Friday, March 21, 2025

மார்க்கண்டேயர் மாமா - பன்றிக்கெய்த குளத்துப் பண்ணையார்

 நேற்றய தினம் 20.3.2025 மார்க்கண்டேயர் மாமாவின் இறுதியாத்திரையில் கலந்து கொண்டு விட்டு வந்திருந்தேன். ஒருவிதமான பாரம்! ஓர் அழகிய வாழ்வியலைக் கற்றுத் தந்த பரம்பரை ஒன்று நம்மை விட்டு பிரிந்து போகிறது....

அந்த நினைவுகளின் பாரங்களை எல்லாம் இறக்கி வைக்கும் ஓரிடமாக எனக்கு என் அக்ஷ்யபாத்திரமே விளங்குகிறது. அண்மைக்காலமாக எல்லாமே மனிதர்களின் பிரிவு பற்றிய பதிவுகளாகவே என் பாத்திரம் நிரம்புகிறது என்ற போதும் அது எனக்கு ஒரு வித பேரமைதியையும் தந்து போகிறது. 

மனிதர்கள் மறக்கப்பட்டு விடுகிறார்கள் மிக எளிதாக! 

நினைவுகள் பசுமையாக இருக்கும் போதே அவற்றை எங்கேனும் சேகரித்து வைத்து விடவேண்டும் என்றே இப்போதெல்லாம் தோன்றுகிறது. நமக்கு நாளை மறதி நோய் வரலாம்; எல்லாம் மறக்கப்பட்டும் விடலாம். அதற்கு முதல் எழுதப்படும் இந்த விடயங்கள் எதிர்காலத்தில் யாரேனும் ஒருவர் 19ம் நூற்றாண்டின் இறுதியில் எப்படியெல்லாம் மனிதர்கள் வாழ்ந்தார்கள் என்று அறிய முனைந்தால் இந்த வாக்கு மூலங்கள்; நினைவுப் பதிவுகள் அவர்களுக்கு ஒரு சிறு சுடரையாவது ஏற்றி வைத்து விடாதா? 

ஏற்றி வைக்க வேண்டும் என்றே எனக்கு ஆசை. ஏனென்றால் அவர்களுடய வாழ்வு அர்த்தம் நிறைந்ததாகவும் போலிகள் அற்ற உண்மை செறிந்ததாகவும் அதி உன்னதமானதாகவும் விளங்கியிருந்தது. தொழில்நுட்பங்கள் புகுவதற்கு முன்னரான அவர்களின் வாழ்வின் அழகியல்கள் இனி மீட்கப்படாது மீட்டிப் பார்க்க வேண்டிய ஒன்றாகிவிட்டது. நாமும் அதனைச் சொல்லாது போனால் அந்த வாழ்வின் எச்சங்களை அறிவதற்கு  ஒன்று கூட மிஞ்சாது போய் விடும்.

அது நிற்க,

மார்க்கண்டேயர் மாமா - 

உயரமும் உடல்பருமனும் மாநிறமும் கொண்ட ஆஜானுபவமான தோற்றத்திற்குச் சொந்தக்காரன்.

பன்றிக்கெய்த குளத்தில் யாழ்ப்பாணம் - கண்டி வீதி நீட்டிலுமாக சுமார் 10 ஏக்கர் வயல்வெளிக்கும் வீடு வளவு கொண்ட பல ஏக்கர்கள் கொண்ட மேட்டு நிலத்திற்கும் தென்னை மற்றும் கனிதரு மரங்கள் கொண்ட காணிகள், கடை மற்றும் பல சொத்துக்களுக்கும் சொந்தக்காரன். அவரின் கல்வீட்டின் முன்னால் அகலமான விசாலமான வட்ட வடிவில் அமைந்த திறந்த வெளிக் கூடாரம் ஒன்று அந்த வீட்டுக்கு மிகுந்த சோபையைக் கொடுத்துக் கொண்டிருக்கும். 

அந்தக் கூடாரத்தின் உள்ளே சீமேந்தினால் முழங்கால் அளவு உயரத்தில் சுமார் ஒரு அடி அகலத்தில் வட்டமாக எழுப்பப்பட்ட வட்டச் சுவர் மட்டுமே அமைந்திருந்தது. வருபவர்கள் அந்தக் குந்தில் வசதியாக உட்புறமாகவோ வெளிப்புறமாகவோ உட்கார்ந்திருந்து கதைக்கலாம். உள்ளே கதிரை போட்டும் இருக்கலாம்; பாய் விரித்தும் படுக்கலாம். அது சீமேந்து போட்ட வெறும் தரையாக இருந்தது. அதற்கு வாசல்களோ கதவுகளோ சுவர்களோ இல்லை. கூரை ஓலையால் வேயப்பட்டிருந்தது. அதற்கு மேலே சுற்றிவர தென்னை, பலா, மா மரங்கள் நிழல் தந்து கொண்டிருக்கும். இயற்கையான காற்று இயற்கையான வெளிச்சம், பொருட்கள் எதுவும் இல்லாத எளிமை இவற்றோடு கூடிய அந்தக் கூடாரம் மிகப்பெரியதும்  கூட. ஒரு நேரத்தில் சுமார் 25 - 30 பேர் அந்த வட்டத் திண்ணையில் இருக்கக் கூடிய அளவுக்கு ஓரளவு பெரிய கூடாரம் அது! 

மின்சார வசதிகள் வந்திராத 70களின் நடுப்பகுதி அது. அக்காலத்திலேயே VW வான், றைக்டர், அவற்றுக்கு றைவர், வீட்டுக்கு வேலையாட்கள் என்று பெருவாழ்வு வாழ்ந்தவர் அவர். அங்கு வேலையாட்களும், வீடுவளவினைத் துப்பரவு செய்வோரும்,  தொழிலாளர்களும், வந்து போவோரும், உதவியாளர்களுமென வீடு எப்போதும் ஜே ஜே என்று இருக்கும். சமையல் வேலைகளுக்கு மங்கை அக்காவும் வாகனங்கள் ஓட்ட ராமு அண்ணாவும் அங்கு நிரந்தரப் பணியில் அமர்த்தப்பட்டிருந்தார்கள். 

இருந்த போதும் அந்தக் குடும்பம் மிக மிக எளிமையான, ஆடம்பரங்களோ டாம்பீகங்களோ, வறட்டுக் கெளரவங்களோ, பீடிகைகளோ இல்லாத பண்பினைக் கொண்டமைந்திருந்தது. பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு மற்றவர்களை எல்லாம் எப்போதும் மரியாதையோடு நடத்தக் கற்பித்திருந்தார்கள். மங்கை அக்கா, ராமு அண்ணா என்று தான் பிள்ளைகள் உதவியாளர்களை அன்போடும் மரியாதையோடும் அழைத்தார்கள். நான் நினைக்கிறேன் மங்கை அக்காவுக்கு இவர்களே தான் திருமணமும் முடித்துக் கொடுத்து வழியனுப்பி வைத்தார்கள். மங்கை அக்கா திருமணமாகிப் போகும் போது நாலாவது பெண்குழந்தை ஆனந்தி சிறு குழந்தை. பிள்ளை மங்கை அக்காவின் பிரிவைத் தாங்க மாட்டாள் என்று  பால் கொடுத்துப் பிள்ளையைத் தூங்க வைத்து விட்டுத் தான் பிரியமனமில்லாமல் மங்கை அக்கா பிரிந்து போனா என்பது இன்னுமென் நினைவில் இருக்கிறது. 

மாமா மட்டுமல்லாமல் அந்தக் குடும்பமே சக மனிதர்களை அப்படித்தான் மதிப்போடும் மரியாதையோடும் பொறுப்போடும் அக்கறையோடும் அன்போடும் நடத்தியது. மாமா பெரிய மனிதராக; பண்ணையாளராக எங்கள் மனங்களில் உயர்ந்து நிற்பதற்கு இந்த உயரிய குணங்கள் ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்க வேண்டும் என்று இப்போது தோன்றுகின்றது. 

இவரது வீட்டுக்கு அருகாகத் தனி வீடொன்றில் மார்க்கண்டேயர் மாமாவின் வைத்தியராக இருந்து ஓய்வு பெற்ற தந்தையும் தாயாரும் வசித்து வந்தார்கள். தாத்தா, பாட்டி என்று தான் நாமும் அவர்களை அழைத்தோம். கால்களில் காயங்கள் பட்டால் அவர் தான் எங்களுக்கு மருந்து போட்டு விடுவார். அந்தத் தாத்தா ஆங்கிலேயர்களைப் போல நல்ல உயரமும் அழகும் மெல்லிய தோற்றமும் கொண்டவராக இருந்தார். மாமாவின் மூத்த மகள் தமயந்தியும் அவரது சாயலைக் கொண்டவராகக் காட்டுக்குள் வசிக்கும் ஒரு தேவதையைப் போல பேரழகும் பேரொளியும் கொண்டவராக விளங்கினார். அவரிடம் இருந்தது ஓர் அசாத்தியமான பேரழகு. அதனால் தான் அவருக்கு தமயந்தி என்று பெயர் வைத்தார்களோ தெரியாது.

அப்போது நாங்கள் அதே யாழ் வீதியில் அவர்களுடய வயல் காணி முடிகிற இடத்திற்குச் சமீபமாக சுமார் ஒரு மைல் தொலைவில் குடியிருந்தோம். அது ஒரு சிறு கிராமம் என்பதால் எல்லோருக்கும் எல்லோரையும் தெரிந்திருந்தது. கிட்டத்தட்ட சம வயதுடையவர்களாக நாங்கள் இருந்தததனால் தமயந்தியக்கா, தனஞ்செயன், சூட்டி, ஆனந்தி மற்றும் அவ்வப்போது அவர்களிடம் வந்து போகும் சுபாங்கி ( இவர் மிக இலகுவாகவும் அழகாகவும் French கொண்டை போடுவார். அது அவருக்கு அத்தனை எடுப்பாக இருக்கும். கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழியாக நானும் போட்டுப் பார்ப்பேன். அது எனக்கு எட்டாக் கொம்பாகவே இருந்தது. :) என்றொரு உறவுக்காறப் பேரழகுப் பெண்ணுமாக இதனைபேரும் விளையாட்டுத் தோழர்களாக இருந்தோம். ( சுபாங்கி எவ்வளவு அழகான பேர்! கர்னனின் மனைவியின் பெயர் சுபாங்கி)  இருந்தபோதும் என் மூத்த சகோதரி சாந்தி தான் அவர்களின் விருப்பத்துக்குரிய அந்தரங்க சினேகிதியாக இருந்தார். ( அதிலொன்றும் எனக்கு வருத்தமில்லை. :) என்றாலும் அதனை நான் கவனித்திருந்தேன்.) 

நாங்கள் அப்போது 6ம் வகுப்பு 7ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தோம். மாமா தமயந்தி அக்காவை ஒவ்வொருநாளும் 10 மைல் தொலைவில் இருக்கும் வவுனியா இறம்பைக்குளம் மகளீர் மகாவித்தியாலயத்தில் தன் வானில் அழைத்துச் சென்று விட்டு விட்டு மீண்டும் மாலையில் போய் வானில் அழைத்து வருவார்.  நாங்கள் அப்போது அதே பாதையில் மூன்று மைல் தொலைவில் இருந்த ஓமந்தை மகாவித்தியாலயத்தில் படித்து வந்தோம். பஸ் வராமல் நாம் காத்து நிற்கும் போதெல்லாம் சிவாண்ணையின் பால்வானும் அவ்வப்போது வீதியால் போகும் லொறிகளும், மாமாவின் நீல நிற VW வானும் தான் எங்களை வீட்டுக்கு அழைத்து வரும். காத்திருக்கும் எல்லோரையும் ஏற்றி அவரவர் வீட்டில் இறக்கிவிடும் பணியை அவர்கள் வீட்டுக்கும் அப்பால் வரை சென்று இறக்கி விட்டு வரும் அந்த வான். அப்போதெல்லாம் தமயந்தியக்கா முன் சீட்டில் இருப்பார். என் அக்காவுக்கு மட்டும் முன் சீட்டில் அவவுக்கருகில் இடம் கிடைக்கும். நாங்கள் எல்லோரும் பின்னால் ஏறவேட்டியவர்களாக இருந்தோம் என்பதை இப்போது புன்னகையோடு நினைவு கூருகிறேன்.

இவ்வாறாக என் பால்ய காலத்து பழைய மறக்க முடியாத நினைவுகளில் மாமாவும் அந்த ஊரும், வீடும் அங்கு நாம் வாழ்ந்த வாழ்வும் நினைவிருக்கிறது. அவர்கள் வீட்டில் சோறு கறியாக்கி விளையாடியதும்; அவர்கள் வீட்டின் பின்னால் அவர்களது வயல் வெளிக்கு சமாந்தரமாக கிட்டத்தட்ட ஒரு கிலோமீற்றர் தூரத்திற்கு மாரிகாலத்தில் நிரம்பி நிற்கும் குளத்தில் நீச்சலடித்ததும்;சேர்ந்திருந்து வானொலியில் தணியாததாகம் நாடகம் கேட்டதும்; அந்த வட்டக் குடிலுக்குள் நாங்கள் விளையாடிய விளையாட்டுகளும் இன்றுவரை நெஞ்சில் நிறைந்திருக்கிறது. 

தன் மனைவியை அவர் இளவயதில் இழந்து விட்டிருந்தாலும் தன் நான்கு பிள்ளைகளையும் தனி ஒருவராக இருந்து சிறப்பாக வளர்த்து ஆளாக்கினார். தன் பிள்ளைகள் எல்லோருக்கும் சிறந்த வாழ்க்கையை அவர் உருவாக்கிக் கொடுத்தார். இவற்றை எல்லாம் விரித்துக் கொண்டு போனால் அது முடிவின்றித் தொடர்ந்து கொண்டே போகும். அதனால் ஒரு விடயத்தை மட்டும் சொல்லி இந்த நினைவு மீட்டலை நிறைவு செய்யலாம் என்று எண்ணுகிறேன்.

இது என் தகப்பனார் பேச்சுவாக்கில் ஒருநாள் சொன்னது தான். நாங்கள் அப்போது புது வீடு ஒன்று கட்டிக்கொண்டிருந்தோம். சுவர்கள் எழுப்பப்பட்டு கூரை வேலைகள் முடிந்த பின்பும் ஓடு மட்டும் போடப்படாமல் இருந்தது. சில நாட்களில் மாமா அவ்வப்போது நகர்வலம் வரும் அரசரைப் போல வீதி வழியாக ஒரு பவனி போவார். வளவுகளுக்குள் உரிமையாளர்களின் நடமாட்டத்தைக் கண்டால் இறங்கி வந்து நலம் விசாரிப்பார். எந்த ஒரு வரவேற்போ உபசாரமோ அவருக்கு தேவைப்படுவதுமில்லை; அவற்றை அவர் எதிர்பார்ப்பதும் இல்லை. அது ஒரு தன்னிச்சையான செயலாக நடக்கும் ஒன்று.

 அன்றும் அவர் அப்பாவை கண்டுவிட்டு இறங்கி வந்து ஏன் இன்னும் ஓடு போடவில்லை என்று கேட்டாராம். அப்பா அதற்கு, வங்கிக் கடன் இன்னும் வந்துசேரவில்லை; அதற்காகக் காத்திருக்கிறேன் என்றாராம். ‘நான் தாறன் காசு, முதலில ஓட்டைப் போட்டு முடி; பிறகு காசு வந்தாப்பிறகு தா’ என்று சொல்லி அன்றே உடனடியாக 5000 ரூபாய்களை அவர் கொடுத்தார் என்று அப்பா சொன்னார்.

அது தான் அவர் குணம்; அது தான் அவர் இயல்பு. பரஸ்பர மனிதர்கள் மேல் நம்பிக்கையும் பற்றுதலும் அன்பும் அக்கறையும் கொண்டவராக அவர் விளங்கினார். இலங்கையரான எங்களிடம் பண்ணையார் முறை இல்லாதிருந்த போதும் அவர் எனக்குப் பண்ணையாராகவே தோற்றமளிக்கிறார். அவர் ஒரு பண்ணையார் தான். பன்றிக்கெயதகுளத்துப் பண்ணையார். தான் வாழ்ந்ததோடு அந்த ஊர்வாழ் குடிமக்களையும் வாழவைத்த பண்ணையார். திடீர் திடீரென அவர் மேற்கொள்ளும் திக் விஜயங்களில் செழித்தது அச் சிறு கிராமம். 

அவர் வாழ்ந்த அமோகமான வாழ்வை சிறு வயதில் கண்டவ:ள் நான். அந்தச் செழிப்பின் சாரல் என்மீதும் ஏதோ ஒருவகையில் பட்டுச் சுவறி இருக்கிறது. பிறகு நாங்கள் எல்லோருமே வாழ்க்கைச் சுழலில்:- போர்ச் சூழலில் சிக்கி எங்கெங்கோ தூக்கி வீசப்பட்டோம். யார் யார் எங்கு போனோம் என்பதே தெரியாதிருந்தது. என்றாலும் எந்த ஒரு விதியோ அல்லது பூர்வ ஜென்மத்துப் பந்தமோ அல்லது பிரபஞ்சத்தின் பேரருட் சக்தியோ நாம் மீண்டும் சிட்னியில் ஒரே இடத்தில் வசிக்கவும் காணவும் பழகவும் தெய்வனுக்கிரகம் பாலித்திருந்தது. வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு காரணங்களினால் உலக நாடுகள் எங்கனும் மனிதர்கள் தூக்கி எறியப்பட்ட போதும் நாம் மட்டும் மீண்டும் ஒரே நாட்டில் ஒரே இடத்தில் ஒரே சிற்றூரில் அருகருகாக வாழ்க் கிடைத்த தெய்வானுக்கிரகத்தை என்னவென்று சொல்வது!

நமக்குத் தெரியாத ஏதோ ஒரு வல்ல சக்தி நம்மை வழிநடத்துகிறது. ஏதோ ஒரு மின்சார வசதியில்லாத குக்கிராமத்தில் அருகருகாக வசித்த நாம் இடையில் முற்றிலுமாகக் காணாமல் போய், மீண்டும் வேறொரு தேசத்தில் அருகருகாகவே வாழப் பாத்தியதைப் பட்டிருக்கிறோமென்றால் இதனை என்னவென்று அர்த்தப் படுத்துவது! நம்முடய புலன்களுக்குப் புலப்படாத ஏதோ ஒன்று நம்மை வழிநடத்துகிறது என்று தானே இதற்கு அர்த்தமாகும்? 

போய் வாருங்கள் மாமா! இது நாள் வரை நம்மை வழிநடத்திய அந்த மாபெரும் சக்தி உங்களைக் கைவிட்டு விடாது.

மீண்டும் நாங்கள் சந்திப்போம். இறுதிவரை உங்கள் சுயத்தை இழக்காது, தனிமரமாக நின்று, ஓர் எடுத்துக்காட்டான வாழ்வை; கர்ம வீரனாக; கம்பீர பிராகிருதனாக இந்த வாழ்வை நீங்கள் கம்பீரமாக வாழ்ந்து காட்டிப் போயிருக்கிறீர்கள்.

Hat's off to you maama! 

You are an inspiration for me and many.!

8 comments:

  1. அருமையான பதிவு யசோ. ஆழமான சொற்றொடர்கள்.
    கண்களில் நீர் கசிய வைக்கும் உங்கள் எழுத்துக்கள் தொடர வேண்டும். ஆவணப்படுத்தப்பட வேண்டும்……. வாழ்த்துக்கள்💐
    Conscila

    ReplyDelete
  2. மாமாவைப்பற்றி நான் அறிந்திராத பல விடையங்கள் உங்கள் அழகாய எழுத்துருவில் வாசிக்க கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.வாழ்த்துக்கள் அக்கா ஆவணப்படுத்தப்பட வேண்டிய பல நல்ல விடையங்களை செவ்வனவே செய்வதற்கு.

    ReplyDelete
  3. Beautifully written with a captivating account of a vibrant man's life journey.

    ReplyDelete
  4. உங்களுக்கு இப்படி ஒரு நல்ல உள்ளம் உள்ள மாமா கிடைத்தது உங்களுக்கு கடவுளின் வரம தான் உங்கள் அருமையான எழுத்துகள் தொடர வாழ்த்துக்கள்.
    செல்வி Penrith

    ReplyDelete
  5. அப்படியே எங்களையும் மார்கண்டேயர் மாமா வீட்டுக்கு கொண்டு போட்டீங்கள்.
    என்ன ஞாபக சக்தி .ஒவ்வொரு சின்ன விசயத்தையும் அழகாக எழுதி இருக்கிறீர்கள்.
    வாழ்க்கையில் இப்படி நல்ல மனிதர்களை சந்திக்க கொடுத்து வைக்க வேணும் . அது கடவுளின் கிருபை தான் .
    சுதா Girraween

    ReplyDelete
  6. அருமையான, ஆனித்தரமான உண்மையான பதிவு. நன்றி பகிர்ந்தமைக்கு
    அந்த நீல வானையும் uncle ஐயும் (“பைலட் பிரேம் நாத்” சிவாஜி கணேஸ் போல் கம்பீரமான தோற்றம் கொண்டவர். எப்பொழுதும் அவர் முகம் பிரகாசமாக இருக்கும்) மறக்க முடியாது எம் வாழ்வில்
    We missed you uncle🥲😘
    ஓம் சாந்தி சாந்தி சாந்தி
    💐🙏💐🙏💐🙏

    ReplyDelete
  7. What beautiful write up! Made me very emotional. Brought back tje beautiful memories of our past. I can only picture the beauty of tje village.thank you for sharing this beautiful blig

    ReplyDelete
  8. இங்கு வந்து உங்கள் எண்ண ஓட்டங்களை என்னோடும் பகிர்ந்து கொண்ட உங்கள் எல்லோருக்கும் மிக்க நன்றி. காயத்துக்குப் போட்ட ஒத்தடமாய் அவை என்னை ஆசுவாசம் கொள்ளச் செய்கின்றன.

    அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்....
    நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்....
    அது ஒரு அழகிய நிலாக் காலம்
    கனவுகள் தினம் தினம் உலா போகும்.
    நிலவுகள் சேர்ந்து பூமியில் வாழ்ந்தமே அது ஒரு பொற்காலம்...

    ReplyDelete