Tuesday, January 11, 2011

ஒரு துளி சோழ வளம்


என் அன்புத் தோழி தாருஹாசினி அறிமுகப் படுத்தி வைத்த புத்தகம் பொன்னியின் செல்வன். நம் கவுன்சில் நூலகத்தில் சில நல்ல தமிழ் நூல்கள் இருப்பதை நானறிவேன். ஒரு படியாக கிடைத்த ஒரு நேர அவகாசத்தைப் பயன் படுத்தி அங்கு சென்றால் முதல் இரண்டு பாகங்களையும் யாரோ எடுத்துப் போயிருந்தார்கள். மூன்றாவது பாகம் மட்டும் இருந்தது.

பெரிய புத்தகம். ஒரு விதமான ஏமாற்றமும் மகிழ்ச்சியும் கலந்த ஒரு மன நிலை எனக்கு. கைக்கெட்டியும் வாய்க்கெட்டாத நிலை மாதிரி.அம் மூன்றாம் பாகத்தைப் புரட்டிப் பார்த்தேன். 2004ம் ஆண்டு 12ம் பதிப்பை அது கண்டிருந்தது. ம.செ.யின் ஓவியங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். இதில் அவரது தந்தையார் மணியன் என்பவர் ஓவியங்களை வரைந்திருந்தார். ஆசையோடு அதனைச் சற்று நேரம் பார்த்திருந்து விட்டு முதல் பாகத்தில் இருந்து முறைப்படி படிக்கத் தொடங்குவதே நல்லது என்ற தீர்மானத்தோடு கவுண்டரில் சினேகமாய் சிரிக்கும் பெண்மணியிடம் அதன் முதல் இரண்டு பாகங்களுக்குமான பதிவினைச் செய்து விட்டு வந்திருந்தேன்.அவரது கூற்றுப் படி அது தை மாத நடுப்பகுதியில் வந்து சேரும் சாத்தியக் கூறுகளே அதிகம் இருந்தன.

ஆனால் இன்று நல்ல வேளையாக நான் வீட்டில் நின்றிருந்த ஒரு பொழுதில் நூலகத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது.நீ கேட்டு வைத்திருந்த புத்தகத்தில் முதலாம் பாகம் வந்திருக்கிறது. நீ வந்தால் எடுத்துச் செல்லலாம் என்றது அவ் அழைப்பு.

அது மிகச் சொற்ப வேளையில் கைப் பைக்குள் அது இடம் மாறியது மட்டுமன்றி வெளி வேலையாய் திரிந்த பொழுதுகளிலும் அது ஒரு சுகமான பாரமாகக் கனத்துக் கொண்டிருந்தது.ஆம் படிக்காத போதிலும் அது ஒரு சுகமான பாரமாகத் தான் இருந்தது. ஒரு விதமான உற்சாகம் அப்போதிருந்தே தொற்றிக் கொண்டது.வேலைகளை விரைவாக முடிக்க அது ஒரு காரணமாகவும் இருந்தது.

ஆயிற்று. வீடு வந்து சேர்ந்தால் மழை வரவா விடவா என்று வெருட்டிக் கொண்டிருந்தது.இனிமையான பழைய பாடல்கள் வானொலியில் ஒலித்துக் கொண்டிருக்க வானம் இருட்டி குளிர் காற்றைத் தந்து கொண்டிருந்தது.களைப்புத் தீர குளித்து சிறப்பானதொரு தேநீரோடு ஜன்னல்களைத் திறந்து வைத்து விட்டு பிரம்பு நாற்காலியை வெளிச்சம் வரும் இடத்தில் தள்ளி வைத்து விட்டு தேநீரின் இதமான சூட்டோடு படங்களில் லயித்து பதிப்புரை முன்னுரையினூடாக மெல்ல முதல் அத்தியாயத்துக்குள் காலடி எடுத்து வைத்தேன்.

அது ஆடிப் பெருக்கைப் பார்க்கும் வல்லவரையன் வந்தியத்தேவனின் கண்களூடாக விரியும் காட்சி.ஆடிப் பெருக்கும்,மக்கள் வருகையும், களனிகளின் உழவும் நடவும் நடந்து கொண்டிருக்க; ஆற்றோரம் மக்கள் குழுமி கூட்டஞ்சோறும் சித்திரான்னமும் பகிர்ந்துண்ணுகிறார்கள். அவை கமுகம் பாளைகளில் இட்டு உண்னப் படுகின்றன.சோழ தேசத்து வளத்தில் தோய்ந்தவாறு கதை நகருகிறது.

ஆனால் முதல் அத்தியாயத்துக்கு மேல் என்னால் நகர முடியவில்லை.சோழ வளம் கண்ணில் கருக்கட்டி விட்டது தான் அதற்குக் காரணம்.அந்தச் சோழ நாட்டினுடய வளத்தினை ஒளவையார் இப்படிப் பாடுகிறார்.

“வெளளத்தடங்காச் சினை வாளை
வேலிக் கமுகின் மீதேறித்
துள்ளி முகிலைக் கிளித்து மழைத்
துளியோடிறங்கும் சோ நாடா
......”

என்றவாறு தொடரும் அப்பாடல்.இந்தப் பொன்னியின் செல்வனின் அதே ஏரிக் கரையோரம் வெளளம் கரை புரண்டோடுகிறது. அருகில் மருத நிலம். விவசாயபூமி.குடியானவர்கள் உழுது கொண்டிருக்கிரார்கள்.பெண்கள் நடவு நட்டுக் கொண்டிருக்கிறார்கள்.கரை புரண்டோடும் ஏரியையும் வயல் நிலங்களையும் பிரிப்பது கமுகம் வேலி.வந்தியத் தேவன் காண்கின்ற பெண்கள் ஆடிப் பாடிக் களித்த படி கூட்டாஞ் சோறுண்ணும் கமுகம் பாழைகள் நிறைந்திருக்கின்ற அதே கமுகம்வேலி.

கருக் கொண்டிருக்கிறது மேகம்.வெள்ளத்துக்குள் துள்ளியோடும் மீன்களுக்கோ கொள்ளை மகிழ்ச்சி.அதனால் நுரைத்துக் கொண்டோடும் வெள்ளத்துக்குள் அடங்கா மகிழ்ச்சியோடு துள்ளிக் குதித்தவாறு ஓடுகின்றன.அதற்குள் ஒரு கர்ப்பம் தரித்திருக்கிற வாளை மீன்.(சினை வாளை)அப்படியே அது உயர ஒரு துள்ளுத் துள்ளுகிறது.அப்படித் துள்ளிக் குதித்த வேகத்தில் அது வேலியோரம் நிற்கின்ற கமுகம் மரத்தில் ஏறி கரு முகிலாய் கூடி இருக்கின்ற முகிலையும் கீறிக் கிழித்தவாறு கீழிறங்கி மீண்டும் வெள்ளத்துக்குள் விழுகின்றது.அது அவ்வாறு முகிலைக் கிளித்து துள்ளி விழுந்த காரணத்தால் மழை முகிலாது மழைத் துளியாக மண்ணில் விழுகிறது.அதன் காரணமாக வாளை மீன் வெள்ளத்துக்குள் விழுகின்ற போதினில் மழைத் துளியையும் இழுத்துக் கொண்டு வந்து விழுகின்றது என்று ஒளவையார் சோழ வளம் கூறுவார்.

இந்த ஒளைவையாருக்கும் அவருக்குச் சம காலத்தில் இருந்த ஒட்டக் கூத்தர் என்ற புலவருக்கும் எப்போதும் புலமையில் ஒரு போட்டி நிகழ்வது சோழ சாம்ராஜ்ஜியத்தில் பிரபலமான ஒரு சங்கதி. இங்கு ஒட்டக் கூத்தர் அச் சோழ வள நாட்டினுடய வளத்தை இப்படிப் பாடுகிறார்.ஒளையார் நீரின் வளத்தைப் பாட இவர் நிலத்தின் வளத்தைப் பாடுகிறார் இப்படி,

“பங்கப் பழனத் துழுமுழவர்
பலவின் கனியைப் பறித்ததென்று
சங்கிட்டெறியக் குரங்கு இளநீர்
தனைக் கொண்டெறியும் தமிழ் நாடா
....”

என்று பாடுகிறார்.அதாவது வயல்களிலே உழுது களைத்த உழவர்கள் தாம் தாக சாந்தி செய்வதற்காக ஒரு உபாயம் செய்கிறார்கள். அது என்னவென்றால் இந்த மரங்களிலே இருக்கின்ற குரங்குகள் பலாக்கனிகளைப் பாழ் செய்கின்றன என்று சாட்டுச் சொல்லிக் கொண்டு நிலத்திலே இயற்கையாக விளைந்து கிடக்கின்ற சங்குகளை எடுத்து குரங்குகளுக்கு மேலாக வீசுகிறார்கள்.அதன் காரணமாக அவர்களுக்கு அந்தக் குரங்குகள் இளநீர் குலைகளில் இருந்து இளநீர்களைப் பிடுங்கி உழவர்களை நோக்கி எறிகிறது. அதனால் உழவர்கள் தாக சாந்தி செய்து கொள்கிறார்கள். அத்தகைய வளம் பொருந்திய சோழ வள நாடு என்பார் ஒட்டக் கூத்தர்.

அந்த வள நாட்டில் தான் நான் இப்போது பயணம் செய்து கொண்டிருக்கிறேன்.நூற்றாண்டுகள் தாண்டிய பயணம் அது!

இன்றைக்கு இவ்வளவும் தான்.:)


இங்கே இப்போது மழை.

எங்கோ ஒரு அழகான உவமை ஒன்று பார்த்தேன்.அது இப்படி அமைந்திருந்தது.


“நிதானமோ பக்குவ நளினமோ அற்றுச் சட்டென்று நிலத்தில் வைத்த வீணையின் தந்திக் கம்பி அதிர்வில் உதிர்ந்து விழுந்த ஒரு நாதத் துளிபோல; அவளது கண்களில் உருண்டு திரண்ட கண்ணீர் முத்து, தாமரைக் கன்னத்தில் ஒட்டாமல் உருண்டோடி, நிலத்தில் பொட்டென்று விழுந்து சிதறியது”

இப்போது இங்கு விழுகின்ற மழைத் துளிகளும் அப்படித் தான் இருக்கின்றன.அத்தனை பெரிசு.

2 comments:

 1. நீங்கள் இப்படி ஆற அமர ரசித்து எழுதும் விமரசனத்தை பார்த்தால் நாவல் முழுவதற்கும் விமர்சனம் எழுதினால் இன்னொரு நாவல் வந்துவிடும்போல இருக்கே.. :) முழுவதும் வாசித்துவிட்டு நீங்கள் போடும் விமர்சன பதிவுக்கு காத்திருக்கிறேன்.
  அவுஸ்திரேலியாவிலும் மழையின் பாதிப்பு இருப்பதாக அறிந்தேன்.நீங்கள் இருக்கும் சிட்னி பகுதியில் எந்த அசம்பாவிதமும் இல்லை என்று நம்புகிறேன்..

  ReplyDelete
 2. :).மிக அருமையான புத்தகம் ஹாசி! அதில் வரும் வர்ணனைகள் மிக அருமை.

  போற போக்கப் பாத்தா அப்படிப் போலதான் இருக்கு!:)

  சிட்னியில் பாதிப்பு எதுவும் இல்லை.குயின்ஸ்லாந்து மாநிலத்தில் தான் மிகப் பெரிய வெள்ளப் பெருக்கு!

  ReplyDelete