Friday, March 28, 2025

ஐஸ் பழமும் நானும் - தீர்க்கமுடியாப் பெரும் கடனும்

 1976/ 77 காலப்பகுதி அது.

பாடசாலையில் நான் ஆறாம் வகுப்பு ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த காலப்பகுதி.

மூன்றுமைல் தூரத்தில் பள்ளி. பஸ்ஸில் பள்ளிக்குப் போய் வர வேண்டும். ஆனாலும் பஸ்ஸோ நேரத்திற்கு வராது. வந்தாலும் பள்ளிக்குப் போக எனக்கும் மனம் வராது. பிந்தி வரும் பஸ்சில் ஏறிவிட்டு பின்னர் இறங்கமாட்டேன் என்று அடம்பிடித்து கொண்டு நானிருக்க அப்பா என்னை அழைத்துக் கொண்டு பள்ளியில் (வீதியோரம் தான் பள்ளி அமைந்திருந்தது) விட்டு விட்டு காத்துக் கொண்டு நிற்கும் பஸ்ஸில் ஏறி வேலைக்குப் போவார். வருவார். 

பள்ளி விட்ட பின்னர் நேரத்திற்கு பஸ் வராது. சிவாண்ணையின் பால் வான் எப்பிடியும் வரும் அதில் ஏறலாம் என்றொரு நம்பிக்கை மட்டும் மிச்சம் இருக்கும். நான் மட்டுமில்லை பல பிள்ளைகள் பஸ்ஸுக்காகக் காத்திருப்பார்கள்.  உயர்வகுப்புப் படித்த அக்காவை தாமாகவே எங்களைக் காக்கும் பொறுப்பை எடுத்துக் கொள்வார்கள். 

பள்ளிப் பாடத்தில் வரும் வீட்டு வேலைகளைச் சில புத்திசாலிப் பிள்ளைகள் கூரை இல்லாமல் சுவர் மட்டும் இருந்த பஸ் நிலையத்து சுவர்களில் வைத்து எழுதிக்கொண்டு இருப்பார்கள். பெரிய வகுப்பு படித்துக் கொண்டிருந்த அக்காவை அருகில் இருந்த பிள்லையார் கோயில் திருத்த வேலைக்காகப் பறிக்கப்பட்டு வரிசையாக நிறுத்தப் பட்டிருந்த கருங்கற் பாளங்களின் மேலும் வேர்கள் மேற்கிழம்பி நமக்கு இருக்க இலகுவாக்கி நிழலும் தந்து கொண்டிருந்த ஒரு பேர் தெரிய மரத்தின் வேர்களின் மேலும் ஏதேதோ கதைகள் பேசிக்கொண்டு அமர்ந்திருப்பார்கள்.

என்னைப்போல ஒரு சில பேர் யாழ்ப்பாண வீதி வழியாகப் போகும் வாகனங்கள் அடித்து விட்டுப் போகும் சிதறு தேங்காயைப் பொறுக்கி சாப்பிடுவதிலும் எட்டுக் கோடு, ஓடிப்பிடித்து விளையாடுவதிலும் ஈடுபட்டுக் கொண்டிருப்போம்.

ஆனாலும் ஒரு பெரும் கொடுமை பாருங்கள். சைக்கிளில் வந்து ஐஸ்பழம் விற்கும் அந்த ஒற்றை வியாபாரி மட்டும் அங்கேயே நின்று கொண்டிருப்பார். அடிக்கடி தன் கறுப்பு நிற கோன் போன்ற ஒன்றால் பாம் பாம் என்று அடித்து தன் இருப்பை வேறு உறுதிப்படுத்திக் கொண்டும் இருப்பார்.

இதில் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் எங்களின் பஸ் காசும் ஐஸ் பழம் ஒன்றின் காசும் ஒரே அளவு தான்.

எப்போதுமே!

ஒரு சிறு பிள்ளை எத்தனை மணி நேரம் தான் ஆசையை அடக்கிக் கொண்டு இருப்பது!  வேளைக்கு பஸ் வந்தால் பறவாயில்லை. வீடு போய் சேர்ந்து விடுவேன். பஸ் வேளைக்கு வராது. வந்தாலும் யாழ் நோக்கிப் போகும் பயணிகளை ஏற்றிப் போகும் களைப்பில் எங்களை ஏற்றி இறக்கி மினைக்கெட அவர்கள் பெரும்பாலும் தயாராக இருப்பதில்லை. அவை திருகோண மலையில் இருந்தும் மட்டக்களப்பில் இருந்தும் மன்னாரிலிருந்தும் யாழ் நோக்கிப் போபவை. அவர்களையும் குற்றம் சொல்ல முடியாது. 

நம்ம பிழைப்பு வவுனியாவில் இருந்து முல்லைத்தீவு நோக்கிப் போகும் பஸ்சினை எதிர் நோக்கியது. அது சிலவேளை இடர்பாடோடும் சன இடிபாடோடும் வந்தால் இந்தச் சின்னஞ் சிறுசுகள் சுமார் 15 - 20 வரை இருப்பவர்களை ஏற்ற அதற்கும் பாவம் இடமிருக்காது.

3.15 க்குப் பள்ளி விட்டு 5.30 , 6.00 மணி வரையும் பஸ் வரவில்லை அல்லது எங்களை ஏற்றவில்லை என்றால் பலரும் நடராசாவில் நடையைக் கட்ட ஆரம்பிப்பார்கள். யசோதா விளையாடியே களைத்து விடுவதால் இனியும் 3 மைல் தூரம் ஏற்ற இறக்கங்களோடு நடக்க அதற்கு மனசு வராது. எப்படியும் எங்களை விட தூரம் போகும் அக்காவை பஸ்சுக்காகக் காத்திருப்பார்கள் என்று விட்டு நானுமவர்களோடு காத்திருப்பேன்.

ஆனாலும் ஒன்று செய்வேன்.

கொஞ்ச நேரம் பொறுமையோடு கைக் காசை பார்ப்பதும் பின் அதனைச் சீருடைப் பொக்கற்றுக்குள்  போடுவதுமாக இருப்பேன். இனி ஐஸ்பழக் கார வியாபாரியும் போய் விடப் போகிறார் எனத் தெரியும் பட்சத்தில் ஒரு தயக்கமும் இல்லாமல் பஸ் காசினை கொடுத்து ஐஸ்பழம் வாங்கி நல்ல சந்தோஷமாக - உலகத்தில் இன்று தான் நான் வாழப்போகும் கடைசி நாள் என்பது மாதிரி ரசித்து ரசித்து சாப்பிடுவேன்.

பின்னர் சிறிது நேரத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட 7.00 - 7.30 மணியளவில் மருதோடைக்குப் போகும் பஸ் வந்து நிற்கும். எனக்கு வீட்டுக்குப் போகக் காசு இருக்காது. அந்த உண்மை அப்போது தான் என் மண்டைக்குள் வெளிச்சமிடும். என்ன செய்வது என்றும் தெரியாது. அப்போது உயர்தர வகுப்புப் படித்த அக்காவை எங்களோடு பஸ்ஸுக்காகக் காத்திருப்பார்கள்.

அவர்களில் இரண்டு பேரை எனக்கு இன்னமும் நினைவிருக்கிறது. ஒரு அக்காவின் பெயர் யோகா அக்கா. மற்றய அக்காவுக்குப் பேர் சறோ அக்கா.

பஸ் வந்து நின்றதும் நடத்துனர் இறங்கி ரிக்கற் போட ஆரம்பிப்பார். நான் மெல்ல சறோ அக்காவிடம் அல்லது யோகா அக்காவிடம் என்னிடம் பஸ்சுக்குக் காசில்லை என்பதைத் தெரிவிப்பேன்.

அவர்களுக்கு என்னைத் தெரிந்திருந்ததோ என்னவோ,’உம்மோட பெரிய கரைச்சல் யசோ’ என்று சொல்லி விட்டு எனக்கும் சேர்த்து டிக்கெட் எடுப்பார்கள். வீட்டுக்கு நான் வந்து இது பற்றி மூச்சுக் கூட விட மாட்டேன்.

இப்படி எத்தனை நாட்கள், மாதங்கள், வருடங்களை நான் கடந்திருக்கிறேன்....ஒரு நாள் கூட அந்த அக்காவை எனக்கு பஸ்ஸுக்கு டிக்கற் எடுத்துத் தர மறந்ததுமில்லை; மறுத்ததுமில்லை.  பின்னர் ஒருவாறு என் தந்தையாருக்கு  தெரிந்ததோ என்னவோ சீசன் ரிக்கற் வாங்கித் தரத் தொடங்கி விட்டார். சீசன் ரிக்கற் என்பது ஒரு மாதத்துக்கான பணத்தை முன் கூட்டியே டிப்போவில் கட்டினால் அவர்கள் ஓர் அட்டையை வழங்குவார்கள். அதனை நடத்துனரிடம் காட்டினால் அவர் அந்தத் திகதிக்குரிய பகுதியை மட்டும்  அடையாளப்படுத்தி விட்டுத் தருவார். 

பணப்புழக்கத்திற்கு அதன் பிறகு எனக்கு வாய்ப்பிருக்கவில்லை. கூடவே ஐஸ்பழத்திற்கும்!

என் வீட்டுக்கும் சொல்லாமல், பள்ளி ஆசிரியர்களுக்கும் சொல்லாமல், என்னை மட்டும் உரிமையோடு கடிந்து கொண்டும்; கண்காணித்துக் கொண்டும், அவ்வப்போது நான் செய்யும் குழப்படிகளைச் சகித்துக் கொண்டும் எங்களை பாடசாலை விட்ட பிறகும் கண்காணித்து பொறுப்போடு எனக்கு அவ்வப்போது பஸ்ஸுக்கு டிக்கற்றும் எடுத்துத் தந்த அக்காவை .......

அவை இப்ப எங்கை என்ன செய்து கொண்டிருப்பினம்?

சில நேரங்களில் யோசித்துப் பார்ப்பேன்....எதிர்பார்ப்புகள் எதுவுமில்லாத அன்பென்பது இது தானோ?

அழிக்க முடியாக் கடன் கணக்கில் சேர்ந்து விட்ட இந்தக் கடன்களை இனி நான் எப்பிறப்பில் தீர்க்கப் போகிறேன்?

சறோ அக்கா, யோகா அக்கா! 

நீங்கள் செய்தவைகளை நான் என் ஆத்மாவில் சேமித்து வைத்திருக்கிறேன். ஜென்மங்கள் கடந்தேனும் இந்தக் கடனைத் தீர்க்க இறையருளை பிரார்த்திக்கிறேன், மனமுருகி வேண்டுகிறேன்.

வேறென்ன நான் செய்ய முடியும்.... 

சொல்லுங்கள்.....

No comments:

Post a Comment