13.04.2013.
புது வருடம்!
காலை எழுந்து எல்லோரும் முழுகி சம்பிருதாய பூர்வமாக புது ஆடை அணிந்து புறப்பட்டோம்.
ஏற்கனவே திட்டமிட்டிருந்த படி கோயிலுக்கு! பெளத்த ஆலயத்துக்கு! பெயர் பொற்கோயில்.(Golden Buddha : Sukhothai Traimit)
நான் முதல் நாள் வாங்கிய ஆடை ஒன்றை தாராளமான சுடுநீரில் முழுகிய பின் மகிழ்ச்சியோடு அணிந்திருந்தேன். இதற்கிடையில் ஒரு விடயத்தை நான் சொல்ல வேண்டும். இங்கு( தாய்லாந்துக்கு) புறப்படுவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பாக ஒரு சிறு உடல் உபாதை ஒன்று கொஞ்சம் பயங்காட்டிக் கொண்டே இருந்தது.அது பெருக்கும் சாத்தியக்கூறுகள் இருக்கும் என்று தோன்றிய போதும் அதனை நான் வெளியே சொல்லி இந்தப் பயணத்தையும் நிறுத்த மனது வரவில்லை. விமானப்பயணத்தின் போதும் வந்திறங்கிய பின்னரும் அவ்வலி கொஞ்சம் பயங்காட்டிய வண்ணமே இருந்தது. அதனால் தயாராக வலிநிவாரன மாத்திரைகள் சிலவற்றை எடுத்து வைத்திருந்தேன். தாங்க முடியாத பட்சத்தில் அவற்றைத் தஞ்சம் அடைவதாக எனக்குள்ளான ஏற்பாடு.
சரி, இன்றய திட்டம் பொற்கோயிலுக்குச் சென்று விட்டு அப்படியே சைனா மார்க்கட்டைப் பார்த்து விட்டு (அருகில் தானாம்) அப்படியே அங்கேயே எங்கேனும் சாப்பிட்டு விட்டு தாய் மசாஜ்ஜிற்குப் போய் விட்டு அறைக்குத் திருப்புவது தான் எங்கள் திட்டம்.
தேசம் பொது விடுமுறையில் திளைத்துக் கிடந்த போதும் நம் ஹொட்டேல் வேலையாட்கள் அதே இன்முகத்தோடு அவ் அதி காலையிலும் நம்மை வரவேற்றார்கள்.
புது வருட வாழ்த்துக்கள் கூறி, நாம் இன்று பொற்கோயிலுக்குப் போக வேண்டும் டக்ஷி வேண்டும் என்று சொன்ன போது புன்னகையோடு பிளாஸ்டிக் பைகளில் உங்கள் கமறா போன்ற பொருட்களை சுற்றிக் கொண்டு செல்லுங்கள் இன்று Water Festival என்றும் தண்ணீரில் தெப்பலாய் நனைந்து தான் வருவீர்கள்; கடைகள் பலவும் பூட்டப்பட்டிருக்கும் என்ற தகவலையும் சொல்லி டக்ஷியை ஏற்பாடு செய்து தந்தார்கள்.
பொற்கோயில் பிரமாண்டமாகக் காட்சியளித்தது.நான்கு மாடிகளை அது கொண்டமைந்திருக்கிறது. அருகாகவும் முன் புறமாகவும் மண்டபங்கள் உள்ளன.வழிபாட்டுத் தலத்தை இப்போது உல்லாசப்பயணத்தின் ஒரு இடமாக ஆக்கியதாலோ என்னவோ உள்ளே நுழைவதற்கும் கட்டனம் அறவிடுகிறார்கள்.
உள்ளே செல்வதற்கு முன் கோயிலைப்பற்றிய வரலாற்று விபரங்கள் சில. இப் புத்த சிற்பம் தனித் தங்கத்தால் ஆனது.அடியில் இருந்து முடி வரை15 அடி 9 அங்குல உயரம் கொண்டது.கிட்டத்தட்ட 5.5 தொன்கள் நிறை.அதன் இன்றய பெறுமதி 28.5 மில்லியன் பவுன்ஸ் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.700 வருடப்பழமை கொண்டது.
கோயில் ஏற்கனவே உயரமான ஓரிடத்தில் தான் (படிக்கட்டுகளில் ஏறிப் போக வேண்டும்) அமைந்திருக்கிறது. முதல் தளத்தில் எதுவுமில்லை. ரிக்கற்றுக்களைப் பார்த்து விட்டு கையெழுத்தை வாங்கிக் கொண்டு உள்ளே செல்ல அனுமதிக்கிறார்கள்.
அடுத்த தளத்துக்குப் படியேறிச் சென்றால் அதில் நூதனக் காட்சி சாலை கோயிலின் வரலாறை ஆதர சாட்சிகளோடு சொல்லி நிற்கிறது. கட்டப்பட்ட முறை சிலையை எடுத்துச் சென்ற யுக்தி அவற்றுக்குப் பயன் பட்ட பொருட்கள் போன்ற விபரங்கள் அங்கு காட்சிக்கு வைக்கப் பட்டிருக்கின்றன.
எல்லா இடங்களிலும் மல்லிகையாலும் ஓக்கிட் பூக்களாலும் ஆன மாலையை விற்பனைக்கும் கடவுளுக்கும் வைத்திருக்கிறார்கள்.
அவர்களுடய வழிபாட்டு முறை சற்றே வேறுபட்டது. ஒரு வாயகன்ற வெள்ளிப்பாத்திரத்தில் பன்னீர் போன்று வாசனையூட்டப்பட்ட புனிதமான நீரை சில வாசனைப் பூக்களும் போட்டு வைத்திருக்கிறார்கள். காணிக்கையைக் கொடுத்து அதில் உள்ள தீர்த்த நீரை இன்னுமொரு (அத்தண்ணீருக்குள் வைக்கப்பட்டிருக்கின்ற சிறிய வெள்ளிக் கிண்ணங்களால் எடுத்து புத்த பகவானுக்கு ஊற்றி சேவிக்கிறார்கள்.
பன்னீர் போன்ற வாசனைத்திரவியம் அடைக்கப்பட்ட போத்தல்களையே கீழே காண்கிறீர்கள்.
(கீழே இருக்கும் படம்) இவர் வெளிப்புறமாக அமர்ந்திருக்கின்ற புத்த பகவான்.
கீழே இருக்கின்ற இந்த ஆலயம் பிரதான ஆலயத்துக்கு அருகாக அமைந்திருக்கின்ற ஆலயம்.பிரதான ஆலயத்தின் கீழ் புறப்படிக்கட்டில் நின்று இந்தப்படம் எடுக்கப்பட்டிருக்கிறதை ஊன்றிக் கவனித்தால் உனர்ந்து கொள்வீர்கள்.
முன்புறம் ஒரு தற்காலிக கொட்டகை ஒன்று போட்டிருந்தார்கள். யாத்திரிகைர்கள் வந்து இருந்து இளைப்பாறிச் செல்ல வசதியாக வாங்குகளும் தண்ணீரும் வைக்கப்பட்டிருந்தன. இளநீர், ஐஸ்கிறீம் வியாபாரிகளும் மிக மலிவான விலையில் இளநீர் விற்கிறார்கள்.(20 பட்). அத்தோடு இங்கு விற்பனை செய்கின்ற ஐஸ்கிறீமும் நல்ல சுவையுடையதாக இருந்தது. அதிலும் ஒரு நூதனமான முறையை அவர்கள் பின் பற்றுகிறார்கள்.ஐஸ்கிறீமை இவர்கள் இளநீரினை எடுத்து கிளாஸ்களில் ஊற்றி ஸ்ரோ வோடு கொடுத்து விட்டு ஐஸ்கிறீம் கேட்பவர்களுக்கு இளநீர் குரும்பையில் இருக்கின்ற வழுக்கையினை வழித்து நடுவில் விட்டு விட்டு அதற்குள் ஐஸ்கிறீமைப் போட்டு கலந்து கரண்டியோடு கொடுக்கிறார்கள். சுவையோ சுவை என்று குடித்தவர்கள் சொன்னார்கள்.
முற்றும் துறந்த பிக்குவின் கையிலும் மொபைல் போன் (கீழ் உள்ள படம்)
தானம் பெறும் பிக்கு இங்கே! பக்தர்கள் காவியுடை, பணம், பூ, உணவுப் பொருட்கள் போன்றவற்றைத் தானமாக வழங்குகிறார்கள். அவற்றை ஏற்றுக்கொள்ளும் பிக்கு அவர்களுக்கு நல்லாசியினை வழங்கி மந்திரங்கள் சொல்லி வாழ்த்தி வழி அனுப்புகிறார்.
கீழே இருக்கின்ற இந்த மனிதரைப் பற்றி நான் கொஞ்சம் சொல்ல வேண்டும். கடந்த வருடம் இங்கு சிட்னியில் வசிக்கும் என் வட இந்தியத் தோழி ஒருத்தி இந்தியாவில் இருந்து திரும்பி வரும் வழியில் பாங்கொக்குக்குப் போனதாகச் சொல்லி இரண்டு துணியில் செய்யப்பட்ட துணி ஓவியங்கள் இரண்டை எனக்குப் பரிசாகத் தந்திருந்தார்.அவை சட்டம் போட்டு அழகுக்காக மாட்டத் தக்கவை. அதைப் பார்த்த நாளில் இருந்து அது போன்ற கலைப்பொருட்களைப் பார்க்கவேண்டும் முடிந்தால் சிலவற்றை வாங்க வேண்டும் என்று கணக்குப் போட்டிருந்தேன்.
இந்த மனிதர் அவற்றை வேர்க்க வேர்க்க விற்றுக் கொண்டிருக்கக் கண்டேன். உடனே நான் வந்த காரியத்தை மறந்து அவரை அழைத்துக் கொண்டு சென்று வாங்கொன்றில் அவரோடு உட்கார்ந்து விட்டேன். வந்தவர்கள் கோயிலைப் பார்க்க அவசரப்பட்டதால் அவர்களை அனுப்பி விட்டு நான் இந்த மனிதரோடு தனியாக உட்கார்ந்து விட்டேன். கண்ணியமும் பொறுமையும் அன்பும் மிளிரும் இந்த மனிதர் அன்போடு எனக்கருகில் உட்கார்ந்து ஒவ்வொரு படங்களாகக் காட்டி அதன் சித்திரங்களையும் அது கூறும் கதைகளையும் பின்னணியையும் மிகவும் பொறுமையாக ஆர்வத்தோடு எனக்கு விளக்கிச் சொல்லி அவற்றை எனக்குக் மிக ஆறுதலாக காட்டினார்.
கவனியுங்கள்! இன்று இந்த மனிதரின் புது வருடம். வீட்டில் குடும்பம் காத்திருக்க இந்த வெய்யிலில் இந்த மனிதர் ஒவ்வொருவராகக் காட்டி காட்டி பொருட்களை விற்றுக் கொண்டிருந்தார்.
நான் சில படங்களைத் தெரிவு செய்து எடுத்துக் கொண்டேன். இப்போது எடுத்ததற்கான பணத்தைக் கொடுக்கவேண்டிய நேரம். பணப்பை கோயில் பார்க்கப் போய் விட்டவர்களுடய கையில். தண்ணீரின் மீதான பாதுகாப்புக்காக எல்லாம் ஒரு பிளாஸ்டிக் பையில் போடப்பட்டு ஒருவருடய கையில் அகப்பட்டு விட்டது தான் அதன் காரணம்.
ஆவல் நிமித்தம் இவற்றை வாங்க நினைத்து விட்டாலும் இந்த நான்கு மாடியில் அவர்களை நான் எங்கென்று தேடிக் கண்டு பிடிப்பது?. கண்ணாம்மூஞ்சி ஆட்டமாடும் நிலைமையில் அன்று நான் இல்லை.
அந்த மனிதருடய வியாபாரத்தை வேறு என் ஆர்வமிகுதியால் தடைப்படுத்தி விட்டேன் என்ற குற்ற உணர்வோடு அவரை விற்பனைக்குச் செல்லுமாறும் நான் அவர்கள் வந்தவுடன் பணத்தைப் பெற்று பின்னர் இந்த மனிதரைக் கண்டு பிடித்து பணத்தைக் கொடுத்து பொருளைப் பெற்றுக் கொள்வதாகக் கூறினேன்.
இப்படியாக என் நிலைமையை நான் எடுத்துக் கூறியதற்கு, அந்த மனிதர் நான் தெரிவு செய்திருந்த படங்களை ஒரு இரப்பர் வளையத்தால் சுற்றி என் கையில் ஒப்படைத்து விட்டு வியாபாரத்தைப் பார்க்கப் புறப்பட்டு விட்டார். இல்லை இல்லை நீங்கள் பொருளைப் பிடியுங்கள் நான் பின்னர் பணத்தைக் கொடுத்து பொருளைப் பெற்றுக் கொள்கிறேன் என்ற போதும் கேட்காமல் பொருளை என் கையில் திணித்து விட்டு பதிலை எதிர் பாராமல் தன் வியாபாரத்தைப் பார்க்க புறப்பட்டார் இந்த மனிதர்.
மனம் நெகிழ்ந்தது. ஏழையாய் இருந்த போதும் மனிதர்களில் தான் எத்தனை நம்பிக்கை இந்த மனிதனுக்கு!
நான் அவர்களுக்காக சுமார் 1.30 மணி நேரங்கள் காத்திருந்தேன். வந்ததும் பணத்தைப் பெற்றுசொன்ன தொகைக்கும் அதிகமாக புது வருட வாழ்த்துக்கள் கூறி பணம் கொடுத்த்தது மனதுக்கு மிகுந்த மனநிறைவைத் தந்தது.
அனுபவங்களால் நைந்து போகமால் விகாரப்பட்டுப் போகாமல் வறுமையிலும் ஒளிவீசும் குணாதிசயம்!
கீழே இருக்கின்ற இந்த சுவரில் காணப்படும் செதுக்கல் வேலைப்பாடு சீமேந்தினால் ஆனது. கோயிலின் சுவரில் பதியப்பட்டிருக்கிறது.
கீழே இருக்கின்ற இந்தப் படம் நூதன சாலையில் எடுக்கப்பட்டது
கீழே இருக்கின்ற இந்தப் பொருள் கயிறு, கொழுவி முதலியன புத்த பகவானின் சிலையை மேலே எடுத்துச் செல்ல பயன் பட்ட கருவிகளாம். அவற்றைப் பத்திரமாகச் சேகரித்து வைத்திருக்கிறார்கள்.
கீழே இருக்கின்ற இந்த செதுக்கல் வேலைப்பாடும் சீமேந்தினால் ஆக்கப்பட்ட ஒரு கலை வடிவம் தான். தாமரை இலைகளும் மொட்டுக்களும் எத்தனை தத்தூரூபமாக அமைந்திருக்கின்றன இல்லையா?
இவர் தான் தங்கப்புத்தர்.(கீழே உள்ள படங்கள்)
கீழே இருக்கும் இந்த படம் ஒரு கதவு. அதில் சித்திர வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
கீழே இருப்பது மூன்றாம் தளத்தின் மேற்புற விதானம்.
கீழே காட்டப்பட்டிருப்பது குருமார்களுக்கு வந்து சேர்ந்திருக்கின்ற தானங்கள்.
கீழே இருக்கும் படங்கள் பிரதான மண்டபத்துக்கு அருகாக அமைந்திருக்கும் சுற்றுப்பிரகாரம்.இவற்றுக்குள் லிப்ட்கள் இருக்கின்றன. இயலாதவர்களுக்கும் வயதானவர்களுக்கும் மாத்திரம் என்று பெயர் பலகை ஒன்று அறிவுறுத்துகின்றது.
கீழே இருக்கும் இந்த பாம்பு குடைபிடிக்க அமர்ந்திருக்கும் தங்க நிற புத்தர் பிரதான கோயிலுக்கு அருகில் இருக்கின்ற மண்டபத்தில் அமர்ந்திருக்கிறார்.
கீழே இருக்கும் படங்கள் வெளிப்பிரகாரங்களில் அமைந்திருக்கும் விக்கிரகங்களை பெளத்த மக்கள் மண்டியிட்டு தம் பின் புறக்கால்களில் அமர்ந்திருந்த வாறு வழிபாடியற்றுகின்ற காட்சி. தாமரை மொட்டுக்களை வழங்கி ஊதுபத்திகளைச் சமர்ப்பித்து வணங்குகிறார்கள்.
கீழே இருக்கும் இந்தக் குழந்தைப் புத்தரைப் பார்க்கும் போது எனக்கேனோ அந்தோனியார் ஞாபகம் வந்தது.
கீழே இருக்கும் படங்கள் மண்டபத்துக்குள்ளே மக்களின் தானங்களை பெற்று அவர்களுக்கு ஆசி வழங்கி மந்திரித்து நூல் கட்டி விடும் பெளத்த பிக்கு.
நானும் இவ்வாறு தானம் வழங்கி நூலினைக் கட்டிக் கொண்டேன்.அப்போது உடல் முழுவதுக்குமான ஒரு விதமான வைபிறேஷனை உணர்ந்து கொண்டேன். ஏனென்று தெரியா இரு கண்ணீர் துளிகளை அது வரவளைத்தது.
வியாபார நெறிமுறைகளுக்கப்பால் இக்கோயிலில் ஒரு விதமான தெய்வீகத்தன்மை இருப்பதை - ஒரு சக்தி அங்கு வியாபித்திருப்பதை அப்போது உணர முடிந்தது. இது வெறும் பார்வைக்கான வந்து போகும் இடமல்ல என்று உணர வைத்தது அது. அது வரை மேலோட்டமாகப் புதினம் பார்த்துக் கொண்டிருந்த நான் உடனடியாக பய பக்தி சூழ மற்றவர்களைப் போல் மண்டியிட்டு அமர்ந்து பிரார்த்தித்து வெளியே வந்தேன்.
புத்தம் சரணம் கச்சாமி!
சங்கம் சரணம் கச்சாமி!
தர்மம் சரணம் கச்சாமி!
கோயிலினை விட்டு வெளியே வந்த போது முன் மண்டபத்தில் ஏனையோர் எனக்காகக் காத்திருந்தனர். கையில் நூல்கட்டிக் கொண்டதை புதினமாக அவர்கள் பார்த்தார்கள். அந்த வியப்புக்கு இரண்டு காரணங்கள்.
1. அவர்கள் இந்த இடத்தைத் தவற விட்டிருந்தார்கள். இந்த நிகழ்ச்சியைத் தாம் காணவில்லை என்றார்கள்.
2. நான் இவ்வாறு செய்து கொண்டதில்லை.இப்போது எனக்கு என்ன நடந்தது என்பது அவர்களின் அடுத்த ஆச்சரியம்.
நாம் கோயிலுக்கு வெளியே வந்தோம். இப்போது நேரம் மதியம் 1.30 அல்லது 2.00 மணி இருக்கும்.
சொன்னால் நம்புவீர்களா? என் உடல் உபாதை போன இடம் தெரியவில்லை என்பதைப் புரிந்து கொண்ட நேரமும் இது தான்.
ReplyDeleteவியாபார நெறிமுறைகளுக்கப்பால் இக்கோயிலில் ஒரு விதமான தெய்வீகத்தன்மை இருப்பதை - ஒரு சக்தி அங்கு வியாபித்திருப்பதை அப்போது உணர முடிந்தது. இது வெறும் பார்வைக்கான வந்து போகும் இடமல்ல என்று உணர வைத்தது அது. //
மீண்டும் ஒரு முறை கோவிலுக்குச்சென்ற உணர்வினை ஏற்படுத்திய பகிர்வுகளுக்கும் படங்களுக்கும் பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..!
படங்களும் அற்புதம்...
ReplyDeleteநன்றி... வாழ்த்துக்கள்...
மிக்க மகிழ்ச்சி செந்தாமரைத் தோழி. நீங்கள் மிகுந்த பக்திமான். தாய்லாந்து செல்லும் சந்தர்ப்பம் கிட்டினால் இந்தக் கோயிலுக்கும் சென்று வாருங்கள். அங்கு ஏதோ இருக்கிறது வெளிப்படையாகத் தெரியும் வியாபார உலகத்துக்கு அப்பால்.
ReplyDeleteநன்றி வருகைக்கும் பகிர்வுக்கும் தனபாலரே!
ReplyDeleteஎங்கே சில நாட்களாய் உங்களைக் காணோம்?
நல்ல படங்கள்.வாழ்த்துக்கள்.
ReplyDeleteமிக்க நன்றி விமலன்.உங்கள் முதல் வரவுக்கும் கூடவே.
ReplyDelete