Saturday, January 14, 2023

சப்பாத்து வாங்கு - shoe bench - அவுஸ்திரேலியப் பாரம்பரியங்களும் பழக்க வழக்கங்களும் - 6 -

 ஒரு நாட்டின் சீதோஷண நிலைமைகளுக்கும், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை முறைகளுக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதை நீங்கள் அறிவீர்கள். அது அவர்களின் பொருள் பண்பாட்டிலும் பெருத்த ஆதிக்கத்தைச் செலுத்தும்.

நாம் எப்படி பருத்தி ஆடைகளுக்கு பழக்கப்பட்டிருக்கிறோமோ அப்படி மேலைத்தேயத்தவர் கம்பளி ஆடைகளுக்குப் பழக்கப் பட்டிருக்கிறார்கள். நாம் எப்படி செருப்புகளை அணிகிறோமோ அப்படி அவர்கள் சப்பாத்துகளை அணிகிறார்கள். கனத்த மேல் அங்கிகள், கழுத்துப் பட்டிகள் என நீழும் அவர்களின் ஆடை அணிகள் எல்லாம் அவர்களின் சீதோஷண நிலைமையின் பாற்பட்டது தானே! 

வீடுகள் கூட உயர்ந்த கூரைகளையும் சிறிய ஜன்னல்களையும் கொண்டமைவதும் அந்த ஜன்னல்கள் கூட திரைச் சேலைகளைக் கொண்டமைவதும் குளிரினால் வரும் தாக்கத்தைத் தாக்குப் பிடிக்கத் தானே! சீதோஷண நிலையைக் கருத்தில் கொண்டு தானே!

கழிப்பறைகளில் அவர்கள் மென்மையான கடதாசிகளை பயன்படுத்துகிறார்கள் என்றும்; நாம் தண்ணீரைப் பயன்படுத்துகிறோம் என்றும்; அவர்கள் உணவுண்ணும் போது கரண்டி, கத்திகளைப் பயன் படுத்துகிறார்கள் என்றும்; நாம் நம் கைகளைப் பயன் படுத்துகிறோம் என்றெல்லாம் கூட விமர்சனங்கள் வருவதுண்டு.  அவ்வப்போது நாம் அவர்களைப் பார்த்து நகையாடுவதுமுண்டு. 

நினைத்துப் பார்த்தால் அவை எல்லாம் அவ் அவ் நாட்டு சீதோஷண நிலைகளால் தான் என்பது விளங்கும். குளிரால் உறையும் நாட்டில் ஜில் என்றிருக்கும் தண்ணீரை அவர்கள் அடிக்கடி எவ்வாறு பாவித்தல் கூடும்? 

இது தெரியாமல் நாமும் அவர்களையும் அவர்களின் பழக்கவழக்கங்களையும் நம் நாட்டில் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதும்; அதை பெருமையாக நினைப்பதும் சில பல வேளைகளில் பொருத்தமற்ற கேலிப்பொருளாக ஆகி விடுவதையும் அவ்வப்போது காண்கிறோம். 

சரி அதை விடுவோம்.

இன்று நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள இருப்பது shoe bench என்றழைக்கப்படும் சப்பாத்து வாங்கு என்ற பொருள். அதாவது தளபாடம் ஒன்று  பற்றியதாகும்.

இப்பொருள் வீட்டின் உள்பக்கம் பிரதான கதவுக்கு அருகாக உள்நடைபாதையில் அல்லது வரவேற்பறை முகப்பில் அநேகமாகக் காணப்படும். 

குளிர் பருவகாலத்தின் போது வெளியே போய் விட்டு வருபவர்கள் அல்லது வீட்டிலிருந்து வெளியே போகிறவர்கள் கண்ணாடியைப் பார்த்துத் தம்மைச் சரிசெய்து கொள்ளவும்; தம் சப்பாத்துகளை; தொப்பியை; குடையை; கைத்தடியை; கனமான தம் மேலங்கிகளைக் போட்டுக் கொள்ளவும் அல்லது களற்றி வைக்கவும்; ஆறுதலாக உட்கார்ந்து தம்மை ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும் வீட்டினுள்ளே ஈரம் போகாதிருக்கவும்; வெளியேயோ உள்ளேயோ போகிறவர்கள் வசதியாகப் பிரதான வாசல் முகப்பிலேயே இவற்றை அணிந்தும் களற்றியும் வைத்துச் செல்லும் வசதிக்காகவும் இந்த மாதிரியான தளபாடம் ஒன்று அநேகமானவர்களின் வீட்டில் இருக்கும்.

(பாடசாலைகளிலும் கூட தம் புத்தகப்பைகளையும் தம் குளிர் மேலாடைகளையும் களற்றி வைக்க தனியான இடம் உண்டு. கொழுவிகளோடு அவரவர் பெயர் போட்ட மரச் சட்டங்கள் போட்டுப் பிரிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் மாணவர்கள் அவற்றை வைத்து விட்டுத் தான் வகுப்பறைக்குள் நுழைவார்கள்)

அவுஸ்திரேலியாவில் சிட்னி மாநகரம் அத்தனை குளிராக இல்லாத காரணத்தால் அதன் நீள அகலங்கள் மற்றும் அதன் அழகியலும் தாற்பரியங்களும் சுருங்கி புதுவடிவம் எடுத்து விட்டது. 

அது shoe bench என்றளவில் புதிய வடிவம் எடுத்து கச்சிதமாக சப்பாத்துகளை போட்டு வைக்கவும் அதன் மேல் இருந்து சப்பாத்தைப் போடவும் வசதியான வகையில் சுருங்கி விட்டது.

 அதனைத் தான் படத்தில் காண்கிறீர்கள்.
                    ( படப்பிடிப்பு: யசோதா.பத்மநாதன். 05.01.2023 )

இவர்களின் மூலவர்களைப் பார்க்க வேண்டுமானால் நாம் பிரித்தானியாவுக்குப் போக வேண்டும். பிரித்தானிய பாரம்பரிய பின்னணியைக் கொண்ட மக்கள் இங்கு குடிவந்த போது எடுத்து வந்த இத்தகைய பாரம்பரியங்கள் இங்குள்ள சீதோஷண நிலைக்கேற்ப புது வடிவம் எடுத்த நிலைமையைத் தான் மேலே உள்ள படங்களில் காண்கிறீர்கள்.

இதன் மூலத்தை;  ’மூதாதை தளபாடத்தை’ இந்த shoe bench இனுடய அம்மா, அப்பாவைப் பார்க்க வேண்டுமானால் கொஞ்சம் பின் நோக்கிப் போக வேண்டும். 

உங்களுக்காக தேடுபொறியில் தேடிய போது சில படங்கள் அகப்பட்டன. அவற்றையும் ஒரு பார்வைக்காக இங்கு உங்களோடு அவற்றையும் நன்றியோடு பகிர்ந்து கொள்கிறேன்


குடை கொழுவவும், கைத்தடியை வைக்கவும், தொப்பி, கோட் போன்றவற்றைக் கொழுவவும், கண்ணாடியில் முகம் பார்த்து தம்மை ஆசுவாசப்படுத்தி விட்டு அமர்ந்து, தம் கனமான சப்பாத்துக்களைக் களற்றவும் போடவும் தோதாக அமைந்த இத்தகைய தளபாடங்கள் அம் மக்களின் காலநிலைக்கும்; சிதோஷண சுவாத்தியங்கள் தரும் உபாதைகளுக்கு பரிகாரமாகவும் அதே நேரம் கலை நுணுக்க வேலைப்பாடுகளோடும் அமைந்திருப்பது அம் மக்களின்அழகியல் சார்ந்த பொருள் பண்பாட்டின் ஓரம்சம் என்றால் மிகை இல்லைத் தானே!

படங்கள்: நன்றி: இணையம்

No comments:

Post a Comment