தாழ்மையும் அன்பும் கனிந்த நன்றிகள்.

மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கையோடு










4 comments:

  1. விரிவான விளக்கம் அருமை... பதிவாகிப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் பல... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. நன்றி தனபாலரே!

    இந்தப்பதிவு உண்மையில் உயர்திணையின் வலைப்பக்கத்திற்காக எழுதியது.அதனையே இங்கும் மிகச் சிறியதான மாற்றத்தோடு இங்கு பதிவாக்கியிருக்கிறேன்.(என் நண்பர்களுக்காக)

    நீங்கள் அங்கு சென்றும் இதனைப் பார்க்கலாம். முகவரி: http://uyarthinai.wordpress.com
    இதே பகுதியின் இடப் பக்கத்திலும் என் விருப்பத்தெரிவில் மயிலிறகோடு இருக்கிறது அந்தப் பக்கம்.



    ReplyDelete
  3. //கருவாட்டும் பானையில சிறுவாட்டுக் காசெடுத்து
    கோணார் கடை தேடி குச்சி ஐசு ஒண்ணு வாங்கி
    நாந்திங்க நீ கொடுக்க; நீ திங்க நாங் கொடுக்க
    கலங்கிய ஐஸ் குச்சி கலர் கலராய்க் கண்ணீர் விட
    பல்லால் கடிச்சுப் பங்கு போட்ட வேளையிலே
    வீதி மண்ணில் ரெண்டு துண்டு விழுந்திடுச்சே நெனப்பிருக்கா?//

    அருமை...
    நல்ல சந்திப்பு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. Corner shop - மூலைக் கடை; இதைத் தான் கோணார் கடை என்கிறார்களோ?

    சந்தோஷம் குமார்.

    ReplyDelete