Thursday, December 7, 2017

ஆழிக்குமரன் ஆனந்தன் (25.5.1943 – 6.8.1984.)

   
             
ஆழிக்குமரன் என்ற பட்டப்பெயரால் அறியப்படும் ஆனந்தன் 1943ம் ஆண்டு மே மாதம் 25ம் திகதி ஈழத்தின் வட பால் உள்ள வல்வெட்டித் துறையில் பிறந்து தன் 7 கின்னஸ் சாதனைகளால் தன் புகழை உலக சாதனை ஏட்டில் பதித்து தன் இருப்பையும் தன் ஆழுமையையும் உலகுக்கு உரத்து சொன்ன தனி மனிதன் என்ற பெருமையைப் பெறுகிறார்.

ஓர்மமும் விடாமுயற்சியும் இலக்குக் குறித்த துல்லியமான நோக்கும் கொண்டிருந்த செல்வகுமார் ஆனந்தன் லண்டன் பல்கலைக் கழகத்தின் விஞ்ஞான மானிப் பட்டதாரியும் இலங்கையின் பேராதனைப் பல்கலைக் கழகத்தின் சட்டத்துறை பட்டதாரியும் ஆவார்.

சட்டத்தரணியாக தன் தொழிலை ஆரம்பித்த போதும்; இள வயதிலேயே இளம்பிள்ளை வாதத்தினால் பாதிக்கப் பட்டிருந்த போதும்; பின் நாளில் மோட்டார் சைக்கிள் விபத்தொன்றினால் பல மாதங்கள் நடமாட முடியாதிருந்த போதும்; அந்த விபத்தின் விளைவாக அவரது மண்ணீரல் அகற்றப்பட்டிருந்த போதும்; தன் சாதனை முயற்சியை அவர் கை விடவே இல்லை.

அவரது முதலாவது சாதனை 1971ம் ஆண்டு அவரின் 28வது வயதில் பாக்குநீரிணையை மன்னாரில் இருந்து தனுஸ்கோடிக்கு நீந்தி மீண்டும் தனுஸ்கோடியில் இருந்து மன்னாருக்கு 51 மணி நேரத்தில் நீந்திக் கடந்து பெறப்பட்டது.

இரண்டாவது சாதனை 1979 ஆம் ஆண்டில் 1487மைல் தூரத்தை 187 மணி நேரத்தில் இருசக்கர மோட்டார் வாகனம் மூலம் இடைவிடாது ஓடி முடித்தும்;3வது சாதனை அதே ஆண்டு 33 மணி நேரம் ஒற்றைக் காலில் நின்றும் நிகழ்த்தப்பட்டது. அதே ஆண்டு 136 மணி நேரம் தொடர்ச்சியாக Ball Punching செய்து 4வது சாதனையும் அடுத்த ஆண்டு 2 நிமிட நேரத்தில் 165 தடவைகள் குந்தி எழுந்து (Sit-ups) 5வது சாதனையும் நிகழ்த்தப்பட்டது.
 1980 ஆம் ஆண்டு 9100 தடவைகள் High Kicks செய்து 6வதும் அவரது 7வது சாதனை 1981 ஆம் ஆண்டில் 80 மணி நேரம் தொடர்ச்சியாக தண்ணீரில் செங்குத்தாக நின்றும் நிகழ்த்தப்பட்டது.

1983ம் ஆண்டு வெளியிடப்பட்ட கின்னஸ் உலக சாதனைப் பதிவேட்டில் ஈழத்தமிழனான ஆழிக்குமரன் ஆனந்தனின் பெயர்  7 உலக சாதனைகளைச் செய்தவராகப் பதியப்பட்டிருக்கிறது.

இவை யாவும் மிக இலகுவாக பெறப்பட்ட சாதனைகள் அல்ல. தான் பிறந்த ஊரின் ரேவடிக் கடற்கரையில் இருந்து ஆரம்பித்த பாக்கு நீரிணையைக் நீந்திக் கடக்கும் அவரது முதலாவது முயற்சி இயற்கையின் சீற்றத்தினாலும் நண்பர்களின் பலவந்தத்தினாலும் தோல்விகண்டது. அதனால் மிகுந்த மன வருத்தததுக்கு உள்ளான ஆனந்தன் அவரது உத்தியோக பூர்வமான முதலாவது கின்னஸ் சாதனையை நிகழ்த்துவதற்கு முன்னர் சம்பந்தப்பட்டவர்களிடம் ’எந்த பாதக நிலை ஏற்பட்டாலும் தன்னை வலுக்கட்டாயமாக கடலில் இருந்து தூக்கக்கூடாது’ எனக் கேட்டுக் கொண்டார் என்று கூறப்படுகிறது.

அதன் பின்னரும் அவரது பல முயற்சிகள் கின்னஸ் சாதனையின் நுட்பமான விதிகளின் காரணமாக நிராகரிக்கப் பட்டன. அவ்வாறு நிராகரிக்கப் பட்டாலும் 1978ம் ஆண்டு 60களில் பிரபலமாக இருந்த ருவிஸ்ட் நடனத்தை கொழும்பில் 128 மணி நேரம் இடைவிடாது ஆடி இலங்கை மக்களின் மனதையும் 70 றாத்தல் இரும்பை 2000 தடவைகள் கீழே இருந்து மேலே தூக்கியும் 149 மணி நேரம் தொடர்ந்து நடந்து தமிழ் நாட்டு மக்கள் மனதிலும் இடம் பிடித்தார்.
இவ்வாறாகத் தொடர்ந்த அவர் சாதனைகள் 1984 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 6 ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடக்கும் சாதனை முயற்சியில் ஈடுபட்டிருந்த போது 6 மணிநேர துணிகர முயற்சியின் பின், கடல்நீரின் தட்பவெப்பநிலை மாற்றத்தின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சாதனை முயற்சியின் போதே மரணத்தையும் தழுவிக்கொண்டார்.

அவரை மரணம் தழுவிக் கொண்ட போது அவருக்கு வயது 39.

ஆழிக்குமரன் ஆனந்தனின் சாதனைகளைக் கௌரவப் படுத்தும் முகமாக இலங்கை அரசாங்கம் 1999ம் ஆண்டு இவரின் உருவம் பொறித்த ஒரு ரூபா முத்திரையினை வெளியிட்டிருந்ததும்; 2016ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் போது அமைச்சர் மங்கள சமரவீராவின் கோரிக்கையின் பேரில் ஆழிக்குமரன் ஆனந்தன் நினைவுசர்வதேச நீச்சல் தடாகத்தை வல்வெட்டி துறையில் அமைக்க 78 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத் தக்கது.

ஆழியில் தொடங்கி ஆழியில் முடிந்த; தோல்வியில் தொடங்கி தோல்வியில் முடிந்த; இடைப்பட்ட காலத்து ஆழிக்குமரனின் வாழ்நாள் கின்னஸ் சாதனைகளால் நிறைந்து கிடக்கிறது.

அது ஆழிக்குமரன் ஆனந்தன்.

12.9.2017



எஸ்.பி.எஸ் வானொலியில் 1.10.17 அன்று தமிழ் தடம் நிகழ்ச்சியில் ஒலிபரப்பான இந் நிகழ்வைக் கேட்க கீழ் வரும் இணைப்பிற்குச் செல்லவும்

https://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/audiotrack/tmilllt-tttm-aalllikkumrnnn-aannnntnnn?language=ta

No comments:

Post a Comment