ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்கிறார்களே! - இது உண்மையா என்ற கேள்வி எனக்கு நெடு நாட்களாய் உண்டு.
ஏன் ஆண்களுக்கு குறிப்பாக கணவான்களுக்கு சுயமாக புத்தியே இல்லையா? அல்லது சுயமாக சிந்திக்கத் தெரியாதவர்களா அவர்கள் !
அது மாதிரி இன்னொரு கருத்தும் ஒன்று சொல்வார்கள். ’எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே பின் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பதிலே’ என்று!
ஆணுக்கு அதில் ஒரு பங்குமே கிடையாதா என்ன?
அதுமாதிரி இன்னொன்று இருக்கிறது. அது, ’மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்!’ அப்படியென்றால் கணவன் ஒரு பெண்ணுக்கு அமைவதெல்லாம் யார் கொடுத்த வரம்! சாத்தான் கொடுத்த வரமாய் / சாபமாய் இருக்குமோ?
இப்படிக் கொதிச்சு போய் ஒரு பதிவு போட அண்மையில் வாசித்த ஒரு கட்டுரை காரணமாயிற்று. திராவிடப்பண்பாடு எத்தனை தூர நோக்கோடு புராதன காலத்திலேயே பெண்ணைக் கடவுளாக்கி பின்னால் அவள் வளராது வீழ்த்த எத்தகைய படுகுழியை வைத்திருக்கிறது என்ற அயர்ச்சியே அதனை வாசித்த போது மிஞ்சியது.
எத்தனை எத்தனை காலங்கள் உருண்டோடிப் போயினுமென்ன! இன்னும் அதனைப்பற்றிப்பிடித்தபடி ...................
இரண்டாயிரம் ஆண்டுகால பழமை நமக்கு!.................
திராவிடப் பெண்ணை அது ஒரு கற்பு விலங்காக காலாகாலத்துக்குமாகக் கட்டிப் போட்டு வைத்திருக்கிறது
அது மாத்திரமல்ல எதனைச் செய்தாலும் அதனைப் பெண்னோடு சம்பந்தப்படுத்தி பழி போடும் விற்பன்னத்தையும் அது காலாகாலத்துக்கும் செய்து தான் வந்திருக்கிறது.
உடன்கட்டை ஏறுதல், மறுதார மறுப்பு, சீதனக் கொடுமை, பால்ய விவாகம், பெண் சிசுக் கொலை, கற்பழிப்பு, கல்வி மற்றும் வாக்குரிமை மறுப்பு,.....
எத்தனையைத் தாண்ட வேண்டி இருந்திருக்கிறது ? இன்னும் இருக்கிறது!
. ‘கற்புள்ள கருவாடாக’ எத்தனை பெண்கள்! இன்னமும் இன்னமும்.
பெண்கள் சொத்தாக / தம் உரிமைப்பண்டமாகப் பார்க்கப் படுவதில் இருந்து அவள் விடுபடும் நாள் என்று வரும்? சக மனிதப்பிறவியாய் ஆகும் நாள் என்று வரும்?
இப்படியான நிலைமையில் பெண்ணை எப்படியாக மதிக்கிறது திராவிடப்பண்பாடு?
புறநானூறில் ஒரு பாடல் வருகிறது இப்படி!
பெண்ணை உடமைப் பொருளாக்கி அவளிடம் எத்தகைய விருப்ப
அனுமதிகளும் பெறாமலே அவள் பொருட்டுப் போருக்குப் புறப்பட்டுப் போன சமூகத்தையும் அதற்குக் கூட அவளையே குற்றவாளிஆக்கிய கதையையும் புறநானூறு பாடல் 345 சொல்லும் இந்தக் கதையைக் கேழுங்கள்.
களிறு அணைப்பக் கலங்கின, காஅ;
தேரி ஓடத் துகள் கெழுமின தெருவு;
மா மறுகலின் மயக் குற்றன வழி;
கலங் கழாஅலின் துறைகலங் குற்றன;
தெறல் மறவர் இறை கூர்தலின்
பொறை மலிந்து நிலன் நெளிய,
வந்தோர் பலரே, வம்ப வேந்தர்,
பிடி உயிர்ப்பு அன்ன கைகவர் இரும்பின்
ஒவு உறள் இரும்புறம் காவல் கண்ணிக்
கருங்கண் கொண்ட நெருங்கல் வெம்முலை,
மையல் நோக்கின் தையலை நயந்தோர்
அளியர் தாமே; இவள் தன் ஐ மாரே,
செல்வம் வேண்டார், செருபுகல் வேண்டி,
‘நிரல் அல் லோர்க்குத் தரலோ இல்’ என,
கழிப்பிணிப் பலகையர், கதுவாய் வாளர்,
குழா அம் கொண்ட குருதிஅம் புலவொடு
கழாஅத் தலையர் கருங்கடை நெடுவேல்
இன்ன மறவர்த்து ஆயினும், அன்னோ!
என் ஆவது கொல் தானே
பன்னல் வேலிஇப் பனைநல் ஊரே!
(பாடல் 345 பாடியவர்: அடைநெடுங் கல்வியார்)
இவள் தமையன் மார்களோ தமக்கு நிகரான வீரம் இல்லாதவர்களுக்கு தருவதில்லை என்று சொல்லி, அவர்கள் தரும் செல்வத்தை விரும்பாதவர்களாய் போர் செய்வதை விரும்பி கழிகளால் பின்னிக் கட்டப்பட்ட கேடயத்தை ஏந்தி, வடுக்களை உண்டாக்கும் கூர்மையான வாளையும் ஏந்தினர். புலால் நாற்றம் கொண்ட வலிமையான காம்புடைய கொடிய வேலை ஏந்தி கழுவாத தலையுடையவராய் நின்றனர்.
படை எடுக்க வந்த வீரர்கள் தங்கிய நிலையில் போர் யானைகளைக் கட்டுவதால் சோலையில் உள்ள மரங்கள் பாழ் பட்டன. தேர்கள் செல்வதால் தெருக்கள் புழுதியால் நிரம்பின. குதிரைகள் சாரி சாரியாகச் செல்வதால் வழிகள் உருத்தெரியாது மறைந்துள்ளன. படைக்கலங்களைக் கழுவுவதால் நீர் துறைகள் பாழாகின. இரும்பு போலும் இரட்டைக் கதவுகளையுடைய வழியைத் தாக்குவதற்கு வந்த புதிய வேந்தர்கள் பலராவர்.
இத்தகைய வீரர்கள் சூழ்ந்த பருத்தி வேலியுடைய இந்த நல்லூர் இனி என்னாகுமோ? )
இது,காலைக்கொண்டுபோய் கல்லோடு மோதி விட்டு ‘கல்லடித்துவிட்டது’ என்று சொல்வது போல் இருக்கிறதா இல்லையா?
இந்த இடத்தில் தான் பாரதி உயர்ந்து நிற்கிறான்!
அண்மையில் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அதிகாலை ஒலிபரப்பில் திரு. பவராஜா அவர்கள் பாரதியார் பெண்ணுக்கு வழங்க வழங்கப்பட வேண்டும் என்று விரும்பிய உரிமைகள் சம்பந்தமான ஒரு பாரதியாரின் கட்டுரையை வாசித்தார்.அவரிடம் அதனைக் கேட்ட போது பெரிய மனதோடு அதனை நிழல்பிரதி செய்து அக்கட்டுரையை எனக்குக் கையளித்தார்.
அது முழுவதுமே பதியத்தக்கது தான் என்ற போதும் சில பகுதிகளை மாத்திரம் இங்கே குறிப்பிடுகிறேன்.
“ அடிமைகள் யாராயினும் அவர்களுக்கு விடுதலை கொடுத்தால் அதினின்றும் யுகப்பிரளயம் நிச்சயமாக நேரிட்டு அண்டச்சுவர்கள் இடிந்து போய் ஜகமே அழிந்து போய் விடும் என்று சொல்லுதல் அவர்களை அடிமைப்படுத்தி ஆள்வோருடய ஸம்பிருதாயம்.
இருபது முப்பது வருஷங்களுக்கு முன்பு பெண்கல்வி ஏற்பட்டால் மாதர் ஒழுக்கத்தில் தவறி விடுவார்களென்று தமிழ் நாட்டில் பலர் கூறினர். இப்போதோ பெண்கல்வி தமிழ் நாட்டில் சாதாரணமாகப் பரவியிருக்கிறது.அண்டச்சுவர்கள் இன்னும் இடிந்து போகவில்லை.இதுவரை கூடிய மட்டும் பத்திரமாகவே இருந்து வருகின்றன. ஆனால், இப்பொழுது பெண்களுக்கு விடுதலை கொடுத்தால் ஏழு லோகமும் கட்டாயம் இடிந்து பூமியின் மேல் விழும் என்றும் வால் நட்சத்திரம் வகையறாக்கள் எல்லாம் நடுவில் அகப்பட்டு துவையலாய் விடும் என்றும் பலர் நடுங்குகிறார்கள்....................
பெண்களுக்கு விடுதலை கொடுப்பதால் ஜனசமூகம் குழம்பிப் போய் விடும் என்று சொல்லுவோர் பிறர் தமது கண்முன் சுயேச்சையுடன் வாழ்வதைத் தாம் பார்க்கக் கூடாது என்ற அசூயையால் சொல்கிறார்களேயொழிய வேறொன்றும் இல்லை.
....................விடுதலையாவது யாது? என்ற மூலத்தை விசாரிக்கும் படி நேரிடுகிறது. இதற்கு மறுமொழி சொல்லுதல் வெகு சுலபம். ‘ பிறருக்குக் காயம் படாமலும், பிறரை அடிக்காமலும், கொல்லாமலும், அவர்களுடய உழைப்பின் பயனைத் திருடாமலும் மற்றபடி ஏறக்குறைய ‘நான் எது பிரியமானாலும் செய்யலாம் என்ற நன்நிலையில் இருந்தால் மாத்திரமே என்னை விடுதலையுள்ள மனிதனாகக் காணக்கிடைக்கும்.’ பிறருக்குத் தீங்கில்லாமல் அவனவன் தன் இஸ்டமானதெல்லாம் செய்யலாம் என்பதே விடுதலை’ என்று ஹெர்பர்ட். ஸ்பென்ஸர் சொல்கிறார்.
...................இப்படி நமது ஸ்திரிகள் இருக்கலாமே என்று கேட்டால் கூடாது என்றுதான் சொல்லுவார்கள்.காரணமென்ன? ஐரோப்பிய ஸ்திரிகளைக் காட்டிலும் நமது ஸ்திரிகள் இயற்கையிலேயே நம்பத்தகாதவர்கள் என்று தார்ப்பரியமா? மேலும் ஐரோப்பியரை திருஷ்டாந்தம்( உதாரணம்) காட்டினால் நமக்கு சரிப்படாது. கேவலம் ஐரோப்பியர் என்று சொல்லிச் சிலர் தலையசைக்கலாம்.
பெண்களுக்கு விடுதலை கொடுப்பதில் இன்னும் முக்கியமான - ஆரம்பப் படிகள் எவையென்றால்
1.பெண்களை ருதுவாகுமுன்பு விவாகம் செய்து கொடுக்கக் கூடாது.
2. அவர்களுக்கு இஸ்டமில்லாத புருஷனை விவாகம் செய்து கொடுக்கக் கூடாது.
3. விவாகம் செய்து கொண்ட பிறகு அவள் புருஷனை விட்டு நீங்க விரும்பினால் நீங்க இடம் கொடுக்க வேண்டும். அதன் பொருட்டு அவளை அவமானப்படுத்தக் கூடாது.
4. பிதுரர்ஜிதத்தில்பெண்குழந்தைகளுக்கு ஸ்மபாகம் செய்து கொள்வதைத் தடுக்கக் கூடாது.
5. விவாகமே இல்லாமல் தனியாக இருந்து வியாபாரம்,கைத்தொழில் முதலியவற்ரால் கெளரவமாக ஜீவிக்க விரும்பும் ஸ்திரீகளை யதேச்சையாக தொழில் செய்து ஜீவிக்க இடம் கொடுக்க வேண்டும்.
6. பெண்கள் கணவனைத் தவிர வேறு புருஷருடன் பேசக்கூடாதென்றும் பழகக் கூடாதென்றும் பயத்தாலும் பொறாமையாலும் ஏற்படுத்தப்பட்ட நிபந்தனையை ஒழித்து விட வேண்டும்.
7. பெண்களுக்கு ஆண்களைப்போலவே உயர்தரக் கல்வியில் எல்லாக் கிளைகளிலும் பழக்கம் ஏற்படுத்த வேண்டும்.
8. தகுதியுடன் அவர்கள் அரசாட்சியில் எவ்வித உத்தியோகம் பெற விரும்பினாலும் அதைச் சட்டம் தடுக்கக் கூடாது.
..........................
வாழ்க பாரதி!
நல்லவை நடப்பதும் பெண்ணாலே... கெட்டவை அழிவதும் பெண்ணாலே... அதனால் மனைவி எனும் தாய் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்...!
ReplyDeleteமுக்கியமான ஆரம்பப் படிகளுக்கு வாழ்த்துக்கள்...
ரொம்பத்தான் கடுப்பாய் இருக்கிறீங்கள் ...கட்டுரைக்கு நன்றிகள்
ReplyDeleteஎன் அன்பு நண்பர் தனபாலருக்கு,
ReplyDelete/நல்லவை நடப்பதும் பெண்ணாலே... கெட்டவை அழிவதும் பெண்ணாலே... அதனால் மனைவி எனும் தாய் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்...! /
இங்கு தான் படுகுழிக்கான சுருக்கு போடப்படுகிறது என்பது என் எண்ணம். மக்கள் யாரும் ’இவரால் தான் இது நடக்கிறது’ என்று சொல்லாமல் அவரவர் செய்கைக்கு அவரவரே பொறுப்பு என்ற உண்மையைப் புரிந்து கொண்டாலே போதும்.
பெண்ணினம் வாழும்!
ரொம்பத்தான் புத்தன்.
ReplyDeleteஉலகத்திலேயே திராவிடப் பெண் விலங்கு ஒன்று தான் கற்பு விலங்காக( மிருகமாக) இருக்கிறாள்.
கற்பு இருக்கட்டும். அது இருசாராருக்கும் பொதுவில் இருக்கட்டும்!!
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_21.html) சென்று பார்க்கவும்... நன்றி...
தந்தை பெரியாரின் 'பெண் எப்போது அடிமையானாள்?' வாசித்திருக்கிறீர்களா மணிமேகலா? அதே வேகமும் அதே விவேகமும் தெரிகிறது உங்கள் பதிவில். இன்னும் போகவேண்டிய தூரம் அதிகம் இருக்கிறது. உந்திச் செலுத்த உங்களைப் போன்றவர்கள் இருக்கும்போது இலக்கு என்பது இலகுவில் எட்டாமலா போய்விடும்? பகிர்வுக்கு நன்றி மணிமேகலா.
ReplyDeleteஆமாம் ஆமாம் பார்த்தேன் நண்பரே!
ReplyDeleteதெரியப்படுத்தியமைக்கும் மிக்க நன்றி.
அங்கிங்கெணாதபடி எங்கும் நிறைந்திருக்கிறீர்கள்! அறிந்தும் அறியப்படுத்தியும் கருத்துக் கூறியும் அடிக்கடி வந்து போகும் உங்களுக்கு என் விசேட நன்றியை நான் அவசியம் சொல்ல வேண்டும்.
நம் வீட்டுப் பிள்ளை போல; அடிக்கடி வந்து போகும் ஒரு பக்கத்து வீட்டுக்காரரைப் போல ஒரு பிரமை.
அவர்கள் வருகின்ற போது சுடச்சுட ஒரு பதிவு இப்படியாக! :)
ஒரு பக்கம் சங்கோஜமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் ஆவலாகவும் இருக்கிறது. அவர்கள் கருத்தையும் அறிய.
விமர்சனம் வேண்டும். வளர!
மீண்டும் மிக்க நன்றி தனபாலரே!
என் அன்பு கீதா,
ReplyDeleteமீண்டும் ஒரு புள்ளியில் ஒன்றுபட்டோம். மகிழ்ச்சி.
பெரியாரை வாசிக்கவில்லை. இணையத்தில் தேடிப்பார்க்கிறேன். தெரியப்படுத்தியமை மிக்க பயனுடைத்து!
குறிப்பிட்ட எனக்குக் கொதிப்பேற்றிய அந்தக்கட்டுரையை வாசித்த பின் வேலையில் இருந்து விடுப்பெடுத்து நகரசபை நூலகத்தில் இருந்து புறநானூறு எடுத்து முழுவதையும் படித்தேன். அங்கு - குறிப்பாக ஆரிய வருகைக்கு முன் பெண் எப்படிப் பார்க்கப்பட்டாள் என்பதை அறிய.
ராஜம். கிருஷ்னனின் காலந்தோறும் பெண்’ படித்தேன்.
மற்றும் புலம்பெயர்ந்த பெண்கள் நோர்வேயில் இருந்து வெளியிட்ட ‘புது உலகம் எமை நோக்கி’ சிறுகதைத்தொகுப்பில் சில கதைகளை வாசித்து மேலும் பார்வையில் தெளிவு பெற்றேன்.
கூடவே ராகுல சங்கிருத்தியாயன் மனதில் இருந்து மேலெழுந்து உரத்து ஓங்கிக் குரல் கொடுத்து சில இடங்களை விளக்கிச் சென்றார்.
மேலும் பெண்கள் இன்னும் வளர்த்தெடுக்க வேண்டி இருக்கின்ற தன்னம்பிக்கை, கல்வி, வெளியுலகப்பார்வை போன்ற சுய பார்வையும் கூடவே வந்து போனது.
சுடச்சுட விரிவாக ஒரு கட்டுரை எழுதி வைத்திருக்கிறேன்.அந்தக் குறிப்பிட்ட கட்டுரைக்கு எதிர் வினையாக. ஆனாலும் கொஞ்சம் ஆறப்போட வேண்டும்.
அதில் கோபம் தெரிகிறது. அதற்குள் உண்மை மறைந்து விடக்கூடாது. 2 நாள் ஆறப்போட்டால் நல்லது கெட்டது மேலும் விளங்கும். விளங்க வேண்டும்.
உங்களைப்போன்றவர்கள் இங்கிருந்தால் நிறைய விடயங்களைப் பேசி தெளியலாம். அதற்கான வாய்ப்புகள் இங்கில்லை. அதனால் தான் இந்தச் சுருக்கப்பதிவு.
என் எண்ணம் ஈடேறிற்று.
என்னை இது விடயத்தில் யாரும் வடிவமைத்தால் நல்லது. ரொம்பவும் உணர்வு பூர்வமாக இருப்பதாகத் தோன்றுகிறது.
மிக்க நன்றி கீதா. எல்லாவற்றுக்குமாக!