Saturday, September 6, 2025

ஆண்டவனின் தோட்டத்திலே..... - 1 -

 நேற்றைக்கு அதிகாலை மழையில் குளித்து முகிலில் முகம்துடைத்து வெளிவந்த சூரியன் பார்க்க மிக அழகாயிருந்தான். வசந்தகாலத்தின் ஆரம்பம் குருவிகளின் ஆரவார ஒலியில் வெளிப்பட்டது. துளிர்க்கும் துளிர்களில் வசந்தம் தென்பட்டது.

சரி பாதை ஓரமாக ஒரு நடைப் பயிற்சிக்குச் சென்றால் இந்த ஆரவார ஒலிகளோடும் பூத்திருக்கும் பூக்களின் புன்னகைகளோடும் கொஞ்சம் சல்லாபிக்கலாமே என்று விட்டு புறப்பட்ட போது நேற்றைய இரவு தற்போது செய்து கொண்டிருக்கும் Art journal ல் பற்றாக்குறையாக எப்போதும் இருக்கும் Focal point படங்கள் பற்றிய ஞாபகம் வந்தது. ஒருவாறாக நான் செய்துவரும் Art Journal ன் கடைசிப் பக்கம் இது; கடைசி படம் இது.

ஏற்கனவே TEMU வில் டிஜிட்டல் ஒளியில் தென்படும் வண்ணங்களில் கவரப்பட்டு சிலவற்றை வாங்கி அதன் அளவுகளினால் மிகுந்த ஏமாற்றம் அடைந்திருந்தேன். இந்த ஏமாற்றங்கள் குறித்த என் புலம்பலைக் கேட்டு என் வேலை நண்பர்கள் தம்மிடம் இருக்கும் சில பல படங்கள், ஸ்டிக்கர்களை எனக்கு அவ்வப்போது மனமுவந்து தந்துதவுவார்கள். அப்படிக் கிடைத்த ஒரு தேன் சிட்டு ஸ்டிக்கர் பார்க்க மிக அழகாயிருந்தது. எனது ஜேர்னலின் கடைசித் தாளை நிரப்ப, இந்தத் தேன் சிட்டும் அதற்கு ஒரு பூ படமும் இருந்தால் நன்றாக இருக்கும் என்பது எனது எண்ணம்.

சரி நடைக்கு நடையுமாயிற்று; வேலைக்கு வேலையுமாயிற்று என்று எண்ணி நடையை பழம்பொருள்கள் விற்கும் கடைவரை என்று மாற்றிக் கொண்டேன். அது சுமார் 15 - 20 நிமிடங்கள் நடை தூரம் தான். 

இந்தக் கடை பற்றி நான் கட்டாயமாகச் சொல்லியாக வேண்டும். அவுஸ்திரேலியாவில் இரண்டு விடயங்கள் என்னை எப்போதும் வியப்பில் ஆழ்த்துவன.

1. மக்களிடம் இருக்கும் நேரத்தைத் தானமாகக் கொடுக்கும் பண்பு. - Volunteering

2. இப்படியான பழம்பொருட்கள் விற்கும் கடைகள்.- Odd shops

அவுஸ்திரேலிய மக்கள் தம் தேசத்தை மிகுந்த அக்கறையோடு கவனித்துக் கொள்கிறார்கள். பாதையோரம் குப்பைகள் இருந்தால் அது யார் போட்டதாக இருந்தாலும் சரி; அதை எடுத்து குப்பைத் தொட்டிக்குள் கொண்டு சென்று போட்டு விடுகிறார்கள். வருடத்தில் ஒருநாள் எல்லோருமாகச் சேர்ந்து நாட்டை சுத்தம் செய்கிறார்கள். வேலையிலிருந்து ஓய்வு பெற்றவர்கள்; மற்றும் சில வேலைக்குப் போக வேண்டிய தேவை இல்லாத ஆரோக்கியமான மற்றவர்கள்; வலது குறைந்த மாற்றுத் திறனாளிகள் என இருப்பவர்கள் தம் நேரத்தையும் தம்மிடம் இருக்கும் அனுபவம் மற்றும் திறமையையும் தேவையான இடங்களுக்கு இலவசமாகத் தானம் செய்கிறார்கள்.

இந்த நேர தானமும் அனுபவம் மற்றும் திறமைகளின் தானமும் அவுஸ்திரேலிய பொருளாதாரத்திலேயே மிகுந்த தாக்கத்தை விளைவிக்கிறது. 2000 ஆம் ஆண்டு சிட்னியில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளின் போது கலந்து கொண்டிருந்த 1000 கணக்கான தொண்டர்களின் சேவை இன்னும் என்மனதில் ஆழப் பதிந்து போயிருக்கிறது.

அதுபோல மற்றயது இந்தப் பழம்பொருட்கள் விற்கும் கடைகள். கீதோபதேசத்தில் ஒரு வரி வரும்..... இன்று உன்னுடயதாயிருப்பது நாளை வேறொருவருடயதாகிறது...நீ எதனைக் கொண்டுவந்தாய் அதனை நீ இழப்பதற்கு;எதனை நீ படைத்திருந்தாய் அது வீணாவதற்கு? எதை நீ எடுத்துக் கொண்டாயோ அது இங்கிருந்தே எடுக்கப் பட்டது. எதை நீ கொடுத்தாயோ அது இங்கேயே கொடுக்கப்பட்டது. எது இன்று உன்னுடயதாக இருக்கிறதோ அது நாளை வெறொருவருடயதாகிறது....என்றவாறாக அது செல்லும்.

இந்தக் கடைகள் அதனை நிரூபிப்பனவாக இருக்கின்றன. தமக்குத் தேவை இல்லாத; ஆனால், உபயோகமான பொருட்களை மக்கள் இலவசமாகக் கொண்டுவந்து இந்தக் கடைகளில் ஒப்படைக்கிறார்கள். தொண்டர்களினால் பெரும்பாலான நேரங்களில் இயக்கப் படும் இந்தக் கடைகள் அவற்றின் தரம் மற்றும் பயன்பாட்டுத் திறனுக்கேற்ப ஒரு சிறு பெறுமதியினை அதற்குக் கொடுத்து அதனை விற்பனை செய்கிறார்கள். இரண்டு டொலர்கள் முதல் இருபது டொலர்கள் வரை பொருட்களின் விலை இருக்கும். 

தரமான தளபாடங்கள், சமையலறை உபகரணங்கள், சப்பாத்துகள், கைப்பைகள், அலங்காரப் பொருட்கள், உடுபுடவைகள், குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்கள், புத்தகங்கள், கலைப்பொருட்கள் கைவினைப் பொருட்கள், எழுது பொருட்கள், மின்சார உபகரனங்கள், அல்பங்கள், சுவர் சித்திரங்கள், படங்கள், பிறேம்கள்,......என்று பலவாறான பொருட்களை இங்கு காட்சிப்படுத்தி இருப்பார்கள். இதனால் பெறப்படும் வருமானம் அனைத்தும் ஏழை மக்களின் வாழ்வுயர பயன்படுகிறது.

நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ இந்தக் கடைகள் பொக்கிஷ பெட்டகங்கள்! மிகப் பெறுமதியான பொருட்களை நீங்கள் மிகச் சொற்ப விலைகளில் இங்கு வாங்கிக் கொள்லலாம் என்பதனால் மாத்திரமல்ல: பொது சந்தையில் இனி கிடைக்கவே கிடைக்காது என்று இருக்கும் பழங்காலத்துக் காத்திரமான அபூர்வமான பொருட்கள் எல்லாம் இங்கு சொற்பவிலையில் கிடைக்கும். எப்போதும் எல்லாம் கிடைக்கும் என்று சொல்வதற்கில்லை. அடிக்கடி இங்கு ஒரு விசிட் போக வேண்டும். அவ்வப்போது எதிர்பாராத தருணங்களும் எதிர்பாரத அதிஷ்டங்களும் இங்கு கிடைக்கும்.

இதன் வழியாக பொருகள் வீணாக்கப்படுவது தடுக்கப்பட்டு  மீள்சுளற்சிக்கு உட்படுகின்றன; தொண்டர்களினால் இயக்கப்படும் இக்கடைகளினால் மேலதிகமான செலவுகள் மிச்சப்படுத்தப் படுகிறது. தொண்டர்களின் நேரம் பயனுள்ள வகையில் உபயோகப்படுத்தப் படுகிறது. இதனால் பெறப்படும் வருமானம் உரியோரைச் சென்றடைகிறது. பொருள்களை நுகர்வோருக்கும் போதுமான மகிழ்ச்சியும் திருப்தியும் கிட்டுகிறது. இதனால் யாருக்கும் எந்த நட்டமும் ஏற்படுவதில்லை! ஓர் இலகுவான எளிமையான மீள் சுளர்ச்சி ஒன்று மெளனமாக; ஒரு நதியின் நீரோட்டம் போல மெல்லமாக புனிதமாக மெளனமாக நடந்து கடலைச் சென்று சேர்கிறது.

இவை எல்லாம் மக்களின் பொறுப்புணர்வில் இருந்து ஆரம்பிக்கிறது!

இந்தக் கடை என் வீட்டிலிருந்து ஒரு நடைதூரத்தில் அமைந்திருப்பது எனக்குக் கிடைத்த ஓரு தெய்வாதீனம்!

என்னவோ சொல்ல வெளிக்கிட்டு எங்கெங்கோ சுற்றி இப்போது தான் நான் சொல்ல வந்த இடத்தை வந்தடைந்திருக்கிறேன்.

இதனை வாசிக்கும் மக்கள் என்னை இதன் பொருட்டு மன்னிப்பார்களாக!

 நீங்கள் எப்போதாவது நீங்கள் நினைக்கின்ற ஒன்று இலகுவாக உங்களை தானாக  வந்தடைவதை உணர்ந்திருக்கிறீர்களா? ‘எண்ணம் போல் வாழ்வு’ என்று சொல்லப்படும் கருதுகோள்களில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா?

எனக்கு இப்போது தான் இவற்றின் மீதான - பிரபஞ்ச சக்தியின் மீதான வியப்பும் ஆர்வமும், மகிழ்ச்சியும், பூரிப்பும் புரிந்துனர்வும் ஏற்பட ஆரம்பித்திருக்கிறது.

ஞானம் பிறக்கிறது!

அவன் அருளாலே அவன் தாளை அறிய முடிகிறது!

முன்னர் சொன்னது போல கேட்பது கிடைக்கிறது! நினைப்பது நடக்கிறது!!

ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்கிறது.....

( ஒரு பதிவாக இதனை எழுதலாம் என்று தான் புறப்படேன். முடியவில்லை. நீங்களும் களைத்துப் போயிருப்பீர்கள். நம்புங்கள்; இதன் தொடர்ச்சியை நான் இயன்றளவு விரைவில் பதிவு செய்கிறேன்.) 

தொடரும்...

1 comment:

  1. நல்ல தொடக்கம். நமக்குத் தேவையில்லை என்று முடிவு செய்த பொருட்களை பிறருக்குப் பயன்படும் என்ற எண்ணத்துடன் அளிப்பது மிகவும் சிறந்த விஷயம். அதற்காகவே சில கடைகளும் அங்கே செயலாற்றும் தன்னார்வ தொண்டு செய்யும் நபர்களும் பாராட்டப்பட வேண்டிய விஷயங்கள்.

    தொடரட்டும் உங்கள் பதிவுகள்.

    ReplyDelete