வணக்கம் நண்பர்களே!
எல்லோரும் எப்படி இருக்கிறீர்கள்? நானும் சில பல சுகங்கள் மற்றும் சுகவீனங்கள், வீட்டு வேலைகள், திருத்தவேலைகள் என்பவற்றோடும் அன்றாட அலுவல்களோடும் நலமே இருக்கிறேன்.
நீங்களும் எல்லோரும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
முன்னரைப் போல இங்கு இப்போது அதிகம் வருவதில்லை. இன்று பல மாதங்களுக்குப் பிறகு இங்கு வரும் போது பிறந்த வீட்டுக்கு வருவதைப் போல ஒரு மகிழ்ச்சி.
ஒரு காலத்தில் இந்தப் பக்கம் தான் எனக்கு தாய் மடியைப் போல இருந்தது. முகம் தெரியாத எத்தனை உறவுகளைச் சந்தித்தோம்! எழுத்தின் வழி ஒருவரை ஒருவர் உணர்ந்து கொண்டோம். இப்போது அவர்கள் எல்லாம் என்னவாகி இருப்பார்கள் ?
வித விதமான சமூக வலைத்தளங்களின் அறிமுகங்கள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு பக்கமாக நகர்த்தி விட்டிருக்கக் கூடும்.
என்னைப் போலவே!
இப்போது நான் அதிகம் You tube வீடியோக்கள் அதிகம் பார்க்கிறேன். அதில் சொல்லப்படும் சில பரீட்சார்த்த முயற்சிகளை நானும் பரிசோதித்துப் பார்க்கிறேன்.அதிலேயே அதிகளவு நேரத்தைச் செலவிடுகிறேன்.
அதில் அண்மைக்காலமாக என்னை ஆட்கொண்ட விடயம் Collage Art என்று சொல்லப் படுகிற விடயம். எக்கச்சக்கமான செய்முறைகளோடு கூடிய வீடியோக்கள் யூரியூப்பில் காணக்கிடைக்கின்றன.
அது ஒருவகை கலை வடிவம் என்று சொல்லப்படுகிறது. செலவு அதிகம் தேவைப்படாது. பழைய சஞ்சிகைகள், கலண்டர் படங்கள், விற்பனை நிலையங்களில் கிடைக்கும் இலவச விளம்பரங்கள்.... போன்ற இவைகள் தான் மூலதனம்.
நான் மேலதிகமாக Winnie என்று சொல்லப்படும் - உபயோகித்த பொருட்களை விற்கும் - தொண்டு நிறுவனக் கடைக்குப் போய் பழைய புத்தகங்கள், சஞ்சிகைகள், படங்களோடு இருக்கும் புத்தகங்கள், பத்திரிகைகள் ஆகியவற்றையும் வாங்கி வருகிறேன்.
அவை பொதுவாக 2 டொலர்கள், 3 டொலர்களுக்குள் வரும்.
இப்படிப் போகிற போது மிக அரிய அருமையான புத்தகங்களைக் கூட கண்டெடுத்து கொண்டுவந்து காட்சிப் பொருளாகவும் பொக்கிஷமாகவும் கூட பேணி வருகிறேன்.
அது குறித்து வேறொரு சந்தர்ப்பத்தில் அவசியம் பேச வேண்டும்.
அது நிற்க.
இவ்வாறான படங்களைக் கொண்டு உங்கள் கற்பனைக்கு ஏற்ற விதமாக நீங்கள் ஒரு உருவத்தைக் கற்பனை செய்து புதிய வடிவத்தை உருவாக்குவது தான் இதன் அடிப்படை.
மிக ஆரம்பத்தில்செய்த சில உருவங்களை இன்று உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இவை ஒரு பாலர் பள்ளிப் பிள்ளை ஒன்றின் சித்திரங்களைப் போன்றது.
பொதுவாக மிகக் குறைந்தது மூன்று வேறுபட்ட வடிவங்களை ஒன்றாக்கி புதிய கற்பனை வடிவங்களை உருவாக்க வேண்டும். நான் அதிக பட்சம் இரண்டு வடிவங்களைத் தான் ஒன்றாக்கி இருக்கிறேன்.
நீங்களும் ஒரு தடவை இந்த வேடிக்கையான வேலையைச் செய்து தான் பாருங்களேன்.
இது ஒரு புதிய அனுபவமாக எனக்கு இருந்தது.
மீண்டும் சந்திப்போம்.










































