Sunday, April 29, 2012

எங்கே மனம்?

கடந்த வாரம் கடைத் தொகுதி ஒன்றில் காரைக் கழுவக் கொடுத்திருந்தேன்.

அதனைச் செவ்வனே பராமரித்த காலங்கள் எல்லாம் இப்போது மலையேறி விட்டன.கார் வாங்கிய ஆரம்ப காலங்களில் வாரம் ஒருமுறை கழுவி உள்ளும் புறமும் துடைத்து அதை முன்னும் பின்னும் பார்த்து திருப்தியான பின் தான் நகருவது வழக்கம். பின் அது மாதம் ஒன்றாகி இப்போது அவற்றைக் கழுவுவதற்கே நேரமில்லாமல் கடைகளில் கொடுத்து கழுவுகிற காலத்துக்கு வந்தாயிற்று.

என்னே ஒரு காலத்தின் மாற்றம்!

பல நாட்களாய் ஒரு வித குற்ற உணர்வு அதனைப் பார்க்கும் தோறும் வந்து கொண்டே இருந்தது. அதன் முன் சில்லுகள் எல்லாம் தூசிகள் சேர்ந்து கறுப்பேறி விட்டன. இன்று எப்படியேனும் அதற்கொரு வழி பார்க்க வேண்டும் என்று தீர்மானம்.

கார் கழுவுவதற்கென்று பெரும் கடைத் தொகுதிகளில் தனிப்பட்ட இடங்கள் இருக்கின்றன.அவர்களிடம் காரையும் திறப்பையும் ஒப்படைத்து விட்டு நாம் கடைகளுக்குச் சென்று திரும்பி வரும் போது கார் சுத்தமாகக் கழுவித் துடைக்கப் பட்டு வாசனைத் திரவியங்களும் தெளிக்கப் பட்டு அலங்காரமாய் நிற்கும். ஒரு நேரத்தில் இரண்டு வேலைகளையும் முடித்து விடலாம்.( இப்படி வீட்டுச் செல்லப்பிராணிகளுக்கும் இடங்கள் இருக்கின்றன. தொலைபேசியில் அழைப்பெடுத்துச் சொன்னால் அவர்கள் சீருடையோடும் வாகனத்தோடும் வந்து செல்லப் பிராணியைக் கொண்டு சென்று குளிக்க வார்த்து நகம், பல் எல்லாம் கழுவி சடை வெட்டி, றிபன் எல்லாம் கட்டி அழகாகக் கொண்டு வந்து விடுவார்கள்)

என்னுடய கார் ஒரு கொறிய நாட்டு இளைஞனின் கைக்குச் சென்றது. ஒரு மணி நேரத்தின் பின் வருமாறு கூறி திறப்பைப் பெற்றுக் கொண்டான்.26, 27 வயது மதிக்கத் தக்க இளைஞன்.

கொறிய மக்கள் செய் நேர்த்தியில் சிறந்தவர்கள். தொழில் நுட்பத்தில் மென் பொருட்களைக் கையாள்வதில் அவர்களுக்கு நிகர் அவர்களே.

ஒரு மணி நேரத்தின் பின் வந்த போது அந்த இளைஞன் காரை இன்னும் மினுக்கிக் கொண்டிருந்தான்.கார் பளீச்சென்று புதிது போல மின்னிக் கொண்டிருந்தது. ஒரு நிமிடம் பொறு. இதோ இன்னும் கொஞ்ச நேரம் தான். இன்னும் சற்றுத் தாமதிக்க முடியுமா என்று கேட்ட வண்ணம் அதனை இன்னும் இன்னும் மெருகேற்றிக் கொண்டிருந்தான்.

போதும் நண்பனே! நான் போயாக வேண்டும் என்று சொன்னேன்.பணத்தைப் பெற்றுத் திறப்பைத் தந்த பின்னரும் அந்தக் காரை விட்டு அவன் கண்கள் அகலவில்லை. தான் செய்த வேலையில் எங்கேனும் பிழை தென்படுகின்றனவா எனப் பார்த்த வண்ணம் அவன் கண்கள் இருந்தன.

நீ ஏன் உன் காரைச் சரியாகக் கவனித்துக் கொள்கிறாய் இல்லை? இங்கே பார்! இந்த இடங்களில் ஏற்பட்டிருக்கிற தவறுகளுக்கெல்லாம் உன் கவலையீனமே காரணம். தயவு செய்து அதனைச் சிறப்பாகப் பராமரி.....என்று என்னனென்னவோ எல்லாம் சொல்லிக் கொண்டே இருந்தான்.

நீ சொல்வதெல்லாம் சரி தான் நண்பனே! ஆனால் நான் இப்போது அவசரமாகப் போக வேண்டும் என்று சொல்லி விடை பெற்றேன். சற்றுப் பொறு என்று சொல்லி மெல்லியதான கீறல் பட்டிருந்த இடம் ஒன்றுக்கு பொலிஷ் போட்டு மினுக்கி விட்டான். நின்றால் அவன் விடப் போவதில்லை என்று தோன்றியதால் அவசர அவசரமாக வாகனத்திக் கிளப்பிக் கொண்டு வந்தேன்.

அவன் கழுவ வேண்டி இருந்த அடுத்த காருக்குப் போவது தெரிந்தது.

காருக்கு இப்போது ஒரு புது மெருகு. கண்ணாடிகள் இருப்பதே தெரியாத பளீச் சுத்தம்.அந்தக் கொறிய இளைஞன் என் மனம் எங்கும் வலம் வந்து கொண்டிருந்தான்.

நம்மில் எத்தனை பேர் நாம் செய்கின்ற வேலையில் இப்படியான முழு மன ஒருமைப்பாட்டையும் வைத்திருக்கிறோம்? நாம் ஜீவனத்துக்காகச் செய்கின்ற வேலைகளை உண்மையில் விருப்பத்தோடு தான் செய்கிறோமா என்று நினைத்துப் பார்த்தேன். ஆர்வம் வேறாகவும் செய்யும் தொழில் வேறொன்றாகவும் தான் பெரும்பாலானோருக்கு அமைந்து விடுகிறது. குழந்தைகளை விருப்பமின்றியே காப்பகங்களில் விட்டுச் செல்ல நேர்கிறது. வேலைப்பாதுகாப்பு, நிரந்தரத் தன்மை, சம்பளம், சலுகைகள்,விடுமுறைகள்..... போன்ற பல காரணங்கள் சலிப்பு மிக்க வேலைகளிலும் தொடர்ந்து வைத்திருக்கிறது.

பெரும்பாலானோர்க்கு வாழ்க்கை இவ்வாறாக நகர்கிறது......

அந்த இளைஞன் செய்தது கார் கழுவும் வேலை என்றாலும் அதில் அவன் எத்தனை ஈடுபாட்டோடும் மகிழ்ச்சியோடும் முழு மன ஒற்றுமைப்பாட்டோடும் அதனைச் செய்தான்! செய்கிறான்!!

”நினைத்தது கிடைக்கா விட்டால் கிடைத்ததை விரும்பு” ,”உனதெண்ணப்படி வாழ்க்கை அமையாவிட்டால் வாழ்க்கைக்கேற்ப எண்னத்தை மாற்றிக் கொள்”- என்றெல்லாம் சொல்கிறார்களே! - இப்படி அவன் நினைத்திருக்கக் கூடுமோ?

நினைத்துப் பார்த்தால் எல்லாம் மனம் தான்! - மனதுக்குத் தான் எத்தனை பலம்! அண்மையில் தென்றல் என்ற இணையத் தளத்தில் இந்த ஜென் கதை பார்த்தேன்.
”ஒரு சிறந்த வில் வித்தை அறிந்த குருவிடம் பயிற்சி பெற்ற ஒருவன் தான் சிறப்பாகக் கற்றுக் கொண்டதாகக் கர்வம் கொண்டான்.குரு அவனை அழைத்துக் கொண்டு மலைப் பகுதிக்கு சென்றார்,இரண்டு மலை உச்சிக்கு இடையே ஒரு பலகை மட்டும் வைக்கப் பட்டிருந்தது.கீழே அதலபாதாளம்.குரு அநதப் பலகையில் விறுவிறுவென நடந்து நடுவில் நின்று கொண்டு தன் வில்லை எடுத்து வானத்தில் பறந்து கொண்டிருந்த ஒரு பறவையைக் குறி வைத்து அடித்து வீழ்த்தினார்.பின் சீடனை அவ்வாறே செய்யச்சொன்னார்.முதலில் ஆர்வமுடன் சென்ற அவன் நடுப் பகுதிக்கு சென்றவுடன் பயத்துக்கு உள்ளானான்.கால்கள் நடுங்க ஆரம்பித்தன.அவன் வில்லை எடுத்து ஒரு பறவையைக் குறி வைத்தான்.ஆனால் அவன் எங்கே கீழே விழுந்து விடுவோமா என்ற அச்சத்துடன் இருந்ததால் அவனால் சரியாகக் குறி பார்க்க முடியவில்லை.பதட்டத்துடன் குருவிடம்,''ஐயோ,என்னைக் காப்பாற்றுங்கள்.நான் கீழே விழுந்து இறந்து விடுவேன்.''என்று அலறினான்.குருவும் சாதாரணமாக பலகையில் நடந்துசென்று அவனைக் கையைப் பிடித்து அழைத்து வந்தார்.திரும்ப அவர்கள் இருப்பிடத்திற்கு வந்து கொண்டிருந்தபோது இருவரும் ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை.ஆனால் கர்வம் அழிந்த அந்த சீடன் நினைத்துக் கொண்டான்,''வில் அம்பை முழுமையாக வென்றால் மட்டும் போதாது,நம் மனதையும் வெல்ல வேண்டும்.அதுதான் முக்கியம்.''அது சரி, உடலில் எந்தப் பாகத்தில் இருக்கிறது அந்த அங்கம்? எங்கே மனம்?


8 comments:

 1. அக்கா .. இன்னொரு அழகான பதிவு. எனக்கு ஒரு இடத்தில் மாத்திரமே இடருகிறது!

  //”நினைத்தது கிடைக்கா விட்டால் கிடைத்ததை விரும்பு” - இப்படி அவன் நினைத்திருக்கக் கூடுமோ?//

  அவன் அப்படி நினைக்கவேண்டிய தேவை இருப்பதாய் நான் உணரவில்லை. நினைத்திருந்தால் அவ்வளவு செய்நேர்த்தி அவனிடம் வந்திருக்காது. கார் கழுவுதல் மட்டுமில்லாது சுத்தப்படுத்தும் எந்த தொழிலும் ஒரு தொழின்முறை அழகு இருக்கும். அதை செய்பவர்களும் விரும்பியே ஏற்றுக்கொண்டு செய்வார்கள். அல்லாவிடில் அவர்களால் அப்படியான தொழில்களில் நின்றும் பிடிக்கமுடியாது.

  எழுதுபவனும் ஒரு சுத்திகரிப்பு தொழிலாளி போன்றவனே. நமக்கும் இருக்கும் "விஷயத்தை", அதை சுற்றி உள்ள விஷயங்களை அகற்றி நேர்த்தியாக தரவேண்டும் இல்லையா? எது குப்பை எது அழுக்கு, எங்கே கீறல் .. எல்லாமே கண்டு பிடிக்கும் ஆற்றல, மனம் வந்து அகற்றும் பக்குவமும் வேண்டும். உங்கள் பதிவில் இருந்து அதை படிக்ககூடியதாக இருந்தது. நன்றி.

  ReplyDelete
 2. சரியாகச் சொன்னீர்கள் ஜேகே. அவன் நிச்சயமாக அப்படி நினைத்திருக்க மாட்டான்.

  அது ஒரு கலை இல்லையா ஜேகே? அவன் ஒரு கலைஞன்!

  கலைஞர்களுக்கு இந்தத் தன்மை அவசியம் என்று அழகாய் சொல்லி விட்டீர்கள்! வருகைக்கு நன்றிப்பா.

  ReplyDelete
 3. பகிர்ந்துகொண்ட கொரியத் தொழிலாளியின் செய்நேர்த்தி கண்டு வியக்காமலிருக்க இயலவில்லை. நம்மில் எத்தனைப் பேருக்கு இப்படி மாய்ந்து மாய்ந்து செய்யும் தொழிலில் நேர்த்தியைக் காட்டத் தோன்றும்? மிகவும் ஆழமான சிந்தனையைத் தூண்டும் பதிவு.

  ரசனையுடன் வேலை செய்வதில் இருக்கும் சந்தோஷம் வேறு எதிலும் கிடைப்பதில்லை. மனம் தொட்ட பதிவு மணிமேகலா.

  ReplyDelete
 4. உங்களுடய கருத்துக்கு மிக்க நன்றி கீதா.

  ஒரு மனிதன் தன்னுடய தோற்றத்தினால் அல்ல மாறாக தன் நடத்தையாலேயே மற்றவர்களுடய மனதில் தங்களுக்கான இடத்தைப் பிடித்துக் கொள்கிறார்கள் என்ற உண்மையையும் அன்று நான் உணர்ந்து கொண்டேன் கீதா.

  அந்த இடுங்கிய கண்களைக் கொண்ட மஞ்சள் நிற இளைஞனை இப்போதைக்கு மறக்க முடியும் என்று தோன்றவில்லை. :)

  ReplyDelete
 5. நினைத்துப் பார்த்தால் எல்லாம் மனம் தான்! - மனதுக்குத் தான் எத்தனை பலம்

  ReplyDelete
 6. , உடலில் எந்தப் பாகத்தில் இருக்கிறது அந்த அங்கம்? எங்கே மனம்?எங்கே மனம்??????

  ReplyDelete
 7. அந்த‌க் கொரிய‌ இளைஞ‌னுக்கு ஒரு ராய‌ல் ச‌ல்யூட். என் த‌ந்தை சிறு வ‌ய‌தில் கூறிய‌ 'குப்பையை அள்ளினாலும் பார்ப்ப‌வ‌ர்க‌ள் இதை இன்னும் சிற‌ப்பாக‌ செய்ய‌ முடியாது என்னும்ப‌டி செய்ய‌ வேண்டும்' என்ற‌ அறிவுரை நினைவில் ப‌ளிச்சிட்ட‌து. ந‌ன்றி தோழி!

  ReplyDelete
 8. :)
  மகிழ்ச்சி தோழிகளே!
  வரவுக்கும் பகிர்வுக்கும்.

  ReplyDelete