Saturday, March 22, 2025

சிவ புராணம் - சில சந்தேகங்கள்....சில திருத்தங்கள்........ சில குறிப்புகள்.........

 அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவைப் பணிந்து, தொழுது இந்தப் பதிவை ஆரம்பிக்கிறேன்.

முற்குறிப்பு:

6 - 9 நூற்றாண்டுக்கிடைப்பட்ட காலப் பகுதியில் ஓலைச் சுவடிகளில் எழுதப்பட்ட தேவாரத் திருப்பதிகங்கள் அச்சு இயந்திரத்தின் அறிமுகத்துக்குப் பிறகு அச்சுருப் பெற்றன என்பது வரலாறு.

ஓலையில் எழுத்துக்களை எழுதுகிற போது சில சிக்கல்கள் இருக்கின்றன. ஓலையிலே குற்றுகள், சுழிகள், கொம்புகள் போன்ற எழுத்துவடிவங்களை எழுதுகிற போது ஓலை கிழிந்து விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதனால் அதனை எழுதுகிறவர்கள் சந்தர்ப்பம் கருதி அவற்றைத் தவிர்த்து விடுவது வழக்கம்.

அதனைப் பிறகு வாசிக்கிறவர்கள் வேறு ஒருவராக இருந்தால் முதலில் அதனை வாசித்துப் பார்த்து, அதன் பொருளை இன்னதென உணர்ந்து, சொற்களை அனுமானித்து, ஒருவாறாக வசனத்தையோ பாட்டையோ வாசிப்பார்கள். அதனை எழுதியவரும் வாசிப்பவரும் வேறு வேறானவர்களாக இருக்கும் பட்சத்தில் அதில் தவறுகள் நேருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உண்டு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இது நம் தேவார திருப்பதிகங்களுக்கும் பொருந்தும். 

இந்தப் பதிகங்களைப் படியெடுக்கின்ற போது நேர்ந்துவிட்ட தவறுகளை நான் மிகவும் போற்றி மகிழும் சிவபுராணத்தில் ஆங்காங்கே கணக்கிடக்கிறது. தேவார திருப்பதிகங்களில் பிழை கண்டுபிடிக்கலாமா என்று யாரேனும் என்னோடு சண்டைக்கு வந்து விடாதீர்கள். எனது கருத்தையும் அநுமானத்தையும் நான் சொல்கிறேன். அதில் ஏதேனும் கருத்துப் பிழைகள் இருந்தால் சுட்டிக் காட்டுங்கள். அது சரியாக இருக்கும் பட்சத்தில் நான் அதனை நிச்சயமாகத் திருத்திக் கொள்வேன். யாரும் எதிலும் நிபுணர்கள் கிடையாது. எல்லோருக்கும் தவறுகள் நேர்வது இயல்பு. யானைக்கும் அடி சறுக்கும் என்பதை ஏற்றுக் கொண்டு, திறந்த மனதோடு நாம் பாடல்களைச் சரியான அர்த்தத்தோடு பாடவேண்டுமே தவிர, எழுதி வைத்து விட்டதை சரியோ பிழையோ என்று பாராது அப்படியே ஒப்புவிப்பதைத் தவிப்பதற்காக இப் பாடலை இங்கே சுட்டிக் காட்டுகிறேன்.

நன்றி. தவறிருப்பின் பொருத்தருள்க. மறக்காமலெனக்கும் சுட்டிக் காட்டுக.


நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க                                         வாழ்க

இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க

கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க                                    கோள்களை ஆண்ட

ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க                                   நின்று அன்னிப்பான்

ஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க 5


வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க                                வேதம் கொடுத்தாண்ட

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க           மெய்கழல்கள்

புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க                பிறந்தார்க்குச் 

கரங்குவிவார் உள்மகிழுங் கோன்கழல்கள் வெல்க              கரம் குவிப்பார்

சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க 10        சிரம் குவிப்பார்


ஈச னடிபோற்றி எந்தை யடிபோற்றி

தேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றி

நேயத்தே நின்ற நிமல னடிபோற்றி

மாயப் பிறப்பறுக்கும் மன்ன னடிபோற்றி

சீரார் பெருந்துறைநம் தேவ னடிபோற்றி 15


ஆராத இன்பம் அருளுமலை போற்றி

சிவனவன்என் சிந்தையுள் நின்ற அதனால்

அவனரு ளாலே அவன்தாள் வணங்கிச்

சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை

முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன்யான் 20


கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி

எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி

விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்

எண்ணிறந் தெல்லை யிலாதானே நின்பெருஞ்சீர்

பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன் 25


புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்                                           பல் மிருகமாகிப்

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள் 30                                          செல்லாது நின்ற


எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்

மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்

உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற

மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்                               விடை பகா வேதங்கள்

ஐயா எனஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே 35


வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா

பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி

மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே

எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே

அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே 40


ஆக்கம் அளவிறுதி இல்லாய் அனைத்துலகும்

ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்

போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்                    நின்று எழும்பின்

நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே

மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே 45


கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்

சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று

பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்

நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்க ளேத்த

மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50


மறைந்திட மூடிய மாய இருளை

அறம்பாவம் என்னும் அருங்கயிற்றாற் கட்டிப்

புறந்தோல்போர்த் தெங்கும் புழுவழுக்கு மூடி

மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை                                                        மலம் சேரும்

மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய 55


விலங்கு மனத்தால் விமலா உனக்குக்

கலந்தஅன் பாகிக் கசிந்துள் ளுருகும்

நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி

நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி

நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60


தாயிற் சிறந்த தயாவான தத்துவனே

மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே

தேசனே தேனா ரமுதே சிவபுரனே

பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே

நேச அருள்புரிந்து நெஞ்சில்வஞ் சங்கெடப் 65


பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே                                                   பேசாது நின்ற

ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே

ஓராதார் உள்ளத் தொளிக்கும் ஒளியானே                                      ஓதாதார் உள்ளத்து / ஒழிக்கும் ஒளியானே

நீராய் உருக்கியென் ஆருயிராய் நின்றானே

இன்பமுந் துன்பமும் இல்லானே உள்ளானே 70


அன்பருக் கன்பனே யாவையுமாய் அல்லையுமாஞ்

சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே                               துன் இருளே

ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே

ஈர்த்தென்னை யாட்கொண்ட எந்தை பெருமானே

கூர்த்தமெய்ஞ் ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின் 75


நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே

போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே

காக்குமெங் காவலனே காண்பரிய பேரொளியே

ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக் காய்நின்ற

தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் 80


மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்                   வந்தறிவாய்

தேற்றனே தேற்றத் தெளிவேஎன் சிந்தனையுள்

ஊற்றான உண்ணா ரமுதே உடையானே        ஊற்றானார் உண்ணா அமுதை உடையானே 

வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப

ஆற்றேன்எம் ஐயா அரனேஓ என்றென்று 85


போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்ஆனார்

மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே                                          மீண்டு இங்கு வந்து

கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே

நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே

தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90


அல்லற் பிறவி அறுப்பானே ஓஎன்று

சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்

சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்

செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப்

பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95 


மேலதிக குறிப்புகள்:

1.கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க  கோள்களை ஆண்ட

கோகழி என்பதற்கும் கோகழியினை ஆண்ட என்பதற்கும்  என்னால் சரியான அல்லது பொருத்தமான அர்த்தத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அது கோள்களை ஆண்ட என்று வருகிற போது நவக்கிரகங்களையும் கோள்களையும் அதன் வலிமைகளையும் நம்புகிற இந்துக்கள் அவற்றை ஆள்கின்றவனாக கடவுளைப் போற்றி, கோள்களை ஆண்ட குரு மணி (தன் - அவன்) தாள் வாழ்க என்று வருகிற போது அது பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

2. ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க        நின்று அன்னிப்பான்

ஆகமமுமாகி அதிலிருந்து அன்னிப்பவனாகவும் ( ஆகமங்களில் இருந்து தள்ளி நிற்பவனும் ஆகியவனின் தாள் - பாதங்கள் வாழ்க.

3. வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க    வேதம் கொடுத்தாண்ட 

வேகங் கெடுத்தாண்ட என்பதற்கு எவ்வாறாக அர்த்தம் கற்பிக்க இயலும்? ‘வேதம் கொடுத்த ஆண்டவர்’ என்று நாம் இறைவனை துதிக்கிறோம். வேதங்கள் இறைவனால் அருளிச் செய்யப்பட்டவை என்று இந்துக்களாகிய நாம் நம்புகிறோம். அதனால் வேதங்களைக் கொடுத்து ஆண்ட வேந்தன் - அரசனுடய அடிகள் வெல்க என்று வருவது பொருத்தமாக இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது.

4.பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க   மெய்கழல்கள் 

பிறப்பினை இல்லாது செய்யும் பிஞ்ஞகன் ( அவனுடய) மெய்கழல்கள் - கழல் என்பது காலில் அணியும் ஒரு பாத அணி. இங்கு அதனை அணிந்திருக்கிறவனுடய பாதங்களைக் குறிக்கிறது.  உண்மையான பாதங்கள் வெல்க.

5.புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க  பிறந்தார்க்குச்

சேயோன் என்ற சொல்லுக்கு சிவன், சிறந்தவன், சிவந்தவன் என்றெல்லாம் தமிழில் பொருள் கூறப்படுகிறது. இந்து சமயத்தில் புறத்தார் என்று சிறு தெய்வ வழிபாடுகளைச் செய்துவரும் இந்துக்களை குறிப்பிடுவதாகச் சில கருத்துக்கள் காணப்படுகின்றன. இந்து சமயத்துக்குள் நல்லறிவும் ஞானமும் நல்லமைச்சுப் பதவியும் பெற்றிருந்த மாணிக்க வாசகர் இந்துசமயத்துக்குள்ளேயே பாகுபாடுகளைச் சுட்டிப் பாடி இருக்க வாய்ப்பில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது.

பிறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க - அதாவது பிறந்த எல்லாருக்கும் சிவனாக இருக்கிறவனுடய பூப் போன்றதும் கழல்களை அணிந்துருக்கிறதுமான பாதங்கள் வெல்க! என்பது பொருத்தமாக இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது.

6.கரங்குவிவார் உள்மகிழுங் கோன்கழல்கள் வெல்க  கரங் குவிப்பார்

சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க    சிரங் குவிப்பார்

கரங் குவிவார் / சிரம் குவிவார் என்பதை விட கரம் குவிப்பார் / சிரம் குவிப்பார் என்பது பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

கரம் குவிப்பவர்களுடய உள்ளங்கள் மகிழும் கோன் - அரசன்/ தலைவன் - அவனுடய கழல்கள் - கழல் அணிந்திருக்கிற பாதங்கள் வெல்க!

சிரங்குவிப்பார் - தலைகுனிந்து வணங்குபவர்கள் - அவர்களை ஓங்கி ( உயரச் செய்யும்) சீரோன் - சிறப்பானவன் - அவனுடய கழல்கள் - கழல் அணிந்திருக்கிற பாதங்கள் வெல்க!

7.பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்      பல் மிருகமாகிப்

பல் மிருகமாகி - பலவிதமான மிருகங்களாக உரு எடுத்து என்று வருதல் பொருத்தமாக இருக்கும். அதனை அடுத்துப் பறவையாய் பாம்பாகி என்று வருவதால் முன்னால் இருக்கும் சொல் பல்மிருகம் என்று வருதல் மிகவும் பொருளுடைத்து.

8.செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்     செல்லாது நின்ற

செல்லா அ - செல்லாது நின்ற - இதுவரை பிறபெடுக்காமல் இருக்கின்ற தாவரக் குழுமத்துக்குள் என்று பொருள் கொள்க.

9.மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்       விடை பகா வேதங்கள்.

இதில் ஓர் எழுத்துப் பிழை தான் நேர்ந்திருக்கிறது என்பது என் அனுமானம். விடைப்பாகா என்பது விடை பகா - அதாவது விடை பகராத - விடை தராத வேதங்கள் என்று வந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

10.போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்  நின்று தொழுதால்

இது ஓரு மறை பொருளாய் நிற்கும்சொல் என்றே எனக்குத் தோன்றுகிறது. நிந்தொழும்பின் என்பது நின்று தொழுதால் - நிந்தொழும்பின் என்று பொருள் கொள்ளல் சாலப் பொருந்தும்.( நின்று வணங்குவீர்களானால்)

11மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை  மலம் சேரும்

மலம் என்பது ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களையும் குறிக்கும். இந்துக்களாகிய நாம் நம் ஆத்மாவை ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று மலங்கள் பீடித்திருக்கின்றன என நம்புகிறோம்.

மலஞ்சோரும்  என்பதற்குத் தனியாக அர்த்தம் காண்பதை விட அச் சொற்தொடருக்கு முழுதாக அர்த்தம் காணின் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

’ஒன்பது வாயில் குடில்’ என்று ஓர் அழகான பதத்தை உபயோகிக்கிறார் மாணிக்க வாசகர். எங்களுடய உடல் ஒன்பது வாயில்களைக் கொண்ட ஒரு குடில் என்று சொல்கிறார் அவர். அவை எவை ஒன்பது வாயில்கள்?

கண்கள் - 2

காதுகள் 2

மூக்குத் துவாரங்கள் - 2

சலவாசல் - 1

மலவாசல் - 1

யோனிவாசல் - 1 

இவ்வாறாக மொத்தம் ஒன்பது வாசல்கள் எங்கள் உடலுக்கு உண்டு. இந்த ஒன்பது வாயில்களைக் கொண்ட குடிலை ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களும் சேரும். (சோரும் என்று அர்த்தமாக மாட்டது)

இந்த உடல் குறித்த உவமைகளை இந்து சமயக் குரவர்கள் பலவாறாகப் பாடியுள்ளார்கள்.

’.......மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே

ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்

ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி....’ 

என்று ஒளவையார் விநாயகர் அகவலில் செப்புகிறார்.

அது போல, 

'உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்

வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்

தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்

கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே'

என்கிறார் திருமூலர் தன் திருமந்திரத்தில். 

பூதத்தாழ்வார் தன் பாசுரத்தில் இவ்வாறு பாடுகிறார்,


‘அன்பே தகளியாக ஆர்வமே நெய்யாக,

இன்புருகு சிந்தை யிடுதிரியாக, – நன்புருகி

ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு

ஞானத் தமிழ்புரிந்த நான்’. 

எவ்வளவு அழகிய பாடல்கள் இல்லையா? 


திருமூலரின்  இன்னொரு பாடல் 

’உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்

உடம்புக்குள்ளே உறு பொருள் கண்டேன்

உடம்புளே உத்தமன் கோயில் கொண்டானென்று

உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே’ - என்றும்


’உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள்

மெள்ளக் குடைந்து நின்றாடார் வினைகெடப்

பள்ளமும் மேடும் பறந்து திரிவாரே

கள்ள மனமுடைக் கல்வி இலோரே’!

 - என்றும் உள்ளத்தினுள்ளே இறைவனைக் காணாது வேறு எங்கெல்லாமோ தேடி அலையும் பக்தர்களைத் திருமூலர்  பாடுகிறார். 

அது போல ’ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி...’  என்று திருவாசகத்தில் மாணிக்கவாசகர் தன் பிடித்த பத்து என்று தரும் இந்தப் பாடல்களில் வரும் பக்தி கனிரசத்தை சற்றே நுகர்ந்து பாருங்கள்.

 

1. உம்பர்கட்கு அரசே! ஒழிவு அற நிறைந்த யோகமே! ஊத்தையேன் தனக்கு

வம்பு எனப் பழுத்து, என் குடி முழுது ஆண்டு, வாழ்வு அற வாழ்வித்த மருந்தே!

செம் பொருள் துணிவே! சீர் உடைக் கழலே! செல்வமே! சிவபெருமானே!

எம்பொருட்டு, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

 

2. விடை விடாது உகந்த விண்ணவர் கோவே! வினையனேனுடைய மெய்ப் பொருளே!

முடை விடாது, அடியேன் மூத்து, அற மண் ஆய், முழுப் புழுக் குரம்பையில் கிடந்து,

கடைபடாவண்ணம் காத்து, எனை ஆண்ட கடவுளே! கருணை மா கடலே!

இடைவிடாது, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

 

3.அம்மையே! அப்பா! ஒப்பு இலா மணியே! அன்பினில் விளைந்த ஆர் அமுதே!

பொய்ம்மையே பெருக்கி, பொழுதினைச் சுருக்கும், புழுத் தலைப் புலையனேன் தனக்கு,

செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே! சிவபெருமானே!

இம்மையே, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

 

4. அருள் உடைச் சுடரே! அளிந்தது ஓர் கனியே! பெரும் திறல் அரும் தவர்க்கு அரசே!

பொருள் உடைக் கலையே! புகழ்ச்சியைக் கடந்த போகமே! யோகத்தின் பொலிவே!

தெருள் இடத்து அடியார் சிந்தையுள் புகுந்த செல்வமே! சிவபெருமானே!

இருள் இடத்து, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

 

5. ஒப்பு உனக்கு இல்லா ஒருவனே! அடியேன் உள்ளத்துள் ஒளிர்கின்ற ஒளியே!

மெய்ப் பதம் அறியா வீறு இலியேற்கு, விழுமியது அளித்தது ஓர் அன்பே!

செப்புதற்கு அரிய செழும் சுடர் மூர்த்தீ! செல்வமே! சிவபெருமானே!

எய்ப்பு இடத்து, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

 

6. அறவையேன் மனமே கோயிலாக் கொண்டு, ஆண்டு, அளவு இலா ஆனந்தம் அருளி,

பிறவி வேர் அறுத்து, என் குடி முழுது ஆண்ட பிஞ்ஞகா! பெரிய எம் பொருளே!

திறவிலே கண்ட காட்சியே! அடியேன் செல்வமே! சிவபெருமானே!

இறவிலே, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

 

7. பாச வேர் அறுக்கும் பழம் பொருள்! தன்னைப் பற்றும் ஆறு, அடியனேற்கு அருளி,

பூசனை உகந்து, என் சிந்தையுள் புகுந்து, பூம் கழல் காட்டிய பொருளே!

தேசு உடை விளக்கே! செழும் சுடர் மூர்த்தீ! செல்வமே! சிவபெருமானே!

ஈசனே! உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

 

8. அத்தனே! அண்டர் அண்டம் ஆய் நின்ற ஆதியே! யாதும் ஈறு இல்லாச்

சித்தனே! பக்தர் சிக்கெனப் பிடித்த செல்வமே! சிவபெருமானே!

பித்தனே! எல்லா உயிரும் ஆய்த் தழைத்து, பிழைத்து, அவை அல்லை ஆய் நிற்கும்

எத்தனே! உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

 

9. பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து, நீ, பாவியேனுடைய

ஊனினை உருக்கி, உள் ஒளி பெருக்கி, உவப்பு இலா ஆனந்தம் ஆய

தேனினைச் சொரிந்து, புறம் புறம் திரிந்த செல்வமே! சிவபெருமானே!

யான் உனைத் தொடர்ந்து, சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

 

10. புன் புலால் யாக்கை புரை புரை கனிய பொன் நெடும் கோயிலாப் புகுந்து, என்

என்பு எலாம் உருக்கி, எளியை ஆய், ஆண்ட ஈசனே! மாசு இலா மணியே!

துன்பமே, பிறப்பே, இறப்பொடு, மயக்கு, ஆம் தொடக்கு எலாம், அறுத்த நல் சோதீ!

இன்பமே! உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?


இது போல வள்ளலார் தரும் பாடல் ஒன்றும் இனிது நோக்கத் தக்கது. ( சொல்ல வந்த விடயத்தைத் தாண்டி பதிவு வேறு திசை திரும்பினாலும் பாடல்களின் பொருள்வளத்தினாலும் அதன் அருட் திறத்தினாலும் அர்த்தபுஷ்டியான பாடல் செழுமையினாலும் அவற்றையும் இங்கே பதிவு செய்து கொள்கிறேன்.)

’கங்கையில் காவிரியில் நூறுமுறை மூழ்கி

கணக்கற்ற திருக்கோயில் கால்தேய சுற்றி

வெங்கொடிய பலநோன்பு ஏற்றுடலை வருத்தி

வேதங்கள் கூறுகின்ற யாகமெல்லாம் செய்து

பங்கமிலா வேதியர்கை பணம்அள்ளி தந்து

பசுவதைப் பூசித்து அதன்கழிவை உண்டு

தங்களுயிர் மோட்சத்தை அடைவதற்கே முயலும்

தயவில்லார் சத்தியமாய் முத்தியதை யடையார்’.

என்கிறார் வள்ளலார்.


சரி நாம் இனி நம் விடயத்திற்கு வருவோம்.


12. பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே    பேசாது

பேராது என்பதற்குப் பதிலாகப் பேசாது நின்ற என்று வருவது பொருத்தமாக அமையும் போலத் தோன்றுகிறது. இறைவன் உயிர்களோடு நேரடியாகப் பேசுவதில்லை; என்றாலும் கருணைக்குரியவனாக; - கருணைக்குரிய பேராறாக அவன் விளங்குகிறான். அதனால், பேசாது நின்ற பெருங்கருணைப் பேராறே என்பதே பொருத்தமான சொல்லடியாக இருக்க வேண்டும்.

13.ஓராதார் உள்ளத் தொளிக்கும் ஒளியானே       ஓதாதார் உள்ளத்து ஒழிக்கும் ஒளியானே

ஓதாதார் அதாவது ஐந்தெழுத்து மந்திரமாகிய நமசிவாய என்ற மந்திரத்தை ஓதாதவர்களுடய உள்ளத்தில் ஒழித்து ( மறைந்து) இருக்கும் ஒளி பொருந்தியவனே - ஒளியானே என்பது பொருத்தமான சொற்தொடராக எனக்குப் படுகிறது.

ஒழி- மறைத்தல்  / இல்லாது செய்தல்

ஒளி - வெளிச்சம் / பிரகாசம்

இந்த வரியில் வரும் இரண்டும்  ( ஒழி / ஒளி )  இருவேறு அர்த்தங்களில் வந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

14. மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்                  வந்தறிவாய்

 தேற்றனே தேற்றத் தெளிவேஎன் சிந்தனையுள்

 ஊற்றான உண்ணா ரமுதே உடையானே  ஊற்றானார்; உண்ணா அமுதை உடையானே

இந்த வரிகளுக்கு முதல் மூன்று வரிகளோடு சேர்த்து பொருள் கூறலே பொருத்தம் என்று தோன்றுகிறது. அதாவது, நீ இந்த உலகத்தில் எப்போதும் வந்து போகும் வெவ்வேறான மாற்றங்களாக அறியப்படுகிறாய். ( என்றாலும்) எம்மைத் தேற்றுகிறவனாகிய நீ தேற்றுவதனால் என் சிந்தனை தெளிவடைகிறது. ஊற்றானவனே! உண்ணாத அமுதை உடையவனே! அதாவது,உண்ணாத அமுதை உடையவர் சிவனார். 

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது, வெளிவந்த அமுதத்தை விழுங்கிய போது அது நஞ்சென்று அறிந்த பார்வதி சிவனாரின் தொண்டையை இறுகப் பற்ற, அது தொண்டயில் தங்கி விட்டது என்கிறது புராணம். அதனால் அவர் நஞ்சுண்ட கண்டன் ( கண்டம் - தொண்டை) ஆனார். அதனைத் நாவுக்கரசரின் திருஅங்கமாலை என்ற தேவாரத் திருப்பதிகம்  இப்படிப் பகரும். ( பதிகம் என்பது 12 பாடல்களால் ஆனது) ( அங்கங்கள் ஒவ்வொன்றும் இறைவனைத் தொழும் ஆற்றை அவர் பாடும் திறன் வியந்து நோக்கற்பாலது. அதனால் அதன் முழுப் பாடலையும் இங்கு பதிவிடுகிறேன்)

தலையே நீவணங்காய் - தலை

  மாலை தலைக்கணிந்து

தலையா லேபலி தேருந் தலைவனைத்

  தலையே நீவணங்காய்.  1  


கண்காள் காண்மின்களோ - கடல் 

  நஞ்சுண்ட கண்டன்றன்னை

எண்டோ ள் வீசிநின் றாடும் பிரான்றன்னைக்

  கண்காள் காண்மின்களோ.  2  


செவிகாள் கேண்மின்களோ - சிவன்

  எம்மிறை செம்பவள

எரிபோல் மேனிப்பி ரான்றிறம் எப்போதுஞ் 

  செவிகாள் கேண்மின்களோ.  3 


மூக்கே நீமுரலாய் - முது

  காடுறை முக்கணனை

வாக்கே நோக்கிய மங்கை மணாளனை

  மூக்கே நீமுரலாய்.  4  


வாயே வாழ்த்துகண்டாய் - மத

  யானை யுரிபோர்த்துப்

பேய்வாழ் காட்டகத் தாடும் பிரான்றன்னை

  வாயே வாழ்த்துகண்டாய்.  5  


நெஞ்சே நீநினையாய் - நிமிர் 

  புன்சடை நின்மலனை

மஞ்சா டும்மலை மங்கை மணாளனை

  நெஞ்சே நீநினையாய்.  6  


கைகாள் கூப்பித்தொழீர் - கடி 

  மாமலர் தூவிநின்று

பைவாய்ப் பாம்பரை யார்த்த பரமனைக்

  கைகாள் கூப்பித்தொழீர்.  7 


ஆக்கை யாற்பயனென் - அரன் 

  கோயில் வலம்வந்து

பூக்கை யாலட்டிப் போற்றி யென்னாதவிவ் 

  வாக்கை யாற்பயனென்.  8  


கால்க ளாற்பயனென் - கறைக் 

  கண்ட னுறைகோயில்

கோலக் கோபுரக் கோகர ணஞ்சூழாக் 

  கால்க ளாற்பயனென்.  9  


உற்றா ராருளரோ - உயிர் 

  கொண்டு போம்பொழுது

குற்றா லத்துறை கூத்தனல் லால்நமக்

  குற்றார் ஆருளரோ.  10  


இறுமாந் திருப்பன்கொலோ - ஈசன் 

  பல்கணத் தெண்ணப்பட்டுச்

சிறுமா னேந்திதன் சேவடிக் கீழ்ச்சென்றங்

  கிறுமாந் திருப்பன்கொலோ.  11  


தேடிக் கண்டுகொண்டேன் - திரு

  மாலொடு நான்முகனுந்

தேடித் தேடொணாத் தேவனை என்னுளே 

  தேடிக் கண்டுகொண்டேன்.  12

இவ்வாறாக உண்ணா அமுதை உடையவனே என்பது பொருந்தும்.


15. மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே     மீண்டு இங்கு வந்து

மீண்டு இங்கு வந்து வினைகளினால் ஏற்படுகின்ற பிறவிகள் சேராமல் ( இந்தப் பூமியில் பிறந்து ஆனவம் கன்மம் மாயை இவைகளினால் பீடிக்கப் பட்டு நாம் நல்ல செயல்களையும் தீய செயல்களையும் ஆற்றி இறைவனை அடையும் பாக்கியத்தை மறந்து மீண்டும் மீண்டும் பிறவிச் சாகரத்தில் மூழ்கி மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கிறோம். 

அவ்வாறு மீளவும் இந்த உலகில் பிறந்து வினைப் பிறவியினை எடுக்காமல் என்பது இதன் பொருளெனில் தவறாகா.

இறுதியாக,

.......சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்

செல்வர்

சிவபுரத்தில் உள்ளார் சிவனடிக்கீழ்

பல்லோரும் ஏத்தப் பணிந்து. 

( இந்தப் பாட்டினைப் பொருளுணர்ந்து சொல்லுபவர்கள், பலரும் போற்றும் விதமாக, சிவபுரத்தில் இருக்கின்ற சிவனுடய திருவடியைச் சென்று சேர்வார்கள்.) என்று முடியும் இந்தச் சிவபுராணத்து இறுதி வரிகளோடு இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன்.

நன்றி.

பிற்குறிப்பு:

பேசாப் பொருளொன்றைப் பேச நான் புகுந்தேன். சரி தவறு தெரியுமளவுக்கு நான் இன்னும் ஞானத்தை அடைந்து விடவில்லை. இருந்த போதும், இந்தச் சிவபுராணத்தை ஓதுகின்ற அன்பர்கள் அதன் பொருளுணர்ந்து பாடினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று கருதி இதனை நான் இங்கு பதிவிடுகிறேன்.

தவறெனில் சிறியேனின் பிழை பொறுத்து ஏற்பது உம் கடன்.

9 comments:

  1. பேசாப் பொருளைப் பேசத் துணிந்தமைக்குப் பாராட்டுகள் யசோ. நீங்கள் இங்கு எழுப்பியிருக்கும் ஐயங்களுள் சிலவற்றை எனக்குத் தெரிந்தவரையில் தெளிவுபடுத்தலாம் என்று நினைக்கிறேன். தமிழ் இலக்கணத்தில் என் சிற்றறிவுக்கு எட்டியவரை சில விஷயங்களைப் புரிந்துவைத்திருக்கிறேன். அதன் அடிப்படையில் ஒரு சிலவற்றை இங்கே பகிர விரும்புகிறேன். ஒவ்வொன்றாகப் பதிவிடுகிறேன். தவறுகள் இருப்பின் மற்றவர்கள் திருத்தலாம்.

    ReplyDelete
  2. செய்யுளில் எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகிய உறுப்புகளை ஒழுங்குவடிவில் கட்டி அமைப்பதுதான் யாப்பிலக்கணம்.
    யாப்பிலக்கணப்படி சிவபுராணப் பாடலை நான் அசை பிரித்தபோது அது வெண்டளைக்கான ஒழுங்கிசைச் செப்பலோசையைக் கொண்டிருப்பதை அறிய முடிகிறது.
    ஒழுங்கிசைச் செப்பலோசையில் வெண்சீர் வெண்டளை மற்றும் இயற்சீர் வெண்டளை என வெண்டளையின் இரு தளைகளும் சேர்ந்து வரும்.
    காய் முன் நேர் – வெண்சீர் வெண்டளை
    மா முன் நிரை – இயற்சீர் வெண்டளை

    அதன்படி முதல் வரியில் வாழ்க என்றிருந்தால் தளை தட்டும்.
    வாழ்க – நேர் நேர் – தேமா
    வாஅழ்க – நேர் நேர் நேர் – தேமாங்காய்

    வெண்டளையில் மா முன் நேர் வராது. ஓசைக்குறைவை சரிசெய்ய இவ்வாறு குறில் சேர்த்து எழுதப்படுவதுண்டு. அது செய்யுளிசை அளபெடை எனப்படும்.

    நமச்/சிவா/ய ------------- வா/அழ்/க ------------ நா/தன்/தாள் ------- வாழ்/க
    நிரை நிரை நேர் ------ நேர் நேர் நேர்------ நேர் நேர் நேர் ----- நேர் நேர்
    கருவிளங்காய் --------- தேமாங்காய் -------- தேமாங்காய் ------- தேமா

    செல்லாஅ நின்ற இத்தாவரச் சங்கமத்துள் (30)
    இந்த வரியிலும் தளை தட்டாதிருக்க ‘செல்லா’ என்பது ‘செல்லாஅ’ என்று பாடப்பட்டுள்ளது.

    திருக்குறளில் கூட ‘தெய்வம் தொழாள்’ என்பது ‘தெய்வம் தொழாஅள்’ என்று இருப்பதன் காரணமும் இதுவே.

    ReplyDelete
  3. கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க
    இதற்கு ‘திருப்பெருந்துறையில் எழுந்தருளி என்னையாட்கொண்ட குருமூர்த்தியினது திருவடி வாழ்க’ என்கிறது உரை.
    ----------------------
    ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க
    அண்ணித்தல் என்பதற்கு கிட்டுதல், பொருந்துதல், இனித்தல், அணுகியருள் புரிதல் என்ற பொருள்களைத் தருகிறது அகராதி.
    அன்னித்தல் என்பதற்கு சரியான பொருள் எங்குமே காணப்படவில்லை.
    -----------------------------------
    வேகம் கெடுத்தாண்ட – மனவோட்டத்தைத் தொலைத்து என்னை ஆட்கொண்ட என்கிறது உரை.
    ------------------------------
    பெய்கழல்கள் – வீரக்கழல் அணிந்த திருவடிகள்
    பெய்தல் என்பதற்கு அணிதல் என்ற பொருளும் உண்டு.
    ---------------------------------------
    புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க
    புறத்தார்க்கு – தன்னை வணங்காத அயலார்க்கு
    -------------------------------------------
    கரம் குவிவார் – சிரம் குவிவார் – செய்யுள் அழகுக்காகவும் ஓசைநயத்துக்காகவும் பாடப்பெற்றுள்ளன. ஆயினும் பொருள் மாறுவதில்லை.
    ---------------------------------------------
    பல்விருகமாகி –
    இங்கு மிருகம் என்பது விருகம் என்று மருவி நிற்கிறது.
    மிருகம் என்று பாடினால் பல்மிருகம் என்றில்லாது பன்மிருகம் என்று பாடவேண்டியிருக்கும்.

    புல்லாகி
    பன்மிருகமாகி
    கல்லாய்
    வல்லசுரராகி

    என்று பாடும்போது இரண்டாம் வரியில் எதுகை இடிக்கும்.
    ------------------------------------

    ReplyDelete
  4. உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற மெய்யா! – நான் உய்யும்படி என் உள்ளதுள் பிரணவ உருவாய் நின்ற மெய்யனே!
    விமலா! – மாசற்றவனே!
    விடைப்பாகா! – ரிஷப வாகனனே!
    (விடை என்பதற்கு ‘எருது’ என்ற பொருளும் உண்டு. விடைப்பாகன் என்பதற்கு எருதினை தன் பக்கத்தில் வைத்திருப்பவனே என்று பொருள்.)
    வேதங்கள் ஐயாவென ஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே! – வேதங்கள் யாவும் ஐயனே என்று துதிக்க, உயர்ந்து, ஆழ்ந்து பரந்த நுண்ணியனே!
    ----------------------------
    தொழும்பு என்பதற்கு தொண்டு, சேவை, அடியார் கூட்டம் என்று பொருள் தருகிறது அகராதி.
    என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின் – என்பதற்கு
    என்னை உன் தொண்டில் (அ) அடியார் கூட்டத்தில் புகப் பண்ணுவாய் என்று பொருள் கொண்டால் சரியாக இருக்கும்.
    ----------------------------
    மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை
    மலம் சோரும் என்பதற்கு – மலம் ஒழுகும் என்கிறது உரை.
    சோர்தல் என்பதற்கு – தளர்தல், வாடுதல், தடுமாறுதல், துயருறுதல் இவற்றோடு வடிதல், கசிதல் என்ற பொருட்களையும் தருகிறது அகராதி.
    ------------------------------

    ReplyDelete
  5. பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
    இதை முதல் வரியோடு சேர்த்துப் பொருள் கொள்ள வேண்டும்.
    நேச அருள்புரிந்து நெஞ்சில்வஞ் சங்கெடப்
    பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
    பொருள்: அன்பும் அருளும் புரிந்து என் மனதில் உள்ள வஞ்சக எண்ணம் கெட்டொழிய, என் மனதை விட்டுப் பெயராது நின்ற பெருங்கருணையாகிய பெருநதியே!
    பேராது நின்ற – என் மனத்தை விட்டு இடம்பெயராது நின்ற
    ---------------------
    ஓராதார் உள்ளத் தொளிக்கும் ஒளியானே
    ஆராயாதவர்களின் மனத்தில் மறைந்திருக்கும் ஒளி பொருந்தியவனே
    ஓராதார் என்பதற்கு – ஆராய்ந்து அறியாதவர்கள் என்கிறது உரை.
    ------------------------
    இங்கு பேராது, ஆரா, ஓராதார், நீராய் என அடியெதுகை கைக்கொள்ளப்பட்டுள்ளது. பேசாது, ஓதாதார் என்று இருந்தால் எதுகை அழகு இராது.
    -----------------------------

    ReplyDelete
  6. தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய்
    மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்
    தேற்றனே தேற்றத் தெளிவேஎன் சிந்தையுள்
    ஊற்றான வுண்ணா ரமுதே உடையானே

    - இப்பாடலுக்கான உரையாக உரையாசிரியர் தந்திருப்பதை அப்படியே கீழே தருகிறேன்.

    நின்ற தோற்றச்சுடர் ஒளியாய் - நிலைபெற்ற தோற்றத்தையுடைய விளங்குகின்ற ஒளியாகியும்
    சொல்லாத நுண் உணர்வு ஆய் - சொல்லப்படாத நுட்பமாகிய அறிவாகியும்
    மாற்றம் ஆம் வையகத்தின் - மாறுபடுதலையுடைய உலகத்தில்
    வெவ்வேறே வந்து - வெவ்வேறு பொருளாய்க் காணப்பட்டு வந்து
    அறிவு ஆம் - அறிவாய் விளங்கும்
    தேற்றனே – தெளிவானவனே
    தேற்றத் தெளிவே - தெளிவின் தெளிவே
    என் சிந்தையுள் ஊற்று ஆன - என் மனத்துள் ஊற்றுப் போன்ற
    உண் ஆர் அமுதே - பருகுதற்கு அரிய அமிர்தமே
    உடையானே - தலைவனே.
    -------------------------------------
    மீட்டிங்கு வந்து – மீட்டு இங்கு வந்து
    மீட்டு என்பதற்கு மீண்டும், மீளவும் என்றே பொருள் தருகிறது அகராதி. செய்யுள் நயத்துக்காக மீட்டு என்றிருக்கலாம்.
    ---------------------------------------

    ReplyDelete
  7. தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் நூலகத்தில் சிவபுராணம் உரையோடு உள்ளது. அதிலிருந்தும் மேலதிகத் தகவல் தேடலிலிருந்தும் உங்கள் ஐயங்களுக்கான விடைகளைப் பகிர்ந்திருக்கிறேன். அனைத்தும் சரியானவையா என்று தெரியவில்லை. இயன்றவரை முயன்றிருக்கிறேன்.
    உங்கள் தயவால் சிவபுராணம், ஆழ்வார் பாசுரம், திருவாசகம், திருவருட்பா என பல்வேறு பக்தி சித்தாந்தப் பாடல்களையும் பதிகங்களையும் வாசித்து இன்புறும் வாய்ப்புப் பெற்றேன். மிக்க நன்றி யசோ.

    இணையதள சுட்டி: https://www.tamilvu.org/ta/library-l4180-html-l4180ind-138065

    ReplyDelete
  8. மிக அழகான விளக்கங்களை ஆராய்ந்து அளித்திருக்கிறீர்கள் கீதா. மிக்க நன்றி.

    நீங்கள் சொன்னதன் பிறகு நானும் போய் பலவற்றை இணையத்தில் பார்த்தேன். பல அழகான விளக்கங்கள் இணையத்திலும் நிறைந்திருக்கின்றன.

    மக்கள் என்பொருட்டு குழம்பாதிருப்பார்களாக!

    மீண்டும் மிக்க நன்றி கீதா.

    https://shaivam.org/panniru-thirumurai/sivapuranam-pathikamum-uraiyum/#gsc.tab=0
    இந்தத்தளமும் அழகான விளக்கங்களைத் தந்திருக்கிறது.

    கஸ்பர் அடிகளார் சிவபுராணம் பற்றித் வேறு தளங்களில் தருகிற விளக்கங்களும் மிகச் சிறப்பாக இருக்கின்றன!

    பிறமொழிக் கலப்பில்லாத தனித்தமிழில் பாடப்பட்டிருக்கும் சிறப்பு வாய்ந்த பக்திப் பாசுரங்களும் தேவாரத் திருப்பதிகங்களும் தமிழின் பெரும் சொத்துக்கள்.

    மீண்டும் என் அன்பும் நன்றியும் கீதா.

    ReplyDelete