பிரசுரமாகாத முதல் பகுதி இது:
ஒரு குவளை ரசனை - 1 -
ரசனைக்கு ஏதேனும் தரநிர்ணயம்
இருக்கின்றனவா?
அது அவரவர் மனநிலை ,ஆர்வம்,
விருப்பம், நேரம், தேவை போன்ற இன்னபிறவற்றில் தங்கியிருக்கிறதாக எனக்குத் தோன்றுகிறது.
இவை காலத்துக்குக் காலம்
மாறியும் பெருகியும் விகாரப்பட்டும் சில வேளைகளில் மேன்நிலைப்பட்டும் கீழிறங்கியும்
கூடப் போவதுண்டு. வயதோடு வாழ்க்கை அனுபவங்களோடு இவற்றுக்கு நிறைய தொடர்புண்டு. ரசனாவுணர்ச்சி
முற்றாக வற்றிப் போய் விடும் ஆபத்துக்களும் இந்த விபரீத வாழ்க்கைச் சூழலில் நிகழலாம்.
என்னுடய ரசனா உணர்ச்சிகளும்
அவ்வாறு தான். புலம் பெயர்ந்து வந்ததன் பிற்பாடு பார்வைகள் கொஞ்சம் மாறிப் போயிற்று.
புத்தகத்துக்குள் மட்டும் முகம் புதைத்திருந்த நான் வின்ரர் காலத்து போர்வையை விலக்கிப்
பார்த்த ஒரு பொழுதில் பிற நாட்டினருடய ரசனாவுணர்ச்சிகள் மிக மாறிப் போயிருக்க; வித்தியாசப்பட்டிருக்கக்
கண்டேன். உள்ளாடைகள் மட்டுக்குமான கடைகளுக்குப் போனீர்களானால் அவர்கள் ரசனைகளின் உச்சத்தை
அங்கே காணலாம்.
அப்பிள், பியர்ஸ் பழங்களுக்குக்
கூட சீனிப்பாணி ஊற்றி சமையலாகச் செய்து சாப்பிடும் ரசனையைப் பார்த்ததும் நான் கலங்கிப்
போனேன்..எனக்கேனோ பழங்களைச் சமைக்க மனம் வருவதில்லை. வாழைப்பழத்தைப் பொரிப்பதையும்
பச்சைஇறைச்சியை மிக்ஷியில் அரைப்பதையும் எனக்கு சகிக்க முடியாது.
நல்ல வேளையாக எனக்கு இவற்றில்
எல்லாம் ஆர்வம் தோன்றவில்லை. ஆனால் விசித்திரமான பழக்கம் ஒன்று எனக்குத் தொற்றிக் கொண்டு
விட்டது. தேநீர் பிரியையாய் இருந்த நான் எப்போதென்று துல்லியமாய் சொல்ல முடியாத தருணம்
ஒன்றில் கோப்பிப் பிரியையாய் ஆகிப் போனேன்.
கோப்பி போடுவது ஒரு ரசனையின்
பாற்பட்டது. கடைகளில் எத்தனை எத்தனையோ வகையான கோப்பிகள் உள்ளன. சீனருக்கு பச்சை தேநீரும்
லெபனான் நாட்டினருக்கு short Black தேநீரும் ஆங்கிலேயருக்கு கப்பச்சீனோ பிளக் வைட்
என்றும் மொக்கா, சாயா என்றும் ஏகப்பட்ட வகைகள். அதை விட தனித்தனியான கோப்பிக் கடைகள்
தத்தமக்கான தனித்துவ சுவைகளில் கோப்பிகளைத் தயாரித்து பெயர் சூட்டி விநியோகிப்பதும்
உண்டு. மக்கொஃபி, குளோறியா ஜீன்ஸ் போன்றவை அவற்றில் சில. இதை விட வாசனையூட்டப்பட்ட
கோப்பிகள் ஏராளம் ஏராளம்.
ஆனால் பிரச்சினை என்னவென்றால்
அதில் எதுவும் என் ரசனைக்கு உட்பட்டதாக அமையவில்லை. நானாக தயாரிக்கின்ற எனக்கு மட்டுமேயான
ஒரு கோப்பி வகையை நான் எனக்காக உருவாக்கிக் கொண்டிருக்கிறேன். என் குடும்பத்தாருடய
பாரம்பரிய சுவையில் இருந்தும் அது முழுக்க முழுக்க வேறுபட்டது. அதே நேரம் வெளிநாட்டு
தாற்பரியங்களில் சிலவற்றை நுட்பமாகக் கலந்ததது.. காலை வேளை ஜன்னலோர கதவு திறக்க தெரியும்
தோட்டத்துப் பூக்கள் ஆட, குருவிகள் பாட, காலை வெய்யில் பட, குளிர்காற்று வருடிச் செல்ல,
சீனி சாப்பிட வரும் ஒரு கூட்டம் பஞ்சவர்ணக் கிளிகளைப் பார்த்தபடி எனக்கான இந்த பிரத்தியேக
கோப்பியின் ஒவ்வொரு சொட்டையும் அனுபவித்து அருந்துகின்ற தருணம் அமுதம்.
ஒரு நாளுக்கான ஆரம்பம்
அது தான். அதிலிருந்து எனக்கு கற்பனைகள் ஜனிக்கும்; உற்சாகம் பீறிடும்; வாழ்க்கை இனிக்கும்,
எழுத்துக்கள் உருவாகும். வீட்டு வேலைகள் வெளி வேலைகள் எல்லாம் அதற்குப் பின் சீராக
நடக்க ஆரம்பிக்கும்.
எனக்கான கோப்பியைக் கண்டுபிடித்த
பின் அதனை ஊற்றிக் குடிக்கும் குவளையில் பார்வை மெல்ல மெல்ல படிய ஆரம்பித்தது. கடைகளுக்குப்
போகின்ற பொழுதுகளில் வண்ணம் வண்ணமான குவளைகளில் மனம் லயிக்கலாயிற்று. கவனம் மெல்ல அதில்
குவிய ஆரம்பித்தது. அந்தக் கோப்பியை இந்தக் குவளையில் குடித்தால் தான் ருசிக்கும் என்று
ஒரு தோற்றப் பிரமை வர வர வலுக்க ஆரம்பித்தது. (பிரச்சினைகளும் இவ்வாறுதான் மெல்ல மெல்ல
முகம் காட்டத் தொடங்கும்.)இலங்கையில் கிளாஸ்களிலும் ரம்லர்களிலும் அலுமீனிய எனாமல்
பாத்திரங்களிலும் பின் நாளில் கப் அண்ட் சோசர்களிலும் பானங்கள் குடித்ததெல்லாம் வரலாறாகி
இங்கே mug என அழைக்கப் படுகின்ற ஒரு வகையான குவளைகளில் குடிப்பதாக அது பரிநாமம் பெற்று
விட்டது.
அதில் தான் எத்தனை எத்தனை
வடிவங்கள்!. எனினும் சலிப்பேற்படாதிருக்க நானும் காலத்துக்குக் காலம் வகை வகையான குவளைகளுக்கு
மாறுகிறேன். கடைகளுக்குப் போனால் குவளைப்பக்கங்களில் கவனம் குவிவதை இப்போதெல்லாம் தவிர்க்க
முடிவதில்லை.
வயதேற; அனுபவங்கள் கூட;
இப்போதெல்லாம் பிரம்பு நாற்காலியில் உட்கார்ந்து இப்படியான கோப்பியைப் பருகியவாறு ரசனை
பற்றிப் பேச ஆசை எழுகிறது. இதற்குத் தூபம் போடுவது போல அண்மையில் ஓர் அழகிய குவளை கிடைத்தது.
பெண்மையும் அழகும் நளினமும் வாகான கைப்பிடியும் கொண்டமைந்த அது சிறிய வெள்ளை நிற பின்னணியில்
பறவை ஒன்று மரக்கிளையில் உட்கார்ந்திருக்கும் வடிவத்தைக் கொண்டிருந்தது. அதே வண்ணம்
தீட்டிய ஒரு பெட்டிக்குள் அது அடக்கமாய் சமர்த்தாய் உட்கார்ந்திருந்தது. அதனை வாங்கிக்
கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.
வந்தவுடன் அதை அப்படியே
வைத்துவிடுவதும் வழக்கமல்ல. ஆற அமர உட்கார்ந்து அதன் தோற்றப் பொலிவில்; செய்நேர்த்தியில்
மனதைச் சற்றே திளைக்க விட்டு, அதன் அனைத்துப் பாகங்களையும் பரிசீலனை செய்தால் தான்
என் ஆத்துமம் திருப்தி பெறும்.
எனக்கு வேறு வேலை இல்லையா
என்று நீங்கள் கேட்கலாம். கோப்பி என் உற்சாக ஊக்கியல்லவா? இயக்கத்துக்கான அடிப்படை
இங்கிருந்து தான் துவங்குகிறது. வாழ்க்கையை அனுபவிப்பது என்பது இது தான். அது ஒரு அத்திவாரம்;
அடிப்படை.
அது வாழ்க்கையை வாழும்
செயற்பாடு.
ஒரு நேரம் ஒரு வேலையை மாத்திரம்
கருத்தூன்றிச் முழுமையாக அனுபவித்துச் செய்தல் என்பதே நம் வாழ்க்கையில் இல்லாது போய்
விட்டது என்பது எவ்வளவு பெரிய இழப்பு? அவசர அவசரமாய் எழுந்து, அவசர அவசரமாய் குளித்து,
அவசர அவசரமாய் சாப்பிட்டு, அவசர அவசரமாய் ரயில் பிடித்து எங்கு ஓடுகிறோம்? ”வாழ்வதை”
மாத்திரம் தவற விட்டு விட்டு!
சரி எங்கு விட்டேன்? ஓம்.
ஒரு பெட்டிக்குள் அமைந்திருக்கின்ற ஒரு தேநீர் குவளை வாங்கி வந்தேன். பெட்டியை திறக்காமல்
அதில் என்ன எழுதியிருக்கின்றது என்று ஆராய்ந்தேன். அது Miss.Peacock என்பவரால் உருவாக்கப்
பட்டது என்று ஒரு பக்க செய்தி சொன்னது. அழகிய நீல நிற மயிலின் படமும் சில மரக்கிளைகளும்
அலங்கரிக்க அப்பெண்ணின் பெயர் அழகெழுத்துக்களில் பொறிக்கப் பட்டிருந்தது. மற்ற மூன்று
பக்கங்களும் குவளையில் பதிக்கப்பட்டிருக்கின்ற குருவி அதே வண்ணத்தில்
மற்றப்பக்கம் இந்தக் குவளையை
உருவாக்கியவரின் குணநிலைகள்; இதனை செய்ய அவருக்கு தூண்டுகோலாக இருந்த சூழல் எவ்வாறு
இதனை அவர் தயாரித்திருந்தார் போன்ற விபரங்கள் கொடுக்கப்பட்டிருந்தன. முடிவில் அவரது
இணையத்தள முகவரியும் தொலைபேசி இலக்கமும் குறிக்கப் பட்டிருக்கிறது. Miss.Peacock க்கு
ஷொப்பிங் செய்ய விருப்பமாம். படித்தல், ஓவியம் வரைதல், பூந்தோட்டம் செய்தல், பலவண்ண
பலரக துணிகளை ஸ்பரிசித்தல்; காணுதல் அவருக்கு விருப்பமான ஒன்றாக இருக்கிறது. மேலும்,
தன் நெருங்கிய மனமொத்த நண்பர்களோடு அளவளாவுதல், இந்திய நடனங்களை கண்டு களித்தல், புதிய
நாடுகளைச் சுற்றிப் பார்ப்பதில் ஆர்வம் உள்ளவராம். அவருடய தொழிலாற்றலோடு கூடிய கலைப்பார்வைகள்
புதிய தனித்துவமான வடிவங்களைச் செய்யத் தூண்டியதாம். இவ்வாறான கலைத்தேடல்களோடு இருந்த
போது வந்து இணைந்த ஒத்த ரசனையுள்ளவர்களால் இப்போது சீனாவில் இருந்து தனக்கே தனக்கான
புது வடிவத்தில் தேநீர்கிண்ணங்களை உற்பத்தி செய்வித்து விற்பனை செய்து வருவதாக விபரம்
சொல்லியது. மேலதிகமாக உங்களுக்கு சொல்லவோ கேட்கவோ ஏதேனும் இருந்தால் தொடர்பு கொள்ள
மின்னஞ்சல் முகவரியும் தொலைபேசி இலக்கமும் கொடுக்கப் பட்டிருக்கிறது.
இப்போது அந்தக் குவளையில்
தேநீர் குடிக்கும் போது அதன் பரிமானம் இன்னொரு எல்லையைத் தொட்டு நிற்கிறது.
கோப்பியின்
முழுமையான ரசனையுடனான ருசி இப்போது தான் சித்தித்திருக்கிறது. அந் நினைவுகளுடன் கோப்பி
மிகவும் தித்திக்கிறது.
ஈழத்தின் வட புலத்தில் இருந்து ஓசானியாவுக்குப் புலம் பெயர்ந்து
வாழும் கமலேஸ்வரியின் மகள் யசோதா. பத்மநாதன் எழுதியது.
23.4.2013 மாலை.
..............................................
பிரசுரித்தமைக்கு நன்றி: காற்றுவெளி இணைய சஞ்சிகை, வைகாசி 2013, பக்: 115 - 121 ;
காண: http://kaatruveli-ithazh.blogspot.com.au
ஒரு குவளை ரசனை – 2 -
ஒரு பயனுள்ள புத்தகம் படிக்கும்
சுகம் என்பது தேநீர் குடிக்கும் அந்த ரசனா அனுபவத்துக்குச் சற்றேனும் குறைந்ததல்ல.அது பாதை காட்டும். புதியவாசல்களைத்
திறந்து வைக்கும். ஒரு நல்ல நண்பனைப்போல் எப்போதும் அது உங்களோடு கூட வரும்.
18.4.2013 அன்று மதியம் 1.00 மணியில் இருந்து 2.00 மணி வரை “The Creative Seed" என்ற புத்தகத்தை எழுதிய ஆசிரியர் Lilian Wissink தன் புத்தகம் பற்றிப் பேசப்போகிறார் என்ற செய்தி Author Talk என்ற தலைப்போடு சில வாரத்துக்கு முன்னரே என் தொழில் முகவரிக்கு வந்திருந்தது. Parramatta நூலகம் அதனை ஏற்பாடு செய்திருந்தது. தலைப்பும் நோக்கமும் அழகாய் இருந்ததால் என் பெயரைப் பதிவு செய்திருந்தேன். கூடவே வருவார்கள் என்ற நம்பிக்கையில் இரு கலைஞர்களுடய பெயர்களையும் அவர்களைக் கேட்காமலே கொடுத்தும் விட்டிருந்தேன்.
அது தவறோ?
அன்றய காலை மற்ற இருவரும் தம் விருப்பமின்மையைத் தெரிவித்த போது மனது மெல்ல சோர்ந்து போனது. கலை என்பது அழகுணர்ச்சியுடனான ஆக்க பூர்வ வெளிப்பாடுகளைக் கொண்டமைவது. அவர்கள் கண்கள் எப்போதும்துருதுறுத்தபடி
இருக்கவேண்டும். மனம் சதா புதிய விடயங்களைக் காண ஆவலாய் உற்சாகமாய் சுறுசுறுப்பாய்
லபக்கென்று பற்றிவிடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும்.தேடல் ஒன்று எப்போதும்
இருந்துகொண்டே இருக்க வேண்டும். வாய்ப்பிருந்தும் புதிதானவற்றைக் காண ,அறிய, பரீட்சிக்க, கலந்துரையாட அத் துறைகளில் ஈடுபடுபவர்களே ஏன் கதவுகளை இழுத்துப் பூட்டிக் கொள்கிறார்கள் என்று தெரியவில்லை.
புலம்பெயர்ந்த நாட்டில் கலை இலக்கியத் துறையின் கதவுகளை எந்தக்
கடப்பாரை கொண்டு திறந்து வெளியுலகை - தாம் வாழும் உலகைக் காட்ட முடியும் என்று தெரியவில்லை.
அதற்கு மிகுந்த பிரயத்தனம் வேண்டியிருக்கிறது. இளம்சந்ததி நாட்டின் பொது ‘ஜனநாயக’ தேசிய நீரோட்டத்தில்
இரண்டறக்கலந்து
விட்டது. பழைய சந்ததி பட்டுப்புழு மனோபாவத்தில் தன்னைச்சுற்றி கூடமைத்து அதில் தன்னிறைவு
கண்டு விட்டது. வண்ணத்துப் பூச்சியின் வண்ணங்களையும் சிறகடிப்பில் தெரியும் வசந்தங்களையும்
புலத்துத்தமிழ் எப்போது கொண்டுவரப்போகிறது?
எனினும் நான் போனேன். கச்சிதமான மேல் மாடி அறை ஒன்றில் தேநீர், கோப்பி, கேக், பிஸ்கட் வகையறாக்களோடு 9.10 பேர் வந்திருந்தார்கள். சின்னதான ஒரு microphone ஓடு புத்தக ஆசிரியரும் புன்னகையோடு பிரசன்னமாயிருந்தார். அவரவர் தமக்குப் பிடித்தமான உணவுப் பதார்த்தங்களோடு கதிரைகளில் அமர, நூலகர் புத்தக ஆசிரியரை அறிமுகப் படுத்தி ஆசிரியரைப் பேச அழைத்தார்.
புன்னகையோடு இன்று தன் பேச்சு எவ் எவற்றை உள்ளடக்கி இருக்கும் என்பதை சுருக்கமாகக் கூறி, தன் வாழ்க்கையின் எதிர்பாராத ஒரு பக்கத்தில் இருந்து பேச்சை ஆரம்பித்து, இந்தப் புத்தகத்தினை எழுதக் காரணமாய் இருந்த பின்னணி பற்றியும்; அப்புத்தக உருவாக்கத்தோடு தனக்கேற்பட்ட அனுபவங்கள் பற்றியும்; புத்தகம் சொல்லுகின்ற கருப்பொருள் என்ன என்பது பற்றியும்; அது நமக்கு என்னென்ன வகையில் பயன் படக் கூடும் என்பது பற்றியும் உண்மையும் கனிவும் உறுதியும் நம்பிக்கையும் நேர்மையும் அடக்கமும் மிளிர வெளிப்படையாகவும் மென்மையாகவும் உரையாற்றினார். தெளிவான ஆங்கிலம். அச்சொட்டான அக்கறை மிக்க பேச்சு.
புன்னகையோடு இன்று தன் பேச்சு எவ் எவற்றை உள்ளடக்கி இருக்கும் என்பதை சுருக்கமாகக் கூறி, தன் வாழ்க்கையின் எதிர்பாராத ஒரு பக்கத்தில் இருந்து பேச்சை ஆரம்பித்து, இந்தப் புத்தகத்தினை எழுதக் காரணமாய் இருந்த பின்னணி பற்றியும்; அப்புத்தக உருவாக்கத்தோடு தனக்கேற்பட்ட அனுபவங்கள் பற்றியும்; புத்தகம் சொல்லுகின்ற கருப்பொருள் என்ன என்பது பற்றியும்; அது நமக்கு என்னென்ன வகையில் பயன் படக் கூடும் என்பது பற்றியும் உண்மையும் கனிவும் உறுதியும் நம்பிக்கையும் நேர்மையும் அடக்கமும் மிளிர வெளிப்படையாகவும் மென்மையாகவும் உரையாற்றினார். தெளிவான ஆங்கிலம். அச்சொட்டான அக்கறை மிக்க பேச்சு.
அதன் பின் கலந்துரையாடலுக்கான நேரம். பலருக்கும் பல விதமான கேள்விகள். சொற்பமான பேரே வந்திருந்த போதும் அவ்வளவு பேரும் ஈடுபாடும் தேவையும் விருப்பமும் உள்ளவர்களாகவும் நட்புணர்வும் அன்பும் வாய்க்கப்பெற்றவர்களாக இருந்ததும் ஒரு ரம்யமான சூழலை அங்கு ஏற்படுத்தியிருந்தது. ஒவ்வொருவருடய கேள்விகளும் மற்றவருக்கும் பயன் படும் விதமாகவும் உதவும் விதமாகவும் அமைந்திருந்தமை ஒரு கண்ணியமான கூட்டம் அது என்பதற்குப் போதுமான ஆதாரமாக இருந்தது.
அது முடிய நூலகர் வந்து அடுத்த மூன்று மாதத்திலும் என்னென்ன புத்தகங்கள் பேசப்பட இருக்கின்றன என்ற தகவலோடு நன்றி கூறி நிகழ்ச்சியை மிகச் சரியாக 2.00 மணிக்கு நிறைவு செய்தார்
புத்தக ஆசிரியர் தம் முன் சுருக்கத்தில் குறிப்பிட்டிருந்த படி ஒரு சிறு பயிற்சித்தாளை நமக்குத் தந்தார்.
அடிப்படையில் அவர் ஒரு உளவளதுணையாளர், சுய மேம்பாட்டு திட்டவியலாளர். முன் சுருக்கத்தில் குறிப்பிட்டிருந்த படி தந்த அந்த பயிற்சித்தாள் புத்தகம் சொல்வதை விளங்கிக் கொள்ளும் வகையிலும் நம் எல்லோருக்கும் ஏதோ ஒரு வகையில் பயன் பெறும் முறையிலும் இருந்தது. அதனால் அதனைத் தமிழ் படுத்தி இங்கே தருகிறேன்.
அடிப்படையில் அவர் ஒரு உளவளதுணையாளர், சுய மேம்பாட்டு திட்டவியலாளர். முன் சுருக்கத்தில் குறிப்பிட்டிருந்த படி தந்த அந்த பயிற்சித்தாள் புத்தகம் சொல்வதை விளங்கிக் கொள்ளும் வகையிலும் நம் எல்லோருக்கும் ஏதோ ஒரு வகையில் பயன் பெறும் முறையிலும் இருந்தது. அதனால் அதனைத் தமிழ் படுத்தி இங்கே தருகிறேன்.
1.என் மகிழ்ச்சிக்காக எப்போதும் நான் செய்ய விரும்புகின்ற ஒன்று......
2.எனக்கு வேலைப்பழு இல்லாவிட்டால் நான் எப்பவும் செய்ய விரும்புகின்ற ஒன்று........
3.நான் சிறு பிள்ளையாக இருந்த போது நான் எப்போதும் செய்து மகிழ்ந்த ஒன்று.......
4.என் புத்திளமைப் பருவத்தில் நான் மிக அனுபவித்துச் செய்த ஒன்று.......
5.என்னால் இப்போதும் செய்தால் மகிழ்வேன் என்று நான் கருதுகின்ற ஒன்று( படம், ஓவியம் வரைதல்,செதுக்கு வேலை, எழுத்து, கலைப்பொருட்கள் செய்தல், வாத்தியக் கருவி வாசித்தல், பாடுதல், ஆடுதல்.....)
6.எனக்கு விருப்பம்.........
7.காலங் கடந்து விட்டது, எனக்கு திறமை இல்லை என்ற நினைப்பை நான் கடந்து விட்டால் நான் செய்வேன் என்று நினைக்கின்ற ஒன்று.......
8.எனக்கு நான் அனுமதி தர நினைத்தால் தர விரும்பும் ஒன்று.......
9.எனக்கே எனக்கான நேரத்தை எனக்கென நான் ஒதுக்கும் போது நான் செய்ய நினைப்பது..............
10.என் இளமைக்கால என்னோடு நான் பேச நினைத்தால் நான் சொல்ல நினைப்பது.............................
11.இன்றில் இருந்து இன்னும் ஐந்து வருடத்துக்குள்.........
12.என்னுடய அடுத்த கட்ட நடவெடிக்கை.....................
புத்தகம் நமக்குள் இருக்கின்ற நம்மை; நமக்கு மட்டுமாக வாய்த்திருக்கும் ஓர் அழகியலை எப்படி அடையாளம் காண்பது அதனை எப்படி வளர்த்தெடுப்பது அதில் நாம் காணக்கூடிய ஆத்மார்த்த திருப்தி எப்படியானது என்பது பற்றியது. உனக்குள் இருக்கும் உன்னை கண்டு பிடி என்பதே அதன் தொனிப்பொருள். அதற்கு அது கைபிடித்து வழிகாட்டிச் செல்கிறது. ஒரு பேரன்புத்தாயாக தன் பாசமிகு பிள்ளையை கை பிடித்து ”உள்நோக்கி” பக்குவமாய் நம்மை அழைத்துச் செல்கிறது அது.
’தன்னைக்’ கண்டு பிடிக்கும் மார்க்கம் அங்கே புலப்படுகிறது.
’ஒரு குழந்தைக்கு முன்னால கிலுகிலுப்பையை காட்டுங்க அது சிரிக்கும்.
அதையே ஒரு தாத்தாக்கு முன்னால காட்டுங்க அவருக்கு என்னமா கோபம் வருகிறது. எப்பிடி இருந்த
தாத்தா எப்பிடியாயிற்றார் பார்த்தீங்களா?’ என்று கோமல்சுவாமிநாதன் கேட்டது நினைவுக்கு
வருகிறது. வாழ்க்கை நம்மை அப்படி ஆக்கி விடுகிறது. இப் புத்தகம் தாத்தாவுக்குள் இருந்த
குழந்தையை மீட்டுவர பிரயத்தனப் படுகிறது.
புத்தக ஆசிரியருக்கு தன்னுடய புத்தக வெளியீட்டினால் ஒரு வாசகனுக்கு
எவ்வகையில் அது பயன்படும் என்ற நோக்கமே வலுவாகவும் அக்கறைக்குரிய பொருளாகவும் இருக்கிறது.
இவ்வாறு மட்டும் நம் ’பிரம்மாக்கள்’ நினைக்கப் புகுந்தால் வெளிநாடுகளில் பணத்தால் பெருமையை
விலைக்கு வாங்க சமூகத்தை பலிக்கடாவாக்கும் நிலைமை மாறும். புற்றீசல்கள் போல் புறப்படும்
பிரசுரங்கள் மறுபரிசீலனை செய்யப்படும்.
ஒரு சமூகத்தின் கலைஞர் கூட்டம் என்பது எப்போதும் சிறிதே. அது
எச் சமூகத்துக்குமான உண்மை. அதனை
எதிர் கொள்ள நாம் ஏன் அஞ்ச வேண்டும்? வற்புறுத்தல்களோ முகமன்களோ நிர்ப்பந்தங்களோ
மறைமுக நிபந்தனைகளோ இல்லாத
சுந்திரமான வெளிப்படையான அழைப்பிதழ்களே ஒரு வெளியீட்டையும் பிரசுரத்தையும் அர்த்தப்படுத்துகின்றது. எல்லோருக்குமான ஒரு விடுதலை
உணர்வது. மேற்கூறிய நிகழ்வுக்கு வந்திருந்த யாரும் சனத்தொகையைக் கணக்கெடுக்கவில்லை.
அதனால் தொகை தாண்டிய தரம் அங்கு தெரிந்தது.
இதனைச் சொல்லுகின்ற போது எனக்கு நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு
வருகிறது. அப்போது முதுகு வலியினால் அவஸ்தைப்பட்டு 3 வாரம் படுக்கையில் கிடந்தேன்.
என்னைப் பார்க்க வரப்போவதாக எனக்குத் தெரிந்த ஒரு அவுஸ்திரேலியப் பெண்மணி லொறேற்றா
என்பது அவள் பெயர்; தொலைபேசியில் அறிவித்திருந்தாள். எனக்கோ பெரும் கூச்சம். வீடு ஒழுங்கு
படுத்தப்பட்டிருக்கவில்லை. வீட்டைப் பார்த்து அவள் என்னை எவ்வாறு எடை போடப்போகிறாள்
என்று எனக்குள் பெருத்த மனப்போராட்டம். ’என் வீடு ஒழுங்கற்றுக் கிடக்கிறது, மன்னித்துக்
கொள்’ என்ற போது அவளுக்கோ பெருத்த ஆச்சரியம்! நான் உன்னைத் தானே பார்க்க வருகிறேன்.
உன் வீட்டையல்லவே என்று மிகுந்த வியப்போடு கேட்டாள். நீ ஏன் முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும்
முடிச்சுப் போடுகிறாய் என்பது அதன் தொனிப்பொருளாக இருந்தது.
அதிலிருக்கிற உண்மை என்னை இன்றுவரை கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கிறது.
எங்கள் பார்வைகளில் மாற்றங்களை அவ்வுண்மை வேண்டி நிற்கிறது.
அது போலத்தான் நம்முடய வெளியீட்டு விழாக்களும் நிரல்படுத்தப்படுகின்றன.
புத்தகத்தை ஆகா ஓகோ என்று புகழ மூன்று பேர் வருகிறார்கள். அதற்கு நன்றி சொல்லி நெகிழ்ந்து
ஆசிரியர் பேசி முடிய, முதற்பிரதி வாங்குவோர் தொகை நீண்டு கொண்டே செல்கிறது. உண்மையான
வாசக உள்ளம் இப் போலிகளை கண்டதும் ஓடி ஒழிந்து கொள்கிறது.
அங்கே வியாபார யுக்திகளும் தனிமனித புகழ்மாலைகளும்
மலிந்து கிடக்கின்றன. முகமனுக்காக வருகின்ற மனிதர்கள்
மணிக்கூடுகளைப் பார்த்த படி இருக்கிறார்கள். நடுத்தர வயதினரோவெனில் கைத்தொலைபேசி வழியாக
Face book இல் நான் எங்கிருக்கிறேன் என்பதை படத்தோடு பிரசுரிப்பதில்
மும்மரமாக இருக்கிறார்கள். முதல் பிரதி வாங்குவோர் தொகை நீண்டுகொண்டே போக, முதியவர்கள்
சிரமபரிகாரம் செய்து கொள்ள எழுகிறார்கள். இளம் பிள்ளைகளைக்
காணவே காணோம். சிறுபிள்ளைகள் அங்கும் இங்குமாய் விளையாடித்திரிய,பின் வரிசையில் குடும்ப
பாரம் பகிரப்படுகிறது.
புறக்குடத்தில் நீர் வார்க்கப்படுவதைப் பார்க்க நாம் சபிக்கப்பட்டிருக்கிறோம்.
இப்போது இந்த “The Creative Seed" என்ற புத்தகம் நம்மோடு உறவு கொண்டாடுகிறது. அந்த எழுத்தாளரோடு; அந்தக் குரலோடு; அந்த அனுபவங்களோடு; அந்தத் தோற்றப் பொலிவோடு; கேள்விகளுக்கு அவர் வழங்கிய பதில்களோடு; அந்த பிரியமான கையெழுத்தோடு பின்னிப் பிணைந்தவாறு இருக்கிறது.
பிடித்த ஒரு துறைசார் புத்தகத்தை முழுமையாக அதன் அத்தனை தாற்பரியங்களோடும் உள்வாங்க வேண்டுமானால் நிகழ்ச்சிகள் இவ்வாறு ஏற்பாடு செய்யப்பட வேண்டும். இவ்வாறான நிகழ்ச்சிகளுக்கு விருப்பமும் ஆர்வமும் உள்ள வாசகர்கள் மட்டும் போக வேண்டும். ஆசிரியரையும் அது உருவான விதத்தினையும் பின்னணியினையும் படைப்பாளியோடு வாசகன் உரையாடி முழுமையாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
இப்போது இந்த “The Creative Seed" என்ற புத்தகம் நம்மோடு உறவு கொண்டாடுகிறது. அந்த எழுத்தாளரோடு; அந்தக் குரலோடு; அந்த அனுபவங்களோடு; அந்தத் தோற்றப் பொலிவோடு; கேள்விகளுக்கு அவர் வழங்கிய பதில்களோடு; அந்த பிரியமான கையெழுத்தோடு பின்னிப் பிணைந்தவாறு இருக்கிறது.
பிடித்த ஒரு துறைசார் புத்தகத்தை முழுமையாக அதன் அத்தனை தாற்பரியங்களோடும் உள்வாங்க வேண்டுமானால் நிகழ்ச்சிகள் இவ்வாறு ஏற்பாடு செய்யப்பட வேண்டும். இவ்வாறான நிகழ்ச்சிகளுக்கு விருப்பமும் ஆர்வமும் உள்ள வாசகர்கள் மட்டும் போக வேண்டும். ஆசிரியரையும் அது உருவான விதத்தினையும் பின்னணியினையும் படைப்பாளியோடு வாசகன் உரையாடி முழுமையாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
பயன்பாட்டுத்தன்மை துலக்கம் பெற ஆசிரியரின் திகதியிட்ட கையெழுத்தோடும் பிரியங்களோடும் புத்தகத்துக்கான முழுப் பெறுமதியைக் கொடுத்து புத்தகத்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.
கோப்பியும் கோப்பி குடிக்கும் பாத்திரமும் போல அது முழுமையானது.
உங்களுக்கேயான தேநீரை அதற்குரிய பாத்திரத்தில் சொட்டுச் சொட்டாய்
சுவைக்கும் அனுபவத்தேறல் அதில் கிட்டும்.
நிச்சயமாக!
நிச்சயமாக!
சொல்லவல்லாயோ?
– கிளியே!
சொல்ல
நீ வல்லாயோ?
வல்லவேல்
முருகன் – தனை இங்கு
வந்து
கலந்து மகிழ்ந்து குலாவென்று
சொல்லவல்லாயோ?
கிளியே!
சொல்ல
நீ வல்லாயோ?
பாரதி.
ஈழத்தின்
வடபுலத்திலிருந்து ஓசானியாக் கண்டத்துக்குப் புலம் பெயர்ந்து வாழும் கமலேஸ்வரியின்
மகள் யசோதா. பத்மநாதன் எழுதியது.
25.4.2013
காலை.
எங்கு ஓடுகிறோம்? ”வாழ்வதை” மாத்திரம் தவற விட்டு விட்டு!
ReplyDeleteரசனையோடு தயாரிக்கப்படும் பானமும், ரசனையோடு வாங்கப்படும் கோப்பையும் எத்துணை இனிதோ அதையும் தாண்டி அக்கோப்பையை உருவாக்கியவரைப் பற்றிய தகவல்களும் தெரியவருவது!
ரசனைக்குத் தர நிர்ணயம் அவரவர் மனப்போக்கு தான் தோழி!
ஒரு பயனுள்ள புத்தகம் படிக்கும் சுகம் என்பது தேநீர் குடிக்கும் அந்த ரசனா அனுபவத்துக்குச் சற்றேனும் குறைந்ததல்ல.அது பாதை காட்டும். புதியவாசல்களைத் திறந்து வைக்கும். ஒரு நல்ல நண்பனைப்போல் எப்போதும் அது உங்களோடு கூட வரும்.///
புத்தகம் நமக்குள் இருக்கின்ற நம்மை; நமக்கு மட்டுமாக வாய்த்திருக்கும் ஓர் அழகியலை எப்படி அடையாளம் காண்பது அதனை எப்படி வளர்த்தெடுப்பது அதில் நாம் காணக்கூடிய ஆத்மார்த்த திருப்தி எப்படியானது என்பது பற்றியது. உனக்குள் இருக்கும் உன்னை கண்டு பிடி என்பதே அதன் தொனிப்பொருள். அதற்கு அது கைபிடித்து வழிகாட்டிச் செல்கிறது. ஒரு பேரன்புத்தாயாக தன் பாசமிகு பிள்ளையை கை பிடித்து ”உள்நோக்கி” பக்குவமாய் நம்மை அழைத்துச் செல்கிறது அது.//
புத்தக ஆசிரியருக்கு தன்னுடய புத்தக வெளியீட்டினால் ஒரு வாசகனுக்கு எவ்வகையில் அது பயன்படும் என்ற நோக்கமே வலுவாகவும் அக்கறைக்குரிய பொருளாகவும் இருக்கிறது. //
நான் உன்னைத் தானே பார்க்க வருகிறேன். உன் வீட்டையல்லவே//
உங்களுக்கேயான தேநீரை அதற்குரிய பாத்திரத்தில் சொட்டுச் சொட்டாய் சுவைக்கும் அனுபவத்தேறல் அதில் கிட்டும்.//
உங்களோடு ஒரு தேநீர் நேரத்தில் உரையாடுவது போன்றதான நிறைவை தருகிறது தோழி பதிவின் அழகுறு விடயங்கள்.
மிக்க மகிழ்ச்சி நிலா.
ReplyDeleteவாழ்க்கையை அனுபவிப்பது என்பது இது தான். அது ஒரு அத்திவாரம்; அடிப்படை.
ReplyDeleteரசனைகள் நிரம்பிய பகிர்வுகள்..
மிக்க மகிழ்ச்சி செந்தாமரைத் தோழி. உங்களுக்கு எது பிடிக்கும்?
ReplyDelete