Wednesday, September 24, 2014

பறக்கவும் பறக்கும் நிமித்தமாகவும்; தோழமைக்காக ஒரு பதிவு....




கொஞ்ச மாதங்களாய் சோர்வு. எழுத ஏதும் இல்லாதது போலவும்; மெளனமாக இருக்க வேண்டும் போலும் ஒரு நினைப்பு. எதனை முயன்றாலும் ஏதும் கைகூடுவதாக இல்லை. வேலைத்தலத்தில் நிகழ்ந்த தொடர் மரணங்களா? அல்லது பண்பாடுகள் தரும் அதிர்ச்சிகளா? முகமூடிகளுக்கு அப்பால் கண்டுகொள்ளப்படுகிற விகார முகங்கள் தருகிற அதிர்ச்சிகளா?வாழ்க்கை பற்றிய தடுமாற்ற சிந்தனைகளா? எதுவென்று தெரியவில்லை.

இணையப்பக்கங்களுக்கும் அதிகம் வருவதில்லை. ’சுகமும் துக்கமும் வெளி இடங்களில் இல்லை. மற்றவர்களுடய குணக்கேடுகள் நம்மை எதுவும் செய்யாது’ என மகா பாரதத்தில் ஒரு வாசகம் வரும். அது போல, ’எதுவும் நேராதது மாதிரி நடந்து கொள்ளுங்கள். என்ன நேர்ந்திருந்தாலும் சரி’ என்றும் இணையத்தில் ஒரு அற்புத வாசகம் இருந்தது. இவை எல்லாம் ஏன் என்னை தூக்கி நிறுத்தப் போதுமானதாக இல்லை என்று தெரியவில்லை.

ஓர் அனுபவம் ஒன்று மெளனமாக சேகரிக்கப்படுகிறது என்பது மாத்திரம் புலனாகிறது. அது எத்தகைய அனுபவம் என்பதும் எத்தகைய பாடம் என்பதும் புரிந்து கொள்ளப்பட இன்னும் பல மாதங்கள் ஆகலாம். அது வரை இது ஓர் வலி மிகுந்த பயணம்.

சரி அது போகட்டும்..

ஏதோ ஒரு புள்ளியில் உயிர்ப்பினை உசுப்பி இயக்கத்தினைத் தொடங்க வேண்டும்.

நிலா அதற்கான ஆரம்பமாய் ஒரு தொடர் பதிவிற்கு அழைத்திருந்தா. மிக்க நன்றி நிலா. பறக்கவும் பறக்கும் நிமித்தமாகவும்  உங்கள் தொடர் பதிவின் அழைப்பினை நன்றியோடு  ஏற்று என் பதில்களைத் தந்திருக்கிறேன்.

...............................................

1.உங்களுடைய 100-வது பிறந்தநாளை எப்படி கொண்டாட விரும்புகிறீர்கள்?

நிச்சயமாக இருக்கப் போவதில்லை. :)

சொத்துக்கள் யாவும் சரியாக சரியானவர்களிடம் போக இருப்பதை உறுதி செய்து கொள்வதோடு என் இறுதிக்கிரியைகளுக்கான ஏற்பாடுகளையும் முன்கூட்டியே தயார் செய்து வைத்துக் கொள்வேன்.

ஏதேனும் தெரிந்தோ தெரியாமலோ கடந்த காலத்தில் தவறுகள் விட்டிருப்பதாக மனதுக்குத் தோன்றினால் அதற்கு ஏதேனும் பிராயச் சித்தம் செய்யலாமா என யோசிப்பேன். ( என்னால் மன்னிக்க முடியாத நபர்கள் என் கடந்த காலத்தில் என்னைக் கடந்து போயிருக்கிறார்கள். அவர்களுக்கு மெளனமான புறக்கணித்தலின் மூலம் மிகக் கடுமையான தண்டனையையும் வழங்கி இருக்கிறேன்.)

மரணத்திற்கு மனதளவில் தயாரான நிலையில் இருப்பேன்.

2.என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?

ஒவ்வொரு சமயமும் பண்பாடும் ஒவ்வொரு விதமான வாழ்க்கை முறைகளைப் போதிக்கின்றன. ஒரு பண்பாட்டுக்குச் சரியாக இருப்பது இன்னொரு பண்பாட்டுக்கும் சமயத்துக்கும் முரண்பாடாக இருக்கிறது.

உதாரனமாக தவறுகள் மன்னிக்கப்படும் என கிறீஸ்தவம் போதிக்கிறது. இந்து சமயம் செய்கின்ற ஒவ்வொரு செயலுக்கும் நிச்சயம் ‘கணக்கு’ வைக்கப்படும் என்று சொல்கிறது.

ஒருவனுக்கு ஒருத்தி என்பதை நம் பண்பாடு போதிக்கிறது. ஒருவர் ஐவரை மணந்து கொள்ளலாம் என இஸ்லாம் போதிக்கிறது.

கணவனும் மனைவியும் தமக்குள் உண்மையாகவும் விசுவாசத்தோடும் நேர்மையோடும் இருக்க வேண்டும் என்பதை நம் பண்பாடு பொதுவாக ஒப்புக் கொள்கிறது. அவுஸ்திரேலியப் பண்பாடு திருமணத்துக்கு அப்பாலான ஆண்,பெண் உறவை ஆரோக்கியமானது என ஏற்றுக் கொள்ளுகிறது.

கொலை பஞ்சமா பாதகம் என போதிக்கப்படும் அதே வேளை ஒருவர் ஒரு மனிதனை காரணம் கருதியோ கருதாமலோ கொலை செய்தால் அதற்குத் தண்டனை வழங்கப்படுகிறது. ஆனால் இதனையே இராணுவம் செய்தால் / மனித உயிர்களைக் கொன்றால் விருதுகளும் சன்மானங்களும் கொடுக்கப்படுகின்றன.

இவை பற்றியும் கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா? இறப்புக்குப் பின் என்ன நடக்கும்? யாரோ ஒருவர் போட்டு வைத்த இந்தப் பண்பாடுகளும் சமயமும் எம்மை மானசீகமாகக் கட்டிப்போட்டு வைத்திருக்கிறதா? இந்த இலட்டுமணக்கோடுகள் யாரால் எப்போது என்ன நோக்கத்துக்காகப் போடப்பட்டன என்பது பற்றி எல்லாம் மேலும் அறிந்து கொள்ள விரும்புகிறேன்.

இந்தப் பண்பாடுகளும் சமயங்களும் இல்லாவிட்டால் நம் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும்? எங்கள் வாழ்க்கையை எப்படி நாங்கள் வடிவமைத்திருப்போம்?


3.கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?

சஞ்சிகை ஒன்றில் படித்த விடயம் ஒன்று.

காதலிக்கும் மனைவிக்குமான வேறுபாடுகளை அது இவ்வாறு பட்டியலிடுகிறது.

* பேச ஒரு விடயமும் இல்லாவிட்டாலும் கூட பேசிக்கொண்டே இருந்தால் அது அது காதலன் காதலி.
ஒன்றுமே இல்லாத விடயத்தை பொழுதுக்கும் பேசிக்கொண்டிருந்தால் அது கனவன் மனைவி.

* எங்கேயாவது போகும் போது சமமாக நடந்து போனால் அது காதலன் காதலி.
எங்கேயாவது போகும் போது ஆண் முன்னாலும் பெண் பின்னாலும் அல்லது பெண் முன்னாலும் ஆண் பின்னாலும் நடந்து போய் கொண்டிருந்தால் அது கனவன் மனைவி.

* பொது இடத்தில் ஒருவரை ஒருவர் அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தால் காதலன் காதலி.
பொது இடத்தில் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளவே இல்லை என்றால் அது கணவன் மனைவி.

* பெண்ணின் வருகைக்காக ஆண் காத்துக்கொண்டிருந்தால் காதலன் காதலி. இந்தக் கிரகம் புடிச்சவன் இன்னும் வீட்டுக்கு வரலியே என ஆணுக்காய் பெண் காத்துக்கிட்டிருந்தா கணவன் மனைவி.

*பெண்னும் ஆணும் ஒருவருக்கொருவர் மிஸ் கோல் விட்டுக்கிட்டா காதலன் காதலி. பெண்ணும் ஆணும் ஒருவருக்கொருவர் அழைக்கும் கோலை மிஸ் கோல் ஆக்கினா கனவன் மனைவி.

*உன்னால தான் எல்லாமே என ஒருவருக்கொருவர் புகழ்ந்து கிட்டா காதலன் காதலி. உன்னால தான் எல்லாமே என ஒருவருக்கொருவர் திட்டிக்கிட்டா கனவன் மனைவி.

(நன்றி: 3.3.13 குங்குமம்)


4.. 24 மணி  நேரம் பவர்கட். ஆனால் நீங்கள் செய்வது என்ன?

வெளியே போய் வருதல், கடைச்சாப்பாடு, ஏகாந்தம்; மற்றும் தூக்கம்.

5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் அவர்களிடம் சொல்ல விரும்புவது என்ன?

இரண்டு மாடுகள் சேர்ந்து ஓட்டுகின்ற வண்டி இந்த வாழ்க்கை என்பதால் திருமணம் என்ற பந்தம் பற்றிய தெளிவான புரிதல் முதலில் வேண்டும்.அதிலும் குறிப்பாக அன்னிய நாடுகளில் அது மிக முக்கியம். திருமணம் என்ற சொல்லின் மூலம் அவர்கள் எதற்குக் கட்டுப்படுகிறார்கள் எதற்குக் கட்டுப்படவில்லை என்பது பற்றிய அறிதல் அவசியம். பிறகு சக ’மாடு’:) பற்றிய குறை நிறைகளை அறிந்து தெளிவாகப் புரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். எதிலே விட்டுக் கொடுக்கலாம் எதிலே விட்டுக் கொடுக்க முடியாது என்பது பற்றி தன்னைத் தானும் அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.அவை பற்றி இருவரும் கலந்தாலோசித்துக் கொள்ளுதலும் அவசியம்.
.
மற்றம்படி அவரவர் வாழ்க்கை அவரவரது. சொல்ல என்ன இருக்கிறது? ஏதேனும் பரிசுப்பொருள் வாங்கிக் கொடுப்பேன்.

6.உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?

அவனவன் (மனிதர்கள்) (போர்)அடிச்சுக் கொள்ளட்டும். எல்லாம் அவனவன் உண்டாக்கியது தானே! அதில் எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை. ஆனால் வாய் பேசா ஜீவன்களை அதன் பாட்டில் விட்டு விடுங்கள். அதற்கு ஏதேனும் செய்ய முடியும் என்றால் செய்ய ஆவல்.

7.நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?
பெரும்பாலும் புத்தகங்களிடம்; சில வேளைகளில் தெரிவு செய்யப்பட்ட நண்பர்களிடம்.

8.உங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?

அதை எனக்குச் சொன்னவரிடம் இருந்து நூலைப்பிடித்து மூலத்தைக் கண்டுபிடித்து நேரடியாக விடயத்தைக் கேட்பேன். நிலைமைக்கேற்ற படியான தண்டனையும் வழங்கப்படும்.

9.உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?

எதுவும் நிரந்தரமில்லை நண்பரே! மாற்றம் ஒன்றே மாறாதது, வருகின்ற போதே போகின்ற செய்தி இருக்கின்றதென்பது மெய் தானே! எல்லாம் கொஞ்சக்காலம்.Let it go!


10.உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?

புத்தகங்கள் படிப்பேன், வீட்டை ஒழுங்கு படுத்துவேன், இணையத்தில் ஏதேனும் நோண்டுவேன், ரீவி பார்ப்பேன்.


1.தோழமையின் உன்னதம்?

மனதோடு பேசக்கிடைப்பது.

2.தோழமையின் உன்மத்தம்?

பருவ வயது.

3.நட்பின் உரிமைக்கு எல்லை எது?
அபிப்பிராயம் மட்டும் சொல்லலாம். வாழ்க்கையும் அதன் முடிவுகளும் அவரவரது.அபிப்பிராயம் சொல்வது வரை தான் எல்லை.

உதவி தேவைப்படுகிறது என்று அறிந்தால் உதவி. மீனக் கொடுப்பதைவிட தூண்டிலைக் கொடுப்பது மாதிரியான உதவி. அவரை அவர் மாதிரி வாழ விடுவதைப் போல அதற்கு ஒத்துழைப்பு வழங்குவதைப் போல ஓர் உதவி வேறு உண்டா?

4.நட்பு வட்டத்தில் யாரெல்லாம் இருக்கக் கூடும்?
எவரும். வயது, பால், நிறம், இனம், மதம், மொழி கிடையாது.

5.மனம் தகிக்கும் ஒரு சினேகிதியின் மரணம்?
இது வரை நிகழ்ந்ததில்லை.

என் வேலைத்தலத்து சினேகிதன் (Ray) யின் அகால மரணம் வாழ்க்கையில் நான் என்ன செய்ய வேண்டும் என்ற பாடத்தை எனக்குச் சொல்லிப் போனது. (சுடலை ஞானம் என்பது அது தான் போலும்!)

6.நிறம் மங்கிய நட்பூ?

பால்ய காலத்து சினேகிதங்கள். பள்ளிக் கால நட்புகள்.

7.மனம் மாறிய நட்பூ?

நான் தான் மாறி இருக்கிறேன்.

அடிப்படையான சில விடயங்களில் தெளிவான உறுதியான நிலைப்பாடுகள் என்னிடம் உண்டு. நான் போட்டு வைத்திருக்கிற  வாழ்க்கையின் சட்ட திட்ட நியதிகளுக்குள் அவர்கள் இருந்தால் மாத்திரமே எனக்கு நட்பு சாத்தியப்படுகிறது. நட்பாக இருந்தாலும் கூட அடிப்படையான சில விடயங்களில் ஒன்றுபட்டால் மாத்திரமே நட்பு சாத்தியமாகும் எனக்கு.

குறை நிறைகளோடு நட்பை ஏற்றுக்கொள்ளுகிற அளவுக்கு மனம் இன்னும் விசாலமடையவில்லை.

8.மணம் குன்றா நட்பூ?

புத்தகங்கள்! எப்போதும்!

9.தினம் தினம் நினைவில் ஒளிரும் தோழமைகள்?

தினம் தினம் நினைக்கின்ற வகையில் எதுவும் இல்லை.

10.நிஜம்மாவே இத்தனை பேரையும் தினம்தினம் நினைக்கறீங்களா?!

:)

Thursday, September 18, 2014

இலக்கிய சந்திப்பு - 21 -

அன்புக்குரிய இலக்கிய நெஞ்சங்களே!

உங்கள் இலக்கிய இதயங்கள் நலம் தானா?

இரு மாத இடைவெளிக்குப் பின் மீண்டும் உங்களைச் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி.



வசந்த காலம் ஆரம்பித்து விட்டது.

இருள் விலகி சூரியன் இதமாய் மேல் வர மெல்லிய தென்றலோடு பூக்ககளின் வாசம் பூலோகமெங்கும்!இலைகளும் பூ மொட்டுக்களும் துளிர்க்கின்றன.கிளிகளும் பறவை இனங்களும் ஆங்காங்கே இணைகளோடு தென்படுகின்றன!! தோற்ற அளவில் மனிதர்களும் கம்பளி ஆடைகள் தவிர்த்து புன்னகை இழையோட பாரமற்று நடக்கக் காண்கிறோம்.

மகிழ்ச்சியாக இருக்கிறது!

குளிர் நீங்கி விட்டதால் நாமும் இனி இயற்கையோடு இணைந்து கொள்ள காலம் கைகூடி விட்டது. பழைய படி பூங்கா கைவிரித்து நம்மை அணைத்துக் கொள்ள தயாராக இருக்கிறது.

நிலமையினைக் கண்டு வர கடந்த வார நடுப்பகுதி ஒன்றில் பூங்காவுக்குப் போனேன்.வசந்த கால மலர்களோடு நம்மை வரவேற்ற படி காத்திருக்கிறது பூங்கா.

ஆம். பூக்களால் நிறைந்து போயுள்ளது பூங்கா! அது மட்டுமல்ல, ஓவியக் கண்காட்சி மற்றும் Cumberland மனநோயாளர் வைத்தியசாலையைச் சேர்ந்தோரது  அரும்பொருள் காட்சியகம் ஒன்றும் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. கைவினைப் பொருட்களின் கடைகளும் உணவு விற்பனைகளும் அமோகமாக நடைபெறுகின்றன.

இம்மாத இறுதி வர மட்டுமே இத்தகைய அரிய காட்சிகள் அங்கிருக்கும்.

புல் தரையில் பூக்களின் ஊடே நடப்பதுவும்; ஓவியக்கண்காட்சியின் காட்சி விரிவில் இலயிப்பதுவும்; கூடவே உள்ளத்துக்கும் உடலுக்குமாக உறவின் விசித்திரங்களை தரிசிப்பதிலும்; கூடவே,  நீரோடை அருகே உட்கார்ந்து தேநீரோடு தாம் கண்டு கொண்ட கருப்பொருள் பற்றி கலந்துரையாடி அவற்றினூடே இலக்கியக் கருக்களை இனம் கண்டு கொள்வதும் இம்மாத சந்திப்பின் நோக்கமாகும்.

பூவுக்குள் தேனை வைத்து, தேனின் இருப்பிடத்தை தேனீக்களுக்கும் பறவைகளுக்கும் மாத்திரம் சொல்லி வைத்த இயற்கையிடமும் ஓவியக்காட்சிகளுக்குள்ளும் 19ம் நூற்றாணடின் உள்ளத்து நோயின் வாழ்க்கைச் சுவடுகளுக்குள்ளும் ஒழிந்து போயிருக்கின்றன ஓராயிரம் இலக்கியங்களுக்கும் கலைகளுக்குமான கருக்கள்!

கண்டடைய வாருங்கள்!

இம் மாத இறுதி இம்முறை இன்னும் சிறப்பாக நீண்ட வார இறுதி விடுமுறையாக இருக்கிறது. பிள்ளைகளுக்கு பாடசாலை விடுமுறை விடப்பட்டிருப்பதால் எல்லோருமாக கூடி இருந்து அனுபவம் கொள்ள இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

உங்கள் எல்லோரது பிரசன்னமும் நிகழ்ச்சிக்குச் சிறப்புச் சேர்க்கும் என நான் சொல்ல வேண்டியதில்லைத் தானே!

வருக! நாளாந்த வாழ்வின் இறுக்கங்களில் இருந்து சற்றே விடுபட்டு உடலுக்கும் உள்ளத்துக்கும் புத்துணர்ச்சியும் புது வெளிச்சமும் பெற இந் நாள் உதவும்.

உங்கள் இன்றய நாளும் இனி வரும் நாட்களும் இனியதாகுக!

தமிழால் இணைந்திருப்போம்.

Wednesday, September 10, 2014

மன வனம்

அண்மையில் குறிப்பிட்ட ஒரு காரணம் நிமித்தம் சூளாமணி என்ற காப்பியத்தைப் பார்க்க நேர்ந்தது.அதில் சேடி நாட்டின் தலைநகரமான இரதனூபுரம் என்ற இடத்தை அரசாண்ட சேடி மன்னன் “மனோ வனம்” என்ற பூஞ்சோலைக்குக் குடும்பத்தோடு போன போன போது அச் சோலை அவனை வரவேற்ற பாங்கினை அது ஒரு இடத்தில் கீழ் கண்டவாறு சொல்லிக் கொண்டு செல்கிறது.


அரசன் மனைவிமக்களுடன் மனோவனம் யென்னும் பூம்பொழிலை யடைதல்


வயந்தமாங் குணர்த்தக் கேட்டே மன்னவன் மக்க ளோடு
முயர்ந்ததன் னுரிமை யோடு முரிமைகாப் பவர்க ளோடும்
கயந்தலைக் களிருந் தேரும் வையமுங் கவின வேறி
நயந்தன னகரி னீங்கிம னோவன நண்ணி னானே


வேறு - அரசனைப் பொழில் வரவேற்றல்

கோமான்சென் றணைதலுமே கொங்கணிந்த மலர்தூவித்
தேமாநின் றெதிர்கொள்ளச் சிறுகுயில்போற் றிசைத்தனவே
வாமான்றேர் மன்னற்கு மங்கலஞ்சொன் மகளிரைப்போற்
றூமாண்ட விளங்கொடிதந் தளிர்க்கையாற் றொழுதனவே


மணப்பொடி தூவிச் சாமரைகள் வீசிக் குடை பிடித்தல்

கடிவாச மலர்விண்ட கமழ்தாது கழலவற்கு
வடிவாசப் பொடியாக வனவல்லி சொரிந்தனவே
புடைவாசங் கொள மாலம் பூங்கவரி யெடுத்தெறியக்
குடைமாக மெனவேந்திக் கோங்கம்போ தவிழ்ந்தனவே


புகழ் பாடிப் பூவிறைத்தல்

கொடியாடு நெடுநகரக் கோமான்றன் குணம்பரவி
அடிபாடு மவர்களென வணிவண்டு முரன்றனவே
வடிவாய வேலவற்கு மலர்ச்சின்னஞ் சொரிவனபோல்
கொடுவாய கிளிகோதிக் குளிர்நறும்போ துகுத்தனவே


தென்றல் வீசுதல்

குரவகத்து குடைந்தாடிக் குளிர்நறவங் கொப்பளித்தார்த்
தரவவண்டின் னிசைபாட வருவிநீ ரளைந்துராய்
விரைமலர்ந்த துணர்வீசி விரைஞாற வருதென்றல்
புரவலன்றன் றிருமுடிமேற் போதலர வசைத்ததே


என்று பாடுகிறார் தோலாமொழித் தேவர்.


சாதாரண ஒரு நிலையில் இருந்திருந்தால் அவ் வர்ணனை வீச்சில்; தமிழின் அழகில்; அப்புலவனின் கற்பனை நயத்தில்; வந்த வேலையை மறந்து மனதைப் பறி கொடுத்திருப்பேன்.ஆனால் இன்று அவ்வாறு செய்ய முடியாது ஒரு சொல் என்னை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தி விட்டது.


பாடல் அழகாய் இருந்த போதும் பாடலுக்குள் நுழைய முடியாமல் ஒரு பெருந் தடையை ஏற்படுத்தியது “மனோவனம்” என்ற சொல்.


முன்னரும் ஒரு பொழுது இப்படித்தான்.மாணிக்க வாசகரின் திருவெம்பாவையில் வரும் “சித்தம் அழகியர் பாடாரோ நம் சிவனை” என்று அவர் பாடிய பக்தித் திறத்தில் தடக்குற்று அந்தச் சொல்லழகில் பலமாதங்கள் திளைப்புற்றுக் கிடந்தேன். இப்போது இந்த மனோ வனம்!


உண்மையில் இந்த மனம் என்பது ஒரு வனத்தைப் போல என்பது எவ்வளவு உண்மை? அங்கு தான் எத்தனை கொடிய விலங்குகள்,பயந்து ஒளிந்து கொள்ளும் சிறு பிராணிகள், முயல்களில் இருந்து முயல்களைக் கொன்று தின்னும் மிருகங்கள் வரை எத்தனை ஜாதி? எத்தனை வண்ணங்கள்? இயல்புகள்?தோற்றங்கள்?

கொடிகள், பூக்கள், மரங்கள், விருட்சங்கள், ஊர்வன, பறப்பன, வண்ணாத்திப் பூட்டிகள், மின்மினிகள், நறுமண மலர்கள்,பூச்சிகள், பழமரங்கள், மற்றும் குளிர்ச்சி பொருந்திய நீரோடைகள், மலை முகடுகள், மண்மேடுகள், சமதரைகள்,புல்வெளிகள்,மேலும் கூடுகள், குகைகள், சிலந்திகள், தேனீக்கள், தேன் கூடுகள்,தாவித் திரிவன,தங்கி இருப்பன,அப்பப்பா எத்தனை எத்தனை?...........


மனதை ஒரு வனமாக எண்ணி மனதுக்குள் உள் நுழைந்தேன். அதனை உலகம் பார்க்கப் புறப்பட்ட ஒரு உல்லாசப் பயணியைப் போல மூன்றாம் தரப் பிரஜையைப் போல ஆராய்ந்து பார்த்தேன். என் மன வனத்தை.


இன்னும் மீள முடியவில்லை.:)


அங்கிருக்கிற ஒரு வினோத பிராணி இது வரை எங்கும் நான் கண்டறியாதது.:) அது மிக வினோதமாயும் சமயா சமயத்தில் பயமூட்டும் விதமாயும் (மற்றவர்களுக்கும்) தோற்றம் காட்டுகிறது.அது சில சந்தர்ப்பங்களில் நல்ல பிராணியைப் போலவும் தோற்றமளிக்கிறது.தேவை ஏற்படுகின்ற போது எங்கிருந்தோ கூரான கொம்புகள் மேல் கிளம்புகின்றன.அது தன்னை ஒரு கம்பீர பிராணியாய் தோற்றம் காட்டிய படி சுயம் தாக்கப் பட்டு விட்டதைப் போல பிடரி சிலிர்க்க எழுந்து நிற்கிறது.அது பூனையைப் போல மிருதுவானதாகவும் அதே சமயம் பாம்பினுடய விஷத்தைக் கொண்டிருப்பது போலவும் தெரிகிறது.


அது என் மனோ வனத்தில் மட்டும் தான் வசிக்கிற பிராணியோ தெரியவில்லை.அச்சத்தையும் ஆதூரத்தையும் ஒருங்கே கொண்ட அபூர்வ பிராணி அது.


வினோதமான இந்தப் பிராணியை தமிழில் என்ன பெயர் சொல்லி அழைக்கலாம் என்று இப்போது யோசித்துக் கொண்டிருக்கிறேன்!


பாற்கடலுக்குத் தானே தெரியும் மந்தர மலையில் ஆழம்!:)


மனோவனம்..........


Thursday, July 3, 2014

யவனரும் தமிழரும் - இலக்கிய சந்திப்பு - 20ஐ முன்வைத்து




क्व सूर्यप्रभवो वंशः क्व चाल्पविषया मतिः।

तितीर्षुर्दुस्तरं मोहादुडुपेनास्मि सागरम्॥

க்வ ஸூர்யப்ரப⁴வோ வம்ʼஸ²: க்வ சால்பவிஷயா மதி:|
திதீர்ஷுர்து³ஸ்தரம்ʼ மோஹாது³டு³பேனாஸ்மி ஸாக³ரம்||

ஒளிமிகு சூரிய வம்சம் எங்கே? அற்பமான என் சிறுமதி எங்கே? கடந்திட முடியாக் கடலை சிறுபடகின் மூலம் கடக்க ஆசை கொண்டேன்.

என்று ரகுவம்சம் தொடங்கும்.

இதனை எழுதத் தொடங்குகின்ற போதும் எனக்கு அவ்வாறான மன உணர்வே இருக்கிறது.
கடந்த 29ம் திகதி ஆங்கில இலக்கிய அறிமுகம்; ஷேக்ஸ்பியர் என்ற தலைப்பில் அதிதி உரையாற்ற வந்த தனபாலசிங்கம் ஐயா அவர்கள் பேசிக்கொண்டிருந்த விரிவுரை பல ஈரச் சுணைகளையும் ஊற்றுக் கண்களையும் புலப்படுத்திக் கொண்டு தமிழ் வெள்ளமென பரந்தன.

ஆங்கில இலக்கியம் பற்றிப் பேசும் போது தமிழகத்துக்கும் மேலைத்தேயத்துக்கும் (கிரேக்க ரோம) இடையே பண்டைக்காலம் தொட்டு நிலவி வந்த வணிகத் தொடர்புகள் பற்றியும் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் யவனர் பற்றிய குறிப்புகளும் கவனத்தில் எடுக்கப்பட்டன.
அரிக்கமேடு போன்ற இடங்களில் மட்பாண்ட ஓடுகள், ரோம கிரேக்க நாணயங்கள் கிடைக்கின்றன எனவும்; பல பிராமிக் கல்வெட்டுக்கள் கிடைக்கப் பெறுகின்றன என்றும் அவற்றை ஆராயவும் அகழ்வாய்வு செய்து மேலும் பல ஆதாரங்களை வெளிக்கொணரவும் அரசு ஆதரவு காட்டுவதில்லை என்றும் கருத்துக்கள் பகிரப்பட்டன.

இதனைக் கேட்ட போது 27.4.14 அன்று சிட்னி Art gallery யில் காட்சிக்கு வைக்கப்பட வந்திருந்த ஆப்கானிஸ்தான் பொக்கிஷங்கள் தான் உடனே எனக்கு நினைவுக்கு வந்தன.
ஆப்கானிஸ்தான் – பண்டைய காந்தார தேசம் – மகாபாரதத்துக் காந்தாரியின் பிரதேசம் - இன்றய யுத்த பூமி – யுத்தத்துக்குள்ளேயும் அவர்கள் கட்டிக் காத்த வரலாற்றுப் பொக்கிஷங்களைச் சிட்னியில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் காட்சிப்படுத்தி இருந்தார்கள்.

கிட்டத்தட்ட ஒரே காலம் – சங்ககாலத்தை ஒட்டிய காலப்பகுதி.- அதில் காட்சிப்படுத்தி இருந்தவைகளில் வைக்கப்பட்டிருந்த குறிப்புகளில் கிரேக்க ரோம சாம்ராஜ்யத்துக்கும் தென் தமிழகத்துக்கும் இடையே போக்குவரத்தின் மத்தியில் இப்பிரதேசம் அமைந்திருந்ததால் இந்திய மேலைத்தேயச் செல்வாக்கினை தம் கலைப்பொக்கிஷங்களில் காணமுடியும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இனி நான் குறுக்கே நிற்பது அழகல்ல; விலகிக் கொள்ளுகிறேன். நீங்கள் சென்று பாருங்கள். இந்திய சாயலில் தந்தங்களில் செதுக்கப்பட்டிருக்கிற வனப்புறு பெண்களைப் பார்க்கின்ற போதும் ரோமானிய வைன் கடவுளைப் பார்க்கின்ற போதும் இத்தகைய கலைப் பொக்கிஷங்கள் ஏன் தென் தமிழகத்தில் கிட்டவில்லை என்ற கேள்வி எனக்கு எழாமல் இல்லை.

































(குறிப்பு: முதல் ஓவியமும் கடைசி ஓவியமும்  Art gallery க்குச் சொந்தமானவை. ஆப்கானிஸ்தானுக்கு உரியதல்ல)

யவனர் நன்கலம் தந்த தண்கமழ் தேறல்
பொன்செய் புனை கலத்து ஏந்தி, நாளும்
ஒண் தொடி மகளிர் மடுப்ப, மகிழ்சிறந்து, 20
புறம் -56
”தண்கமழ்தேறலை” ஒண்தொடிமாதர் அழகிய வேலைப்பாடுகள் அமைந்த பொற்கலத்தில் ஊற்றிக் கொடுக்க உண்டு களித்த சங்க அரசனும் *********** அழகிய யவன ஆண்களைப் பார்த்து ஆசை கொண்ட உள்ளூர் பெண்களும் சங்க காலத்தில் நிறைந்திருக்க சிலம்பு ஒலித்த சங்கமருவிய காலத்தில் பெரு வணிக வளாகங்களாக இருந்த மருவூர்பாக்கமும் பட்டிணப்பாக்கமும் இந்திரவிழா ஊர் எடுத்த காதையில் 33 வரிகளில் சித்திரிக்கப்படுகிறது.வனப்புறு நகரங்களும் மாட மாளிகைகளும் நிறைந்த நகரை இளங்கோ அடிகளார் அங்கு காட்டுகிறார். அங்கு யவனர் இருக்கை தனியாக இருந்தது பற்றியும் அறிய இயல்வதால் பல நூற்றாண்டுகளாக வர்த்தக பண்பாட்டு தொடர்புகள் இருந்து வந்ததை அறிய முடியும். இரட்டைப்பிடி மதுச்சாடிகளின் சிதைவுகளும், கண்ணாடியாலான மதுக்கிண்ணங்களும் அரிக்கமேட்டில் கிடைத்துள்ளன என்கிறார் தமிழாய்வு அறிஞரான கே.கே. பிள்ளை அவர்கள்.

ஐராவதம் மகாதேவன் கரூருக்கருகில் அமராவதி நதிப்படுக்கையில் கிடைத்த மோதிரம் ஒன்று பற்றிக் குறிப்பிடுகையில்
“அண்மையில் கரூருக்கு அருகில் அமராவதி ஆற்றுப் படுகையில் இது கிடைத்தது. இப்பொழுது தனியார் வசம் உள்ள இப்பொன்னாலான இலச்சினை மோதிரத்தின் எடை ஒன்றரை தோலா 15.6 கிராம். இதன் முகப்பில் 25 மி.மீ நீளமும் 15.மி.மீ அகலமும் கொண்ட ஒரு குழிவான நீள்வட்டம் அமைக்கப்பட்டுள்ளது. அதனுள் ஒரு தலைவனும், தலைவியும் அணைத்து நிற்கும் கோலம். இலச்சினையாகப் பொறிக்கப்பட்டுள்ளது. சிற்பக் கலை வல்லுநர் இக்காட்சியை மிதுனம் என்று கூறுவர்.

சிற்ப அமைதியைக் கொண்டும் கரூரில் அமராவதி ஆற்றுப் படுகையிலிருந்து அவ்வப்பொழுது கிடைத்துவரும் காசுகளிலிருந்தும், கைவினைப் பொருள்களிலிருந்தும் இந்தப் பொன் இலச்சினை மோதிரம் சங்க காலத்தைச் சேர்ந்தது என்றும், சுமார் கி.பி. முதல் நூற்றாண்டில் செய்யப்பட்டது என்றும் கூறலாம். சங்க காலச் சிற்பக் கலைக்கு எடுத்துக் காட்டாகக் கிடைத்துள்ள முதல் புறச்சான்று என்ற தனிச் சிறப்பினை இம்மோதிரம் பெறுகிறது.

தலைவி
தலைவி எழிற்கொடியாய் நிற்கிறாள். தலையில் உயர்த்தி ஒருபுறமாக சொருகியுள்ள கொண்டை. நாணிச் சற்றே திரும்பியுள்ள முகம், வேய் எனத் திரண்ட தோள், நீண்டு புறத்தே தொங்கும் இடக்கரம், தலைவனை சுற்றி அணைக்கும் வலக்கரம், உள்ளக் கிளர்ச்சியை எடுத்தியம்பி விம்மும் மார்பகம், மின் இடை, வலக்கால் நிலை பெற அதனை கொடியெனச் சுற்றிய இடக்கால், கைகளில் வளையல், கால்களில் கொஞ்சும் சிலம்பு, மேனியழகை மறைக்காத மெல்லிய துகிலுடை.

தலைவன்
அருகில் அணைந்து நிற்கிறான் தலைமகன். அவனும் தன் முடியைக் கொண்டையாகச் சொருகி, தலைவியைக் காதல் கூர் நோக்கோடு கண்டு களிக்கிறான். வலக்கரத்தில் அவளுக்கு அளிக்க ஒரு மலர், குறிஞ்சி மலரோ? (குறிஞ்சி என்றால் இணைதல் என்றும் பொருள்), உயர்ந்த திண்தோள்கள், இடக்கால் நெடித்து வலக்கால் மடித்து துடியிடையாள் படரும் கொம்பென நிற்கிறான்.

கொல்லிப் பாவை
இந்த இலச்சினை மோதிரத்தில் உள்ள மடந்தையின் உருவையும் எழிலையும் காணும்போது சங்க இலக்கியங்களில் அடிக்கடி குறிக்கப்பெறும் கொல்லிப்பாவையும் நினைவுக்கு வருகிறது. அகம், புறம், நற்றிணை, குறுந்தொகை ஆகிய நூல்களில் கபிலர், பரணர், ஒளவை முதலிய பெரும் புலவர்கள் கொல்லிமலையில் வடித்திருந்த பாவையின் எழிலைப் பாடுகிறார்கள். எடுத்துக்காட்டாக

பெரும் பூண் பொறையன் பேஎம் முதிர்கொல்லி
கருங்கட் தெய்வம் குடவரை எழுதிய
நல் இயல் பாவை அன்ன இம்மெல் இயல்

என்று தலைவியின் எழிலைக் கொல்லிப்பாவைக்கு ஈடாகப் பரணர் கூறுகிறார்.

கொல்லிப்பாவை இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும் இந்த மோதிரத்திலுள்ள பெண் சிற்பத்தைப் பார்த்தால் இவளைப் போன்ற மடந்தைகளைத் தான் கொல்லிப்பாவைக்கு ஒப்பக் கூறியிருக்கிறார்கள் சங்கப் புலவர்கள் என்று சொல்லலாம்..” – என்கிறார்ஐரவதம்.மகாதேவன். (நன்றி: இணைய உலாவி)

இப்படி எத்தனை எத்தனை தென் தமிழகத்தில் புதையுண்டும் தனியார் வசமும் இருக்கக் கூடும்?


சோழர்காலத்து ஆலயச் சிற்ப வேலைப்பாடுகளுக்குள் அகப்பட்டுக் கொண்டிருக்கிற மேலைத்தேய தொப்பி மனிதன். ஆச்சரியமாக இருக்கிறது. இல்லையா?  தஞ்சைப் பெருவுடையார் கோயில். கி.(பி.985 முதல் 1070) ராஜராஜசோழன்.













Friday, June 27, 2014

Robi McLean

நேற்று போல் இன்று இல்லை
இன்று போல் நாளை இல்லை
நேற்று போல் இன்று இல்லை
இன்று போல் நாளை இல்லை
அன்பிலே வாழும் நெஞ்சில் ஆஆஆஆஆ
அன்பிலே வாழும் நெஞ்சில்
ஆயிரம் பாடலே
ஒன்றுதான் எண்ணம் என்றால்
உறவு தான் ராகமே
எண்ணம் யாவும் சொல்ல......வா

சொல்லவா?

16.6.14 திங்கள்.

எல்லோருக்கும் போல சாதாரணமாகத் தான் விடிந்தது.

உண்டு, உறங்கி, விழித்து, குளித்து ,உடுத்து வேலைக்குப் போன சாதாரண நாள் அது.

கடந்து போயிருந்த வெள்ளி மாலையில் வந்து போயிருந்த நம் shift ன் இளம் அதிகாரி Robi Mclean அன்றய தினம் நம்மைக்காண வராமலே நம் வேலைகளுக்கு முதலான உடற்பயிற்சி நிறைவடைந்திருந்தது. இருந்த போதும் நம்மிடையே ஒரு எதிர்பார்ப்பு நிறைந்திருந்தது. அதற்குக் காரணம் Robiசொல்லி இருந்த பெரிய ஒரு செய்திப்பகிர்வு இன்றய தினம் இருக்கும் என்பதும்; அது நம் வேலைத்தலத்தில் இடம்பெறப்போவதாக அரசாங்கம் ஊடகங்களில் அறிவித்திருந்த 900 பேரின் Job cut  பற்றியதாக இருக்கும் என்பதும் காரணம். அது சம்பந்தமான தயார் படுத்தலில் Robi ஈடுபட்டிருக்கக் கூடும் என்பதால் அவரது பிரசன்னம் பற்றிய கரிசனை எதுவும் இல்லாமலே நம் வேலைகள் வழக்கம் போல ஆரம்பித்து விட்டன.

வேலைக்குக் கலைந்து போன கூட்டத்தின் அன்றய பேசு பொருளாக இருந்தது இரண்டு விடயங்கள்.

1. யார் யாரெல்லாம் நீக்கப்படக் கூடிய சாத்தியங்கள் இருக்கின்றன.
2. உலகக் கால்பந்து போட்டியில் அவுஸ்திரேலியாவின் இடம் எத்தகையதாக இருக்கும்.

 - இவை இரண்டும் தான்.

கூடவே Robi கடந்த வெள்ளியில் சொல்லிப் போன பியர் குடித்து கும்மாளம் போட்டு தூக்கத்தைத் தொலைத்து வேலைக்கு வந்து சினந்து வருத்தங்களையும் ஆபத்துக்களையும் வருந்தி அழைத்துக் கொள்ளாமல் சரியான தூக்கத்துக்கு சரியான நேரத்துக்கு நீங்கள் போனால் தான் சிறப்பாக அடுத்த நாள் கடமைகளை உற்சாகத்தோடு ஆற்ற முடியும். நீங்கள் எப்படி சுக ஆரோக்கியத்தோடு வேலைக்கு வந்தீர்களோ அதே ஆரோக்கியத்தோடும் சுகத்தோடும் வீட்டுக்கு நீங்கள் பத்திரமாகச் செல்வது மிக முக்கியம். உங்களைச் சார்ந்து ஒரு குடும்பம் இருக்கிறது. அது வேலையை விட முக்கியமானது. Have a safe day! என்று வெள்ளி மாலை நேரத்து வேலையை ஆரம்பித்து போனதுமான நிகழ்வும் நினைவுக்கு வராமல் இல்லை.

வேலை ஆரம்பித்து சுமார் 1 மணி நேரம் இருக்கும். இயந்திரசாதனங்கள் யாவும் எந்த ஒரு முன்னறிவித்தலும் இல்லாமல் நிறுத்தப் பட்டன. ஆபத்தை அறிவிக்கும் சிவப்பு விளக்குகள் எல்லா இடங்களிலும் ஒளிர்ந்தன. ஒரு பயம் கலந்த மெளனம் மளமளவென வியாபித்தது. அப்போதும் கூட இயந்திரசாதனம் பழுதடைந்து விட்டது. வேலைச்சுமை பலமடங்காகக் கூடக்கூடும் என்பதற்கப்பால் நினைக்க எதுவும் தோன்றவில்லை. வேலைத்தலத்து ஊழியர்கள் யாவரும் முகப்பு மண்டபத்துக்கு வந்தமருமாறு உள்ளார்ந்த தானியக்கி ஒலிபெருக்கி அறிவிக்க எல்லோரும் சென்றமர்ந்தோம்.

தொலைபேசிகளை அணைக்குமாறு அல்லது மெளன அதிர்வலையில் விட்டு வைக்குமாறு வேண்டப்பட்டோம்.

அறிவிக்கப்பட்ட செய்தி வேலைக்கு வந்த Robi McLean மாரடைப்பால் ஸ்தலத்தில் மரணமானார் என்பது தான்.

44 வயது.

கிறிஸ்டல் நீலக் கண்களும் பிங் ரோஜா இதழைப்போல தோலும் பொன்னிற கட்டையாக வெட்டப்பட்டிருக்கும் கேசமும் கொண்டிருந்த இளம் அதிகாரி.

சந்தோஷமும் உற்சாகமும் எல்லோரையும் சமாமாக நடத்தும் பாங்கும் புன்னகை பூத்த முகமும் பிரச்சினைகளை சுலபமாக நோ இன்றி தீர்த்து வைக்கும் வியத்தகு ஆழுமையும் கொண்ட புன்னகை பூத்த உருவம் மற்றும் பருவம்.

அவருடய புன்னகை பற்றி பலரும் சிலாகிப்பதுண்டு. அந்த மனிதனுடய புன்னகை உதட்டில் இருந்து உதிப்பதல்ல. அது இதயத்தில் இருந்து மலரும். அது யாருக்கு அளிக்கப்படுவதாக இருந்தாலும் அதில் ஒரு அந்தரங்க சுத்தியான அன்பு, அக்கறை, மகிழ்ச்சி என்று பல வாசங்கள் சேர்ந்திருக்கும். அதில் இவனோடு எதுவும் கதைக்கலாம் என்ற - பாதுகாத்து சரியான பாதையைக் காட்டுவான் என்ற நம்பிக்கையான செய்தி அந்த புன்னகையோடு பரிமாறப்பட்டிருக்கும்.

மணிக்கட்டு வரை பட்டின் பூட்டி காற்சட்டையின் உட்புறம் விடப்பட்டிருக்கும் சேர்ட்.  இடையிலே இடுப்புப்பட்டி. மற்றும் கழுத்திலே கழுத்துப் பட்டி. தனிக் கறுப்பு அல்லது தனி வெள்ளை சேர்ட். அது தான் எப்போதும் அவரின் தெரிவு.

பார்த்தவுடம் அதிகாரி என அறிய வைக்கும் நடை உடை பாவனை. ஆனால் வேலை, மனிதர்கள் என்று வந்து விட்டால் மாத்திரம் அவருக்கு எல்லா வேலையும் எல்லா மனிதர்களும் சமன் தான்.

நாம் வேலையோடு மல்லுக்கட்டிக் கொண்டு நிற்பதை எங்கேனும் தூரத்தில் நின்று கண்டு விட்டால் உடனே மணிக்கட்டில் இருக்கும் சேர்ட் பட்டினை களற்றி முழங்கை வரை இழுத்து விட்டு விட்டு  எந்த ஒரு தயக்கமும் இன்றி ஏதேனும் ஒரு ஜோக் ஒன்றை சொல்லி நம்மைச் சிரிக்கப்பண்ணி அதே நேரம் நம்மை விட துரிதமாக அந்த வேலையை செய்து நம்மை அசுவாசப்படுத்தி விட்டு மிக இயல்பாக மீண்டும் சேர்ட் பட்டினைப் பூட்டிக்கொண்டு போகும் அந்த ஆழுமை மறக்க முடியாதது.

அதில் 18 வயதில் வேலைக்குச் சேர்ந்து படிப்படியாக உயர்ந்த அனுபவம் மிளிரும்.

மிளிர்ந்தது.

ஆறுமாதங்களுக்கு  ஒரு தடவை மாறும் அதிகாரிகளுக்குள் கடந்த சில வருடங்களுக்கு முன்  நமக்கு வாய்த்திருந்த ஜூலிஎவனுக்குப் பிறகு நம் எல்லோருக்கும் ஏகோபித்த வகையில் பிடித்த ஒரு மனிதனாக அவர் இருந்தார்.

வாழ்க்கை என்பது அவ்வளவு தான்.

சூரியன் உதித்தது மறைந்தது.
நாள் ஒன்று வழமை போல நகர்ந்தது.
பசித்தது உண்டோம் கழித்தோம்.
உறங்கினோம் விழித்தெழுந்தோம்.
எல்லாம் வழமைக்கு மாறின.
இயந்திரங்கள் இயங்கின. வேலைகள் முடிந்தன.

Robi இல்லாமலே  இவை எல்லாம் நடந்தன; நடக்கின்றன. இனியும் நடக்கும்.

வாழ்க்கை என்பது அவ்வளவு தான்.

Robi என்றொரு மனிதன் நம்மோடு இருந்தான்; நல்லவனாய் எல்லோரது பிரியத்துக்குள்ளானவனாய் புன்னகை பூத்த முகத்தினாய் மனங்களில் நிலைத்திருப்பான் என்பதைத்தவிர வேறெந்தத் தடயங்களும் இனி இருக்கப் போவதில்லை.

இப்போது நினைவுக்கு வருகிறது  வைரமுத்து சொன்ன,

 “ நீ என்பது வேறொன்றுமில்லை; செயல்.”

சுமார் மூன்று மாதங்களுக்குள் வேலைத்தலத்தில் மாத்திரம் 4 மரணங்கள். அதில் இரண்டு வேலைத்தலத்திலேயே நிகழ்ந்திருக்கிறது. மற்றய நண்பன் விடுமுறை என்று போய் வராமலே விபத்தில் மரணமானான். அவனது முகத்தைக் கூட காண நமக்கு கொடுத்து வைக்கவில்லை. மற்றயவர் புற்று நோய் பற்றி மூன்று மாத இடைவெளியில் போய் சேர்ந்தார்.


காலப்போக்கில் இவர்கள் எல்லாம் நம் மனங்களில் இருந்தும் மறைந்து போகக் கூடும்.

காலமும் வாழ்க்கையும் நம்மை அப்படி விரட்டிக்கொண்டிருக்கிறது.

என்றேனும் ஒரு பொழுதில் - சாய்வு நாற்காலி மனிதராகி விடும் ஒரு நாளில் -  நம்மை யாரும் சீண்ட விரும்பாத தனிமை ஒன்று நம்மை வியாபிக்கும் அகால பொழுதொன்றில் - அப்படி ஒன்றுக்கு ஆள்பட வேண்டி இருந்தால்   - நம் கடந்த கால நினைவுகளைப் புரட்டிப் பார்க்கும் மூளை வளம் அப்போதொன்றில் இன்னமும் மிச்சம் இருந்தால் - அப்படி ஒரு பொழுதில் இந்த முகங்கள் நினைவுக்கு வந்து போகக் கூடும்.

வேறொரு பொழுதில் அமைதியும் சோகமுமாக என் வேலையில் ஆழ்ந்திருந்த பொழுதொன்றில் என் வியற்நாமிய தோழி ஆன்.வூ ( Anne. Vu) அவ் இடம் வந்தாள். அவளைக் கண்டதும் துளிர்த்த கண்ணீரை அவள் கண்டிருக்கக் கூடும்.

வாழ்க்கை ஒரு வட்டம்.

மூச்சு எடுக்கிறோம். மூட்சை விடுகிறோம் மீண்டும் எடுக்கிறோம். தண்ணீர் அருந்துகிறோம். வெளியேற்றுகிறோம். மீண்டும் அருந்துகிறோம். உயிரினங்களும் அவ்வாறு தான். ‘வீட்டில் ‘ இருந்து வருகிறோம். ‘ படிக்கிறோம்’ மீண்டும் நம் வீட்டுக்கு போவோம். வாழ்க்கை ஒரு வட்டத்தில் சுழல்கிறது. எதை நாம் இங்கு படிக்க வந்திருக்கிறோம் என்ற விடயத்தில் தெளிவிருந்தால் வருந்த எதுவுமில்லை என்ற தான் நம்பும் பெளத்த சித்தாந்தத்தை முதுகில் தட்டி சாதாரணமாய் சொன்ன படி நகர்கிறாள்.

வாழ்க்கை நகர்கிறது.

நேற்று போல் இன்று இல்லை
இன்று போல் நாளை இல்லை
நேற்று போல் இன்று இல்லை
இன்று போல் நாளை இல்லை
அன்பிலே வாழும் நெஞ்சில் ஆஆஆஆஆ
அன்பிலே வாழும் நெஞ்சில்
ஆயிரம் பாடலே
ஒன்றுதான் எண்ணம் என்றால்
உறவு தான் ராகமே
எண்ணம் யாவும் சொல்ல......வா

சொல்லவா?

இலக்கிய சந்திப்பு - 20 -