Thursday, June 18, 2009

ஒரு நட்பின் புன்னகை

புறம் பார்த்து-
ஒரு நட்பின் புன்னகையோடு
நீ என்னைத் தேர்ந்தெடுத்தாய்.

நன்றி எனினும்
நண்பா,

ஆடைகள் பார்த்து
ஆளை எடை போடும் உலகில்
என் இருத்தலின் உன்னதம்
புரிவதுனக்கு
எங்ஙனம்?

என் அக எல்லைகளின் ஆழ அகலங்கள் பற்றி...
அதன் அலங்காரங்கள் பற்றி...
அறைகளை நிரப்பும் வெளிச்சங்கள் பற்றி..
மூலைகளில் படிந்து கிடக்கும் தூசிகள் பற்றி..
இரத்தம் காவித் திரியும்
பரம்பரை அலகுகள் பற்றி..
இன்னும்..இன்னும்..
அந்தக் கரும் பாறை பற்றி...

இவ்வாறு பூமியுள்ளே ஊன்றியுள்ள
என் விருட்ச வேர்களைப் பற்றி அறிவாயாக!

உரத்துப் பேசாத இந்த
உரையாடலின் சாரமே நானாவேன்.

உடலல்ல நான்.
உடலுக்குள்ளே தான் நான்.

நண்ப,
உன் ஆண் என்ற சட்டையைக்
களைந்து விட்டு வருவாயாக!
பால்களைத் தாண்டிய பரிமானம் ஒன்றில்
உன் பாதங்கள் பதிவதாக!

பாலால் என்னைப் பாகுபடுத்து முன்
மனிதனாய் என்னை மதிப்பாயாக!!

வா!இனி உன்
நட்பின் புன்னகை பற்றிப் பேசுவோம்.

5 comments:

  1. நன்றி தோழி.வருகைக்கும் சேர்த்து.

    ReplyDelete
  2. //
    உடலல்ல நான்.
    உடலுக்குள்ளே தான் நான்.
    //
    நான் பற்றிய கருத்துக்கள் நன்றாய் இருக்கிறது.
    முடிந்தால் இதற்கும் சென்று பாருங்கள்.
    http://www.nnaan.blogspot.com

    ReplyDelete
  3. வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி நண்பரே.

    அதற்குள் வாழ்க்கை பற்றிய ஞானமே அடங்கியிருக்கிறது இல்லையா?

    ReplyDelete
  4. அட மக்கா...

    இந்த பொண்ணு நல்லா எழுதுதே

    ReplyDelete