Friday, March 21, 2025

அப்பா: ஆறுமுகம் . பத்மநாதன்

 

                 – ஒரு தண்ணீர் இரகசியம் - 

உலக வரைபடத்தில் சிறு புள்ளியாய் தோன்றும் இலங்கை தீவின் நுனிமுனையில் 17.11.1936 ம் ஆண்டு பிறந்து, மாபெரும் தீவான அவுஸ்திரேலியக் கண்டத்தில் 22.02.2022 ம் ஆண்டு இயற்கை எய்தி, உலகப் பிரபல்யம் பெற்ற ஒப்ராஹவுஸ் / ஹாபர்பிறிட்ஜ் முன்னிலையில் உள்ள கடலில் சங்கமமான ஒரு சமானிய மனிதன் சொன்னதும் நான் அறிந்ததுமான கதை இது.

வீமன்காமம், தெல்லிப்பழையப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஆறுமுகம் – செல்லமுத்து தம்பதிகளுக்கு 17.11.1936 ல் முதல் மகனாகப் பத்மநாதன் பிறந்தார். இவருக்கு முன்னர் பிறந்த குழந்தைகள் எதுவும் நீடித்து நிலைத்திருக்க முடியாத ஆயுளைக் கொண்டமைந்தமையால் இவர் பிறந்ததும் இவரைக் ‘கொடுத்து வாங்கி’ கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தார்கள். இவருக்குப் பிறகு, அன்னலட்சுமி, பாலசிங்கம், குணரத்தினம், கனகரத்தினம், ரஞ்சிதமலர், யோகராசா என சகோதரர்கள் பிறந்தனர்.

சகோதரர்கள் பலர் இருந்த போதும் தாயாருக்கு மூத்தவரான இந்த மகன் மீது இருந்த அதீத பாசத்தினால் பள்ளிக்குப் போகும் பிரியம் இல்லாத போதும்; பாடல்கள், திரைப்படங்கள் மீதான நாட்டம் அதிகரித்த போதும்; நண்பர்கள் கூட்டு அதிகரித்து மது, புகைத்தல் என்பவற்றின் மீதான விருப்பம் கூடிய போதும்; மகாஜனக் கல்லூரியில் ஆசிரியராக இருந்த இவரின் தந்தையின் சொல் கேளாமல் திரிந்த போதும்; தாயாரின் ஆதரவினைப் பெற்றவராக அவர் இருந்தார். சுவர் ஏறிக் குதித்து நடுச் சாமங்களில் திரைப்படம் பார்க்கப் போகும் அவருக்கு நடிகை பானுமதியை மிகவும் பிடிக்கும். 

இவர்கள் சிறுவர்களாக இருந்த போது அவரின் தாயாரின் சகோதரர்களும் தந்தையாரின் சகோதரர்களும் அருகருகாக வாழ்ந்து வந்தனர். மிக நெருக்கமாக உறவினரோடும் சகோதர வாஞ்சையோடும் அவர்கள் வாழ்ந்து வந்ததால் அப்பாவின் தகப்பனாரின் சகோதரியான என் தாயாரின் தாயாரோடு குடும்ப உறவும் பந்தமும் நீடிக்கும் பொருட்டு பிள்ளைகள் பற்றிய ஒரு கூட்டு உடன்படிக்கை ஒன்றினை அவர்கள் தமக்குள் ஏற்படுத்திக் கொண்டனர். அதன் படி என் தகப்பனாரின் தங்கையான அன்னபூரணியை ஆறுமுகம் அவர்களின் தங்கை (சின்னம்மா) மகனான நடராசாவும் அவர்களின் மகளான கமலேஸ்வரியை என் தகப்பனாரும் உரிய காலம் வரும் போது மணமுடித்துக் கொள்ள வேண்டும் என்பது தான் அந்த உடன்படிக்கை.

10ம் வகுப்புவரை படித்துத் தேறி கூட்டுறவு முகாமையாளராகப் பதவியேற்றிருந்த அப்பா, பெற்றோரால் திட்டமிடப்பட்ட உடன்படிக்கையின் பேரில் 1963ம் ஆண்டு தன் தகப்பனாரின் தங்கை மகளான கமலேஸ்வரியையும் கமலேஸ்வரியின் மூத்த அண்ணனான நடராசா (முன்னாள் சுங்கத்திணைக்கள ஆணையாளர்) அப்பாவின் தங்கையான அன்னபூரணியையும் திருமணம் செய்து கொண்டார்கள்.

திருமணத்தின் பின் வேலை நிமித்தம் பல இடங்களுக்கும் இடம்மாறி மூன்று பெண்பிள்ளைகளாக சாந்தி, யசோதா, யாமினி என நாமும் பிறந்து பாடசாலையில் சேரும் காலம் வந்த போது ஓமந்தையில் நிரந்தரமாகக் காணி வாங்கிக் குடியேறினார். 

ஓமந்தை வீடு அவர் உழைப்பில் உருவாகிய இல்லம். அது ஒரு பூஞ்சோலை; பழச் சோலை. ஆடு, மாடு, நாய் பூனை, கோழி என பல உயிரினங்கள் எங்களோடு சமனாய் வாழ்ந்த வாழ்வில்லம். கமுகு, தென்னை, பலா, வாழை, லாவுல், கோப்பி, கொய்யா, மா போன்ற பயந்தரு மரங்கள் மாத்திரமன்றி; யாழ்ப்பாணத்தில் உறவினர் ஒருவரின் வீட்டில் இருந்து பலவிதமான குறோட்டன் செடிகளும் கொண்டுவந்து வைத்து வீட்டை அழகு படுத்தினார். மல்லிகைப் பந்தல் அமைத்து அதன் மொட்டவிழும் வாசப்பூக்கள் உதிர இரவுணவின் பின் சீமேந்து இருக்கையில் இருந்து படிகளில் நாமிருக்க நம்மோடு பகிர்ந்து கொண்ட தன் ஒழிவுமறைவில்லாத பால்ய காலக் கதைகளை நிலவும் நன்கறியும்.

அங்கு எங்களோடு வளர்ந்த வாய் பேசா ஜீவன்களின் மேல் அவர் கொண்டிருந்த நேசம் அசாதாரனமானது. நாய், பூனை, ஆடு, மாடு, கோழி என்பன மட்டுமன்றி பூங்கன்று, மரக்கன்று, பழக்கன்றுகள் கூட வாடப் பொறுக்காதவர்; அவைகளுக்குரிய ஊட்டச் சத்தினையும் தண்ணீரையும் அவர் ’குடித்தாலும்’ கொடுக்க மறந்ததில்லை. அவைகளும் தம் அன்பை வெளிக்காட்ட தவறியதே இல்லை. அதனால் தானோ என்னவோ அவர் உயிர் இந்த உலகைப் பிரிந்த போதும்; உடல் உலகை பிரிந்த போதும்; அஸ்தி நீரில் கலந்த போதும் வருண பகவான் பூவைப் போல மழையை மாரி எனச் சொரிந்து அவரை ஆசீர்வதித்தான். அது ஒரு அபூர்வ அசாதாரண நிகழ்வாகவே இருந்தது. 

அது ஒரு தண்ணீர் இரகசியம். பிரபஞ்ச பாஷை. அப்பாவுக்கும் இயற்கைக்கும் இடையே இருந்த ஓர் இரகசிய பரிவர்த்தனை. 

தண்ணீரை அவர் தண்ணீராகவே செலவு செய்தார். மூன்று நாட்களுக்கு ஒரு தடவை பழக்கன்றுகளுக்குப் போகும் அதே அளவு தண்ணீர் பூங்கன்றுகளுக்கும் செல்லும். தன் பட்டி மாடுகளுக்கு இறைக்கப்படும் தண்ணீர் எப்போதும் ஊர் மாடுகளுக்குமானதாகவே இருக்கும். வாய்க்கால் வழியோடும் தண்ணீர் புல்லுக்கும் பொசியுமுன் நாம் குளிக்க தொட்டியை நிறைத்து விட்டே செல்லும். ஊர் கொக்குகளும் காகங்களும் புலுனிக் குஞ்சுகள், சிட்டுக் குருவிகளுமாகப் பறவைகள் வாய்க்கால் தண்ணீரில் கூட்டமாய் வந்து குளித்துச் செல்வது ஒரு கண்கொள்ளாக்காட்சி. எமக்கு இறைச்சி வாங்கும் போது வளர்ப்பு நாய்களுக்கும் தனியாக ஒரு இறைச்சிப் பொதி வாங்கப்பட்டிருக்கும். சாப்பிடும் போது அருகில் நிற்கும் பூனைக்கு முதலில் ஒருபங்கு வைக்கப்படும். 

அந்த ’ஓமந்தை வீடு’ ஓமந்தையில் இருந்து 3 மைல்கள் யாழ்ப்பாணப் பக்கமாக அமைந்திருந்தது. அது தான் நாங்கள் எல்லோரும் ’வாழ்ந்த வீடு’. முன்புறம் யாழ்ப்பானம் கண்டி வீதியையும் பின்புறம் கொழும்பு யாழ்ப்பான ரயில் பாதையையும் கொண்டமைந்த 5 ஏக்கர் மேட்டு நிலம். அத்தனை ஈழப் போராட்ட இயக்கத்தினருக்கும் ஓரு சரணாலயமாக அன்று அது விளங்கியது. 

தமிழர்களின் எல்லைக்கும் இராணுவ எல்லைக்கும் இடையே எங்கள் வீடு அமைந்து விட்டிருந்தது ஒரு தற்செயல் நிகழ்ச்சி தான். ஆனாலும் அது முன்பின் தெரியாத மக்களுக்கு கொடுத்த அடைக்கலம் பெரிது. எல்லையில் பெரிய கிணறு தோட்டம், நிழல் தரு மரங்கள் சகிதம் அந்த இடம் இருந்ததால் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு செல்லும் பயணிகளுக்கு நல்லதொரு தங்குமிடமாக எங்கள் வீடு அமைந்திருந்தது. இன்றும் எங்களை அறிந்தவர்கள்; நாம் மறந்து விட்டவர்கள் உங்கள் வீட்டில் நாம் நின்றுவந்தோம் என்று சொல்லுகிற போது; எம் தந்தை தாயாரின் தாராள மனதை அவர்கள் பாராட்டும் போது; மனம் நெகிழும். இன்றும் பலரின் வாழ்வின் முக்கிய தருணங்களில் அடைக்கலம் கொடுத்த அந்த வீடும் வாழ்வும் பலரின் மனங்களில் நிலைத்திருக்கும் என்றே நம்புகிறேன். அது ஒரு மண்வாசனை நிறைந்த அழகிய நிலாக்காலம்!

எனினும் அவர் குடியை விட்டாரில்லை; புகைத்தலைக் குறைத்தாரில்லை; பணத்தினைச் சேகரிக்கும் பண்பு அவரிடம் சிறிதளவும் இருக்கவில்லை. என் தாயார் அதைப் பற்றிப் பேச்செடுக்கும் போதெல்லாம்; 3 பெண்பிள்ளைகள் குறித்த எதிர்காலம் பற்றிய கரிசனையை வெளிப்படுத்தும் போதெல்லாம் மேல் கூரையைக் காட்டி ‘அவன் தருவான்’ என்பார். ’கள்ளமில்லா வெள்ளை உள்ளத்தின்’ நம்பிக்கை அதில் தெரியும். அப்போது ஒரு மந்திர; மந்தகாச புன்னகை அவர் முகத்தில் தவழும். கடவுள் தன்னைக் கைவிட மாட்டார் என ஆழமாக நம்பியவர் அவர். கடவுளோடான அவரது உறவு பூரண சரனாகதி என்பதாகத் தான் இருந்தது. பொறுப்பு முழுவதையும் தான் நம்பிய மேலிருக்கும் ஒருவன் மீது போட்டு விட்டு ’பாரமற்று’ மகிழ்ச்சியாக இருந்தார். 

அவரை நன்கு அறிந்து கொண்ட, மிகச் சிறந்த, உண்மையான நண்பர்கள் அவருக்கு வாய்த்தது உண்மையில் அவரின் அதிஷ்டம் அல்லது ஒருவித குடுப்பனை என்றே நான் நம்புகிறேன். அவர்கள் இந்த ’ஊதாரிக் குடிகாரனுக்காக’ எதையும் செய்யத் தயாராக இருந்தார்கள். இவரும் அவர்கள் மீது உண்மையான அன்பை வைத்திருந்தார். அவர் நம்பியவர் யாரும் அவரைக் கைவிட்டதில்லை. அவர் தன் சகோதரர்களுக்கும் என் தாயாரின் சகோதரர்களுக்கும் கூட தன் நண்பர்களையே திருமணம் முடித்து வைத்தார். அப்பாவை எல்லோரும் ’பெரியண்ணை’ என மரியாதையோடு அழைப்பதற்கும் அன்பு கூருவதற்கும் அவரிடமிருந்த இந்த தன்னலமில்லாத ஏதொன்றையும் எதிர்பாராமல் உதவும் அவரின் நற்குணமே காரணமாகும். 

சிட்னிக்கு வந்த பின்னரும் மிகச் சிலரையே தன் நண்பர்களாக அவர் ஏற்றுக் கொண்டார். எப்படியோ அவர்களும் அப்பாவின் ஆத்மார்த்தமான நண்பர்களாக விளங்கினார்கள். ஒரு தொலைபேசி அழைப்பில் அவர்கள் எல்லோரும் அவருக்கருகில் இருந்தார்கள். அவர் உரிமையோடு வேண்டுவனவற்றை எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் உடனடியாக அவருக்காக நிறைவேற்றிக் கொடுத்தார்கள். அதில் யாழ்ப்பாணத்தில் இருந்த செல்வரட்னம் மாமா,( 20.3.22 அன்று அவர் காலமானார்)  சிட்னி லோயர். செந்தில் அவர்கள், மயில் அங்கிள், குடும்பநண்பர் விமலன் குடும்பத்தினர், ATBC வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் பாஸ்கரன், ஜெயச்சந்திரா ஆகியோர் முக்கியமானவர்கள்.

அவரது பால்ய நண்பர்களில் ஒருவரான மாதவன் என்பார் 70 களில் லண்டனுக்குக் குடிபெயர்ந்த பிறகு என் தந்தையாருக்கு ஒரு ரேப் றைக்கோடரைப் பரிசளித்திருந்தார். அப்பாவின் திருமணத்தின் போது ஒரு சொனி ரான்சிஸ்டரை என் தாயாரின் அண்ணன் அப்பாவுக்கு பரிசளித்திருந்தார். இவை இரண்டையும் அவர் கண்ணும் கருத்துமாகப் பேணி வந்தார். அதில் பக்திப் பாடல்களை இசைக்க விட்டு விட்டு அவர் கேட்கும் தோரணை அவர் இசையிலும் பாடல்வரியிலும் எத்துணை உன்னதமான ஈடுபாட்டினைக் கொண்டிருக்கிறார் என்பதைக் காட்டும். அந்தப் பாடல்களை எல்லாம் யாழ்ப்பானம் போய் ’விக்ரர் அண்ட் சன்ஸ்’ கடையில் எழுதிக் கொடுத்து ஒலிப்பதிவு செய்து கசட்டாக வரிசைக் கிரமமாக அடுக்கி வைத்திருப்பார். அதில் பாடல்களைக் கேட்கும் போதெல்லாம் பல்வேறு விதமான குணபாவங்கள் அவர் முகத்தில் தோன்றி மறையும். இசையில் அவர் முழுவதுமாக மூழ்கி மெய்மறந்து போவார். 

ஞாயிற்றுக் கிழமை என்றால் அன்று எங்களின் கொண்டாட்ட நாள். அவர் தன் வானொலி, ரேப்றைக்கோடர், சைக்கிள் என்பவற்றை சிங்கர் ஓயில் போட்டு சிறப்பாகத் துடைப்பார். சிறுவர்களாக இருக்கும் எங்கள் மூன்று பேருக்கும் அரப்பு எலிமிச்சங்காய் போட்டு அவித்த பொருட்களை தலைக்குப் பூசி எங்கள் எல்லோரையும் கிணற்றடியில் நன்றாக முழுக வார்ப்பார். அதன் பிறகு வரிசையாக நடுங்கிக் கொண்டு நிற்கும் எங்களுக்குத் தலை துவட்டி சட்டை போட்டு பவுடர் போட்டு தலையை நன்றாக மேவி இழுத்து விடுவார். பிறகு தானும் போய் முழுகி வருவார். அன்று மதியம் ஒரு பெரு மாமிச விருந்து நமக்குக் காத்திருக்கும். 

வீட்டில் வேலி கட்டுவது; பாசல் கட்டுவது; வாய்க்கால் இழுப்பது என்பவற்றில் எல்லாம் அவரிடம் ஒரு தனி அழகும் நேர்த்தியும் உறுதியும் இருக்கும். சரியாகச் செய்யாதவிடத்து நாங்களும் நன்றாகப் பேச்சை வாங்கிக் கட்டிக்கொள்வோம். இறுதிக்காலம் வரை அவர் வழக்கமாக அமர்ந்திருக்கும் கதிரைக்கு முன்னால் இருக்கும் மேசையில் ஒரு டையறி, பேனா, கண்ணாடி, Business directory, தொலைபேசி எல்லாம் எப்போதும் தயார் நிலையில் இருக்கும். டையரியில் தன் மனம் கவர்ந்தவர்களின் பிறந்த தினங்கள், தொலைபேசி இலக்கங்கள் என்பன குறிக்கப்பட்டிருக்கும். இழுப்பறைகளில் சீராக அடுக்கி வைக்கப்பட்ட புது பற்றறிகள், கடித உறைகள், கயிறு, குறடு, திருத்து கருவிகள், எழுது தாள்கள், பல்வேறு ரக பேனாக்கள் போன்றன இருக்கும். ஓர் ஒழுங்கும் நேர்த்தியும் அவரிடம் எப்போதுமே இருந்து வந்திருக்கிறது. அது அவரின் நடையுடை பாவனைகளிலும் தெரியும். ஆனாலும் இத்தகைய நற்குணங்களைக் கூட அவர் எங்களிடம் திணிக்கவில்லை. நம்மை நாமாக வளரவிட்டார். அவர் ஒரு பொழுதிலும் உண்மை, நேர்மை, அன்பு, பாசம், பற்று, கருணை என்பவற்றில் துளியளவும் குறை விட்டதில்லை. குடியின் மீது எத்துணை நாட்டம் கொண்டிருந்தாரோ அந்த அளவுக்கு அவர் குடும்பத்தின் மீதும் அத்துணை பிரியமானவராக இருந்தார்.

அவருடய மன உறுதியை காணும் சந்தர்ப்பம் எமக்குக் கிட்டியது என் மூத்த சகோதரியின் திருமணத்திற்கு முன்னரான சில நாட்களில் தான். ஒரு நாள் அங்கிருந்த ஒரு சாய்வு நாற்காலியில் படுத்திருந்த படி மிகச் சாதாரணமாக ’நான் இன்றிலிருந்து இந்த குடியையும் புகையையும் விடப் போகிறேன்’ என்று சாதாரணமாக அறிவித்தார். நாங்கள் அதனைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. எத்தனை தரம் எத்தனை பேர் சொல்லியும் கேட்காதவர்; மற்றும் குடிகாரன் பேச்சு விடிஞ்சாப் போச்சு என்று நாம் நினைத்திருந்த இந்தக் கருதுகோள்களை எல்லாம் தவிடு பொடியாக்கி விட்டு அப்போதைக்குப் பிறகு எப்போதைக்குமே அவர் ஒருபோதும் இவை இரண்டையும் தொடவில்லை!! தொடவே இல்லை!!! நாங்கள் எல்லோரும் ஆச்சரியப்படும் படி அவரின் நண்பர்கள் அழைக்கின்ற போதும் அதனை மறுத்து வேண்டாம் என்று சொல்கிற மனஉறுதியை அவர் கொண்டிருந்தார். என் தந்தை என்று நான் பெருமை கொள்ளும் படியாக அவர் இந்த மன உறுதியை எங்கள் முன் நிரூபித்துக் காட்டினார். அவர் உயிர் பிரியும் வரை அவர் இந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார் என்பது எத்துணை பெரிய ஆத்மபலம் இல்லையா? 

அவரது இறைநம்பிக்கை எத்துணை ஆழமானதாக இருந்ததென்பதற்கு பிள்ளைகள் ‘சீதனம் இல்லாமலே’ மணமுடித்துக் கொண்டதும் ஒரு நிரூபணமாகும். மூத்த மகளான சாந்தியை டொக்டர். ஜெகன்நாதன் அவர்களின் ஏக புதல்வன் கதிர்காமநாதனும் கடைசி மகளான யாமினியை முள்ளியவளையைச் சேர்ந்த செல்வராசா அவர்களின் கனிஷ்ட புதல்வன் ஜீவராசாவும் காதல் திருமணம் செய்து கொண்டார்கள். நடுவில் பிறந்த யசோதா கல்வியில் தேறி தனக்கென, ’நிமிர்ந்த நெஞ்சமும் நேர்கொண்ட பார்வையும்’ கொண்ட ஒரு வாழ்வை தனக்குப் பிடித்தபடி அமைத்துக் கொண்டார். நாங்கள் சிட்னிக்கு வந்ததன் பிறகு, என் இளைய சகோதரி மணமுடித்து சுவிஸ் போன பிறகு, அவர்கள் சில வருடங்கள் கொழும்பில் இருந்தார்கள். அப்போது அவர் கான்சர் நோய்க்கு ஆளாகிக் குணமானார். இங்கு 2007ம் ஆண்டு சிட்னி வந்து ஒரு சத்திரசிகிச்சைக்குப் பிறகு பூரண குணமானார். 

வயது, இடமாற்றம், சுவாத்தியங்கள், வாழ்க்கை மாற்றம் எல்லாம் எல்லோரையும் பாதிக்கும் புலம்பெயர்வில் நாம் எல்லோரும் சந்திக்கும் ஒன்று தானே! அந்த வகையில் முதுமையை அவர் ஏற்றுக் கொண்ட விதம் எடுத்துக் காட்டாய் அமையத்தக்கது. சிறந்த அவதானியாக இருப்பதன் வழியாக முதுமையை அவர் எதிர்கொண்டார். ’ Age gracefully’ என்பதன் அர்த்தத்தை நான் அவரிடம் கண்டேன். முதுமையை அவர் கனிவோடு ஏற்றுக் கொண்டார். தேவையான போது தேவையறிந்து மெளனமாக எதிர்பார்ப்பு எதுவுமில்லாமல் பேருதவிகளை நல்கினார். தன்னைச் சரியாகக் கவனித்துக் கொண்டார். காரணமற்று யார் மீதும் தன் பாரத்தைச் சுமத்தாது பார்த்துக் கொண்டார். தேவையான அளவு மெளனத்தைத் தனதாக்கி அவதானத்தை மேம்படுத்தி வசீகரமான வாழ்க்கையை தனதாக்கிக் கொண்டார். அநாவசியமாகக் கதைப்பதை அவர் என்றைக்கும் விரும்பியதில்லை. நான் அறிந்து அவர் ஒரு போதும் எது பற்றியும் முறைப்பாடுகள் சொன்னதில்லை. சலித்துக் கொண்டதில்லை. தன் அவதானத் திறமையினால் சகல விஷயங்களையும் அறிந்து வைத்திருந்தார். அவர் யாரைப் பற்றியும் வேறொருவரோடு பேசுவதில்லை. அதே நேரம் ஒருவரிடம் ஒரு சிறப்புக் குணத்தைக் கண்டு விட்டால் அதனை உடனடியாகவே அவரிடம் சொல்லிச் சிலாகிக்கவும் அவர் தயங்கியதில்லை. தனக்கென தனியான நடை, உடை, பாவனைகளைக் கொண்டிருந்த, மந்திரப் புன்னகை புரியும், பெண்டில்ஹில்லின் லோக்கல் எம்ஜீஆர் அவர். இது தான் நான் கண்ட அப்பா.

ஆனால், ஒரு விடயத்தில் மட்டும் அவர் தன்னை ஒரு போதும் மாற்றிக் கொள்ளவில்லை. அவருக்கு எப்போதும் அம்மாவின் கையால் சமைக்கப்பட்ட உணவு வேண்டி இருந்தது. தாயாரும் தன்னால் இயலாத போதும் விருப்போடு அதனைச் செய்து கொடுத்து வந்தார். சிட்னி அவர்கள் உறவை எது விதத்திலும் மாற்றி அமைக்கவில்லை. அவர்களுடய கணவன் மனைவி உறவு ஊரில் எப்படி இருந்ததோ அதிலிருந்து அது எள்ளளவும் மாறுபாடடையவில்லை. இருவருமே அதில் உறுதியான தெளிவான குண இயல்பை வெளிப்படுத்தினார்கள். அது மிக இயற்கையான இயல்பான மாறவோ மாற்றவோ பிரயத்தனம் எதுவும் எடுக்காத இயல்புத் தன்மையைக் கொண்டிருந்தது. அழகான உறுதியான அன்பு, புரிந்துணர்வு, Discipline life style என்ற அடித்தளத்தில் இருந்து எழுப்பப்பட்ட அந்த உறவு இறுதி வரை மிக உறுதியாக இருந்தது. 

இடைக்கிடை வரும் அம்மாவுடனான சிறு சிறு மனத்தாங்கல்களை அவர் ஒரு சிறு இதழ்பிரியும் நகைச்சுவையோடு கடந்தார். ‘எப்ப என்னைக் கடவுள் கூப்பிடப் போறாரோ தெரியேல்லை’ என்று அம்மா ஒரு நாள் அலுத்துக் கொண்ட போது, ‘அவசரப்படாதையணை; எல்லாரும் சேர்ந்து போவம்’ என்றது இன்றும் எனக்கு நினைவிருக்கிறது. அவரது நாளாந்த உணவு உறங்கும் தேநீர் நேரங்கள் எப்போதும் ஒரே சீராக சரியாக நடந்து வரும். குளிர் காலத்திலும் இதுவே நியதியாக இருந்தது. அப்பா காலை 6.00 க்கு விழித்தெழும் போது அம்மா 5.30க்கு விழித்தெழுந்து தயாராக இருப்பார். காலைத் தேநீர், உணவு மற்றும் நடைப்பயிற்சி முடித்து வந்ததும் 10.00 மணிக்கு தேநீர். பின்னர் மதியம் 12.30 க்கு உணவருந்தி விட்டுப் படுத்தார் என்றால் 2.45 க்கு எழும்புவார். முகம் கழுவி திருநீறு பூசி தன் இருக்கையில் வந்தமர்ந்தார் என்றால் அம்மா தேநீரோடு நிற்பார். மாலை 7.00 மணிக்கு இரவுணவு முடிந்து விடும். இந்த நேரக்கணக்கில் நான் அறிந்து இருவரிலும் ஊரிலும் சரி இங்கும் சரி மாற்றங்கள் ஒரு நாள் கூட நிகழ்ந்ததில்லை. அவர்கள் சீரான ஒரு வாழ்வு முறையில் இருந்தார்கள். 

நம்மைப் பிரிந்து கொண்டிருக்கும் முதல் தலைமுறையின் உன்னதமான அடித்தளம் கொண்ட வாழ்வுமுறையின் உதாரண பிரதிநிதிகளாக அவர்கள் இருந்தார்கள். அதற்கு, அவருக்கேற்ற அவரைப் புரிந்து கொண்ட மனைவி கிடைத்தது அவரின் பேரதிஷ்டம். அவருக்கும் அது நன்றே தெரிந்திருந்தது.

இறுதிக் காலங்களில் ’என்னவோ நடக்கிறது நடக்கட்டும்; எல்லாம் அவன் செயல்’ என்று அடிக்கடி சொல்லும் அவர், வாழ்க்கையின் போக்கைப் புரிந்து கொண்டு எதையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவ மனநிலையில் இருந்தார். இறுதியாக சுமார் ஒரு மாதகாலம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்து 22.202.2022 அன்று தனது 85வது வயதில் அமைதியான முறையில் இவ்வுலகை அவர் நீத்தார். 

அவர் தன் வாழ்க்கையை; அன்பும் நேர்மையும் மிளிர, வாய்பேசா உயிர்களோடும் தன்னைப் பகிர்ந்து கொண்டு, இயன்றவரை மற்றவர்களுக்கு உதவி, நல்லதொரு குடும்பவாழ்வை சுமூகமாக வாழ்ந்து மறைந்தார். இசையால் தன் ஆத்மாவைக் குளிர்வித்தார்; நட்பினால் வாழ்க்கையைச் சிறப்பித்தார். மன உறுதியால் வாழ்ந்து காண்பித்தார்! 

அவர் ஒரு ‘பாசக்கார பய’!

வாழ்க்கை எதையோ கற்றுத்தர முயற்சிக்கிறது. அது எது என்று நான் அடிக்கடி சிந்திப்பதுண்டு. அப்பாவின் வாழ்க்கையில் அது ஒரு நம்பிக்கை தரும் ரகசியம். அவரின் வாழ்வும் முடிவும் ’தண்ணீர் வழி’ உணர்த்தும் பாடம் இது தான்.

மாபெரும் சமுத்திரத்தில் இருந்து தண்ணீர் மேகமென மேலே போய், மழை என இறங்கி, நதியாக மாறி, மீண்டும் கடலை அடைகிறது….இதே சம்பவம் மீண்டும் மீண்டும் நடக்கிறது. அது ஒரு வட்ட வடிவாக நிகழ்கிறது….

அதன் கரையோரம் முட்டை போட்டு விட்டுப் போய் விட்ட பின்பும் ஆமைக் குஞ்சுகள் தாமாகக் தாம் வாழவேண்டிய கடலைக் கண்டடைவது எங்ஙனம்?. பாலூட்டி மிருகங்களின் குழந்தைகள் எப்படிப் பாலிருக்கும் இடத்தைத் தானாகவே கண்டுபிடிக்கின்றன? போரில் சிதறியும் அங்கிருந்த அதே உற்றாரும் அயலாலும் இயல்பாக இங்கும் நமக்கருகிருத்தல் எப்படி சாத்தியமாயிற்று?   

அப்பா,

அது போல நாமும் எங்களைக் கண்டடைவோம். நாம் மீண்டும் ஒரு முறை சந்திப்போம். தோற்றம் மாறக்கூடும்; இடங்கள் மாறக்கூடும்; பந்தம் மாறக்கூடும். ஆனாலும் பாசப்பிணைப்பினால் நாம் மீண்டும் எங்களை நாம் கண்டடைவோம்.

பிரபஞ்சம் சொல்லும் வாழ்க்கைத் இரகசியம் இது. அது ஒரு ’தண்ணீர் இரகசியம்’. அப்பாவின் வாழ்க்கை சொல்லும் பிரபஞ்சத் தத்துவம்.

அப்பா, அது வரை இறைநிழலில் இனிதே சுகித்திருக்க பிரபஞ்சத்தின் பேராற்றலை அனுதினமும் பிரார்த்திக்கிறேன்.

                                 ஓம் ஷாந்தி.

மகள்: யசோதா.பத்மநாதன். 22.03.2022.

               “உறங்குவது போலும் சாக்காடு; உறங்கி

                     விழிப்பது போலும் பிறப்பு”


No comments:

Post a Comment