Sunday, January 26, 2014

ஜனவரி ‘ 26

’யாதும் ஊரே; யாவரும் கேளிர்’

’தீதும் நன்றும் பிறர் தர வாரா’

’பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே’
- புறம் - 192 -

இத்தனை அடிகளும் ஒரே பாடலில் சுமார் கிபி 1 - 3 நூற்றாண்டுக்குள் திராவிடப்பன்பாடு சொல்லி வைத்து விட்டுப் போயிருக்கிறது. அதன் சிறப்புப் பற்றி எல்லாம் பலரும் சொல்லி விட்டார்கள். என்றாலும் கூட அதை இன்றும் பார்த்து அனுபவித்து வியக்காமல் இருக்க முடிவதில்லை.கடந்து போக முடிவதில்லை.

பார்க்கும் தோறும் மனம் குளிர்ந்து போகிறது! ஒரு பெருங் கலாசார பின்னணி கொண்ட பழம் பெரும் மொழியின் பிரதிநிதிகளாய் இருந்து வந்தோமென மனம் பெருமிதம் கொள்கிறது.

இன்று நான் சொல்லப்போகிற பாடல் அதற்கு முதலில் வைக்கப்பட்டிருக்கிற பாடல்.191 வது பாடல். பிசிராந்தையார் பாடியது.

‘யாண்டு பலவாக நரையில ஆகுதல்
யாங்கு ஆகியர்? என வினவுதீர் ஆயின்,
மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர்;
யான் கன் டனையர் என் இளையரும்; வேந்தனும்
அல்லவை செய்யான், காக்கும்; அதன் தலை,
ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர்யான் வாழும் ஊரே!”

உமக்கு ஆண்டுகள் பல கடந்தும் தலையில் ஒரு நரைமயிரும் தோன்றாமல் இளமையாக இருப்பதற்கு காரணம் யாது என்று வினவினீர்களாயின் சொல்லுகிறேன் கேழுங்கள்! என் மனைவி மாட்சிமை உடையவள். புதல்வர்களும் அறிவு நிரம்பப் பெற்றவர்கள். என்னுடய பணியாட்கள் என்னுடய எண்ணங்களுக்கேற்ப வேலை செய்கிறார்கள்.என் அரசனும் அறமில்லாதவற்றைச் செய்யாதவன். அவ்வாறானவனுடய தலைமை ஊரைக் காக்கிறது.கற்றுத் தெளிந்து அடக்கத்தோடு வாழும் சான்றோர்கள் என்னைச் சூழ என் ஊரில் குடி இருக்கிறார்கள். (அதனால் நான் நரை இல்லாது இளமைப் பொலிவோடு இருக்கிறேன்)

ஆஹா! எத்தனை அழகிய வாழ்க்கை! இப்படிப் பார்த்துப் பார்த்து வியந்து மயங்கும் வகையில் இன்னொரு பாடலும் புறநானூறில் இருக்கிறது. அது 57 வது பாடல். பாடிய புலவர் காவிரிப்பூம் பட்டினத்து காரிக் கண்ணனார்.

”வல்லார் ஆயினும், வல்லுனர் ஆயினும்,
புகழ்தல் உற்றோர்க்கு மாயோன் அன்ன
உரைசால் சிறப்பின் புகழ்சால் மாற!
நின்னொன்று கூறுவதுடையேன்; என் எனில்,
நீயே, பிறர் நாடு கொள்ளும் காலை, அவர் நாட்டு

இறங்கு கதிர்க் களனிநின் இளையரும் கவர்க!
நனந்தலைப் பேரூர் எரியும் நைக்க!
மின்னு நிமிர்ந் தன்ன நின் ஒளிறு இலங்கு நெடுவேல்
இன்னார்ச் செகுப்பினும் செகுக்க; என்னதூஉம்
கடிமரம் தடிதல் ஓம்பு; நின்
நெடுநல் யானைக்குத் கந்து ஆற் றாவே!”

எளியவர்களானாலும் வல்லவர்களானாலும் உன்னைப் புகழ்பவர்களுக்கு திருமாலைப்போல துணை நின்று வாழ வைக்கும் சிறப்பினை உடைய பாண்டிய மாறனே! உன்னிடம் சொல்வதற்கு என்னிடம் ஒரு விடயம் உண்டு. என்னவென்றால், நீ பிறருடய நாட்டைக் கைப்பற்றுகின்ற போது அந் நாட்டின் நீர் நிலைகளுக்கருகில் முற்றிய கதிர்களோடு செழித்து விளைந்து நிற்கிற விளைச்சலை உன்னுடயவர்கள் கொள்ளை இடுவதாயினும் கொள்ளையிடுக. நலம் மிக விளங்கி நிற்கிற பட்டினங்களை எரியூட்டுவதாயினும் எரியூட்டுக. மின்னி நிமிர்ந்து நிற்கிற உன் வேலினால் பகைவர்களை கொல்லுவதாயினும் கொல்லுவாயாக! உன்னோடு சேர்ந்து உன் வீரர்கள் என்ன செய்வதாயினும் செய்யட்டும்.

ஆனால், காவல் மரங்களை மட்டும் அழித்து விடாதே! அது உன் யானைகளுக்கு ஒரு போதும் போதப்போவதில்லை.

மரங்களுக்காகக் கூட அவற்றைக் காப்பாற்றவேண்டி தூது போன தேசம்!

’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என தம் வாழ்வை சகல உயிர்களுக்குமாக சிந்தித்து; இந்த உலகப் பந்தை  உயிர் வாழும் சகல உயிரினங்களோடும் பகிர்ந்து வாழ்ந்த ஒரு மக்கள் கூட்டம்!

அண்டத்தில் உள்ளதே பிண்டம்
பிண்டத்தில் உள்ளதே அண்டம்
அண்டமும் பிண்டமும்  ஒன்றே
அறிந்து நாம் பார்க்கும் போதே”

என்ற பிரபஞ்ச இயக்கம் பற்றிய தெளிவான புரிதலோடு இருந்த தேசம்!

முல்லைக்குத் தேர் கொடுத்த பாரியும் ; மயிலுக்கு போர்வை கொடுத்த பேகனும்; மணிகள் ஒலிக்க வேகவேகமாகத் தேரோட்டி வந்த போது சிறு பறவைகள் சிதறி ஓடுவதைப் பார்த்து மணிகளின் நாக்குகளைக் கட்டச் சொன்ன

‘தாதூண் பறவை பேதுறல்
அஞ்சி மணிநா ஆர்த்த
மாண் வினைத் தேரனாகட்டும்

முல்லையும் பூத்தியோ? ஒல்லையூர் நாட்டிலே! என கொல்லையில் பூத்த முல்லையோடு கோவித்துக் கொண்ட ஒல்லையூர் நாட்டுச் சாந்தனின் காதலியாகட்டும்

இந்த உலகத்தில் உள்ள சகலவற்றையும் தன் சொந்தமாக; தன் உறவாக; தன் நட்பாக; மதித்து; போற்றி, உறவு கொண்டாடி, வாழ்ந்த ஒரு வாழ்க்கை! வாழ்ந்து வந்த ஒரு தேசம்! தேசத்து மக்கள்!.............

ஜனவரி 26

அவுஸ்திரேலிய தினம்! இவை எல்லாம் நினைவு வர இந்த நாள் காரணமாயிற்று!

இப்படியான ஒரு வாழ்க்கை முறைக்குக் கொஞ்சமும் மாசுபடாது குறைவு படாது வாழ்ந்து வந்தது இந் நாட்டுக் குடிகள்!

அபோரிஜனல் மக்கள்!

அவர்களிடம் எல்லைகள் வேலிகள் எதுவும் இருந்ததில்லை; பயன் தரும் சகல மரங்களும் சகல மக்களுக்கும் சொந்தமாய் இருந்தது.

மதம் இருந்ததில்லை!

நாணயப் புளக்கம் (பணம்) தேவைப்பட்டதே இல்லை.

இறந்தோரையும் இயற்கையையும் உயிரிலும் மேலாகப் போற்றினார்கள்!

ஆங்கிலேயச் சிறைக்கைதிகள் இங்கு வந்து இறங்கிய போது இந்த மக்கள் வாழ்ந்த நாட்டை மனிதர்கள் இல்லாத தேசம் என பிரகடனப்படுத்தி தம் கொடியினை நாட்டினார்கள்.

அவர்கள் கண்களுக்கு இவர்கள் மனிதர்களாக / மனிதப்பிறவிகளாகவே தெரியவில்லை!

இந்த மக்களை விரட்டி அடித்தார்கள்.

கொன்று குவித்தார்கள்.

குழந்தைகளை கவர்ந்து கொண்டோடினார்கள்.

அதற்கு குறைந்த பட்சம் ஒரு பாவ மன்னிப்பைக் கேட்கத் தானும் ஜோன் ஹவேர்ட்டுக்கு மனம் வரவில்லை.

இப்போது இங்கு போதைப்பொருளும் மதுபான பாவனைகளும், புகைத்தலும்  மலிந்து இனத்துவேசத்தை கறித்துப்பும் ஒரு இளம் கலாசாரம் பெருகி வருகிறது.

அதனை “Toxic Culture'" என ஏனைய நாடுகள் இதனைச் சுட்டிக் காட்டுகிறன.

நச்சுப் பண்பாடு!

வன்முறைக் கலாசாரம்!

பல்கலாசார நாடும் கூட!

அதனைப் பகீரங்கமாகச் சொல்லவும் நடக்கவும் இடம் தரும் ஜனநாயக சுதந்திரம்!

மிகவும் மெல்லியதான சட்டக் கோடுகள்!

அகதிகள் சார்பாக ரொனி அபேர்ட் சொல்லும் கருத்துக்கள் கேட்கச் சகிக்க முடியாதவை.

இது அரச தலைவர்கள் சார்ந்ததென தனியே தலைவர்களில் குறைகூறுவதில் பயனில்லை. பெரும்பாண்மை மக்கள் கருத்தும் அதுவே! பெரும் பாண்மைகளால் தெரிவு செய்யப்பட்ட அரசு தான் இது. மக்களின் கருத்தைத் தான் அவர்கள் பிரதி பலிக்கிறார்கள்.

இந்தத் தேசத்தில் தான் நம் கால் பதிந்திருக்கிறது.

WE ARE ON ABORIGINAL LAND!

நம் கால்கள் தரித்திருப்பது அபோரிஜினல்களின் தாய் மண்ணில்!

அதை நாம் மறவாதிருப்போம். எங்கு நாம் அவர்களைக் கண்டாலும் அவர்களை மதிக்க இந் நாளில் உறுதி எடுத்துக் கொள்வோம்!

ஜனவரி ‘ 26! அபிரோஜினல்களின் தாய் தேசம் பறி போன நாள்!


( குறிப்பு: கீழே முதலாவதாகக் கொடுக்கப்பட்டிருக்கிற பாடலைப் பார்க்கப் பிரியப்படாதவர்கள் அதே பாடலை சுப்பர் சிங்கரில் அனுவும் யாழினியும் பாடியிருக்கிறார்கள். நேரே அங்கு போகவும்.)விடைகொடு எங்கள் நாடே..
கடல் வாசல் தெளிக்கும் வீடே..
பனைமரக் காடே பறவைகள் கூடே
மறுமுறை ஒரு முறை பார்ப்போமா
உதட்டில் புன்னகை புதைத்தோம்
உயிரை உடம்புக்குள் புதைத்தோம்
வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்.

விடைகொடு எங்கள் நாடே..
கடல் வாசல் தெளிக்கும் வீடே..
பனைமரக் காடே பறவைகள் கூடே
மறுமுறை ஒரு முறை பார்ப்போமா
உதட்டில் புன்னகை புதைத்தோம்
உயிரை உடம்புக்குள் புதைத்தோம்
வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்.

கந்தல் ஆனாலும் தாய் மடிபோல்
ஒரு சுகம் வருமா வருமா ???
சொர்க்கம் சென்றாலும் சொந்த
ஊர் போல் ஒரு சுதந்திரம் வருமா வருமா ???
கண் திறந்த தேசம் அங்கே
கண் மூடும் தேசம் எங்கே?
பிரிவோம் நதிகளே; பிழைத்தால் வருகின்றோம்
மீண்டும் தாயகம் அழைத்தால் வருகின்றோம்..
கண்ணீர் திரையில் பிறந்த மண்ணை
கடைசியாக பார்க்கின்றோம்...

விடைகொடு எங்கள் நாடே..
கடல் வாசல் தெளிக்கும் வீடே..
பனைமரக் காடே பறவைகள் கூடே
மறுமுறை ஒரு முறை பார்ப்போமா
உதட்டில் புன்னகை புதைத்தோம்
உயிரை உடம்புக்குள் புதைத்தோம்
வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்.

எங்கள் பிள்ளையின் சங்கீதம்
பிள்ளையின் அழுகையிலே தொலைத்தோம்..//
எங்கள் இளம் திங்கள்
வெடிகுண்டு புகையிலே புதைத்தோம்..
முன்னிரவில் மலரில் கிடந்தோம்
பின்னிரவில் முள்ளில் கிழிந்தோம்
கடல் நீர் பறவைகள் இருந்தால் சந்திப்போம்
மரமே மலைகளே வாழ்ந்தால் சந்திப்போம்
தலையில் கொஞ்சம் நெஞ்சில்
அதிகம் சுமைகள் சுமந்து போகின்றோம்

விடைகொடு எங்கள் நாடே
கடல் வாசல் தெளிக்கும் வீடே
பனைமரக் காடே பறவைகள் கூடே
மறுமுறை ஒரு முறை பார்ப்போமா
உதட்டில் புன்னகை புதைத்தோம்
உயிரை உடம்புக்குள் புதைத்தோம்
வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்.


உந்தன் தேசத்தின் குரல்
தொலை தூரத்தில் அதோ
செவியில் விழாதா
சொந்த வீடு உன்னை வா என்று அழைக்குதடா தமிழா
அந்த நாட்களை நினை
அவை நீங்குமா உனை
நிழல் போல் வராதா
அயல் நாடு உந்தன் வீடல்ல விடுதியடா தமிழா

வானம் எங்கும் பறந்தாலும்
பறவை என்னும் தன் கூட்டில்
உலகம் எங்கும் வாழ்ந்தாலும்
தமிழன் என்னும் தாய் நாட்டில்
சந்தர்ப்பங்கள் வந்தாலும்
அங்கு செல்வ மரம் காய்த்தாலும்
உள் மனத்தில் கூவல் உந்தன் செவியில் விழாதா
(உந்தன்..)

கங்கை உனை அழைக்கிறது
யமுனை உன்னை அழைக்கிறது
இமயம் உன்னை அழைக்கிறது
பல சமயம் உன்னை அழைக்கிறது
கண்ணாமூச்சி ஆட்டம் அழைக்கும்
சின்ன பட்டாம்பூச்சி கூட்டம் அழைக்கும்
தென்னம் தோப்பு துறவுகள் அழைக்க
கட்டி காத்த உறவுகள் அழைக்க
நீ தான் தின்ன நிலா சோறு நான் அழைக்க
(உந்தன்..)

பால் போல உள்ள வெண்ணிலவு
பார்த்தால் சிறு கரை இருக்கு
மலர் போல் உள்ள தாய் மொழியில்
மாறாத சில வலி இருக்கு
கண்ணீர் துடைக்க வேண்டும் உந்தன் கைகள்
அதில் செழிக்க வேண்டும் உண்மைகள்
இந்த தேசம் உயரட்டும் உன்னாலே
மக்கள் கூட்டம் வரட்டும் உன் பின்னாலே
அன்பு தாயின் மடி உன்னை அழைக்குதே தமிழா
(உந்தன்..)

படம்: தேசம்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: AR ரஹ்மான்
வரிகள்: வாலி

...................................................

வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே
விடியும் பூமி அமைதிக்காக விடியவே
மண்மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே
மனமே சோம்பல் முறித்து எழுகவே
குழந்தை விழிக்கட்டுமே
தாயின் கதகதப்பில்
உலகம் விடியட்டுமே
பிள்ளையின் சிறுமுக சிரிப்பில்

காற்றின் பேரிசையும்
மழை பாடும் பாடல்களும்
ஒரு மௌனம் போல் இன்பம் தருமோ
கோடிக் கீர்த்தனைகள்
கவி கோர்த்த வார்த்தைகள்
துளி கண்ணீர் போல்  இன்பம் தருமோ

எங்கு சிறு குழந்தை
தன் கைகள் நீட்டிடுமோ
அங்கு தோன்றாயோ கொள்ளை நிலவே
எங்கு மனித இனம் போர் ஓய்ந்து சாய்ந்திடுமோ
அங்கு கூவாதோ வெள்ளை குயிலே

2 comments:

 1. நேற்றைய தினம் மட்டுமல்ல, பல நாள் இப்பூர்வகுடிகளை நினைந்து என்னுள் தோன்றும் இனம்புரியா பச்சாதாபம். இயற்கையின் மீதும் நிலப்பரப்பின்மீதும் எவ்வளவு மரியாதையும் பயபக்தியும் வைத்திருக்கின்றனர். அவர்களுடைய கலாச்சார நடனம் இன்றைய நாட்களில் ஒரு பொழுதுபோக்கைப் போல் மற்றவரால் வேடிக்கைப் பார்க்கப்படுகையில் மனம் மருகும். தங்களுக்கென்று இருந்த மண், வாழ்க்கை, மொழி, கலாச்சாரம் அனைத்தையும் இழந்து, மொத்தத்தில் தங்கள் அடையாளத்தைத் தொலைத்து வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த மண்ணின் மைந்தர்களுக்கு நம் மரியாதையும் வணக்கமும் உரித்தாகட்டும். நெகிழவைக்கும் சிந்தனைப் பகிர்வுக்கு நன்றி மணிமேகலா.

  சொந்த மண் தொலைத்த அகதிகள் வாழ்க்கை பற்றிய வரிகள் மனந்துளைக்கின்றன.

  ReplyDelete
 2. சரியாகச் சொன்னீங்க கீதா.

  அந்த மக்களை; அவர்களின் இயல்பான வாழ்வியலைச் சிதைத்து சின்னாபின்னமாக்கி ஓரங்கட்டி ஒதுக்கி விட்டிருக்கிற கொடுமையை என்னவென்பது?

  வெள்ளையர்களுக்கு அவர்கள் ஒரு environmental stress அவ்வளவு தான். இது பற்றிய ஒரு ஆங்கிலக் கவிதை ஒன்றை பல வருடங்களுக்கு முன்னால் பார்த்தேன். உங்கள் பின்னூட்டம் அதை நினைவுக்குக் கொண்டுவந்தது. எங்கோ இருக்க வேண்டும் அது. கிடைத்தால் அதையும் சேர்க்கிறேன்.

  மிக்க நன்றி கீதா.

  ReplyDelete