Wednesday, September 17, 2025

மெளனமான மலர்வு...

 கவனத்தைக் 

கண்டிப்பான கண்களுக்குள் புதைத்து வைத்தபடி

வீதிக் கடவையில் 

பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருக்கிறாள்

ஒரு பேரிளம் பெண்.


சூரிய மஞ்சளில் குளித்தபடி 

பள்ளியின் வாசல் பெருக்கும் முதியாளுக்கு 

மண்ணிலே விழுந்து போய் கிடக்கின்றன விழிகள்.


மதாளித்து நிற்கும் ஓர்க் மரத்திற்கு 

மலர்வான இலைகள்.


வளாகத்தினுள்ளே

அங்கொன்றும் இங்கொன்றுமாய் 

நடமாடித் திரிகின்றன

சில இபீஸ் பறவைகள்.


பிள்ளையை உள்வாங்கி

தானே மூடிக் கொள்ளும் முன்வாசல்

தானியங்கி கதவுக்குத் 

தாயுள்ளம்.


சூரிய வெளிச்சத்தில்

பட்டொளி வீசிப் பறக்கிறது தேசியக் கொடி.


வாசலோரம் நிற்கும்

தைல இலைகளின் மூலிகை வாசத்தை

மீறி உள்ளே வருகிறது

இராக்கால பறவைகளின் எச்ச மணம்.


பாதைக்கு அப்பாலிருந்து 

கண்வலை வீசி கையசைத்து விரைகின்றன 

வாகனத் தந்தமைகள்.


சறுக்குப் பலகையில் ஏறி

பள்ளிக்கேகிய பின் 

சறுக்குப் பலகையைக் கையிலேந்தி 

வீடு நோக்கி நகர்கின்றனர் அன்னையர்.


ஒரு போக்குக்கும் வரவுக்குமிடையே -

எட்டுக்கும் மூன்றுக்குகிடையே  -

சிலநூறு மாணவரின்

மாபெரும் வாழ்வு ஒன்று 

உள்ளேதான் ஒளிந்து போயுள்ளது.


நாள் ஒன்றின் காலை....

பள்ளி ஒன்றின் விடியல்...

பிள்ளை ஒன்றின் பாதை....

மெளனமாக மலர்கிறது.


17.09.2025. புதன் கிழமை , காலை.

2 comments:

  1. காண்பதெல்லாம் கவிதையாய்... காலைப்பொழுதின் அழகு ஒவ்வொரு வரியிலும் மிளிர்கிறது.

    ReplyDelete
  2. ஓம் கீதா, இப்போது காலையில் வேலைக்கு நடந்து போக ஆரம்பித்த பிறகு ஒவ்வொரு நாளும் புதிய நாட்களாய்; உற்சாகமூட்டும் நாட்களாய் ஆகிப் போயின.
    இப்போது வசந்தகாலம் என்பதால் நடை பயணம் உவகை தருவதாக இருக்கிறது. கோடை காலம் ஆரம்பித்த பிறகு என்னவாகுமோ தெரியவில்லை.
    பார்ப்போம்....

    வாழ்க்கை நிறைய அற்புதங்களை ஒவ்வொரு நாட்களுக்குள்ளும் புதைத்து வைத்திருக்கிறது என்றே இப்போதெல்லாம் தோன்றுகிறது கீதா.

    ஒவ்வொரு நாளையும் ஒரு பாசலைப் போல சூரியன் வந்து அவிழ்த்துத் தந்து விட்டுப் போகிறான். ஒவ்வொரு நாளும் அற்புதங்கள் என்று சொல்ல முடியாது; ஆனால் ஆவலை ஊட்டும் திருநாளாய் அவை மலர்கின்றன...
    சுகமான நாள் ஒன்றின் பரிசு என்பது ஆண்டவனின் பெருங் கருணை அல்லவா?

    கடினமான நாட்கள் இன்னும் அழகானவை - அங்கு தான் எங்களின் உண்மையான வல்லமை; குணாம்சம்; ஒரு பிரச்சினையை எதிர்கொள்ளும் பாங்கு என்பன வெளிப்படுகின்றன. நாம் சரியாக செப்பனிடப் படுகிறோம். இல்லையா கீதா?
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கீதா.

    ReplyDelete