Monday, January 17, 2011

சூரியனின் குதிரைகள்



வானரங்கள் கனி கொடுத்து மந்தி யொடு கொஞ்சும்
மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும்
கானவர்கள் விழி எறிந்து வானவரை அழைப்பர்
ககன சித்தர் வந்து வந்து காயசித்தி விளைப்பர்
தேனருவித் திரை யெழும்பி வானின் வழி ஒழுகும்
செங் கதிரோன் பரிக் காலும் தேர்க் காலும் வழுகும்
கூனல் இளம் பிறை முடித்த வேணி அலங் காரர்
குற்றாலத் திரிகூட மலை எங்கள் மலையே.


இது குற்றாலக் குறவஞ்சியிலே வருகின்ற ஒரு பாடல்.இதன் பொருள் என்னவென்றால்,பழ மரங்களிலே வானரக் கூட்டம். அவை பழங்களை உண்டு களிக்கிறன. அவை தாம் மட்டும் உண்ணவில்லை. தன் இனத்தாருக்கும் கொடுத்து கொஞ்சி மகிழ்கின்றன.(மந்தி - பெண்குரங்கு;கடுவன் - ஆண்குரங்கு).அவை தம் இயல்புக்கேற்ப சிலவற்றைக் கொட்டியும் சிந்தியும் உண்கின்றன.அதாவது கொட்டிச் சிந்தியும் கொடுத்துண்டும் மகிழ்கின்றன.அவ்வாறு கொட்டுண்ணுகிற பழங்களுக்காக வானுலகில் வாழுபவர்கள் மிகவும் ஆசைப் படுகிறார்கள்.இதனை இயல்பாகவே கண்ணுறுகிறார்கள் காடுகளில் வசிக்கின்ற கானவர்கள்(வேடர்கள்). அதன் காரணமாக தேவர்களைத் தம் கண்களாலேயே பழங்களை உண்ண அழைக்கிறார்கள்.

அதே நேரம், இந்த நாட்டினுடய வளத்தைப் பார்த்தவாறு வானில் வழியாகச் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் சித்தர்கள் இந் நாட்டின் இத்தகைய வளத்தில் கிறங்கி; இங்கிறங்கித்; தம் சித்துக்களைச் செய்கிறார்கள்.அருகில் இரைச்சலோடு வானில் இருந்து பொங்கிப் பிரவகிப்பது போல மலையில் இருந்து பொங்கி வழிகிறதே தேனருவி; அதிலிருந்து மேலெழும் தண்ணீர் துளிகள் தெறித்து சூரியன் வரும் பாதை ஈரமாகி விட்டது.அதனால் ஏழு குதிரைகளைப் பூட்டிக் கொண்டு காலை தோறும் நேரம் தவறாமல் வருகின்ற சூரியனின் குதிரைகளுக்கு ஓட முடியவில்லை. அவற்றின் கால்களும் சூரியபகவானின் தேர் சில்லுகளும் வழுக்குகின்றன.என்றவாறு தொடரும் திரிகூட ராசப்பரின் மலை வளம் கூறும் பாடல்.(ஏழு வர்ணங்களுக்கும் ஏழு குதிரைகளைக் கற்பனை பண்ணிய தமிழ் கூட அழகு தான்).

திரிகூடராசப்பர் எழுதிய திருக்குற்றாலக் குறவஞ்சி என்ற இந் நூல் சோழர் காலத்துக்கு பிற்பட்ட நாயக்கர் காலத்தில் எழுந்தது.

ஆனால்,சூரியனுக்கு எப்போது தமிழ் ஏழு வர்ணங்களைக் கண்டறிந்து அதற்கு ஏழு குதிரைகளை உவமையாகக் கொடுத்தது என்பது பற்றியோ; அவர் சக்கரங்கள் பொருத்திய தேரில் அக்குதிரைகள் இழுக்க தினந்தோறும் பயணிப்பது பற்றிய கற்பனை எப்போது உருவானது என்பது பற்றியோ; இவை பற்றிய சான்றுகள் பற்றி முதன் முதலில் எங்கு குறிப்புகள் காணப்பட்டன என்பது பற்றியோ எனக்கதிகம் தெரியாது.(அறிந்தவர்கள் சொன்னால் பயனுடயதாக இருக்கும்)

ஆனால் இந்த அழகு மிகு கற்பனைக்கு நிகரான இன்னொரு அழகான கற்பனை சோழர் காலத்து பாடல் ஒன்றில் காணப்படுகிறது. பொன்னியின் செல்வனைத் தந்த கல்கி தன் முதலாம் பாகத்தில் சுந்தரசோழர் இயற்றியதாக ஒரு பாடலைக் குறிப்பிட்டிருக்கிறார். அந்தப் பாடல் இது தான்.

“இந்திரன் ஏறக் கரி அளித்தார்;
பரி ஏழளித்தார்
செந்திரு மேனித் தினகற்கு;
சிவனார் மணத்துப்
பைந்துகிலேறப் பல்லக்களித்தார்;
பழையாறை நகர்ச்
சுந்தர சோழரை யாவரொப்பார்கள் இத்
தென்னிலத்தே”

அதன் பொருளைக் கல்கியின் தமிழிலேயே அப்படியே தருகிறேன்.

”ஒரு சமயம் தேவேந்திரனுக்கும் விருத்திராசுரனுக்கும் போர் நடந்தது. அதில் இந்திரனுடய ஐராவதம்(யானை) இறந்து போய் விட்டது.அதற்கு இணையான வேறொரு யானை எங்கே கிடைக்கும் என்று இந்திரன் பார்த்துக் கொண்டிருந்தான்.கடைசியில் பழையாறை நகரில் வாழ்ந்த சுந்தர சோழ சக்கரவர்த்தியிடம் வந்து ‘ஐராவதத்துக்கு நிகரான யானை ஒன்று வேண்டும்’ என யாசித்தான்.’ஐராவத்தத்துக்கு நிகரான யானை என்னிடம் இல்லை.அதை விட சிறந்த யானைகள் தான் இருக்கின்றன’என்று கூறி,இந்திரனைத் தன் யானைக் கொட்டாரத்துக்கு அழைத்துச் சென்றார்.அங்கே குன்றங்களைப் போல் நின்ற ஆயிரக் கணக்கான யானைகளைத் தேவேந்திரன் பார்த்து விட்டு,’எதைக் கேட்பது?’ என்று தெரியாமல் திகைத்து நின்றான்.அவனுடய திகைப்பைக் கண்ட சுந்தர சோழர் தாமே ஒரு யானையைப் பொறுக்கி இந்திரனுக்கு அளித்தார்.’அந்த யானையை எப்படி அடக்கி ஆளப் போகிறோம்? நம் வஜ்ராயுதத்தினால் கூட முடியாதே!’ என்ற பீதி இந்திரனுக்கு உண்டாகி விட்டதைக் கவனித்து வஜ்ராயுதத்தை விட வலிமை வாய்ந்த ஓர் அங்குசத்தையும் அளித்தார்...

பின்னர் ஒரு காலத்தில், செங்கதிர் பரப்பி உலகுக்கெல்லாம் ஒளி தரும் சூரிய பகவானுக்கும் ராகு என்னும் அரக்கனுக்கும் பெரும் போர் மூண்டது.ராகு தினகரனை விழுங்கப் பார்த்தான்.முடியவில்லை!தினகரனுடய ஒளி அவ்விதம் ராகுவைத் தகித்து விட்டது.ஆனால் சூரியனுடய தேரில் பூட்டிய குதிரைகள் ஏழும் ராகுவினுடய காலகோடி விஷத்தினால் தாக்கப் பட்டு இறந்தன.சூரியன் தன் பிரயாணத்தை எப்படித் தொடங்குவது என்று திகைத்து நிற்கையில்,அவனுடய திக்கற்ற நிலையைக் கண்ட சுந்தர சோழர் ஏழு புதிய குதிரைகளுடன் சூரிய பகவானை அணுகி, ‘ரதத்தில் இந்தக் குதிரைகளைப் பூட்டிக் கொண்டு சென்று உலகத்தை உய்விக்க வேண்டும்’என்று கேட்டுக் கொண்டார்.தன் குலத்தில் வந்த ஒரு சோழச் சக்கரவர்த்தி இவ்விதம் சமயத்தில் செய்த உதவியைச் சூரியனும் மிக மெச்சினான்.

‘பின்னர் சிவபெருமானிற்கும் பார்வதி தேவிக்கும் கைலையங்கிரியில் திருமணம் நடந்தது.பெண் வீட்டார் கல்யாண சீர்வரிசையுடன் வந்திருந்தார்கள்.ஆனால் பல்லக்குக் கொண்டுவரத் தவறி விட்டார்கள்.ஊர்வலம் நடத்துவதற்கு எருது மாட்டைத் தவிர வேறு வாகனம் இல்லையே என்று கவலையுடன் பேசிக் கொண்டார்கள்.இதை அறிந்த சுந்தர சோழ சக்கரவர்த்தி உடனே பழையாறை அரண்மனையில் இருந்து தமது முத்துப் பல்லக்கைக் கொண்டுவரச் சொன்னார்.பயபக்தியுடன் சிவபெருமான் திருமணத்துக்குத் தம் காணிக்கையாக அப் பல்லக்கை அளித்தார்.அப்படிப் பட்ட சுந்தரசோழ சக்கரவர்த்திக்கு உவமை சொல்லக் கூடியவர்கள் இந்த விரிந்து பரந்த அலைகடல் சூழ்ந்த பெரிய உலகத்தில் வேறு யார் இருக்கிறார்கள்...”(பொன்னியின் செல்வன்; பாகம் ஒன்று; வானதி பதிப்பகம்; 12ம் பதிப்பு; 2004;பக் 205 - 206)


சோழர் காலத்தில் இந்தச் சுந்தர சோழன் கொடுத்த குதிரைகளுக்குத் தானோ நாயக்கர் காலத்துக் குற்றாலக் குறவஞ்சியில் குற்றால மலையில் ஏறக் கால்கள் வழுக்குகின்றன?

No comments:

Post a Comment