’நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்து இவ்வுலகு’
சாந்தம், உரத்துப் பேசாத குரல், சுத்தம், நேர்த்தி, அன்பு, அடக்கம், எளிமை, நன்றியுணர்வு, கொடுத்துப் பழகிய கை, புன்னகை, கட்டுக்கோப்பான நாளாந்த செயல்பாடுகள், 'பார்வையாளராகத்' தன்னை தகவமைத்துக் கொண்ட ஞானம், பண்புநலன் மாறா குணாம்சம், வந்ததை வந்தவாறு ஏற்றுக்கொண்டு மகிழ்ந்த வாழ்வு, முறைப்பாடுகள் சொல்லாத சுபாவம் ...இவைகளைச் சேர்த்து பார்த்தால் தெரிவது எங்கள் அம்மா.
நாம் பெரும் வசதி வாய்ப்புகளோடு வாழ்ந்தவர்கள் அல்ல. அப்பாவின் அரசாங்க உத்தியோகமும் அம்மா கொண்டுவந்த காணி, தோட்டங்களோடும் ஒரு மத்தியதர வாழ்வை ஆரம்பித்தவர்கள் அவர்கள்.
மாற்றுச்சம்பந்தமாக தன் மாமன் மகனை கைப்பிடித்ததாலோ என்னவோ அப்பாவுக்கு எல்லா விதத்திலும் ஏற்ற ஒரு மனைவியாக அவர் இருந்தார். அப்பாவின் நிர்வாகமே ஓங்கியிருந்த எங்கள் வீட்டில் அம்மாவின் சிக்கனமும் விடாமுயற்சியோடு அவராகவே செய்த தோட்டங்களும் எங்களை ஆளாக்க பெரும் உதவிகளைச் செய்தன. நம் உற்றார், உறவினர்கள் ஒரு ஆண் ஒரு பெண் பிள்ளைகளோடு வசதியான ஒரு பெருவாழ்வை வாழ்ந்த போதும் தான் 3 பெண்பிள்ளைகளைப் பெற்றுவிட்டேன் என்று ஒருபோதும் அவர் கலங்கியதில்லை;மனவருத்தம் அடைந்ததில்லை. குறைப்பட்டுக் கொண்டதுமில்லை. கிடைத்த வாழ்வை கிடைத்தவாறு ஏற்றுக் கொண்டு அதில் மகிழ்ச்சியைக் கண்டடைந்தவர்.
தன் சிக்கனத்தாலும், பிரயாசையாலும், ஆடு மாடு கோழி போன்ற கால்நடைகளை வளர்த்தும்; நிலக்கடலை,மிளகாய், உழுந்து, பயறு போன்ற பயிர்களைப் பயிரிட்டும் வரும் பணத்தில் எங்களை வளர்த்து ஆளாக்கினார்.
எங்கள் கல்வியிலும் முன்னேற்றத்திலும் பெருத்த அக்கறை காட்டிய அவர் எங்கள் ஆசிரியர்களோடு எப்போதும் நேரடித் தொடர்பில் இருந்தார். பாடசாலைகளில் நடப்பவற்றை உடனுக்குடன் அறிவதில் பெரிய ஆர்வம் கொண்டிருந்தார். கல்வியே எங்கள் முன்னேற்றத்திற்கு ஒரே வழி என்பதில் மிகத் திடமான நம்பிக்கை வைத்திருந்தார்.
இருந்த போதும், நமக்கு தன்னால் இயன்ற வகையில் சீதனம் சேர்க்கவும் தவறவில்லை. தபால் கொண்டு வரும் தபால் காரர் வழியாக எங்கள் மூவருக்கும் 5/10/20/50 ரூபாய்களைச் சேமிப்புத் திட்டங்களில் போட்டு வந்தார். சிக்கனமாகக் காசுகளைச் சேர்த்து தன் பிள்ளைகளான நம் மூவருக்கும் நகைகள் சேர்த்தார். எல்லாத் தாய்மாரும் இவற்றை எல்லாம் செய்வார்கள் தான் என்ற போதும், அம்மா இவைகளை எல்லாம் தன் வாழ்வு பற்றிய எந்தவிதமான முணுமுணுப்புகளும் முறைப்பாடுகளும் கொள்ளாமல் இன்முகத்தோடு அவற்றைச் செய்தார். வாழ்க்கையைப் பற்றி அவருக்கு எந்தவிதமான மனக்குறைகளும் நான் அறிந்தவரை இருக்கவில்லை.
அவரிடமிருந்த இன்னுமொரு முக்கியமான குணம் விருந்தோம்பல். நாம் எல்லைப்புற கிராமமான ஓமந்தையில் இருந்ததால் பயணிகள் பலரும் இரவு தங்கி காலையில் தம் பயணத்தைத் தொடரும் போது காலைகள் எல்லாம் அவர்களுக்கு நம் கிணற்றடியிலேயே விடியும். எல்லோருக்கும் மாட்டில் உடன் கறந்த பாலோடு சிறந்த தேனீர் கொடுத்தே அவர் அவர்களை வழியனுப்பி விடுவார். இரவு தங்கும் பயணிகளுக்கு ஆகாரங்களும் எந்தவித சலிப்புமின்றி சமைத்துக் கொடுத்த கைகள் அவை.
இவைகளை எல்லாம் மனம்நிறைந்த மகிழ்ச்சியோடும் வேலைப்பழு பற்றிய முறைப்பாடுகள் ஏதுமற்றும் மிக மகிழ்ச்சியாக அவர் அவற்றைச் செய்தார். அப்பாவும் அதற்கு மிகுந்த ஆதரவோடு இருந்தார்.
கிராமத்தில் ஏழை எளியவர்களோடு எங்கள் இளமைக்காலம் கழிந்தது. எங்கள் வீட்டுக்கருகில் நாம் அன்போடு பாலன்கமத்து அங்கிள்/அன்ரி என்றழைக்கும் தம்பதிகள் அமைதியாக அங்கு வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் நம் கிராமத்தில் ஒரு கோயிலும் இல்லையே என்று கருதி ஒரு சித்திபுத்திவிநாயகரை யாழ்வீதியில் தம் வளவோரமாக ஸ்தாபித்து அதற்குத் தினசரி காலை மாலை அலங்காரமும் பூசனைகளும் செய்து வந்தனர். ஒருநாள் அந்தச் சிறு கோயிலுக்கு விநாயசதுர்த்தி பொங்கலைச் செய்வோம் என்ற வேண்டுகோளை அம்மா விடுக்க, அவர்களும் அதற்குச் சம்மதித்தனர். அந்த நாளில் இருந்து இடப்பெயர்வு வரையும் கிரமமாக விநாயக சதுர்த்திப் பொங்கலை அவர் செய்து வந்தார்.
அந்தநாள் அந்தச் சிறு கிராமத்துக் குடி சனங்களுக்கு கொண்டாட்டமான நாள். தம் நாளாந்த தொழிலை முடித்துக்கொண்டு நம் வளவுக் கிணற்றில் குளித்துவிட்டு அவர்கள் பொங்கல் பிரசாதத்திற்கு வருவார்கள். சிறுவர்களுக்கோ சொல்லவே வேண்டாம். அவர்கள் தேக்குமர இலைகளை ஒடித்து வருவதிலும் சுள்ளிகள் பொறுக்கி வந்து தருவதிலும் தம் வயதொத்த நண்பர்களோடு வீதியோரம் ஓடி விளையாடுவதிலும் ஈடுபட்டிருப்பர். சிறுமிகள் தேங்காய் திருவுவதிலும், தண்ணீர் அள்ளி வருவதிலும் உதவி ஒத்தாசையாக இருப்பார்கள்.
ஒருவழியாகப் பொங்கல் முடிந்து பூசை ஆரம்பமாகும் மணி அடித்தால் போதும்! கிராமமே அங்கு திரண்டு விடும். யாழ் வீதியால் போகும் வாகனங்கள் தரித்து நின்று வழிபட ஆரம்பிக்கும். ஒருவர் தேவாரம் பாட, ஒருவர் மணியடிக்க, ஒருவர் சங்கு ஊத, பூசைகள் நடந்தேறிய பின் எல்லோரும் தத்தம் இலைகளில் பொங்கலை வாங்கிச் செல்வர். அம்மாவிடம் நல்ல நிர்வாகத் திறன் இருந்ததையும் இந்த இடத்தில் சொல்லியாக வேண்டும். எல்லோருக்கும் சமனாகவும் நிறைவாகவும் பிரசாதம் கிடைத்ததை அவர் எப்போதும் உறுதி செய்து கொள்வதோடு பொங்கல்பானை கழுவுதல், இடத்தைச் சுத்தப்படுத்துதல், போன்ற காரியங்களையும் கவனிக்க பொருத்தமானவர்களை நியமித்து விடுவார்.
இதன் பிறகு அவருக்குத் திருவெம்பாவையும் நம் பிள்ளையாருக்குச் செய்யவேண்டும் என்று ஓர் ஆசை வந்தது. அதற்காக அவர் 10 நாட்களுக்கும் அயலில் வாழும் ஓரளவு வசதிவாய்ப்போடு இருந்த 10குடும்பத்தார்களை இணைத்துக் கொண்டார்.
அந்த நாட்கள் தான் எங்களுக்குத் திருவிழாக்கள். அதிகாலையில் எங்கள் எல்லோரையும் எழுப்பி விடுவார். நாம் நடுங்க நடுங்க முழுகி வர வேண்டும். மின்சார வசதியில்லாத அக்கிராமத்தில் லாந்தர்களோடு நாம் கிணற்றடியில் நிற்க அப்பா பெற்றோல் மக்ஸ் கொழுத்தி எடுத்துக்கொண்டு பற்றறியில் இயங்கும் ரேப்றைக்கோடரோடு கோயிலுக்குப் போவார். கோயில் மணி அடித்தவுடன் குடிசனங்கள் ஒவ்வொருவராக அங்கு உதவிக்கு வரத் தொடங்குவார்கள். கோயில் மணி ஓசையோடு பெற்றோல்மக்ஸ் வெளிச்சமும் சீர்காழி கோவிந்தராஜனின் கம்பீரக் குரலில் கேட்கும் விநாயகர் அகவலும் ஊரை எழுப்ப, பிறகென்ன அமர்க்களம் தான். யாருக்கும் எதுவும் சொல்லத் தேவையில்லை. எல்லோரும் தத்தம் வேலைகளை கடகடவென்று செய்து முடித்துவிடுவார்கள். பூசனைகள் சிறப்பாக ஒப்பேறும்.
இப்படியாக கோயிலும் தோட்டமும் தன் பிள்ளைகளுமாகத் தான் அவரது வாழ்வின் பெரும் பாகம் கழிந்தது. எங்கள் வாழ்வின் ஒவ்வொரு உயர்விலும் எங்கள் அம்மாவின் பெரும் பங்களிப்பு இருந்து வந்திருக்கிறது. ஏழைக்குடியான மக்களுக்கு பணக் கைமாற்றுக்களும், முட்டை, தேங்காய், பால் நெய் போன்றவைகளும் தாராளமாய் சென்று சேர்ந்திருக்கின்றன. சட்டை தைக்கவும், சாரம் மூட்டவும் துணிகளோடு வருபவர்களுக்கு அவர் தான் ரெயிலர். நம் வீட்டுக் கிணறு போலவே வருவோர் எல்லோருக்கும் பயன் கருதாது தன்னிடம் இருக்கும் எல்லாவற்றையும் அவர்களுக்கு வாரி வழங்கினார்.
73 Jaffna road, Omanthai என்ற முகவரி அம்மாவினால் பலருடய முன்பின் தெரியாத பயணிகளின் மனங்களிலும் அந்தக் கிராமத்து ஏழை எளிய மக்களது மனங்களிலும் மறையாது பதிந்துபோயிருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இன்றும் அவவைக் காணும் யாரேனும் அதனை நன்றியோடு நினைவு கூர்வதை நான் பலமுறை அவதானித்திருக்கிறேன். அம்மாவுக்குத் தான் அவர்கள் யார் என்பது நினைவிருப்பதில்லை.
ஒரு கர்ம வீரராக பயனேதும் கருதாத ஒரு வாழ்க்கைப் பயணியாக அவர் தன் வாழ்வை பயன்கருதாது பணிசெய்து வாழ்ந்து வந்தார். அதனை அவர் தன் வாழ்வின் இயல்பாகக் கொண்டிருந்தார். அவருக்கு அதில் எந்த விதமான மகிழ்வோ, துன்பமோ இருந்தில்லை. 10ம் வகுப்போடு அவர் படிப்பை நிறுத்தி இருந்தாலும் இந்த இயல்பு இயற்கையாகவே அவருக்குக் கைகூடி இருந்தது. அத்தகைய ஞானத்தை இயற்கையாகவே அவர் கைவரப் பெற்றிருந்தார். நிலைத்து நிற்காத செல்வத்தை அதிகம் பெற்றிராத போதும் இருந்தவற்றைக் கொண்டு நிலையான அறச் செயல்களை அது அறச் செயல்கள் என்று தெரியாமலே செய்து வந்தார்.
அவரது வாழ்வின் இரண்டாம் பாகம் சிட்னியில் ஆரம்பித்தது. அவரது மூத்தமகள் சாந்தியும் அவரது கணவர் கதிர்காமநாதனும் இணைந்து அப்பா அம்மாவை 2007 ம் ஆண்டு பணம் செலுத்தி பெற்றார் விசாவில் இங்கு அழைத்திருந்தார்கள். விரைவிலேயே அவர்கள் நிரந்தர வதிவிட உரிமையையும் பெற்றுக் கொண்டார்கள். அதன்பிறகு என்னோடு வாழத் தொடங்கினார்கள். அன்பும் அரவணைப்பும் உற்சாகமும் மகிழ்ச்சியுமாக அவர்கள் வாழ்வு சிட்னியில் மலர்ந்தது. அரசாங்கம் அவர்களை கண்ணும் கருத்தோடும் எந்தக் குறையுமின்றிக் கவனித்துக் கொண்டது. பொருளாதாரச் சுதந்திரமும் அச்சமற்ற பாதுகாப்பும் சகலருக்குமானதாயிற்று. அம்மா சமூகக் கூட்டங்களுக்கு போய் வந்தார்.
வெளியிலேயே போக விரும்பாத அப்பாவை அப்படியே ஏற்றுக் கொண்டதோடு அவருக்கு எந்தவிதமான மனக்குறைகளும் இல்லாது கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொண்டார். மிகவும் கட்டுக் கோப்பான வாழ்க்கையை அவர் தன் இறுதிக்காலம் வரை கடைப்பிடித்து வந்தார். எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து அவர் 5.30 மணிக்கு எழுந்து விடுவார். முகம் கழுவி, சுவாமி கும்பிட்டு, திருநீறு பூசி, தகப்பனாரோடு சேர்ந்து தேநீர் குடிப்பதோடு தொடங்கும் அவரது நாள் ஒன்று பின்னர் இருவருக்குமான காலை நடைப்பயிற்சியோடும் மதிய சமையலோடும் மாலைநேர ஓய்வும் பொழுது போக்குகளோடும் கழியும்.
வகுப்புகள் இருக்கும் பிரத்தியேக நாட்களில் அப்பாவுக்குப் பிடித்தவைகளை முன்கூட்டியே சமைத்து வைத்துவிட்டு மகிழ்ச்சியாகக் கூட்டங்களுக்குப் போவார். பிறகு அப்பாவுக்குச் சாப்பாடு கொடுக்க வேண்டும் என்பதற்காக வகுப்பு முடியுமுன் விரைவிலேயே வீட்டுக்கு வந்து சாப்பாடு போட்டுக் கொடுப்பார். ஆங்கிலம் அதிகம் தெரியாவிட்டாலும் ஏதோ ஒரு விதத்தில் எல்லோரோடும் சினேகிதத்தோடு பழகி வந்தார். பஸ்ஸும் ரெயினும் பிடித்துக் கடைகளுக்குப் போய் மச்ச மாமிசங்களையும் மரக்கறிகளையும் தானே வாங்கி வருவார். விசேட தினங்களின் போது செய்யும் பலகாரம், பட்சணங்களையும்; தங்கை சுவீஸில் இருந்து வரும் போது கொண்டுவரும் சொக்கிளேட்டுக்களையும் தான் வழக்கமாகப் போகும் கடைகளில் இருக்கும் நண்பர்களுக்கும் கொண்டுசென்று கொடுப்பார். தங்கையையும் அழைத்துச் சென்று அவர்களுக்குப் பெருமையோடு அறிமுகப்படுத்துவார்.
நான் அதிகாலைகளில் வேலைக்குப் புறப்படுவதாக இருந்தால் தான் அதற்கு முன்னே எழும்பி எனக்கு உணவு தயார் செய்து பெட்டியில் போட்டுத் தந்து விடுவார். மாலையில் வரும் போது எனக்காக ஏதேனும் சிற்றுண்டி செய்து விட்டுக் காத்திருப்பார். பிறகு எல்லோருமாக இருந்து சிற்றுண்டியும் தேநீரும் அருந்திய படி அந் நாட்களில் அப்பா கடைக்குப் போய் வாங்கி வைத்து விட்டு எனக்காகக் காத்திருக்கும் திரைப்பட சீ டீ யைப் போட்டு படம் பார்ப்பது என்றைக்கும் மறக்க முடியாத பசுமையான நினைவுகள்.
அவுஸ்திரேலியாவுக்கு வந்த பிறகு அரசாங்கக் கொடுப்பனவுகளில் வசதியாக அவர் இருந்த போதும், மிகவும் அடக்கமாகவும் எளிமையாகவும் சிக்கனமாகவும் இருந்தார். ஒரு போதும் அநாவசிய ஆடம்பரங்களிலோ பகட்டுகளிலோ தேவையற்ற பேச்சுகளிலோ அவர் ஈடுபட்டதில்லை. அவற்றில் ஆர்வம் காட்டியதுமில்லை. ஊரில் உள்ள தன் ஏழை உற்றார் உறவினர்களுக்கு உதவிகள் செய்தார். ஊரில் தன் ஏழை அயலார் ஒருவரின் பிள்ளைகள் இரண்டுபேரைப் படிப்பித்து பொறியியலாளராக ஆக்கி வைத்தார். பல தொண்டு நிறுவனங்களுக்கு மாதாந்தம் / வருடாந்தம் என்று பணம் கொடுத்தார். ஆனால் அது பற்றி அவர் வேறு யாரிடமும் மூச்சுக் கூட விட்டதில்லை. கொடுத்தது பற்றி யாரிடமும் அவர் பீற்றிக் கொண்டதுமில்லை.
நண்பர் உறவினர்களோடு அளவளாவுவதிலும் இடங்கள் பார்ப்பதிலும், புதிய புதிய உணவுகளை ருசிபார்ப்பதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த அவருக்கு social groups மிகுந்த ஆதரவினை வழங்கியது என்று நான் உறுதியாகச் சொல்வேன். CMRC யைச் சேர்ந்த Biljana, Shantha, Concila ஆகியோரை அவர் மிகுந்த மதிப்போடு சிலாகித்துப் பேசுவார். Multi cultural mothers group நடாத்தி வந்த Biljana வோடு தாங்கள் போன கன்பரா பயணம் பற்றியும் அவர் பயணத்தின் போது வாங்கிக் கொடுத்த Chicken burger பற்றியும் சொல்வார். அவர் மிகுந்த விருப்பத்தோடு அத்தகைய வகுப்புகளுக்குச் சென்று வந்தார்.
அவரிடம் இருந்த பல திறமைகள் குடத்துள் விளக்காகவே இருந்து விட்டது என்பதை இப்போது தான் நினைத்துப் பார்க்கிறேன். சிறந்த நிர்வாகியாக அவர் இருந்தார். வீட்டை சிக்கனத்தோடும் திறம்படவும் அதே நேரம் தம் அயலார் உற்றார் உறவினர்களுக்கு கொண்டும் கொடுத்தும் வாங்கி நல்ல உறவுகளைப் பேணுபவராக அவர் இருந்தார். ஆடு, மாடு, கோழி, நாய் பூனை எல்லாம் எங்களோடும் வாழ்ந்தன. எங்கள் பாடசாலை நாட்களில் எங்கள் பாடசாலைச் சீருடைகள் மற்றும் வெளியிலே போடும் ஆடைகளையும் அவரே எங்களுக்குத் தைத்துப் போட்டார். இறுதி வரை தன் சேலைகளுக்கான பிளவுஸ்களைத் தானே தைத்துப் போட்டார்.
Smoking, சட்டைகள், cross stitch தையல்கள் எல்லாம் அவருக்கு மிகவும் கைவந்த கலைகளாக இருந்தன. Knitting இல் கைதேர்ந்தவராக அவர் இருந்ததோடு எங்களுக்கும் தன் நண்பர்களுக்கும் பெருந்தொகையான மப்ளர்களைப் அவரவர் பிறந்த நாள்களுக்குப் பின்னிப் பரிசளித்திருக்கிறார். கூடவே சிறு குழந்தைகளுக்கான Knitting சட்டைகள் மற்றும் பூப்போட்ட சட்டைகள் தைத்து தன் பூட்டப் பிள்ளைகளுக்கு போடும் படி தன் பேரப்பிள்ளைகளுக்கு அவர்கள் தன்னைப் பார்க்க வந்த சந்தர்ப்பங்களில் கொடுத்து மகிழ்ந்திருக்கிறார். படங்களுக்கு வண்ணம் தீட்டுவதில்; புத்தகங்கள் வாசிப்பதில் மிக்க ஆவல் கொண்டவர். கோவிட் காலத்துக்கு முன்னர் வரை இலங்கையில் இருந்து வரும் தினக்குரல் வாரப் பத்திரிகை, தென்னிந்தியாவில் இருந்து வரும் ஆனந்தவிகடன், குங்குமம் ஆகிய பத்திரிகைகளை வாராந்தம் பதிவுசெய்து வாங்கிப் படித்து வந்தார். அதிலிருந்து தனக்கு பிடித்த பகுதிகளை ஒரு கொப்பியில் எழுதியும் வெட்டி ஒட்டியும் வைத்திருந்தார். அவை எல்லாம் பொக்கிஷங்கள்.
அவர் செய்த பல craft வேலைகளுக்குள் அவர் செய்த scrapbook இனை அவர் காலமான பிறகு தான் முழுமையாகப் பார்க்க முடிந்தது. அது CMRC யினால் நடாத்தப்பட்டு வந்த Biljana வின் தலைமையில் நடந்த ‘Multi cultural mothers group இல் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். பாதுகாப்பாக அவர் பேணி வைத்திருந்த அதன் சில பகுதிகளை இந்தப் பதிவைத் தொடர்ந்து நீங்கள் பார்க்கலாம். அதில் அவரது ’சொந்த உலகம்’ எப்படியாக இருந்தது என்பதையும் நீங்கள் பார்க்கலாம்.
விதைக்குள்ளே ஒரு விருட்சம் மறைந்திருக்கிறது; ஒரு ஒளிக்கீற்றுக்குள்ளே ஏழு வண்னங்கள் மறைந்திருக்கின்றன; ஒரு பூவுக்குள்ளே தான் தேனும் வாசமும் பொதிந்திருக்கிறது; பாலுக்குள்ளே மறைந்து போயுள்ளது ஒரு குழந்தைக்கான பரிபூரண உணவு.. எள்ளுக்குள்ளே நல்லெண்ணையும் மூங்கில் குளாயுக்குள்ளே பாடலும் ஒழிந்து போயிருக்கிறது. ஆனாலும் அவை எல்லாம் அவையாக வெளிப்பட ஒரு உந்துதல் தேவையாக இருக்கிறது. அதனை நான் அம்மாவுக்குக் கொடுக்கவில்லை என்ற குறை என்னை இப்போது துன்பமுற வைக்கிறது. பல திறமைகளை தன்னுள் வைத்துக் கொண்டும் அவர் அமைதியோடும், அன்போடும் அடக்கத்தோடும் மன நிறைவோடும் ஒரு பெருந்தகையாக வாழ்ந்து போயிருக்கிறார்.
அது போலவே இறுதிக் காலம் வரை STARTTS நிறுவனத்தால் நடாத்தப்பட்டு வரும் தமிழ் மூத்த குடிமக்களுக்கான நிகழ்ச்சிகளுக்கும் போய் வருவார். மக்களோடும் சமூகத்தோடும் இணைந்து வாழ்வதில் பெரும் விருப்பம் கொண்டிருந்த அவருக்கு இத்தகைய சமூகம் சார்ந்த கூட்டங்கள் மிகுந்த மகிழ்ச்சியை அளித்து வந்தன. குறிப்பாக STARTTS நிறுவனத்தில் பணி புரியும் சுபத்திரா அவர்களை எப்போதும் ‘நல்லபிள்ளை’ என்று வர்ணிப்பார். இத்தகைய தொண்டு நிறுவனங்களின் பணி குறிப்பாக வயதானவர்களின் வாழ்வில் எத்தகைய மகிழ்ச்சியையும் மனநிறைவினையும் வழங்குகிறது என்பதை நான் நேரிலே கண்டு அறிந்து மகிழ்ந்திருக்கிறேன். இலவசமாகக் கிடைக்கப் பெறும் இத்தகைய சேவைகள் மேலும் மேலும் பெருக வேண்டும்; மனங்கள் உளமகிழ்வுற வேண்டும்.
அக்கா குடும்பத்தவர்கள் தாம் வந்த புதிதில் நடுக்கடலுக்கு அழைத்துச் சென்று காட்டிய டொல்பின்கள் பற்றியும் என் தங்கை யாமினியிடம் சுவிஸ் நாட்டுக்குப் போன போது தாம் புறாக்களுக்குத் தீனி போட தங்கையின் குழந்தைகளோடு போன இடங்கள் பற்றியும் மிக ஆசையோடு சொல்வார்.
’ஏன் அம்மா நான் உங்களை ஒரு இடமும் கூட்டிக் கொண்டு போகயில்லையே? தாய்லாந்து, மலேசியா எல்லாம் போனனாங்கள் தானே!’ என்று கேட்டால், என்தோழி செளந்தரியை அவர் எப்போதும் சுட்டிக் காட்டிச் சிலாகித்துப் பேசுவார். ' நீ எங்க என்னை வெளியில கூட்டிக் கொண்டு போனனீ. செளந்தரி எல்லோ அந்த இடங்களைக் காட்டினது' என்று எனக்குச் சொல்வார். அது உண்மையும் கூடத்தான். என் தோழிகள் அம்மாவோடு மிகுந்த அன்புறவோடும் நட்போடும் பழகி வந்தார்கள். கீதா, கெளரி, சுதா, செல்வி, சுபத்ரா,பானு,பானுவின் கணவர் ரவி எல்லோரையும் இந்த நேரம் நன்றியோடு நினைவு கூருகிறேன். நீங்கள் எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் அவருக்கு உற்ற துணையாகவும் ஆதரவோடும் இருந்தீர்கள்.
எனது தந்தையார் 22.2.22 காலமானதில் இருந்து அவரை ஒருவித மனப்பாரம் அழுத்தியபடியே இருந்தது. அவரது இழப்பு அவரை மிகுந்த மனவருத்தத்திற்கு ஆளாக்கி இருந்தது. அவர் அதனை வெளிப்படையாகக் சொல்லாது விட்டாலும் அவரது முகம் களையிழந்து போயிற்று. அதிலிருந்து அவர் உடல் உபாதைகளுக்கு ஆளாகத் தொடங்கினார். இருந்த போதும் அவர்கள் இருவரும் வந்த காலத்தில் இருந்து அவர்களைக் கவனித்துக் கொண்டிருந்த டொக்டர் வதனி அவவை சிறப்பாகவும் அக்கறையோடும் கவனித்து வந்தார். அம்மாவிற்கும் தன் வைத்தியர் மீது எப்போதும் ஒருவித Loyalty யும் நன்றியுணர்வும் கடைசிவரை இருந்தே வந்தது. வைத்தியசாலையிலும் அவர் உயர்தரமான சிகிச்சையே பெற்று வந்தார்.
இறுதியாக என் தந்தையாரைப் போலவே தனது 85 வது வயதில் யாருக்கும் பாரமில்லாமல் யாருக்கும் எந்தக் கஸ்ரமும் கொடுக்காமல் உறக்கத்தின் போது மூளையில் ஏற்பட்ட இரத்தக் கசிவு காரணமாக 24.4.24 அன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொழிலாளர் தினமான 1.5.24 அன்று நமக்காகவே உழைத்த அந்த உயிர் இறைநிழலில் இளைபாறிக் கொண்டது. 6.5.24 அன்று என் தங்கையின் பிறந்ததினத்தில் அன்று அவர் தன் இறுதிப் பயணத்தை இப் பூவுலகில் நிறைவு செய்தார்.
அவர் ஒரு கர்மவீரராக தன்வாழ்வை முறைப்பாடுகள் எதுவும் சொல்லாத வகையில் இந்தப் பூமிக்குப் பாரமில்லாமல் வாழ்ந்து போனார். ஓர் உன்னதமான வாழ்க்கை முறை ஒன்றை எங்களுக்கு அவர் வாழ்ந்து காட்டிப் போயிருக்கிறார். சிக்கனம், கட்டுக் கோப்பு, ஒழுக்கம், அடக்கம், எளிமை, பண்புநலம், கொண்ட ஓர் ஆத்மா தன் இருப்பை வாழ்ந்ததன் வழி எங்களில் இருத்தி விட்டுத் தன் பயணத்தை இப் பூவுலகில் இனிதே நிறைவு செய்து கொண்டது.
அதி அழகிய குணநலன்களைத் தன் அழகாக வரிந்து கொண்ட ஓர் ஆத்மா; உன்னதமான இந்த வாழ்க்கைத் துணை; பிள்ளைகளின் மகிழ்வில் தன் மகிழ்வைக் கண்ட இந்த உத்தம தாய் இறை நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவரின் அருட்கருணை வழிகாட்டட்டும்.
அம்மா! நீங்கள் வாழ்ந்து காட்டி விட்டுச் சென்றுள்ள உங்கள் காலடிகள் எங்கள் பாதைக்கு வழிகாட்டட்டும்!
யசோதா.பத்மநாதன்.
மகள்.
அம்மாவைப் பற்றிய மிக அழகான நேர்மையான எழுத்தோவியம். எவ்வளவு எளிய வாழ்க்கை! ஆனால் எத்தகைய சீரும் சிறப்புமாக வாழ்ந்திருக்கிறார். சிட்னியில் அவரது வாழ்க்கைமுறையை ஓரளவு அறிந்திருக்கிறேன். இலங்கையில் வாழ்ந்த காலத்தில் அம்மாவின் சமூகப் பங்களிப்பும் சத்தமின்றிச் செய்த அறச்செயல்களும் இப்போதுதான் அறிகிறேன். உரிய முறையில் அவற்றையெல்லாம் ஆவணப்படுத்தியிருக்கிறீர்கள். மகிழ்ச்சி யசோ.
ReplyDeleteநீங்கள் அறிமுகமான நாளில்தான் அம்மாவும் எனக்கு அறிமுகமானார். உயர்திணைக் கூட்டத்துக்கு வரும்போதெல்லாம் ஏதேனும் தின்பண்டம் செய்து எடுத்துவரும் அவருடைய தாயுள்ளம் எம்மை நெகிழவைக்கும். வீட்டிற்கு வரும்போதும் வெறுங்கையோடு அனுப்ப மாட்டார். முதன்முதலாக எங்கள் தோட்டத்தில் காய்த்தக் காய்கறிகளைக் கொண்டுவந்து தந்தபோது சும்மா வாங்கிக்கொள்ள மாட்டேன் என்று சொல்லி பணம் தந்தார். நான் மறுத்தபோது இது கைவிசேடம் என்று சொல்லித் தந்தார். நெகிழ்ந்துபோனேன். மகளின் தோழிகளையும் மகள்களாய் ஏற்றுக்கொண்ட அன்பு மனம் அது. அவரது இல்லாமையை மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. என்றென்றும் நம் நினைவில் வாழ்வார். தன் காலடித்தடங்களால் நம்மை வழிநடத்துவார்.
நன்றி கீதா.
ReplyDelete