Friday, August 7, 2026

இனியாவுக்கு நல்வரவு

 கடந்த 15.07.2026 அன்று அதிகாலை எங்களுக்கு ஒரு பேத்தி பிறந்திருக்கிறாள்.

முதன் முதலில் கிடைத்த மூத்த பேத்தி அவள்

பெயர் இனியா!

இன்று அவள் தன் தாய் தந்தையரோடு மூன்றுவாரக் குழந்தையாக என் வீட்டுக்கு வந்திருந்தாள். அவளுக்காக நான் எழுதிய கவிதை ஒன்றை ஒரு ஞாபகார்த்தம் கருதி இங்கு பதிவேற்றி வைக்கலாம் என்று நம்புகிறேன்.


Welcome Home Iniya


நல் வரவு இனியா

முகம் மலர்ந்த முத்தமிழே

முன் உதித்த ரத்தினமே

தங்கத் தமிழ் மகளே

இனிய மகளே இனியா


கண் மலர்ந்து பாரம்மா

வந்து மடி சேரம்மா


கட்டிக் கனியமுதே

பேத்தியாக்கிய பொற்கிளியே

பாக்கியமே பார்புகழ 

வந்துதித்த பாற்குடமே


கண்மலர்ந்து பாரம்மா

வந்து மடி சேரம்மா


திவ்யா தந்த திவ்யமே

நாரா தந்த நற்கனியே

நாளும் உனை வாழ்த்துகிறேன்

நற்தமிழே வாழ்கவம்மா


மூத்த பேத்தி ஆனவளே

எங்கள் வீட்டு ஒளிவிளக்கே

புன்னகையே முழு நிலவே

பார்புகழ வாழ்கவம்மா


குடும்பத்தை உருவாக்க

குதூகலத்தைக் கொண்டாட

கூடி நாங்கள் களித்திருக்க

வந்தவளே வாழ்கவம்மா


நாங்கள் பெற்ற பெரும் பேறே

குணவதியாய் வாழுமம்மா

தமிழ் கொண்டு மொழிபேசி

பார் புகழ வாழுமம்மா

தமிழ் நெறிப் பாதையிலே

நல்ல நடை போடுமம்மா


நல்லவழி விளங்கி விட

ஆனைமுகன் காத்திருப்பான்

என்றும் அவன் பாதம் பற்றி

பாதையினை வகுத்திடம்மா


வருத்தம் வரும் வாழ்க்கையிலே

எதிர்பாரா இடரும் வரும்

'இதுவும் கடந்து போகும்'

என்றிருந்தால்

'எல்லாம் நன்மைக்கே'

என்றொரு திடம் இருந்தால்

வாழ்க்கையை வென்றிடலாம்

நல்லபடி வாழ்ந்திடலாம்


ஆத்தாப்பாட்டி சொன்னதனால்

ஏற்கவேண்டும் என்றில்லை

உள்ளத்தில் அறத்தை நீ

தெம்போடு சுமந்து நின்றால் 

எல்லாமே சுகமாகும்

 

பிரபஞ்சம் காத்து நிற்க 

சுபீட்சமாய் வாழ்ந்திடம்மா


எண்ணத்தால் உயர்ந்து நில்

அறத்தை நீ சுமந்து செல்

மிச்சமெல்லாம் இறைவன் செயல்

என்றேயிரு போதுமது!


காத்துநிற்பான் ஆனைமுகன்

ஆணை இது நம்புமம்மா


இனியவளே இனியா

இன்பமாக வாழ்ந்திடம்மா 


வாழ்த்துகிறேன் வாழ்கவென்று

மகிழ்வாக வாழுமம்மா

ஆத்தாப்பாட்டி வாழ்த்துகிறேன்

ஆரோக்கியமாய் வாழுமம்மா

மாங்கனியே முத்தமிழே

மாண்புற நீர் வாழுமம்மா

எல்லா நலமும் பெற்று

எழிலே நீர் வாழுமம்மா


காலம் தந்த கண்மணியே

கமலமென மலர்ந்தவளே

களிப்போடு வாழுமம்மா


முடிக்கத்தான் பார்க்கின்றேன்

முடியவில்லை

சுருக்கத்தான் நினைக்கின்றேன்

இயலவில்லை

முனைகின்றேன் முனைகின்றேன்

முயற்சியோ முடியவில்லை


என்றாலும் என்கிளியே

என்வாழ்த்தும் அப்படித்தான்

முடியாமல் நீண்டு போகும்

முல்லைமலரே வாழுமம்மா


முதன் முதலாய் காண்கின்றேன்

என் உவகை என்ன சொல்வேன்!


அன்னையோடு வந்தாய் தாயே

பார்புகழ வாழ்க நீயே

தந்தையோடும் வந்தாய் தாயே

தரணியில் நீ தழைப்பாய் நீயே


தளிரே தங்கத்தில் வார்த்த வடிவழகே

காலமெல்லாம் நீ களிப்போடும்

நிறைவான சிரிப்போடும் 

நின்மதியாய் வாழுமம்மா 


அம்மா போல் அப்பா போல்

பாட்டி தாத்தா சுற்றத்தோடு 

குணத்தில் வார்த்த குலக் கொழுந்தே

மகிழ்ந்து நீ வாழ்ந்திடம்மா


குமிழ் சிரிப்பே எம் குலக் கொழுந்தே

குலநிதியே களங்கமில்லா பொற்கிளியே

பொலிவோடு நீ விளங்கிடம்மா


ஆண்டவன் காத்து நிற்க

அருளோடு வாழ்ந்திடம்மா!

 

- யசோதா.பத்மநாதன்

07.08.2026 


Welcome to the world Iniya


Sweet Iniya, born to shine

Little star and joy of mine

Softest cheeks and brightest smile

Stay with paatti for a while

Hold my hand and feel my love


You are a blessed gift from above 

Grow up strong and dream so high

Touch the star up in the sky

Aaatha paatti's heart

Beats just for you!


7.8.2026

No comments:

Post a Comment