Saturday, March 22, 2025

கம்பராமாயணத்தில் ஓர் அவலக் காட்சி

பாடல் எண் - 5976.

இலங்கை எரியூட்டுப் படலத்தில் இப்பாடல் பதிவு செய்யப் பட்டிருக்கிறது.


மருங்கின்மேல் ஒரு மகவு கொண்டு, 

ஒரு தனி மகவை அருங் கையால்பற்றி, 

மற்றொரு மகவு பின் அரற்ற,

நெருங்கினாரொடுநெறி குழல் சுறுக் கொள நீங்கிக்

கருங் கடல்தலைவீழ்ந்தனர், அரக்கியர் கதறி.


பொருள்:

 மருங்கின் மேல் ஒரு மகவு கொண்டு - இடையில் ஒரு குழந்தையை வைத்துக் கொண்டு; ஒரு தனி மகவை அரும் கையால் பற்றி - மற்றொருசிறு குழந்தையை தன் அரிய கையால் பற்றிக் கொண்டு; மற்றொரு மகவு பின்அரற்ற - வேறொரு குழந்தை பின்னே அழுது கொண்டு வர; அரக்கியர் -அரக்கிமார்கள்; நெருங்கினாரொடு - நெருங்கிய சுற்றத்தினரோடு; நீங்கி -தமது இடம் விட்டுச் சென்று, நெறி குழல் சுறுக்கொள - நெறித்த கூந்தலிலே சுறு சுறு என்று நெருப்பு பற்ற; கதறி - வாய்விட்டுக் கதறிக் கொண்டு; கருங்கடல் தலை வீழ்ந்தனர் - கரிய கடலினிடத்துப் போய்விழுந்தார்கள். அரக்கியர் கூந்தலில் நெருப்புப் பற்றியதனால், வலி தாங்காமல் கதறிக்கொண்டு இடம் விட்டுச் சென்று, கடலில் குதித்தனர் என்பது கருத்து.   

இந்தத் தாயை என்னால் மறக்க முடியவில்லை. என்ன ஓர் அவலமான காட்சி! நினைத்துப் பாருங்கள்!! ஒரு பெண் தலைவிரி கோலமாகக் கூந்தல் எல்லாம் நெருப்புப் பற்றி எரிய, இடுப்பிலே ஒரு குழந்தையோடும்; கையினாலே ஒரு பிள்ளையைப் பிடித்துக் கொண்டும்; கடலை நோக்கி ஓடுகிறாள். அவளுடய இன்னொரு குழந்தை இவர்களுக்குப் பின்னாலே தொடர்ந்து ஓடி வருகிறது.

எல்லோரும் தீப்பற்றி எரிய கடலை நாடி ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.

அவள் அரக்கியாக இருக்கலாம். என்றாலும் அவள் ஒரு தாய். தன் பிள்ளைகளைக் கைவிடாத தாய். பிள்ளைகளின் பிடியைக் கைவிடாது கடலை நோக்கி ஓடும் காட்சியும் இவளைப் பின் தொடர்ந்து பின்னாலே ஓடி வரும் மற்றய பிள்ளையும் மனசை உருகச் செய்கிறார்கள்.

என்ன ஒரு அவலக் காட்சி இது!!


2 comments:

  1. நினைத்தாலே நெஞ்சம் பதறவைக்கும் அவலக்காட்சிதான் இது. தாய்மை யாவர்க்கும் பொது என்பதை உணர்த்தும் காட்சி. பகிர்வுக்கு நன்றி யசோ.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி கீதா.
      தமிழ் இலக்கியச் சொத்துக்கள் என்னமாய் வந்து இதயத்தைத் தாக்குகின்றன....

      Delete