யாழ்பல்கலைக்கழக நூலகத்தின் பிரதம நூலகர்!
நூலகம் குறித்த; நூலக இயல் குறித்த ஈழத்துத் தமிழ் புத்தகங்கள் பலவற்றின் தாய்!
noolaham.org இன் வழிகாட்டுனர் சபையின் ஆரம்பகாலத்தில் இருந்து இற்றை வரையான உறுப்பினர்!
www.jaffnaheritage.blogspot.com
வாழும் மரபு
www.jaffnaheritage.wordpress.com (விம்பநூலகம்)
ஈழத்தமிழர் வாழ்வியல்
நூலக விழிப்புணர்வு நிறுவனம் மற்றும் முப்பரிமாண நூலகங்களின் சொந்தக்காறி!
எல்லாவற்றுக்கும் மேலாகத் தன் வாழ்நாளில் சம்பாதித்த தன் அனைத்து உழைப்பினையும் முதலாகப் போட்டு தன் இல்லத்திலேயே நான்கு மாடியில் கொள்ளத்தக்க தமிழர் தம் பாரம்பரிய மரபு சார்ந்த பொருட்களைச் சேகரித்துப் பாதுகாத்து வரும் அரிய தமிழ் சமூக பண்பாட்டுக் காவலாளி!
இணுவிலில் இருக்கும் அந்த இல்லத்துக்கு ‘அறிதூண்டல் மையம்’ என்று பெயர்.
மறைந்து போன பாரம்பரியப் பொருள் பண்பாட்டின் காவலாளி........
அறிவு மாணவர்களைத் தேடிச் சென்றடைய வேண்டும்;
அது கண்டு, தொட்டு உணர்ந்து அறிகையில் இருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும்;
அறிவுக் கருவூலமான நூலகம் தன்னைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டிய காலம் இது என்பதை உலகின் பல நாடுகளுக்கும் அங்குள்ள நூலகங்களுக்கும் சென்று கற்று; உணர்ந்து அவற்றை நடைமுறைப்படுத்த பல்வேறு தடைகள் இயலாமைகள் வளப்பற்றாக்குறைகளுக்குள்ளும் தொடர்ந்து போராடி வரும் பண்பாட்டுப் போராளி!
“வாழும் மரபு” என்ற சொல் குறித்த அர்த்தத்தின் சொந்தக்காறி.
ஸ்ரீ காந்த லக்ஷ்மி.......
இவரை நான் சந்தித்ததே ஒரு தற்செயல் தான். அண்மையில் யாழ்ப்பாணம் சென்றிருந்த போது 16.10.2017 அன்று யாழ்பல்கலைக்கழகத்துக்கு சென்றிருந்தேன். அதன் ஓரங்கமாக நூலகத்துக்குச் செல்ல விரும்பி அங்கு சென்ற போது இப் பிரதம நூலகரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது.
அவரது அறை நவீன வசதிகள் கொண்ட பகுதியாக இருக்கும் என்ற என் எண்ணத்துக்கு மாறாக அது ஒரு தமிழ் பண்பாட்டுப் பேணுகையின் ’வாழும் மரபாக’ இருந்தது எனக்கு ஓர் இன்ப அதிர்ச்சி!
அவரை மறந்து அவர் சேகரித்து வைத்திருக்கிற அரும் பொருட்களை பூரிப்போடும் ஒரு வித வியப்போடும் நான் காண விளைந்ததைக் கண்ட அவர் ‘கருத்தூண்’ என்றொரு புத்தகத்தை பின் புறமாகத் திரும்பி தன் புத்தக அடுக்கில் இருந்து எடுத்து மனமுவந்து பரிசளித்தார்.
அந்த நாளின் இரவு அவரது புத்தகத்தை ஆசையோடு பார்த்து படித்து அறிந்து ஒரு விதமான கிறக்கத்தில் உறங்கி மறு நாள் காலை 7.30 மணிக்கு இந்தப் பெண்மணியைக் காண சொல்லாமல் கொள்ளாமல் அவர் வீட்டில் போயிறங்கி நான் நின்ற போது ஒரு புன்னகையோடு, வேலை நேரத்தைத் தயங்காமல் பின் போட்டு, ஒரு வித தாய்மையின் பூரிப்போடு தன் பொருட்கள் அனைத்தையும் பார்ப்பதற்காக எனக்குத் திறந்து விட்டு, அது பற்றி உரையாடி, விளக்கம் கூறி, ஆதங்கம் பகிர்ந்து, நாம் ஆத்மார்த்தமானோம்.....
நான் பார்ப்பதற்காகச் சுதந்திரத்தை முழு நம்பிக்கையோடு எனக்குப் பரிசளித்து விட்டு, சமைத்து தந்த விருந்தோம்பலில், அவரின் ‘வாழும் மரபினை’ அறிந்து கொண்டேன்.
மேலே காட்டப்பட்டிருக்கிற ஒளிப்படங்கள் அவரது காரியாலய அறையில் காட்சிப்பொருட்களாக உள்ளவற்றுள் சில...
ஒளிப்படம்: யசோதா.பத்மநாதன்.
திகதி: 16.10.2017.
இடம்: யாழ் பல்கலைக்கழக நூலகம்; நூலகர் அறை.
அக்கோய்...
நீங்களும் எங்கள் பண்பாட்டுப் பொக்கிஷம் தான்!
மேலே காணப்படும் ஒளிப்படங்களை எடுக்க அனுமதி தந்த நூலகர். திருமதி.ஸ்ரீகாந்த லக்ஷ்மி. அருளானந்தன் அவர்களுக்கு என் நன்றி.
ஒளிப்படம்: யசோதா.பத்மநாதன்.
திகதி: 17.10.1017.
இடம்: இணுவில்.