Friday, December 29, 2017

ஸ்ரீ காந்த லக்ஷ்மி

 ஸ்ரீ காந்த லக்ஷ்மி......

யாழ்பல்கலைக்கழக நூலகத்தின் பிரதம நூலகர்!
நூலகம் குறித்த; நூலக இயல் குறித்த ஈழத்துத் தமிழ் புத்தகங்கள் பலவற்றின் தாய்!
noolaham.org இன் வழிகாட்டுனர் சபையின் ஆரம்பகாலத்தில் இருந்து இற்றை வரையான உறுப்பினர்!

www.jaffnaheritage.blogspot.com
வாழும் மரபு

www.jaffnaheritage.wordpress.com (விம்பநூலகம்)
ஈழத்தமிழர் வாழ்வியல்

நூலக விழிப்புணர்வு நிறுவனம் மற்றும் முப்பரிமாண நூலகங்களின் சொந்தக்காறி!

எல்லாவற்றுக்கும் மேலாகத்  தன் வாழ்நாளில் சம்பாதித்த தன் அனைத்து உழைப்பினையும் முதலாகப் போட்டு தன் இல்லத்திலேயே நான்கு மாடியில் கொள்ளத்தக்க தமிழர் தம் பாரம்பரிய மரபு சார்ந்த பொருட்களைச் சேகரித்துப் பாதுகாத்து வரும் அரிய தமிழ் சமூக பண்பாட்டுக் காவலாளி!

இணுவிலில் இருக்கும் அந்த இல்லத்துக்கு ‘அறிதூண்டல் மையம்’ என்று பெயர்.

மறைந்து போன பாரம்பரியப் பொருள் பண்பாட்டின் காவலாளி........

அறிவு மாணவர்களைத் தேடிச் சென்றடைய வேண்டும்;
அது கண்டு, தொட்டு உணர்ந்து அறிகையில் இருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும்;
அறிவுக் கருவூலமான நூலகம் தன்னைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டிய காலம் இது என்பதை உலகின் பல நாடுகளுக்கும் அங்குள்ள நூலகங்களுக்கும் சென்று கற்று; உணர்ந்து அவற்றை நடைமுறைப்படுத்த பல்வேறு தடைகள் இயலாமைகள் வளப்பற்றாக்குறைகளுக்குள்ளும் தொடர்ந்து போராடி வரும் பண்பாட்டுப் போராளி!

“வாழும் மரபு” என்ற சொல் குறித்த அர்த்தத்தின் சொந்தக்காறி.


ஸ்ரீ காந்த லக்ஷ்மி.......

இவரை நான் சந்தித்ததே ஒரு தற்செயல் தான். அண்மையில் யாழ்ப்பாணம் சென்றிருந்த போது  16.10.2017 அன்று யாழ்பல்கலைக்கழகத்துக்கு சென்றிருந்தேன். அதன் ஓரங்கமாக நூலகத்துக்குச் செல்ல விரும்பி அங்கு சென்ற போது இப் பிரதம நூலகரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது.

அவரது அறை நவீன வசதிகள் கொண்ட பகுதியாக இருக்கும் என்ற என் எண்ணத்துக்கு மாறாக அது ஒரு தமிழ் பண்பாட்டுப் பேணுகையின் ’வாழும் மரபாக’ இருந்தது எனக்கு ஓர் இன்ப அதிர்ச்சி!

அவரை மறந்து அவர் சேகரித்து வைத்திருக்கிற அரும் பொருட்களை பூரிப்போடும் ஒரு வித வியப்போடும் நான் காண விளைந்ததைக் கண்ட அவர் ‘கருத்தூண்’ என்றொரு புத்தகத்தை பின் புறமாகத் திரும்பி தன் புத்தக அடுக்கில் இருந்து எடுத்து மனமுவந்து பரிசளித்தார்.

அந்த நாளின் இரவு அவரது புத்தகத்தை ஆசையோடு பார்த்து படித்து அறிந்து ஒரு விதமான கிறக்கத்தில் உறங்கி மறு நாள் காலை 7.30 மணிக்கு இந்தப் பெண்மணியைக் காண சொல்லாமல் கொள்ளாமல் அவர் வீட்டில் போயிறங்கி நான் நின்ற போது ஒரு புன்னகையோடு, வேலை நேரத்தைத் தயங்காமல் பின் போட்டு, ஒரு வித தாய்மையின் பூரிப்போடு தன் பொருட்கள் அனைத்தையும் பார்ப்பதற்காக எனக்குத் திறந்து விட்டு, அது பற்றி உரையாடி, விளக்கம் கூறி, ஆதங்கம் பகிர்ந்து, நாம் ஆத்மார்த்தமானோம்.....

நான் பார்ப்பதற்காகச் சுதந்திரத்தை முழு நம்பிக்கையோடு எனக்குப் பரிசளித்து விட்டு, சமைத்து தந்த விருந்தோம்பலில், அவரின் ‘வாழும் மரபினை’ அறிந்து கொண்டேன்.

மேலே காட்டப்பட்டிருக்கிற ஒளிப்படங்கள் அவரது காரியாலய அறையில் காட்சிப்பொருட்களாக உள்ளவற்றுள் சில...

ஒளிப்படம்: யசோதா.பத்மநாதன்.
திகதி: 16.10.2017.
இடம்: யாழ் பல்கலைக்கழக நூலகம்; நூலகர் அறை.

அக்கோய்... 
நீங்களும் எங்கள் பண்பாட்டுப் பொக்கிஷம் தான்!

மேலே காணப்படும் ஒளிப்படங்களை எடுக்க அனுமதி தந்த நூலகர். திருமதி.ஸ்ரீகாந்த லக்ஷ்மி. அருளானந்தன் அவர்களுக்கு என் நன்றி.

ஒளிப்படம்: யசோதா.பத்மநாதன்.
திகதி: 17.10.1017.
இடம்: இணுவில்.


7 comments:

 1. ஒரு நல்ல மனுஷியை உலகறிய செய்த உங்களுக்கும் அந்த நல்ல மனுஷிக்கும் என் பாராட்டுக்கள்

  ReplyDelete
 2. மதுரைத் தமிழா! நன்றி....
  இலங்கைத் தமிழர்களிடையே வரலாற்றுப் பேணுகை, ஆவணப் படுத்துதல் குறித்த பிரக்ஞை மிகக் குறைவு மதுரைத் தமிழா...
  அங்கொருவரும் இங்கொருவருமாக ஒரு சிலர் தம் வாழ்நாள் முழுவதையும் தம் சொந்த உழைப்பு முழுவதையும் மூலதனமாகப் போட்டு செய்யும் முயற்சிகள் கூட பின் வருவோரால் அதன் முக்கியத்துவம் உணரப்படாமல் அரை விலைக்கும் கால் விலைக்கும் விலை போன வரலாறுகள் தான் நமக்குண்டு.

  அந்தப் பின்னணியில் தான் ஸ்ரீ அக்காவின் பணிகள் இன்னும் வீரியமும் முக்கியத்துவமும் பெறுகின்றன.

  அவரது பணிகள் சமூகத்தால் போஷிக்கப்பட வேண்டியவை! இனம் கண்டு கெளரவிக்கப்பட வேண்டியவையும் கூடா...

  இனியேனும் இலங்கைத் தமிழர்கள் அதன் வரலாற்றுப் பெறுமதியை உணர்ந்து ஆதரவுக் கரம் நீட்ட முன் வரவேண்டும்...

  மதுரைத் தமிழா! மிக்க நன்றி. உங்கள் வருகைக்கும் பகிர்வுக்கும்...

  புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. எழுத்துப் பிழை நேர்ந்து விட்டது....

   /அவரது பணிகள் சமூகத்தால் போஷிக்கப்பட வேண்டியவை! இனம் கண்டு கெளரவிக்கப்பட வேண்டியவையும் கூட...//

   Delete
 3. பல பொருட்கள் பார்க்கும்போதே பிரமிப்பு.

  காணத் தந்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 4. மிக்க நன்றி வெங்கட்....உங்கள் வருகைக்கும் அபிப்பிராயத்தை மனமுவந்து பகிர்ந்து கொண்டமைக்கும்...

  பல பொருட்கள் எதற்காகப் பாவிக்கப்பட்டிருக்கும் என்றே தெரியாமல் இருக்கிறது.....

  4 மாடி கொள்ளத்தக்க பொருட்களை ஒரு மாடி வீட்டில் உள்ளடக்கி வைத்திருக்கிறா...தங்கள் வாழிடத்தை மட்டும் ஓரறைக்குள்ளாகச் சுருக்கிய படி....

  ReplyDelete
 5. திருமதி ஸ்ரீகாந்தலக்ஷ்மி அவர்களைக் குறித்து நீங்கள் தொலைபேசியில் சொல்லும்போதே சொல்லொணா பிரமிப்பு ஏற்பட்டது. இங்கே பகிர்ந்திருக்கும் தகவல்களும் படங்களும் பிரமிப்பை மேலும் அதிகமாக்குகின்றன. என்னவொரு அற்புதமான பெண்மணி.. அறிதூண்டல் மையம் - என்னவொரு அழகான பெயர். வாழும் மரபு என்ற உங்கள் வாக்கு மிகையல்ல என்பதை அவர் குறித்த ஒவ்வொரு வரியும் உணர்த்துகின்றன. இப்படியான அற்புத மனுஷியை அறியத் தந்தமைக்கு நன்றி தோழி. அவருக்கு நம் மனம் நிறைந்த அன்பும் பாராட்டுகளும்.

  ReplyDelete
 6. மிக்க நன்றி கீதா.
  இங்கு பகிர்ந்திருக்கும் படங்கள் 1% கூட இல்லை கீதா....அது ஒரு பெரிய திட்டமாக செய்யப்பட வேண்டியது. அதற்குஆவன செய்யவேண்டிய கடமை சமூகத்துக்கு உண்டு. ஆர்வம், தேடல், நேர அர்ப்பணிப்பு, நூலக வளம், ஆள்பலம், அறிவுப் புலம் ஆகியவற்றோடு கூடிய நிதி வள்ளல்மையோடு சமூக சுபீட்சம் குறித்த முன்னோக்குக் கொண்ட ஒரு குழு ஒன்று அவவோடு இணைய வேண்டும்....

  அது சமூகத்தையே தூக்கி நிமிர்த்துவதாகும்......

  உங்கள் கருத்துக்கு நன்றி கீதா.
  புத்தாண்டு வாழ்த்துக்களும்.

  ReplyDelete