Friday, December 22, 2017

லக்ஸலா....

லக்ஸலா.......

கொழும்பில் இருக்கும் ஓர் அரச கலைக்கூடமும் விற்பனை அரங்கும்!

சிங்கள மக்களின் கலைகளின் முகம்!
ஸ்ரீலங்காவின் பண்பாட்டு பொருள்களின் விற்பனைக் களஞ்சியம்!

அரச ஆதரவோடு வெளி நாட்டவருக்காக தன்னை நேர்த்தியோடு  காட்சிப்படுத்தும் நாட்டின் முகம்!

இலங்கையில் பல்வேறு இடங்களிலும் கிளைகளைக் கொண்டிருக்கும் இக் காட்சியகம் கொழும்பில் 98/4, Havelok Road, Colombo - 5 - என்ற இடத்திலும் காட்சியகத்தைக் கொண்டிருக்கிறது.

5.10.2017 அன்று அங்கு சென்ற போது எடுத்த சில ஒளிப்படங்கள் இங்கே.
                                          ( முழுவதும் எடுக்க வில்லை...)
































மேலே காணப்படுகிற தலையாட்டி பொம்மைகள் சிங்கள மக்களின் கலைகளை வெளிப்படுத்தும் அவர்தம் தனித்துவக் கூறின் இன்னொரு குறிப்பிடத்தகுந்த அம்சம். நான் சிறு பிள்ளையாக இருந்த போது கண்ட தலையாட்டி பொம்மைகள் தம்பதி சமேதரராக தத்ரூபமான வண்ணங்களோடு இருவகைப்பட்டவையான கூறுகளைக் கொண்டனவாக அமைந்திருந்தன. 

ஒரு சோடி பெரஹெரா நடனமாதுவும் அதற்கு மேளம் அடிக்கும் ஆண் சோடியையும் கொண்டிருக்கும். அவர்கள் அழகிய கலைத் தம்பதியினர்.

 மற்றய சோடி கிராமத்து தம்பதிகளை நினைவுறுத்தும் வண்ணம் பெண் மரபு வழியான அவர்களின் ஆடையான லுங்கியும் பிளவுசும் அணிந்து பெரிய பல் வெளித்தெரியும் வெள்ளாந்திச் சிரிப்போடும் கட்டையான பருமனான தோற்றத்தோடும் ; ஆணும் அதே போல சாறமும் அதன் மேலே கறுப்பு பெல்ட்டும் அணிந்து வெறும் தோளிலே சால்வையும் போட்டபடி அதே வெள்ளாந்திச் சிரிப்போடும் கட்டயான மண்ணிறத் தேகத்தோடும் காணப்படுவர்.

மிகக் கச்சிதமான அழகு அது! 

ஆனால் அவற்றை எல்லாம் இப்போது அதே கலையழகோடு காணக்கிடைக்கவில்லை. இங்கு தம்பதியினராகக் கூட அவர்கள் இல்லை. கலை அம்சமும் முன்னரைப் போல நேர்த்தியாக இல்லை. 

majestic city என அழைக்கப்படும் கடைத்தொகுதிகளைக் கொண்ட வளாகத்தில் வெளி மாவட்டங்களிலும் கிராமப்புறங்களிலும் இருந்து பொருட்களை நேரடியாக பெற்று விற்பனை செய்யும் ஒரு கடைக்கார பெண்மணியோடு உரையாடிய சமயம் அவர் ‘இப்போதெல்லாம் பழைய மாதிரி கலைஞர்களைக் காணக்கிட்டுவது அபூர்வம் என்றும்; புதிய சந்ததியினர் இவ்வாறான வேலைகளில் வருமானப் பற்றாக்குறையாக இருப்பதாலும்; படித்து வேலைகளுக்குப் போகும் விருப்பம் அதிகரித்து வருவதாலும்; இத்தகைய கலைகள் இப்போது அருகியும் அழிந்தும் வருகின்றன எனக் கூறினார்.

இன்று அவ்வாறான கலைப்பொருட்களைக் காணவே முடியவில்லை. லக்ஸலாவில் கூட  தலையாட்டிப் பொம்மையில் பெண் நடனமாது மாத்திரமே இருந்தது. எங்கே அந்த மேளம் அடிக்கிற ஆண் சோடி...? இருக்கின்ற அதிலும் கூட முன்னய கலையம்சத்தைக் காண முடியவில்லை....


















கீழே காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் இந்தப் பொக்கிஷப் பெட்டி கொழும்பில் இருக்கும் என் சினேகிதியினுடயது. ஒளிப்படம்: 5.10.17.






கொழும்புக் கடை ஒன்றில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் சிங்கள மர சிற்பங்கள்...ஒளிப்படம்: 4.10.17.













இவற்றை எல்லாம் பார்த்து விட்டு யாழ்ப்பாணம் போன போது நம்மிடையே ஏன் இவ்வாறான கலைக்கூறுகளின் காட்சிப்படுத்தலும் விற்பனை அரங்கும் இல்லை என்ற மனக்குறையே எனக்கு ஏற்பட்டது. அங்கிருந்த மியூசியத்துக்குச் சென்ற போது கவனிப்பார் அற்ற ஒரு மூலையில் ஓரிரு தொழிலாளர்களோடு ஆள் அரவம் எதுவுமற்று ஒரு சிறு மூலையில் அது ஒதுங்கி இருக்கக் கண்டேன்.

குறைந்த பட்சம் ஓரளவு கற்றறிந்த மக்களிடம் கூட இந்த நூதனசாலை பற்றிய ; அதன் வரலாற்றுப் பெறுமதி பற்றிய; பிரக்ஞையோ, பரீட்சயமோ, தேடலோ,ஆர்வமோ, பெருமையோ இல்லாதிருப்பது வேதனையளிப்பது; வருத்தத்திற்குரியது! 

அங்கு பணியாற்றும் பெண்ணிடம் பேசிய போது அங்கு இருக்கும் பொருள்களை ஆவணப்படுத்தும் வேலைகள் நடந்து வருவதாகக் கூறினார். ஆனாலும் மழைக் காலங்களின் போது கூரையில் இருந்து தண்ணீர் ஒழுகுவதாகவும் பொருட்கள் பல சேதமடையும் நிலமை இருப்பதாகவும் மேலும் அவர் கூறினார்.

மேலும், புகைப்படங்கள் எடுப்பதற்கு தடை உண்டெனக் கூறிய அவர் புகைப்படம் எடுக்க அனுமதிக்கவில்லை. மிகவும் விநயமாகக் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஒரு சில படங்களை மட்டும் எடுக்க அனுமதித்தார். அவருக்கு நன்றி. அவை கீழே வருகின்றன. ஒளிப்படம்: 13.10.2017.










மேலும் சில ஒளிப்படங்கள் கீழ் வரும் லிங்கில் யாரோ ஒருவரால் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. எனினும் அவைகளும் முழுமையானவையல்ல. 

https://hiveminer.com/flickr_hvmnd.cgi?method=GET&textinput=archaeological,olympus&tag_mode=all&search_domain=Tags&photo_number=50&page=1&noform=t&sorting=Interestingness&originput=archaeological,olympus&sort=Interestingness&search_type=Tags&photo_type=250

 அங்கு - அந்த நூதன சாலையில் - காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்ற பொருட்களில் பல வியந்து பார்க்கத் தகுந்தன. அதிலும் குறிப்பாக  யாழ். செண்ட்.ஜோன்ஸ் கல்லூரியின் முன்நாள் அதிபர் ருவைனம் அவர்கள் (ஆங்கிலேயர் ?) (194...) சேகரித்து வைத்திருந்து  பின்நாளில் நூதன சாலைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்ட அரிய பல கலைப் பொக்கிஷங்களைக் கண்டு மெய் சிலிர்த்தேன். இந்தளவு பொருட்களையும் கேகரித்து பாதுகாத்து சமூகத்துக்குக் கையளிக்க இந்த மனிதர் எத்தகைய ஒரு கலாரசிகராகவும் சமூகத்தின் கலைக் காவலனாகவும் இருந்திருக்கவேண்டும்! இந்த மாமனிதரைப் பற்றி அறிய அக் கல்லூரியின் இணையப்பக்கத்துக்குப் போனால் அங்கு அவரைப் பற்றிய எந்த தகவலும் காணப்படவில்லை. 

அங்கு இடம் பெற்றிருக்கும் அதிபர் வரிசையில் கூட அவருக்கு - அந்த உன்னத மனிதருக்கு - ஓர் இடம் இல்லை....

நம் நிலைமை இப்படியாக......

குளத்தங்கரையிலே கிடக்கும் தண்ணீர் வடிவமைத்த மொழு மொழு கூளாங்கல்லின் மேலே குளத்தடி  விருட்சத்தில் இருந்து விழும் பழுத்த ஓர் மஞ்சள் இலைக்கு உரையாட அவகாசம் நேர்ந்தால் அவை என்ன பேசிக்கொள்ளக் கூடும்?

இந்த வாழ்வு பற்றி......

வாழ்ந்த கதைகள் பற்றி......



12 comments:


  1. படங்கள் அனைத்தும் அருமை ஆனால் படங்களை சற்று பெரிதாக இட்டு இருக்கலாம்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

      படங்களைப் பெருப்பித்துப் பார்த்தேன். எல்லாவற்றையும் பெருப்பிக்கமுடியவில்லை.
      எழுதுகிற பகுதி சிறிதாக இருப்பதால் அவ்வாறு நேர்கிறது என நம்புகிறேன். ஆனாலும் சிலவற்றை நீங்கள் சொன்னது போல பெருப்பித்ததோடு மேலும் சில படங்களையும் பதிவேற்றி இருக்கிறேன். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்கு மிக்க நன்றி.

      உண்மையில் அவர்களின் கலைகள் இதை விடபெரியது...உயர்ந்ததும்! எல்லாம் இங்கு இல்லை. சிங்களக் கிராமப் புறங்களில்; வெளி மாவட்டங்களில் பிரம்புத் தளபாடங்களும், பித்தளையில் செய்யும் அவர்தம் வேலைப்பாடுகளும், பற்றிக் துணிகளும் இன்னும் அழகியவை;கலை நயம் மிக்கவை.

      யானைகள் ஏந்தி நிற்கும் பித்தளைக் கிண்ணம், குத்து விளக்குகள், பாவை விளக்குகள், பெரெஹெரா காட்சிகள் எனவும் அவை விரியும்...தனக்கென ஓரு தனித்துவமான பண்பாட்டையும் கலை வெளிப்பாடுகளையும் மொழியையும் மதத்தையும் நடை உடை பாவனைகளையும் கொண்டவர்கள்...

      அவை முழுதாக இங்கு வெளிப்படவில்லை.

      படங்களை இன்னும் சிறப்பாக எடுத்திருக்கலாம்....
      (இது ஒரு சிறுபிள்ளை வேளாண்மை...)

      Delete
  2. பொக்கிஷங்கள். பார்க்கத் தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  3. அரிய தகவல் தந்தமைக்கு நன்றிகள்

    ReplyDelete
  4. நன்றி புத்தன்.
    புதுவருட வாழ்த்துக்களும்...

    ReplyDelete
  5. Hi,

    //அதிலும் குறிப்பாக யாழ். செண்ட்.ஜோன்ஸ் கல்லூரியின் முன்நாள் அதிபர் ருவைனம் அவர்கள் (ஆங்கிலேயர் ?) (194...) சேகரித்து வைத்திருந்து பின்நாளில் //நூதன சாலைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்ட அரிய பல கலைப் பொக்கிஷங்களைக் கண்டு மெய் சிலிர்த்தேன். இந்தளவு பொருட்களையும் கேகரித்து
    //பாதுகாத்து சமூகத்துக்குக் கையளிக்க இந்த மனிதர் எத்தகைய ஒரு கலாரசிகராகவும் சமூகத்தின் கலைக் காவலனாகவும் இருந்திருக்கவேண்டும்! இந்த
    //மாமனிதரைப் பற்றி அறிய அக் கல்லூரியின் இணையப்பக்கத்துக்குப் போனால் அங்கு அவரைப் பற்றிய எந்த தகவலும் காணப்படவில்லை.
    //அங்கு இடம் பெற்றிருக்கும் அதிபர் வரிசையில் கூட அவருக்கு - அந்த உன்னத மனிதருக்கு - ஓர் இடம் இல்லை....
    //நம் நிலைமை இப்படியாக......
    Great post! I just wanted to clarify an information from my quick research on google.

    William Twynam was not a Principal at Jaffna St. Joh's college. Jaffna, St. John's College is one of the oldest schools in Sri Lanka (founded in 1823) and highly recognizes it's past principals and patrons. In fact, Sir William C. Twynam was Jaffna's GA (Government Agent) between 1869 and 1896.

    "The Twynam Museum The site of the building is set in a grove of Mahogany trees between St. John's College Hall and the Main Road. The building will, for the present, consist of three rooms, an octagonal entrance hall and two wings. The stone was laid on the 22nd March 1918, by Miss Nora Twynam on the 91st birthday of her father......"

    Reference:
    http://www.jaffna.dist.gov.lk/index.php?option=com_content&view=article&id=7%3Alist-of-ga-s&catid=2%3Aabout-us&Itemid=46&lang=en

    'Notes on Jaffna' by John H. Martyn
    http://www.karainagar.com/pages/wp-content/uploads/2016/05/NOTES_ON_JAFFNA.pdf

    https://books.google.ca/books?id=xoIcCReqErUC&pg=PA315&lpg=PA315&dq=Twynam+Museum&source=bl&ots=pTgVevlja_&sig=UZhP1Y4ECOwvgwQMJw7w8j9GBcI&hl=en&sa=X&ved=0ahUKEwi4kubPl9vYAhXN31QKHYWeDtgQ6AEIKTAA#v=onepage&q=Twynam%20Museum&f=false


    ReplyDelete
  6. ருவைனம் அவர்கள் அரசங்க அதிபராக இருந்தார் என்ற செய்திக்கும் அதனை உறுதிப்படுத்தும் ஆராய்ச்சிக் குறிப்பைத் தந்தமைக்கும் மிக்க நன்றி.

    யாழ்ப்பாணத்தில் உள்ள நாவலர் நூதன சாலைக்குப் போனீர்கள் என்றால் அங்கு சென். ஜோன்ஸ் கல்லூரியின் முன்னாள் அதிபர் ருவைனம் அவர்களின் அன்பளிப்பு என்ற குறிப்பு சில அபூர்வ பொருட்களுக்கு அருகே குறிக்கப் பட்டிருப்பதைக் காணலாம்.

    உங்கள் தகவலுக்கு நன்றி.

    கீழிருந்து 7 வதாக இருக்கும் சந்திரமதியில்ன் சிலை காணப்படும் படத்தை உருப் பெருக்கி பார்த்தாலும் அக்குறிப்பு மங்கலாகத் தெரிவதைக் காணலாம்.....

    உங்கள் கருத்துக்கும் அதனை கரிசனையோடு எடுத்துக் கூறியதற்கும் மீண்டும் என் நன்றி.

    ReplyDelete
  7. Hi,

    Fist of all, thank you for the opportunity to dig deep in this matter. I've learned something more about my alma mater and the history of Jaffna museum.

    I've looked at the picture you mentioned and now I see the the wordings on the labels can mislead anyone. It should be read as:
    //Donated by: 'Twynam collection'
    //The principal of St.John's College, Jaffna - 194?

    Apparently, according to 'Notes on Jaffna' by John H. Martyn, in September 1917, "Sir William Twynam presented the whole of his valuable collection of the products and industries of Jaffna to St.John's College". This collection was called 'Twynam collection'(1)(3).
    Remember this was during WW1 period. Rev. Jacob Thomson was the principal at that time: 1900-1919 (2).

    March, 22, 1918, on 91st birthday of Sir William Twynam, his daughter Miss. Twynam laid a foundation stone of the museum for housing 'Twynam collection' in the grounds of St. John's college, Chundikuli, Jaffna (3).

    I could not find any information or notes on existence of 'Twynam museum building' in St.John's premises but my understanding is during 1940's the 'Twynam collection' was donated to Jaffna museum by the principal of St.John's College at that time. I assume this handover happened during Rev. J. T. Arulanantham Arulanantham's period; he was the first native Ceylonese to be appointed principal of St. John's College.

    Reference:
    (1) http://sjcoba.blogspot.ca/p/st.html

    (2) http://www.sjcjaffna.com/our-college.html

    (3) 'Notes on Jaffna' by John H. Martyn
    http://www.karainagar.com/pages/wp-content/uploads/2016/05/NOTES_ON_JAFFNA.pdf

    ReplyDelete
  8. ஓ.... மிக்க நன்றி பொபி.
    வரலாற்றுக்கு வலுச் சேர்க்கும் அரிய தகவல்களையும் அதன் மூலங்களையும் வழங்கி இந்தப் பதிவுக்கும் ஒரு பெறுமதியை தந்தீர்கள்.

    நானும் பல சரியான தகவலை அறியும் வாய்ப்பையும் எங்கெங்கெல்லாம் ஒரு விடயத்துக்கான உறுதிப்பாட்டைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற பிரக்ஞையையும் பெற்றுக் கொண்டேன்.

    உங்கள் வரவு பெறுமதி மிக்கது. உங்கள் தேடல்கள் காத்திரமானவை. வருகைக்கும் கரிசனை மிக்க ஆர்வத்துடனான பின்னூட்டத்துக்கும் என் மனமார்ந்த நன்றி.

    உங்களால் பல வரலாற்று வெற்றிடங்கள் நிரப்பப் படலாம். அவ்வாறான ஏதேனும் குறித்து நீங்கள் எழுதினால் இங்கு அதன் இணைப்பினை பகிர்ந்து கொண்டால் நான் மிக மகிழ்வுறுவேன். நானும் சில புதிய விடயங்களை அறியும் வாய்ப்பும் கிட்டலாம்...

    ReplyDelete
  9. தங்களது தரவுகள் அருமை.நன்றி.இந்நூதனசாலையில் பணிபுரிபவர் என்ற ரீதியில் கருத்துக் கூற விரும்புகின்றேன். Sir.William.C.Twynam அவர்களது சேகரிப்புகள் St.Johns' college Principal ஆல் 1946 இல் நூதனசாலைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. தங்களது தேடலை வரவேற்கிறேன். நூதனசாலைப்பதிவேடுகளில் உள்ளவாறு தகவல்கள் இடப்பட்டுள்ளன. ஆயினும், அன்பளிப்புச் செய்த அதிபரின் பெயர் அதில்குறிப்பிடப்படவில்லை. இதே குழப்பம் எமக்கும் ஏற்பட்டதுடன் ருவைனம் மற்றும் அவ் அதிபர் பற்றிய விபரங்களைச் சேகரித்து வருகிறாேம்.தவறுக்கு வருந்துகிறாேம்.புகைப்படம் எடுப்பதற்கு இலங்கையிலுள்ள சகல தாெல்பாெருட் காட்சிச்சாலைகளில் அனுமதி இல்லை.இருப்பினும்
    தலைமை அலுவலகத்திலுள்ள
    திணைக்களத் தலைவரின் (Director General, Department of Archaeology- Colombo)அனுமதியுடன் புகைப்படம் மற்றும் வீடியாே எடுக்க முடியும். தற்பாேது இதற்காக இலக்கம்120, இராசாவின்தாேட்ட வீதி, யாழ்ப்பாணத்தில் இயங்கும் பிரதேச அலுவலகத்தில் அனுமதி வழங்கப்படுகிறது.
    தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்.

    ReplyDelete
  10. கரிசனையோடு வந்து கருத்துக் கூறியமைக்கு நன்றி.
    நீங்கள் அந் நூதனசாலையில் பணிபுரிபவர் என்பது மேலும் மகிழ்ச்சி அளிக்கும் செய்தி. நூலகங்கள்,கலைப்பொருட்கள் மற்றும் நூதனசாலைகள்,... இவைகள் நம் வேர்கள். நம் முகங்கள், நம் அடையாளம் மற்றும் பண்பாட்டு ஆதாரங்கள்.

    இவைகளில் நாம் ஏன் போதிய கவனமும் விழிப்புணர்வும் கொள்ளவில்லை என்பது பற்றி நாம் தீவிரமாகச் சிந்திக்கவேண்டி உள்ளது.

    போதிய விழிப்புணர்வும், அதன் தார்ப்பரியம் குறித்த பட்டறைகளும், பாடசாலைகளில் அதன் முக்கியத்துவம் குறித்த தகவல் பரிமாற்றங்களும், மற்றும் விளம்பரங்களும் அவைக்கு உதவுவனவாகலாம்.

    அதனை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல உங்களைப் போன்றவர்களால் முடியும்.

    ReplyDelete