தாலம் என்பது பனை.
லாவண்யம் என்பது அழகு என்று பொருள் கொள்ளத்தக்க சொல்.
தால விலாசம், தால சோபனம் என்றெல்லாம் ஏற்கனவே பனை பற்றி எழுதி இருக்கிறார்கள்.
காய்ந்து வரண்ட பூமியில் நாம் நம் பால்ய வாழ்வுக் காலத்தை பனையுடனேயே கடந்திருக்கிறோம். பனையையும் தம்முடய ஒரு பிள்ளையைப் போல கருதி தம் வாழ்வை ஒரு வாழ்வாக வாழ்ந்தவர்கள் நம் பெற்றோர் என்ற போதும், அது குறித்த எந்த ஒரு விழிப்புணர்வும் இல்லாமலே அதைத் தாண்டி வந்து விட்டோம்.
’பனங்கொட்டை சூப்பிகள்’ என்று ஏனைய மாவட்டத்தவர் நம்மை எள்ளி நகையாடும் அளவுக்கு அவைகளோடு நமக்கான சம்பந்தம் இருந்திருக்கிறது.
பனைக்கும் நமக்குமான அன்னியோன்னிய உறவு நாம் பிறந்த காலந்தொட்டே நம்மோடு இருந்து வருவது. பனை ஓலைப் பாயில் தவழ்ந்து, சிறுவர்களாக இருந்த போது கோயில் திருவிழாக்களில் பனங்கட்டிக் குட்டானும் சோளன்பொரியும் வாங்கித் தின்று, பனை ஓலையில் பெட்டி,கடகங்கள் செய்து, நாளாந்தம் பனை ஓலை கிழித்து கால்நடைகளுக்கிட்டு, பனங்கிழங்கு சாப்பிட்டு பனம்பழப்பணியாரம், புழுக்கொடியல், பனாட்டு சாப்பிட்டு வளர்ந்தது யாழ்ப்பாணத்தானின் உடம்பு.
நுங்கும் பதநீரும் கள்ளும் தருவது பனை. பூரானும் தந்து மகிழ்ந்தது பனை.
ஆனால் அது எப்படி என்ற எந்த புரிதலும் அதனோடு ஒரு உணர்வுபூர்வமான நெருக்கமும் அப்போது எனக்கிருக்கவில்லை. அதில் ஒரு அக்கறை கூட இல்லாத ஒரு உதாசீன மனோபாவத்தோடு வளர்ந்ததை நினைத்து இப்போது வெட்கிக்கிறேன்; வருந்துகிறேன். குறைந்த பட்சம் ஒரு நட்புறவோடு அன்னாந்து பார்த்து மனசார நன்றி சொல்லி இருக்கலாம்....கட்டியனைத்து ஒரு முத்தம் ஈந்த்திருக்கலாம்....😊
இன்று ஊரில் இருக்கும் நம் காணிக்குள் நிற்கும் பனை மரங்களை வெட்டப் போகிறோம் என்ற செய்தி வந்ததும் தான் பனை பற்றிய பிரக்ஞை ஒன்று சித்தித்தது.
பனை பற்றிப் படித்துப் பார்த்ததில் பல தகவல்கள் சிக்கியது. பாவம் பனை என்று ஒரு பரிவும் பச்சாதாபமும் தோன்றுகிறது. அவ்வப்போது அது ஒரு பெண்ணைப் போலவும் நின்று பிடிக்கும் அதன் தன்மையில் பெண்ணையே அது மிஞ்சிவிடும் போலவும் தோன்றுகிறது. அதனால்
தாலத்தை ஒரு பெண்ணாக பார்க்க விளையும் ஒரு பதிவு இது.
பனையில் ஆண்பனை என்றும் பெண் பனை என்றும் இரண்டு இனங்கள் இருக்கின்றன. விதைகளில் இருந்து வளரும் பனைகள் விதையாக இருக்கும் போது, அது ஆண்பனைக்கான விதையா பெண்பனைக்கான விதையா என்று அறிந்து கொள்ளுதல் சிரமம். எனினும் ஒற்றைக் கொட்டைப் பழவிதையாயின் ஆண் பனைக்கான விதையாக அது இருக்குமென்றும்; இரட்டைக் கொட்டை பழ விதையாயின் ஒன்று ஆணாகவும் மற்றயது பெண்னாகவும் வளர வாய்ப்பிருக்கிறதென்றும்; மூன்று விதையிருக்கும் பழமாயின் இரண்டு ஆண்பனைகளாகவும் ஒன்று பெண்பனையாகவும் வாய்ப்பிருக்கிறதென்றும் சொல்கிறார்கள்.
அதனால் பனம் விதை நாட்டும் போது இரட்டை விதைகளை நாட்டினால் ஆணையும் பெண்ணையும் அருகருகாக வளர்க்கலாம்.
பனைப்பெண்ணாள் மனிதப் பெண் போல்வாள். பெண்ணின் வளர்ச்சிப் பருவமும் பனைப்பெண்ணாளில் வளர்ச்சிப் பருவமும் ஒன்று போலவே விளங்குகின்றது. இரண்டும் பருவமடைய பன்னிரெண்டு ஆண்டுகள் ஆகின்றன.
ஒரு விதை முளைக்க ஆரம்பித்ததில் இருந்து அதன் வளர்ச்சிப் பருவம் ஆரம்பமாகின்றது. முளை - முறிகிழங்கு - நார் கிழங்கு - பீலிப்பருவம் - வடலி - பனை என்பது பனையின் வளர்ச்சிப் படிநிலைகளாகும்.
பெண்ணுக்கான பருவங்கள் பேதை - பெதும்பை - மங்கை - மடந்தை - அரிவை - தெரிவை - பேரிளம்பெண் என சொல்லப்படும். அது மாதிரி ஆணின் வளர்ச்சிப் பருவங்கள் பாலகன் - விடலை - காளை - மீளி - மறவோன் - திறவோன் - முதுமகன் என வகைப்படுத்தப்பட்டிருக்கிறது.
அது போல இலைகளுக்குப் பருவங்கள் ஐந்து. கொழுந்து - தளிர் - இலை - பழுப்பு - சருகு என்பன அவை. அது போல மலர்களுக்கு வளர்ச்சிப் பருவம் ஏழு. அவை அரும்பு - மொட்டு - முகை - மலர் - அலர் - வீ - செம்மல் ஆகியன.
பனைகள் சிறியனவாய் இருக்கும் போது அவற்றுக்கு வேறுபாடு கிடையாது. அவை வடலி என்றே பொதுப் பெயர் பெறும். குழந்தைகள் அல்லவா? அவைகளுக்கு ஏது வேறுபாடு? எல்லாம் குழந்தைகள் தானே!
பனம் விதையில் இருந்து ஒரு பனை வளர ஆரம்பிக்கும் போது முதல் 22 நாள் வரை அதனை விதைப்பருவம் என்று அழைப்பர். 22 நாளில் இருந்து மூன்று மாதம் வரை அதனை முறிகிழங்குப் பருவம் என்று அழைப்பர். 3 மாதத்தில் இருந்து 4 மாதம் வரையான காலத்தை நார்கிழங்குப் பருவம் என அழைப்பர். 4 மாதம் தொடக்கம் 2 வருடம் வரையான காலத்தை பீலிப்பருவம் என்றும்; 2வருடம் முதல் 10 வருடம் வரையான காலத்தை வடலிப்பருவம் என்றும் அழைப்பர்.
வடலியின் முதல் குருத்து பீலியாகும். அது வெளிவரும் போது தனக்குரிய உணவோடு வெளிவருகிறது. அதனை ‘ மூடுபடம் விரித்தாடு பாம்பைப்போல முளைத்து வரும் பருவம் என்று ஒரு கும்மிப்பாட்டு சொல்கிறது. இதன் பிறகு தொடங்கும் அதன் வளர்ச்சிப் பருவம் முதல் பத்து வருடத்திலும் ஒவ்வொரு வருடமும் சுமார் 3 அங்குல வளர்ச்சியை அது எட்டும் என்று அறியப்படுகிறது.
25 வருடங்கள் வரை வளர வல்லது பனை. 25 வருடத்துக்குப் பிறகு 45 ஆண்டுகள் வரை அது வளருமாயினும் அதன் வளர்ச்சி வேகம் குறைவானதாக இருக்கும்.பின்னர் 45 - 60 ஆண்டு காலத்துக்குள் அது தன் வளர்ச்சி வேகத்தைக் குறைத்து உரம்பெற ஆரம்பிக்கும்.
இப்படியாக வளர்ந்து உரம்பெறும் பனை தன் 100 வது வயதில் வைரம் நிரம்பியதாய் ஆகி விடும்.முதுமையினை அது சந்திக்கும் போது அதன் இலைகள் பசுமை குறைவாக இருப்பதற்குக் காரனம் அது வைரம் பாய்ந்து நீர்ச் சத்தினை மேலே செலுத்த முடியாதிருக்கும் தன்மையினாலேயே என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
அதனுடய கொடுக்கும் கொடைக்குணம் அதன் வடலிப்பருவத்தில் இருந்தே ஆரம்பித்து விடுகிறது. மயிலின் தோகை போல விரியும் அதன் ஓலைகள் விசிறி செய்யப் பெரிதும் பயன்படுகிறது. அளவாகவும் அழகாகவும் விரிந்து சிறியதாய் நிற்கும் அந்த ஓலைகள் விசிறி செய்ய கன கச்சிதமானவை.
தொடர்ந்து அது வளரும் போது, அதன் கருக்கு மட்டைகள் வேலிகளுக்கும் ஓலைகள் கால்நடைகளுக்குத் தீவனமகவும் பயன் படுகின்றன. கங்கு வடலிப் பருவத்தில் கங்கு மட்டைத் தும்பு உற்பத்தியாகிறது. பத்து வயதளவில் வடலி ஆரடி உயரம் வளர்ந்து கம்பீரமாக நிற்கும்.
12 ஆண்டில் பருவம் அடையும் பெண்ணைப் போல பெண் பனையும் 12 வருடத்தில் இளம் பனையாய் வளர்ந்து நிற்கும். அதன் அஃறிணை இயல்பிலும் ஓரழகு ததும்பி நிற்கும். அப்போது அதன் உச்சியில் உள்ள மட்டைகள் நெகிழ்ச்சி அடையும். இதேவேளையில் அருகில் உள்ள ஆண்பனையின் விரல் போன்ற நீண்ட பாளைகளில் இருந்து மகரந்தப் பொடி மணங்கமழ காற்றோடு கலந்து வெளியேறி பெண்பனையின் குருத்தடியில் சேர்கிறது. மகரந்தத்தைக் கொண்ட பெண்பனை குரும்பை ஈணுகிறது.
பனை பருவமைடைகிறது. பயன் தர ஆரம்பிக்கிறது.
இனி அவை தம் வாழ்வை தாமே பார்த்துக் கொள்ளும். நாம் அவைகளுக்கு சேதம் எதுவுஞ் செய்யாதிருந்தாலே போதுமானது.
இதனை நவாலியூர் சோமசுந்தரப் புலவர் ‘முப்பாசம் தீர்த்த முனிவர் மொழி வாய்மை போல் எப்போதும் நின்று பயனீயுமே’ என்று மனமுருகி வர்ணித்துள்ளார்.
பனையில் இருந்து பெறப்படுவன:
பதநீர்: இது ஆண்பனையில் இருந்தும் பெண்பனையில் இருந்தும் பெறப்படுகிறது. இது ஒரு இனிப்பான பானமாகும். ஆண்பனையிலும் பெண்பனையிலும் பருவகாலங்களில் தோன்றும் பாளைகளை இடுக்கியால் இடுக்கி நுனியில் சீவுவதன் வழியாக இந்தப் பானம் பெறப்படுகிறது.
இப் பானம் உயிர் சத்துக்களும் மருத்துவ குணாம்சங்களும் கொண்டது. உடற்குளிர்மையும் முகப்பொலிவையும் தர வல்லதெனப் போற்றப்படும் பதநீரில் பல்வேறுவிதமான உயிர் சத்துக்களும் நோயணுகா சத்துக்களும் நிரம்பி இருக்கின்றன. அதனால் இது கற்பகச் சாறு என்றும்; கற்பக அமிர்தம் என்றும்; பனஞ்சாறு என்றும்; பதனி என்றும் பன்னன் சாறு என்றும் அழைத்தார்கள். பாலைப்போல சத்துள்ள பதநீரை காலை ஒருவேளை அருந்தினால் உணவருந்தத் தேவை இல்லை என்று சொல்கிறார்கள்.
இதனைக் காய்ச்சியே பனை வெல்லம், பனங்கற்கண்டு, பனஞ்சீனி, பனங்கட்டி ஆகியன தயாரிக்கிறார்கள்.
இதுவே நேரஞ் செல்லச் செல்ல புளித்து கள்ளாகி விடுகிறது.
இனி எங்கேயாவது ஒரு பனையைக் கண்டால் அதனை ஆண்பனையா பெண் பனையா என்று கவனியுங்கள். அது இளங் குமரியைப் போல வளர்ந்திருக்கும் வடலியா அல்லது குடும்பப் பெண்போல் உயர்ந்து நிற்கும் பனை மரமா என்றாராயுங்கள்.
குலைகுலையாய் பனங்காய்களைக் கொண்டிருக்கிறாளா? அருகில் நிற்கும் அவளின் ஆண்பனை மகன் எப்படியாய் இருக்கிறான் என்று பாருங்கள். ஆணுக்கும் பெண்ணுக்கும் என்ன அங்க வேறு பாடுகள் இருக்கின்றன என்றும் கூட ஆராயுங்களேன். அதில் தப்பென்ன இருக்கிறது?
சுமார் 400 வருடங்கள் வரை வாழத்தக்க இவைகளை; தமக்குள்ளே ஆணென்றும் பெண் என்றும் பருவம் கொண்டு, வாழ்ந்து வரும் இவைகளை; தம்மை நமக்குப் பயன் தந்தும் எந்த ஒரு உதவியையும் நம்மிடம் கோராத இவற்றை நாம் கண்போல காப்போம்.
பொன்னி மழை வாழி! பூமி நலம் வாழி!
மண்ணுயிர்கள் வாழி! யறம் வாழி! - எந்நாளும்
கற்பகம் போலீயும் கடவுட்பனை வாழி!
நற்றமிழும் வாழி நயந்து! - சோமசுந்தரப் புலவர் -
( தொடரும்....)
No comments:
Post a Comment