நேற்றய தினம் 04.09.2026 வெள்ளிக்கிழமை சர்வதேச திருக்குறள் மகாநாடு ஒன்று சிட்னியில் உள்ள அவுஸ்திரேலியக் கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
இதனைத் தமிழ் வளர்ச்சி மன்றம் ஒழுங்கு செய்திருந்தது. அவர்களுக்கு இணை அனுசரனையாளர்களாக மொறீசியஸ், மலேசிய மற்றும் இலங்கையைச் சேர்ந்த பண்பாட்டு மையங்கள் தம் ஆதரவை வழங்கியிருந்தன.
கூடவே, அவுஸ்திரேலிய SBS வானொலி, அவுஸ்திரேலியக் கத்தோலிக்கப் பல்கலைக்கழகம், உட்பட பல நிறுவனங்கள் தம் நிதி மற்றும் நடைமுறை அனுசரனையை வழங்கியிருந்தன.
காலை தொடங்கி மாலை வரை தொடர்ச்சியாக நடைபெற்ற இந் நிகழ்வில் உலகநாடுகள் பலவற்றிலும் இருந்து சுமார் முப்பது அறிஞர்களும் அவுஸ்திரேலிய இளைய சமூகத்தினரும் கலந்து கொண்டு தம் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்திருந்தார்கள்.
வேலைநாள் என்பதால் முழு நிகழ்விலும் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. ஆனால் என் அன்புத் தோழி கீதா. மதிவாணன் அவர்களுக்கு அவருடய மொழிபெயர்ப்பு முயற்சிகளை பாராட்டி விருது வழங்கப்பட்ட நிகழ்வில் நான் கலந்து கொண்டேன்.
உலக அறிஞர்கள் முன்னிலையில் அவரது அரிய தமிழ்பணிகள் கவனத்திற்கு உட்படுத்தப்பட்டு அவரை அங்கீகரித்து வழங்கப்பட்ட விருது உண்மையானதும் பொருத்தமானதும் சிறப்பானதுமாகும்.
அவர் என்னுடய பிரிய தோழியாக இருப்பதானது இந்தத் தமிழின் வழியான தொடர்பால் ஏற்பட்டது தான். அவரிடம் இருக்கிற எளிமை, உண்மை, திறமை, அமைதியும் மென்மையுமான அவரது குணாம்சம், தன்னை எப்போதும் முன்நிறுத்தாத மேன்மை, ஆர்வம், தமிழ் மீதான பற்றுதல், அதனைச் செழுமைபெறச் செய்வதற்கு அவர் கொடுக்கும் பொன்னான நேரம், மற்றும் தமிழ் மீதான ஆழமான அறிவு, மொழிப்பற்றுதல் ஆகியனவற்றோடு எது தமிழுக்குத் தேவை / தமிழுக்கு எது முக்கியம் என்பதைக் கண்டறிந்து அதற்காக உண்மையாக உழைப்பது என்பவற்றின் வழியாகத் தமிழைச் சிறபிக்கிறவர் அவர்.
போட்டிகள், புகழ், பிரபலம், உள் அரசியல்களுக்குள் அகப்பட்டுக் கொள்ளாதவர் அவர். அவற்றில் இருந்து எப்போதும் விலகியே இருப்பவர். மத்தியஸ்தம் வகிக்க அவர் அமைப்புகளால் அழைக்கப்படுகின்ற போதும்; கருத்தரங்கங்களில் கட்டுரைகள் சமர்ப்பிக்கப் கோரப்படும் போதும்; மொழிபெயர்ப்புகள் செய்து தரக் கேட்கப்படுகின்ற போதும்; பல இயலாதவர்கள் தமிழ்மொழியில் தட்டச்சுச் செய்து தரக் வேண்டுகின்ற போதும் தன் நிலைப்பாட்டை / உண்மைநிலையை சொல்லி இன்முகத்தோடு அவைகளைச் மறுப்பேதும் சொல்லாமல் செய்து கொடுப்பவர்.
அவர் விருதுகளுக்காகவோ அல்லது பாராட்டுதல், மற்றும் அங்கீகாரங்கள் இவற்றுக்காகவோ உழைப்பவர் அல்லர். ஆனால் அவ்வாறு ஒன்றை ஒருவரின் திறமையை இனம் கண்டு கொடுக்கின்ற போது, அது நிச்சயம் அவருக்கு ஓர் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் உத்வேகத்தையும் வழங்கும். அந்த வகையில் நேற்றயதினம் அவருக்குக் கிடைத்த விருது மிகப் பொருத்தமானதும் பாராட்டத்தக்கதுமான நிகழ்வாகும்.
உண்மையான திறமைக்கு வழங்கப்பட்ட அங்கீகாரம் அது. அவரை இனம்கண்டு அவருக்கு விருது கொடுத்ததில் தமிழ் வளர்ச்சி மன்றமும் அதன் ஸ்தாபகர் சட்டத்தரணி திருமதி சந்திரிக்கா. சுப்பிரமணியன் அவர்களும் பாராட்டுக்குரியவர்கள்.
கீதா.மதிவாணன் பல்துறை ஆற்றல் வாய்ந்தவர். பல்வேறு புத்தகங்களை அவர் உருவாக்கி அளித்திருக்கிறார். அவர் ஓர் இயற்கை ஆர்வலர், புகைப்படக் கலைஞர் என பல்துறை விற்பன்னர் என்ற போதும் எனக்குத் தனிப்பட்ட முறையில் அவரது மொழிபெயர்ப்பு வேலைகள் மீது தணியாத காதல் உண்டு.
அவர் ஒரு இலாவகமான கதை சொல்லி. எளிமையான தமிழ் சொற்கள், வசீகரமான ஆற்றொழுக்கான வசனநடை, மொழிபெயர்ப்பு என்று தெரியாதபடி இயல்பாகச் கதையை எடுத்துச் செல்லும் ஒழுங்கு, மிக மென்மையாக அதே நேரம் ஆணித்தரமாக அவுஸ்திரேலியப் பண்பாட்டை தமிழ் மொழிக்குள் எடுத்து வரும் பாங்கு, மூல எழுத்தின் மீதும் எழுத்தாளர் மீதும் அவர் கொண்டிருக்கிற பற்றுதலும் அவர்களைப்பற்றிய முழுமையான அறிவும், அவசரப்படாமல் நிதானமாக அவர் மொழிபெயர்ப்பு முயற்சிகளுக்கு எடுத்துக் கொள்ளுகிற நேரம் ஆகியன அவரது மொழிபெயர்ப்புகளை தமிழின் உச்சத்துக்கு எடுத்துச் செல்லுகின்றன.
ஹென்றி.லோஷனையும் ரஷ்ய எழுத்தாளர்களையும் யப்பானிய எழுத்தாளர்களையும் அவர்களின் எழுத்துக்களையும் அவர்தம் உலகங்களையும் நான் கீதாவின் வழியாக அறிந்து கொண்டிருக்கிறேன். நான் நம்பி அவற்றை வாசிப்பதற்குக் காரணம் அந்தக் கதைகளின் முக்கியத்துவம், இவரின் மொழிபெயர்ப்பின் மீது எனக்கிருக்கிற நம்பிக்கை, உண்மைத் தன்மை, அவற்றை மொழிபெயர்ப்பதற்கு அவர் கொடுத்திருக்கிற உழைப்பு நேரம் மற்றும் அந்தக் கதைகளின் மீதான அவரது நேசம் ஆகியன தான். தார்மீகமான அவரது தமிழ்பணி அது! அதில் நான் நனைந்து முழுகி முக்குளித்து மகிழ்ந்திருக்கிறேன். புதுப் புது உலகங்களைக் கண்டு உள்ளம் குளிர்ந்திருக்கிறேன்.
அவரது தமிழ் பணி வாழ்க!
அவருக்கு இந்த முதல் விருது கிடைத்ததில் நான் மிகுந்த பெருமைப் படுகிறேன்.
அவருக்கு எனது மனப்பூர்வமான பாராட்டுக்கள். அவர் மேன்மேலும் குறிப்பாக அவுஸ்திரேலிய எழுத்தாளர்களின் படைப்புகளையும் பண்பாட்டு உலகங்களையும் தமிழுக்கு எடுத்து வரவேண்டும். தமிழ் அதன் வழி செழுமையுற வேண்டும்.கீதா,
உங்களை என் தோழியாகப் பெற நான் மிகுந்த பாக்கியம் செய்திருக்கிறேன்.
வாழ்க உங்கள் பணி!
வளர்க உங்கள் சேவை!
.jpg)

.jpg)

No comments:
Post a Comment