Tuesday, June 25, 2013

வன்னி ’மண்’ ணின் விளைச்சல் :புதியவன்

( சற்றே ஒரு இடக்கு முடக்கான பதிவாக இது இருப்பது ஒரு நெருடலாகவே இருக்கிறது. ஏதோ ஒரு விதமான மனோ வேகத்தில் உடனடியாக எழுதி பதிவிடுகிறேன். உங்கள் வெளிப்படையான விமர்சனங்களை எனக்குத் தாருங்கள் நண்பர்களே! அதட்டியோ தட்டியோ கேட்க உங்களுக்கில்லாத உரிமையா? )

பொதுவாக தமிழ் சினிமா மீது எனக்கு எந்த விதமான மோகமும் கிடையாது..

சினிமா ரசிகர்கள் யாரும் அதைப்பற்றி வியாகூலம் கொள்ளத் தேவையில்லை. ஏனென்றால் நான் ஒருத்தி பார்க்காமல் விட்டதால் தமிழ் சினிமா ஒன்றும் நட்டமடைந்து விடப் போவதில்லை.

எனக்கு ஏன் இந்த கொலைவெறி என்று நீங்கள் நினைத்தால் அதற்குச் சொல்லிக் கொள்ள எனக்கொரு காரணம் இருக்கிறது. மக்களை மடையர்கள் ஆக்குகிறது தமிழ் சினிமா. மடையர்களாக தொடர்ந்து வைத்திருப்பதிலும் பெரும் முனைப்புக் காட்டி வருகிறது; மேலும் ஒரு மாயைக்குள்ளும் கனவுக்குள்ளும் தொடர்ந்து மயக்கி மக்களை வைத்திருந்த படி அதில் பணம் சம்பாதிக்கக் கற்றுக் கொண்டிருக்கிறது அது.

பெண்களை அது நடத்துகிற பாங்கும் கவர்ச்சி பாவைகளாய் அவர்களை உலகுக்கு படம்போட்டுக் காட்டி கவர்ச்சியை விற்றுக் காசாக்கும் அதன் வடிவமும் விபச்சாரத்துக்கு சற்றேனும் குறைந்ததல்ல. வன்முறையும் சண்டைக்காட்சிகளும் ஒப்பனைகளும் உண்மைத்தன்மைக்கு சற்றேனும் ஏற்புடையவையுமல்ல. தேவையற்ற பாடல்காட்சிகளாலும் சண்டை வன்முறைக் காட்சிகளாலும் பெண்களை ஆடவைத்து ரசிக்கும் ஆண் வக்கிரத்துக்கு வடிகாலாகும் சினிமா பாணிகளாலும் வெறுப்பேத்தி வெறுப்பேத்தி என் பொன்னான நேரத்தை சேர்த்து வேறு வழிகளில் பயனுடய போக்கில் செலவளிக்க வைத்தமைக்கு இந்திய சினிமாவுக்கு பெரும் பங்குண்டு.

கோவிக்காதைங்கோ. நல்ல படங்களே வருவதில்லையா என தமிழ் சினிமா ரசிகர்கள் என்னோடு சண்டைக்கு வரக்கூடும். வருகிறது என்பதை நான் மறுக்கவில்லை. வருவதில் எத்தனை நல்லவை: யதார்த்த தன்மை; கலைத்தன்மை வாய்ந்தவை என்பது தான் என் கேள்வி. இந்த நல்லதொன்றைக் கண்டடைய எத்தனை படங்களைப் பணம் செலவளித்துப் பார்த்து அதை விட அதிகமான நேரத்தை விரயமாக்கி அந்த நரக சோதனையூடாக சிறந்த அந்த மணி நேரங்களை  கண்டடைய வேண்டியிருக்கிறது.

தமிழ் சினிமா திருந்த வேண்டும். அல்லது தமிழ் ரசிகர்கள் திருந்த வேண்டும். இரண்டும் சாத்தியமில்லை என்பதால் நான் ’திருந்தி’ விட்டேன்.

ஏதோ ஒரு வேலை வெளியில் நான் தொலைந்திருந்த நேரம் கடந்த மாதம் எனக்கொரு தொலைபேசி அழைப்பு.நான் சண்பேசுகிறேன்.
எந்த சண்?
நான் தான் கனகராயன் குளம் சண்.

ஒரு கணம் என் 16 வயதினுள் போக அந்த சொல் போதுமாக இருந்தது.

சண் - எங்கள் G.C.E.A/L வகுப்பில் மொத்தம் இருந்த 12 பேருக்குள் முதன்மையான மாணவன். நகைச்சுவையாலும் சிறந்த பேச்சாற்றலாலும் இயல்பாய் விளைந்த கெட்டித்தனத்தாலும் வகுப்பில் எல்லோரின் பிரியத்துக்கும் பாத்திரமானவனாய் இருந்தவன்.

வகுப்பறை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு மேசை கதிரை அடுக்கப்பட்டிருக்கும். நடுவே ஆசிரியர் நடந்து சென்று தன் மேசை கதிரையை சென்றடைவதற்கான வழி விடப்பட்டிருக்கும். இரண்டாவது வரிசையின் வலது கை பக்க முதல் மேசை கதிரை என்னுடயது. இரண்டாவது வரிசையின் இடது கைப்பக்க முதல் மேசை கதிரை சண் ணிற்கானது. அருகருகே எனினும் நடுவே ஆசிரியருக்கான பாதை.

எங்களுக்கு அப்போது பிரத்தியேக வகுப்புகளுக்கு போக வேண்டிய தேவை எதுவும் இருந்திருக்கவில்லை. அது பற்றி படலைக் காரன் ஒரு காவியம் படைத்திருக்கிறார் தன் படலைப் பதிவொன்றில். நல்ல வேளையாக அந்தப் ’பண்பாடு’ நம்மை அண்டவில்லை. நமக்கு வாய்த்த ஆசிரியர்கள் அவ்வாறானவர்கள். பல்கலைக்கழக பட்டப்படிப்பை முடித்து முதல் முதல் புது உற்சாகத்தோடு படிப்பிக்க வந்தவர்கள். திருமணம் ஆகாத கன்னிகைகள்.சுபத்திரா ரீச்சர், சிவனேஸ் ரீச்சர், லோகேஸ் ரீச்சர் என நீளும் அந்தப் பட்டியல்.

பாடசாலை விட்டு வீடு செல்ல பஸ் எதுவும் நேரத்துக்கு வந்து சேராது. பிரமச்சாரிய ஆசிரியர்கள் வீதியோரம் வந்து நின்று எல்லோரையும் பஸ் ஏற்றி அனுப்பி வைக்க யாரிடம் இருந்தும் எதையும் அறவிட்டதில்லை. செலவேதும் இல்லாமல் எங்கள் வன்னிப் பாடசாலைகளில் இருந்தும் மாணவர்கள் பல்கலைக்கழகம் போனார்கள். யாழ் மண் பெற்றெடுத்த புதல்வர்களிலும் பார்க்க முன்னணியிலும் திகழ்ந்தார்கள் என்று நான் பெருமையாகச் சொல்லிக் கொள்வேன்.


மகிழ்ச்சியும் நகைச்சுவையும் கற்றலும் வயதும் பருவமும் பள்ளிச் சீருடைகளுமாக உலாவந்த காலங்கள் அவை. காலை நேர இடைவேளையில் கிணற்றடியைச் சுற்றி தண்ணீர் குடிக்க நிற்கும் பிள்ளைகளுக்கு தண்ணீர் அள்ளி ஊற்றிவிடும் மேல்வகுப்பு மாணவர்களுக்கு அதை யாரும் சொல்லிக் கொடுத்ததில்லை. உயர் வகுப்பு மானவர்கள் கலந்து பேசி சிரித்து அரட்டையடித்து படித்த பொழுதுகளை விரகமாகவோ விரசமாகவோ விகாரமாகவோ எவரும் பார்த்ததில்லை. பள்ளிக் கிணற்றுக்குள் பிள்ளை விழ தூக்குவதும்; சரஸ்வதிப்பூசைககு பாடசாலை விழாக்கோலம் பூணுவதும்; ஒளிவிழா,கலை விழாக்களாலும் நிறைந்த பள்ளிக் கூடம் அது. சரஸ்வதிப் பூசைக்கு செவ்வரத்தம் பூவில் மாலை கட்டிப் போடுவாள் ஒரு கிறீஸ்தவ மாணவி. அவர்கள் தேவாலயம் செல்ல பிள்ளைகளை ஒழுங்காக்கி அனுப்புவாள் ஒரு இந்து மாணவி.

 தமிழ் மன்றம், இந்து மா மன்றம், கிறீஸ்தவ மன்றங்களும் அடிக்கடி கூடின. பொறுப்பான ஆசிரியர்களின் வழிகாட்டலில் கையெழுத்துப் பிரதிகளும் வந்ததாக ஞாபகம்.

லோகசிங்கம் அதிபரை யார் மறக்க முடியும்?

எங்கள் பள்ளிக்கூட அழகு அது. அது போகட்டும்.

அப்பாவி பாமர சனங்களால் நிறைஞ்ச ஊர் அது. குளங்களைச் சுற்றிய குடிமனைகளும் குளம் என்று முடியும் பெயர்களை கொண்ட ஊர்களுமான வன்னிக் குடிகளுக்கு விவசாயமும் மந்தை மேய்ப்பும் பிரதான தொழில் துறை. அவர்களின் பாமரப் புன்னகையையும் கடின உழைப்பையும் பிள்ளைகளைப் படிப்பிக்கும் ஆர்வத்தையும் அவர்கள் முகங்களில் எப்போதும் காணலாம்.

கிராமத்துக்கு ஓடும் மனதை நிறுத்தி மீண்டும் விட்ட இடத்துக்கு வருகிறேன்.

அப்படி இருந்த ஓர் நாளில் பாடசாலை வந்து போன சண் அவனது வீட்டில் உறக்கத்தில் ஆழ்ந்திருந்த ஓரிரவில் இராணுவத்தால் பிடிக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டான்

மறு நாள் செய்தி பாடசாலைக்கு வந்தது.

எங்கள் வகுப்பில் யோகராஜா என்றொரு மாணவன் மிகத் தத்துரூபமாக சீர்காழி கோவிந்த ராஜனின் பாடல்களைப் பாடத்தக்க வல்லமை பெற்றிருந்த கிறீஸ்தவன். எப்போதும் நம் வகுப்பில்”நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ நெஞ்சில் நினைத்ததிலே நடந்தது தான் எத்தனையோ கோடு போட்டு வாழ்ந்தவர்கள் எத்தனையோ கொண்ட குறியும் தவறிப் போனவர்கள் எத்தனையோ....” என்ற பாடலை அணுவளவும் பிசகாமல் ஒரே பாடுபவன்.

அன்றும் பாடினான். அவன் பாடும் போது அது ஏனோ நம் வகுப்புக்கு பெரும் துக்கத்தை வரவைத்த நிகழ்வாக இருந்தது. அதன் பின் அவன் பாடி நாங்கள் கேட்கவில்லை.

மறுநாளும் விடிந்தது. அதற்கடுத்த நாளும் விடிந்தது. காலங்கள் உருண்டோட அதன் போக்கில் நான் யாழ்பல்கலைக்கழகம் சென்று சேர்ந்தேன். சிலர் ஆசிரியர்கள் ஆனார்கள், சிலர் திருமணம் முடித்துக் கொண்டார்கள், சிலர் தலைமறைவானார்கள். மூன்றாவது வருடத்தில் நான் இருந்தபோது சண் விடுதலையானான் என்ற செய்தியும் லண்டன் பயணமானான் என்ற செய்தியும் வந்து சேர்ந்தது.

அதன் பின் எந்தத் தகவலும் இல்லை.

இப்போது 50களை நெருங்குகின்ற இந்தத் தருணத்தில் சண்ணின் குரல்.அதுவும் சிட்னியில்.

ஒரு தெய்வீக தருணம் அது.

வாடா என்பதா வா என்பதா வாங்கோ என்பதா?

எனினும் வீட்ட வாங்கோ சண் என்றேன். எனினும் நான் நல்ல குண்டாகிப் போனேன். தலையெல்லாம் நரைச்சுப் போச்சு  இனி சந்திக்கிறதுக்கு முன்னம் தலைக்கு கொஞ்சம் டை அடிக்க வேணும் என்றேன். எனக்குள் ஒரு 16 வயதுக் குதூகலம் நிறைந்து விட்டிருந்தது.

உமக்காவது பறவாயில்லை டையடிக்க தலையில மயிர் இருக்கு. எனக்கு டையடிக்கவே தலையில ஒரு சொட்டு மயிருமில்ல என்ற போது அவன் இயல்பு மாறாது இருக்கிறான் என்றொரு நின்மதி பிறந்தது.

மகிழ்ச்சியாகவும் இருந்தது. வாழ்க்கையின் அனுபவங்கள் எல்லோரையும் அவர்களின் இயல்பு நிலையில் இருக்க விடுவதில்லையே! அவ்வாறு இருக்க முடிந்தவர்கள் பாக்கிய சாலிகள்.

அதில் அவன் ஒருவன்.

வீட்டுக்கு வந்தான் அந்த சூர்ய புத்ரன். பிரகாசமான ”புதியவன்”!

அதே மகிழ்ச்சி புன்னகை,புத்துணர்ச்சி, நம்பிக்கை, எளிமை, தலைமைத்துவப் பண்பு எல்லாவற்றுக்கும் மேலான வெளிப்படையாக உண்மைகளைப் பகிர்ந்து கொள்ளும் மனசு!

நீங்கள் எப்போதேனும் ஒருவர் அருகில் இருந்தால் ஒரு பாதுகாப்புணர்வை - என்னை எவரும் எதும் செய்து விட முடியாது என்ற ஒரு இறுமாப்பான மனத்தைரியத்தைப் பெற்றதுண்டா?

இந்த மனிதன் உங்களுக்கு அருகில் நிற்கும் போது நீங்கள் அதை உணர முடியும். முன்னர் மோகன் அண்ணாவிடம் மாத்திரம் கண்டு வியந்த ஒரு அதிசயம் அது.

முதலில் ஒருவன் மனிதனாய் நேர்மையாய் உண்மையுள்ளவனாய் வெளிப்படையானவனாய் ஆரோக்கியமான குண இயல்புகளைப் பெற்றவனாய் எளிமையானவனாய் இருக்க வேண்டும்.அதற்குப் பிறகு தான் அவனது திறமை என் கண்ணுக்குப் படும்.

என்னைப் பொறுத்தவரை இம்மனிதன் இவை இரண்டிலும் தேர்ச்சி பெற்றிருந்தான். இதனை எழுதுகின்ற போது இவன் என் பால்ய நண்பன் என்பதால் பக்க சார்பாக எண்ணம் ஓடுகிறதோ என்று என்னை விமர்சித்துப் பார்த்தேன்.

இல்லை நண்பர்களே!

கதைகள் பேசத்தொடங்கினோம். சுமார் 30 வருடக் கதைகள் இருந்தன. சொல்ல.

சிறையிருந்த வரலாறும் நடந்த சித்திரவதைகளும், அதற்குள் இருந்த ஒருவரிடம் அம்னாஸ்டி இன்ரநஷனல் மாதம் ஒரு தடவை சிறையில் இருப்பவர்களுக்கு கொடுக்கும் சிகரட்களை சிறை ஊழியர்களுக்கு கொடுத்து பேனா வாங்கி சிகரட் அட்டைப்பெட்டியை விரித்து அதில் நோட்ஸ் எடுத்து ஆங்கிலம் படித்தது பற்றியும்;  பின்னர் அண்ணனின் தயவால் வெளிவந்து லண்டன் போனது பற்றியும்  முதல் வருடம் சுப்பர்மார்க்கட்டுகளில் நின்று இரவு பகலாய் உழைத்து வந்த கடன் அடைத்தது பற்றியும்; அதன் பின்னரே தன் எதிர்காலம் பற்றி சிந்திக்க முடிந்தது என்பது பற்றியும்; படிக்க ஆர்வமான துறைகள் வேறு வேறு இருந்த போதும் அங்கு தனக்கிருந்த ஆங்கில அறிவுக்கு பொருத்தமான பாடத்திட்டமாக கணக்கியலே இருந்ததால் அதில் வேலை செய்த படியே படித்து பாட்டம் பெற்றது பற்றியும்: தன்னுடய காதல் திருமணம் பற்றியும் தன் இரண்டு பெண் பிள்ளைகள் பற்றியும் எந்த வித அலட்டல்களும் மிகைப்படுத்தல்களும் இன்றி சொன்னான்.

என் மனதில் அவன் உயர்ந்து கொண்டே போனான்.

இந்த விடா முயற்சி; வென்று காட்ட அவன் உழைத்த உழைப்பு; கண்ட வெற்றிகள்.....மழை கார் இருட்டானாலும் மந்தி கொப்பிழக்கப் பாயாது அல்லவா? தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும் என்பதற்கு இந்த மனிதன் ஒரு சாட்சி.

’பின்ன எப்பிடி இஞ்சாலப் பக்கம்?’ இது என் குடும்பத்தாரின் ஆர்வம் மிக்க கேள்வி.

நல்லா உழைச்சன். குடும்பத்துக்கு நல்ல அடித்தளத்தை போட்டிட்டன். இனி நான் என்ர விருப்பத்த செய்யப் போறன் என்று தான் தன்னை அடையாளம் கண்டு அதற்கு உழைக்கப் போன தகவல்களை சொல்லத் தொடங்கினான்.

ஐரோப்பிய நாடுகளில் தமிழர்களால் வெளியிடப்பட்டு வந்த சஞ்சிகைகள் சொற்ப நாளிலேயே உயிர் விட்டு விடுவதால் சினிமா தான் தன் கருத்துக்களைச் சொல்ல ஒரு சிறந்த வழி என முடிவெடுத்து, மிக வருமானத்தை ஈட்டித் தந்து கொண்டிருந்த தொழிலை விட்டு விட்டு லண்டனில் உள்ள பல்கலைக்கழகமொன்றில் விரிவுரையாளராக தன்னை இணைத்துக் கொண்டாராம். ஏனெனில் அப்போது தான் தனக்கு, தனக்கு பிடித்த துறையில் படிக்க நேரம் இருக்கும் என்பதால் தான் அந்த முடிவை மேற்கொண்டதாகச் சொன்னான்.

அந்த விரிவுரையாளர் பணியைச் செய்த படி திரைப்படத்துறையில் முதுகலைமானிப் பட்டத்தை பெற்று படம் எடுக்க ஆரம்பித்ததாகச் சொன்னான்.

அவனால் எடுட்க்கப்பட்ட படம் தான் “ மண்”

மறு நாள் படத்தைத் தந்து பார் என்றான். எனக்கு ஒரு விதமான நோய் இருக்கிறது. ஒன்றை அது எதுவாக இருந்தாலும் அதற்கென்று ஒரு விதமான மனநிலை வாய்க்க வேண்டும்.ஆறுதலான ஒரு நேரம் கிட்ட வேண்டும்.

ஒரு விதமான ’ஒற்றைறோட்டு’ நான்.

எனக்கு இன்று தான் அதற்கான தருணம் வாய்த்திருந்தது.

ஈழத்தின் திரைப்பட வரலாற்றில் ஒரு புதிய திருப்பம்.”மண்” புதிய காலடி!!

நல்ல வேளையாக இந்திய பாதிப்புகள் எதுவும் நேர்ந்து விடாமல் யதார்த்தம் ததும்பத் ததும்பப் படமாக்கப் பட்ட சினிமா.  இயல்பு நிலை பேசும் ஒரு கதை. பாத்திரப்படைப்புகள் நடிப்பாற்றல், திரைப்பட பின்னணி, காட்சியமைப்பு, யதார்த்த தோற்றம், பேச்சு வாசனை, உச்சரிப்புத் தெளிவு, ஈழ மண் வாசம், திரை கதை வசனங்கள் சொல்லி விட்டு போகும் சில வசனங்கள் சாட்டையடியாக வந்து விழும் பாங்கு, பொருத்தமான கருத்தமைவுடனான சிறந்த பாடல்கள், விரசங்கள் அற்ற காட்சிகள்,  ... என எல்லாம் ஈழத்தமிழனின் தனித்துவம் சொல்லிப் போயின வெளிநாட்டின் தொழில் நுட்பத்தோடு.

இந்தப் படத்தைப் பார்த்த போது எனக்கு இரண்டு விடயங்கள் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.

1. சிங்களத் தொலைக்காட்சி நாடகங்களில் வரும் அந்த தனித்துவமான துல்லியம் /தத்ரூபம் மற்றும் தரம் / நுட்ப பார்வை!

2. வ.ஐ.செ.ஜெயபாலனின் கவிதைகள்.பாலியாறும் வன்னி மண்ணும் அதில் முகிழ்ந்து நிற்கும் வன்னி மண்ணின் வண்ண எழில்.

அது நிச்சயமாக யாழ்ப்பாணத்துக்கும்  புதிது!

வன்னி மண்ணின் விளைச்சல் இந்தப் புதியவன். வன்னி மண்ணுக்கு இந்த ஒரு விதை நெல் மூட்டை போதும் என்றே எனக்குத் தோன்றுகிறது.

வன்னி மண்ணில் மீண்டும் நெற்கதிர்கள் அசைந்தாடும்

புது நாற்றை  நட்டுச் செல்வாள் வெளிநாட்டுக் வன்னிச் சுறுக்கி. டிஜிட்டல் வேல்ட்டில் வன்னி மண் தன் வரலாற்றை கலையால் எழுதிச் செல்ல காலம் பூராய் நிலைத்திருக்கும் பண்னாடர வன்னியனின் தீரம்!அது போதும். “மண் வாழும்”

இதை என எழுத நினைக்க இப்போது வ.ஐ. செ. ஜெயபாலன் எழுதிய கவிதை மனதில் நிழலாடிப் போகிறது.

ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும் வ.ஐ. செ.ஜெயபாலன்.

பாலி ஆற்றின் கரையில் இருந்தேன்
மணல் மேடுகளில்
உயிர் வற்றும் நாணல்கள்.
காற்றில் பெருமூச்சைக் கலக்கும்
இரு மருங்கிலும்
பருத்து முறுகி தொந்தி வைத்த
கிழட்டு மருத மரங்கள்
கீழே புதியவை.

கூனிக் கூனி கூசிக் கூசி
ஏழைப்பட்டதோர் நிலக்கிழான் தனது
குலத்தொரு வீதியில் நடைமெலிதல் போல
கோடை தின்ற ஆறு நடந்தது
நாணற் புதர்களை நக்கி நனைத்தது
அல்லிக் கொடிகளின் கிழங்குகளுக்கு
நம்பிக்கை தந்தது
தூற்றி அகலும் பறவையைப் பார்த்து
மீண்டும் மாரியில் வருக என்றது
மண்ணுள் பதுங்கி இரு என
புல் பூண்டுகளின் விதைகளுக் குரைத்தது
ஒப்பாரி வைக்கும் மீன்களை அதட்டி
முட்டைகள் தம்மை மணலுள் புதைத்து
சேற்றுள் தலைமறைவாகி
வாழ்வுக்காகப் போரிடச் சொன்னது.
............
(எனத் தொடரும் அப்பாடல்)
(1986ம் ஆண்டு எழுதியது. நன்றி: நூலகம்)

மேலும் சில கவிதைகள்......

பாலி ஆறு நகர்கிறது

அங்கும் இங்குமாய்
இடையிடையே வயல் வெளியில்
உழவு நடக்கிறது
இயந்திரங்கள் ஆங்காங்கு
இயங்கு கின்ற ஓசை
இருந்தாலும்
எங்கும் ஒரே அமைதி

ஏது மொரு ஆர்ப்பாட்டம்
இல்லாமல் முன் நோக்கி
பாலி ஆறு நகர்கிறது.
ஆங்காங்கே நாணல்
அடங்காமல் காற்றோடு
இரகசியம் பேசி
ஏதேதோ சலசலக்கும்.
எண்ணற்ற வகைப் பறவை
எழுப்பும் சங்கீதங்கள்.
துள்ளி விழுந்து
‘துழும்’ என்னும் வரால்மீன்கள்.

என்றாலும் அமைதியை
ஏதோ பராமரிக்கும்
அந்த வளைவை அடுத்து
கருங்கல் மறைப்பில்
அடர்ந்துள்ள நாணல் அருகே
மணற் கரையில் ஒரு மருங்கம்
ஓங்கி முகடு கட்டி
ஒளி வடிக்கும்
மருத மர நிழலில்
எங்கள் கிராமத்து
எழில் மிகுந்த சிறு பெண்கள்
அக்குவேறு ஆணிவேறாய்
ஊரின் புதினங்கள்
ஒவ்வொன்றாய் ஆராய்ந்து
சிரித்து
கேலி செய்து
சினந்து
வாய்ச் சண்டை யிட்டு
துவைத்து
நீராடிக் களிக்கின்றார்.

ஆனாலும்
அமைதியாய்ப்
பாலி ஆறு நகர்கிறது

அந் நாளில்
பண்டார வன்னியனின்*
படை நடந்த அடிச் சுவடு
இந்நாளும் இம்மணலில்
இருக்கவே செய்யும்
அவன்
தங்கி இளைப்பாறி
தானைத் தலைவருடன்
தாக்கு தலைத் திட்டமிட்டு
புழுதி படிந்திருந்த
கால்கள் கழுவி
கைகளினால் நீரருந்தி
வெள்ளையர்கள் பின் வாங்கும்
வெற்றிகளின் நிம்மதியில்
சந்றே கண்ணயர்ந்த
தரை மீது அதே மருது
இன்றும் நிழல் பரப்பும்
அந்த வளைவுக்கு அப்பால்
அதே மறைப்பில்
இன்னும் குளிக்கின்றார்
எங்களது ஊர்ப் பெண்கள்

ஏது மொரு
ஆர்ப்பாட்டம் இல்லாமல்
பாலி ஆறு நகர்கிறது.
1968
* பண்டார வன்னியன் -ஈழத்து தமிழ் வன்னிப் பகுதியைப் பரிபாலித்த குறுநில மன்னன். 1803இல் கச்சிலை மடு போரில் வெள்ளையரால் கொல்லப் பட்டவன்.
இளவேனிலும் உழவனும்


காட்டை வகிடுபிரிக்கும்
காலச்சுவடான
ஒற்றையடிப்பாதை.
வீடுதிரும்ப
விழைகின்ற காளைகளை
ஏழை ஒருவன்
தோளில்
கலப்பை சுமந்து
தொடர்கிறான்.

தொட்டதெல்லாம் பொன்னாக
தேவதையின் வரம்பெற்ற
மாலைவெய்யில்
மஞ்சட்பொன் சரிகையிட்ட
நிலபாவாடை
நீளவிரிக்கிறது:
இதயத்தைக் கொள்ளையிட
வண்ணத்துப் பூச்சிகள்
வழிமறிக்கும்
காட்டுமல்லிகைகள்
காற்றையே தூதனப்பி
கண்சிமிட்டும்.

அழகில்
கால்கள் தரிக்கும்.
முன்நடக்கும் எருதுகளோ,
தரிக்கா.

ஏழையவன்
ஏகும்வழி நெடுந்தூரம்.

-1970


இப்படத்தை பார்க்கும் தோறும் வன்னியின் அந்த வளமும் வாழ்க்கை முறையும் கவிதைகளைப் போல வழியெல்லாம் துணை வந்தது.

என் அன்புக்குரிய இந்திய நெஞ்சங்களே! வருகிற மாதம் அல்லது அதைத்தொடர்ந்த மாதம் புதியவன் என்ற புனைபெயரில் இயங்கும் சண்ணின் புதிய திரைப்படம் “யாவும் வசப்படும்” இந்தியாவில் ஒரே சமயம் பல திரையரங்குகளில்  திரையிடப்பட இருக்கிறது. இங்கு வருகிற 6ம் திகதி திரையிட ஏற்பாடாகி இருக்கிறது.

எனக்கு நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கிறது.

முடிந்தால் படம் பார்த்து கருத்துச் சொல்லுங்கள்.

நானும் பார்ப்பேன்.8 comments:

 1. சண் சந்திப்பு ரசிக்க வைத்தது... "யாவும் வசப்படும்" படத்தைப் பார்க்கும் ஆவலைத் தூண்டிவிட்டது... நன்றி...

  ReplyDelete
 2. [quote]யாழ் மண் பெற்றெடுத்த புதல்வர்களிலும் பார்க்க முன்னணியிலும் திகழ்ந்தார்கள் என்று நான் பெருமையாகச் சொல்லிக் கொள்வேன்.[quote] இந்த பதிவுக்கு இந்த வசனம் தேவையா?யாழ் மண்ணில் சகலருக்கும் ஒரு கண்..கி...கி...காரணம் என்ன?இன்றைய இளைய சமுதாயம் இந்திய தமிழ்சினிமா பார்ப்பதன் மூலம் ஒரளவு தமிழ் பேச கற்று கொள்கிறார்கள் என்பது என் கருத்து.பகிர்வுக்கு நன்றிகள்

  ReplyDelete

 3. இந்த விடா முயற்சி; வென்று காட்ட அவன் உழைத்த உழைப்பு; கண்ட வெற்றிகள்.....மழை கார் இருட்டானாலும் மந்தி கொப்பிழைக்கப் பாயாது அல்லவா? தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும் என்பதற்கு இந்த மனிதன் ஒரு சாட்சி.

  அருமையான கனமான பகிர்வுகள்..

  ReplyDelete
 4. மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் தனபாலரே!கட்டாயம் பாருங்கோ. பார்த்த பின் உங்களோடு அது பற்றி பேச மிக்க ஆவல்.

  ReplyDelete
 5. /இந்த பதிவுக்கு இந்த வசனம் தேவையா?/ - ஆம். அவசியம் தேவை. எந்த ஒரு பிரத்தியேக வகுப்புகளுக்கும் செல்லாமல் பல்கலைக்கழகம் தெரிவான பல மாணவர்கள் அங்கும் தம் திறமையைப் புலப்படுத்தி சிறப்பாக மிளிர்ந்தார்கள். குறிப்பாக வர்த்தக, முகாமைத்துவ, மருத்துவ பீடங்களில்.

  / யாழ் மண்ணில் சகலருக்கும் ஒரு கண்..கி...கி...காரணம் என்ன? / - கண் வைக்க அது ஒன்றும் வசீகரமான வஸ்துவல்லவே? அதனிடம் இருக்கிறது ஒரு வித மேலாதிக்கப் போக்கு. அதுவும் அதன் அரசியலும் வன்னி மண்ணை மட்டும் ஒதுக்கி வைக்கவில்லை. மலையக மக்களையும் இஸ்லாமியத் தமிழர்களையும் ஒரு பொருட்டாகவேனும் மதிக்கவில்லை என்பது என் குற்றச் சாட்டு. (நான் ஒரு யாழ்ப்பானி என்பது இப்போதைக்கு ஒரு புறமாகவே இருக்கட்டும்.)

  /இன்றைய இளைய சமுதாயம் இந்திய தமிழ்சினிமா பார்ப்பதன் மூலம் ஒரளவு தமிழ் பேச கற்று கொள்கிறார்கள்/ - ஏற்றுக் கொள்கிறேன். எதை என்ற கேள்வியை இப்போதைக்கு விட்டு வைப்போம்.:))

  நன்றி புத்தன். உடனடியாக வந்து உங்கள் கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொண்டமைக்கு. தொடர்ந்து வாருங்கள்.

  ReplyDelete
 6. ஆம். செந்தாமரைத் தோழி. சற்றே இறுக்கமான ஒரு பதிவும் கூட என இப்போது தோன்றுகிறது.

  ’இதுவும் கடந்து போகும்’ :)

  ReplyDelete
 7. தமிழ்த்திரைப்படங்கள் பற்றிய பார்வையில் உங்களோடு ஒத்துப்போகிறேன் மணிமேகலா. ஆண்டுகள் பலவானாலும் அடிமனத்தைவிட்டு விலகாத பல அயல்மொழித் திரைப்படங்களோடு ஒப்பிடும்போது இந்த ஆதங்கம் அதிகமாவது உண்மை. எப்போதோ அத்திப்பூத்தாற்போல் சில அரிய படங்கள் தமிழில் வந்தாலும் தாகம் தீர்க்கப் போதுமானவையாய் இல்லை என்பதும் உண்மை. புதியவனின் வரவால் தமிழ்த்திரைப்படங்கள் தங்கள் தரத்தை உயர்த்திக்கொள்வது திண்ணம் என்பது தங்கள் பதிவின்மூலம் அறியமுடிகிறது.

  திரைத்துறையின் வணிக அரசியலில் மூழ்கி சோர்ந்துபோய்விடாமலும் சோரம்போய்விடாமலும் புதிய பாதையில் தொடர்ந்து பயணிக்க இயக்குநருக்கு வாழ்த்துக்கள்.

  கவிஞர் வ.ஐ.செ.ஜெயபாலன் அவர்களின் கவிதைகளைத் தனிப்பதிவாக்கியிருக்கலாம் என்பது என் கருத்து.

  இரட்டை விருந்து ஒரே இலையில்.அழுத்தமான இரு பதிவுகள் ஒரே நேரத்தில்! நெஞ்சம் நிறைந்திருக்கிறது. நெகிழ்ந்திருக்கிறது. அசைபோடவும் சீரணிக்கவும் அவகாசம் தேவையாய் இருக்கிறது! பகிர்வுக்கு நன்றி மணிமேகலா.

  ReplyDelete
 8. மிக்க மகிழ்ச்சி தோழி. ஆக்கபூர்வமான உங்கள் மனமார்ந்த கருத்துக்கள் நெஞ்சை நிறைக்கிறது.

  கனமான வார்த்தைப் பிரயோகங்களைத் தவிர்த்திருக்கலாம் என இப்போது தோன்றுகிறது.

  ஜெயபாலன் தனியாக பார்க்கப்படவேண்டியவரே.அவரது கவிதைகளில் திளைத்த சுகத்தை ’மண்’ படம் பார்க்கும் போதும் உணரமுடிந்ததை சொல்லத் தோன்றிற்று.அவரை ஒரு தடவை தனியாகச் சொல்ல வேண்டும் கீதா.அவரது அகதி சம்பந்தப்பட்ட கவிதை ஒன்று பலராலும் மேற்கோள்காட்டப்படுவதுண்டு. உண்மையில் அதைத்தவிர பல அழகிய கவிதைகளின் பாத்திரதாரி அவர்.

  நன்றி கீதா. உங்கள் உளமார்ந்த கருத்துக்களுக்கு.

  ReplyDelete