Saturday, May 19, 2018

புத்தகங்களும் மூன்று கேள்விகளும்...
கடந்த ஏப்பிரல் 23ம் திகதி புத்தக தினத்தைக் கொண்டாடினோம். 

அது குறித்த எந்த விழிப்புணர்வும் எனக்கு இருக்கவில்லை.- ஒரு அரச வானொலி ஊடகம் அது குறித்து வினாக்கள் தொடுக்கும் வரை.- அந்த ஒலித்தொகுப்பைக் கேட்ட போது தான் வில்லியம். ஷேக்‌ஷ்பியரின் பிறந்த நாளும் இறந்த நாளும் ஒன்றாக அமைந்த ஏப்பிரல் 23ஐ புத்தக தினமாக யுனெஸ்கோ பிரகடனப்படுத்தி இருந்தது என்பது தெரியவந்தது. கூடவே ஷேக்‌ஷ்பியர் ஆங்கில இலக்கியத்துக்கு ஆற்றிய பங்களிப்புக் குறித்தும் ஆங்கிலம் என்ற மொழிக்கு அவர் உருவாக்கிக் கொடுத்த சுமார் 2000 வரையான புதிய சொற்கள் குறித்தும் அவர்  எப்படி ஆங்கில மொழியை தன் பங்களிப்பால் வளமாக்கி வைத்தார் என்பது பற்றியும் புதிய தகவல்களைப் பெற முடிந்தது.

தமிழுக்கு அப்படி வளம் சேர்த்தோர் யார் யார் எல்லாம் என்பது குறித்த சிந்தனை அங்கிருந்து ஆரம்பித்தது எனக்கு....

அது அவரவர் சிந்தனை, ஆழம், அறிவு, தேடல், பார்வைகள், ஆர்வம், இருப்பு குறித்த பின்னணி, அனுபவங்கள்  இவைகள் காரணமாக  வேறுபடலாம். அவைகளை அவரவர் சிந்தனைக்கு விட்டுவிடுவது பாதுகாப்பனதும் சிறந்ததுமாகும். இல்லையேல் இலங்கையர் இவர் தான் என தமிழ் நாட்டினர் இவர் தானென இலக்கு திசைமாறிப் போய் விடும்.

இப்போது புத்தகங்களில் இருந்து சடுதியாக தமிழுக்கு திசை மாறினோமே அது மாதிரியாக....

{ ஆங்கிலேயர்கள் என்ற ஓர் இனம் உருவாகியது குறித்தும் ஆங்கில மொழி உருவாகியது குறித்தும் விபுலானந்த அடிகளார் ஆங்கில வாணி என்றொரு கட்டுரையில் அழகாக எழுதிச் செல்கிறார். ஆர்வமூட்டக் கூடிய அந்தக் கட்டுரையில் முழு உலகிலும் அப்பப்போ சம காலத்தில்  நடந்த சம்பவங்களை சொல்லிச் செல்வதனூடாக முழு உலக அரங்கினையும் அங்கே ஒரு மேடை நாடகத்தைப் பார்க்கும் பாங்கிலான மொழிநடையில் விபரித்துச் செல்லும் அழகில் அவரின் பண்பு நலமும் மிளிரக் காணலாம். ஓரிடத்தில்,
 ’திருநாவுக்கரசு சுவாமிகள் நமது நாட்டிலிருந்த காலத்திலே அராபி நாட்டு மக்கா மாநகரிலே முகம்மது நபி அவதரித்தார்.’எனச் சொல்லிச் செல்வது சும்மா ஒரு உதாரணம் தான். ( இலக்கியக் கட்டுரைகள்; விபுலானந்த அடிகள், ஆங்கில வாணி .1973; பக்.84) }

அது நிற்க,

நாங்கள் புத்தகங்களுக்கு வருவோம்.

அவர்கள் மூன்று கேள்விகளைக் கேட்டார்கள்.

1. இதுவரை நீங்கள் படித்த புத்தகங்களுள் உங்கள் மனதில் இன்றும் பதிந்து போயிருக்கிற புத்தகம் எது? ஏன்?

2. அண்மையில் நீங்கள் படித்த அல்லது படித்துக் கொண்டிருக்கிற புத்தகம் எது?

3. புத்தகம் வாசிக்கும் பழக்கம் குறைந்து விட்டது என்ற கூற்றுக் குறித்து உங்கள் அபிப்பிராயம் என்ன?

நீங்களும் கொஞ்சம் சொல்லுங்களேன்.... உடனடியாக இவற்றுக்கு பதில் வரவேண்டும் என்பது நிபந்தனை.:)

.........................

என்னைப் பொறுத்தவரை என் மனதில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய புத்தகம் எது என்று கேட்டால் அது ராகுல சங்கிருத்தியாயன் எழுதி தமிழில் மொழிபெயர்ப்பாக வந்த ‘வொல்காவில் இருந்து கங்கை வரை’ என்ற புத்தகத்தை மிக உறுதியாகச் சொல்லுவேன். ஏனென்று கேட்டால் ஒரு புத்தகம் ஒரு மனிதனின் சகல இருப்புகளையும் மறுசிந்தனைக்கு உட்படுத்த வைக்கும் ஒரு ரசவாதத்தை அது நிகழ்த்தியது தான்.

ஒரு ஒட்டுமொத்த மானுடத்தின் வளர்ச்சியினை மிருகமாக நாம் தோன்றி வாழ்ந்த காலத்தில் இருந்து ஒரு யுகப் பயணமூடாக நம்மை அழைத்துச் சென்று, எப்படி மனித இனம் படிப்படியாக விலங்குகளில் இருந்து வேறுபடத் தொடங்கியது; சந்தித்த சவால்கள் எத்தனை; பெண் மனித விலங்கின் ஆற்றலும் வழிநடத்தலும் எவ்வாறு இருந்தது; பின்னர் நிலையான குடியிருப்புகளும், பயிர்ச்செய்கையும்,ஆயுதங்களும், மொழியும் உருவாகிய பாங்கு; போர்கள்; அரசு ஒன்றின் உருவாக்கம்; குழு வாழ்க்கை இயல்பு; தோன்றிய பின்னணி, காலப்போக்கில் பொருளாதாரமும் அதிகாரமும் அரசும் எவ்வாறு தோற்றம் பெற்றது; முக்கியமாக சமயங்களின் உருவாக்கம் தோன்றியதன் உள்லார்ந்த அர்த்தங்கள்......எனத் தொடரும் அது கதை உருவில் வசீகரமாக விபரித்துச் செல்லும் பாங்கில் வடிவமைக்கப் பட்டிருந்தது.

உங்கள் முழு நம்பிக்கைகளையும் பார்வைகளையும் மறுவாசிப்புக்கும் மறுபார்வைக்கும் உட்படுத்த வல்ல அந்தப் புத்தகம் என் அறிவை விசாலிக்கச் செய்ததில் - அது கூடத் தவறு - மறு பார்வைக்கு - முழு சமூகமும் பண்பாடும் வரலாறும் வாழ்க்கைமுறையும் கட்டமைத்து நம்பவைக்கப் பட்ட சகல கருத்துருவாக்கத்தையும் புத்தகம் ஒன்றால் புரட்டிப் போட முடியும் என்று நான் அறிந்து கொண்ட வகையிலும் இந்தப் புத்தகம் என்னால் மறக்க ஒண்ணாதது. அறிவுக்கு கிடைத்த பெரு விருந்து அது! இந்தப் புத்தகத்தை நான் என் பல்கலைக்கழக நாட்களில் வாசித்திருந்தேன்.

கத்தி இன்றி ரத்தம் இன்றி புரட்சி ஒன்று நடக்குது பார்!

ஆனால், அதன் பின் வாழ்க்கை வெள்ளத்தில் நீந்தும் பல்லாயிரம் கோடி உயிர்களுள் ஓடும் ஒரு சிறு காய்ந்த சருகு நான் என்ற ஞானத்தை வாழ்க்கையும் கீழ்க்கண்ட சங்கப் பாடலும் வழங்கிய பின்,

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (புறம்: 192)

இப்படி ஒரு ஞானம் வந்த பிறகு; அதாவது வெள்ளத்தின் வழி ஓடும் ஒரு காய்ந்த சருகு ஒன்றின் பயணம் தான் வாழ்க்கை என்பதை அனுபவம் சொல்லித் தந்த பிறகு, வாசித்த ஒரு புத்தகம் மனதை சாந்தப் படுத்தியதில்; வருடிக் கொடுத்ததில்; ஆதரவு தந்ததில் பல கேள்விகளுக்கான விடைகளை நம் அறிவுக்கு ஏற்ற விதத்தில் விளக்கம் தந்ததில் என்னை மிகவும் கவர்ந்தது.

அந்தப் புத்தகம் ‘ தன்னை அறியும் விஞ்ஞானம்.’ ஹரே ராமா ஹரே கிருஷ்னா இயக்கத்தாரின் வெளியீடாக வந்த இந்தப் புத்தகம் கூட ஒரு மொழிபெயர்ப்பு தான். மிக அருமையான மொழிபெயர்ப்பு என்பதைச் சிறப்பாகக் குறிப்பிட வேண்டும். விஞ்ஞானம் விட்ட வெற்றிடத்தை மிகச் சிறப்பாக நிரப்பவல்ல இந்தப் புத்தகம் உங்கள் ஆண்மா கேட்கும் கேள்விகளுக்கு ஒரு குழந்தைக்கு தாய் காட்டும் பரிவோடு விளக்கங்களைத் தருகிறது. அதில் எந்த ஒரு மதப்பரப்பல் அறிகுறிகளும் இல்லை. இந்து தத்துவத்தின் அடிப்படையும் அது தானே! ‘தென்னாடுடய சிவனே போற்றி; எந் நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ என்ற விரிந்த அனைத்தையும் ஏற்றுக் கொள்ளும் harmony கோட்பாட்டுச் சிந்தனை அங்கும் தொனிக்கக் காணலாம்.

அது, அதாவது, இந்த ‘உலகம் தழுவிய சிந்தனைக் கோட்பாடு’ ஒரு தமிழ் கோட்பாட்டுச் சிந்தனையும் கூட. இது குறித்தே ஒரு தனிப்பதிவு எழுதலாம்....

இதில் என்னை நானே உள்நோக்கிப் பார்க்கத் தூண்டியதும் முடிந்ததுமான விஷயம் என்னவென்றால் இந்த இரண்டு புத்தகங்களும் ஒன்றுக்கொன்று எதிரெதிரான விடயங்களைப் பிரதி பலிக்கின்றன என்ற விசித்திர தோற்றப்பாடு தான். என்னே ஒரு contrast!

சிலவேளைகளில் மனதுக்கும் அறிவுக்கும் போட்டி ஒன்று வருமே அது மாதிரி. ஒன்று அறிவைத் திருப்திப் படுத்தியது; மற்றயது மனதைத் திருப்திப் படுத்தியது...

சரி, இந்த ஒரு கேள்விக்கே இப்படி ஒரு நீண்ட பதிவு ஆகி விட்டதால் இத்தோடு நிறுத்திக் கொள்ளுகிறேன்.

இந்த முதலாவது கேள்விக்கான உங்கள் அபிப்பிராயங்கள் கருத்துக்களை அறிய ஆவலோடு இருக்கிறேன்.

Wednesday, April 11, 2018

தெரியாதோ நோக்கு தெரியாதோ.....

இந்தப் பாடல் சூரியகாந்தி திரைப்படத்தில் மனோரமா பாடிய பாடல்.

தெரியாதோ நோக்கு தெரியாதோ....

என்ன செய்வது? சில விடயங்கள் தெரிந்தாலும் வயதுச் சேட்டைகளில் இருந்து தப்பி விட முடிகிறதா என்ன?

இவை எல்லாம் பருவத்தோடு வருகிற இயற்கையான குணங்கள் தானே. இது பற்றி இராமாயணத்திலே ஒரு சுவையான சம்பவம் இருக்கிறது.இராவண வதம் முடிந்து விட்டது. களைப்பும் ஆயாசமுமாக அனுமரின் மடியில் இராமர் துயில் கொண்ட படி இருக்கிறார்.அவர் அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கும் போது அனுமார் தன் வாலின் நுனியை எடுத்து தூங்கிக் கொண்டிருக்கிற இராமரின் காதுக்குள் புகுத்தி விட்டார். உடனே துடித்துப் பதைத்து எழுந்த ராமன் ‘என்னம்மா இப்பிடிப் பண்ணிறீங்களேம்மா’ என்ற கணக்காக அனுமரைப் பார்த்து இது என்ன அனுமான்? என்று கேட்க, ”நான் என்ன செய்வேன்? இது என் இயற்கை புத்தி” என்றாராம்.

விவேக சிந்தாமணியிலே ஒரு பாடல் வருகிறது.

”கற்பூர பாத்தி கட்டி கஸ்தூரி எருப் போட்டுக் கமழ் நீர் பாய்ச்சி
பொற்பூர உள்ளியினை விதைத்தாலும் அதன் குணத்தைப் பொருத்தக் காட்டும்
சொற்போதையர்க்கு அறிவு இங்கு இனிதாக வருமெனவே சொல்லினாலும்
நற்போதம் வாராது அங்கு அவர் குணமே மேலாக நடக்கும் தானே”

என்கிறது அது.

அது போலத் தான் காதலும் இயற்கையாய் வருவது. அபூர்வமாக வானொலிகளில் ஒலிக்கும் இந்தப் பாடலைக் கேட்டுப் பாருங்கள். கவிஞர் எப்படி எல்லாம் இந்தக் காதல் சேட்டைகளை எல்லாம் உற்றுக் கவனித்திருக்கிறார் என்பதை பாடல் வழி காணலாம்.தெரியாதோ நோக்கு தெரியாதோ
Film : சூர்ய காந்தி
singer : manorama
music: MSV
Lyrics : Vaali
song : theriyadho nokku


தெரியாதோ நோக்கு தெரியாதோ
சின்ன பருவத்திலே காதலிப்பது
பைத்தியம்போல் தோணுமுன்னு தெரியாதோ

தெரியாதோ நோக்கு தெரியாதோ
சின்ன பருவத்திலே காதலிப்பது
பைத்தியம்போல் தோணுமுன்னு தெரியாதோ

அவாளவா ஆத்துக்குள்ளே ஆயிரம் இருக்கும்
காதல் ஆரம்பிக்கும் நேரம் முதல் நாடகம் இருக்கும்
தானா சிரிப்பா அவ தனியா நடப்பா
ஏதோ நினைப்பா சும்மா பேசிண்டே இருப்பா

தெரியாதோ நோக்கு தெரியாதோ
சின்ன பருவத்திலே காதலிப்பது
பைத்தியம்போல் தோணுமுன்னு தெரியாதோ

பூஜைக்காக போறவம்போல் ஆம்பிளை போவான்
அங்கே பூஜை தேடி பொம்மனாட்டி நேரத்தில் வருவா
சாமியக்கண்டாளா அவ பூஜயக்கண்டாளா
அந்த சாமியக்கண்டாளா அவ பூஜயக்கண்டாளா
வந்த மூர்த்தியக்கண்டாளா பையன் மூஞ்சியக்கண்டாளா

தெரியாதோ நோக்கு தெரியாதோ
சின்ன பருவத்திலே காதலிப்பது
பைத்தியம்போல் தோணுமுன்னு தெரியாதோ

படத்த பாத்து பட்ட பாடு நடத்திப்பாக்குறான்
சினிமாபடத்த பாத்து பட்ட பாடு நடத்திப்பாக்குறான்
அவ பழைய கால டூயட் பாட்ட பாடி பாக்கறா
மனமோகனா....
அங்கே வாடுதே கனவெனும் என் மனம்
தரையில் உருள
அவன் தலயைத் தடவுறான்
இவ தரையில் உருளரா
அவன் தலயைத் தடவுறான்
அறையில் நடப்பதை அவ அம்பலமாக்குறா

தெரியாதோ நோக்கு தெரியாதோ
சின்ன பருவத்திலே காதலிப்பது
பைத்தியம்போல் தோணுமுன்னு தெரியாதோ

தெரியாதோ நோக்கு தெரியாதோ
சின்ன பருவத்திலே காதலிப்பது
பைத்தியம்போல் தோணுமுன்னு தெரியாதோ


Tuesday, April 3, 2018

நாட்டுப் புற (பாடல்களில்) ‘யாழ்ப்பாணம்’


எந்த ஓர் இனத்தினதும் உண்மையான அழகை நாம் கிராமங்களில் தான் காணலாம். தாலாட்டு, காதல், கிண்டல், தொழில் பாடல் விளையாட்டுப் பாடல்கள், வேடிக்கைப் பாடல்கள், ஒப்பாரிப் பாடல்கள் என விரியும் கிராமத்தார் தம் வாழ்க்கைக் கோலங்களில் கொட்டிக் கிடக்கும் அப்பளுக்கற்ற அழகுகள் தனித்திறம் வாய்ந்தவை.

அண்மையில் தேடிக்கொண்டு போன சிலவற்றுக்குள் அகப்பட்டுக் கொண்டன சில யாழ்ப்பாணத்தானின் வாழ்வியல் கோலங்கள்.

“எண்சாண் உடம்புக்குச் சென்னி சிறந்திடும்
என்றே உரைப்பர் அது போல
பொன் சேரிலங்கைச் சிரமெனவே வரும்
புண்ணியமோங்கிடும் யாழ்ப்பாணம்”

எனச் சின்னத்தம்பிப் புலவர் பாடிய யாழ்ப்பாணத்தின் பிரதான குறியீடாய் அமைவது பனை மரம். அதன் சிறப்பையும் அவர் இவ்வாறு உரைப்பார்.

“ கோள்நிலைகள் மாறி மாரி மழை வாரி வறண்டாலும்
கொடிய மிடி வந்து மிகவே வருத்தினாலும்
தான் நிழலளிதுயர்  கலாநிலயமே போல்
தந்து பல வேறு பொருள் தாங்கு பனையோங்கும்”

நெய்தல் நிலப்பரப்பு சுற்றி வர! சுண்னக்கற்பாறை சார்ந்த நில அமைப்பு. கடுமுயற்சியினால் செய்யப்படும் விவசாயம். ஆண்டான் அடிமை குடிமை வழி வந்த இறுக்கமான சாதி,சமூக அமைப்பு. இந்தப் பிரதேசத்து விவசாயக் குடிகள் பற்றி மகா கவி இப்படிச் சொல்வார்.

“மப்பின்றிக் கால மழை காணா மண்ணிலே
சப்பாதி முள்ளும் சரியாய் விளையாது
ஏர் ஏறாது காளை இழுக்காது
எனினுமந்தப்பாறைபிளந்து
பயன் விளைப்பான் என்னூரான்“

இந்த வரண்டு போன பூமியில் கல்வி ஒன்றே முன்னேறத்தக்க ஒரே மார்க்கமாய் இருந்ததாலோ என்னவோ இம் மக்கள் கல்வியில் பெரு நாட்டமும் மூளை சாலிகளாகவும் இருந்தனர். அதனால் வாத்தியார்களுக்கு சமூகத்தில் நல்ல பெருமையும் மரியாதையும் கூட இருந்தது. திண்ணைப்பள்ளிக் கூடங்கள் இருந்த காலத்தில் மாணவர் ஒருவர் ஆசிரியரிடம் இருந்து விடைபெறும் பாங்கில் அமைந்த இந்தப் பாடலைப் பாருங்கள்.

“காலமை வந்தோமையா
கருத்துடம் பாடம் பெற்றோம்
சீலமாய் எழுதில் கொண்டோம்
தேவரீர் மனதிற்கேற்பக்
கோலமாய் நீறு பூசிக்
குழந்தைகள் பழஞ்சோறுண்ணச்
சீலமாய் அனுப்புமையா
தேவரீர் மனதிற்கேற்ப”

இங்கத்தய மாம்பழமும் நல்ல ருசி என்பர். இதன் சுவையை கவிஞர் சச்சிதானந்தன் இப்படிச் சொல்வார்.

“ நீதி பிழைப்பிக்கும்: நேர்மை தவறுவிக்கும்
பாதிப் படிப்பில் பதவி தரும் - ஏதுக்கும்
ஓம் பட்டிசைவிக்கும் ஒன்றன்றோ யாழ்ப்பாண
மாம்பழத்துத் தீஞ்சுவையின் மான்பு”

இங்கிருந்த பனையில் இருந்து செய்யப்பட்ட கைவினைப் பொருட்களை பேரா.சி. கணபதிப்பிள்ளை இப்படிச் சொல்வார்

“அழகுறு வண்னம் அமைவுறப் போட்டுத்
தொழிலமை வனிதையர் திறமையாலிழைத்த
பெட்டியாய் குட்டான் பெயர் பெறு கதிர் பாய்
அடுக்குப் பெட்டியும் சுடும்
பிட்டவி நீத்துப் பெட்டியும்  சுண்டும்
பனையின் குருத்தை பதனமாய் வார்த்து
பன்னிறம் தீட்டிய பன்னோலை கொண்டு
கைவல் இளையர் கருதி இளைத்த
ஆனைப் பெட்டியும் அழகிய தேரும்
கொட்டைப் பெட்டியும் கிலுக்குப் பெட்டியும்
எனவாங்கு,
இன்னணம் நெருங்கிடு பன்னங் கடைகளும்”

எனத் தொடரும் அப்பாடல் பனையோலையில் இருந்து பெறப்பட்ட பயன்களைச் சொல்லும். பனையின் பயனை மட்டுமல்ல ஒருவர் பனையில் ஏறி பனங்கள்ளை எடுக்க கீழே ஒருவர் நின்று மீசை வருடும் காட்சி ஒன்றை என்ன அழகாய் சொல்கிறார் என்று பாருங்கள்.

“நரை தோல் இயனம் அரையில் கட்டி
அதன் கீழ் முட்டி அசைதர விட்டு
மார்போடணையத் தோலது தூக்கி
உரனுரு தளை நார் காலினை மாட்டிக்
கால் மடித்து உன்னிக் கரு நெடும் பனைமிசை
பாலை தட்டிப் பார்த்துச் சீவி
ஏர் தரும் ஊசலோடு இயனத்தசையும்
இன் கள் முட்டியொடு இறங்கும் போதில்
அடி மரத்திருந்து நுனி வரை நோக்கி
நாநீர் ஊறி உதடு வருடி
பெரு மகிழ்வோடு பிளாவை ஏந்தி
அருவிலை கொடுத்து நறவினை மாந்திக்
களிப்புறு மாக்கள் விளிப்புறு கும்பலும்”

எனத்தொடர்கிறது அப்பாடல். நாடோடிப் பாடல் ஒன்று கள்ளை,

“பட்டாங் கத்தி பள பளென
பாலையன் கோட்டை நறறென
பனையும் கருத்திருக்கும்
பனை வட்டும் சிவந்திருக்கும் - அதிலே
இறக்கிய நீரைப் பருகினால்
தலை கிறுகிறுக்கும்”

எனக் கூறுகிறது.

நையாண்டியும் நகைச்சுவையும் கலந்து வடமராட்சிப்பகுதியில் வழங்கிவரும் இந்தப்பாடல் ‘கள்ளுக்கடவுளை’ இப்படிப் போற்றுகிறது, ( யாழ்ப்பாணப் பண்பாடு; மறந்தவையும் மறைந்தவையும், பேரா.எஸ்.சிவலிங்கராஜா, குமரன் பதிப்பகம், 2014, பக்.109 -10.)

‘ தேடுதற்கும் வகையறியேன் - உன்
திருக்கோயில் தவறணையைத் தேடிக்கொண்டு
ஓடிவரும் பக்தர்க்கு குறைவே இல்லை
உன்னுடய கிருபையினைச் சொல்லிச் சொல்லிப்
பாடுதற்கும் வகையறியேன் - பாளை வேந்தா!
பாவிகளை மகிழ்விக்கும் பான தேவா!
நீடுலகில் எம் போன்ற ஏழைகட்கு
நீயின்றி யாருதவி சொல்லுமையா!’

பஞ்ச புராண வடிவில் அமைக்கப்பட்ட அடுக்கில் மேற்கண்டது தேவாரமெனவும் கீழே வருவது புராணம் எனவும் அமைந்திருக்கிறது.

‘ சண்டையிலே பிறப்பாய் போற்றி
சல்லியைப் பறிப்பாய் போற்றி
பண்டைய முதல்வா போற்றி
பாளையில் பிறப்பாய் போற்றி
மாதரைக் கெடுப்பாய் போற்றி
கண்டவர் சிரட்டை ஏந்தும்
கடவுளே போற்றி போற்றி’

என்று சொல்லிப் போகும்.

இந்த நாடோடிப் பாடல்களின் அழகு அதன் எளிமை; இயற்கையாய் அமைந்து விடும் எதுகை மோனை - இவைகள் தான். அவை நற்சுவை பயப்பன. இந்த வரிகள் நாடோடிப் பாடல்களின் ரசனைக்காக!

“ சிற்றொழுங்கையாலே செருப்பழுது
போற செப்பம்
ஆரென்று பார்த்தேன்
என் அழகுதுரை மாமி மகன்”

“ஏன் காணும் நிற்கிறீர் றோட்டிலே
கொஞ்சம் இளைபாறிப் போங்காணும் வீட்டிலே”

இவை நிற்க,

ஆனால் இவ்வாறு இறங்கி வரும் கள்ளினை குடித்த உயர் குடியினர் இவற்றைப் பெற்றுக் கொடுத்த மக்களை கண்ணியமான முறையில் போற்றவில்லை: மதிக்க வில்லை. அது பற்றி ஆங்கிலேயர் காலத்துக் குறிப்புகளில் நிறைய சான்றுகள் உண்டு. உயர்சாதியினருடய கிணறுகளில் தண்ணீர் அள்ளக் கூடாது என்றும்; பெண்கள் காதணிகள் அணியக் கூடாதென்றும்; உயர் சாதியினருக்கு அவர்கள் வழங்குகின்ற மரியாதைகளில் ஏதொரு குறையும் இருக்கக் கூடாதென்றும்; திருமணப் பந்தலில் வெள்ளைத் துணியால் அலங்காரம் செய்யக் கூடாதென்றும் சட்டங்கள் அமுல் படுத்தப் பட்டிருந்தன.

இத் தாழ்த்தப்பட்ட மக்கள் தமக்கென தனியாக ஒரு கிணறு கட்டிய போது அதற்குள் நஞ்சினை ஊற்றிய சம்பவம் இம் மக்கள் எவ்வாறான துவேச மனப்பாண்மையைக் கொண்டிருந்தனர் என்பதற்குத் தக்க சான்றாகும். தாழ்த்தப் பட்ட சமூகத்தைச் சார்ந்த பிள்ளைகள் பள்ளிக் கூடங்களில் படிக்க அனுமதி கிட்டி இருக்கவில்லை.  இந்தப் பிள்ளைகள் எப்படியான கஸ்டங்களை அந்த ஆதிக்க சமூகத்தில் பெற்றிருந்தனர் என்பதற்கும் அவர்களை வளர விடாமல் தடுத்ததில் எத்தகைய மூர்க்கத்தனமான கொள்கைகளை உயர்சாதியினர் பின் பற்றினார்கள் என்பதற்கும் பின் வரும் ஆறுமுக நாவலரின் கருத்து தக்க சான்று.


ஆறுமுகநாவலர் பின்வருமாறு எழுதுகிறார்: ’வண்ணார்பண்ணையிலுள்ள வெஸ்லியன் மிஷன் இங்கிலீசுப்பள்ளிக்கூடத்தில் ஒரு வண்ணாரப்பையன் மூன்று நான்கு வருஷம் படித்தவன். இவ்வருஷத்திலே மற்றப் பிள்ளைகள் ‚ இவ்வண்ணானை எங்களோடிருத்திப் படிப்பிக்கின் நாங்கள் இப்பள்ளிக்கூடத்தை விட்டுவிடுவோம்’ என்றார்கள். அதுபற்றி முதலுபாத்தியார் தாங் கிறிஸ்தவராயிருந்தும், வண்ணானைத் தள்ளிவிட்டார். வண்ணான் பறங்கித் தெருவில் இருக்கிற வெஸ்லியன் பாதிரியிடத்தே போய், தனக்கு கிறிஸ்து மதமே சம்மதமென்றும், தனக்கு ஞானஸ்நானம் செய்து தன்னை அங்குள்ள வெஸ்லியன் பள்ளிக்கூடத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்றும் வேண்டிக்கொண்டான். பாதிரியார் தாம் அதற்கு உடன்பட்டும், அவனைச் சேர்த்துக்கொள்ளுமபடி தமக்குக் கவர்மெண்ட் ஏசண்டு எழுதிய கடிதம் பெற்றும், அப்பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளும் சுதேச குருமாரும் உபாத்தியாயர்களும் உடன்படாமையால், வண்ணானைச் சிலகாலம் அடிக்கடி அலைத்துப் பின் ஓட்டிவிட்டார். அவன் இப்போது நெடுந்தூரத்திலுள்ள கத்தோலிக்கப் பள்ளிக்கூடத்திலே படிக்கிறான்.
அப்பள்ளிக்கூடத்திற்றானே 1847ஆம் வருடம் ஒரு நளப்பையன் படித்தலைக்கண்டு ஏறக்குறைய ஐம்பது பிள்ளைகள் ஓட்டமெடுக்கவும் அந் நளப்பையனைத் தள்ளாத பாதிரியாரைப் பித்தரென்று நினைத்தரோ! நளவனிலும் தாழ்ந்தசாதி வண்ணானென்று கொண்டாரோ! சாதி வேற்றுமை பாராட்டுதல் கிறிஸ்து நாதருக்குஞ் சம்மதமென்று விவிலிய நூலில் எங்கேயாயினும் இப்போது கண்டாரோ? வண்ணானுடைய ஆன்மா பரமண்டலத்தில் இடம்பெறாதென்று தேவதூதன் சொப்பனத்தில் வந்து சொல்லக்கேட்டாரோ! தேவவாக்கினும் பெரிது தம்மைச் சேவிக்குஞ் சுதேச குருமார், உபாத்தியாயர்கள் வாக்கென்று தெளிந்தாரோ! வண்ணானைப் பற்றி மற்றப் பிள்ளைகளெல்லாம் ஓடிவிட்டால், அவர்கள் இருக்குஞ் சம்பளத்தினாலும் அவர்கள் பொருட்டுக் கவர்மெண்டார் உதவும் பணத்தினாலும் தமது பை நிரம்பாதேயென்று பயந்து விட்டாரோ! யாழ்ப்பாணத்திலே சாதி வேற்றுமை அறுத்துக் கிறிஸ்து மதத்தை நிலைநாட்ட வல்லவர்கள் பொருள்வாஞ்சைப் பிசாசா வேசிகளாகிய இந்தப் பாதிரிமாரும் சுதேச குருமாரும் தானோ! சபாசு! சபாசு!’

19ம் நூற்றண்டின் பிற்பகுதியில் எழுந்த பாடல் ஒன்று

‘வண்ணார் வடுகர் பணிக்கர் பண்டாரம்
மடப்பள்ளியர் பரதேசிகள் சட்டையும்
எண்ணுஞ் சரிகையும் உறுமாலும் போட்டிப்போ
யான் பிரபென்கிறார் பாருமடி’

எனப் பாடுதல் காண்க.

இத்தகைய சாதித்தன்மைகள் இருந்தது மாத்திரமல்லாமல் உயர் சாதியினர் தமக்குள்ளும் அடிபாடுகளைக் கொண்டிருந்தார்கள். அவற்றை நாசுக்காகச் சில பாடல்கள் ஆங்காங்கே சொல்லிச் செல்கின்றன. பக்தியைப் பாட வந்த ஒருவர் அதற்குள் சமூகத்தை பொதித்து வைத்துப் பாடி இருக்கும் இந்தப் பாடலைப் பாருங்கள்.

“ கான மயிற் செங்காட்டுக் கோழி
கடுவிடத்திற் கரந்துறையும் கரிய நாகம்
ஞான விழி யோகியரிற் தூங்கும் பூனை
நாவிரண்டு கூறுடைய உடும்பொடு, ஆடு
போன வழி நனைய அழும் ஓநாய் இந்தப்
பூவுலகை தலைகீழாய் பார்க்கும் வெளவால்
ஆன இவை எல்லாம் அடியாராகி
ஆகடியம் செய்வதுமுன் ஆடலோ சொல்”

யாழ்பாணத்து மக்கள் வேத சமயத்தை இலகுவாக ஒப்பவில்லை. தன் குடும்பத்தால் ஒதுக்கப் பட்ட பெண் ஒருத்தி ஒரு சாவீட்டில் இப்படி ஒரு ஒப்பாரி வைக்கிறாள். இரு சமயத்தாருக்கும் இருந்த அன்பின் ஊடலை இந்த சாவீட்டுப் பாடல் ஒன்று இவ்வாறு சொல்கிறது.

“ என்ர ஆத்தை, நீ வேத சமயமென
இவை
விரும்பி அழ மாட்டினமாம்
நாங்கள் சைவ சமையமெணை
என்னோட சொருகி அழ மாட்டினமாம்
ஊர் தேசம் விட்டாய்
என்ர ராசாத்தி
உறவுகளைத்தான் மறந்தாய்
மேபிள் துரைச்சி எண்டு
இஞ்ச
மேட்டிமைகள் பேசுகினம்
ஊரும் அழவில்லையெணை
என்ர ராசாத்தி
உன்ர உறவும் அழவில்லையெணை”

இவ்வாறு வேத சமயத்துக்கு மாறிய பெண்ணொருத்தியின் உறவுக்காரர் அவர்களைப் பார்த்து தம் நடத்தை வேறுபாடுகளைக் சோகத்தோடு கலந்து துக்கப்பகிர்வு பாடல்களூடு சொல்லக் காணலாம். மேலும்,

“படலையிலே ஆமணக்கு
என்ர ராசாத்தி
நீ பெத்தவைக்கு
நான் பாவக்காய் ஆகினனே!
வேலியிலே ஆமணக்கு
என்ர ராசாத்தி
நீ பெத்தவைக்குநான்
வேப்பங்காய் ஆகினனே!

தன் சகோதர முறையானவர்களை தம் தாயைச் சாட்டி “நீ பெத்தவைக்கு” என்று சொல்வதைக் காண்க. மற்றும் ராசாத்தி, கிளி, குஞ்சு, செல்லம் போன்ற பெயர்கள் பொதுப் பயன் பாட்டில் இருப்பதையும் இப்பாடல் புலப்படுத்துகிறது.

தாய் வீட்டு ஒப்பாரி ஒன்று இப்படிப் போகிறது.

“ என்ர ஆத்தை
நீ
வாரி வரத் திண்டிருந்தன்
என்ர
வண்ண வண்டி வாடுதணை
என்ர ஆத்தை
நீ
கோலி வரத் திண்டிருந்தன்
என்ர கோலவண்டி வாடுதணை”

இதில் ஆத்தை என தாயைக் குறிப்பதனையும் எணை என வழங்கும் பேச்சொலியினையும் காணலாம்.

இன்னொருத்தி சாவீட்டில் இப்படி கோவித்துக் கொள்கிறாள்.

”சொருகி வச்ச ஏப்பை எல்லாம்
இப்ப
சோறள்ள வந்ததெணை
போட்டுடைச்ச கோழி முட்டை
இப்ப
போர்ச்சேவல் ஆச்சுதணை”

இறந்து போன தன் பெற்றோருக்கு தன் நிலையைப் போய் சொல்லும் படி சாவீடொன்றில் ஒரு பெண் இறந்தவரைப் பார்த்து இப்படி ஒரு விண்ணப்பம் வைத்து ஒப்பாரி வைக்கிறாள்

“ என்ர அப்பு
நீ போய் சொல்லணை
நீங்கள் பெத்தவள்
இஞ்ச
சோத்தால வாடயில்லை
உங்கட சோகத்தால
வாடுதெண்டு
என்ர அப்பு நீ போய் சொல்லணை
நீங்கள் பெத்தவள்
இஞ்ச காசால வாடயில்லை
உங்கட கவலையால வாடுதெண்டு”

இவ்வாறு சந்தர்ப்ப சூழ்நிலைகளை உறவுக்காரர் கூடும் தருணங்களில் நாசுக்காக சொல்லிப் போகும் சமூகப்பாங்கினை இவ்விதமான ஒப்பாரிப்பாடல்களில் சிறப்பாகச் சொல்லக் காணலாம்.

‘மூடிய சமூகமாக வாழ்ந்த யாழ்ப்பாணச் சமூக அமைப்பில் மாற்றங்கள் இலகுவாக ஒப்புக்கொள்ளப்படவில்லை.ஆங்கிலேயரால் மாற்றங்கள் வந்த போது அவற்றை வேடிக்கையாகவும் நையாண்டியாகவும் புறந்தள்ள அவை முனைந்தன. இரண்டாம் பதிப்பாக 1933ம் ஆண்டு வெளிவந்த ‘தற்கால நாகரீக வேடிக்கைப்பாக்கள்’ பாகம் மூன்று என்ற நூலில் அதன் ஆக்க கர்த்தா. மண்டைதீவு. பிரம்மஸ்ரீ.அகிலேஸ்வர சர்மா இயற்றிய கீழ் வரும் இப்பாடல் படித்து இன்புறவும் தக்கது. ( யாழ்ப்பாணப் பண்பாடு; மறந்தவையும் மறைந்தவையும், பக்.111)

பிள்ளை பெற்ற பெண்களுக்கும்
பிரண்டி வேணும் - இப்போ
பிட்டு அள்ளித் தின்பதற்கும்
கரண்டி வேணும்
முள்ளுக் கொண்டு இறைச்சிகள் குத்தித்
தின்ன வேணும்
முழுவதும் வெள்ளைக் காரர் போல்
மின்ன வேணும்.
தயிர் கடைந்து பழஞ்சோறுண்டார்
அந்தக்காலம் - கோப்பித்
தண்ணீர் பருகித் தியங்குகிறார்
இந்தக் காலம்
வயிரத் தூண் போல் வாழ்ந்திருந்தார்
அந்தக் காலம் - நொய்ந்த
வாழைகள் போல் தோன்றுகிறார்
இந்தக் காலம்
நாட்டிற் கள்ளை வேண்டாம் என்று
தள்ளுகிறார் - இப்போ
நாகரீக விஸ்கிகுடித்துத்
துள்ளுகிறார்
வீட்டிற் காசை அன்னியர் கையில்
கொட்டுகிறார்
விறண்டிப் பெட்டிக்காகத் தீர்வை
கட்டுகிறார்.’

அது போல கோதுமை மாவின் வரவைப் பழிக்கும் இந்தப்பாடலைப் பாருங்கள் அது,

‘வந்தம் மாவும் வழுவி - எங்க
சொந்தம்மாவும் நழுவி
மந்த மாகத் தழுவி - கோ
தம்ப மாவும் வந்திருக்கிறா - அவவும்
நிந்தமல்ல சொந்தம்மாவைப் பார்’

என்கிறது.

பெண்களிடம் ஏற்பட்ட மாற்றத்தை

‘ கோலக் குயில் மொழி சேலைப் பழி விழி
வாலைப் பெண்களலங்காரம் - இந்தக்
காலத்திலே மஸ்லின்சேலை உடுத்தியவர்
காட்சி கொடுத்தல் சிங்காரம்
பட்டிணக்காப்புக் கல் அட்டியல் தோட்டுக்கும்
கெட்டகாலம் வந்து போச்சே - இப்போ
கெட்டிக் கொலுசொடு கொத்தமல்லிக் காப்புக்கும்
கஷ்ட காலமாச்சே’

என்றும்,

‘தாவணி பாவாடை எறிந்தார் - இப்போ
சல்லடையாம சில்க் சைஸில் நல்லுடை செய்வார்
பூ மணவார் ‘பெளடர்’ மணப்பார்
புடவை கட்டும் வேடிக்கை புகலுவேன் கேளும்’

என்றும் பெண்களிடம் ஏற்பட்ட மாற்றங்களை பதியும் வாய்மொழி இலக்கியங்கள் ஆண்களிடம் இடம்பெற்று வரும் மாற்றத்தை பின் வருமாறு புகலுகிறது.

‘மூக்குத் துவாரமளவிலே மீசை
முறுக்கவேலாது மிலிற்றறி வீசையாம்
பார்க்கச் சிரிப்பு வருகுது கூழைவால்
பட்ட நாய் போலெல்லோ பாருமடி’

நாளாந்த சொல் வழக்கில் தாயை ஆச்சி என்றும் தந்தையை அப்பு அல்லது ஐயா, அப்பா என்றும் மூத்த தமக்கையாரை அக்கா எனவும் வழங்குதல் மரபாய் இருந்தது. ஆனாலும், பேச்சு வாக்கில் “கொப்பர் என்னவாம்?” கோச்சி என்ன செய்யிறா?” கொக்கா வந்திட்டாவே? என்று உரையாடுவது அண்மைக் காலம் வரை இருந்து வரும் பேச்சு முறை. இவை விளையாட்டுப் பாடல்களில் சிறப்பாகத் தொக்கி நிற்பதைச் சிறுவர்களின் விளையாட்டுப் பாடல்களில் காணலாம்.

ஒழித்துப் பிடித்து விளையாட்டொன்றின் போது ஒருவருடய கண்ணை ஒருவர் பொத்திக் கொண்டு,

“ கண்னாரே கடையாரே
காக்கணுமாம் பூச்சியாரே
ஈயாரே எறும்பாரே
கோச்சி(ஆச்சி) என்ன காச்சினாள்?
(கண் மூடுப்பட்டவ) கூழ்
கூழுக்கு கறி என்ன?
(கண் மூடுப்பட்டவர்) புழு
(கண்னை அவிழ்த்து விட்டு விட்டு)
பெரிய புழுவாய் பிடிச்சுக் கொண்டோடிவா!

கண் பொத்தி விளையாட்டில் இன்னொரு விதமான பாடலும் பாடப்படுவதுண்டு. அது,

“கண்னாரே கடையாரே
காக்கணமாம் பூச்சியாரே
ஈயாரே எறும்பாரே
உங்களம்மா என்ன காச்சினாள்( சமைத்தாள்)
கூழ் காச்சினாள்
கூழுக்குள் என்ன விழுந்தது?
ஈ விழுந்தது.
ஈ எல்லாம் தட்டி
எறும்பெல்லாம் தட்டி
உனக்கொரு காயும்
எனக்கொரு பழமும்
கொண்டோடி வா”

(ஈயும் எறும்பும் பூச்சியும் புழுவும் இப்பாடல்களில் எடுத்தாளப்பட்டமைக்குக் காரணம் தெரியவில்லை)

 அது போல பெண்களின் கிள்ளுப்பிராண்டி நுள்ளுப் பிராண்டிப் பாடல் இப்படியாய் போகும்.

“கிள்ளுப் பிராண்டி நுள்ளுப் பிராண்டி
கொக்கா(அக்கா) தலையில என்ன பூ?
முருக்கம் பூ.
முருக்கம்பூவத் திண்டவளே
பாதி விளாங்காய் கடிச்சவளே
பாட்டன் கையை
மு-ட-க்- கு-

வித்துவான் வேந்தனாரின் ஊஞ்சல் பாட்டொன்றில் மெத்தப் புழுகாய் (மிகச் சந்தோஷமாய்) என்ற நாட்டார் சொல்வழக்கு கையாளப்படும் பாண்மை ரசிக்கத்தக்கது.

“தம்பி வந்து பாரடா
தமிழும் ஊஞ்சல் ஆடுறாள்
வெம்பி வெம்பி அழுதவள்
மெத்தப் புழுகாய் ஆடுறாள்”

இன்னுமொரு ஊஞ்சல் பாட்டு ஊரினை மையப் படுத்தி ”கச்சாயிற் புளியிலே ஊஞ்சலும் கட்டி கனகராயன் தோப்பிலே தோட்டமும் செய்து” என வரும்.

குடும்ப உறவுகளில் காதல் ஒரு விலத்தப்பட்ட சமாச்சாரமாகவே யாழ்ப்பாணத்து மக்களால் பார்க்கப்பட்டு வந்திருக்கிறது. இருந்தாலும் காதலும் நிகழ்ந்தே வந்திருக்கிறது. அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்? பெரும்பாலும் கட்டுப்பாடான கிடுகுவேலிக் கலாசாரத்தில் பெண்ணுக்கு விடுதலை கிணற்றடிக்குப் போகும் வேளை தான். குடத்தில் தண்ணீர் எடுத்து வரும் பெண்ணைக் கண்டு விட்ட ஒருவன் பாடுகிறான் இப்படி.

“தண்ணிக் குடமெடுத்து
தனி வழியே போற கண்ணே
தண்ணிக் குடத்தினுள்ளே
தழும்புதடி என்மனசு”

அப்படியே சில காலம் போக சம்மதம் கேட்கும் நாள் வருகிறது. இப்படிச் சொல்கிறான் அவன்

“ சந்தனப் பொட்டடி நானுனக்கு
சாந்து சவ்வாதடி நீ எனக்கு
சந்தனப் பொட்டுக்கும் சாந்து சவ்வாதுக்கும்
சம்மதமோ முத்து வீராயி?

குத்துவிளக்கடி நானுனக்கு
கொவ்வைப் பழமடி நீ எனக்கு
குத்து விளக்குக்கும் கொவ்வைப் பழத்துக்கும்
சம்மதமோ முத்து வீராயி?

காதலிக்கும் ஒரு பெண்ணைப் பார்த்து குடும்பத்தார் வைக்கும் சட்டதிட்டம் பற்றி கீழ் வரும்  இப்பாடல் சிறப்பாகச் செப்புகிறது.

“கடப்பைக் கடந்து
காலெடுத்து வச்சியெண்டால்
இடுப்பை ஒடித்து வேலி
இலுப்பையின் கீழ் போட்டுடுவேன்
வாசல் கடந்து வழிகண்டு போனியெண்டால்
வேசை மகளே உன்னை
வெட்டுவேன் இரண்டு துண்டாய்”

என்கிறார்கள் குடும்பத்தார்கள். எனினும் ஒரு வழிகண்டு காதலன் வீட்டு வாசல் வரை வந்து விட்டான்.அப்பாவிக் காதலனுக்கு என்ன செய்யலாம் என்று தெரியவில்லை. அவன் மீது பச்சாதாபப் பட்டு பெண் பாடுகிறாள் இப்படி.

“வட்டமிட்டு வட்டமிட்டு
வாசலுக்கு வாறவர்க்கு
திட்டமொன்று சொல்ல
திறம் போதாதென் கிளிக்கு”

மேலும்,

“ ஆளரவம் கண்டு ஆக்காண்டி கத்துதையோ
ஆராலும் கண்டாலும்
என் அன்புக் கிளி என்ன செய்யும்?

எனப் பரிதவிக்கிறாள்.

திறம் - திறமை: கிளி- அன்புக்குரியவர்களை ; ஆண் பெண் இரு சாராரையும் கிளி, குஞ்சு, ராசாத்தி, செல்லம் என அழைக்கும் மரபு யாழ்ப்பாணத்தவர் மத்தியில் உண்டு. அது இங்கும் எடுத்தாளப்பட்டிருப்பது காண்க.

வீட்டில் சந்தேகம் பற்றிக் கொண்டு விட்டது. இவ்வளவு நேரமும் என்ன செய்தாய் என்று கேட்கப்படும் கேள்விக்கு பெண் இப்படிச் சொல்கிறாள்.

“ கோழி அடைத்து வைத்தேன்
கொழி அரிசி குத்தி வைத்தேன்
தாழ துலா தாழ்த்தி
தண்ணி நிறைத்து வைத்தேன்

தேங்காய் துருவி வைத்தேன்
தேவைக்கு அரைத்து வைத்தேன்
பாங்காய் சமைப்பதற்கு
 பட்ட கஸ்ரம் இவ்வளவோ?

எனக் கேட்கிறாள். அவள் வீட்டுக்குள் அடைக்கப் பட்டு விட்டாள். காதலனுக்கோ அவளைக் காண வழி இல்லை.அவன் வந்தார் வரத்தாரைப் பார்த்து பாடுகிறான்.

“சிட்டுப் போல நடையழகி
சிறுகுருவித் தலையழகி
பட்டுப் போல மேனியாளை
பாதையிலே பாத்தீங்களோ?

கோரை மயிரழகி
குருவிச்சை பொட்டழகி
பவளம் போல் பல்லழகி
பாதையிலே பாத்தீங்களோ?

பட்டம் போல நெற்றி
பவளம் போல வாயழகி
முத்துப் போல பல்லழகி
முன் போகக் கண்டீரோ?

வாகை மரமேறி
வடக்கே தெற்கே பார்க்கும் போது
தோகை மயில் போல
தோகையாளைக் கண்டீரோ?

குழந்தைகளைக் கொஞ்சுகின்ற பாடல்கள் பல இன்று வழக்கொழிந்து போய் விட்டன. குழந்தைகளையும் தாயையும் பராமரிக்கும் முறை பாரம்பரிய இயற்கை வைத்திய முறையைப் பெரிதும் சார்ந்திருந்தது. குழந்தை பெற்ற தாயை 5 வகையான இலைகுழைகளைப் போட்டு அவித்த சுடு நீரினால் குளிப்பாட்டுவார்கள். குழந்தைக்கு நாவூறு  படாமல் கறுப்புப் பொட்டுக் காச்சி நெற்றியிலும் கன்னத்திலும் வைப்பார்கள்.

அப்போது பாடுகின்ற பாடலாக

“காக்கா காக்கா மை கொண்டுவா
காலைக் குருவி பழம் கொண்டு வா
கிளியே கிளியே ஓடி வா
கிண்ணத்தில் பால் கொண்டு வா

என்று பாடுவார்கள். அது இன்னொரு விதமாக,

காக்கா கண்ணுக்கு மை கொண்டு வா
குருவி கொண்டைக்கு பூ கொண்டு வா
கொக்கு குழந்தைக்கு தேன் கொண்டு வா
கிளியே கிண்னத்தில் பால் கொண்டு வா

எனவும் பாடப்படுவதுண்டு.

குழந்தைக்கு நாள் தோறும் காலையில் நல்லெண்ணை வைத்து அங்கங்களை நன்றாகப் பிடித்து விட்டு அவ் அங்கங்கள் சிறப்பாக வரும்படியாக நீவி காலை இள வெய்யிலில் கிடத்துவார்கள். குறிப்பாக மூக்கு, காது, முன் வாய், கை கால் விரல்கள், இவைகளைப் பிடித்து விடுவதோடு தலை உருண்டையாக வருவதற்காக ஏணை கட்டி ஏணையிலும் போடுவார்கள். குழந்தைகளுக்கு கை கால்களைப் பிடித்து விடும்  போது அவற்றுக்கு சில பாடல்களையும் கதை பேச்சுக்களையும் சொல்லிய படி செய்வார்கள்.

குழந்தை சற்றே வளரும் பருவத்தில் குழந்தையை மடியில் இருத்தி சாய்ந்தாடல் பாடலும் சப்பாணி வெட்டு பாடலும் பாடி அவர்களோடு ஆடுவதும் வழக்கம்.

“சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
தாமரைப் பூவே சாய்ந்தாடு
குத்து விளக்கே சாய்ந்தாடு
கோயில் புராவே சாய்ந்தாடு
பச்சைக் கிளியே சாய்ந்தாடு
பவலக் கொடியே சாய்ந்தாடு
சோலைக் குயிலே சாய்ந்தாடு
தோகை மயிலே சாய்ந்தாடு
கண்ணே மணியே சாய்ந்தாடு
கற்பக தருவே சாய்ந்தாடு
கண்டே தேனே சாய்ந்தாடு
கனியே பாலே சாய்ந்தாடு”

என பாடி மகிழ்வர். குழந்தை கை கொட்டுவதை சப்பாணி கொட்டுதல் என்பர். அவ்வாறு செய்கின்றபொழுதுகளில் கால்களையும் கைகளையும் மடக்கி சில பாடல்கள் பாடப்படுவதுமுண்டு. அவை கை கால்களை அசைவிக்கும் பயிற்சி முறைக்காக செய்யப்பட்டு வந்தது. அவற்றுக்கான பாடல்கள் ஒரு கருத்து சார்ந்ததன்றி எதுகைக் மோனை சார்ந்ததாக இருக்கும். உதாரணமாக;

ஆலாப் பற பற
அழகு பற பற
கொக்கு பற பற
கோழி பற பற
குருவி பற பற

என காணும் பட்சிகளைக் காட்டிப் பாடுவது போல இருக்கும்.

இது போல

“ஆத்து வாழை குலை போட
ஆரனும் பெண்டிலும் கூத்தாட
முத்தத்து வாழை குலை போட
முத்தனும் பெண்டிலும் கூத்தாட
வேலியில் வாழை குலை போட
வேலனும் பெண்டிலும் கூத்தாட
பக்கத்து வாழை குலை போட
பத்தனும் பெண்டிலும் கூத்தாட

என்ற விதமாகப் பாடுவார்கள். இவற்றுக்கு கால்களைச் சப்பாணி போல மடித்தும் கைகளை மேலும் கீழும் உயர்த்தியும் அபிநயம் செய்த படி பாடி மகிழ்வர்.

தாய் மார் குழந்தைகளுக்கு தாலாட்டுப் பாடும் பாடல்கள் தனித்திறம் தனித்தரம் வாய்ந்தவை. தொட்டிலுக்குள் நித்திரைக்காக குழந்தையை விட்டு தொட்டிலை ஆட்டிய படி பாடப்படும் பாடல்கள் தாய்மாரின் எண்ணத்துக்கும் கற்பனைக்கும் வளம் சேர்ப்பவை. மனதுக்கு எட்டிய பாங்கில் அப்பாடல்கள் அமைந்திருக்கும்.பொதுவாக எவ்வகைத் தாலாட்டிலும்

“பச்சை இலுப்பை வெட்டி
பால் வடியத் தொட்டில் கட்டி
தொட்டிலுமோ பொன்னாலே
தொடு கயிறோ முத்தாலே
முத்தென்ற முத்தோ நீ
முது கடலின் ஆனி முத்தோ
சங்கீன்ற முத்தோ
சமுத்திரத்தின் ஆனி முத்தோ? போன்ற வரிகளும்

ஆராரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ
ஆராடித்து நீயழுதாய்?
கண்மணியே கண்ணுறங்காய்

கண்ணை அடித்தது யார்?
கற்பகத்தைத் தொட்டது யார்?
தொட்டாரைச் சொல்லியழு
தோள் விலங்கு போட்டு வைப்போம்

அடித்தாரைச் சொல்லியழு
ஆக்கினைகள் பண்ணி வைப்போம்

பாட்டி அடித்தாரோ
பாலூட்டும் கையாலே?
அத்தை அடித்தாளோ
அமுதூட்டும் கையாலே?
மாமன் அடித்தானோ
மகிழ்ந்தெடுக்கும் கையாலே
அண்ணன் அடித்தானோ
அணைத்தெடுக்கும் கையாலே”

போன்ற விதமாக அமைந்திருக்கும்.

இவ்வாறான பாடல்கள் தனியே யாழ்ப்பணத்துத் தமிழுக்கு மட்டும் உரித்தானவையல்ல என்ற தகவலையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். இவை பரவலாக வன்னி, கிழக்கு மாகாண தமிழ் வாழ்வியலிலும் கலந்தே இருந்தன. தனியே ஒரு குறிப்பிட்ட மாவட்டத்துக்கோ அங்குள்ள ஒரு குறுகிய சமூக மக்களுக்கோ சொந்தமானவையல்ல. ஆனாலும் மேலே குறிக்கப்பட்டுள்ள பாடல்களில் பல யாழ்ப்பாணத்து வாசனையை மிகுதியாகக் கொண்டுள்ளன என்பதில் மாற்றுக் கருத்து இருக்காது என்பது என் அபிப்பிராயம்.

கிழக்கு மாகாணம், வன்னி நிலப்பகுதி மற்ரும் மலையகப் பகுதிகளில் வழங்கப்பட்டு வந்த பாடல்கள் அவ் அவ் மண்சார்ந்த தொழில் சார்ந்த வாழ்வியல் சார்ந்த வகைகளில் பல தனித்துவமான கூறுகளையும் அழகியலையும் சமூக வெளிப்பாடுகளையும் கொண்டமைந்துள்ளன.

சந்தர்ப்பம் வாய்த்தால் அவைகளையும் தனித்தனியாக பதிவேற்ற ஆவல்.

Tuesday, March 20, 2018

நூலெனப்படுவது.....

’நூலெனப்படுவது நுவலுங் காலை
முதலும் முடிவும் மாறுகோ ளின்றித்
தொகையினும் வகையினும் பொருண்மை காட்டி
உண்ணின் றகன்ற உரையொடு புணர்ந்து
நுண்ணிதின் விளக்கல் அதுவதன் பண்பே’பொருள்: நூலென்று சொல்லப்பட்டது எடுத்துக் கொண்ட பொருளொடு முடிக்கும் பொருண்மை மாறுபடாமற் கருதிய பொருளைத் தொகையானும் வகையானுங் காட்டி உதனகத்து நின்றும் விரிந்தவுரையோடு பொருத்த முடைத்தாகி நுண்ணியதாகி விளக்குவது நூற்கியல்பு என்றவாறு.

இது ஒரு நூல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான இலக்கணம். இனி எப்படி ஒரு நூல் இருக்கக் கூடாது என்பதற்கும் இலக்கணம் கூறுகிறது தொல்காப்பியம். அது இது.

‘சிதைவெனை படுபவை வசையற நாடிற்
கூறியது கூறல் மாறுகொளக் கூறல்
குன்றக் கூறல் மிகைபடக் கூறல்
பொருளில கூறல் மயங்கக் கூறல்
கேட்போர்க் கின்னா யாப்பிற் றாதல்
பழித்த மொழியான் இழுக்கக் கூறல்
தன்னான் ஒரு பொருள் கருதிக் கூறல்
என்ன வகையினும் மனங்கோள் இன்மை
அன்ன பிறவும் அவற்றுவிரி யாகும்’

இதன் பொருள் என்னவெனில்,
மாறுகொளக்கூறுதலாவது ஒருகாற் கூறிய பொருளொடு மாறு கொள்ளுமாறு பின் கூறல். அஃதாவது தவம் நன்று என்றவன்றான் தவந் தீதென்று கூறல்.

குன்றக் கூறலாவது, தானதிகரித்த பொருட்களுள் சிலவற்ரைக் கூறாதொழித்தல்.

மிகைபடக் கூறலாவது, அதிகாரப் பொருளன்றி பிற பொருளும் கூறுதல். அஃதாவது தமிழிலக்கணஞ் சொல்லுவான் எடுத்துக் கொண்டால் வடமொழி இலக்கணமும் கூறுதல்.

பொருளில கூறலாவது முன்னும் பின்னும் வருகின்ற பொருண்மைகொப்பின்றி பயனிலாதன கூறல்.

மயங்கக் கூறலாவது, கேட்போர்க்குப் பொருள் விளங்குமாறன்றிக் கூறல்.

கேட்பார்க்கின்னா யாப்பிற்றாதலென்பது, பொருள் யாக்கப்பட்ட சூத்திரம் சந்த இன்பமன்றி யிருத்தல்.

பழித்த மொழியான் இழுக்கக் கூறலாவது, தானொரு பொருளை யொரு வாய்ப்பாட்டாற்றிரித்துப் பிறிதொரு வாய்ப்பாட்டாற் கூறுதல். அக்குறிப்பு உலக வழக் கின்மையாற் பிறர்க்குப் புலப்படாதாம்; அதனால் அதுவும் குற்றமாயிற்று.

என்னவகையானும் மனங்கோள் இன்மையாவது, எழுத்தினானுஞ் சொல்லினானும் பொருளினானும் நமங் கொள்ளுமாறு கூறாமை.

இது இவ்வாறு இருக்க, எப்படி ஒரு பொருளை மற்றவருக்குப் புரியும் படி சொல்லலாம் என்பதற்கும் ஒரு சூத்திரம் உண்டு. அது கீழே...

‘ஒத்த காட்சி உத்தி வகை விரிப்பின்
நுதலிய தறிதல் அதிகார முறையே
தொகுத்துக் கூறல் வகுத்து மெய் நிறுத்தல்
மொழிந்த பொருளோ டொன்ற வைத்தல்
மொழியா ததனை முட்டின்றி முடித்தல்
வாரா ததனான் வந்தது முடித்தல்
வந்தது கொண்டு வராதது முடித்தல்
முந்து மொழிந்ததன் தலைதடு மாற்றே
ஒப்பக் கூறல் ஒரு தலை மொழியே
தன் கோட் கூறல் உடம்பொடு புணர்தல்
பிறனுடம்பட்டது தனுடம் படுதல்
இறந்தது காத்தல் எதிரது போற்றல்
மொழிவாம் என்றல் கூறிற் றென்றல்
தான்குறி யிடுதல் ஒருதலை யன்மை
முடிந்தது காட்டல் ஆணை கூறல்
பல்பொருட் கேற்பின் நல்லது கோடல்
பொருளிடை யிடுதல் எதிர்பொருள் உணர்த்தல்
சொல்லின் எச்சம் சொல்லியாங் குணர்த்தல்
தந்துபுணர்ந் துரைத்தல் ஞாபகம் கூறல்
உய்த்துக்கொண் டுணர்தலோடு மெய்பட நாடிச்
சொல்லிய அல்ல பிறவவண் வரினும்
சொல்லிய வகையாற் சுருங்க நாடி
மனத்தி மெண்ணி மாசறத் தெரிந்து கொண்டு
இனத்திற் சேர்த்தி உணர்தல் வேண்டும்
நுனித்தகு புலவர் கூறிய நூலே’

இவர் என்னவாம் என்றால்,

ஒரு விஷயத்தை விளக்க பயன் படக்கூடிய உத்திகள் என்ன வகையாக எல்லாம் இருக்கென்றால்,
1.காட்சியை விரித்துக் கூறுதல்.
2.அதிகார முறை; முன்னம் விபரித்துச் சொன்ன முறையில் அதே பாணியில் மேலும் விரித்துரைத்தல்.
3.தொகுத்துக் கூறல்;வகைகளை தெரிந்து கூறுதல்.
4.வகுத்து மெய் நிறுத்தல்; தொகைபடக் கூறிய பொருளை வகைபடக் கூறுதல்.
5.மொழிந்த பொருளோடு ஒன்ற வைத்தல்: சூத்திரத்துள் பொருள் பலபடத் தோன்றுமாயின் முற்பட்ட சூத்திரத்திற்கு ஒத்த பொருளை உரைத்தல். அல்லது முற்பட்ட சூத்திரத்திற்கு பொருள்வழி பிற்பட்ட சூத்திரமும் பொருளோடு ஒன்ற வைத்தல்.
6.மொழியாததனை முட்டின்றி முடித்தல்; எடுத்துச் சொல்லாத பொருளை முட்டுப்படாமல் உரையினால் முடித்தல்.
7.வாராததனான் வந்தது முடித்தல்; ஒருங்கெண்ணப்பட்ட பொருள் ஒன்றினைப் பகுத்துக் கூறிய வழி ஆண்டு வராததற்கோதிய இலக்கணத்தை இதன் கண்ணும் வருவித்து உணர்த்துதல்.
8. வந்தது கொண்டு வராதது முடித்தல்; இலக்கணம் கூறியவழி வராததன் கண்ணும் இவ் இலக்கணத்தைக் கூட்டி முடித்தல்.
9.முந்து மொழிந்ததன் தலைதடுமாற்றம்; முற்பட அதிகரித்த பொருளை அவ் வகையினால் கூறாது முறை பிறழக் கூறுதல்.( அவ்வாறு கூறும் போது ஒரு பயன் நோக்கிக் கூற வேண்டும்)
10.ஒப்பக் கூறல்: ஒரு பொருளெடுத்து இலக்கணம் கூறிய வழி அது போல்வனவற்றையும் இலக்கணத்தால் முடித்தல்.
11.ஒருதலை மொழி;சூத்திரத்துக்குப் பொருள் கவர்த்துத் தோன்றின் அதனுள்ளொன்றினை துணிந்து கூறல்.
12.தன்கோட் கூறல்; பிறநூலாசிரியர் கூறியதைக் கூறாது தன் கோட்பாட்டைக் கூறல்.
13.உடம்பொடு புணர்தல்: இலக்கணவகையால் ஓதுதலன்றி ஆசிரியனுக்கின்றி சூத்திரத்தின் கண்ணே ஒரு சொல்லை வைப்பானாயின் அவ் அமைப்பினை இலக்கணமாகக் கோடல்.
14.பிறனுடம்பட்டது தானுடம்படுதல்; பிற ஆசிரியர் உடன் பட்ட பொருளோடு தானும் உடன்படுதல்.
15.இறந்தது காத்தல்; சூத்திரத்தால் கூறப்படாத பொருளை தான் ஒரு சூத்திரத்தால் அமைத்தல்.
16.எதிரது போற்றல்: முன் கூறப்பட்ட சூத்திரத்தால் வருகின்ற சூத்திரத்தின் பொருளையும் பாதுகாக்குமாறு வைத்தல்.
17.மொழிவாம்; சில பொருளைக் கூறி அவற்றுள் ஒன்றினை இன்னவிடத்துக் கூறுவாம் என்றுரைத்தல்.
18.கூறிற்றென்றலாவது; பல பொருள் அதிகரித்தவற்றுள் சில பொருளை மேற் சொல்லப்பட்டன என்ரல்.
19.தான் குறியிடுதல்; உலகின் கண் வழக்கின்றி ஒரு பொருளுக்கு ஆசிரியன் தான் குறியிடுதல்.
20.ஒருதலையன்மை முடிந்தது காட்டல்; ஒரு பொருளை ஓதிய வழி சொல்லுதற்கே உரித்ததன்றி  பிற பொருளுக்கும் பொதுவாக முடித்தமை காட்டல்.
21.ஆணை கூறல்: ஒரு பொருளைக் கூறும் வழி எதுவினால் கூறலன்றி தன் ஆணையால் கூறல்.
22.பல்பொருட் கேற்பின் நல்லது கோடல்: ஒரு சூத்திரம் பல பொருளுக்கேற்குமாயின் அவற்றுல் நல்லதனை பொருளாகக் கோடல்.
23.தொகுத்த மொழியான் வகுத்தனர் கோடல்; தொகுத்துச் கூறிய சொல் தன்னாலே பிறிதுமொரு பொருளைக் காட்டல்.
24.மறுதலை சிதைத்துத் தன்றுணி புரைத்தல்: பிற நூலாசிரியன் கூறிய பொருண்மையைக் கெடுத்து தந்துணிவு கூறுதல்.
25. பிறன் கோட்கூறல்: பிற நூலாசிரியனின் கோட்பாட்டைக் கூறல்.
26.அறியாதுடன்படல்; தான் அறியாத பொருளை பிறர் கூறியதால் உடன்படுதல்.
27.பொருளிடையிடுதல்: ஒரு பொருளை ஓதிய வழி அதற்கிணக்கமாகிய பொருளை சேரக் கூறாது இடையீடுபடக் கூறல்.
28. எதிர்பொருள் உணர்த்தல்: இனிக் கூறவேண்டியது எதுவென உணர்த்தல்.
29.சொல்லின் எச்சம் சொல்லியாங்குணர்த்தல்; பிரிநிலை முதலாகச் சொல்லப்பட்ட எச்சங்களைக் கண்டு ஆங்கு சொல்லியவற்ரால் பொருள் கோடல்.
30. தந்து புணர்ந்துரைத்தல்; முன்னாயினும் பின்னாயினும் நின்ற சூத்திரத்தால் சொல்லை இடைநின்ற சூத்திரத்தால் கொணர்ந்து புனைந்துரைத்தல்.
31.ஞாபகங் கூறல்: இரட்டுற மொழிந்து இரண்டு சொற்களுக்கும் பொருள் கூறல்.
32.உய்த்துக் கொண்டுணர்தல்: ஒரு சூத்திரத்தால் ஒரு இலக்கணம் ஓதியவழி அதற்குப் பொருந்தாமை உளதாகத் தோன்றின் அதற்குப் பொருந்துமாறு விரித்துரைத்தல்.
33.மெய்ப்பட நூலென்பது: மேற் சொல்லப்பட்டவற்றோடு கூடப் பொருள்பட ஆராய்ந்து சொல்லிய அல்லாதனவாகிய பிறவற்றினாலும் சொல்லிய நெறியினாலும் சுருக்கமாக ஆராய்ந்து மனதினால் நேர்ந்து  குற்ரமறத் தெரிந்து கொண்டு சொல்லிய இனத்தோடு பாகுபடுத்தி உரைத்தல்.
34. சொற்பொருள் விரித்தல்: பதந் தோறும் பொருள் விரித்து கடாவும் விடையும் கூறல்.
35. ஒன்றென முடித்தல் தன்னின முடித்தல்: சொல்லப்பட்டவற்றால் ஒரு முடிவுக்கு வருதல்.

(தொல்காப்பியம் பொருளதிகாரம், இளம்பூரணர் உரை, தென்னிந்திய சைவசித்தந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, இரண்டாம் பதிப்பு, மே.1961. ( முதற் பதிப்பு ஜூன் 1953) (பக்கங்கள் தமிழ் இலக்கத்தில் குறிக்கப்பட்டுள்ளன. )
..

Monday, February 19, 2018

காமம் செப்பாது கண்டது மொழிமோ.....

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறி எயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே.

குறுந்தொகை - 2 - பாடியவர்: இறையனார்.

தேன் தேடும் வாழ்க்கையை இயல்பாகக் கொண்ட  அழகிய சிறகுகளை உடைய தும்பியே! தேன் உண்ணும் விருப்பினால் பக்க சார்பாக சொல்லாமல் உண்மையாக நீ கண்டதைச் சொல். மயில் தோகையின்  இயல்பைக் கொண்ட இவளின் கூந்தலின் வாசத்தைக் காட்டிலும் நல்ல வாசனையுள்ள பூக்கள் இருக்கின்றனவா?

இது பாடலின் பொருள்.

தமிழ் படிக்கும் தோறும் இன்பமும் பெருமையும் நல்குவதாக இருக்கிறது. இலக்கணங்களும் இலக்கியங்களும் அதில் பெருகிக் கிடக்கும் நுட்பமான சிந்தனைகளும் கற்பனைத் திறனும் வாழ்வியல் கோலங்களும் காணக்காண திகட்டாதவை.

இப்போது படித்துக் கொண்டிருக்கும் தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் மெய்யில் அதாவது உடலில் தோன்றும் உணர்ச்சிகள் எட்டு வகை என்று சூத்திரம் சொல்லுகிறது. அச் சூத்திரம் இது.

‘நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று
அப்பால் எட்டாம் மெய்ப்பாடென்ப.

இதனை ‘செயிற்றியனார் என்ற நாடக நூலில்

‘உய்ப்போன் செய்தது. காண்போர்க்கெய்துதல்
மெய்ப்பா டென்ப மெய்யுணர்ந் தோரே’

என்று கூறுகிறார். அதாவது ஒருவர் உடலில் நிகழும் மாற்றம் மற்றவருக்குப் புலப்படுமாறு தோன்றுவது மெய்ப்பாடு ஆகும். உடல் - மெய். அதனால் மெய்ப்பாடு ஆயிற்று.

இந்த எட்டும் எப்படிப் பிறக்கிறதெனில் நகை என்பது இகழ்ச்சியில் பிறப்பது. அழுகை என்பது அவலத்தில் பிறப்பது. இளிவரல் இழிப்பில் பிறப்பது.மருட்கை வியப்பில் பிறப்பது. அச்சம் அச்சம் தருவனவற்றால் பிறப்பது. பெருமிதம் வீரத்தில் பிறப்பது. வெகுளி வெறுக்கத் தக்கனவற்றால் பிறப்பது. உவகை சிருங்காரத்தால் பிறப்பது என விளக்கம் தருகிறது தொல்காப்பியம்.

இதிலும் நகை நாலுவிதம்.

எள்ளல் இளமை பேதமை மடனென்று
உள்ளப்பட்ட நகைநான் கென்ப.

இழிவு நான்கு விதம்.

இழிவே இழவே அசைவே வறுமையென
விளிவில் கொள்கை அழுகை நான்கே.

இழிவரல் நான்கு விதம்.

மூப்பே பிணியே வருத்த மென்மையொடு
யாப்புற வந்த இளிவரல் நான்கே.

மருட்கை நான்கு விதம்.

புதுமெ பெருமை சிறுமை ஆக்கமொடு
மதிமை சாலா மருட்கை நான்கே.

அச்சம் நான்கு வகை.

அணங்கே விலங்கே கள்வர்தம் இறையெனப்
பிணங்கல் சாலா அச்சம் நான்கே.

பெருமிதத்திலும் நான்கு விதமான பெருமிதம்.

கல்வி தறுகண் புகழ்மை கொடையெனச்
சொல்லப்பட்ட பெருமிதம் நான்கே.

வெகுளி (கோபம்) இதிலும் நான்கு வகை.

உறுப்பரை குடிகோள் அலை கொலை என்றன
வெறுப்ப வந்த வெகுளி நான்கே.

உவகையிலும் தொல்காப்பியர்  நான்கு விதம் இருக்கிறதென்கிறார்.

செல்வம் புலனே புணர்விளை யாட்டென
அல்லல் நீத்த உவகை நான்கே.

‘அல்லல் நீத்த உவகை’ - அல்லல் இல்லாத சுத்தமான உவகை அது.

இறுதியாக உவகை என்பது எதில் எதில் இருந்தெல்லாம் வரும் என்பதற்கு அதனை என்னமாய் விரித்து செயிற்றியனார் கூறியிருக்கிறார் என்பதற்கு கீழுள்ள பாடல் சான்றாக உள்ளது.

(தொல்காப்பியம் பொருளதிகாரம்; மெய்ப்பாட்டியல்)

‘ ஒத்த காமத் தொருவனும் ஒருத்தியும்
ஒத்த காமத் தொருவனொடு பலரும்
ஆடலும் பாடலுங் கள்ளும் களி(னி?)யும்
ஊடலும் உணர்தலுங் கூடலு மிடைந்து
புதுப் புனல் பொய்கை பூம் புனல் என்றிவை
விருப்புறு மனத் தொடு விழந்து நுகர்தலும்
பயமலை மகிழ்தலும் பனிக்கடல் ஆடலும்
நயனுடை மரபின் நன்னகர்ப் பொலிதலும்
குளம் பரிந் தாடலும் கோலஞ் செய்தலும்
கொடிநகர் புகுதலும் கடிமனை விரும்பலும்
துயிற்கண் இன்றி இன்பந் துய்த்தலும்
அயிற்கண் மடவார் ஆடலுள் மகிழ்தலும்
நிலாப்பயன் கோடலும் நிலம்பெயர்ந்துறைதலும்
கலம் பயில் சாந்தொடு கடிமல ரணிதலும்
ஒருங்கா ராய்ந்த இன்னவை பிறவும்
சிருங்கா ரம்மென வேண்டுப இதன் பயன்
துன்பம் நீங்கத் துகளறக் கிடந்த
இன்பமொடு புணர்ந்த ஏக்கழுத் தம்மே’

தமிழில் முதன் முதல் எழுந்த இலக்கண நூலெனக் கருதப்படும் தொல்காப்பியத்தில் இத்தனை நுட்பமாக விடயங்கள் கண்காணிக்கப்பட்டு கொத்து கொத்தாக கோர்வையாக இணைக்கப்பட்டிருக்கின்றன என்பதற்கு இது ஒரு சிறு உதாரணம் தான்.

( சமநிலை என்ற ஒன்பதாவது மெய்ப்பாடு இங்கு குறிக்கப்படாமைக்கு சமநிலை என்பது மனித உடலின் இயல்பு நிலை என்பதால் இங்கு குறிக்கப்படவில்லை என்று விளக்கம் தரப்பட்டிருக்கிறது.)

( தொல்காப்பியம்; பொருளதிகாரம், இளம் பூரணர் உரையுடன், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, இரண்டாம் பதிப்பு,1961 ( பக்கங்கள் தமிழ் இலக்கத்தில் இடப்பட்டிருக்கின்றன).

அதனால் நாம் பெருமைப்படலாம் தானே?

காமம் செப்பாது கண்டது மொழிமோ?


Friday, January 19, 2018

பூ அன்ரி......24.12.17. மதியம் கடந்த வேளை நமக்கு.....
குடியிருப்புகள் செறிந்த வீதி ஒன்றால் வந்து கொண்டிருந்த வேளை....
யாழ்ப்பாணத்தில் இருந்து செந்தி whatsapp இல்.....
ஓரமாய் வண்டியை நிறுத்தி விசாரிக்கிறேன்...
‘பூ அன்ரி மோசம் போட்டாவாம்’
’பூ அன்ரி மோட்சம் போட்டாவாம்’ என்று கேட்கிறது எனக்கு.......

பூ அன்ரி.......
தொழில் நுட்பம் எதுவும் தொட்டிராத வாழ்வொன்று இருந்தது அப்போது எங்களிடம். அது நாங்களும் அன்ரியின் குடும்பமும் அனுபவித்து வாழ்ந்த வாழ்வு. இயற்கையோடு இணைந்த இயல்பு வாழ்வு. பாசாங்கில்லாத பாசங்கள் கொட்டிக் கிடந்த வாழ்வு....


வன்னிப் பெருநிலப்பரப்பில் வவுனியாவில் இருந்து யாழ்நோக்கி வரும் பிரதான வீதியில் 10 மைல் தொலைவில் உள்ள ஒரு சிறு கிராமம் எங்களது.

சேவல் கூவுமுன் மயில் அகவி விடியும் காலைகள்...

 நெல்மணிகள் விளையும் 5 ஏக்கர் நிலம். முன் பக்கம் யாழ் வீதியும் பின் பக்கம் ரயில் பாதையும் எல்லையாகக் கொண்ட பசுந்தரை. பெரிய கிணறு. மா, பலா, வாழை, தென்னை, கமுகு, கொய்யா, லாவுல் என பழமரங்கள். அவற்றைப் பறித்துண்ன வரும் குரங்குகள். அவற்றைக் கலைப்பதற்காக கல்விட்டெறிவதாகப் பாசாங்கு காட்டினால் தாமும் அவ்வாறு செய்து காட்டி இடம் விட்டு நகராதிருக்கும் புத்திசாலிக் குரங்குகள். அவற்றின் நடுவே கம்பீரமாய் பூமரங்கள் சூழ பிரதான வீடு. வீட்டுக்கு முன்னாலே சாணத்தால் மெழுகப்பட்ட நிலம். தென்னோலையால் வேயப்பட்ட கூரை, அதற்குள்ளே கூடு கட்டிக் குடியிருக்கும் சிட்டுக் குருவிகள். நெல்மூட்டைகளுக்குப் பின்னேயும்  வெளியில் உள்ள வைக்கோல் போருக்குள்ளேயும் ஒளித்துப் பிடித்து விளையாடும் நாங்கள். ஆடு,மாடு, கோழி,நாய், பூனை என இவை வேறு.

மழையால் நிறையும் குளத்தால் செழிக்கும் பூமி. பிள்ளையார் கோயில் மணி கேட்கும் மாலைகள். இரவுகளில் பின்புறக்காடுகளில் இருந்து வரும் பன்றி, மான், மரைகளோடு யானைகளும்...ஆனால் பகல் பொழுதுக் காடுகளை நமக்கவை விட்டுத் தரும். அங்கு பாலப்பழம் வீரப்பழம் என கொப்பு வெட்டி பறித்துண்ணும் நாங்கள்....

அவை மண்ணெண்ணை விளக்கில் நாம் படித்த வாழ்க்கைக் கோலங்கள்...
பஸ்ஸிற்குக் காத்திருந்து நடந்தே வீடு திரும்பிய சீருடைக் காலங்கள்....
விளாங்காயும் மாங்காயும்   அடித்தும் பறித்தும் தின்ற பருவங்கள்.....

எளிமையான இந்தச் சிறுவயது வாழ்வில், வாத்சல்யத்தால், பூரித்த புன்னகையால், வாரி வழங்கும் பரிசுகளால், அழகுறச் செய்து கொண்டுவரும் என் பிறந்த நாளுக்கான கேக்குகளால், கட்டி அணைத்துத் தரும் முத்தங்களால் என் சிறுவயது ஞாபகங்களை இனிய நினைவுகளாக நிறைத்தவர் பூ அன்ரி...

அன்ரி இருக்கும் இடமே எங்களுக்குப் பட்டிணம். போவதொன்றே குதூகலம்.
வவுனியாவில் இருக்கும் அவர் வீட்டில் தங்குவதே கொண்டாட்டம்.  அவர்களின் ’ஷங்கர்’ லொறி எங்கள் விளையாட்டுத் திடல்.

மாதம் ஒருதடவை வார இறுதியில் ரூபவாஹினித் தொலைக்காட்சியில் போடும் கறுப்பு வெள்ளைத் தமிழ் படம் பார்ப்பதற்குப் போவதற்கான விண்ணப்பம் மாத ஆரம்பத்திலேயே வீட்டில் ஆரம்பித்து விடும். அங்கு செல்வதற்காகவே போடப்படும் நிபந்தனைகளை எல்லாம் விறு விறு என்று செய்வதில் நமக்குள்ளே போட்டிகள் தொடங்கி விடும்.

படிப்புகள் மும்மரமாய் நடக்கும்; வீட்டு வேலைகள் சிணுங்கல்கள் இன்றி முடியும். ஒரு முறைக்கு ஒருவருக்கு மட்டுமே போக அனுமதி இருக்கும் என்பதால் நாம் எல்லோரும் போட்டி போட்டு நல்ல பிள்ளைகளாவோம்.

அங்கு செல்ல விரும்புவது படம் பார்க்க மாத்திரமல்ல; அவரன்பில் மூழ்குவதற்கும் தான். ஒரு பிள்ளை மீதான வாத்சல்யத்தை, சந்தோஷத்தை, விருந்தோம்பலை, பேரன்பாய் பொழிந்து மகிழும் அந்த அன்பு மிகப் பிரத்தியேகமானதும் தனித்துவமானதும் கூட...

பூ அன்ரி....

நீங்கள் ஓர் அபூர்வ பிறவி....ஆசீர்வாதங்களோடு பிறந்த ஆச்சரியம் நீங்கள்...கடவுளின் செல்லப்பிள்ளையாய் மலர்ந்தீர்கள். குணம் என்றொரு நறுமணம் பரப்பினீர்கள்.

என் சிறு வயது ஞாபகங்களை உங்கள் எதிர்பார்ப்புகள் எதுவுமில்லாத பேரன்பால் நிறைத்தீர்கள்.....

இன்று நீங்கள் இல்லை; நம்மோடு....

இது எனக்கு ஒரு wake up call ம் கூட...

மத்திய வயதை எட்டி விட்ட இந் நாட்களில் நீண்ட வருடங்களின் பின் நடந்த முதல் இழப்பு இது. பெற்றுக் கொண்ட அனுபவங்களினூடும்  கற்றுக் கொண்ட பாடங்களினூடும் பொதுவான எங்கள் மனித வாழ்க்கையை நினைத்துப் பார்க்கிறேன்......

 மத்திய வயதைத் தொட்டு அதாவது  மலையின் உச்சியைத் தொட்டு விட்டு கீழிறங்கிக் கொண்டு வருகிற பருவம். ஒவ்வொரு அடியையும் அர்த்தபுஷ்டியோடும் அனுபவித்த படியும் அவதானத்தோடும் வைத்து புல்லுக்கும் பழுது எதுவும் நேர்ந்து விடாத வண்ணம் கவனமாக அடி எடுத்து வைத்து வர வேண்டும் என்று தெரிகிறது.

ஆனால், எதை நோக்கி நகர வேண்டும்; எந்தப் பாதையை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்றே தெரியவில்லை.....

’கடவுளின் சவுக்கடியில் சத்தங்கள் கேட்பதில்லை’ என்கிறார்கள்.

இறப்புகளும் இழப்புகளும் எதையோ நமக்குச் சொல்ல வருகிறது. அது எது என்று மொழிபெயர்க்க இயலவில்லை.

வாழ்க்கையில் ஒவ்வொருவரும் ‘எதையோ’ கற்றுக் கொள்ள வருகிறோம். ஒவ்வொருவருடய ‘விடைபெறுதலும்’ வாழ்க்கை நிரந்தரமில்லை என்ற ஓர் உண்மையை அறைந்து நமக்குச் சொல்லி விட்டுச் செல்கிறது.

முதல் சங்கு அமுதூட்டு மொய்குழலார் ஆசை
நடுச்சங்க நல்விலங்கு பூட்டும் — கடைச் சங்கம்
ஆம்போது அது ஊதும் அம்மட்டோ விம்மட்டோ
நாம் பூமி வாழ்ந்த நலம்

இருப்பது பொய் போவது மெய்யென்று எண்ணி நெஞ்சே
ஒருத்தருகும் தீங்கினையெண்ணாதே – பருத்த தொந்தி
நம்மதென்று நாமிருப்ப நாய்நரிகள் பேய் கழுகு
தம்மததென்று தாமிருக்க தான்

எத்தொழிலைச் செய்தாலும் ஏதவத்தைப் பட்டாலும்
முத்தர் மனமிருக்கு மோனத்தே— வித்தகமாய்க்
காதி விளையாடி இருகைவீசி வந்தாலும்
தாதி மன நீர்க்குடத்தேதான்

ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு உயர் செல்வமெல்லாம்
அன்றென்றிரு பசித்தோர் முகம் பார் நல்லறமும் நட்பும்
நன்றென்றிரு நடு நீங்காமலே நமக்கு இட்டபடி
என்றென்றிரு மனமே உனக்கே உபதேச மிதே.

 பூ அன்ரி........
7.1.18

Monday, January 1, 2018

புத்தாண்டு வாழ்த்துக்கள் - 2018 ம் மேலும் சில நினைவுகளும்...

நன்றி; whatsapp இலிருந்து வந்தது...

ஒவ்வொரு வருடமும் வருகிறது, மெல்லக் கரைந்து மறைகிறது... மறைகிறபோது நமக்கு ஒரு வயது கூடுகிறது... கொஞ்சம் அனுபவம் சேர்கிறது....

சிலரை இழக்கிறோம்.... சிலரைப் பெறுகிறோம்....

இந்தப் பதிவினை எழுத ஆரம்பித்த காலத்தை; அன்றய கால நண்பர்களாக இருந்தவர்களை; நினைத்துப் பார்க்கிறேன்.....

அநேகர் பதிவுலகிலேயே இல்லாது போய் விட்டார்கள். கண்தெரியாத உறவுகளாய் கருத்தால், எழுத்தால் இணைந்த காரணத்தால் நம்மோடு ஓர் அன்னியோன்னியத்தை வளர்த்துக் கொண்டவர்கள்.... என்ன ஆகினார்கள் என்றே தெரியாமல் அவர்களை இழந்து விடுதல் என்பது எத்தகைய ஓரிழப்பு!....

இருவாரம் முன்பு வரை சுகமாக இருந்த என் சித்தி 24.12.17ல் நம்மோடு இல்லை.
நாளை என்று ஒன்று நிச்சயமில்லை; யார்க்கும். இன்று என்பது மட்டுமே உண்மை. இன்றைகளை வாழுவோம்!

கோபங்களை மறந்து இன்றைக்கே கைகுலுக்கிக் கொள்வோம். உங்களிடம் தவறில்லை என்றாலும் சமரசம் செய்து கொள்ளுங்கள். நம் மனசை அது இலேசாக்கும் என்பதால்...

இறப்பு ஒன்றே சாஸ்வதம் என்ற உண்மையை ஒப்புக் கொண்டால்; நாளை இறந்து விடுபவனைப் போல சிந்தனை செய்தால்; இன்று நாம் என்ன வெல்லாம் செய்வோமோ அதை செய்ய இப்போதே ஆரம்பிப்போம்.
‘நூறு வருடம் வாழ்பவனைப்போல வேலை செய்; நாளை இறந்து விடுபவனைப்போல சிந்தனை செய்’ என்று ஒரு பொன்மொழி உண்டு.

இதனையே இறப்புகள் மீண்டும் மீண்டும் எனக்குச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன...

எழுதுங்கள் தோழர்களே! எழுத்துக்களால் இணைந்திருப்போம்!!

எழுத்துக்கள் மட்டுமே சாஸ்வதம்!

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

நான் பதிவெழுதத் தொடங்கிய புதிது. நான், செளந்தரி, ஜெயன் மூவருமாக பதிவுலகில் புகுந்தோம். மற்றய இருவரும் பதிவுலகை விட்டு அதிக தூரம் போய் விட்டார்கள். நான் தனியனானேன். பதிவுலக அரிவரிப் பாடங்களை பதிவர்களிடம் இருந்தே கற்றேன். படங்களை இணைக்கிற முறையை செளந்தரியிடம் இருந்தும்; வீடியோக்களை இணைக்கிற முறையை தாருகாசினியிடம் இருந்தும் கற்றுக் கொண்டது இன்றும் பசுமையாக நினைவிருக்கிறது. இரண்டு பேருமே தம் வலைப்பக்கங்களை மூடிக் கொண்டு விட்டார்கள். 

பிறகு கொஞ்ச வருடங்கள் ஈழத்து முற்றம் என்ற குழும வலைப்பதிவில் கும்மாளம் கொட்டக் கிடைத்தது. அதுவும் இப்போது படுத்துக் கொண்டு விட்டது....

எழுத்துக்களால் நம்மை ஈர்த்த பலர் சொல்லாமல் கொள்ளாமல் பதிவுலகை விட்டு வெளியேறி விடுவது மேலும், எழுதாமலே போய் விடுவது ஒரு மலாரிடியாக தலையில் வந்து விழுகிறது. இவர்களுக்கெல்லாம் என்ன ஆகியிருக்கக் கூடும் என்றே மனம் அலைபாய்கிறது....

சில மாதங்களின் முன்னால் என் பிரியமான பதிவுலகத் தோழி கீதா, எழுதுகிற விடயங்களை தரம் பிரித்து தனித்தனித் தலைப்பின் கீழ் கோர்வைப்படுத்தினால் நன்றாக இருக்கும்; மேலும் ஒரு குறிப்பிட்ட பதிவைக் கண்டு பிடிப்பதும் இலகுவாக இருக்கும் என ஆலோசனை வழங்கி இருந்தார். அது ஒரு நல்ல யோசினையாகத் தான் பட்டது. 

ஆனாலும் நீங்கள் என் வலைப்பக்கம் மாற்றங்கள் காணாது இருந்தபடி அப்படியே இருப்பதைக் காண்பதைப் போல் மாற்றங்களை இலகுவாக ஒப்புக் கொள்ளத் தயங்கும் என் மனோபாவம் அதைப் பிற்போட்டுக்கொண்டே வந்தது. தொழில் நுட்பம் குறித்த அறிவு மிகச் சொற்பம் என்பதும் ; தவறாகிப் போய் விட்டால் இழப்பினை ஈடு செய்ய முடியாது என்ற தயக்கமும் அந்தப் பிற்போடலுக்குள் மறைந்திருந்தது.

 ஒழிந்திருந்த இந்தத் தயக்கங்கள் எல்லாம் கிடைத்த இந்த வருட இறுதி விடுமுறையில் விழித்துக் கொண்டு போக விடை கேட்டன. அப்படியான ஒரு மாலைவேளையில் துணிந்து setting இற்குள் இறங்கி மெதுவாகவும் கவனமாகவும் பாதுகாப்பாகவும் அடி எடுத்து வைத்து கீதா சொன்ன வகைப்பிரிப்புகளைச் செய்து கொண்டேன். பிறகு அந்தந்தப் பிரிவுகளுக்குள் பதிவுகளை வகைப்படுத்த ஆரம்பித்த போது அது ஓர் எதிர்பாராத பின்னோக்கிய பயணமாகவும் நல்லதொரு நினைவு மீட்டலாகவும் அமைந்தது ஓரு மகிழ்வான தற்செயல். 

அதில் சின்னப்பிள்ளைத் தனமான பதிவுகள், தான் தோன்றித்தனமான பதிவுகள், ஒன்றுமே இல்லாத பதிவுகள்....இப்படி என  நான் ஆடிய கூத்துகள்....வெட்கப்படத் தக்கவை என அவற்றை நான் இனம் கண்ட போதும் அவற்றில் எந்த ஒரு மாற்றங்களும் செய்யாது அவற்றை அப்படி அப்படியே அந்தந்த வகைப்பாட்டுக்குள் அடக்கி விட்டேன்.

பணிப்பிணி ஒன்று அகன்ற மகிழ்வெனக்கு! 

இவ்வாறு நான் பின்னோக்கிப் பயணித்த போது தான் எழுதி Draft இல் போட்டு வைத்திருந்த - பின் மறந்தே போய் விட்டிருந்த - பல அம்சங்களைக் காண முடிந்தது. அவை இப்போதும் வரிசையாகப் பிரசுரத்துக்காகக் காத்திருக்கின்றன...கொஞ்சம் மெருகேறிப் பின் அவை வரக் கூடும்....

ஆனால் இந்த மெருகேற்றல் நடந்து கொண்டிருந்த வேளையில் நான் கண்டுகொண்ட;  விசனத்தைத் தந்த அம்சம் ஒன்றையும் குறிப்பிட வேண்டியது அவசியம். அது என்னவெனில் குறிப்பிட்ட இணையத் தளம் ஒன்று என் பதிவுகளையும் ஒளிப்படங்களையும் தங்களுடய பெயரில் உருமாற்றி தம் தளத்தில் பிரசுரம் செய்திருந்தமை தான் அது. 

என்னே ஒர் அநாகரிகம்....! இங்கிதம் கருதி அது என்ன இணையத்தளம் என்பதை இங்கு பகிரங்கப்படுத்தாது விடுகிறேன்.

அதனால் பிரசுர உரிமை குறித்த ஓர் எச்சரிக்கையை என் வலைப்பக்கத்தில் கறாராக இட நேர்ந்தது. அதே நேரம் கூகுள் இமேஜில் இருந்து நான் படங்களைப் பாவிப்பதில்லையா என்று என் மனசாட்சி கேட்கிற கேள்வி ஒன்றுண்டு. அது நியாயமானதும் கூட. நான் அவ்வாறு செய்ததுண்டு தான். ஆனால் நான் அவற்றை அதில் பதிக்கப்பட்டுள்ள இலட்சினையை  வெட்டி உருமாற்றம் செய்தோ அல்லது அதனை என்னுடயதாக்கி அதில் என் இலட்சினையைப் பொறித்தோ ஒரு போதும்   பிரசுரித்ததில்லை. 

எனினும் 1.1. 2018 இலிருந்து கூகுள் இமேஜில் இருந்தும் கூட இனிப் படங்கள் எடுப்பதைத் தவிர்க்கவே முயல்கிறேன். 

இவைகளைத் தவிர இணைப்புகளை பதிவுகளில் இணைப்பது தொடர்பான புதிய மார்க்கம் ஒன்றினை இன்று கீதா மூலமாகக் கண்டு கொண்டேன். அது பலகாலமாக எப்படி எப்படி என்று என் மனதைக் குடைந்து கொண்டிருந்த போதும் அதனை சரியாக அறிந்து கொள்ளத் தவறி இருந்தேன். அதை புது வருடமான இன்று (1.1.18 ) கண்டு கொண்டேன். சொல்லித்தந்த கீதாவுக்கு நன்றி.

புது வருடம் இப்படியாக மலர்ந்திருக்கிறது....

நண்பர்களே! 

இன்று என்பது மட்டும் தான் நிஜம் என்று பதிவுலகும், வாழ்க்கையும் எனக்குக் கற்றுத் தந்திருக்கிறது.

’Do Dance! like no one watch you’...நள்ளிரவு புது வருடக் கொண்டாட்ட வாணவேடிக்கைகாட்சிகள் ABC தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த போது அதனை நடத்திக் கொண்டிருந்த பெண்மணி சொன்ன வாழ்த்து அது.

இன்றய வாழ்வை வாழ்வோம்! எங்களுக்குப் பிடித்த மாதிரி.....
எங்களுக்கு கைவந்த மாதிரி!! மேலும், எங்களுடய Own Style இல்!!

      Happy New Year!