சந்தன மேடை எம் இதயத்திலே....
http://xtrawap.com/mp3/137359291/%E0%AE%9A%E0%AE%A8-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE-%E0%AE%9F.html
வெளியிடை பார்த்தால் ஒரு காதல் பாடல் போலத் தோன்றும் இப்பாடல் சரஸ்வதியை நோக்கிப்பாடப்பட்ட பேராசிரியர் சண்முகலிங்கனின் வரிகளில் அமைந்த பராவின் பாடலாகும்.
’ஈழத்தின் மெல்லிசைப்பாடல்கள்’ என்ற கலைவடிவம் உருக்கொண்டு உயிர் பெற்று இலங்கை வானொலியில் பரவ பெரிதும் காரணமாக இருந்தவர்கள் பலர். அது தனி ஒரு கடல்; அதில் தடம் பதித்தோர் பலர். அவை விரிவாக பார்த்து ஆவணப்படுத்தவேண்டிய அவசியம் உண்டு.
அவர்களில் ஒருவர் எஸ்.கே. பரராஜசிங்கம். இவர், விஞ்ஞான துறைப் பட்டதாரியும்; சங்கீதத்தை முறையாகக் கற்றுத் தேர்ந்தவரும் ஆசிரியப்பணியில் இருந்து வானொலி சேவையில் இணைந்து இசைத்துறைக் கட்டுப்பாட்டாளராக உயர்ந்தவரும் வானொலி ஒலிபரப்புக்காக சர்வதேச உண்டா விருதை வென்றவரும்; ஈழத்தின் மெல்லிசைப்பாடல்களின் பிதாமகர் எனவும் அறியப்படுகிறார்.
ஆக்க சங்கீதம் பற்றிய பிரக்ஞையை விதைத்தவராகவும்; தன் உயிரைப் பிளியும் குரலால் ஈழத்தின் மெல்லிசைக்கு உயிர் கொடுத்தவராகவும் அறியப்படும் இவரின் ஈழத்துப் பாடல்கள் தென்னிந்தியத் திரைப்படப் பாடல்களின் தனித்துவத்தில் இருந்து வேறுபட்டவையாகவும் ஈழத்தின் சிறப்பியல்புகளையும் அழகியலையும் இசை வடிவங்களையும் கொண்டமைந்தவையாகவும் பொருள் அடக்கத்திலும் இசைவடிவத்திலும் ஈழத்தின் இசை வீரியத்தை வெளிப்படுத்தியவையாகவும் விளங்கின.
ஈழத்தின் இசைப்பாரம்பரியங்களையும் வழக்குகளையும் நன்கறிந்து கர்நாடக இசைஞானத்தோடும் ஏனைய நாட்டு இசைப்புலமையோடும் இருந்த பரா, எங்கு இசை அழகுகளைக் கண்ட போதும் அதனை ஈழத்தமிழுக்குக் கொண்டு வர விளைந்தவர். பரிசோதனை முயற்சிகள் பல செய்து ஈழத்து மெல்லிசையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியவர்.
ஈழத்தின் புத்தக ஏடுகளில் வராதிருந்த நாட்டால் பாடலை ஜனரஞ்சகப்படுத்திய அவர் குரல் இது..
தென்னை மரத்து பாளைக்குள்ளே.....
http://xtrawap.com/mp3/137359292/%E0%AE%A4-%E0%AE%A9-%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%A8-%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%9F%E0%AE%B2.html
ஒரு செயலின் கச்சித்த்திலும் நேர்த்தியிலும் முழுக்கவனம் செலுத்தும் குணஇயல்பு கொண்டவரான பரா மட்டுப்படுத்தப்பட்ட வளங்களுக்குள்ளும் மிகச் சிறந்த வெளிப்பாட்டுக்கான சகல சாத்தியங்களையும் முயற்சி செய்பவர். அதன் ஒரு வெளிப்பாடாக சிட்டி பாபு அவர்களின் வீணை இசையை; பாகிஸ்தானிய இசை வல்லுனரான சொஹைல் ரானா வின் இசைக்கருவியில் விளைந்த இசையை வைத்துக் கொண்டு பொருந்தமான பாடல் வரிகளுக்காக கவிஞர்களைத் தேடி அலைந்து அவற்றுக்குக் ஈழத்து இயல்பு இருக்கும் வண்ணம் குரல் கொடுத்து வெளிப்படுத்திய அவர் பாடல்கள் ஈழத்து மெல்லிசையை இன்னொரு உயரத்துக்கு நகர்த்தின.
பாகிஸ்தானிய இசைக்கு சண்முகலிங்கன் அவர்களின் பாடல்வரிகளோடு இணையும் பராவின் கனமான குரல் ஒருவிதமான மனநிலைக்கு நம்மை உடனடியாகவே அற்றுப்படுத்தும் தன்மை கொண்டது. இப்பாடல் பற்றி கவிஞர் சண்முகலிங்கன் குறிப்பிடும் போது பரா அவர்கள் இந்த இசைக் கோர்வையை தன்னிடம் தந்து வரிகளை அமைக்கும் படி கூறியதாகவும் அன்றய நாள் முழுக்க அசைபோட்டும் எதுவும் சிக்கவில்லை எனவும் அன்று மாலை கொழும்பில் ஒரு கண்காட்சிக்குச் சென்று விட்டு நிலவெறிக்கும் மழைக்கால நள்ளிரவில் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது இப்பாடல் வரிகள் உதித்தெனவும்; அதனை பஸ் டிக்கெட்டின் பின் புறத்தில் எழுதி பின்னர் அதனை பராவிடம் சேர்ப்பித்த்தாகவும் தெரிவித்தார்.
குளிரும் நிலவினிலே...
http://xtrawap.com/mp3/137359289/%E0%AE%95-%E0%AE%B3-%E0%AE%B0-%E0%AE%AE-%E0%AE%A8-%E0%AE%B2%E0%AE%B5-%E0%AE%A9-%E0%AE%B2.html
அது போல பாவலர்.பஸீல்.காரியப்பரின் வரிகளில் உருக்கொண்டு பாடசாலை விடலை மாணவனின் கன்னிக் காதலுக்கு உயிர் கொடுத்த இந்தப் பாடல் ஈழத்தின் பட்டி தொட்டிகளில் எல்லாம் ஒலித்தது. அன்றும் இன்றும் என்றும் பொருந்திப்போகும் இளவயதுக் கன்னிக் காதலை கருவாகக் கொண்டமைந்த இப்பாடல் இலங்கை வானொலியில் மிகப்பிரபலமாக ஒலித்தது. எழுதியவரின் பெயர் இல்லாமல் பத்திரிகையில் வெளிவந்த இக்கவிதையை வைத்துக் கொண்டு உருவாகி மலர்ந்த இப்பாடல் பிரபலமான பின்னரே கவிஞர் யார் என்பதைக் கண்டு கொண்டது ஒரு சுவாரிஷமான வரலாறு.
அழகான ஒரு ஜோடிக் கண்கள்...
http://xtrawap.com/mp3/137359288/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%A9-%E0%AE%92%E0%AE%B0-%E0%AE%9A-%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%A3-%E0%AE%95%E0%AE%B3.html
ஈழத்தின் அழகியலுக்கு அதன் தனித்துவமான எழிலுக்கு அதனை அடையாளம் கண்டு அதன் தனித்துவ இசையாலும் குரலாலும் வண்ணம் சேர்த்து; மெல்லிசை என்ற ஈழத் தமிழ் கலை வடிவத்தினை உருவாக்கி ஒலிபரப்பி உலகுக்கு எடுத்துச் சென்றவர்களுள் பரா ஒரு பிதா மகர்.
ஈழத்தின் மெல்லிசை முதன் முதலாக இசைத்தட்டாக வெளிவந்த போது அதற்கு இடப்பட்ட பெயர் கங்கையாளே... அவருடய குரலோடும் கோகிலா.சிவராஜாவின் குரலோடும் வெளி வந்த இப்பாடல் ஈழத்து மகாவலிகங்கை பரவிப்பாயும் நாட்டின் வளம் குறித்தது.
எஸ்.கே. பர்ராஜசிங்கம் அவர்களும் மெல்லிசையில் நம் கங்கையாளே!
கங்கையாளே... கங்கையாளே....
https://www.youtube.com/watch?v=xp6R8g9iY6U
எஸ்.பி.எஸ் வானொலியில் 3.12.2017 அன்று நிகழ்ந்த இந் நிகழ்வின் ஒலி வடிவத்தை கீழ் வரும் இந்த இணைப்பில் சென்று செவி மடுக்கலாம்.
https://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/audiotrack/tmilllt-tttm-eskee-prraajcingkm?language=ta
யசோதா.பத்மநாதன்.
18.9.17.
No comments:
Post a Comment