Sunday, October 1, 2023

பெண்களும் பாதைகளும் பயணங்களும்

 இன்று ஞாயிற்றுக் கிழமை.1.10.2023. வசந்தகாலம் தான் எனினும் வெய்யில் 35 பாகை செல்சியசில் எறிக்கிறது.

பூக்கள் கருகி விட இந்த உக்கிரம் போதும்.

இன்று கடைசியாக அந்த நந்தவனத்தை பார்த்து விட என் இந்தியத் தோழியோடு அவளின் நட்புறவைக் கொண்டாடவும் பேசி மகிழவும் அவளையும் அழைத்துக் கொண்டு அந்த நந்தவனத்திற்கு சில கொறிப்பான்களோடும் ஃபில்டர் கோப்பியோடும் பயணமானேன்.

அன்பும் அழகும் அறிவும் ரம்யமான குணமும் மயிலும் சாயலும் கொண்ட அவள் இரண்டு வளர்ந்த பிள்ளைகளுக்குத் தாய். 

சுமார் 30 - 40 வருட காலங்களுக்கு முன்னால் நாம் 10ம் வகுப்பு 12ம் வகுப்புகளை நிறைவு செய்யும் போது ஒரு வினோதமான பழக்கம் ஒன்று இருந்தது. வண்ணக் கடதாசிகளால் அழகான மட்டைகளோடு விற்பனையாகும் ஓட்டோகிறாஃப் என்றழைக்கப்படும் சிறு கொப்பியை வாங்கி அப்போது நமக்கு யாரெல்லாம் நண்பர்களாக மதிப்பவர்களாக இருந்தார்களோ அவர்களிடம் எல்லாம் அந்தக் கொப்பியைக் கொடுத்து தம் கையெழுத்தை; மணி வாசகங்களை; முகவரிகளை வாங்கி வைத்துக் கொள்வோம்.

அந்த விவோதமான பழக்கம் எனக்கும் அன்றய காலத்தில் இருந்தது. 5 ரூபாய், மூன்று ரூபாய், 8 ரூபாய் மற்றும் பத்து ரூபாய்களுக்கு விற்பனையாகும் அதிலொன்றை நானும் வாங்கி என் நண்பர்கள், ஆசிரியர்கள் எல்லோரிடமும் கொடுத்து அவர்களின் நினைவாக அவர்கள் எழுதித் தந்த வாசகங்களைச் சேகரித்துக் கொண்டேன்.

அதில் சில எனக்கு இன்னும் நினைவில் நிற்கின்றன. எனக்கு மேல் வகுப்பில் படித்த பரமேஸ் அண்ணா ‘ ஓடுக; ஊர் ஓடுமாறு’ என்று எழுதித் தந்தார். என் வகுப்புத் தோழிகள் தர்ம நாயகி மற்றும் சுகுணா முறையே ‘கரைவழி செல்வது கங்கையின் பெருமை; முறை வழி செல்வது மங்கையின் பெருமை’ என்றும்; ‘உனதெண்ணப்படி வாழ்க்கை அமையா விட்டால் வாழ்க்கைக்கேற்ப எண்ணத்தை மாற்றிக் கொள்’ என்றும் எழுதித் தந்தார்கள்.

இன்று ஏனோ எனக்கு அவை எல்லாம் நினைவு வந்தன. இப்போது என் தென்னிந்திய நாட்டுத் தோழிகளை நினைத்துப் பார்க்கிறேன். நான் சிட்னிக்கு வந்து 25 வருடங்களுக்கு மேலாகிறது. பல இலங்கை, இந்திய நாட்டுப் பெண்கள் எனக்கு உரித்துடைய நண்பர்களாக இருக்கிறார்கள். எல்லோருமே படித்த பண்புநலம் மிக்க அறிவும் அழகும் மீதுரப் பெற்ற பண்பாட்டின் வழி ஒழுகும் பெண்களாகவே இருக்கிறார்கள்.

இலங்கைப் பெண்களும் அது போலவே.

ஆனால் இரு நாட்டுத் தமிழ் பெண்களுக்கும் இடையே தான் எத்தனை எத்தனை வேறுபாடுகள்!

இலங்கைத் தமிழ் பெண்கள் துணிச்சல் மிக்கவர்களாக: தன்னம்பிக்கை உள்ளவர்களாக: உரிமை உள்ளவர்களாக: தன் காலில் நிற்பவர்களாக: சம உரிமை கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஊரில் 40, 50 வருடங்களுக்கு முன்பாகவே அரைப் பாவாடை சட்டை போட்டு, சைக்கிள் ஓடி, படித்து, வேலைக்குப் போன பெண்களாக அவர்கள் இருந்து வந்துள்ளார்கள். 

பாமரப் பெண்களிடமும் அந்த Breathing space இருந்தது.

இலங்கையின் பிரதமராக இருந்த சிறிமாவோ பண்டாரநாயக்கா உலகத்துக்கே முன்மாதிரியாக இருந்து உலகத்தில் முதல் பெண்பிரதமர் என்ற பெருமையை தட்டிக் கொண்டவர் என்பதற்கும் அந் நாட்டின் பெண்களுக்கான உரிமைகளுக்கும் ஏதேனும் தொடர்பிருக்கிறதா என்று தெரியவில்லை.

பின் நாளில் விடுதலைப் புலிகள் அமைப்பிலும் பெண்கள் ஆண்களுக்குச் சமனாக போர்களத்தில் நின்றார்கள்.

ஆனால் அவுஸ்திரேலியாவில் தென்னிந்தியப் பெண்களைப் பொறுத்தவரை அதிலும் குறிப்பாகக் குடும்பப் பெண்களைப் பொறுத்தவரை, அவர்கள் தம் கணவன்மாரின் அழுங்குப் பிடியில் சிக்குண்டவர்களாகவே பெரும்பாலான பெண்கள் உள்ளனர். குறைந்த பட்சம் நானறிந்த பெண்கள் என்று திண்ணமாகச் சொல்ல முடியும்.

தனித்துப் பெண்ணை வேலைக்கு அனுப்பாதவர்களாக; அப்படி வேலைக்குப் போய் வருகிற பெண்களாக இருந்தால் கூட, அவர்களுடய வேலை ஓய்வு நேரங்களிலும் தொலைபேசி அழைப்பில் ‘கவனித்துக்’ கொள்பவர்களாக, நம்பிக்கைக்குரிய தோழியரோடு வெளியே போனாலும் கூட, அவர்களின் தொலைபேசி தொடர்புகளுக்கு அப்பால் போகாதவர்களாக; அவர்களச் சதா காலமும் கண்காணிப்பவர்களாக கணவன்மார் இருப்பதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.

கணவர்மார் தங்கள் தொடர்பெல்லைக்கப்பால் அப் பெண் சென்றுவிடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருக்கிறார்கள். பெண்கள் கூட  தம்மோடு  இருக்கும் நண்பர்களோடு  ஓய்வு நேரக் கலந்துரையாடல்களில் கலந்து கொண்டாலும் கூட நாசுக்காக அடிக்கடி தொலைபேசியைப் பார்த்த படியே அங்கொரு கண்ணும் இங்கொரு கண்ணுமாக அமர்ந்திருக்கிறார்கள். 

அதற்காகக் கணவன்மார்கள் பெண்ணைப் பூட்டி எல்லாம் வைத்திருக்கவில்லை. அவர்கள் மனைவி குழந்தைகளை வெளியே அழைத்துப் போகிறார்கள். இடங்களைச் சுற்றிப் பார்க்கிறார்கள். பொருட்கள் வாங்கிக் கொடுக்கிறார்கள். உணவு விடுதிகளுக்குப் போய் வருகிறார்கள், பண்டிகைகள், விழாக்களைக் கொண்டாடுகிறார்கள்.  எல்லாமும் தான் செய்கிறார்கள். ஆனால், அது அவரோடு ( கணவரோடு) மட்டுமாகவே எப்போதும் இருக்கவேண்டும் என்பதன் பின்னால் இருக்கும் அரசியல் தான் எனக்குப் புரியவில்லை. 

புரியவே இல்லை நண்பர்களே!

பெண்ணை ஏன் ஒரு பால்ய பிராயத்தில் இருக்கும் பிள்ளையைப் போல நடத்துகிறார்கள்? ஏன் எப்போதும் தம் கண்காணிப்பிலேயே அவர்களை வைத்திருக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள்? நம்பிக்கைக்குரிய நண்பர்களோடு போனாலும் கூட ஏன் ஒரு பதட்ட நிலையிலேயே எப்போதும்  காணப்படுகிறார்கள்? 

பெண்களும் அதற்கேன் உடன்பாடுடையவர்களாக நடந்து கொள்கிறார்கள்?

ஒருவர் மாத்திரமல்ல; எனக்கிருக்கும் மிகச் சிறந்த என் அன்புத் தோழியரின் வாழ்க்கை இந்த மாதிரியாகத் தான் இருக்கிறது. என் தொழில் துறையில் கூட நான் அன்றாடம் சந்திக்கும் பல்வேறு பண்பாட்டுப் பின்புலத்தைச் சார்ந்த குடும்பங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது,  இந்த வேறுபாட்டை மிகத் துல்லியமாகக் காணக் கூடியதாக இருக்கிறது. 

இந்திய அதிலும் குறிப்பாகத் தென்னிந்திய ( தமிழ் நாடு மாத்திரமல்ல) ஆண்கள் அவர்களுடய மனைவிமாரின் தொடர்பிலக்கங்களையோ  அல்லது அவர்கள் குறித்த விபரங்களையோ கூட நாம்  அவர்களின் கணவர்மாரிடமே  காரணம் சொல்லிக் கேட்டுப் பெற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது.

பெண்களை வெறும் உடமைப் பொருளாகவே அவர்கள் பார்க்கும் இந்தக் கண்ணோட்டத்திற்கு யாது காரணம் என்று தெரியவில்லை. என் தோழி மார்களைப் பொறுத்தவரை அவர்கள் இந்த வாழ்க்கையை வந்தது போல ஏற்றுக் கொண்டு அதனில் திருப்திப் பட்டு வாழ்வதாகத் தான் தோன்றுகிறது.

கல்வி அறிவும் மாண்பும் புத்திசாலித்தனமும் அழகும் பண்பும் கொண்ட இந்தப் பெண்கள் தம் சுதந்திரத்தை அனுபவித் தறியாதவர்களாகத்; தமக்கு வழங்கப்பட்ட அல்லது உவந்தளிக்கப்பட்டுள்ள சொற்ப வெளிச்சத்திலும் காற்றிலும் அனுமதிக்கப்பட்ட ஜன்னல் வழியாகவும் உலகைப் பார்த்துத் திருப்திப் பட்டுக் கொள்கிறார்கள். 

21ம் நூற்றாண்டிலும் அவுஸ்திரேலியா போன்ற முதலாம் உலக நாடுகளில் தம் வாழ்க்கையை கொண்டிருந்த போதும் ஒரு மிருகக் காட்சிச் சாலை வாழ்க்கையே அவர்களுக்கு விதிக்கப் பட்டிருக்கிறது.

அறிவும் ஆற்றலும் அவர்களின் மேன்மைக்குரிய வாழ்வும் ஒரு மாடி வீடுகளுக்குள் காட்சிப் பொருளாக அழகாக அடுக்கி வைக்கப் பட்டிருக்கிறது என்றே தோன்றுகிறது.

நாமும் நூதனக் காட்சிச் சாலையில் பொருட்களைப் பார்ப்பதைப் போல; மிருகக் காட்சிச் சாலையில் உணவும் இருப்பிடமும் பாதுகாப்பும் கொடுத்து சில சதுர அடிக்குள் முடக்கப் பட்டுள்ள மிருகங்களைப் பார்ப்பதைப் போல; அவர்களைப் பார்த்து விட்டு வர மட்டுமே முடிகிறது.

வாழ்க்கை என்பது அழகிய பூந்தோட்டம் போன்றது.

சுதந்திரம் என்பது மிகப் பெரியது நண்பர்களே! 

அது மூச்சு விடுவதைப் போல உரித்துடையதும் முக்கியமானதும். 

ஆனால் அதனைக் கண்டடைவது என்பதற்கான பிரயத்தனங்கள் யாரால் எப்படி செய்யப்பட வேண்டும் என்பதற்கு என்னிடம் விடை இல்லை.
































































’வசந்த காலத்திலும் 35 பாகை செல்சியசில் வெய்யில் கொழுத்துகிறது இன்றைக்கு!’ 

 மென்மையான பூக்கள் வாடி வதங்கி விட இது போதும். 

முதலாம் உலக நாட்டிலும் நம் பெண்களுக்கு விடுதலை  வாய்க்கப் பெறவில்லை இன்றைக்கும்.- அது நூதனமான வடிவத்தில் நுழைந்திருக்கிறது.

பூக்களைப் போலவே பெண்களும். பூவையரும் வாடி வதங்கி விட இது போதும்.

இரண்டுமே இயற்கையானதல்ல. இந்த இயற்கையின் மாறுபாட்டுக்கு மனிதர்களாகிய நாமே முழுப் பொறுப்பையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பூக்கள் பாவம்!

பெண்களும் தான்!


படப்பிடிப்பு: யசோதா.பத்மநாதன்.

இடம்: பரமற்ரா பார்க்

காலம்: 01.10.2023. காலை 10 மணி. 34 பாகை செல்சியஸ் வெய்யில்.( மனசிலும் )

No comments:

Post a Comment