Friday, June 14, 2013

பாலர்களும் பள்ளிக் கூடமும்: அன்றும் இன்றும்

சுமார் 35, 40 வருடங்களுக்கு முன்னர் பாலர்களின் பள்ளியெழுச்சியோடு கோபால் பல்பொடிக்கு ஒரு தவிர்க்க முடியாத தொடர்பிருக்கும்.காலை எழுந்தவுடன் பல்லினைத் துலக்கும் கோபால் பல்பொடியினால் பல்துலக்குதல் அவர்களின் நாளாந்த கடமைகளில் ஒன்று.அது இளம் றோஸ் வண்ணத்தில் சற்றே இனிப்புச் சுவை சேர்த்த பல்துலக்கும் தூள்.உமிக்கரியினால் உண்டாக்கப் பட்டதாக இருக்க வேண்டும்.இப் பல்பொடி வருவதற்கு முன்னர் உமியினை எரித்து அதனை ஒரு கொள்கலனில் போட்டு வைத்து அதனைப் பல்துலக்கப் பயன் படுத்தியது நம் முன்னோரின் தொழில் ரகசியம். அதற்கும் முன்னர் கரித்துண்டுகளும் பல்துலக்கப் பயன் பட்டதாக அறிகிறோம்.

இவற்றினால் பல்துலக்கி பாடசாலைக்கு புறப்பட்ட பின் கொண்டு செல்லும் பையில் ஒரு சிலேட்டும் சிலேட் பென்சிலும் இருக்கும்.அது எப்படி ஆக்கப் பட்டது என்பது பற்றி எனக்கதிகம் தெரியாது. ஆனாலும் அது உடையத்தக்க கறுப்பு வண்ண மரச்சட்டங்கள் நாற்புறமும் பொருத்திய ஒரு தட்டு வடிவம். அதற்கெனக் குறிப்பிட்ட பென்சிலும் இருக்கிறது. அழித்து எழுதக் கூடியது. அதுவும் ஒரு சிறுமியின் படம் போட்ட பாலர் போதினியும் புத்தகப் பையினுள் இருக்கப் பாலர்கள் பாடசாலைக்குப் புறப்படுவார்கள்.சற்றே வளர்ந்த முதலாம் இரண்டாம் வகுப்புக்குப் போகிற பாலர்களாக இருந்தால் ஒற்றைறூள், இரட்டை றூள், நாலுறூள், சதுரறூள் கொப்பிகள் திருத்தமான எழுத்து வடிவத்தைத் தீர்மானிப்பதற்காகப் புளக்கத்தில் இருந்தன.

அரிச்சுவடியும் வாய்ப்பாடும் அதாவது எண்ணும் எழுத்தும் பாடமாக்கச் சொல்லிப் போதிக்கப் பட்டன.பனையோலையைச் சீவி வாரி பதப்படுத்தி அதில் தெளிவான தமிழ் அகர வரிசை எழுதப் பட்டிருக்கும்.மறு பக்கம் 1 - 9 வரையான எண்கள் பதியப் பட்டிருக்கும்.அதில் ஒரு சுபமுகூர்த்தத்தில் சரஸ்வதிப் பூசையின் கடசி நாள் விஜயதசமி அன்று கோயிலிலோ பாடசாலையிலோ ஒரு குருவானவரால் அரிசியில் எழுதி கற்கண்டு வாங்கிய தருணத்தில் இருந்து அந்த ஏடு கையோடு வரும். பின்னர் அவை மட்டைகளிலும் புத்தகங்களின் பின் புறங்களிலும் இடம் பெற இவற்றின் முக்கியத்துவம் குறைந்து போயிற்று.

பெரும்பாலான பாடங்கள் பாடமாக்கவே சொல்லித் தரப் பட்டன. குறிப்பாக மெய் எழுத்துக்கள் உயிர் எழுத்துக்கள், 1 - 16 வரையான வாய் பாடுகள் கட்டாயமாகப் பாடமாக வேண்டியவையாக இருந்தன.கணக்குப் பாடம் குறிப்பாக கூட்டல் கழித்தல் என்பன விரல்களால் மடித்து எண்னவும் மனதில் வைத்து கூட்டிக் கழிக்கவும் சொல்லித் தரப்பட்டன.பள்ளிக் கூடப் பைகளும் தண்னீர் போத்தலும் ஆடல் பாடலும் மர நிழலில் விளையாட்டும் பாலர்களின் சந்தோஷத்துக்குரிய பகுதிகள். விளையாட்டுகள் பெரும்பாலானவை ஓடிப்பிடித்து, ஒழிச்சுப் பிடிச்சு, கண்கட்டி விளையாட்டு, மாபிள் அடித்தல், காகிதக் கப்பல் விடுதல், எவடம் எவடம் புளியடி புளியடி போன்ற விளையாட்டுகள் அவர்களிடம் பிரபலம் பெற்றிருந்தன.நேர்சரி றையம் என்று சொல்லக் கூடிய பாலர்களின் பாடல்களில் வண்ணாத்திப் பூச்சி வண்ணாத்திப் பூச்சி பறக்குது  பார்,பறக்குது பார், அழகான செட்டைகள் அழகான செட்டைகள் அடிக்குது பார் அடிக்குது பார் .... பாட்டும் புள்ளிப் புள்ளி மானே துள்ளித் துள்ளி ஓடுறாய் அள்ளி இந்தப் புள்ளியை யார் உனக்கு தந்தது என்ற பாடலும் பிரபலம் பெற்றிருந்தது.

இன்று கால மாற்றங்கள், தொழில் நுட்ப முன்னேற்றங்கள் பல விடயங்களிலும் செல்வாக்குச் செலுத்துவது போல இப்பாலர்களின் வாழ்வு முறையிலும் பல மாற்றங்களைக் கொண்டு வந்து சேர்த்து விட்டிருக்கிறது. காலை எழுந்தவுடன் பல்பொடி இல்லை. அதற்குப் பதிலாக பற்பசையும் பற்தூரிகையும் வந்து பல தசாப்தங்கள் ஆகி விட்டன. பற்தூரிகையும் பற்ரறியில் இயங்குவனவாக நவீன வடிவம் கொண்டு விட்டன. பிள்ளைகள் தொலைக்காட்சியில் காட்டூன் பார்த்து பள்ளிக்குப் போகிறார்கள்.பாடப் புத்தகங்களுக்குப் பதிலாக டிஜிட்டல் பொருட்கள் வந்து விட்டன. பாடமாக்க வேண்டிய தேவைகள் அற்றுப் போய் அவற்றைக்  கல்குலேற்றர்களும் கணணிகளும் செய்கின்றன. விளையாட்டுக்களும் கணணியூடாகவே நடைபெறுகின்றன. ஆங்கிலப் பாடல்களைச் சொல்லிக் காட்டும் பாலகர்களே இப்போது அதிகம்.

இதனால் நட்பு அன்னியோன்னியம்,உடல் ஆரோக்கியம்,பகிர்ந்து கொள்ளும் இயல்பு, வாழ்க்கை முறை, உணவு பழக்கவழக்கம், இவற்றினால் ஏற்படும் குண இயல்பு என்பன இன்னொரு தளத்தை அடைந்திருக்கிறது.

ஒரு மூன்று வயதுப் பாலகன் மிகச் சரியாக கைத் தொலைபேசியில் படம் எடுக்க கற்றுக் கொண்டிருக்கிறான். ஐபாட்டில் கூகுளுக்குப் போய் தனக்குப் பிடித்த படத்தை கண்டடைகிறான்.சுற்றி வர இருப்பவர்களை புறக்கணித்து பசிதாகம் மறந்து கொபியூட்டர் விளையாட்டில் அல்லது காட்டூன் சித்திரத்தில் மூழ்கிப் போய் விட விரும்பும் சிறார்கள் இன்று அதிகம். மனித சகவாசத்தை விட இந்த டிஜிட்டல் கருவிகள் அவர்களின் சிந்தனைப் போக்கிலும் ஆழுமையிலும் அதிகம் தாக்கத்தைச் செலுத்துகின்றன

நாம் வாழும் காலத்தில் நாம் கண் முன்னால் கண்ட மாற்றங்கள் இவை!


7 comments:

 1. இனிய பழைய நினைவுகள் ஞாபகம் வந்தது...

  ...ம்... எவ்வளவோ மாற்றங்கள்...

  ReplyDelete
 2. பாலர்களும் பள்ளிக்கூடமும் - அந்நாளையப் பள்ளிநாட்களை மீண்டும் அசைபோட்டு மகிழவும் பொருமவும் செய்த பதிவு. பாலர் பள்ளி வழக்கங்கள் மாத்திரமல்ல, பாலர் மனநிலையும் மாறிவிட்டது இப்போது. உனக்கு ஒன்றும் தெரியாது என்ற கண்ணோட்டத்திலேயே பெற்றவரையும் மற்றவரையும் பார்க்கும் காலமாகிவிட்டது. காலமாற்றத்தால், புலம்பெயர்வால், நாகரிக வளர்ச்சியால், பெருகிவரும் தொழில்நுட்ப வசதிப்பெருக்கத்தால் நாம் இழந்துவரும் இனிய நிகழ்வுகளில் இதுவும் ஒன்று.

  ReplyDelete
 3. மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை குழந்தைகள் நமக்குச் சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

  அவர்கள் திரும்பிப் பார்க்க தயாராக இல்லை. நம்மால் அவர்கள் வேகத்துக்கு ஓட முடியவில்லை.

  வாழும் காலம் என்பது ஒரு வித ஓடிப்பிடித்து விளையாட்டுத் தான் போலும்!

  நன்றி பகிர்வுக்கு தோழர்களே!

  ReplyDelete
 4. இரு நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்டதல்லவா நம் வாழ்வு...

  இதுவும் நிலையல்ல தோழி...

  ReplyDelete
 5. ஓம் நிலா. உண்மை தான்.

  ReplyDelete
 6. கோபால் பற்பொடியையும்,சிலேட்டும் எனது சிறுவயது ஞாபகத்தை தூண்டுகிறது, பகிர்வுக்கு நன்றிகள்

  ReplyDelete
 7. மகிழ்ச்சி புத்தன். எனக்கும் அம்மாதிரியான நினைவுகள் உண்டு.

  பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

  ReplyDelete