Monday, July 14, 2025

Snugglepot & Cuddlepie - அவுஸ்திரேலியச் சிறுவர் இலக்கியப் பாத்திரங்கள்

 அவுஸ்திரேலிய செவ்வியல் சிறுவர் இலக்கிய வரலாற்றில் இன்றுவரை பேசப்பட்டுக் கொண்டிருக்கின்ற; மறுபிரசுரங்களைக் கண்டு கொண்டிருக்கின்ற; குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான கதா பாத்திரங்கள் என்றால் இவர்கள் இருவரையும் சொல்லலாம்.



இவர்கள் யார் என்று கேட்கிறீர்களா? இவர்கள் இரண்டு பேரும் Gum Nuts கள். Gum Tree என்று சொல்லப்படுகின்ற மரத்தின் விதைகள் இவர்கள், மிகப் பரந்தளவில் அவுஸ்திரேலியா முழுவதும் காணப்படுகின்ற மரம் இது. அதன் விதைகள் தான் இந்த ஸ்னகிள்பொட்டும்  கட்டிள்பையும்.

அவுஸ்திரேலிய வாழ்வியல் பின்னணியையும் வாழ்க்கை முறைகளையும்  இவை பேசுகின்றன. கற்பனை வளத்திற்கும் குழந்தைகளின் மனநிலைக்கும் ஏற்ற வகையில் கதைகள் பின்னப்பட்டு பாத்திரங்கள் வடிவமைக்கப் பட்டுள்ளனவாக உள்ளன. 

நேற்றய தினம் பழம்பொருட்கள் விற்கும் கடைக்குப் போயிருந்தேன். அங்குள்ள புத்தகங்களைக் கிண்டிக் கொண்டிருந்தபோது, இந்த இரண்டு பேரையும் கண்டு பிடித்தேன். அதற்கு முன்னராக இந்த வருட ஆரம்பத்தில் புத்தகக் கடை ஒன்றில் வண்ணங்கள் தீட்டும் புத்தகம் ஒன்றைத் தேடிக்கொண்டிருந்த போது  இதன் கற்பனை வளத்தின் மேல் கொண்டிருந்த ஆர்வத்தின் காரணமாக இவர்கள் இரண்டுபேரும் இருக்கின்ற அந்த வண்ணம் தீட்டும் புத்தகத்தையும் வாங்கி இருந்தேன்.

puzzle இல் விடுபட்டுப் போயிருந்த ஒரு துண்டு தற்செயலாகக் கிடைத்ததைப் போல ஒரு சந்தோஷம். $1.00 க்கும் $2.00 டொலருக்கும் தற்செயலாகக் கண்டெடுத்து வாங்கிய இந்தப் புத்தகங்கள் எனக்குப் பெரு மகிழ்ச்சியைத் தந்தன. 

சில நேரங்களில் சில சந்தோஷங்கள் இப்படியாக அமைந்து விடுகின்றன... ஒரு தேவதை காற்ரு வெளியில் உலா போகும் போது தன் கையில் இருக்கும் மந்திரக் கோலால் என் தலையில் அவ்வப்போது போகிற போக்கில் ஒரு தட்டு தட்டி விடுகிறாள் போலும்!

சரி நான் புத்தகத்திற்கு வருகிறேன்,

இந்தக் கம்னட்களுடய  சாகசப் பயணங்களும் அந்தப் பயணத்தின் போது அவர்கள் சந்திக்கின்ற அவுஸ்திரேலிய விலங்குகளும்  அவர்களுடனான இவர்களின் உரையாடல்களும் அதனூடாக அவை வெளிப்படுத்தும் அவுஸ்திரேலிய வாழ்வியல்களும் சுவாரிசம் மிக்கவை.

தும்பியில் சவாரி செய்யும் இவர்கள் வண்ணம் தீட்டும் புத்தகத்தில் இருந்த ஒரு கதையின் சம்பவதாரிகள். 


இந்தக் கதைகளின் சூத்திரதாரி May.Gibbs என்பார்.  நான் அவரைப் பற்றி விலாவாரியாக எடுத்துச் சொல்வதை விட நீங்களே கீழே உள்ள link இல் சென்று பாருங்களேன்!

https://maygibbs.org/character/snugglepot-and-cuddlepie/

2 comments:

  1. gumnut babies - எவ்வளவு அழகான கற்பனை! முதன்முதலாகக் கேள்விப்பட்டபோது அவ்வளவு வியப்பாக இருந்தது. 2018-ஆம் ஆண்டின் விவிட் நிகழ்வு இவர்களை மையப்படுத்திதான் இருந்தது. அதைப் பற்றி முன்பு நான் எழுதிய பதிவு இது.
    https://geethamanjari.blogspot.com/2018/06/blog-post.html
    தேவதையின் மந்திரக்கோல் அடிக்கடி உங்கள் தலையைத் தட்டட்டும். :)))

    ReplyDelete
  2. நன்றி கீதா. நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களை இங்கு கண்டுகொண்டதில் மிக்க மகிழ்ச்சி. நீங்களும் பல சிறுவர் கதைகளையும் பாடல்களையும் எழுதியவர். உங்கள் பதிவை இங்கு பகிர்து கொண்டமைக்கு நன்றி.

    தேவதைகள் தங்கள் மந்திரக் கோலால் அவ்வப்போது என் தலையில் தட்டுகிறார்கள் என்பது உண்மைதான். ஆனால், அவ்வப்போது சற்று உரத்துத் தட்டி விட்டுப் போய் விடுகிறார்கள்.

    இன்று என் வாகனத்தை குறிப்பிட்ட நேரத்திற்குள் எடுக்காத காரணத்தால் 140 டொலர்களுக்கு தண்டம் எழுதி வைத்து விட்டுப் போய் விட்டார்கள்.

    தேவதைகள் தட்டுகிறபோது சற்று மெல்லவாகத் தட்டினால் நன்றாக இருக்கும். :)) $140 டொலர்கள்.....

    ReplyDelete