Tuesday, October 15, 2013

தேசுலாவுதே...........

தேசுலாவுதே தேன் மலராலே..... என்றொரு பாடல் இருக்கிறது. பழைய பாடல் அது. நினைவிருக்கிறதா?  தேசு - வண்டு. தேசு உலாவுதே தேன்மலராலே.தேன் இருக்கின்ற காரணத்தால் வண்டு அங்ஙனம் உலாவுகிறதே என்பது பொருள்.

அண்மைக்காலமாக நானும் அங்ஙனமே உலாவருவதைப் போலவும் தேனுண்ட மயக்கத்தில் திளைத்திருப்பதைப்போலவும் ஒரு பிரமை.

பராமசாலா என்றொரு நிகழ்ச்சி கடந்த நீண்ட வார விடுமுறை ஒன்றின் போது நிகழ்ந்ததைப்பற்றி சொல்லி அங்கு ஆவனப்படங்கள் காண்பிக்கப்பட இருக்கின்றன என்றும் பார்க்க இருக்கின்றேன் என்றும் சொல்லி இருந்தேன் அல்லவா? ஆவணப்படத்தை மட்டும் தான் பார்க்கப் போனேன். ஆனால் அங்கு போன பின் தேனுண்ட வண்டாட்டம் ஆகிப்போனேன்.

இந்தியம் என்பதன் பிரமாண்டத்தை, அழகை, சிறப்பை, பண்பாட்டை ,சமையலை,அழகியலை எல்லாம் ஓரிடத்தில் கூட்டி என்ன ஒரு அழகுக் கோலம் என்கிறீர்கள் அதை!!

இந்தியா என்பது தமிழ் நாடு மாத்திரமல்ல என்பதும் பீகார், ஒரிசா, குஜராத், கர்நாடகா, டெல்லி, பம்பாய், பஞ்சாப் என்றெல்லாம் அதற்கொரு கலர் அதற்கென்றொரு நிறம் இருக்கிறது என்பதும் அவை அவற்றுக்கென்றெல்லாம் மொழி பண்பாடு அழகியல் வாழ்க்கை முறை எல்லாம் தனித்தனியாக இருக்கிறது என்றெல்லாம் விளங்கியது அங்கு தான்.

சகலதும் இலவசம். சகலருக்கும் இலவசம். மொழி, இசை நாட்டியம்,வாத்தியம், ஆவணப்படம் என பாரதத்தை கிளப்பிக் கொண்டுவந்து புதுப் பதியம் வைத்திருந்தார்கள். இசைக்கோர்வைகளை; வாத்திய விருந்தை நாட்டியக்கோலங்களை அழகிய சந்தனச்சிலைகள் போன்ற கன்னிப் பெண்களை அவர்களின் ஆடை அலங்காரங்களை பாரதத்தின் புன்னகைகளை வசீகரங்களை எல்லாம் கண்டு கண்டு புளகாங்கிதமடைந்தேன்.

இன்னொரு புறம் விற்பனைக்கான ஆடைத்திணுசுகள், மற்றப்பக்கம் கைவினைப் பொருள்கள், அடுத்த பக்கம் உணவுப்பண்டங்கள், மறுகரையில் இனிப்புப் பண்டங்கள், இன்னொரு பக்கம் தியானம், மூலிகை மருத்துவம், யோகா போன்றவை, இன்னொரு பக்கம் வாத்திய விருந்து, சாய் ரெம்பிள் என்றொரு பெயரோடு இந்தியபாரம்பரிய தேநீர்விருந்தோடு கம்பளத்தரையில் பாரம்பரிய மெத்தைகளில் உட்கார்ந்து சாய் தேநீர் அருந்தியபடி இசைகேட்கும் அழகுக் கோலம்.....

எதைப் பார்ப்பது? எதை விடுவது? முதல் நாள் ஆவணப்படம் ஒன்று பார்த்தேன். இதனைத் தயாரித்த இரண்டு பம்பாய் பிரதேசத்துப் பேராசிரியர்களும் வந்திருந்தார்கள்.( கே.பி.ஜெயசங்கர், அஞ்சலி. மொன்ராரியோ)  படம் முடிந்த கையோடு அவர்களோடு பேசவும் நமக்கொரு சந்தர்ப்பம்.

முதல் நாள் போடப்பட்டது ஒரு தமிழ் படம்.தமிழ் நாட்டில் வாழுகின்ற Trans - gender மக்களைப் பற்றியது. தலைப்பு எங்கள் குடும்பம். (Our Family) அவர்களுடய வாழ்க்கை முறையை; வலியை; வேதனையை ;ஆதங்கத்தை ; ;புறக்கணிப்புகளின் வலிகளை,வேக்காடுகளை;  தனிப்பட தாங்கிய சோதனைகளை எல்லாம் மனிதத்தோடு முன்வைத்த ஆவணம் அது.

அதில் சொல்லப்பட்ட ஒரு வாக்கியம் என் மனதை ஊடுருவிப் பாய்ந்தது. அது, ‘நாங்கள் யார் தெரியுமா? ஆண் உடலுக்குள் சிறை வைக்கப்பட்டிருக்கும் பெண்”. அவள் வெளிப்பட அவர்கள் செய்யும் பிரயத்தனங்களும் சமூகம் அவர்களை கசக்கி ஒதுக்கும் ரகசிய குரூரங்களும்  தான் ஆவணத்தின் உள்ளடக்கம்; மேலும் கதை.

இப்படம் தந்த தாக்கத்தில் வலியில் இருந்து விலக முடியாதிருந்த காரணத்தாலும் குடும்பத்தினருடய ஆர்வங்கள் வேறு திசை நோக்கி இருந்ததாலும் அடுத்த நாள் நிகழ்ந்த படத்திற்குப் போக இயலவில்லை. மூன்றாம் நாள் போடப்பட்ட ஆவணப்படம் ‘பந்தம்’. ”The Bond" பம்பாய் நகரில் தராவி என்ற சேரிப்பகுதி மக்களின் வாழ்வியலும் அவர்களிடயே முகிழ்ந்திருக்கும் மனிதமும் அதன் high light காட்சிகள். வறுமை, இயலாமை, ஆற்றாமை, கஸ்ரங்களுக்கு மத்தியிலும் பல்வேறு இன மத, சாதிப்பாகுபாடுகளுக்கு அப்பாலும்;அங்கு இருக்கின்ற நிலவுகின்ற ஒற்றுமைப்பாடு. ஒருவருக்காக ஒருவர் எதுவும் செய்யத் தயாராக இருக்கும் மனிதம் அங்கு அழகாக வெளிப்படுத்தப் பட்டது.

தீவிர ரசிகர்கள் எப்போதும் கொஞ்சப் பேர் தானே! இங்கும் கொஞ்சப் பேர் தான். பேராசிரியர்கள் அஞ்சலியும் ஜெயசங்கரும் இங்குள்ள university of Western Sydney, University of Technology ஆகியவற்றின் பண்பாட்டுப் பரிமாறல் திட்டத்தின் அழைப்பின் பேரில் வருகை தந்திருந்தார்கள்.அவர்கள் இந்தியப்பண்பாட்டின் தூதுவர்களாக வந்து கலந்து கொண்டார்கள்.

Blind Spot என்றொரு விடயம் இருக்கிறது. வாகன ஓட்டுனர்களுக்கு அது தெரிந்திருக்கும். முன்புற பின்புற பக்கவாட்டுக் கண்ணாடிகளுக்குள் அகப்படாத ஒரு மறைவிடம் அது. அதனைக் கழுத்தைத் திருப்பி அவதானித்த பிற்பாடு தான் அடுத்த move எடுக்கவேண்டும் என்று சொல்வார்கள். அப்படியாக ஒழிந்திருக்கத்தக்க மறைவிடத்தை தூரதேசத்துக்கு வந்து காட்டிப் போனார்கள் அந்தப் பேராசிரியர்கள்.

கைத் தொலைபேசியில் எடுத்த சில புகைப்படங்களை உங்கள் பார்வைக்காக இணைக்கிறேன்.

வருகிறேன் என்று சொல்லி விட்டு வராததன் சாட்டுப் போக்கை நிரூபிப்பதற்காகவும்.:)

அங்கு உங்களைத் தான் பார்த்தேன் என் அருமை பாரதத்துத் தோழர்களே!

















6 comments:

  1. பகிர்வும் படங்களும் அருமை...
    தேனுன்ட வண்டாய் நீங்கள் அருத்தியதை எங்களுக்கும் சொல்லியிருக்கிறீர்கள்... அருமை.

    ReplyDelete
  2. மிக்க மகிழ்ச்சி குமார். உடனடியாக ஓடோடி வந்தமைக்கும் சேர்த்ததான மகிழ்ச்சி அது.

    இந்தப் பதிவை எழுதிக் கொண்டிருந்த போது தான் எடுக்காமல் விட்ட படங்களுக்காக மிகவும் வருத்தப்பட்டேன்.

    ReplyDelete
  3. படங்களுக்கும் ஆக்கத்திற்கும் நன்றிகள்....

    ReplyDelete
  4. உங்கள் வருகைக்கும் நன்றி புத்தன்.

    ReplyDelete
  5. இந்தியா என்பது தமிழ் நாடு மாத்திரமல்ல என்பதும் பீகார், ஒரிசா, குஜராத், கர்நாடகா, டெல்லி, பம்பாய், பஞ்சாப் என்றெல்லாம் அதற்கொரு கலர் அதற்கென்றொரு நிறம் இருக்கிறது என்பதும் அவை அவற்றுக்கென்றெல்லாம் மொழி பண்பாடு அழகியல் வாழ்க்கை முறை எல்லாம் தனித்தனியாக இருக்கிறது என்றெல்லாம் விளங்கியது அங்கு தான்.
    ***********

    சரியா சொன்னிர்கள்.. எவனும் அப்படி சொல்லல..தமிழ்நாட்டிட்டுல எவன் சொல்லுறானோ அவன்கிட்ட போய் சொல்லுங்க.. என்னிக்குமே தமிழ்நாடு தான் இந்தியா, தமிழ் தான் இந்திய மொழி என்று நாங்க யாரும் பீத்திக்கவில்லை.. எங்களுக்குன்னு வரலாறு இருக்கு அதனால பெருமை பட்டுகிறோம்..நடுவுல வந்தவன் பண்ணுற அரசியலுக்கு யாரும் பொறுப்பு இல்லை.இந்தியா என்பது, இந்தி மட்டும் அல்ல.. பல மொழி கொண்ட நாடு.. இங்க ஒரே நாடு ஒரே மொழி சாத்தியமில்லை. பல மொழி, பல இனம் பல ஜாதி, பல நிறம் கொண்ட உலகின் ஒரே நாடு 👍இதைமண்டையில் உரைக்கும் படி சொல்லுங்க புரியாதவங்களுக்கு. நாங்க உங்களை மதிக்கிறோம், அவங்களும் எங்களை மதிக்குறாங்க, நடுவுல இவங்க அரசியலுக்கு யாரும் ஊறுகாய் ஆக்க வேண்டாம். மக்கள் புரிஞ்சுப்பாங்க, தெளிவா இருக்காங்க..

    ReplyDelete
  6. உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே!
    உண்மைதான். பல இன, மத, மொழி, பண்பாட்டு குழுக்கள் காலாகாலமாக ஒற்றுமையாக வாழ்ந்துவரும் தேசம் அது! பாரதமாதாவின் தனித்துவமே அதன் பல்வேறு பண்பாடுகள் தான். உங்கள் கருத்தை நான் முழுமையாக ஆதரிக்கிறேன்.
    அவுஸ்திரேலியாவும் ஒரு பல்கலாசார நாடுதான் என்றாலும் அது மிக மேலோட்டமாக அண்மைக்காலத்தில் உருவாகி வளர்ந்து வருவது.
    பாரதம் எத்தனை நூற்றாண்டுகளாக வளர்ந்து, வாழ்ந்து வந்த தேசம்!!
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. காலதாமதமான இந்தப் பதிலுக்கு என்னை மன்னியுங்கள்.

    நேற்றயதினம் (2.5.22) தமிழ்நாட்டு செய்திக்குறிப்பொன்றில் முதலாம் வருட மருத்துவ மாணவர்கள் வெள்ளை மேலங்கி பெற்று சத்தியப்பிரமானம் எடுக்கும் போது சமஸ்கிருத மந்திரம் ஒன்று மட்டும் சொல்லி சத்தியப்பிரமாணம் எடுக்க வைக்கப்பட்டது என்றறிந்தேன். வருத்தமாக இருந்தது. அழகிய தேசம், அரசியல்வாதிகளாலும் குறுகிய பார்வை கொண்டவர்களாலும் சிதைந்து போய் விடக் கூடாது. மக்கள் விழிப்போடு இருந்து சரியான தேசத்தலைவர்களை தெரிவு செய்வது அவசியம்.

    ReplyDelete