சென்ற பதிவில் பழம்பொருட்கள் விற்கும் கடைக்கு ஒரு நடைப்பயிற்சியை மேற்கொண்டிருந்தேன் என்று சொன்னேன் இல்லையா?
அப்பாடா, ஒருபடியாக, இறுதியாக இப்போது இங்கு வந்து சேர்ந்து விட்டேன். :)
இந்தக் கடையில் வாங்கும் பொருட்களினால் எவ்வாறாக நாம் இந்தத் தேசத்திற்குப் பங்களிப்புச் செய்கிறோம் என்பதை ஆங்காங்கே மாட்டி வைக்கப் பட்டிருக்கின்ற இந்த கீழ்கண்ட பிரசுரங்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றன.
( பத்து டொலர்களுக்குப் பொருளொன்றை வாங்குவதன் மூலம் நீங்கள் வீடற்ற ஒருவருக்கு ஒரு நேர உணவுக்கு உதவுகிறீர்கள். )
( இருபது டொலர்களுக்குப் பொருளொன்றை வாங்குவதன் மூலம் ஒரு குடும்பத்தின் ஒரு நேர உணவுக்கு உதவுகிறீர்கள்)
(முப்பது டொலர்களுக்குப் பொருளொன்றை வாங்குவதன் மூலம் ஒருவர் ஓரிரவு உறங்குவதற்கு ஒரு பாதுகாப்பான இடத்தை ஏற்படுத்திக் கொடுக்க உதவுகிறீர்கள். அதற்கு நன்றி. Your purchase has a purpose)
பார்த்தீர்களா? நாம் மலிவு விலையில் பல அரிய பொருட்களை வாங்குகிறோம் என்பதையும் தாண்டி அது மற்றவர்களுக்கும் இந்தப் பூமிக்கும் எவ்வளவு நன்மையை விளைவிக்கிறது பாருங்கள்.
சரி அது இருக்கட்டும், நான் வந்த வேலையையும் சொல்லவந்ததையும் முதலில் சொல்லி விடுகிறேன்.
பொதுவாக இந்தக் கடைக்கு நான் வந்தால் முதலில் என் கண்ணோட்டம் போவது தளபாடங்கள், பின்னர் கைவினைப் பொருட்கள் ( காகிதங்களோடு தொடர்பு பட்டவை ) பின்னர் புத்தகங்கள்.
இங்கு இருக்கும் புத்தகங்களைப் பற்றி அவசியம் சொல்லியாக வேண்டும். இந்த நாடு கடந்த 100 க்கு மேலான ஆண்டுகளில் எப்படியான வாழ்க்கையை வாழ்ந்திருந்தது; அதன் அழகுகள், வரலாறு, விளையாட்டு, கைவினைப் பணிகள், மருத்துவம், கவிதை, இலக்கியம், சிறுவர் வாழ்வு, தோட்டக்கலை, சமையல், தளபாடவகைகள், உலக வரலாறு, பெரியார்கள், கல்வி, பற்றிய பல்வேறு கிடைக்கற்கரிய புத்தகங்கள், மாதாந்த சஞ்சிகைகள், தையல் கலை, மனையியல் கலைகள், பின்னல் கலை குறித்த பல்வேறு புத்தகங்கள் இங்கு 2,3, டொலர்களுக்கும் 4,5 டொலர்களுக்கும் விற்பனைக்கு இருக்கும். குறிப்பாக விக்ரோரிய மகராணி காலத்தைய புத்தகங்களும் அவற்றில் காணப்படும் வண்ணப் படங்களும் புத்தகங்களின் பரிமானங்களும் பேப்பரின் தரமும், அச்சு பதிப்பும், புத்தகக் கட்டும், அதன் உறுதிப்பாடும் நெஞ்சத்தைக் கொள்ளை கொள்ளும்.
என்னுடய கைப்பணிகளுக்காகவும் வரலாறில் எனக்கிருக்கும் ஆர்வத்தின் காரணமாகவும் வாங்கி வைத்திருக்கிற புத்தகங்கள் ஏராளம். ஆனாலும் அவற்றைத் தேவைக்குத் தானும் வெட்டவோ கிழிக்கவோ மனசு வராது. அதன் தரமும் உள்ளடக்கமும் அத்தனை சிறப்பாக இருக்கிறது.
ஒரு புத்தகத்தின் உயிரினை அதன் ஆத்மாவினை கிழித்து பாவித்து விட்டால் அதனை எங்ஙனம் மீண்டும் காண்போம்? டிஜிட்டல் உலகுக்கு நாம் புலம் பெயர்ந்து பல ஆண்டுகளை நாம் கடந்து விட்டாலும் கையில் விரித்து வைத்திருக்கும் ஒரு பழம் பெரும் புத்தகத்தின் வாசமும் அவற்றில் இருக்கும் வாசகங்களும் எங்களோடு இன்னமும் ஏதோ ஒன்றைப் பேசிக்கொண்டு தானே இருக்கிறது.... ஒரு செய்தியினை சொல்லிக் கொண்டு தானே இருக்கிறது. அதன் குரலை எவ்வாறு மறுதலிப்பது? அதன் குரல்வளையை எவ்வாறு நசிப்பது?
அரிய; அதிலும் குறிப்பாக விக்ரோரிய ராணியின் சகாப்தத்தில் இருந்த வாழ்வு முறை, நடை உடை பாவனைகள், பவித்த பொருட்கள், பிள்ளைகளின் விளையாட்டுகள், குழந்தைப் பாடல்கள், எல்லாவற்றிற்கும் மேலாக அவற்றில் காணப்படும் வண்ணப் படங்கள்.....அவற்றின் வடிவழகை; பேப்பரின் தரத்தை; பைண்டிங்கின் கச்சிதத்தை சிதைப்பதென்பதெங்ஙனம்?
இதனாலேயே இவற்றைப் பத்திரமாக வைத்திருக்கிறேன். ஒரு வைக்கோல் பட்டைடை நாயின் கணக்காக!
இருந்த போதும் எல்லாவற்றையும் வாங்கிவிடும் அவாவோ குறைந்த பாடில்லை. எப்போது அங்கு போனாலும் புத்தகங்களைப் பார்க்கலாம் என்பதே எனது மனதுக்கு மகிழ்ச்சியான விடயமாக இருக்கும். மிக ருசியான உணவினை வைத்திருந்து இறுதியாகச் சாப்பிடுவது போல மிக இறுதியாகத் தான் புத்தகப் பக்கத்திற்குப் போவேன்.
இன்றைக்கு பூக்களைக் கொண்ட புத்தகம் ஒன்றை வாங்குவது எனது நோக்கமாக இருந்த படியால் முதலில் புத்தகம் இருக்கும் பக்கத்திற்குப் போனேன்.
எனது கண்ணுக்கு முதலில் தென்பட்ட புத்தகம் ஒன்றைப் பற்றி இனி நான் சொல்லப் போகிறேன். சொல்வதற்கு முன்னால் இந்தப் புத்தகத்தைப் பற்றி ஒரு குறிப்பொன்றைச் சொல்ல வேண்டும்.
இந்தப் புத்தகம் பதிப்புரிமை உடையது. எந்த ஒரு வடிவிலும் உரியவர்களின் அனுமதியின்றி பிரசுரிக்கப்படலாகாது என்று அதில் குறிப்பிடப் பட்டிருக்கிறது.
இருந்த போதும் இதனை நான் வியாபார நிமித்தமோ இலாப நோக்கிலோ இதனைப் பிரசுரிக்காது இந்தப் புத்தகம் பற்றிய அறிமுகத்திற்காக இதன் மிகச் சிறியளவிலான படங்களை இங்கு பதிவேற்றுவதனால் அவர்கள் என்னை பொறுத்தருள்வார்கள் என்று நம்புகிறேன்.
புத்தகம் நியூசிலாந்து நாட்டில் 2016ம் ஆண்டு பிரசுரமாகி இருக்கிறது. முழுக்க முழுக்க நீர்வர்ணத்தினால் அமைந்த பூக்களின் படங்களைக் கொண்டமைந்திருக்கின்ற இந்தப் புத்தகத்தின் தலைப்பு Reflections in a monastery garden. ( மடாலயத் தோட்டத்தின் பிரதிபலிப்பு) இதனை அருட்சகோதரி Teresa. Kelleher ocd என்பார் உருவாக்கி வெளியிட்டிருக்கிறார். மொத்தமாக 63 பக்கங்கள். ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொருவகையான பூக்களின் படங்கள்.தரமான அட்டை வடிவமைப்பும் கூட.
இந்தப் புத்தகத்தின் முன்னுரையில் இந்த அருட்சகோதரி தான் சிறு பெண்ணாக தன் தாய் தந்தையரோடு இருந்த போது ஒரு கோடை விடுமுறைகளின் போது முதன் முதலாக ஒரு நீல மலரை பறித்தெடுத்துக் கொண்டு புல்வெளியில் படுத்திருந்தபடி இந்தப் பூவின் அழகின் சிருஷ்டியை அதிசயித்ததையும்; இந்த நீல ஆகாயத்தையும், மென்மையான பச்சைப் புல்வெளியையும் மென்மையான இறைவனின் எதிரொலியாகத் தான் கண்டுகொண்டதையும் நினைவுகூர்கிறார்.
மேலும், ஞாயிற்றுக் கிழமை மாலை நேரங்களில் தாயாரோடும் தன் சகோதரியோடும் தாவரவியல் பூங்காவுக்கு வழக்கமாக நடை உலா போவது பற்றியும்; அங்கு பழங்காலத்து நேரமறியும் நேரமானி ஒன்று இருந்தது பற்றியும்; அங்கு, பூக்களின் மத்தியில் பாராயணம் செய்யத்தக்க வாசகம் பொறிக்கப்பட்ட கல் ஒன்று இருந்ததையும் குறிப்பிடுகிறார். அதில்,
‘ The kiss of the sun for pardon,
The song of the birds for mirth,
One is nearer God's heart in a garden,
Then anywhere else on earth'
( From 'God's garden By Dorothy. Frances Gurney, 1913)
இதனை வெண்பா வடிவில் Char GPT இப்படித் தருகிறது.
‘மன்னிக்கும் சூரியனின் முத்தமழை
மகிழும் பறவைகளின் பாடலிசை
தன்னிலே நண்ணரு மாலடியை
தோட்டம் தவமே தரும்’
என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்ததென்றும் குறிப்பிட்டு, சில வருடங்களின் பின் குருத்துவம் பெற கார்மல் என்ற குருத்துவப் பாதையில் சென்று சேர்ந்து கொண்டமையையும் அங்கு பைபிளின் பழைய ஏற்பாடு படித்த போது கார்மல் என்பதற்கு ‘அழகின் இருப்பிடம்’ என்று பொருள் என்று தான் அறிந்து கொண்டமையையும் குறிப்பிடுகிறார்.
இறைவனின் படைப்பில் அழகின் சாயலை தன் வாழ்வில் எங்ஙனும் காண்பதை நினைவு கூரும் அவர், தன் குருத்துவ வாழ்வில் தன் தேவாலயத்துத் தோட்டத்தை இறைவனின் சிருஷ்டியின் ஓரழகாகப் - பேரெழிலாகக் காண்கிறார். நெடுத்துயர்ந்த மரங்கள், பூப்பூக்கும் செடிகள், செழித்து நிற்கும் சிவப்பு ஓர்க் மரம், லிக்குடைம்பர் ( liquid-amber )என்று சொல்லப்படும் ஒருவித Gum Tree, golden elm என்று சொல்லப்படுகின்ற தங்க நிற இலுப்பை மரம், இவைகள் எல்லாம் இணைந்ததாக அவரது தேவாலயத்தின் தோட்டம் அமைந்திருந்திருக்கிறது.
தேவாலயத்தின் சுவர்களுக்கு அப்பால் இருக்கும் மக்களுக்கு இறைவனின் அழகின் சிருஷ்டியை; தன் தேவாலயத் தோட்டத்தில் மலர்ந்திருக்கின்ற தெய்வீகத்தின் தோற்றத்தினை; தன் தூரிகையினால் சுமந்து, இந்த புத்தகத்தின் வழி நம்மோடு பகிர்வதாக அவர் தெரிவிக்கிறார். மேலும் இது அவரது கண்வழி அவர் கண்ட இறைவனின் பேரழகு என்கிறார். ( 2016 - ஈஸ்டர்)
இந்தப் புத்தகத்தைப் பற்றி நான் சொல்வதை விட இந்த வண்ணப் படங்கள் அதன் தாற்பரியத்தை உங்களுக்குச் சொல்லட்டும். என் சொற்களுக்கு இங்கு எந்த விதப் பயனுமில!
இந்தப் புத்தகம் நியூசிலாந்தில் இருந்து எப்படி சிட்னிக்கு வந்து, இந்த பழம்பொருள் விற்கும் கடையை அது எவ்வாறு இறுதியாக வந்தடைந்தது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அதன் முதல் பக்கத்தில் அருள் தந்தை ஜோன் கோல்டிங் சப்ளின் என்பார் 2021ம் ஆண்டு டிசெம்பர் மாதம் அதின்மூன்றாம் திகதி முன் பக்கத்தில் எழுதிய குறிப்பொன்று இவான் என்பவருக்கு இப்புத்தகம் பரிசளிக்கப் பட்டிருப்பதைத் தெரிவிக்கிறது.
அந்த அருள் தந்தை எவ்வளவு அழகாக அதனை எழுதியிருக்கிறார் என்று நீங்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக அந்த முதல் பக்கத்தை அப்படியே படம் எடுத்துப் போடுகிறேன்.
இனி நான் இடையில் நிற்கவில்லை. அந்தப் புத்தகத்தில் இருக்கும் படங்களில் ஒருசிலவற்றை மட்டும் அதன் சுவை கருதி உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். ( அருள்சகோதரியாரே! உங்கள் புத்தகத்தின் விதிமுறைகளை மீறியிருந்தால் என்னை மன்னித்து பொறுத்தருள்க!)
மிக அற்பமான விலைக்கு வைக்கப்பட்டிருந்த; விலைமதிக்க முடியாத ஆத்மாவை: இறைவனின் பேரருளினை; அழகின் பெரும் இரகசியத்தைச் சுமந்திருக்கிற இந்தப் புத்தகத்தை; என் கைப்பணி வேலைகளுக்காக எங்ஙனம் நான் தீண்டுவேன்?
அழகில் கடவுளைக் காணும் இந்த அருட்சகோதரர்களும்; அது எடுத்துக் கூறி நிற்கும் தாற்பரியமும்; இந்த அழகும் விலைமதிக்கமுடியாத பெரும் பேறன்றோ!
ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது
ஆஹாயம் பூமி எங்கும் இளமை சிரிக்குது!!
( Live gently upon Earth )
பழைய பொருட்கள் விற்கும் கடையில் நாம் வாங்கும் பொருட்களுக்கு ஏற்ப, ஏதோ ஒரு சக மனிதன், குடும்பம் பயன்பெறுகிறது என்பதை நினைக்கும்போதே அந்தச் செயலில் இருக்கும் புனிதம் நமக்கு புரிகிறது. வாழ்க நல்லுள்ளம் கொண்ட அந்த நண்பர்கள்.
ReplyDeleteபூக்கள் ஒவ்வொன்றும் அழகு. பழைய புத்தகங்கள் பொக்கிஷங்கள் என்றே எனக்கும் தோன்றும். திருச்சியில் சில கடைகளில் இப்படியான மிகப் பழமையான தமிழ் புத்தகங்கள் கிடைக்கும். அவற்றைத் தேடிச் சென்று வாங்கியதுண்டு. இப்போதெல்லாம் வாசிப்பு எல்லாம் இணைய வழி மட்டுமே என்று ஆகிவிட்டது ஒரு வித வேதனை.