நன்றி; whatsapp இலிருந்து வந்தது... |
ஒவ்வொரு வருடமும் வருகிறது, மெல்லக் கரைந்து மறைகிறது... மறைகிறபோது நமக்கு ஒரு வயது கூடுகிறது... கொஞ்சம் அனுபவம் சேர்கிறது....
சிலரை இழக்கிறோம்.... சிலரைப் பெறுகிறோம்....
இந்தப் பதிவினை எழுத ஆரம்பித்த காலத்தை; அன்றய கால நண்பர்களாக இருந்தவர்களை; நினைத்துப் பார்க்கிறேன்.....
அநேகர் பதிவுலகிலேயே இல்லாது போய் விட்டார்கள். கண்தெரியாத உறவுகளாய் கருத்தால், எழுத்தால் இணைந்த காரணத்தால் நம்மோடு ஓர் அன்னியோன்னியத்தை வளர்த்துக் கொண்டவர்கள்.... என்ன ஆகினார்கள் என்றே தெரியாமல் அவர்களை இழந்து விடுதல் என்பது எத்தகைய ஓரிழப்பு!....
இருவாரம் முன்பு வரை சுகமாக இருந்த என் சித்தி 24.12.17ல் நம்மோடு இல்லை.
நாளை என்று ஒன்று நிச்சயமில்லை; யார்க்கும். இன்று என்பது மட்டுமே உண்மை. இன்றைகளை வாழுவோம்!
கோபங்களை மறந்து இன்றைக்கே கைகுலுக்கிக் கொள்வோம். உங்களிடம் தவறில்லை என்றாலும் சமரசம் செய்து கொள்ளுங்கள். நம் மனசை அது இலேசாக்கும் என்பதால்...
இறப்பு ஒன்றே சாஸ்வதம் என்ற உண்மையை ஒப்புக் கொண்டால்; நாளை இறந்து விடுபவனைப் போல சிந்தனை செய்தால்; இன்று நாம் என்ன வெல்லாம் செய்வோமோ அதை செய்ய இப்போதே ஆரம்பிப்போம்.
‘நூறு வருடம் வாழ்பவனைப்போல வேலை செய்; நாளை இறந்து விடுபவனைப்போல சிந்தனை செய்’ என்று ஒரு பொன்மொழி உண்டு.
இதனையே இறப்புகள் மீண்டும் மீண்டும் எனக்குச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன...
எழுதுங்கள் தோழர்களே! எழுத்துக்களால் இணைந்திருப்போம்!!
எழுத்துக்கள் மட்டுமே சாஸ்வதம்!
புத்தாண்டு வாழ்த்துக்கள்!
நான் பதிவெழுதத் தொடங்கிய புதிது. நான், செளந்தரி, ஜெயன் மூவருமாக பதிவுலகில் புகுந்தோம். மற்றய இருவரும் பதிவுலகை விட்டு அதிக தூரம் போய் விட்டார்கள். நான் தனியனானேன். பதிவுலக அரிவரிப் பாடங்களை பதிவர்களிடம் இருந்தே கற்றேன். படங்களை இணைக்கிற முறையை செளந்தரியிடம் இருந்தும்; வீடியோக்களை இணைக்கிற முறையை தாருகாசினியிடம் இருந்தும் கற்றுக் கொண்டது இன்றும் பசுமையாக நினைவிருக்கிறது. இரண்டு பேருமே தம் வலைப்பக்கங்களை மூடிக் கொண்டு விட்டார்கள்.
பிறகு கொஞ்ச வருடங்கள் ஈழத்து முற்றம் என்ற குழும வலைப்பதிவில் கும்மாளம் கொட்டக் கிடைத்தது. அதுவும் இப்போது படுத்துக் கொண்டு விட்டது....
எழுத்துக்களால் நம்மை ஈர்த்த பலர் சொல்லாமல் கொள்ளாமல் பதிவுலகை விட்டு வெளியேறி விடுவது மேலும், எழுதாமலே போய் விடுவது ஒரு மலாரிடியாக தலையில் வந்து விழுகிறது. இவர்களுக்கெல்லாம் என்ன ஆகியிருக்கக் கூடும் என்றே மனம் அலைபாய்கிறது....
சில மாதங்களின் முன்னால் என் பிரியமான பதிவுலகத் தோழி கீதா, எழுதுகிற விடயங்களை தரம் பிரித்து தனித்தனித் தலைப்பின் கீழ் கோர்வைப்படுத்தினால் நன்றாக இருக்கும்; மேலும் ஒரு குறிப்பிட்ட பதிவைக் கண்டு பிடிப்பதும் இலகுவாக இருக்கும் என ஆலோசனை வழங்கி இருந்தார். அது ஒரு நல்ல யோசினையாகத் தான் பட்டது.
ஆனாலும் நீங்கள் என் வலைப்பக்கம் மாற்றங்கள் காணாது இருந்தபடி அப்படியே இருப்பதைக் காண்பதைப் போல் மாற்றங்களை இலகுவாக ஒப்புக் கொள்ளத் தயங்கும் என் மனோபாவம் அதைப் பிற்போட்டுக்கொண்டே வந்தது. தொழில் நுட்பம் குறித்த அறிவு மிகச் சொற்பம் என்பதும் ; தவறாகிப் போய் விட்டால் இழப்பினை ஈடு செய்ய முடியாது என்ற தயக்கமும் அந்தப் பிற்போடலுக்குள் மறைந்திருந்தது.
ஒழிந்திருந்த இந்தத் தயக்கங்கள் எல்லாம் கிடைத்த இந்த வருட இறுதி விடுமுறையில் விழித்துக் கொண்டு போக விடை கேட்டன. அப்படியான ஒரு மாலைவேளையில் துணிந்து setting இற்குள் இறங்கி மெதுவாகவும் கவனமாகவும் பாதுகாப்பாகவும் அடி எடுத்து வைத்து கீதா சொன்ன வகைப்பிரிப்புகளைச் செய்து கொண்டேன். பிறகு அந்தந்தப் பிரிவுகளுக்குள் பதிவுகளை வகைப்படுத்த ஆரம்பித்த போது அது ஓர் எதிர்பாராத பின்னோக்கிய பயணமாகவும் நல்லதொரு நினைவு மீட்டலாகவும் அமைந்தது ஓரு மகிழ்வான தற்செயல்.
அதில் சின்னப்பிள்ளைத் தனமான பதிவுகள், தான் தோன்றித்தனமான பதிவுகள், ஒன்றுமே இல்லாத பதிவுகள்....இப்படி என நான் ஆடிய கூத்துகள்....வெட்கப்படத் தக்கவை என அவற்றை நான் இனம் கண்ட போதும் அவற்றில் எந்த ஒரு மாற்றங்களும் செய்யாது அவற்றை அப்படி அப்படியே அந்தந்த வகைப்பாட்டுக்குள் அடக்கி விட்டேன்.
பணிப்பிணி ஒன்று அகன்ற மகிழ்வெனக்கு!
இவ்வாறு நான் பின்னோக்கிப் பயணித்த போது தான் எழுதி Draft இல் போட்டு வைத்திருந்த - பின் மறந்தே போய் விட்டிருந்த - பல அம்சங்களைக் காண முடிந்தது. அவை இப்போதும் வரிசையாகப் பிரசுரத்துக்காகக் காத்திருக்கின்றன...கொஞ்சம் மெருகேறிப் பின் அவை வரக் கூடும்....
ஆனால் இந்த மெருகேற்றல் நடந்து கொண்டிருந்த வேளையில் நான் கண்டுகொண்ட; விசனத்தைத் தந்த அம்சம் ஒன்றையும் குறிப்பிட வேண்டியது அவசியம். அது என்னவெனில் குறிப்பிட்ட இணையத் தளம் ஒன்று என் பதிவுகளையும் ஒளிப்படங்களையும் தங்களுடய பெயரில் உருமாற்றி தம் தளத்தில் பிரசுரம் செய்திருந்தமை தான் அது.
என்னே ஒர் அநாகரிகம்....! இங்கிதம் கருதி அது என்ன இணையத்தளம் என்பதை இங்கு பகிரங்கப்படுத்தாது விடுகிறேன்.
அதனால் பிரசுர உரிமை குறித்த ஓர் எச்சரிக்கையை என் வலைப்பக்கத்தில் கறாராக இட நேர்ந்தது. அதே நேரம் கூகுள் இமேஜில் இருந்து நான் படங்களைப் பாவிப்பதில்லையா என்று என் மனசாட்சி கேட்கிற கேள்வி ஒன்றுண்டு. அது நியாயமானதும் கூட. நான் அவ்வாறு செய்ததுண்டு தான். ஆனால் நான் அவற்றை அதில் பதிக்கப்பட்டுள்ள இலட்சினையை வெட்டி உருமாற்றம் செய்தோ அல்லது அதனை என்னுடயதாக்கி அதில் என் இலட்சினையைப் பொறித்தோ ஒரு போதும் பிரசுரித்ததில்லை.
எனினும் 1.1. 2018 இலிருந்து கூகுள் இமேஜில் இருந்தும் கூட இனிப் படங்கள் எடுப்பதைத் தவிர்க்கவே முயல்கிறேன்.
இவைகளைத் தவிர இணைப்புகளை பதிவுகளில் இணைப்பது தொடர்பான புதிய மார்க்கம் ஒன்றினை இன்று கீதா மூலமாகக் கண்டு கொண்டேன். அது பலகாலமாக எப்படி எப்படி என்று என் மனதைக் குடைந்து கொண்டிருந்த போதும் அதனை சரியாக அறிந்து கொள்ளத் தவறி இருந்தேன். அதை புது வருடமான இன்று (1.1.18 ) கண்டு கொண்டேன். சொல்லித்தந்த கீதாவுக்கு நன்றி.
புது வருடம் இப்படியாக மலர்ந்திருக்கிறது....
நண்பர்களே!
இன்று என்பது மட்டும் தான் நிஜம் என்று பதிவுலகும், வாழ்க்கையும் எனக்குக் கற்றுத் தந்திருக்கிறது.
’Do Dance! like no one watch you’...நள்ளிரவு புது வருடக் கொண்டாட்ட வாணவேடிக்கைகாட்சிகள் ABC தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த போது அதனை நடத்திக் கொண்டிருந்த பெண்மணி சொன்ன வாழ்த்து அது.
இன்றய வாழ்வை வாழ்வோம்! எங்களுக்குப் பிடித்த மாதிரி.....
எங்களுக்கு கைவந்த மாதிரி!! மேலும், எங்களுடய Own Style இல்!!
Happy New Year!
பழைய பதிவுகளை மீண்டும் பார்க்கும்போது மகிழ்ச்சி நமக்குள். தொடரட்டும் உங்கள் பதிவுகள்.
ReplyDeleteதங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.
மிக்க மகிழ்ச்சி வெங்கட்!
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் புத்தாண்டு வழ்த்துக்கள் உரித்தாகட்டும்!புதுவருஷம் சூபிட்சங்களை எடுத்து வரட்டும்!!
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
ReplyDeleteமிக்க நன்றி, உங்களுக்கும் அவ்வண்ணமே ஆகுக!
ReplyDeleteஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDeleteஉங்களுக்கும் அவ்வண்ணமே.....
ReplyDeleteநாளைய பொங்கல் தின வாழ்த்துக்கள் மேலதிகமாக... :)