Sunday, September 27, 2026

புதிய தாலாட்டு

 ஆராரோ ஆரிரரோ 

ஆராரோ ஆரிரரோ

அழவேண்டாம் தமிழ் குழந்தாய்

அழகாய் நீ நித்திரை கொள்


ஆர் ஆரோ? ஆர் இவரோ?

எனப் பயந்தோ நீயழுதாய்?

புதிய ஓருலகுக்கு 

புதிதாய் வந்த பொக்கிஷமே!


அடித்தாரைச் சொல்லியழு

ஆக்கினைகள் செய்து வைப்போம்

என்று நான் சொல்லமாட்டேன்

மேலும் பலவினைகள்

வேண்டாம் என் மகளே

பேதம் ஏதும் வேண்டா

பொன்மகளே கண்ணுறங்கு


ஆராரோ ஆரிரரோ

ஆராரோ ஆரிரரோ


கணக்கு வழக்கு நிலுவைதனை

சமன்செய்யப் பிறந்தவளே

ஆரையும் நாம் நோக வேண்டா

யாரோடும் பகை வேண்டா

மேலும் நிலுவை ஏறிடாமல் 

காப்பதற்கு ஏதுவாக

'எல்லோரும் நல்லவரே

எல்லாமும் நன்மைக்கே'

என்றொரு மனம் இருந்தால்

அச்சமில்லை என்மகளே

ஆறுதலாய் நித்திரை கொள்


ஆராரோ ஆரிரரோ

ஆராரோ ஆரிரரோ


பொற்கிளியே புது மலரே

புதியதோர் கிரகத்தில்

புரியாமல் புகுந்து விட்டோம்

பாதை எது பயணம் எது

புரியவில்லை என்றோ நீயழுதாய்?

பயம் வேண்டாம் பதட்டம் அதுவும் வேண்டாம்

இயற்கை அன்னை பேரெழிலாள்

போற்றி அவளும் காத்திருப்பாள்

மனக் குயிலே மருக்கொழுந்தே

கலங்கவேண்டாம் கண்ணுறங்கு


ஆராரோ ஆரிரரோ

ஆராரோ ஆரிரரோ


பயந்து நீயழுதாயோ

பாதகம் நேருமென நினைத்தாயோ?

போர் என்று பயந்தாயோ

போக்கிடம் இல்லையென்று குமைந்தாயோ?

புதுமலரே முழுநிலவே

பயமேதுமில்லை

பழியேதும் நேரவில்லை

பயப்படத் தேவையில்லை

பத்திரமாய் நித்திரை கொள்


ஆராரோ ஆரிரரோ

ஆராரோ ஆரிரரோ


கண்ணுறங்கு கண்மணியே

கவலையின்றி நீயுறங்கு

தர்மம் துணையிருக்க

பயம் ஏதும் நமக்கில்லை

துன்பமென்று ஏதுமில்லை

துவள நீ தேவையில்லை

கவலையின்றி நீ தூங்கு


ஆராரோ ஆரிரரோ

ஆராரோ ஆரிரரோ


பாதுகாப்புப் பலமிருக்க

படைத்தவனின் அருளிருக்க

தர்மம் என்றோர் படையிருக்க

பயம் வேண்டாம் பைங்கிளியே

பத்திரமாய் நித்திரை கொள்


ஆராரோ ஆரிரரோ

ஆராரோ ஆரிரரோ


அறம் என்றோர் அரண் இருக்கு

தமிழ் என்றோர் பலம் இருக்கு

உண்மை தர்மத் துணை இருக்கு

தெய்வபலம் முன் நிற்க

பயம் எதற்கு நித்திரை கொள்

புண்ணியங்கள் சூழ்ந்திருக்க

பொன்மகளே நித்திரை கொள்


ஆராரோ ஆரிரரோ

ஆராரோ ஆரிரரோ


காலமகள் உன்னை 

கருணையோடு காத்திருப்பாள்

அப்பப்போ அடித்தணைத்து

உண்மைதனை சொல்லி வைப்பாள்

ஆத்மாவின் அழகுதன்னை

ஆண்டவனே மிளிரச் செய்வான்

பேரருள் துணை இருக்க

கவலை ஏதும் வேண்டா

கண்மணியே நீ கண்ணுறங்கு


ஆராரோ ஆரிரரோ

ஆராரோ ஆரிரரோ


ஆராரோ ஆர் இவரோ 

என்றுனக்குக் கவலை வேண்டாம்

பாதைவழிப் பயணிகள் நாம் 

பாதிவழியில் போனாலும்

ஆத்மாவின் அழகுதன்னை

மினுக்கி வைக்கப் பிறந்தவளே

துலங்குதற்கும் மிளிர்வதற்கும்

வழிவகைகள் பலவுண்டு

மகிழ்ந்திருக்க மார்க்கமுண்டு

பயப்படாமல் நீ தூங்கு


ஆராரோ ஆரிரரோ

ஆராரோ ஆரிரரோ.

No comments:

Post a Comment