Sunday, January 8, 2023

பெண்ணெனும் மெல்லியலாள்...

 அண்மைக் காலமாக என் வீட்டுக்கருகில் இருக்கும் ஒரு பழம்பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றைக் கண்டு பிடித்ததில் இருந்து எனக்கொரு புதுப்பழக்கம் உருவாகி இருக்கிறது. அது என்னவென்றால் அங்கிருக்கும் பழம் பொருட்களில் பெரும் பாலானவற்றை வீட்டுக்குக் கொண்டுவந்து சேர்க்கும் பழக்கம் தான் அது.

அது ஒரு addict மாதிரி என்னில் தொற்றிக் கொண்டு விட்டது. கட்டுப்படுத்த முடியாத படியாக அது என்னைப் பாடாகப் படுத்துகிறது. அவ்வாறாக அண்மையில் வீட்டுக்கு எடுத்து வந்துவிட்ட பொருளில் ஒன்று, ஒரு சுவரில் கொழுவத்தக்க ஒரு மேலைத்தேயப் பெண்ணின் ஓவியம். 

$ 8.00 களுக்கு விற்பனையில் இருந்த அந்தப் படத்தைப் பார்த்து விட்டு என்னை மிகுந்த பிரத்தனத்தோடு கட்டுப்படுத்திக் கொண்டு வீட்டுக்கு வந்து விட்டேன். யாரிடமும் அது பற்றி வீட்டில் மூச்சு விடவில்லை. கேட்டால் என்னையே அந்தப் பழம்பொருட்கள் விற்கும் கடையில் கொண்டுபோய் தள்ளி விடுவார்கள் என்ற பயம் தான் அதற்குக் காரணம்.

ஆனால் பாருங்கள்! என் ஆத்துமம் சாந்தியே ஆகவில்லை. சொல்வழி கேட்கவில்லை. சதா அந்தப் படத்தைப் பற்றிய யோசினை! சரியான உறக்கமில்லை. யாரோடும் இது பற்றிப் பேசவும் முடியவில்லை...அதனை வீட்டுக்குக் கொண்டுவந்து சேர்த்தால் தான் மனம் ஆறும் என்று எனக்குச் சத்தயமாகப் புரிந்து விட்டது.

மறுநாட் காலை வீட்டில் வரப்போகும் பிரளயத்தை எதிர்கொள்ளும் தைரியத்தை மனதில் வரவழைத்துக் கொண்டு யாரிடமும் பேசாமல் அக்கடைக்குப் போய் பெண்ணை வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்த்து விட்டேன். இப்போது வீட்டுக்குக் குடிவந்திருக்கிற அந்தப் பெண்ணைத் தான் கீழே உள்ள படத்தில் காண்கிறீர்கள்.


இந்தப் பெண்ணைப் பார்த்தால் நம்முடய ரவிவர்மா வரைந்த தமயந்தியை உங்களுக்கு நினைவு படுத்தவில்லையா? அதே மெல்லியலளாக அன்னப்பறவையோடு  இவளும் காட்சியளிக்கவில்லையா?

ஆண்பெண் சமத்துவம் பற்றி பேசுகிறவர்கள் என்னை மன்னிப்பீர்களாக! என்ன தான் விடுதலை குறித்துப் பேசினாலும் அடிப்படை வேறுபாட்டையும் அதனதன் தனித்துவமான இயல்புகலையும் நாம் மறந்துவிடலாகாது. பெண் பெண் தான். ஆண் ஆண் தான். பெண் விடுதலை பேசுவோர்கள் இது பற்றி என்னோடு சண்டைக்கு வந்து விடாதீர்கள். உடலளவில் பெண் ஆண் என இரு உருவ வேறு பாடுகளும் அவற்றுக்கான இயல்புகளும் தன்மைகளும் என்றென்றைக்கும் மாற்றவோ அழிக்கவோ முடியாதவை என் அபிப்பிராயம்.

பெண்ணிடம் இயல்பாகவே மென்மையும் உடலளவில் பலமற்ற தன்மையும் ஆனால் மனதளவில் உறுதிப்பாடும் இருக்கிறது. அது போலவே ஆணிடம் உடலளவில் உறுதியும் பலமும் மனதளவில் பெண்ணில் சார்ந்து வாழும் (?! ) தன்மையும் இருக்கிறது என்பது என் எண்ணம்.

சரி, அது இருக்கட்டும்,  இப்போது ரவிவர்மா வரைந்த தமயந்தியைப் பார்ப்போமா?


இதைப் பார்த்த பிறகு சொல்லுங்கள்! மேலைத்தேயப் பெண்ணாக இருந்தாலென்ன, கீழைத்தேயப் பெண்ணாக இருந்தால் என்ன! பெண் மெல்லியலாளாகத் தானே இருக்கிறாள்?

ஒவ்வொருவரும் அவரவர் இயல்போடும் குணத்தோடும் பண்போடும் இருக்கையில் ஒவ்வொன்றும் எத்தனை அழகாக இருக்கிறது இல்லையா...

எதுவும் இயல்போடு இருக்கையில் தான் எழிலோடு விளங்குகிறது!

No comments:

Post a Comment