Wednesday, September 19, 2012

யாழ்ப்பாணத்துத் தொழில் சாலைகளும் புலம்பெயர்ந்தோரின் கடப்பாடுகளும்



’யாழ்ப்பாணம்’ - இந்தச் சொல் பலருக்கும் பல விடயங்களை ஞாபகமூட்டும்.பிரயாசை, கடின உழைப்பு, செம்மண் பூமி,நல்லெண்ணை, சிறந்த கல்வி,கிடுகுவேலி,வரண்ட தறை, பனைமரம், வானில் பறக்கும் பட்டங்கள், தட்டிவான், மினி பஸ்,டியூட்ட்ரி, சைக்கிள் பாவனை,....இப்படி நீளும் சில ஹய்லைட்டுகள். 

போருக்கு முந்திய காலமெனில் மெயில்ரெயின்,சீமேந்து ஆலையின் விசில் சத்தம், கீரிமலை,கோயில் திருவிழாக்கள், வாசிக சாலைகள், புகையிலைத் தோட்டங்கள், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்து தமிழ் சேவை இரண்டின் வானொலி நிகழ்ச்சிகள்,....இப்படியாகக் கொஞ்சம் நீளும்.

இவை எல்லாவற்றையும் சுவீகரித்துச் சென்று விட்டது போர். உள்ளூரில் எஞ்சி இருப்பது கொஞ்சம் விதவைப் பெண்களும் அனாதைகளாகிப் போன குழந்தைகளும், கால்கை இழந்த சில இளவயதினரும், தள்ளாத வயதில் துன்பங்களைச் சுமந்து நிற்கும் வயோதிபர்களும் தான் வெளிநாட்டுக்குத் தப்பியோடியோர் போக தப்பிப்பிழைத்து கொஞ்சமாய் மக்களும் இல்லாமல் இல்லை.


நம் குழந்தைகள்: அகதிகள் ஆகிப் போன நம் குழந்தைகள்!

போர் தின்று துப்பிய எச்சங்களாய் இப்போது உலக நாடுகள் எங்கும் தமிழர்கள்! இவர்களிடம் இருக்கின்ற தாயகம் பற்றிய உணர்வு பூர்வமான பந்தம், அனுதாபம், குற்ற உணர்ச்சி, ஏதேனும் அவர்களுக்குச் செய்ய வேண்டும் என்ற உந்துதல்,என்பன போரின் பின் யாழ்ப்பாணத்தவரை சோம்பேறிகளாக்கி இருக்கின்றது என்று சொன்னால் மிகை இல்லை.

வாராந்தம் பிறநாடுகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள் பல தாயக நன்மைக்கு பணம் திரட்டும் பாவனையில் நடைபெறுகிறது. தனித்தனியாகவும் பெரும்பாலானோர் பணமாயும் பொருளாயும் பாடுபட்டுப் இரவு பகலாய் உழைத்துப் பணம் சேர்த்து அனுப்புகிறார்கள். 

அந்த எண்ணம் நல்லது தான். உயர்வானவை தான். ஆனாலும், இவை எல்லாம் நம் மக்களை உழைப்பின் அருமை தெரியாத இளம் சந்ததியைத் தோற்றுவிக்கிறது என்ற உண்மையையும் நாம் உணர வேண்டும்.கல்வியில் நாட்டமின்மையும், குழந்தைகள் மீதான வன் முறையும் இளம் பெண்களின் கருத்தரிக்கும் வீதம் உயர்வதும், தற்கொலைகளின் வீத அதிகரிப்பும் ஆரோக்கியமானதாக இல்லை.

போருக்குப் பிந்தியதான புதிய வரவுகளும் திறந்து விடப்பட்டிருக்கின்ற புதிய பாதைகளும்,தொழில் நுட்பப் பாவனைகளும் எளிதாகக் கிடைக்கின்ற பணமும் மக்களை புதியதொரு பாதையின் பால் இலகுவாகத் திசைதிருப்பி விடப் போதுமானதாய் இருக்கிறது.

இந்த இடத்தில் நமக்கு - புலம் பெயர்ந்திருக்கிற நமக்கு ஒரு பெரும் கடப்பாடு இருக்கிறது. வெறுமனே நம் பணத்தை அனுப்பி நம் தவிப்புக்கு வடிகாலைத் தேடாமல் ஒரு சிறந்த மூலதனமாய் அதை மாற்றி தொழில்சாலைகளையும் நிறுவனங்களையும் அங்கு அமைத்து அவர்களின் வருவாய்க்கும் உழைப்புக்கும் உரிய வழிவகைகளை ஆற்றுவதே அக் கடப்பாடாகும். சீன மொழியில் உங்கள் எல்லோருக்கும் தெரிந்த ஒரு பழமொழி உண்டு.’பசித்திருப்பவனுக்கு மீனைக் கொடுக்காதே! ஒரு தூண்டிலைக் கொடு” என்பதுவே அப்பழமொழி ஆகும்.

 நம்முடய பெரும் கடப்பாடும் அதுவேயாகும்.

சரி அங்கு - வளங்களற்ற அந்த வரண்ட பூமியில் என்னதான் செய்யலாம் என்று கேட்பவர்களுக்காக கீழ் வருவன.

இந்த வளங்களற்ற பூமியில் தான் காங்கேசந்துறை சீமேந்துத் தொழிற்சாலை, பரந்தன் இரசாயணத் தொழிற்சாலை, ஆனையிறவு உப்பளம்,வாழைச்சேனை காகித ஆலை என்பன இயங்கின. ஜி,ஜி. பொன்னம்பலம் கைத்தொழில் விஞ்சான அமைச்சராய் இருந்த காலத்தில் இவை ஆரம்பிக்கப் பட்டன.


                                                                       சீமேந்து ஆலை:

1952ம் ஆண்டு வலிகாமத்துத் துறைமுகப்பட்டினமாகிய காங்கேசந்துறையில் இவ்வாலை நிறுவப்பட்டது.கப்பல், புகையிரதம் ஆகியவற்றின் மூலமாக மூலப்பொருட்களும் முடிவுப் பொருட்களும் ஏற்றி இறக்கக் கூடிய வசதியான அமைவிடமாக காங்கேசன் துறை அமைந்த காரணத்தால் இவ்விடம் சீமேந்துக்குப் பொருத்தமான இடமாக அமைந்திருந்தது. சீமேந்து தயாரிக்கப் பயன் படும் ஒரு விதமான களிமண் மன்னார் முருங்கன் என்ற பிரதேசத்தில் இருந்து ரயில் மூலம் எடுத்து வரப்பட்டது. இதனால் இவ் ரெயிலை கிளே ரயில் என அழைக்கும் மரபும் வழக்கில் இருந்தது.

24 மணி நேரமும் இயங்கிய இவ்வாலை சுமார் 3000 பேருக்கு வேலை வாய்ப்பையும் சுமார் 1000 பேருக்கு மறைமுகமான வேலை வாய்ப்பையும்  வழங்கி இருந்தது.அதனை விட 100 கணக்கான லொறிகள்,கட்டிடத் தொழிலாளரென  இதன் வேலை வாய்ப்பினதும் வாழ்வாரத்தினதும் எல்லைகள் மிக நீளமானவை.

அக்காலத்தில் மாவிட்டபுரப் பிரதேசத்துக் கடைகள் பூட்டப்படுவதில்லை என்பர்.கதவில்லாக் கடைகள் என மக்கள் இதனை அழைத்தனர். இங்கு வேலை செய்யும் 1000 கணக்கான மக்களுக்கு இக்கடைகளே 24 மணி நேரத்துக்குமான உணவுகளை வழங்கின. சீமேந்துத் தொழிற்சாலையின் இயந்திரத்தில் இருந்து வெளிவரும் புகையைப் போக்கவென பெரும் புகை போக்கி ஒன்று இருந்தது. அதிலிருந்து நாளாந்தம் தவறாது புகை போனவண்ணம் இருந்தது. அதனை அக்காலமக்கள் பட்டாளத்துக்கு புட்டவிக்கும் புகை போகிறது என்று சொல்வார்களாம்.

வடபகுதியில் இருக்கும் சுண்ணாம்புக் கற்களும் இச் சீமேந்துத் தயாரிப்புக்குப் பெரிதும் உதவியதால் இச் சீமேந்து தரத்துக்கும் பெயர் போனதாக இருந்தது.

1990இல் உள்நாட்டு யுத்தத்தின் காரணமாய் இவ்வாலை மூடப்பட்டதோடு துறைமுகப்பட்டினமாய் உருவாகி இருந்த காங்கேசந்துறைத் துறமுகமும் தன் சோபையை இழந்து போனது. பலர் வருவாயையும் தம் ஜீவனோபாயத்தையும் இழந்து போயினர்.


 மில்க்வைற் சவர்க்காரத் தொழிற்சாலை

யாழ்ப்பாணத்தின் நகர்புரப்பகுதியில் நாச்சிமார் கோயிலடியில் அமைந்திருந்த சவர்க்காரத் தொழிற்சாலை மில்க்வைற் சவர்க்காரத் தொழிற்சாலையாகும்.இந் நிறுவன அதிபர் அமரர் கனகராசா அவர்கள். அவர் ஒரு பரோபகாரியாகவும் சமூக ஆர்வலராகவும் இயங்கியவர். இன்றும் இத்தொழிற்சாலை இயங்கிக் கொண்டிருப்பதாக அறியக்கிட்டியது.இத் தொழிற்சாலையால் அக்காலத்தில் பலர் தொழில்வாய்ப்பைப் பெற்றனர். 

1970ல் இருந்து 1990 கள் வரை மில்க்வைற் செய்தி என்ற அறவழிச்செய்தி பத்திரிகை வெளிவந்தது. அவற்றில் சிலவற்றை நூலகம் இணையத்தளம் சேகரித்து வைத்திருக்கிறது. அவற்றைப் பார்க்கின்ற போது மில்க்வைற் நிறுவனம் ஆற்றிய சமூகப்பணிகளையும் அறியக் கூடியதாக இருக்கிறது.

குழந்தைகளுக்கு ஏடு தொடக்க அரிச்சுவடிகளையும் விறகுகளுக்காக மரம் வெட்டுவதைத் தடுத்து சவுக்கு மரக்கன்றுகளை இலவசமாக வழங்கியும் பல பாடசாலை கட்டிடங்களைக் கட்டிக் கொடுத்தும்..... இப்படியாகப் பெருகிச் செல்கிறது அவற்றின் அறப்பணி. நான் சிறு பிள்ளையாக இருந்த காலத்தில் பனம் விதைகளை லொறிகளில் ஏற்றிச் சென்று இலவசமாக வன்னிப் பிரதேசங்களில் வினியோகித்து பனைவளத்தை விருத்தி செய்ய அவர் எடுத்த முயற்சிகள் நன்கு நினைவிருக்கின்றன.

 அண்ணாக் கோப்பி - இணுவில்

எஸ்.வீ. நடராஜா அவர்களால் ஆரம்பிக்கப் பட்ட தொழிலகம் இது. ஆரம்பத்தில் அவர் உந்துருளியில் கடை கடையாகச் சென்று இவற்றை விற்றார் என்பர். கடின உழைப்பு, விடாமுயற்சி,பிரயாசை ஆகியவற்றுக்குப் பேர் போன ஓரிடத்தில் அண்ணாக் கோபி நிறுவனம் தன்னை நிலை நிறுத்திக் கொண்டதில் வியப்பில்லை. பின்னர் இது மிளகாய்தூள், குரக்கன் மா, ஒடியல் மா என உள்ளூரிலும் சர்வ தேச அளவிலும் தன்னை நிலை நிறுத்திக் கொண்டது.

சுதுமலையில் அண்ணாமலைப் பரியாரி என்று ஒரு பரியாரியார் இருந்தார். கைராசிக்காரர் எனப் பெயர் பெற்றிருந்த அவர் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக மருத்துவ சேவையை ஆற்றினார். தன்னிடம் பணம் இல்லாத போது தன் நில புலன்களை விற்றுக் கூட ஏழைமக்களுக்கு இலவசமாகச் சேவையாற்றினார் என்பர். அப் பரோபகாரியின் பெயரில் தான் அண்ணாக் கோப்பி என்ற இந் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.

இவ்வாறான நிறுவனங்கள்  இன்றும் இயங்கிக் கொண்டிருப்பது செய்த சேவையினாலும் அரப்பணிகளினாலும் தானோ என எண்ணத் தோன்றுகிறது.

நெல்லிரசம்:

நெல்லிரசம் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றும் தோலகட்டி என்ற இடத்தில் மிகச் சிறப்போடு இயங்கி வந்ததும் நினைவில் இருக்கிறது.தரச் சிறப்பு வாய்ந்த அந் நெல்லிரசம்  அழகிய பச்சை நிறம் கொண்டது. அக்காலத்தில் பலரும் அதை விரும்பி வாங்கிச் செல்வர். அதன் ருசியினால் கவரப்பட்டு கள்ளமாய் ஊற்றி ஊற்றிக் குடித்தது இன்னும் பசுமையாய் நினைவில் இருக்கிறது. முந்திரிகைச் பழச் செய்கை பிரபலமாயிருந்ததும் கூடவே நினைவில் இருக்கிறது.அவை தென் பகுதிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

இது போல காரைநகரில் உருவாக்கப் பட்ட சீநோர் தொழிற்சாலை பலருக்கு வேலைவாய்ப்பை வழங்கி இருந்தது. அதன் ஒரு கிளை குருநகரில் இயங்கி வந்தது உங்களில் சிலருக்கு நினைவிருக்கலாம். இது கண்ணாடி நார்களினாலான படகு, வலை என்பவற்றை தயாரித்து மீன்பிடித் தொழிலுக்கு உதவியது. இப்போது இது வேறொரு பெயரில் இயங்குவதாக அறிய முடிகிறது.

இது போல சோடாக் கொம்பனிகளும் இயங்கி வந்தன.சிறிமாவோ பண்டாரநாயக்கா ஆட்சியில் இருந்த காலத்தில் வெளிநாட்டு இறக்குமதிக்கு தடை போடப்பட்டிருந்ததால் யாழ்ப்பாணத்தில் விவசாயமும் படித்த இளஞர்களுக்கான விவசாய வேலைவாய்ப்புத் திட்டங்களும் புதிய ஒரு உத்வேகத்தை யாழ்ப்பாணத்துக்கும் வன்னிக்கும் வழங்கியிருந்தது. அதையொட்டி நாடகங்கள் கூட தயாரித்து மேடையேற்றப் பட்டன. ‘வெளிக்கிடடி விசுவமடுவுக்கு” அக்காலத்தில் பிரபலமாயிருந்த ஒரு நாடகமாகும். செத்தல் மிளகாய், வெங்காயம் என்பனவற்றால் விவசாயிகள் நல்ல இலாபமீட்டினர்.வன்னிப் பகுதியின் புதிய தறைகள் செல்வம் கொளிக்கும் கருவூலமாய் அக்கால இளைஞர்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்தது.

இந்தக் காலப்பகுதியில் உருவாகியவை தான் சோடாக் கொம்பனிகளும். சோடாக்கொம்பனிலேன் என்ற பெயரில் ஒழுங்கைகள் இன்றும் யாழ்பானத்தில் இருக்கின்றன.பேபிமார்க் சோடா, சீதா சோடா ஆகியன பிரபலமாயிருந்த சோடாக் கொம்பனிகள் ஆகும்.

ஆனால் இப்போது நுகர்வுப் பொருளாதாரமும் திறந்தவெளிப் பொருளாதாரமும் அமுலில் இருக்கும் போது கோக்குக்கும் கொக்கோகோலாவுக்கும் அது போன்ற பாணங்களுக்கும் ஈடாக நம் கைத்தொழில் சோடாக்கள் ஈடுகொடுத்து நிற்கமுடியுமோ என்பது சற்றே யோசிக்க வேண்டிய ஒரு விடயமும் தான்.

இதுபோல ஒருகாலத்தில் பனங்கட்டித் தொழிற்சாலைகள் இயங்கின. அவை அச்சுவெல்லம், பனங்கட்டிக் குட்டான்களில் வட்ட வடிவம் நீள்சதுரவடிவங்களில்  விற்பனைக்கு வந்தன.கோயில் வாசல்கள், திருவிழாக்காலங்களில் ஆச்சிமார் கடலைச் சுருள்களோடு பனங்கட்டிக் குட்டான்களையும் விற்றதை என்றென்றைக்கும் மறக்க முடியாது.

தேங்காய் எண்ணை, நல்லெண்னை ஆலைகள் சிலவும் வெற்றிகரமாக இயங்கிவந்த சிறு நிறுவனங்களில் சில.

அதுபோல பீடித் தொழிற்சாலைகள், (RVG பீடி),சீயாக்காய் தொழிற்சாலைகள்,கருவாட்டு உற்பத்தி என்பன ஒருகாலத்தில் பிரபலமாயிருந்தவை.  இவற்றோடு சேர்த்து ரொபித் தொழிற்சாலைகளையும் சொல்லியாக வேண்டும்.இத் ரொபித் தொழிற்சாலைகள் மானிப்பாய், நல்லூர்,முத்திரைச் சந்தி, அரியாலை, புங்கங்குளம் ஆகிய இடங்களில் இயங்கி வந்தன. மானிப்பாயில் இருந்து வந்த ரோஸ்பாண்ட், மற்றும் அரஸ்கோ ரொபி ஆகியன உங்களில் சிலருக்கு நினைவுக்கு வரலாம். அவை எல்லாம் இனி கால ஓட்டத்தோடு மறைந்து போபவையாகவும் ஆயிப் போயின. இனி யார் பீடியையும் சோடாவையும் ரொபியையும், சீயாக்காயையும் தேடப் போகிறார்கள்! இவை எல்லாம் கால மாற்றத்தோடு கரைந்து போபவையே! 

இவை போல மாவிட்ட புரத்திலும் நீர்வேலியிலும் கண்ணாடித் தொழிற்சாலைகள் இயங்கின. யாழ் நகர் ஸ்டான்லி வீதியிலும் பெனின்சுலா என்னும் பெயரில் ஒரு கண்னாடித் தொழிற்சாலை இருந்தது. கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரிக்கு முன்பாக ரயரைப் புதுப்பித்துப் பூப்போடும் பணியைச் செய்யும் கொம்பனி ஒன்று இயங்கி வந்தது.

ஐஸ்கட்டித் தொழிற்சாலைகள் கரையோரக் கிராமங்கள் எங்கும் இயங்கி வந்தன. வடபகுதிக் கடற்கரையோரப் பகுதியாகையால் மொத்த மீன் உற்பத்தியில் கால்பங்கை யாழ்ப்பாணமே முழு இலங்கைக்கும் வழங்கி வந்தது. அதற்கு இந்த ஐஸ்கட்டிகள் பெருமளவு பயன் பட்டன.

இறால் பதனிடும் தொழிற்சாலை ஒன்று அன்றூஸ் என்ற பெயரில் நாவற்குழியில் 1977ன் பிற்பாடு ஆரம்பிக்கப்பட்டது. யுத்தம் கொண்டு போனவற்றோடு அதுவும் போய் விட்டது. இத் தொழிற்சாலை இறால்களைப் பதனிட்டு தென்பகுதிக்கும் வெளிநாட்டுக்கும் அவற்றை அனுப்பி வைத்தது. தென்பகுதிச் சிங்களவர் ஒருவரால் ஆரம்பிக்கப்பட்ட இத் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களை இந் நிறுவனத்து பஸ் தொழிலாளர்களின் வீட்டுக்குச் சென்று ஏற்றி மறுபடி அவர்களை அவர்கள் வீட்டு வாசலில் இறக்கிச் செல்லும் வழமையைக் கொண்டிருந்தமை நினைவு கூரத் தக்கது. பின் நாளில் யுத்தத்தின் வருகை இத்தொழிற்சாலையை இராணுவமுகாமாய் மாற்றி விட்டிருந்தது.

இது போல நுணாவிலில் இயங்க ஆரம்பித்த சில வருடங்களில் ஒரு ரயர் தொழில்சாலையும் காணாமல் போய் விட்டது.(1986 - 1990) அது போல நாவற்குழியில் ஆரம்பிக்கப்பட்ட சிக்மா என்ற நீரிறைக்கும் இயந்திரம் தயாரிக்கும் நிறுவனம் முற்றாக அழிந்து போனது. அதுபோல கொழும்புத்துறைப் பிரதேசத்தில் இயங்கிய தும்புத் தொழிற்சாலை, மாவிட்ட புரத்தில் இயங்கிய ‘டொலர்’அலுமீனியத் தொழிற்சாலை, அது போல எல்கே எம் என்ற பெயரில் தயாரித்து விநியோகிக்கப்பட்ட வாளி,அதன் தரச் சிறப்பு இன்னும் நினைவில் நிற்கிறது.அந்த வாளிகளுக்கு தென்பகுதியிலும் பெரும் கிராக்கி நிலவி இருந்தது.

ஊரெழுவில் இப்போதும் தப்பிப் பிழைத்து ஒரு அலுமினியப் பாத்திரங்கள் வார்க்கும் தொழிற்சாலை இயங்குவதாக அறிய முடிகிறது.இது போல அப்பள, ஊறுகாய் சிறுகைத்தொழில் முயற்சிகளும் ஆங்காங்கே சிறுகைத்தொழிலாக நடக்கின்றன. ஜாம் தயாரிக்கும் முயற்சிகளும் உள்ளன.

இவை எல்லாம் எதற்காக இங்கே பட்டியலிடப்படுகின்றன என்ற பெருங்கேள்வி உங்களுக்கு எழலாம். இவை இங்கே வெறும் நினைவு மீட்டலுக்காக அல்ல. 

இப்போது நம்முன்னே ஒரு பெரும் பொறுப்பு உள்ளது. கால வெள்ளத்தில் கரைந்து காணாமல் போன அவை மீள உருவாக வேண்டும்.புலம்பெயர்ந்த நாடுகளில் தொழில் சார் விற்பன்னர்களாகவும் பொருளாதார வசதி மேவியவர்களாகவும் வாழும் நம்மவர்  இத்தகையதான தொழிற்சாலைகளை மீள அமைத்து ஒரு கைத்தொழில் யுகம் ஒன்று வடக்கில் மலர்ந்து நம்மவர் வாழ வழிவகை செய்யவேண்டும்.

பொருட்களை நுகர்ந்து பணத்தைச் செலவளிக்கும் மக்களாக அல்லாமல் உற்பத்தித் திறன்மிக்க தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் தன்காலில் நிற்கும் திறமையும் படைத்தவர்களாக அவர்களை உருவாக்கி ஆளாக்கி வைக்கும்  கடமை புலம் பெயர்ந்திருக்கிற நம் எல்லோரையும் சாரும்.



அது காலம் நெடுக நின்று வாழும். இந்தக் குழந்தைகளின் ஏக்கம் ஒரு நாள் தீரும்.

ஒரு மீன் வலையைப் போல! மேலும் கொஞ்ச விதை நெல்லைப் போல! அவர்களை அது வாழ வைக்க, நீவீரும் வாழ்வீர்!!

நிச்சயமாக!!

(அண்மையில் யாழ்ப்பாண நினைவுகள் பற்றித் தொடர்ச்சியாக தேவநாயகம் தபேந்திரன் என்பார் ஞாயிறு தினக்குரல் பத்திரிகையில் எழுதி வரும் கட்டுரை ஒன்றினைத் தழுவி இவ்வாக்கம் எழுதப்படுகிறது. நன்றி: தினக்குரல் 2.9.12, மற்றும் 9.9.12)



Monday, September 17, 2012

கன்பராவின் புன்னகை

பூ கொடியின் புன்னகை
அலை கடலின் புன்னகை
மழை முகிலின் புன்னகை - அந்த
பெளர்னமி என்பது
வானத்தின் புன்னகை.............

என்றொரு பாடல்.

இங்கு இப்போது வசந்த காலம்.முகிலில் முகம் துடைத்து சூரியன் பளீச்சென வெளி வரும் காலம். பூமி மெல்ல சோம்பல் முறித்து எழுந்து கொள்ளும். பூக்கள் பூக்கத் தொடங்கும்.பறவைகள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்க ஆரம்பிக்கும்.அநேகமாக எல்ல சிற்ரூர்களிலும் வசந்த கால விழாக்கள் street festival, spring festival என்ற பெயர்களில் களை கட்ட ஆரம்பிக்கும்.

கன்பரா அவுஸ்திரேலியாவின் தலைநகரம்.அங்கு வருடம் ஒரு தடவை (செப்ரெம்பர் 15இல் இருந்து) இதேகாலப் பகுதியில் பூக்களின் கண்காட்சி நடைபெறும். கண்ணுக்கெட்டிய தூரம் வரை tulip பூக்களால் நிறைந்திருக்கும் நகரம். அதைப் பார்க்க பல இடங்களில் இருந்தும் மக்கள் செல்வார்கள்.நாமும் போனோம்.

ஆனால் இப்போதெல்லாம் முன்னரைப் போலில்லாமல் கடைகளுக்கும் வியாபாரத்துக்கும் முன்னுரிமை கொடுத்து பூக்களை ஒரு ஓரமாக உட்கார வைத்திருந்தார்கள்.அது சற்றே ஏமாற்றத்தை அளித்தது.அத்தோடு பூக்களின் தொகையையும் வெகுவாகக் குறைத்து விட்டிருந்தார்கள்.



மேலே உள்ள இப்பூவை bottle brush என்று கூறுவார்கள். native வகையைச் சார்ந்தது. பொதுவாக எங்கும் இது காணக் கிடைக்கும். பலநிறங்களிலும் உண்டு. பறைவைகளுக்கு மிகப் பிடித்தமான மலர். கூடவே ஒரு வித மூலிகை வாசம் கொண்ட,  பறவைகள் மட்டுமே கண்டுகொள்ளக் கூடிய வகையில் நிறையத் தேனை தன்னுள் உள்ளடக்கி இருக்கும் மலர். பராமரிப்பில்லாமலே மரமாய் வளரக் கூடியது.


மேலே உள்ளது  big sheep Restaurant.  Goulburn  என்ற இடத்தில்  அமைந்திருக்கிறது. சிட்னியில் இருந்து செல்கின்ற பயணிகள் இவ்விடத்தில் தரித்து தம் சிரமபரிகாரங்களைச் செய்து கொள்வார்கள். இச் செம்மறியாட்டு காலடி வாரத்தில் உணவு விடுதியும் ஏனைய வசதிகளும் உண்டு. 

செம்மறியாட்டுப் பண்ணைகளும் wool எடுக்கும் தொழிலும் குல்போர்னில் பிரசித்தம்.



கன்பராவுக்கு போயாகி விட்டது. மேலே உள்ளது காட்சிப் பொருட்கள் விற்கின்ற ஒரு கடை. வாலை நிமிர்த்தி வைத்திருக்கின்ற பூனைகள் எதற்கென்று சற்றே யூகிக்க முடிகிறதா?



இந்தப் பூனையின் வாலில் தான் மோதிரங்களைக் கொழுவி வைக்கிறார்கள். Ring holder!


மேலே உள்ளது விளக்குச் சரங்கள் விற்கும் ஒரு கடை. இவற்றை வர இருக்கும் நத்தார் கொண்டாட்டங்களுக்காக மக்கள் வாங்கிச் செல்கிறார்கள்.



காணக்கிட்டிய பூக்கள் சில. பெயர் தெரியாது.









மேலே உள்ளது பொய்கால் குதிரை மாதிரி உயரமான தடியில் நின்று ஒரு பெண் ஆடும் நடனம். குழந்தைகள் வெகுவாக இதனை ரசித்தார்கள்.


மேலே குழந்தைகளுக்கான ராட்டினம்.எல்லாவற்றுக்கும் கட்டனம் அறவிடப்படுகிறது.






இது கன்பராவில் இருக்கும் தண்ணீர் காட்சி. கீழ் இருந்து தண்ணீர் இத்தனை உயரத்துக்கு எழும்புகிறது. இதிலிருந்து தெறிக்கின்ற தண்ணீரில் வானவில் காட்சியைக் காணலாம். படத்தில் அது வரவில்லை.


அரிதாகக் காணக்கிடைக்கும் கறுப்பு நிற அன்னங்கள்!



மேலே இருப்பது வருகிற பாதையில் காணக் கிட்டிய காட்டோரத் தான் தோன்றிப் பூ.


மேலே இருப்பது அவுஸ்திரேலியப் பாராளுமன்றம்.

படங்கள்:ஜெ.ஹர்ஷி.
















Sunday, September 2, 2012

மழையொன்று நதியாகி......




கடந்த 26.08.2012 அன்று நடந்த இலக்கிய சந்திப்பில் 3 புதியவர்கள்! மூவரும் இளைய சந்ததி; நமக்கும் அது புதிய அனுபவச் சூழலை / ஒரு வித உற்சாகத்தை / மகிழ்ச்சியைத் தந்து சென்றது. 

மழையோடு ஆரம்பித்தது சந்திப்பு. அது பின்னர் கம்ப மழையாய் பெருகி, தொழில் நுட்ப சாதனங்களை நனைத்த படி, பேயோடு பேசி, ஒரு பிரபஞ்சப் பயணம் செய்த நிறைவோடு முடிந்தது.

ஆரம்பத்தில் இந்தப் பதிவை இலக்கிய சந்திப்பில் நிகழ்ந்தவை பற்றிய பகிர்வாகவே ஆரம்பித்தேன். ஆனாலும் அது விடாப்பிடியாக இப்படித்தான் இருப்பேன் என்று ஒரு வித வடிவெடுத்திருக்கிறது. இது ஒரு அடாப்பிடி பதிவு! கோவிக்காதைங்கோ.பிள்ளையார் பிடிக்க அது .... மாதிரி, கழுதை தேஞ்சு...... மாதிரி.

இலக்கிய சந்திப்பு - 6 பற்றி தனியாக ஒரு பதிவு பிறகு வருகிறது.

ஆனால் மிக்க நன்றி ஷ்ரேயா. உங்களுக்கும் இயற்கைக்குமான தொடர்பு எப்படி என்று ஒரு கேள்வியையும் கேட்டு, இப்படி ஒரு மழையை எனக்குள் பொழியப் பண்ணிப் போனீர்கள். பல சிந்தனைகளை உங்கள் மழை தந்து போயிருக்கிறது. அது பெருக்கெடுப்பதைத் தடுக்க முடியவில்லை. நான் ஏன் பதிவெழுதுகிறேன் எனப் பல நாட்கள் சிந்தித்துப் பார்த்திருக்கிறேன். இன்னும் தெளிவான பதில் கிடைத்த பாடில்லை. ஆனால், வயதான ஒரு காலத்தில் (இருந்தால்) என்னைத் திரும்ப்பிப் பார்க்க; திருப்பிப் பார்க்க; எது எல்லாம் என்னைக் கவர்ந்திருக்கிறது; எப்படி எல்லாம் இருந்திருக்கிறேன் என்று இரை மீட்ட அது உதவும் என்பது ஒரு காரணம் என்பது நிச்சயம்.

இலக்கிய சந்திப்பு பற்றி எழுதுவதற்குக் காரணம் அது ஒரு நடந்த நிகழ்வொன்றின் அடையாளமாக இருக்கட்டும் என்ற ஒன்றுக்காக. இவற்றைத் தாண்டியும் ஏதோ ஒன்று இருக்கிறது. என்னவென்று கண்டு பிடிக்க வேண்டும். சில வேளை மனக் அடுக்கில் கோப்புகள் நிரம்பிவிட்ட காரணமோ? பகிர வேறுமனங்களில் இடமில்லை அல்லது நம்பிக்கை இன்மை அல்லது விருப்பமின்மை காரணமோ? அல்லது மனக் குப்பைகளைக் கொட்ட ஒரு இடமோ? ஏதோ ஒன்று. கண்டு பிடிக்க வேண்டும். 

இங்கு வருகை தருகிற பலரும் வலைப்பூக்களின் உரிமையாளர்கள். உங்களுக்கு ஏதேனும் பிரத்தியேகக் காரணங்கள் இருக்கின்றனவா? சொன்னால் எனக்கும் ஒரு தெளிவு பிறக்கும் அட, இது தான்! இது தான்! என என்னையும் அந்தக் காரணங்களோடு இணைத்துக் கொள்ளும்.

ஆனால், உங்களைச் சித்திரவதைப் படுத்துவது - இப்படி சலிப்பூட்டும் அல்லது வெறுப்பூட்டும் எழுத்துக்களால் அவஸ்தைப் படுத்துவது நிச்சயமாய் ஒரு காரணம் அல்ல. (என்னைச் சகித்துக் கொண்டு இது வரைக்கும் வந்திருக்கிறீர்கள் :) 

சரி, அது போகட்டும்.மழைக்கு வருவோம்.

மழை! ஒரு பாட்டம் பெய்து ஓய்ந்த மழை!! இந்த மழையோடு தான் ஆரம்பித்தது அந்தச் சந்திப்பு!! இலக்கிய சாந்திப்பு - 6

மழைக்கும் தனக்குமான நட்பை மழை ஷ்ரேயா சொல்லச் சொல்ல எனக்குள்ளும் பெருமழை! 

அவருடய மழை இப்படிப் பெய்தது.






“ கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது மழை. நனையாமல் பார்க்கும் போதும் நல்லாய் தான் இருக்கிறது” என்று ஆரம்பித்த அந்த மழையின் பாடல் ,”சாரலாய் தொடங்கும் ஒரு நட்பின் தொலைபேசி அழைப்பு,அடைமழைப் பேச்சு,இடியென முழங்கி வார்த்தையால் ஆலங்கட்டி மழை போல் தாக்கும் கோபங்கள்,துளித்துளியாய் எண்ணிக்கையும் அளவும் அதிகரிக்கின்ற ஆசீர்வாதங்கள். மழை எப்போதும் எல்லோரையும் ஏதோ ஒரு வடிவில் தொடர்ந்த படியே தான் இருக்கிறது” என்ற சொல்லிய படிக்கு எல்லோரையும் சாரலை அனுபவிக்கும் படிக்கு தூறியவாறு, “ இலைகள் தெளிக்கும் பன்னீராய் தரை தொட்டு, கண்னாடியில் கூரையில் எங்கும் நெளி நெளியாய் பளிங்குப் பாம்பாய் நெளிந்து ஓடுகிறது மேகத்திறங்கிய நீர்”  என்றவாறு பெய்து ஓய்ந்தது ஷ்ரேயாவின் மழை.








மழை மீது எனக்கொன்றும் தனிப்பட்ட பிரேமை இல்லை. மழை என்றால் எனக்கு நினைவுக்கு வருவது பெருமழை பெய்து நிலம் எல்லாம் கழுவுப்பட்ட பின்னால் நிலம் இருக்கிற புதுசுத் தன்மை! அதில் கஞ்சல் குப்பைகள், தென்னை மரத்தில் இருந்து விழுந்த ஓலைகள், கிடுகுகள் எல்லாம் கரை ஒதுங்கி, மழை போன பாதையை சாட்சியாய் அது அதில் வரைந்து வைத்திருக்கும். மழையின் பாடல் அது, அதன் குணம் அது. மனிதர்கள் ஆக்கி வைத்த அழுக்குகளை அது எந்த வித பிரதி பலனும் எதிர்பாராமல் கழுவி சுத்தம் செய்து விட்டுப் போயிருக்கும். ஒவ்வொன்றினுக்கும் ஒவ்வொரு குணம் உண்டு தானே? இதன் குணம் அப்படி.நான் இப்படித்தான் என்று மழை வரைந்து விட்டுப் போன ஓவியம் அது. இயற்கையின் பாஷை. மற்றும் வண்ணங்கள்!


அதில் புதிதாய் கால் பதித்து ஒரு வித ஆர்வத்தோடு மழை என்னவெல்லாம் செய்து விட்டுப் போயிருக்கிறது என்று வளவு எல்லாம் குடும்பத்தோடு கூட்டமாய் போய் பார்க்கும் சந்தோஷம்! வானம் கூட துடைத்து வைத்தது போல பளீச்சென்றிருக்கும். புதுசாய் பிறந்த பூமி போல அழகாய்! புதுசாய்! புத்தம் புதுசாய்! பூமியை அது பிறப்பித்து விட்டுப் போயிருக்கும். அது பிடித்துப் போனதுக்கு எனக்கும் அப்போது அது புத்திளம் பருவமாய் இருந்ததும் ஒரு  காரணமோ என்னவோ!

அது போல மழையின் வரவின் பின்னால் வீட்டு வழவுகளில் நிற்கும் ஜாம் மரங்கள், நெல்லி மரங்களை எல்லாம் உலுப்புகின்ற போது முத்து முத்தாய் கொட்டுண்னும் குண்டு குண்டு துளிகள் அழகானவையும் தான். இந்த மழையை வைரமுத்து ”முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ? முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ” என்று வேறுவிதமாய் உலகியல் வாழ்வோடு சம்பந்தப் படுத்திப் பார்ப்பார். 

அழகு, ரசனைகள் அது பற்றிய பார்வைகள் எல்லாம் காலங்களினோடும் வயதுகளினாலும் மாற்றம் பெறுகின்றனவோ என்னவோ?

இப்போதெல்லாம் மழை எனக்கு ஒரு வித சோகத்தினைத் தந்து செல்கிறது. மழை மட்டுமென்றில்லை. இளமைக்கால புகைப்படங்கள், ஒரு சில பாடல்கள், தனிமையைச் சந்திக்கின்ற கருக்கல் மாலைப் பொழுதுகள், ஏதேனும் ஒரு விஷேசமான உணவு, பழைய வாழ்வையும் நினைவுகளையும் ஒரு வித ஏக்கத்தையும் தந்து விடப் போதுமானவையாக இருக்கின்றன.பொதுவாக மாலையும் இரவும் சந்திக்கிற பொழுதில் பெய்கிற மழையோடு தனிமை சேர்ந்தால் அது ஒரு சொல்லவொணா வாழ்க்கை நிலையாமையைச் சொல்லிச் செல்கிறது. இப்போதெல்லாம்!

உங்களுக்கு எப்படி?

எனினும் பொதுவாக இயற்கையோடு நமக்கான பிணைப்பு பற்றி ஒரு தத்துவார்த்த ஈடுபாடு எனக்கிருக்கிறது.

அதற்கென்று ஒரு சட்டம் இருக்கின்றது என்பது என் நம்பிக்கை. இயற்கையின் சட்டங்களால் நாம் ஆளப்படுகிறோம் என நான் வலுவாக நம்புகிறேன். இலக்கியங்களும் இவை பற்றி நிறையவே பேசுகின்றன. 

இயற்கை எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறது.இந்த இயற்கைக்கும் நம் உடம்புக்கும் இருக்கிற தொடர்பைப் பாருங்கள். பிரபஞ்சத்தில் இருக்கிற பஞ்ச பூதங்களால் தான் நம் உடம்பும் ஆக்கப் பட்டிருக்கிறது. அதனால் அதிலிருந்து நாம் வேறு பட்டவர்கள் அல்ல. அப்படி ஆகி விடவும் முடியாது. 

அவ்வாறு ஆக்கப்பட்டது மாத்திரமல்ல; பிறந்த பின்னரும் கூட அதிலிருந்து நாம் பிரிந்திருத்தல் சாத்தியமா?  சுவாசிக்காமல் நாம் இருத்தல் இயலுமா? நீரின்றி வாழ்தல் சாத்தியமா?  என்று நாம் நம் மூச்சை நிறுத்துகிறோமோ அன்று நம் உடம்பு ஒன்றுமற்றதாகி விடுகிறது.இல்லையா?

இந்த இயற்கைக்கும் நமக்குமான தொடர்பு பற்றி சித்தர் பாடல் ஒன்று இப்படிக் கூறுகிறது.

“ கூறுவேன், தேகமது என்னவென்றால் 
குருபரனே எலும்பு தனை காலாய் நாட்டி
மாறு படா எலும்புக்குத் துவாரமிட்டு
வன்மையுடன் நரம்பினால் வலிந்து கட்டி
தேறுதலாய் இரத்தமதை உள்ளே ஊற்றி
தேற்ரமுடன் அதன் மேலே தோலை மூடி
ஆறுதலாய் வாய்வு தனை உண்டாக்கி
அப்பனே! தேகமென்று கூறுண்டாச்சே!

என்கிறது. எப்படி எல்லாம் சிந்தித்திருக்கிறார்கள் இல்லையா? இலக்கியத்தில் முந்தி இருக்கிற தொல்காப்பியம்,

“நிலம்,தீ, நீர், வளி, விசும்போடைந்தும்
கலந்த மயக்கம் உலகமாதலின்” (86)

என்று உரைக்கிறது. புற நானூற்றின் காலத்திலேயே நம் தமிழர் எத்தனை இயற்கை பற்றிய தெளிவைக் கொண்டிருந்திருக்கிறார்கள் என்று பாருங்கள்.அதன் 87 வது பாடல், “அணுச் செறிந்த நிலனும், அந் நிலத்தின் கண் ஓங்கிய ஆகாயமும், அவ் ஆகாயத்தைத் தடவி வரும் காற்றும்,அக் காற்ரின் கண் தலைப்பட்ட தீயும், அத் தீயோடு மாறுபட்ட நீருமென ஐ வகைப் பெரிய பூதத்தினது தன்மை போல....” என உரைக்கிறது.

இந்த ஐம் பெரும் பூதங்களைக் அடிப்படையாகக் கொண்டே ஐம் புலன்களும் அவற்றை நுகரும் பொறிகளும் உண்டாகின்றன என்று பரிபாடல் குறிப்பிடுகிறது. பார்க்க விரும்புபவர்கள் பரிபாடல் 88 ல் அதைக் கானலாம்.

அதற்குப் பிற்பட்ட திருக்குறள், “சுவை, ஒளி ஊறு, ஓசை, நாற்றம் ...(குறள் 106) என்றும் கண்டு, கேட்டு,உண்டு, உயிர்த்து உற்று அறியும் ஐம்புலன் (குறள் 90) என்றும் பகுத்து விளங்கி வைத்திருக்கிறது.

“அண்டத்தில் உள்ளதே பிண்டம்
பிண்டத்தில் உள்ளதே அண்டம்
அண்டமும் பிண்டமும் ஒன்றே
அறிந்து நாம் பார்க்கும் போதே”

என்று ‘சட்டமுனி ஞானம்’ உரைக்கிறது. இடைக்காட்டுச் சித்தர் இன்னொரு விதமாய் அதைச் சொல்லுவார்.

“மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் ஐந்தாட்டை
வீறுஞ் சுவை ஒளி ஊறு ஓசை யாம் காட்டை
எய்யாமல் ஓட்டினேன் வாட்டினேன் ஆட்டினேன்
ஏக வெளிக்குள்ளே யோக வெளிக்குள்ளே” 

என்கிறார்.இப்படிப் பல பாடல்கள் ; பழங்கால இலக்கியத்துக்குள்ளே தத்துவப் புதயலையும் தமிழருடய பரந்த உலக அனுபவத்தையும் அவர்களுக்கும் இயற்கைக்குமான புரிந்துணர்வின் விளக்கத்தின் சாயலையும் சொல்லிய வண்ணமாக இருக்கின்றன.

எல்லாவற்றுக்கும் முந்திய வேதத்திலேயே தாயின் கருவறையில் ஓர் உயிர் பஞ்ச பூதங்களின் அம்சமாய் எவ்வாறு தோற்றம் பெறுகிறது என்று மிக விரிவாக (மாதம் மாதமாக) சொல்லி இருக்கிறது என்றால் பாருங்களேன்.

சரி, நாம் அதை விட்டு வெளியே வருவோம்.எனக்கும் இயற்கைக்குமான உறவு ஒரு தத்துவ சார்பானதாக இருக்கிறது. முன்னர் சொன்ன மாதிரி. அது பேசுகிறது தன் மொழியில். ஆனால், மிகச்சிலரே அதனை மொழிபெயர்க்கின்ரனர் தம்முடய பாசையில். 

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக. இவர் மழையோடு பேசுவது மாதிரி. காற்றும் மரமும் பேசிக்கொள்வதைப் பார்த்திருக்கிறீர்களா? காற்றை உணரத்தான் முடியும்; பார்க்க முடியாது. மரத்துக்கு பாஷை இல்லை.sign language  தான். என்னமாய் தலையாட்டி தலையாட்டி மரம் பதில் சொல்கிறது பாருங்கள்.






















அது மாதிரித்தான் இயற்கை / பஞ்சபூதம் ஒவ்வொன்றும் தத் தம் மொழிகளில் நம்மோடு பேசுகின்றன. உறவு கொண்டாடுகின்றன. தென்றல் என்னமாய் நம்மை முத்தமிட்டுச் செல்கிறது. பூக்கள் என்ன அழகாய் நம்மைப் பார்த்து புன்னகைக்கின்றன? மாலை நேர ஆகாயம் எத்தனை எத்தனை சித்திரங்களைத் தான் ஒவ்வொரு நாளும் வரைந்து காட்டி விட்டுப் போகிறது? ஒரு குத்து விளக்கின் முத்துச் சுடர் ஒளிர்வது அழகாயில்லையா?

அன்பை மட்டுமா பகிர்கின்றன? கோபத்தையும் கூடத்தான்.

தென்றல் புயலாகித் தன் கோபத்தைக் காண்பிக்கிறது. தீக்கு கோபம் வந்து எரித்துப் பொசுக்கியவை எத்தனை? எத்தனை? அண்மையில் சுனாமியாய் வந்த தண்னீரின் கோபத்தை நம் தலைமுறை அத்தனை இலகுவில் மறக்க முடியுமா? மண்சரிவுகள் பூமி பிளந்து மாண்டு போனவர்கள் பட்டியல் 1000 கணக்காய் நீள்கிறது வரலாற்றில்.இப்போது பனி உருகி நீர்மட்டம் உயர, மழை குறைந்து வரட்சி வியாபிக்க,Global worming பயமுறுத்திய படிக்கும், இன்னும் நீண்ட படிக்குமாக......

இந்த பஞ்ச பூதங்களுக்கிடையே நல்லதொரு நட்புறவும் இருக்கிறது.       ஆகாயத்துக்கும் பூமிக்கும்  messengerஆக இருக்கிறது மழைச் சரம். தண்ணீரும் நிலமும் நல்ல நண்பர்களாய் இருக்கிறார்கள். ஒன்றுக்கொன்று அத்தனை துணை. அது போல நெருப்புக்கு காற்று ஒத்து ஊத வல்லவர். எரிகிற நெருப்புக்கு எண்னை வாத்துவிட வல்ல நண்பனைப் போல காற்றுக் காரன். 

நீருக்கும் நெருப்புக்குமோ எட்டாம் இடத்தில் பொருத்தம். ஒரு பொழுதும் அவர்கள் சேர்ந்திருக்கப் போவதில்லை./ அவர்கள் இணைதல் என்பது சாத்தியமற்ற ஒன்று. ஆகாயமும் பூமியும் கூட ஒரு போதும் இணைய முடியாது. காற்று எட்டி எட்டி வீசினாலும் அதன் எல்லை கொஞ்சம் தான். 

ஆகாயமோ  மேற்குடி வகுப்பைச் சார்ந்தது போலும்! தொடர்பெல்லைக்கப்பால் ஆகாயம்! மழை மட்டும் வந்து ஆகாயத்தின் செய்தியை பூமிக்குச் சொல்லிப் போகும்; அவ்வப்போது! பூமி கொஞ்சம் மழை முகிலை அனுப்பி சுகம் விசாரித்துக் கொள்ளும். அவ்வளவே அவர்களால் முடிந்தது. ஒரு வித தொலைபேசிச் சம்பாசனை போல அது! 

சில வேளைகளில் பூமியின் பொக்கிஷங்களின் மேல் பொறாமை வந்து விடுகிறது காற்றுக்கு. ஆனாலும் அது நிலத்தை ஒன்றும் செய்து விட முடியாது பாருங்கள்! அது மாதிரி பூமியும் காற்றை / அதன் கோபமான புயலைப் பார்த்து அலட்டிக் கொள்வதில்லை. பூமி அது பாட்டுக்கு இருக்கிறது. ஒட்டிக் கொள்ள முடியாத படிக்கு. அது போல நெருப்பு ஆகாயத்தை எட்ட முடியாது. ஆனாலும் நெருப்பின் அம்சமாய் ஆகாயத்துக்கு ஒரே ஒரு சூரியன். ஒன்றுக்கொன்று அணிகலனாய். ஆகாயம் அது ஒன்று மட்டும் போதுமென்று நினைத்து விட்டதோ என்னமோ! அவர்களுக்குள் அப்படி ஒரு ஈடுபாடு, பிணைப்பு, பந்தம். 

பூமியோ எல்லாவற்றையும் பார்த்த படியும் தாங்கிய படியும் பொறுமையாய் இருக்கிறது.பொறுமை எல்லை மீறுகிற சந்தர்ப்பத்தில் மாத்திரம் தன் வாயைத் திறந்து அபாய எச்சரிக்கையாய் நில நடுக்கத்தை தந்து விட்டுப் போகிறது. ’கவனம் பிள்ளை’ என்று சொல்லுகிற ஓர் அம்மா மாதிரி!

இவற்றை  எல்லாம் நம் மனித உறவுகளோடும் நாம் பொருத்திப் பார்க்கலாமில்லையா?

இப்படியாக இயற்கை தன் உணர்வுகளையும் குணங்களையும் தன் பாசையில் சொன்ன படிக்குத் தான் இருக்கிறது.

இயற்கை தனக்கென ஒரு நியதியையும் வைத்துக் கொண்டிருக்கிறது. அதனோடு, அதனுடய நியதியோடு, எனக்கு ஒரு பெரும் கோபம் கூட இருக்கிறது. அது என்னவென்றால், ’வலியது வாழும்’ என்ற அதன் பிரபஞ்சச் சட்டம். அது அப்பாவிகளை வாழ விடுவதில்லை. வல்லவர்களை மட்டும் வாழ வைக்கிறது. மெலியதை வலியது பிடித்துத் தின்ன இயற்கையால் சபிக்கப்பட்டிருக்கிறது  இந்தப் பூமி. 

இது சம்பந்தமாக அதனோடு நித்தமும் சண்டை பிடித்துக் கொண்டிருக்கிறேன். அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால் பூமிப்பந்தில்லாமல் வேறொரு பிரபஞ்சத்தின் கிரகமொன்றில் வேறொரு அதன் நியாயமான நியதிகளால்  சூழப்பட்ட ஓரிடத்தில் பிறக்கப் பண்ணு என்பது என் பிரார்த்தனை. அதனிடம் நான் வைத்திருக்கிற விண்ணப்பம்.
( Application போட்டிருக்கு. பாப்பம். :)

நீங்கள் என்ன மாதிரி?......





ஆதலால், இப்படியாக இப்பதிவு நதியாக உருவெடுக்க; தொப்பலாய் நனைந்து போக, ஷ்ரேயா தான் காரணம். அவவைக் காண விரும்புபவர்கள் இந்த முகவரிக்குச் செல்லலாம். http://mazhai.blogspot.com.au/ 

மழையுடனான அவரை நீங்கள் அங்கு கண்டு நீங்களும் நனையலாம். 


Tuesday, August 21, 2012

இலக்கிய சந்திப்பு - 6




புலம்பெயர்ந்தோர் வள நிலயத்தின் ஆதரவோடு சிட்னி உயர்திணை அமைப்பினர் நடாத்தும் மாதாந்த இலக்கிய ஒன்று கூடல் நிகழ்ச்சி வழமை போல மாதாந்த இறுதி ஞாயிறான 26.08.2012 அன்று மாலை 6.30 மணியில் இருந்து 7.30 மணி வரை நடைபெறும்.

                  இடம்: The Oakes Room, No: 1, Oakes St, 
                              Westmead, N.S.W. 2145


                காலம்: 26.08.2012 மாலை 6.30 - 7.30


இலக்கிய ஆர்வலர்களையும் கலைஞர்களையும்  உங்கள் கலைப்பொக்கிஷங்களை  நம்மோடு பகிர்ந்து கொள்ள வருமாறு அன்போடு அழைக்கிறோம்.






Saturday, August 18, 2012

உயிர் நிழலில் காற்று சொல்லிச் செல்லும் கவிதை: - ஆழியாளின் “செவ்வரத்தம் பூ”

நேற்றய தினம்  ‘உயிர்நிழல்’ காலாண்டு சஞ்சிகை தபாலில் வந்து சேர்ந்தது.

கல்யாணச் சாப்பாட்டைக் கண்ட பிச்சைக்காரனைப்போல ஆவல் உந்த அன்றாட அவசரங்களுக்கிடையிலும் பக்கங்களைப் புரட்டினேன்.  தட்டத் தட்ட ஒரு ஓய்வுநேர மாலையும் மாதாந்த பில்லுகள் எல்லாம் கட்டி முடிந்த சஞ்சலமில்லா மனமும் சிரத்தையாகத் தயாரிக்கப் பட்ட தேனீரும் ஜன்னலோர சாய்வு நாற்காலிக்குமான ஒரு பொக்கிஷப்பொழுது எப்போது வாய்க்கும் என்ற ஏக்கம் மனதைக் கவ்வியது.

பக்கங்களின் நடுவே ஆழியாள்!  பெயர் தட்டுப்பட்டது. ஓடிய கண்கள் நிலைகுற்றிற்று. ஆழியாள் என்ற பெயரைக் கண்டால் வியப்புக் குறியிட்ட அந்தக் கவிதையும்; வானத்து வளைவோடு அவர் கேட்ட வட்ட வீடும் நினைவுக்கு வரும்.அடடா! நம்மூர் கன்பரா கவிஞையாச்சே என்பது அதைத் தொடர்ந்து பெருமையோடு நினைவு வரும். இப்போது என்ன எழுதி இருக்கிறார் என விழி தலைப்பில் நிலை கொண்டது.

தலைப்பு “செவ்வரத்தம்பூ”

இந்தப் பூவோடு நமக்கான சம்பந்தம் சமான்யமானதல்ல. அதனோடு நமக்கு ஒரு நெருக்க பந்தம் உண்டு. அதனால் எல்லாம் மறந்து சப்பாணி வெட்டி உட்கார்ந்து  மடியில் புத்தகத்தை இருத்தி முழுதாய் கவிதையை உள்வாங்கினேன்.

அது ஆத்மா பசியாறுகின்ற தருணம்!

அதன் பின் நான் ஒரு இயந்திர மனிதனைப் போலானேன்.போனேன்.வந்தேன்.
நம்புங்கள்! இன்றோடு  ஒரு நாள் என்னை முழுதாய் கடந்து போயிருக்கிறது. ஆனால் ’நான்’ இந்தக் கவிதைக்கப்பால் இன்னும் நகரவில்லை. புற வாழ்க்கை எல்லாம் நோமல் தான். நாளாந்த அலுவல்களும் நலமாயே நடந்தன; கார் அது பாட்டுக்கு சிக்னலில் நின்று பின் நகர்ந்து வேலைக்கு என்னை இட்டு வீட்டுக்கும் பாதுகாப்பாய் கொண்டு வந்து சேர்த்து விட்டிருக்கிறது. புற வாழ்க்கை என்பது ஒரு புறோக்கிறாம் செய்யப்பட்ட கொம்பியூட்டர் போல! அது தன் பாட்டில் நடக்கும்.அதை விடுங்கள்; நான் சொல்வது மனதை!

                                        செவ்வரத்தம் பூ!


இந்தச் செவ்வரத்தம்பூ என்ற சொல் ஈழத்தவருக்கு பல்வேறு நினைவுகளைக் கிளர்த்திச் செல்ல வல்லது. அது ஒவ்வொருவருக்கு ஒவ்வொருவிதமான ஞாபகங்களைக் கிளர்த்தும். கிணற்றடிச் செவ்வரத்தை, கொல்லைப்புறச் செவ்வரத்தை,மதிலோரச் செவ்வரத்தை, பாத்திகட்டி வளர்க்கப்பட்ட செவ்வரத்தை .... இப்படி பலவிதமான செவ்வரத்தஞ் செடிகள் அனேகமாக எல்லா இல்லங்களிலும் தனக்கான இடங்களைப் பிடித்திருக்கும். நம் ஊரில்!

தாத்தா பாட்டிமார் காலை வேளைகளில் ஊர் மரங்களின் நெட்டுகளை மதிலுக்கு அப்பால் நின்றபடி கொக்கைகளால் சவட்டி பூக்களைப் பிடுங்கிச் செல்லுதலும் அவர்கள் பாடிச்செல்லும் தேவாரங்களும் ; பாடசாலை செல்லும் பள்ளிப்பிள்ளைகளின் கட்டளையிடப்பட்ட காலைநேரப் பிரார்த்தனைப்பாடல்களோடும் சுவாமி அறைகளில் சாமிக்குடும்பங்களுக்கு  அவர்கள் வைக்கும் நேர்த்திக்கடன்களோடும் இப்பூக்களுக்கு நிறைய சம்பந்தங்கள் உண்டு. காலைகளின் ஆரவாரங்களுக்கிடையில் ஊதுபத்திப் புகைகளோடு உங்களுக்கும் அது  நினைவுக்கு வரலாம்.

இப்படி செவ்வரத்தம் பூக்களுக்கும் நித்தியகல்யாணிப் பூக்களுக்கும் ஒரு தவிர்க்க முடியாத இடம் காலை நேரப்பொழுதுகளின் நினைவுகளுக்கு அழகு சேர்க்க வல்லன.

இளங்காலைக் காற்றும் அதைப் போலத்தான்.

ஒவ்வொரு நாளும் காய்ந்த பூமியிலும் தவறாமல் பூக்கும் இந்த இளம் பூக்களை சூரியப் பிரகாசத்தின் வெளிச்சத்தை ஏந்தியவாறு வருடிச் செல்லும் காற்றைப் போன்றவர்கள் கவிஞர்கள்.காற்றினை எப்படி ஒரு குடுவைக்குள் அடைத்து விட்டு காற்று இத்தன்மையது, இவ்வடிவம் கொண்டது, இவ்வண்ணத்தினது என்று அடையாளப்படுத்தி விட முடியாதோ அது போலத்தான் இந்தக் கவிஞர்களும்.சுதந்திரமானவர்கள்.

காற்று தன் இருப்பை  மரத்தின் அசைவில் சொல்லிச் செல்லும் பொழுதுகள் கவித்துவம் மிக்கவையும் கூட. அவைகள் சங்கத மொழிகளால் பரிபாஷிக்கின்றன. காற்று உஷ்... என்ற  ஒரு வித பாஷையில் பேச, மர இலைகள் தலையாட்டி தலையாட்டி மறுமொழி சொல்கின்றன. அந்த இயற்கை மொழிகள் பரவசமூட்டுபவை.

அந்தப் பொழுதுகளைப் போன்றவை சில கவிஞர்கள் செய்யும் கவிதைகள். கவிஞர்கள் மாத்திரமென்றுமில்லை. கலை இலக்கியத்தை யவ்வனப்படுத்தும் -  எழுத்துக்களைப் பொறுக்கி, சொற்களும் உணர்வும் உண்மையும் அழகுணர்வும் சேர்த்துக் குழைத்து குழைத்து  மெதுமையாக்கி உயிர் செய்யத் தெரிந்த எல்லாப் பிரமாக்களுக்கும் இது பொருந்தும். அவை அற்புத மாதிரிகளை தமிழுக்கு விட்டுச் செல்லுகின்றன.

இந்தக் கவிஞர்கள் இருக்கிறார்களே! ஒரு கட்டுக்குள் அடக்க முடியாதவர்கள்!!  அடக்கக் கூடாதவர்களும் /அடங்க கூடாதவர்களும் கூட. காற்றைப் போல. இந்த அடங்க மறுக்கும் தன்மையோடு உண்மையும் எதற்கும் யாருக்கும் அஞ்சா மனத்திறமும் மனிதம் பேசும் ஓர்மமும் சொல்லாளுமையும் சேர்ந்து விட்டால் அங்கு ஒரு உன்னதம் உருவாகிவிடும்.

அவனால் தான் வரலாறு எழுதப்படும்.

இலக்கியம் வரலாறைப் பேசும் அற்புத தருணங்கள் அவை. அவனது பேனா தூரிகையாகும்.துர்பாக்கியாகும், புகைப்படப் பிரதி போலாகும், சான்றொன்றை சாட்சியமாய் தர்மத்தின் காலடியில் ஈன்று விட்டுப் போகும்.

அது சமயா சமயங்களில் துக்கிக்கும், துவண்டு விழும், வேறொரு பொழுதில் வீறுகொண்டெழும், பின் விடுபட்டு தனியாய் நிற்கும், விம்மியழும், பாடம் புகட்டும், பரிந்துரைக்கும், சமயாசமயத்தில் பூவைப்போல மென் உணர்வைப் பேசும்; புலப்படாத கோணம் ஒன்றில் விஸ்வரூபம் எடுத்து உண்மையை யாருக்கும் அஞ்சாமல் உரத்தும் இடித்தும்  உரைக்கும். சுட்டு விரலால் குற்றம் சுமத்தும். கனமான உண்மையைக்  கவசமாய் போட்டிருக்கும் அது  உலகுக்கு அஞ்சாது தனியனாய் எப்போதும் உயிரோடும் உயிர்ப்போடும்  இருக்கும்.

ஜீவிதம் மிக்க அந்தத்தருணங்களை எல்லாராலும் உருப்படுத்தி விட முடியாது. முடிந்தாலும் மொழிக்குள் வசப்படுத்தி விட  முடியாது. இவை இரண்டும் சாத்தியப்பட்டு விட்டால் மட்டும்  போதுமா என்றால் இல்லை: போதாது. அதற்கு மிகுந்த மனத் திண்மையும் வேண்டும். மனத்திண்மை என்பது உண்மையின் பால் உறுதியாய் நிற்பது. சொல்லியே தீருவேன் என சோராது நிற்பது. அது தனிப்பட்ட ஆளுமை சார்ந்தது. கவிப் படுத்துவதில் இருந்து வித்தியாசப்பட்டது. ஆழியாளால் அது முடிந்திருக்கிறது. இந்தக் கவிதையில் அவை எல்லாம் ஒன்றுகூடி வசப்பட்டு நிற்கிறது.

உயிர் நிழலை வருடிச் செல்கிறது இந்தக் காற்று.

ஆழியாளின் இந்தக் கவிதை அத்தன்மையது. ’செந்’ தமிழின் ஈரம் இன்னும் உலராத  பவித்திரமான உயிரொன்றை உயிர்நிழல் தமிழ் கட்டிலில் சிசுவாக்கிக் கிடத்தியிருக்கிறது.

செவ்வரத்தம் பூ!!

இந்தச் செவ்வரத்தம் பூ என் பழைய நினைவுகள் எல்லாவற்றையும் சுவீகரித்துச் சென்றிருக்கிறது. இந்தக் கவிதையை அது அந்த நினைவுகளின் வெற்றிடத்தில் விட்டுச் சென்றிருக்கிறது.

ஆழியாள்  என்ன செய்து விட்டாய் என் செவ்வரத்தம் பூவை?

கவிதையை நான் சொல்லப் போவதில்லை. அதற்காக என்னை மன்னியுங்கள். ( இது பிற்சேர்க்கை: சிலவற்றுக்கு விலைகள் உண்டு. அதன் பொருட்டு நான் அதனை மலினப்படுத்த விரும்பவில்லை.)

சஞ்சிகை இலங்கையில் விற்பனைக்குக் கிட்டுகிறது. இணையத்தில் வெளிப்புறப் பார்வைக்குக் கிட்டுகிறது. உலகத்தமிழர் தொடர்பு கொண்டும் அதனைப் பெற்றுக் கொள்ளலாம்.

இணையத்தள முகவரி:

www.uyirnizhal.com




PARIS ARIVALAYAM
7 rue Perdonnet
75010 Paris
FRANCE
RAVEENDRAN BOOK LAB
Thirunelvely
Jaffna
SRI LANKA
மேலதிக தொடர்புகளிற்கு
UYIRNIZHAL, Ms. Luxmy, 27 rue Jean Moulin, 92400 Courbevoie, France
Tel:             0033 1 49 97 89 83       /             0033 6 09 24 96 99      
----------