சென்ற பதிவில் பழம்பொருட்கள் விற்கும் கடைக்கு ஒரு நடைப்பயிற்சியை மேற்கொண்டிருந்தேன் என்று சொன்னேன் இல்லையா...?
இப்போது இங்கு வசந்தகால ஆரம்பம். செப்ரெம்பர் முதலாம் திகதியிலிருந்து நவம்பர் முப்பதாம் திகதிவரை மிக நல்ல ரம்மியமான சூழல் நிலவும். அளவான சூட்டில் சூரியன்; மென்மையாக வீசும் குளிர் தென்றல், கண்ணுக்கு இதமான காட்சிகள், இலைகள், துளிர்கள், பூக்கள், மொட்டுக்கள் என அவை விரியும். காதுக்குக் கேட்கும் பறவைகளின் / குருவிகளின் / வண்டுகளின் ரீங்காரங்கள், தேனெடுக்கத் திரியும் தேனீக்கள், பூமியில் இருந்து முளைத்து உயர்ந்து நிற்கும் மரங்களில் குடியிருக்கும் இனங்களுக்கு இது இனப்பெருக்க காலம். அதனால் குஞ்சுகளின் கீச் கீச் ஒலிகளும் அவ்வப்போது கேட்கும்.
நடக்கவும் பார்க்கவும் நல்ல இதம்.
என் வீட்டு வீதியோரம் நடைப்பயிற்சியில் ஈடுபடும் பலரை நான் அன்றாடம் காண்கிறேன். தலைக்குக் Head phone ஐ மாட்டிக்கொண்டு ரோபோக்கள் போல யாரோடோ பேசிக்கொண்டு அல்லது போனைப் பார்த்துக் கொண்டு நடக்கிறார்கள்.......
கொஞ்சம் இந்த சாதனங்களில் இருந்து தள்ளி இருந்து தான் பாருங்களேன். சுற்றி இருக்கும் இந்தச் சுற்றாடலைத் தான் கொஞ்சம் ரசியுங்களேன் என்று சொல்லத் தோன்றும். நடக்கும் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போதாவது இந்த நல்ல காற்றை; பூக்களை; சுற்றாடலைக்; சுற்றிவர நடக்கும் மனிதர்களை; கொஞ்சம் பாத்தால் தான் என்ன? சற்றே சிரித்தால் தான் என்ன? ஏன் எல்லோரும் ஒருவித மாய உலகில் சஞ்சரித்தபடி திரிகிறார்கள் என்று தோன்றுகிறது...
செல்லும் வழியெங்கும் பூக்களின் நிலப்பாவாடை...இந்தப் பூமி நமக்காக எத்தனை அழகோடு மலர்ந்திருக்கிறது! ஐம்புலன்களுக்கும் எத்தனை பெரிய விருந்தைப் படைத்து வைத்து விட்டுக் காத்திருக்கிறது....
அவற்றை நாமாவது கொஞ்சம் பார்ப்போமா?
செல்லும் வழியெங்கெங்கும் பள்ளம் வரலாம்
உள்ளம் எதிர்பாராமல் வெள்ளம் வரலாம்
நேர்மை அது மாறாமல் தர்மம் அதை மீறாமல்
நாளும் நடை போடுங்கள் ஞானம் பெறலாம்
சத்தியத்தை நீங்கள் காத்திருந்தால்
சத்தியம் உங்களைக் காத்துநிற்கும்
No comments:
Post a Comment