ஈழத்தின் பகத்சிங் என குறிக்கப்படும் சிவகுமாரன் இலங்கையின் சாத்வீக அரசியல் பாதையில் சந்தி பிரித்தவன் என்றும்; இலங்கையின் தமிழ் சிறுபாண்மையினரின் ஆயுதப் போராட்ட வரலாற்றின் முன்னோடி எனவும் கணிக்கப் படுபவர்.
ஈழத்தின் ஒட்டு மொத்த தமிழ் பேசும் மக்களின் சமூக நீதிக்காகவும், சம உரிமைக்காகவும், தனி ஒருவராக நின்று, முதன் முதலில் போராடி, சயனைட் நஞ்சுண்டு, மரணத்தைத் தழுவிக் கொண்ட சிவகுமாரன் இலங்கை சுதந்திரமடைந்து 2 வருடங்களின் பின் 26.8.1950ல் யாழ்ப்பாணத்தில் உரும்பிராய் என்ற ஊரில் பிறந்தார்.
யாழ் இந்துக்கல்லூரியில் கல்வி கற்ற சிவகுமாரன், இயற்கையாகவே போராட்ட குணாம்சம் கொண்டவராக இருந்தார் என்று சொல்லப் படுகிறது. 1958 ஆம் ஆண்டுக் கலவரத்தில் போது இவரது மூத்த சகோதரி பருத்தித்துறை துறைமுகத்தில் வந்திறங்கியபோது, 8 வயதுச் சிறுவனாக இருந்த சிவகுமாரன் தன்னுடைய அக்கா ஏன் இவ்வாறு கண்ணீருடன் வந்திறங்க வேண்டும் என்று கேட்டார் என்றும்; 1961ல் தந்தை செல்வாவின் தலைமையில் யாழ்ப்பாணத்தில் சத்தியாக்கிரகம் நடைபெற்ற போது அதில் பங்கு கொண்டு எல்லாவற்றையும் உன்னிப்பாகக் கவனிக்கிற 11வயது துடிப்பான சிறுவனாக அவர் இருந்தார் என்றும் சொல்லப்படுகிறது.
பெரும்பாண்மை சமூகத்துக்கு உள்ள அதே உரிமைகள் சிறுபாண்மை மக்களுக்கும் வேண்டும் என்ற போராட்டத்தோடு மாணவர்களின் உரிமைகளுக்காக மாத்திரமன்றி சமூகத்தில் ஆழ்ந்து கிடக்கும் ஏனைய சாதி அடக்குமுறை, சீதனம், பெண்ணடிமை முறைகளுக்கெதிராகவும் குரல் கொடுத்தார். பெண்கள் மீதான அத்து மீறல்கள் நடைபெறும் இடங்களில் துணிந்து தனி ஒருவராக அதனை எதிர்ப்பவராகவும்; அதற்காகச் சிறை செல்ல அஞ்சாதவராகவும் இருந்தார். மலையக மக்களுடனும் சிறுபாண்மைத்தமிழர்கள் சிறந்த உறவைப்பேண வேண்டும் என்பதிலும் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார்.
ஆயிரத்துத் தொழாயிரத்து எழுபதுகளில் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சிக்காலத்தில் கல்வித் தரப்படுத்தல் முறை அமுல்படுத்தப்பட்ட போது தமிழ் மாணவர்களின் கல்வி மிகுந்த பாதிப்புக்குள்ளானது. அதனால் 1970 நவம்பர் 23ல் தோற்றம் பெற்ற தமிழ் மாணவர் பேரவையில் இணைந்த சிவகுமாரன் அந்தப் போராட்டத்தோடு மட்டும் நின்றுவிடாது சிங்கள அரசுக்கும் தமிழ்த் தேச விரோத சக்திகளுக்கும் எதிரான போராட்டத்தில் ஈடுபட்டார். அதனால் அப்போது கலாசாரத்துறை துணை அமைச்சராக இருந்த சோமவீர சந்திரசிறி என்ற அமைச்சரின் வாகனத்துக்கு கண்ணிவெடி வைத்தார். அது வெற்றியளிக்காத போதும் சிவகுமார் கைது செய்யப்பட்டு செப் 1970ம் ஆண்டு சிறையில் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளானார்.
பின் விடுதலையாகி வந்ததைத் தொடர்ந்து பெப்ரவரி 71ல் யாழ் நகர மேயர் அல்பிரட் துரையப்பா மீது தாக்குதலை மேற்கொண்ட சிவகுமாரன் அதன் காரணமாக கொலைக்குற்றம் சாட்டப்பட்டு மீண்டும் சிறை சென்றார். அங்கு 3 ஆண்டுகள் மீண்டும் கடுமையான துன்புறுத்தல்களுக்கும் சித்திரவதைகளுக்கும் ஆளான சிவகுமாரன் தன் 23வது வயதில் விடுதலையானார்.
சிறைவாழ்வு கொடுத்த பட்டறிவின் மூலம் பல நடைமுறைப்பாடங்களைக் கற்றுக் கொண்ட சிவகுமாரன் எதிரிகளிடம் பிடிபட நேரிடின் சயனைட் அருந்தி உயிரை மாய்க்கும் மார்க்கத்தைத் அதன் பின் தேர்ந்தெடுத்துக் கொண்டார்.
1974 ஜனவரியில் பெரும் எழுச்சியுடன் நடந்த 4வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை குழப்ப அரசு முயன்ற போது - பொலிசாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தின் போது 9 பொது மக்கள் கொல்லப்பட்டனர். இதனால் மிகுந்த கோபம் கொண்ட சிவகுமாரன் அந்தக் கொலைகளுக்குக் காரணமாக இருந்த பொலிஸ் அதிகாரியான சந்திரசேகராவை பழிவாங்கத் தீர்மானித்தார். தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டிருந்த சிவகுமாரன் போராட்டத்துக்குப் பணம் சேர்க்கும் முயற்சியாக கோப்பாய் கிராமியவங்கிக்கு தலைமறைவாகச் சென்ற சமயம் பொலிசாரால் சுற்றிவளைக்கப் பட்டு சயனைச் அருந்தி 5.6.74ல் தன் 23வது வயதில் உயிர் நீத்தார்.
துணிந்து தனி ஒருவனாக நின்று சமூக நீதிக்காக குரல் கொடுத்து தன் 23வது வயதில் சயனைச் அருந்தி தன்னை மாய்த்துக் கொண்ட சிவகுமாரனின் இறுதி ஊர்வலம் 3 மைல்கள் வரை துயர் நிறைந்த மக்கள் தொகையால் நீண்டிருந்தது. சுடுகாடுகளுக்கு பெண்கள் செல்வது முற்றாகத் தடுக்கப்பட்டிருந்த அன்றய சமூக சூழலில் முதன் முதலாக பெருந்தொகையான பெண்கள் சுடுகாடுவரை ஊர்வலாமாகச் சென்று செய்த அஞ்சலியோடு 7.6.1974ம் திகதி நிறைவெய்தியது.
சாத்வீகப் போராட்டங்களாலும் ஜனநாயக கட்சித் தலைவர்களாலும் நிலைநிறுத்தப்படாத சமூகநீதி வேண்டி ஆயுதம் ஏந்திய முதல் பிரதிநிதி சிவகுமாரன்.
அது ஈழத்தின் பகத்சிங் பொன். சிவகுமாரன்!
யசோதா.பத்மநாதன். 14.9.17.
5.11.2017 அன்று எஸ்.பி.எஸ் வானொலியில் ஒலிபரப்பான இந் நிகழ்வை கீழ்வரும் இணைப்பில் சென்று செவிமடுக்கலாம்.
https://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/audiotrack/thamil-thadam-ponsivakumaran?language=ta
அருமையான பதிவு
ReplyDeleteநன்றி புத்தன் :)
ReplyDelete